Friday, May 9, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமானாமதுரை KSM : கல்லூரியா ? காயலாங்கடையா ?

மானாமதுரை KSM : கல்லூரியா ? காயலாங்கடையா ?

-

னியார் கல்லூரி என்று நாம் கேட்கும் போது மாண்வர்கள் படும் அவஸ்தை நம் கண் முன்னே தோன்றும். தனியார் கல்லூரிகள் மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. அது சரி தனியார்மயம் யாரைத் தான் விட்டுவைத்துள்ளது!

KSM பாலிடெக்னிக் கல்லூரியில் நிலவும் சூழலை இங்கு பகிர்ந்து கொள்வது இதற்கு நல்ல உதாரணமாக அமையும்.

KSM பாலிடெக்னிக் கல்லூரி மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரத்தில் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது. இது ஒரு கல்லூரி அல்ல காயலாங் கடை என்பதை மாணவர்களிடம் சிறிது நேரம் பேசும் பொழுதே தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்பு இந்த கல்லூரி பல வருடங்களாக அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. அந்தத் தொழில் போணியாகாத காரணத்தால் பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றபட்டது. மோசமான கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் சரியில்லாமலேயே இயங்கி வருகிறது இந்தக் கல்லூரி. இச்சிறிய தகவலே இந்த கல்லூரியின் லட்சணத்தினை மேலோட்டமாக அறிய உதவிகரமாக அமையும்

இந்த கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினால் பிரச்சனைகள் உள்ளன

மாணவர்களின் பிரச்சனைகள்:

  • கல்லூரி துவங்கியவுடன் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு தாமதம். மாணவர்களின் முறையான படிப்பிற்கும் பயிற்சிக்கும் இது தடையாக அமைந்துள்ளது
  • ஆய்வக கட்டணம் 800 ரூபாய் வாங்கப்பட்டு போதிய உபகரணங்கள் முழுமையாக வழங்குவதில்லை. ஆதலால் மாணவர்களுக்கு துறை சம்மந்தமான நடைமுறை அறிவு (Practical Knowledge) கிடைப்பதில்லை.
  • மாணவர்களுக்கு மொத்தமாக புத்தகங்கள் வாங்கும் பொழுது 40- 50% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால் நிர்வாகம் புத்தகத்தினை தள்ளுபடி விலையில் வழங்காமல் கமிசன் அடிக்கிறார்கள்.
  • முறையான குடிநீர் வசதி கிடையாது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பலகை வைத்து உப்புத் தண்ணீர் வழங்கப்படுகிறது.
  • வகுப்பறையில் போதுமான அளவில் மின்விசிறிகள் கிடையாது. மழை நேரங்களில் வகுப்பறை வெளிச்சமாக இருக்க மின் விளக்குகள் முறையாக இல்லை.
  • சில கரும்பலகைகளில் எழுதுவது கூட தெரியாத அளவு மோசமான பராமரிப்பு.
  • விடுதி மாணவர்கள் நிலைமை இன்னும் மோசம். அனைத்து வசதிகளும் கொண்ட அறை உள்ளது என்று புளுகிவிட்டு கட்டில் கூட இல்லாது கட்டாந்தரையில் தான் படுக்க வைத்துள்ளார்கள்.
  • அறைக்கு பத்து முதல் பதினைந்து மாணவர்கள் வரை கூட்டமாக அடைத்து வைப்பது.
  • போதிய அளவு கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கிடையாது, அடர்ந்த புதர்களுக்குள் தான் மலம் கழிக்க வேண்டிய அவல நிலைமை உள்ளது.
  • விடுதியில் மாணவர்களுக்கு மட்டமான உணவு தயாரிக்கப்படுவதோடு கல்லூரி முதல்வர் மற்றும் காசாளர்க்கு தனியே எடுத்து வைக்கபட்ட நல்ல உணவு வழங்கபடுகிறது.
  • கல்லூரியை சுற்றி அடர்ந்த புதர் காடுகள் இருப்பதினால் விஷப் பூச்சிகளை மாணவர்கள் அடித்துள்ள சம்பவங்கள் பல நடந்துள்ளன.
  • மாணவர்கள் விளையாட முறையான மைதானமோ அதற்கான ஆசிரியர்களோ இல்லை

இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் மாணவர்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இக்கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் விவசாய பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்

ஆசிரியர்களின் பிரச்சனைகள்

  • ஆய்வகத் தேர்வு நடத்துவதற்கு 3 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இங்கு வசதி குறைவு என்பதால் 5- 6 ஆசிரியர்கள் (Internal Examiner) தேவைப்படுகிறார்கள். மேலும் External Examiner வருவார். ஆய்வக தேர்வு முடியும் பொழுது அரசு அந்த தேர்வை நடத்திய ஆசிரியர்களுக்கு பணம் தரும். ஆனால் இங்கு நிர்வாகம் (External Examiner) க்கு மட்டும் பணம் அளித்து (Internal Examiner) இடம் பணம் வாங்கியதாக கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் தரமாட்டார்கள். இதை தட்டிக் கேட்டு கையெழுத்து போட மறுத்த ஆசிரியர்களை குறிவைத்து பழிவாங்கும் விதமாக பணியை விட்டு விலகுமாறு வற்புறுத்துகிறார்கள். (தற்போது பணம் வழங்கப்பட்டு வேலையை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள்)
  • ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் பொழுது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது வேலை செய்ய வேண்டும் இடையில் செல்லக் கூடாது (அரசு பணி தவிர) என ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி உள்ளார்கள்.ஆனால் ஒரு வருடம் முழுமையாக வேலை பார்த்திராத ஆசிரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்தால் பணியை விட்டு செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.
  • ஆசிரியர்களுக்கு குடிநீர் வசதி கிடையாது. தங்கள் செலவில் நீர் அருந்த வேண்டியுள்ள நிலைமை உள்ளது, ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதில்லை.
  • ஆய்வக வசதிகள் குறைவாக உள்ளது என தொடக்கத்திலே நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியும் உபகரணங்கள் இறுதியிலேயே கிடைக்க பெறும்.
  • ஆசிரியர்கள் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து டீ அருந்தக் கூடாது, ஒன்றாக சேர்ந்து கழிப்பறை செல்லக் கூடாது என சுற்றறிக்கை விடப்பட்டு ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் இதனை நடைமுறைபடுத்தாதால் நிர்வாகத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது
  • இந்த பிரச்சனையை சில ஆசிரியர்கள் கேட்ட பொழுது, ‘நீ அதிகாரம் பண்ணக் கூடாது, நான் தான் உன்ன அதிகாரம் பண்ணனும்’ என கூறி அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்தார்.

இப்பிரச்சனைகள் அனைத்தையும் தொகுக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் லாபவெறிக்காக மறுக்கப்படுகிறது. பல்வேறு தனியார் கல்லூரிகளில் இத்தகைய பிரச்சனைகள் நிறைந்துள்ளன. இப்பிரச்சனைகள் இல்லா கல்லூரிகளும் உள்ளன. ஆனால் அவையெல்லாம் அதிகமான கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள்.

இவை அனைத்தையும் நிர்வாகத்தின் முறைகேடாக பார்ப்பது சரியானதாக இருக்காது. இவையனைத்திற்கும் தனியார்மயத்தின் லாபவெறியே காரணம்.

மறுபுறம் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு எதிராக பேச மறுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பணி நிரந்தரமின்மை ஒரு புறம் ஆசிரியர்களை வாட்ட, பொறியியல் படித்தவர்களுக்கு தொழில்துறையில் (இண்டஸ்ட்ரியல் செக்டார்) வேலை கிடைக்காததால் வருடாவருடம் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை நோக்கி அதிகமாக வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி குறைந்த சம்பளம் வழங்குவது, சம்பள குறைப்பு என கட்டற்ற சுரண்டலை ஆசிரியர்கள் மேல் நடத்துகிறார்கள்.

கல்வி தனியார்மயம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தாகட்டும் இக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையாகட்டும், பெற்றோர்கள் மேல் திணிக்கப்படும் கட்டண உயர்வாகட்டும் இளைஞர்களின், வேலையின்மை, குறைந்த ஊதியம் மற்றும் வேலை நிரந்தரமின்மை அனைத்திற்கும் தனியார்மயமே காரணமாக உள்ளது என்பதை நாம் அறிய முற்பட வேண்டும்.

மறுபுறம் அரசும் இதைத்தான் ஊக்குவித்து கொண்டு அரசு பள்ளிகளையும், அரசு கல்லூரிகளையும் அடியோடு மூட அனைத்து வேலைகளை செய்கிறது. இதன் மூலம் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நவீன தீண்டாமையை நம்மிடையே புகுத்துகிறது.

நம் அடிப்படை உரிமையான இலவச கல்வியை பெறுவதற்கு, வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனியார்மயத்தினை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுத்து, நமக்கான அரசை நாமே கட்டியமைக்க வேண்டிய காலம் நம்மை நெருங்குகிறது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை மாவட்டம்,
+91 9443175256