நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 4
16. சென்னை – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தும் நோக்கத்தை முன்வைத்து மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளை ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களுடன் இணைந்து நடத்தி சிறப்பித்து வருகின்றது. அதன் மூலம் ரசியப் புரட்சியின் அனுபவங்களையும், புரட்சிகர உணர்வையும் வரித்துக்கொண்டு வருகிறது.
இவ்வாண்டும், பு.மா.இ.மு சென்னை, விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, கோவை, தர்மபுரி, தூத்துக்குடி என பல மாவட்டப் பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்களின் திரளான பங்கேற்புடன் நவம்பர் புரட்சி நாளை சிறப்பித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழா செய்தித் தொகுப்பு;
உண்மையில் ஒரு விழாவை சிறப்புற நடத்த வேண்டுமென்றால், விழாவிற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால், விளையாட்டுப் போட்டிகள் இல்லாமல் சாத்தியமே இல்லை. ஒரு விழாவை அழகுபடுத்தும் மிகச் சிறந்த வடிவங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டிகள்.
அந்த வகையில், நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளையின் சார்பாக, குரோம்பேட்டை, மதுரவாயல், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் விளையாட்டு போட்டிகள், அப்பகுதி மக்களின் முழு ஒத்துழைப்போடும், பங்கேற்போடும் சிறப்புற நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகள்
குரோம்பேட்டை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட சிறார்களின் உற்சாகத் துள்ளலோடு விளையாட்டுப் போட்டிகள் எளிமையாக நடைபெற்றன. காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை போட்டிகள் நடைபெற்றன. பகுதிச் செயலர் தோழர். தம்புராஜ் நவம்பர் புரட்சி நாளின் சிறப்புகளை விளக்கி போட்டியை தொடங்கி வைத்தார். சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் லெமன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் உழைக்கும் மக்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. சிலம்பாட்டத்தைப் பார்த்த இளஞ்சிறார்கள், தாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொடுங்கள் என்று தங்கள் ஆவலை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.
மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான தயாரிப்புகள், மக்களிடம் நேரில் வீடு வீடாக சென்று அறிவிப்பது என வேலை உற்சாகத்துடன் நடைபெற்றது. தோரணங்கள், பேனர்கள் என ஒரு விழாவின் தன்மையோடு நடந்த போட்டிகளில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு போட்டிகளில் பங்கேற்றனர். உறியடித்தல், மியூசிக் சேர், லெமன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள் என பல்வேறு போட்டிகள் மாலை வரை உற்சாகத்தோடு நடத்தப்பட்டன. அப்பகுதிமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நிகழ்ச்சிகளை அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டதுபோல் இருந்தது.
எழும்பூர் டாக்டர்.சந்தோஷ் நகரிலோ, மழையும் போட்டியின் பங்கேற்பாளர்களில் ஒன்றாக ஆனது. காலை முதல் மாலை வரை உற்சாகத்தின் விளிம்புக்கே செல்லும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நூற்றுக் கணக்கானோரின் பங்கேற்போடு நடத்தப்பட்டன. திட்டமிட்ட போட்டிகளைத் தாண்டி, மக்களின் ஆர்வத்தின் காரணமாக கூடுதலாகவும் போட்டிகள் நடத்த வேண்டியதாகி விட்டது.
தோழர்களுக்கு இணையாக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு பகுதி இளைஞர்களும் போட்டிகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்தனர். வழக்கமாக, பெற்றோர்களின் அழுத்தத்தின் காரணமாக வெளியில் வரத் தயங்கும் இளம்பெண்கள், எங்களைக் கூப்பிட மாட்டீர்களா? என்று உரிமையோடு கேட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தளவுக்கு உற்சாகம் பகுதியில் மழையோடு சேர்ந்து கரைபுரண்டோடியது. அப்பகுதி மக்கள் மதிய உணவு இடைவேளையின் போது போட்டிகளை நடத்திய பு.மா.இ.மு தோழர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து உணவளித்து மகிழ்ந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியில் நடந்த விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் பெரும்பான்மையான மக்கள் இதில் கலந்து கொண்டது விளையாட்டு போட்டியை நடத்திய எமது பு.மா.இ.மு விற்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.
சந்தோஷ் நகரில் நடந்த விளையாட்டுப் போட்டிகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
ஒட்டுமொத்தமாக, உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவான நவம்பர் 7 விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இப்பகுதி உழைக்கும் மக்களை பற்றிக்கொண்டு, அவர்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதை பார்க்கமுடிந்தது.
இருசக்கர வாகன பேரணி
சென்னை வாழ் உழைக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பு.மா.இ.மு தோழர்கள் குரோம்பேட்டையில் தொடங்கி திரிசூலம் விமான நிலையம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு வழியாக மதுரவாயலுக்கும், மதுரவாயலில் தொடங்கி அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை செங்கொடி ஏந்தி இரு சக்கர வாகனப் பேரணியாக கொடியேற்றும் நிகழ்ச்சிக்குச் சென்றனர். சிவப்புச் சட்டை அணிந்த இளைஞர்களின் அணிவகுப்பை உழைக்கும் மக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர்.
குரோம்பேட்டையில் தொடங்கி நடந்த பேரணி
மதுரவாயலில் தொடங்கி நடந்த பேரணி
நமக்கு எந்த வகையிலும் பயன்படாத,
அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்பை
இன்னும் ஏன் நாம் கட்டிக்கொண்டு அழவேண்டும்.
இந்த அரசமைப்பு முறையை மொத்தமாக தூக்கியெறிவோம்!
உழைக்கும் மக்களாகிய நம் கையில் அதிகாரம் இருக்கும் வகையில்
மாற்று அதிகார அமைப்புகளுக்கான
போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம்.
அதற்கொரு மாபெரும் அரசியல் எழுச்சியை உருவாக்குவோம்!
உழைக்கும் அனைவரும் புரட்சிகர அமைப்பாக அணிதிரள்வோம்.
நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்,
இம் மண்ணிலும் ஒரு சொர்க்கத்தைப் படைப்போம்!
என்ற கருத்துக்கள் அடங்கிய பிரசுரம் வழி நெடுகிலும் மக்களிடம் வினியோகிக்கப்பட்டது. பலர் இதனைப் பெற்று ஆர்வமுடன் உடனே படித்தனர். சாலையில் வாகனக்களில் உடன் வந்த பொதுமக்கள் ஆர்வத்தோடு என்ன விசயம், எங்கு செல்கிறீர்கள் என கேட்டு தெரிந்து கொண்டு வாழ்த்தினர்.
பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய கம்பீரத்துடன் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி!
நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளையின் சார்பாக நவம்பர் 7 அன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி பு.மா.இ.மு. செயல்படும் குரோம்பேட்டை, மதுரவாயல், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
ஒவ்வொரு பகுதியிலும் பறை முழக்கம் அதிர,
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!
நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளை
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
நாட்டை மீண்டும் அடிமையாக்கும்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி இந்து மதவெறி பாசிசத்தை
ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
நடத்தி முடிப்போம்! நடத்தி முடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை
நடத்தி முடிப்போம்! நடத்தி முடிப்போம்!
என கம்பீரமான முழக்கங்களுடன்……கொடியேற்று விழா நிகழ்வு உணர்வுபூர்வமாக தொடங்கியது.
குரோம்பேட்டையில், அப்பகுதியின் செயலாளர் தோழர். தம்புராஜ் தலைமையேற்றார். அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், அமைப்புத் தோழர்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் அதிகாலை என்றும் பாராமல் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சென்னை மாநகர செயலாளர் தோழர். வ.கார்த்திகேயன் கொடியேற்றி உரையாற்றினார். ரசியப் புரட்சி மூலம் அந்நாட்டு உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், என அவர்களது வாழ்நிலைமை எப்படி மேம்பட்டது என்பதைப் பற்றியும், அதைப் போன்று நம் நாட்டின் நிலைமையை எடுத்துக் கூறி, இங்கு ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தைப் பற்றியும் உரை நிகழ்த்தினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அதேபோல், மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில், தோரண வேலைப்பாடுகள் மிளிர, கொடியேற்று விழா அறிவிப்பு பேனர்கள் தெருமுனைகளை நிறைத்திருக்க, அப்பகுதி செயலாளர் தோழர். கிருஷ்ணா தலைமையேற்க, மாநகர இணைச் செயலர் தோழர். மருது கொடியேற்றி நவம்பர் புரட்சி தின உரை நிகழ்த்தினார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பத்து இளைஞர்களின் அறிமுகத்தோடு இப்பகுதியில் தொடங்கப்பட்டது பு.மா.இ.மு. அதன் தொடர்ச்சியாக அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்கள் நடைபெற்றன. மதுரவாயலை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கெல்லாம், பிள்ளையார் கோயில் தெரு மக்கள் என்பவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்த்து நிற்கும் துணிவுள்ளவர்கள் என்ற மதிப்பை பெற்றுள்ளோம். அப்படி ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமாகத்தான் ரசியப் புரட்சி போன்று நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என உழைக்கும் மக்களுக்கு அறை கூவினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
முத்தாய்ப்பாக, இறுதியில் எழும்பூர், டாக்டர்.சந்தோஷ்நகர் பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் வைத்து, சிறப்பானதொரு கொடியேற்றுவிழா நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதியில் செங்கொடி பேரணி, பறை முழக்கம் அதிர, தோழர்கள் செங்கொடிகளுடன் முன்னால் அணிவகுக்க, பின்னால் வரிசையாக இருசக்கர வாகனங்கள் செல்ல, அரசியல் முழக்கங்களின் கனல் தெறிக்க டாக்டர் சந்தோஷ் நகரின் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் சென்றது. இது எங்கும் சிவப்புமயமாக மொத்த பகுதியையும் மாற்றி விட்டது. ஒட்டுமொத்த பகுதி மக்களும் ஆர்வத்தோடு பு.மா.இ.மு-வை வரவேற்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சந்தோஷ் நகர் பகுதி செயலர் தோழர். அசோக் தலைமையேற்க, மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த.கணேசன் கொடியேற்றி ரசியப்புரட்சிநாள் உரை நிகழ்த்தினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
எல்லாப் பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்வின் இறுதியாக உழைக்கும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உழைக்கும் மக்களின் விழாவாக பாட்டாளி வர்க்க உணர்வோடு நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா !
உழைக்கும் மக்கள் குவிந்து வாழும் பகுதியும், வர்க்கப் பாசத்திற்கும், போர்க்குணத்திற்கும் ஓர் உதாரணமாய் திகழும் பகுதியுமான எழும்பூர் டாக்டர்.சந்தோஷ்நகர் பகுதியில் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுதி முழுக்க செங்கொடி ஏற்றியும், ஊரின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகள் வைத்தும் தோழர்களோடு அப்பகுதி இளைஞர்களும் இணைந்து நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டது எனலாம்.
இதனை சாதாரண பகுதி நிகழ்வாகத்தான் நாம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அப்பகுதி உழைக்கும் மக்கள் திரளாக கலந்துகொண்டு ஒரு பொதுக்கூட்டத்திற்கு இணையாக நிகழ்ச்சியின் தன்மையை மாற்றி விட்டார்கள். தோழர்கள், ஆதரவாளர்கள், அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏறத்தாழ 500 பேர் வரை நாற்காலியில் அமர்ந்து கவனித்தனர் என்றால், அதைச் சுற்றி ஒட்டுமொத்த ஊர் மக்களும் திரண்டு வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாலை நிகழ்ச்சியில், வரவேற்புரை ஆற்றிய பு.மா.இ.மு வின் பகுதி செயலர் தோழர். அசோக் சந்தோஷ் நகர் பகுதியில் பு.மா.இ.மு. நடத்திய போராட்டங்கள், அதன் மூலம் சாதிக்கப்பட்ட விசயங்களைக் குறிப்பிட்டு, ஆனால் அதில் நாம் திருப்தியடையவில்லை. உழைக்கின்ற மக்களின் எல்லா அடிப்படைத் தேவைகளும் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே அது சாத்தியம். அதற்கு அணிதிரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வரவேற்றார்.
அதன் தொடர்ச்சியாக தலைமையேற்று நடத்திய பு.மா.இ.மு.வின் மாநகர இணைச் செயலர் தோழர். மருது, எப்படி ஹிட்லரின் பாசிசத்திற்கெதிராக லெனின்கிராடு எப்படி ஒரு முன்னுதாரணமான எதிர்ப்புக் களமாக விளங்கியதோ, அதுபோல இந்துமதவெறி பாசிசத்திற்கெதிராகவும், மறுகாலனியாக்க அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழகத்தின் முன்னுதாரணமான ஓர் எதிர்ப்புக் களமாக டாக்.சந்தோஷ் நகர் திகழும் என்ற நம்பிக்கையை, அங்கு நடந்த பல்வேறு போராட்டங்களின் உதாரணங்களிலிருந்து வெளிப்படுத்தி தலைமையுரை ஆற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அப்பகுதியில் பொன்னம்மா அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர் பு.மா.இ.மு.வைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பு.மா.இ.மு. பகுதியில் செய்த போராட்டங்களைப் பற்றி பெருமையோடு குறிப்பிட்ட அவர், பு.மா.இ.மு இப்பகுதிக்கு வந்த பிறகுதான் பல விசயங்களில் நாங்கள் விழிப்புணர்வு அடைந்தோம், எங்கள் பகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன என்று நன்றி உணர்ச்சிபொங்க பேசினார். மேலும், இப்பகுதி மக்களாகிய நாங்கள் கடைசி வரை பு.மா.இ.மு வோடு உடன் இருந்து போராடுவோம் என்று நம்பிக்கையோடும், உணர்வுபூர்வமாகவும் பேசிச் சென்றார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
நிகழ்ச்சியில், பு.மா.இ.மு-வால் நடத்தப்படும் டாக்டர். சந்தோஷ் நகர் பகுதியில் இரவுபாடசாலை மாணவர்களின் தனியார்மயத்தை அம்பலப்படுத்திய நாடகம், பு.மா.இ.மு துளிர்களின் புரட்சிகர பாடல், இளம் பெண்களின் புரட்சிகரப் பாடல்கள், பள்ளி மாணவர்கள் அரங்கேற்றிய உழைக்கும் மக்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம், கவிதை என நிகழ்ச்சிகள் அனைத்தும் உழைக்கின்ற மக்களிடையே புரட்சிகர உணர்வூட்டின.
இறுதியாக, சிறப்புரை ஆற்றிய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த.கணேசன் “டாக். சந்தோஷ் நகர் பகுதியில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதி, இந்த அரசால் சேரி என்று புறக்கணிக்கப்பட்ட பகுதி, இந்தப் பகுதி மக்களாகிய நாம் அனுபவிக்கும் கொடுமைகளைப் போலத்தான் நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் இந்த அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டி உணர்த்தினார். உழைக்கின்ற மக்களின் மீது பொருளாதார ரீதியாகவும், அதற்கெதிராக போராடும் போது அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளான போலீசு, இராணுவத்தைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்கும் இந்த அரசு, முதலாளிகளும், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்கும்போது அவர்களை பாதுகாக்கும் அரணாக விளங்குவதை ஜெயா வின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு – ஜெயில் – பெயில் – அதிமுக வினரின் வன்முறைகளை உதாரணம் காட்டி இன்றைய அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டு பேசினார். அந்த வகையில், இந்த அரசுதான் நமது எதிரி. அந்த எதிரியை வீழ்த்தாமல் நமக்கு விடிவு இல்லை. அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்க வேண்டும். அதன் தொடக்கப் புள்ளியாக உழைக்கும் மக்கள் கையில் அதிகாரம் இருக்கும் வகையில் மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும், அதற்கான அரசியல் எழுச்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும்” என்று அறை கூவி அழைத்தார்.
நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு நவ.2 அன்று மூன்று பகுதிகளிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இறுதியாக, டாக். சந்தோஷ்நகர் பகுதி பு.மா.இ.மு.வின் செயற்குழு உறுப்பினர் தோழர். பிரேம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி நடைபெற எல்லா வகையிலும் உதவியளித்த அப்பகுதி உழைக்கும் மக்கள், அப்பகுதியின் துடிப்புமிக்க இளைஞர்கள், இவர்கள் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடத்தியிருக்க முடியாது என்பதை நினைவு கூர்ந்து நன்றி கூறினார். ஆம், இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அணுவிலும் அப்பகுதி உழைக்கும் மக்களின் வியர்வையும், இரத்தமும் கலந்திருந்ததை அப்பகுதி முழுவதும் பார்க்க முடிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பிற்போக்குத்தனமான சிந்தனையை விதைக்கின்ற விழாக்கள் ஏராளமாய் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடைத்துக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில், உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவாக, நம் விடிவுக்கான வழி சொல்லும் நிகழ்வாக, மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் இந்த அரசால் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய இந்நவம்பர் புரட்சிநாள் விழா நிகழ்ச்சிகள் அப்பகுதிகளைச் சார்ந்த மக்களிடையே தங்கள் விடிவுக்கான வழியான புதிய ஜனநாயகப் புரட்சியைப் பற்றிய ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், அது மிகையில்லை.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை