Thursday, August 11, 2022
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்

துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்

-

டந்த சில மாதங்களாகவே கட்டணம் செலுத்த முடியாமல் பல ஆயிரங்களாக உயர்ந்து விட்ட மின்கட்டண பாக்கித் தொகை ஒரு பக்கம் அச்சுறுத்த, எப்போது வேண்டுமானாலும் மின்சாரத் துறை உங்கள் இணைப்பை துண்டித்து விடும் அபாயத்தின் மீது நீங்கள் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். கையில் சல்லிக் காசு இல்லை. இந்த நிலையில் மின்சாரத் துறை இணையதளத்தில் உங்களது நிலுவைத் தொகை பூஜ்ஜியம் என்று காட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

ரெட்ஹேக்உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் பகுதியில் உங்களைப் போலவே மின்சார கட்டணத்தை கட்ட வாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கானோருக்கும் இதே போன்ற குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால்?

மேலே விவரித்ததைக் கேட்க இன்பமான கற்பனை போல் இருக்கிறதல்லவா. ஆனால், இந்த இன்பம் சமீபத்தில் துருக்கி மக்களுக்கு வாய்த்திருக்கிறது.

துருக்கியைச் சேர்ந்த இணைய ஹேக்கிங் குழு ரெட் ஹேக் (REDHACK). அரசின் கண்களில் மண்ணைத் தூவி இரகசியமாக செயல்படும் இவர்கள் தம்மை கருத்துரிமைக்கு ஆதரவாகவும், இணைய தணிக்கைக்கு எதிராகவும் செயல்படும் மார்க்சிய லெனினிய ஹேக்கர் குழுவாகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குழுவினர் துருக்கி மின்வாரியத் துறையின் இணையதளத்தை தாக்கி அதன் மத்திய கணினியில் இருந்து கட்டண பாக்கி வைத்திருப்போர் பற்றிய விவரங்களையும் அழித்துள்ளனர்.

இவ்வாறு நீக்கப்பட்ட மின்சார கட்டண நிலுவைத் தொகையின் உத்தேச மதிப்பு 1.5 ட்ரில்லியன் லிரா (65,000 கோடி அமெரிக்க டாலர்) என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டண பாக்கி விவரங்கள் அழிக்கப்படாத பிற மக்கள் பலனடையும் வண்ணம் மின்வாரிய மத்திய கணினியின் (Server) கடவுச் சொல்லையும் வெளியிட்டுள்ளனர் ரெட் ஹேக் குழுவினர். துருக்கி அரசு அதிகாரிகள் “விவரங்கள் போச்சு ஆனா போகலை” என்று அனத்திக் கொண்டிருக்க, மக்கள் எதிர்பாராத இன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு (65,000 கோடி அமெரிக்க டாலர் = சுமார் ரூ 40 லட்சம் கோடி) குறித்து குழப்பம் நிலவுகிறது. மதிப்பு 15 லட்சம் துருக்கி லிரா மட்டுமே என்றும், தரவுகள் அனைத்துக்கும் பேக்-அப் இருப்பதால் இழப்பு எதுவும் இல்லை என்றும் துருக்கி அரசு  கூறியிருக்கிறது. ஆனால், ரெட் ஹேக் குழுவினரின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய பிரச்சார வெற்றியாக கருதப்படுகிறது.

தாக்குதல் குறித்து துருக்கி அரசின் அறிக்கை
தாக்குதல் குறித்து துருக்கி அரசின் அறிக்கை

1997-ம் ஆண்டு துவங்கப்பட்ட ரெட் ஹேக் இணைய ஹேக்கர் குழுமம் 2005-ம் ஆண்டிலிருந்து தீவிரமாக இயங்கி வருகிறது. இக்குழுமத்தில் 12 பேர்கள் வரை இருப்பதாகவும் அவர்களைத் தீவீரவாத செயல்களுக்காக தேடி வருவதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ரெட் ஹேக் குழுவினரால் எந்த நேரத்தில் எந்த மாதிரியெல்லாம் அவமானம் ஏற்படுமோ என்ற பீதியில் திணறிக் கொண்டிருக்கிறது அந்நாட்டு அரசாங்கம். ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

2005-ம் ஆண்டு இஸ்தான்புல் போக்குவரத்துக் காவல் துறையின் இணையதளத்தை தாக்கிய ரெட் ஹேக் குழுமம், ஆயிரக்கணக்கானோரின் அபராத நிலுவைத் தொகை குறித்த விபரங்களை அழித்துள்ளனர். அன்று துவங்கிய ரெட் ஹேக் குழுவினரின் சாகசப் பயணத்தில் துருக்கியின் பல்வேறு அரசு துறைகளின் இணையப் பக்கங்களும் பாசிச அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுடைய இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் துருக்கி தொலை தொடர்புத் துறையின் இணையதளத்தைத் தாக்கியழித்த ரெட் ஹேக், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினரின் தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தியது. இது போல் எண்ணற்ற இணைய தாக்குதல்களை செய்துள்ள ரெட் ஹேக், அரசின் பல்வேறு துறைகளின் இரகசிய ஆவணங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அவற்றில் நடந்த ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.

வெறும் 12 நபர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட ’சிவப்பின்’ குடைச்சலைப் பொறுத்துக் கொள்ள முடியாத துருக்கி அரசு 2012-ம் ஆண்டு ரெட் ஹேக் குழுமத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. துருக்கி அரச வழக்கறிஞர் ரெட் ஹேக் குழுமத்தின் செயல்பாடுகளை துருக்கியின் குற்றவியல் சட்ட நடைமுறைப்படி விசாரித்து தீர்ப்பளிப்பதென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தலா 24 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால், மிளகாய்ப் பொடியைக் காவிச் சுழன்றடிக்கும் சூறைக்காற்றைக் கைது செய்யும் கலையை உலகத்து அதிகார வர்க்கம் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. துருக்கி அரசு அந்தப் பண்ணிரண்டு ’மாயாவிகளைத்’ தேடி பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போதே ரெட் ஹேக் அரசின் கண்களில் கடப்பாறையை சொருகிக் கொண்டிருக்கிறது. ரெட் ஹேக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது வரை 25 தனிநபர்களைக் கைது செய்துள்ள துருக்கி காவல் துறை அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பலரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் எங்கெல்லாம் வர்க்க ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்த வர்க்கப் போராட்டம் முடிவுறாமல் நடந்து கொண்டே இருக்கும் என்ற எதார்த்த உண்மையை மார்க்சியம் உரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் இந்தச் சமூக சூழல் பெற்றெடுத்த எதிர்காலத்தின் குழந்தைகள், எனவே தான் கம்யூனிஸ்டுகள் பின்னடைவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். புரட்சியாளர்கள் மீண்டெழுவதை முதலாளித்துவ கொடுங்கோன்மை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் அதே நேரம் அவர்களின் தாக்குதல் இலக்கையும் இனங்காட்டுகிறார்கள்.

விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுஉடைமையாளர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட மக்களை முதலாளித்துவ அதிகாரத் திமிர் எந்தெந்த முனையில் எந்தெந்த கோணத்தில் எந்தெந்த தளத்தில் தாக்குகிறதோ அதே களங்களில் மக்கள் எதிர்தாக்குதல் தொடுக்கிறார்கள். நவீன தொழில்நுட்பங்களும், இணைய வலைப் பின்னல்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் மக்களை ஒடுக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது அதிகார வர்க்கம். மக்களோ எதிரிகளின் ஆயுதத்தைப் பறித்து அதைக் கொண்டே எதிர்தாக்குதல் தொடுக்கிறார்கள்.

ரெட் ஹேக் குழுமத்தின் செயல்பாடுகள் வெகுஜனப் பங்கேற்பில்லாத ‘ராபின் ஹூட்’ வகைப்பட்ட தனிநபர் சாகசங்கள் என்றாலும், அரசும் அரசின் அடக்குமுறை நிறுவனங்களும் வீழ்த்தப்படவே முடியாதது என்ற மாயைத் தகர்க்கின்றன. எதிரே நிற்பது ஊளைச்சதைப் பிண்டமென்பதையும், வீழக் காத்திருக்கும் கோலியாத்து தான் என்பதையும் மக்கள் உணரத் துவங்கும் போது இந்தப் பன்னிருவரின் செயலை கோடிக்கணக்கான மக்களும் கையிலெடுப்பார்கள். அப்போது முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு எதிரான தாக்குதல் மெய்நிகர் உலகத்தில் அல்ல, மெய் உலகில் நிகழும்.

– தமிழரசன்

மேலும் படிக்க

  1. அவசிமான காலத்தில் செய்யப்பட்ட மிக அவசியமான ஒரு கேவலப்படுத்துதல்.

    // உலகில் எங்கெல்லாம் வர்க்க ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்த வர்க்கப் போராட்டம் முடிவுறாமல் நடந்து கொண்டே இருக்கும் என்ற எதார்த்த உண்மையை மார்க்சியம் உரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் இந்தச் சமூக சூழல் பெற்றெடுத்த எதிர்காலத்தின் குழந்தைகள், எனவே தான் கம்யூனிஸ்டுகள் பின்னடைவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். //

    இதையே தான் முதலாளித்துவமும் சொல்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க