Tuesday, June 2, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க துவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி

துவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி

-

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத் தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ் என்ற அதிகாரிக்கு தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி லஞ்சமாக வழங்கியுள்ளார் வைகுண்டராஜன்.

சுப்பையா அய்.ஏ.எஸ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர். சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் காரியாபட்டியில் ஒரு நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியான சில லட்ச ரூபாய் மதிப்பேயுள்ள இந்த நிலத்தை சந்தை விலையை விட பல கோடி ரூபாய் அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் வைகுண்டராஜனும், அவரது அண்ணன் ஜெகதீசனும்.

வைகுண்டராஜனை கைது செய்

மிகவும் நூதனமாக நடந்த இந்த ஊழலுக்கு RC MAI 2012 A 0055-என்ற வழக்கு எண்ணில் 120-B IPC r/w 13(2) r/w 13(1)(e) of PC act 1988-ன் படி கடந்த 24.12.2012-ல் சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 17.10.2014 அன்று சுப்பையாவின் சகோதரர் ஜெயராமன் சி.பி.அய்-ஆல் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார் வைகுண்டராஜன். மேற்படி முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது தலைமறைவாகியுள்ளார் வைகுண்டராஜன்.

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் கடந்த 20 வருடங்களாக நடத்திவரும் தாது மணல் கொள்ளையானது கனிம வளச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் கீழ் குற்றமாகும். குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோனோசைட்டில்தான் அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் தோரியம் உள்ளது. தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும்.

போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்குப் போடும் தமிழக அரசு வைகுண்டராஜனை இன்றுவரை பாதுகாத்து வருகிறது. கேரளாவிலும் தாது மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் மீது கேரள அரசின் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த ஆகஸ்ட், 2013 முதல் தாதுமணல் அள்ளத் தடை விதித்தது. ஆனால் அதன்பின்பும் சுமார் நான்கு லட்சம் டன் தாது மணலை ஏற்றுமதி செய்துள்ளார் வைகுண்டராஜன்.

வைகுண்டராஜனை கைது செய்

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தாது மணல் ஏற்றுமதி அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் மூலமே நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோதமாக தோரியம் அனுப்பப்பட்டதும் உள்ளடங்கும். வைகுண்டராஜனின் மேற்படி சட்டவிரோத செயல்களுக்கு தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்து வருகிறார்கள்.

எழுத்துபூர்வ ஆவணங்கள் இருந்ததால் சி.பி.அய் வசம் மாட்டிக் கொண்டவர்தான் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ். தனது சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி ரூபாய் லஞ்சமாக சுப்பையாவிற்கு வழங்கியுள்ளார் வைகுண்டராஜன். இவ்வழக்கில் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் வைகுண்டராஜனின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த பின் வைகுண்டராஜனைக் கைது செய்ய சி.பி.அய் தனிப்படை அமைத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் சி.பி.அய் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை.

வைகுண்டராஜனை கைது செய்

வைகுண்டராஜன் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த நபர் அல்ல. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நடத்தி வருபவர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி. புதிதாக தொலைக்காட்சி சேனல் கூட தொடங்கி இருப்பவர். இப்படிப்பட்ட நபர் தலைமறைவானார் என்று சொல்வது மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகவே வைகுண்டராஜன் தலைமறைவு உண்மை எனில்,

 • அவரை விசாரணைக்கு ஒத்துழைக்காத தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என சி.பி.அய் அறிவிக்க வேண்டும்.
 • வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் வைகுண்டராஜன் குடும்ப சொத்துக்களை முடக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • வைகுண்டராஜனின் தொலைக்காட்சி நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும்.

சி.பி.அய் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைகுண்டராஜன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களை அணுகியுள்ளதாக மக்கள் பேசுகிறார்கள். ஏற்கனவே ”மக்களின்” முதல்வரும், பினாமி முதல்வரும் வைகுண்டராஜனைப் பாதுகாத்து வருகிறார்கள்.

hrpc-demo-demanding-vaikundarajan-arrest-18

ஆகவே,

 • மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் இப்பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
 • மத்திய அரசு நேர்மையாகச் செயல்படுகின்றதெனில் வைகுண்டராஜனை உடனே கைது செய்து, அவரது சொத்துக்களை முடக்க வேண்டும்.
 • இந்த லஞ்ச வழக்கோடு வைகுண்டராஜன் கடந்த 20 ஆண்டுகளாய் நிகழ்த்தி வந்துள்ள அனைத்துக் குற்றங்களையும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.
 • தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியிலிருந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
 • குறிப்பாக கடந்த ஆகஸ்ட்,2013-ல் தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்து இன்றுவரை மேற்படி தடை அமலில் உள்ளது.ஆனால் தடைக் காலத்திலும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தூத்துக்குடி துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த ஊழல் குறித்தும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.

– மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்காக வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி, அரிராகவன், இராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.

தூத்துக்குடி துறைமுக கழகத்தலைவருக்கு 71/2 கோடி லஞ்சம்!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு!
சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!

என்ற தலைப்பில்29.11.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துகுடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். 10 நாட்களுக்கு முன்பே வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மூன்று மாவட்டங்களிலும் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டது.

வைகுண்டராஜனை கைது செய்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டில் தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்றுள்ள கடலோர கிராமங்களான வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை மற்றும் அணு உலைக்கு எதிராக உறுதியாக போராடிவரும் இடிந்தகரை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்குள்ள ஊர்க்கமிட்டிகளை சந்தித்தும், பாதிரியார்களை சந்தித்தும், களப்போராளிகளை சந்தித்தும் வைகுண்டராஜன் தலைமறைவு என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டு வரும் – தமிழக அரசு நாடகமாடிவரும் – தற்போதுள்ள சூழலை விளக்கி, உடனே எதிர்வினையாற்ற வேண்டிய கடமையை முன்வைத்தோம். அனைவரும் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உத்தரவாதம் தந்தனர்.

அதேபோல் தூத்துக்குடியிலுள்ள விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களையும், பிற அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்..

வைகுண்டராஜனை கைது செய்

சனிக்கிழமை காலை 10.30 அளவில் ஒவ்வொறு பகுதியிலிருந்தும் வந்து அணிவகுத்தனர். அதில் வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்தும், இடிந்தகரை, கூடங்குளத்திலிருந்து பெண்கள் குழந்தைகளும்,  கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேனரை பிடித்து நிற்க, வந்திருந்தவர்கள் முழக்க அட்டைகளை உயர்த்திப்பிடிக்க அனைவரின் பார்வையையும் ஈர்க்கும்படி அணிவரிசை அமைந்தது. புரட்சிகர பாடல்களை 30 நிமிடம் ஒலிக்கவிட்டு சரியாக 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

கீழவைப்பார் மீனவர்கள் 10.00 மணிக்கே வந்துசேர்ந்தனர். வேம்பாரும், இடிந்தகரையும் தூத்துக்குடிக்கு இருவேறு எல்லைகளில் வடக்கு, தெற்கில் உள்ளது. குறிப்பாக சுமார் 100 கி.மீ தள்ளியுள்ள இடிந்தகரை கிராமத்திலிருந்து அதிகாலையில் அணிதிரண்டு புறப்பட்டு ஆர்ப்பட்டம் தொடங்கியவுடன் வந்து இணைந்தனர்.

நமக்கு முன்பாக இந்த அரசு தன் காவல்துறையை சீருடையிலும், சீருடை இல்லாமலும் களமிறக்கி வைகுண்டனுக்கு தொண்டூழியம் செய்ய முனைப்பு காட்டியது.

வைகுண்டராஜனை கைது செய்

ஆர்ப்பாட்டத்திற்கு சிவராச பூபதி (வழக்கறிஞர்) – செயலர் – மனித உரிமை பாதுகாப்பு மையம், குமரி மாவட்டம் – தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், “நாங்கள் வைகுண்டராஜனை கைது செய்யுமாறு மட்டுமல்ல கனிமவளக் கொள்ளையர்கள் அனைவருக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்று பதிவு செய்தார்.

“கடந்த ஆண்டுகளில் மீனவ இடிந்தகரையும், விவசாய கூடங்குளமும் அதாவது பரதவர்களும் நாடார்களும் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டனர்” என்று விளக்கினார். “அணு உலையை எதிர்த்து போராடும் மீனவர்கள்மீது கடலோரத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதை பார்த்த கூடங்குளம் நாடார் சாதியினர் உடனே தமது ஊரில் சாலையை மறித்து படைகளை முடக்கினர்; ரத்தமும் சிந்தினர்” என்பதையும், “அணு உலைக்கு எதிரான போராட்டம் போன்று தொடர்ந்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே கனிமக்கொள்ளைக்கு முடிவுகட்ட முடியும்” என்றும் உரையாற்றி நிகழ்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார்.

அடுத்ததாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. விண்ணதிர முழக்கங்களை எழுப்பிய தோழர்கள் இந்த அரசு செய்யத்தவறியதை காட்சி வடிவில் தாம் செய்தனர். அதாவது வைகுண்டராஜனை (முகமூடி அணிவிக்கப்பட்ட தோழரை) கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர். இது மக்களின் கவனத்தை ஈர்த்து, சிந்திக்கத் தூண்டியது.

வைகுண்டராஜனை கைது செய்

அப்பொழுது காவல்துறை முகத்துக்கு அருகில் கேமராவை கொண்டுவந்து பதிவு செய்த்து அச்சுறுத்தவும், மக்களின் பார்வையை கெடுக்கும் விதமாக குறுக்கில் மறிக்கவும் முயன்றது. இது போராட்டத்தில் நின்றவர்களை கொதிக்க வைத்தது. முழக்கங்கள் குறிப்பாக காவல்துறையின் ‘மாமா’ வேலைக்கானதை அம்பலப்படுத்துவதாக வீச்சுடன் வெளிப்பட்டது.

தொடர்ந்து வேம்பார், பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த எழிலன் “சட்டம் அனைவருக்கும் சமம், அனைவரையும் பாதுகாக்கிறது என்பதால்தான் வைகுண்டராஜனையும் பாதுகாக்கிறது போல” என்று அரசின் ஆளும் வர்க்க விசுவாசத்தை சாடினார்.

hrpc-demo-demanding-vaikundarajan-arrest-07

கீழவைப்பாரை சேர்ந்த சார்லஸ் “எங்கள் ஊரில் நாங்கள் ஓடி விளையாடிய கடற்கரை இன்று இல்லை. கடலுக்குள் போய்விட்டது. தொடர்ந்து மணல் அள்ளினால் ஊருக்குள்ளும் கடல் புகும். மணல் கம்பெனியில் மலைபோல மணலை குவித்துவைத்துள்ளனர். இக்கம்பெனிகளை விரட்டியடித்தாக வேண்டும்” என்று அபாயத்தை விளக்கினார்.

hrpc-demo-demanding-vaikundarajan-arrest-06

அரி ராகவன் (வழக்கறிஞர்) – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்ட தலைவர் – பேசும்போது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ‘நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கும். எதிர்த்தால் வழக்கு’ என்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய இதே அரசு இப்பொழுது லஞ்சம் தந்து கையும் களவுமாக மாட்டிய வைகுண்டராஜனை கைது செய்யவில்லையே அது ஏன்?” என்றும், லஞ்சம் வாங்குவதில் கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை கையாளும் வழிமுறைகளையும் இதில் வெளிப்படும் தனித்திறமைகளையும் அம்பலப்படுத்தினார்.

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சண்முகவேல் பேசும்போது “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் அனைத்து போரட்டங்களிலும் நாங்கள் உடன் இருப்போம்” என்று பதிவு செய்தார்.

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சண்முகவேல்

வாஞ்சிநாதன் (வழக்கறிஞர்) –HRPC மதுரை மாவட்ட துணைச்செயலர் – பேசியபோது வைகுண்டராஜனின் கையாட்கள் எப்படி தம்மை பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டனர் என்பதையும் “நீங்கள் விலகிக்கொள்ள எத்தனை கோடி வேண்டும்” என்று விலைபேசியதையும் குறிப்பிட்டு “எத்தனை கோடி கொடுத்தாலும் விலைபோகாத ஆட்கள் நாட்டில் உள்ளனர் என்று இன்றாவது பார்த்துக்கொள்” என்று பதிவு செய்தார்.

வாஞ்சிநாதன் (வழக்கறிஞர்) –HRPC மதுரை மாவட்ட துணைச்செயலர்

இயற்கை வளம், கனிம வளம் சூறையாடப்படுவதை எதிர்த்து மக்கள் அணிதிரள்வதை தடுக்கும் சூழ்ச்சியாக வைகுண்டராஜனை நாடார் சாதியினரின் பிரதிநிதியாக முன்னிருத்த முயன்றனர் சிலர். ஆனால் எங்கள் பிரச்சாரத்தின்போது இதே தூத்துக்குடி மார்க்கெட்டில் கடுமையாக உழைத்து வாழும் வணிகர்கள் நிதிதந்து வாழ்த்தி தாம் நாட்டை நேசிப்பதை நிரூபித்துள்ளதையும், ஆனால் சில கைக்கூலிகள்தான் நாட்டை சூறையாடிவரும் வைகுண்டராஜனை கடுமையாக உழைத்து தொழில் செய்துவரும் நாடார் சமூகத்தின் பிரதிநியாக முன்னிருத்த முயற்சிப்பதையும் குறிப்பிட்டு சாடினார்.

“ரவுடிகளை ஏவி தாக்குவது பலிக்காது என்பதை உணர்ந்ததால்தான் வைகுண்டராஜன் அடக்கி வாசிக்கிறார். அவர் புத்திசாலி. ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் கலகத்தை தூண்ட முயற்சித்து சூடுபட்டிருக்கிறார் அல்லவா?” என்று ரவுடிகளின் வீரத்தை எள்ளிநகையாடினார். “நாங்கள் அடித்தால் திருப்பியடிப்பவர்கள்” என்று புரட்சிகர போர்க்குணத்தை முன்வைத்தார்.

“யாருக்கு தேவை தாது மணல்? இனியும் இக்கம்பெனிகளை செயல்படவிடலாமா?” என்று கேள்வி எழுப்பி இதற்கு முன்னுதாரணமான வகையில் BMC கம்பெனியை சூறையாடிய பெரியதாழை மக்களின் போர்க்குணத்தை முன்னுதாரணம் என்று குறிப்பிட்டு உயர்த்திப் பிடித்தார். இந்த அரசு தொடுத்துள்ள வழக்குகளை தமது அமைப்பான HRPC எதிர்த்து முறியடிக்க உதவும் என்றார்.

அணு உலையை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்திலும் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தும், தேசத்துரோக வழக்குகளை எதிர்கொண்டும், சிலர் உயிரையே தியாகம் செய்தும் போராடிவருவதை குறிப்பிட்டு, “நாட்டுக்காக போராடும்போது அதிகபட்சம் சிறைக்கு அனுப்பப்படுவோம்தான்; சிறை நம்மை என்ன செய்துவிடும்? அதற்காக நாம் வழக்கிற்கும், இழப்பிற்க்கும் அஞ்சக்கூடாது ; கனிமக்கொள்ளையர்களை தண்டிக்காமல் விட்டுவிடக்கூடாது; நம் ஊரைத்தாண்டி ஒரு மணல் லாரியும் செல்லமுடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்; அதற்கான போராட்ட கமிட்டிகளை அனைத்து கிராமங்களிலும் கட்டியமைப்போம்!” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

இடிந்தகரையை சேர்ந்த திருமதி மேரி பேசும்போது “அணு உலைக்கு எதிராக நாங்கள் பட்டினி கிடந்தும் துன்பங்களை சகித்தும் போராடி வருகிறோம். கடலுக்கு போனாத்தான் எங்களுக்கு பொழப்பு. நாட்டு மக்களுக்காக போராடுனா இந்த அரசு எங்களை தீவிரவாதின்னு சொல்லுது. அமெரிக்காவுல இருந்து காசு வாங்கறாங்கன்னு பழிபோடுது. எங்க புள்ளைங்க வெளிநாட்டிலிருந்து அனுப்பற பணம் இந்த அரசாங்கத்துக்கு தெரிஞ்சுதானே இவிங்க மூலமாத்தானே வருது. இதை எப்படி தப்புங்கறாங்க? நாங்க தப்பாக காசுவாங்குனதா இந்த அரசாலே நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள தயார்” என்று சவால் விட்டார். தமது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்த அரசை எச்சரிக்கும் விதமாக “அணு உலையை மட்டுமல்ல; சிறுநீரகத்தை சிதைக்கும், புற்றுநோயை பரப்பும் தாதுமணல் கம்பெனியை எதிர்த்தும் உறுதியாக போராடுவோம்” என்று முழங்கினார்.

இடிந்தகரை மேரி
இடிந்தகரை மீனவ மக்களின் போர்க்குணத்தை பதியவைத்த மேரி

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘பெண்கள் வீட்டை மட்டும் பார்த்தால் போதும்’ என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு ஆப்பறையும் விதமாகவும், வந்திருந்த ஜனநாயக சக்திகளை சிந்திக்க தூண்டும்படியும் முன்னுதாரணமானதாக இருந்தது இடிந்தகரை மீனவ பெண்களின் பங்களிப்பு. உணர்வுபூர்வமாக அவர்கள் எழுப்பிய முழக்கங்களும், அவர்களின் சார்பாக பேசிய திருமதி மேரியின் பேச்சும் பார்வையாளர்களை மட்டுமல்ல; உடன் நின்றிருந்த தோழர்களுக்கும் உணர்வூட்டி சிந்திக்கத்தூண்டியது.

இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் பங்கேற்புடன்தான் நடந்தது. குறிப்பாக ஆர்ப்பாட்ட செலவை ஈடுகட்ட பெரியதாழை ஊர்க்கமிட்டியினர் 3000.00ரூபாயும், கூடங்குளத்து மக்கள் 1000.00 ரூபாயும், பெரியசாமிபுரத்திலிருந்து 1000.00 ரூபாயும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 2000.00 ரூபாயும் தந்து போராட்டத்திலும் பங்கெடுத்ததை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புத்தோழர்களும், எழுத்தாளர் குளச்சல் முகம்மது யூசூப் உள்ளிட்ட முற்போக்காளர்களும் பங்கெடுத்தனர்.

இறுதியாக ராமச்சந்திரன் (வழக்கறிஞர்) –செயலர் – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்டம் – நன்றியுரையாற்றினார்.

ராமச்சந்திரன் (வழக்கறிஞர்) –செயலர் – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்டம்

இந்த ஆர்ப்பாட்டம் தாதுமணல் கம்பெனிகளை அடித்து விரட்டும் தொடர் போராட்டத்துக்கான முன்னறிவிப்பாக அனைவர் மனதிலும் பதிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு
தூத்துக்குடி-நெல்லை-குமரி மாவட்டங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. பினாமி அம்மாவும், ஆதாயம் தேடும் அதிகாரிகளும், வைகுண்டராஜனிடம் கையூட்டுப்பெற்றுள்ளதால் தான் இந்தத் தேசத்துரோகச் சண்டாளனை இன்னும் பிடிக்கவில்லை.
  அவர் இருக்கும் இடம் கூட இவர்களுக்குத் தெரியாது என்றால் இவர்கள் எப்படி தீவிரவாதிகளைப் பிடிப்பார்கள்.
  போராடிய பெண்களுக்கும் மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள். அவர்களது பங்கீடு இல்லாமல் எந்த போராட்டமும் முழுமை அடையாது.

 2. தனியொரு இயக்கமாக, தவறு செய்யும் ஜெ[ஜ]கத்தினை அழிப்போம். நான் தவறை மட்டுமே சொல்கிறேன்.

 3. னாடார்ன்னா மட்டும் தாக்க மாட்டீர், இதுவே தேவர் சமூகம் என்றால் அந்த சாதியே மோசமான சாதி மாதிரி திட்டித் தீர்ப்பீரே….ஏன் இந்த மார்ரி….நீங்கள் குறிப்பிட்ட தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் எல்லாம் உள்ள நாடார் சாதி வைகுண்டராஜன் கள்நிறையவே உள்ளனர்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க