privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?

தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?

-

newbornதிருக்கும் ஆக்சிஜன் இல்லை
எங்கள்
கருவுக்கும் ஆக்சிஜன் இல்லை
ஏழைகள் என்றால்
எதுவுமே இல்லையோ!

அந்தப் பொம்மையைக்
கட்டிப்பிடித்துதான்
எங்கள் பிள்ளைகள் தூங்கும்
என்று பெருமை பேசும்
தாய்மைகள் நிரம்பிய உலகில்தான்,

தாயின்
பால்மண அணைப்பைப் பார்க்காமலே
பொம்மைகளாய் விறைத்துப் போயின
தருமபுரி குழந்தைகள்!

புடைக்கத் தின்ன வழியின்றி
சிசுவால் மட்டுமே
நிரம்பிய வயிறு
இழப்பின் வலியை
எப்படித் தாங்கும்?

கிருமித் தொற்றாம்…
மஞ்சள் காமாலையாம்…
கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
என்ன சொல்ல்வது விதி! – என
முடித்து வைக்கப் பார்க்கிறார்கள்
எஞ்சியிருக்கும் கேள்விகளை.
அரசைவிட
ஒரு ஆபத்தான கிருமி உண்டா?

குற்றத்தின் தசைப்பிண்டங்களை
கூட்டிக் கொண்டு அலைய
முன்னெச்செரிக்கை மருந்துகள்…
முதல்தர பிராணவாயு உருளைகள்…
உடனடி உபகரணங்கள், வாகனங்கள்
அடுத்த குற்றப்பிழைப்பிற்கு
ஒரு நொடி கூட தாமதிக்காமல் புறப்பட
உயர்தர ஹெலிகாப்டர்கள்…
ஓராயிரம் காவலர்கள்…
என மயிர்கூச்செரியும் நிர்வாகம்.

babiesவிவசாயி, தொழிலாளர்கள்
உயிர்காப்புக்கு
பேருக்கு இன்க்குபேட்டர்கள்,
குழந்தைகள் நூறுக்கு
இரண்டே செவிலியர்கள்,
பிராணவாயு உருளை மாற்ற
பெற்றோர்களே ஊழியர்கள்,
யாருக்கு அரசு?
இது விதியா? ஆளும்வர்க்க சதியா?

பத்துமாத சிறை உதைத்து
ரத்தவலை தானறுத்து
மொத்தவலி தானுடைத்து
உள்ளே இருந்த குழந்தை
போராடியதால்
உயிரோடு வெளியே வந்தது!

வெளியேஇருப்பவர்களின்
போராட்டமின்மையால்
குழந்தைகள் பிணமானது.
போராட்டமில்லாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது!

போராட வேண்டிய இடத்தில்
போராட வேண்டிய நேரத்தில்
போராடாததால் இந்தச் சாவு.
பிறக்காமலே கொல்ல
குடும்பக் கட்டுப்பாடு!
பிறந்தால் கொல்ல
சத்துணவு தட்டுப்பாடு!

போதிய உபகரணங்கள் இல்லை,
போதிய மருந்துகள் இல்லை,
எல்லாவற்றிற்கும் மேல்
போதிய ஊழியர்களே இல்லை.

மக்கள்தான் போராட வேண்டுமா?
மருத்துவர்கள் போராட மாட்டார்களா?

விவசாயிகளின் சமூக அறிவும்
கருக்கரிவாளும்
சமூகத்திற்கே
போராடுகையில்
மருத்துவர்களின் அறிவும்
அறுவை சிகிச்சை கத்தியும்
தன் சம்பளத்தை மட்டும்
அறுத்து எடுப்பது
அருவருப்பாய் இல்லையா?

கொத்தாய் குழந்தைகள்
செத்தது எப்படி?
– எடை குறைபாடு
ஏன் குறைபாடு?
– தாய்க்கு சத்தில்லை
ஏன் இல்லை?

கருத்தரிக்க முடியாதபடி
உருத்தெரிக்க
மிகைக் கொழுப்பு
மிகுந்திருக்கும் நாட்டில்,
உழைப்பவருக்கு
உயிர் அணு காக்கவும்
சத்தில்லாத வாழ்க்கைத் தரம்
யாரால்?

babies 2கிருமி தொற்று ஏன்?
சுகாதரமில்லை
தண்ணீருக்கே வைத்தியம் பார்த்து
தனிப் பராமரிப்புடன்
நாய்களை குளிப்பாட்டும் நாட்டில்,
பொதுக்குழாயில்
சாக்கடையை கலந்தது யார் குற்றம்?

பிணத்தை அறுத்தால்
உண்மை வெளியே வராது
அரசை அறுத்துப் பார்த்தால்
அனைத்துக் குற்றத்திற்குமான
கிருமி தெரியவரும்!

இனி காசிருப்பவனுக்கே
கருவறை!
காசில்லாதவனுக்கு
கருவறையே கல்லறை!
தனியார்மயத் தொற்றே
அரசின் நடைமுறை!

எல்லாப் பக்கங்களிலிருந்தும்
முதலாளித்துவத்திற்கு மூச்சுக் கொடுக்கும்
அரசியல் ‘ஆக்சிஜனை’
பிடுங்கி எறியாமல்
இனி உழைப்பவர்கள்
சுவாசிக்கவும் முடியாது!

• துரை.சண்முகம்