privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்ஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

-

ர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு சமநிலை நீர்த்தேக்க அணைகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து ஓசூரில் 25.11.2014 மாலை 5 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மேக்கேதாட்டு - ஒசூர் ஆர்ப்பாட்டம்

முன்னதாக, “காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அரசின் அணைக்கட்டும் திட்டம் என்பது தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான சதித்திட்டம்!” என்ற முழக்கத்தின் கீழ் கார்ப்பரேட் முதலாளிகளின் உண்மையான திட்டத்தை அம்பலப்படுத்தி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குவிந்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை விட்டே வெளியேற்றுவதற்கு வழி செய்கிறது கர்நாடக அரசு. கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதன் பின்னணியில் இந்த அணை கட்டுவதை பார்க்க வேண்டும்.

மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு வருகின்ற கொஞ்ச நஞ்ச உபரிநீரையும் ஒரு சொட்டுகூட விடாமல் தடுத்து நிறுத்தி தஞ்சை டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் பாலைவனமாக்கத் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.

பெங்களூருக்கு காவிரியிலிருந்து தினமும் 140 கோடி லிட்டர் நீர்  எடுக்கப்படுகிறது. இதில் 52% நீர் வீணாக்கப்படுகிறது. இதனை தடுப்பதன் மூலமே பெங்களூர் மக்களின் குடிநீர் தேவையை ஈடு செய்யமுடியும். மேலும் மேட்டுக்குடி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமச்சீராக குடிநீ்ரை வினியோகம் செய்வதன் மூலமும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும்.

பெங்களூர் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை ஈடேற்ற மாற்று வழிமுறைகள் இருந்தும் அவற்றுக்கு செவிசாய்க்காத கர்நாடக அரசு  1967-ல் இருந்தே  மேக்கேதாட்டுவில் அணைகட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம், வனத்துறை, மற்றும் சுற்றுச்சூழல் துறை போன்றவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் அணை கட்டுவது நடைபெறாமல் இருந்து வருகிறது.

இதனை மறைத்து, ‘தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அணை கட்டமுடியவில்லை’ என்று கர்நாடக அரசு கூறுவது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்பகையைத் தூண்டும் முயற்சியேயன்றி வேறல்ல.

அணைக்கட்டப்பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட பகுதிகள் மட்டுமல்ல இங்குள்ள கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் உள்ளிட்ட தமிழக, கர்நாடக உழைக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர். சுமார் 6,000 காட்டு யானைகள் தமிழகத்தை நோக்கி குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைத் தாக்குவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. ஆகையால் அணைகட்டுவதை கர்நாடக-தமிழக மக்கள் இணைந்து முறியடிக்கவேண்டும் என்றவகையில் உழைக்கும் மக்களுக்கு உணர்வூட்டும் வண்ணம் பாட்டாளிவர்க்க கடமையாற்ற ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு  போலீசிடம் சட்டபூர்வமாக முதலில்  அனுமதி கோரப்பட்டது. இதற்கு போலீசு “ஆக்ட் 32” –ஐ காரணம் காட்டி அனுமதி மறுத்தது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முனனணிக்கு மட்டுமல்லாமல் பிற அமைப்பினருக்கும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தது.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைக்கு எதிராகவும் வாழ்வுரிமை பாதிப்பதற்கு எதிராகவும் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு துணைபோவதே. மேக்கேதாட்டு அணையை எதிர்த்து ஒரு பக்கம் பிரதமருக்கு கடிதம் எழுதிக்கொண்டே மறுபக்கம் அதற்கு எதிராக செயல்படும் அ.தி.மு. க அரசின் இந்த போக்கை அம்பலப்படுத்தும் வகையில், பு. ஜ.தொ.மு, வி.வி,மு தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எப்படியும் பு.ஜ.தொ.மு வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என உணர்ந்த போலீசு நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர். லத்திக்கம்புகள், வாகனங்களுடன் ஒரு பதட்டமான பகுதியாக தோற்றம் காணும் வகையில் நகராட்சி அலுவலக சுற்றுவட்டப்பகுதியை மாற்றியது.

மேக்கேதாட்டு - ஒசூர் ஆர்ப்பாட்டம்

போலீசின் இந்த அச்சமூட்டும் நடவடிக்கையை முறியடித்து மக்களிடம் கருத்தை கொண்டுச் செல்லும் வகையில் ஒசூர் ஆனந்தபவன் உணவகம் முன்பே திரண்ட தோழர்கள் அங்கிருந்து பேனர், செங்கொடிகள், முழக்க அட்டைகள் பதாகைகளை ஏந்தி விண்ணதிர  முழக்கமிட்டபடி, துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்துக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். பு.ஜ.தொ.மு-ன் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்டிருந்த தோழர்கள்  கர்நாடக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், தோழர் இ.கோ. வெங்கடேசன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர். சரவணன் மற்றும் இவ்வமைப்புகளின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை. மற்றும் அஞ்செட்டி பகுதிகளில் பிரச்சார அனுபவம்

தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் நிறைந்த சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர். நாட்றாபாளையம் முதல் ஒசூர் வரையிலான 75 கி.மீ. பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, மத்தகிரி ஆகிய முக்கிய நகரங்களில் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று துண்டறிக்கைகள் விநியோகித்து தெருமுனைக்கூட்டம் நடத்தினர். இப்பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இங்குள்ள 3000-க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமாக இருந்த குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை பராமரிக்காமல் அழித்து காவிரி நீரை மட்டுமே மக்கள் நம்பியிருக்கும்படி செய்தது கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக செயல்படும் இந்த அரசுதான். இப்போது அந்த நம்பிக்கையையும் அழித்து நம்மை நாடோடிகளாக மாற்றி அலைந்து திரிய வைத்து கொல்லத் துடிக்கிறது என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

‘பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்குத்தான் இந்த மேக்கேதாட்டு அணை கட்டும் பணி’ என்று கர்நாடக அரசு கூறுவதை மறுத்து ஏற்கனவே ஒரு நாளைக்கு 140 கோடி லிட்டர் நீரை எடுத்து வரும் கர்நாடக அரசு அதில் வீணாகும் 52 சதவீதம்  நீரை நிறுத்தினாலே பெங்களுர் முழுவதும் நீர் பற்றாக்குறையை சரிசெய்யமுடியும் என தோழர்கள் விளக்கினர். இதனை செய்ய வக்கற்ற அரசை கண்டித்தும், 2500 ஏக்கருக்குமேல் உள்ள வனப்பகுதிகளை நீரில் மூழ்கடித்து அணை கட்டுவதால் அங்கு வாழ்ந்துவரும் விலங்கினங்கள் நமது ஊர்களுக்குள் ஓடிவந்து நம்மை விரட்டியடிக்க இருக்கிறது என்பதை ஒப்பிட்டு உரையாற்றியதும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே காடுகளை அழித்து ஆக்கிரமிக்கப்பட்டதால் வேறுவழியின்றி வனவிலங்குகள் ஊருக்குள் வந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் அக்கறையுடன் மக்கள் கவனித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர். குறிப்பாக காவிரி நீர் பிரச்சினை என்பது விவசாயிகளுடைய பிரச்சினை மற்றும் தண்ணீர் பிரச்சினை என்று மட்டுமே பார்த்துவந்த மக்களுக்கு இது கார்ப்பரேட் கம்பெனிகள் மக்கள் மீது நடத்தும் உள்நாட்டுப்போர் என்ற கோணத்தில் விளக்கி பேசியதை அறிந்து மக்கள் ஆமோதித்து கேட்டுச்சென்றது நல்ல அனுபவமாக இருந்தது.

பிரச்சாரம்: நாட்றாபாளையம்
நாட்றாம்பாளையத்தில் பிரச்சாரம்

 

அஞ்செட்டியில் பிரச்சாரம்
அஞ்செட்டியில் பிரச்சாரம்

 

 தேன்கனிக்கோட்டையில் பிரச்சாரம்
தேன்கனிக்கோட்டையில் பிரச்சாரம்

 

மத்திகிரி
மத்திகிரியில் பிரச்சாரம்

சூரில் பு.ஜ.தொ.மு. மூலம் பெங்களூர் செல்லும் ரயிலில், பேருந்துகளில் பிரச்சாரம் செய்தபோது, “மேக்கேதாட்டு அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்கு அல்ல” என்பதை சொல்லி அதன்பின்னே ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனி நலனை அம்பலப்படுத்திப் பேசியபோது, தமிழ் படிக்கத் தெரியாதவர்கள்கூட துண்டறிக்கைகளை வாங்கி நிதி உதவிசெய்தனர். இப்பிரச்சனையை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மக்கள், மொழி பேதமின்றி தங்கள் வர்க்க உணர்வை வெளிப்படுத்ததினர்

அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் தோழர்களிடம் துண்டறிக்கைகளை வாங்கிப்படித்துவிட்டு ஆதரவு தெரிவித்தார். நிதியும் கொடுத்தார். பிறகு அவரிடம் இந்த மாதம் புதிய ஜனநாயகத்தை தோழர்கள் கொடுத்தனர். அதில் ஜெயலலிதா படம் போட்டு “தமிழ் சமூகத்தை சீரழிக்கவந்த சதிகாரி” என்ற தலைப்பை பார்த்தவுடன் கோபமாக “நீங்கள் தி.மு.க.காரங்களா,? கருணாநிதியின் ஆட்களா?” என்று சீறினார்.

துண்டறிக்கையில் அரிவாள் சுத்தியல் போட்டுள்ளதைப் பார்த்து, “நீங்கள் கம்யூனிஸ்ட்காரங்களா? அம்மா போட்ட பிச்சையில கட்சி வளர்த்துக்கிட்டவங்க நீங்க , உங்களுக்கு சீட்டுப்பிச்சை போட்டு உங்கள வாழவைத்த தெய்வம் எங்க அம்மா, அவங்களைப்போய் நீங்க ஊழல் சதிகாரி என்று சொல்றீங்களா?” என்று சத்தம் போட்டார்.

அதற்கு தோழர்கள் பொறுமையாக, “நாங்கள் நக்சல்பாரி கம்யூனிஸ்ட்கள், நாங்கள் எல்லா ஊழல்வாதிகளையும் எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து போராடி வருபவர்கள், ஜெயலலிதாவை மட்டுமல்ல பிற எல்லா ஓட்டுக்கட்சிகளையும்தான் இப்போது இந்த மாத ஏட்டில் அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஊழல் யார் செய்தாலும் நாம் தட்டிக்கேட்க வேண்டும். ஏனென்றால் நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கிறவர்களை நாம் கேட்காமல் வேறு யார் கேட்பது” என்று வினவியபிறகு அமைதியானார்.

காவேரிப்பட்டினம், பாகலூர், ராயக்கோட்டை என மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வி.வி.மு. தோழர்கள் பிரச்சாரம் வீச்சாக செய்தனர்.

மொத்தத்தில், “ஓட்டுக்கட்சிகளை நம்பி நாம் மோசம் போனது போதும். இங்குள்ள அதிகாரம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளிடம்தான் உள்ளது. இந்த அதிகாரங்களை பறித்து உழைக்கும் மக்களின் அதிகாரங்களை நிறுவும் திசையில் செயல்படும் புரட்சிகர சக்திகளின் பின்னே அணிதிரள்வது ஒன்றுதான் ஒரே தீர்வு” என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

உள்ளூர் நாளேடுகளில் வெளிவந்த செய்திகள்:

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முழக்கங்கள்:

கர்நாடகத்தின் மேக்கேதாட்டுவில்
தமிழகத்தின் காவிரி நீரை
அணைகட்டி வழிமறிக்கும்
கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம்!

கர்நாடக அரசே, கர்நாடக அரசே
கட்டாதே, கட்டாதே
காவிரி நதியின் குறுக்கே
அணையைக் கட்டாதே!

அழிக்காதே, அழிக்காதே,
தஞ்சை டெல்டா மாவட்டங்களின்
விவசாயத்தை அழிக்காதே!

***

சதித்திட்டம், சதித்திட்டம்
காவிரியின் குறுக்கே அணை கட்டுவது
தஞ்சை டெல்டாவை பாலைவனமாக்கும்
சதித் திட்டம் சதித்திட்டம்

சதித்திட்டம் சதித் திட்டம்
மேக்கேதாட்டு அணைத் திட்டம்
காட்டுவளத்தை அழிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்கான
சதித் திட்டம் சதித் திட்டம்

சதித்திட்டம் சதித்திட்டம்
தஞ்சை டெல்டா மாவட்டங்களில்
மீத்தேன் எடுப்புத் திட்டத்திற்கு
தஞ்சை மண்ணை நஞ்சாக்குவதற்கு
மறைமுகமாக உதவும் சதித்திட்டம்

சதித்திட்டம், சதித்திட்டம்
காவிரியின் குறுக்கே அணைகட்டுவது
காட்டு யானைகளை தமிழகத்திற்கு விரட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களின்
விவசாயத்தை நாசமாக்கும்
சதித் திட்டம், சதித்திட்டம்!

***

யாருக்காக, யாருக்காக
கர்நாடக அரசு அணை கட்டுவது
யாருக்காக யாருக்காக?

பெங்களூரு மக்களுக்கு குடிநீர் தேவையாம்
உண்மையா, உண்மையா
மக்களுக்கான திட்டமென்பதில்
உண்மையில்லை, உண்மையில்லை.

140 கோடி லிட்டர் தண்ணீரை
காவிரியிலிருந்து உறிஞ்சி எடுத்து
நாள்தோறும் பாதி நீரை
வீணாக்கும் கர்நாடக அரசே
ஏமாற்றாதே, ஏமாற்றாதே
மக்களுக்கான திட்டமென்று
ஏமாற்றாதே, ஏமாற்றாதே!

ஐ.டி. கம்பெனி சாப்பிங் மாலுக்கு
அளவுகடந்த தண்ணீரு
சாதாரண உழைக்கும் மக்களுக்கே
குடிநீருக்கே தட்டுப்பாடு
காசு உள்ளவனுக்கே தண்ணீர் எனும்
மனுநீதியை மாய்க்காமல்
காவிரி நீரை கொண்டுவருதால்
பெங்களூர் மக்களின் தாகம்தீராது!

காவிரியில் அணைகட்டுவது
கரும்பு விவசாய விரிவாக்கத்திற்காம்
யாருக்காக யாருக்காக
கரும்பு விவசாய விரிவாக்கம்
யாருக்காக யாருக்காக
கரும்புக்கு உரிய விலையின்றி
கர்நாடக விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில் முதலிடம்!
கார்ப்பரேட் முதலாளிகள்,
சர்க்கரை ஆலை முதலாளிகளின்
கொள்ளை லாப வேட்டைக்காக
கரும்பு விவசாய விரிவாக்கம்!

***
மறைக்காதே மறைக்காதே
மேக்கே தாட்டு அணைத்திட்டத்திற்கு
கர்நாடக மக்களின் எதிர்ப்பை
மறைக்காதே மறைக்காதே
உயர்நீதிமன்றத்தின் தடையையும்
வனத்துறையின் எதிர்ப்பையும்
சுற்றுச்சூழல் அமைப்புகளின் கண்டனத்தையும்
மறைக்காதே மறைக்காதே!!

பெங்களூருவில் குடிநீர் கட்டண உயர்வு
அணைகட்டும் சதித்திட்டதை
ஏற்கவைக்கவே ஏற்கவைக்கவே!

தூண்டாதே, தூண்டாதே
கர்நாடக, தமிழக மக்களிடம்
இனவெறியைத் தூண்டாதே!

***
அணை கட்டுவது யாருக்காக?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக!

காவிரிநீரை கொண்டுவருவது யாருக்காக?
பெங்களூரு பணக்காரர்களுக்காக!

மின்சார உற்பத்தி யாருக்காக?
ஊதாரி மால்களுக்கும்
நட்சத்திர விடுதிகளுக்காக!!

அணை கட்டினால் பாதிப்பு யாருக்கு?
கர்நாடக, தமிழக மக்களுக்கு!!
அணை கட்டினால் லாபம் யாருக்கு?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!

ஜனநாயகம் யாருக்கு?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!!
அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்
அழிவுகளும் யாருக்கு?
விவசாயிகள் தொழிலாளர்கள்
வியாபாரிகள் மாணவர்கள்
உழைக்கும் மக்களாகிய நமக்கு!!

போராடுவோம்! போராடுவோம்!
இரு மாநில மக்களுக்கு எதிரான
மேக்கே தாட்டு அணைத் திட்டத்தை
தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

***

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்ய
ஓட்டுக் கட்சிகள், அதிகாரிகள்…
கார்ப்பரேட் கம்பெனிகளை பாதுகாக்க
நீதிமன்றம், போலீசு…

உழைக்கும் மக்களே, உழைக்கும் மக்களே
நம்மையும் நாட்டையும் பாதுகாக்க,
உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற
உண்மையான ஜனநாயகத்திற்கான
மாற்று அதிகார மன்றங்களை
கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி –தருமபுரி- சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு; 9788011784- 9751378495- 9943312487