Thursday, August 21, 2025
முகப்புஅரசியல்ஊடகம்உலக நாயகனும் - ஒட்டுண்ணி நாயகனும் !

உலக நாயகனும் – ஒட்டுண்ணி நாயகனும் !

-

வைகுண்டராஜன்
மூன்று மாவட்டத்தின் கடற்கரையையே உருக்குலைக்கும் கொலைப்பசி கொண்ட தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜன்.

பெரிய ப்ளக்ஸ் பேனரில் ஒரு டி.வி. சேனலுக்கான விளம்பர வாசகம் இது, “ஜீவ நதிகளை எல்லாம் கூவ நதிகளாக்கிவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாலேயே குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை!” கீழே “பொறுப்பும் பொதுநலனும்” என்ற தத்துவமுழக்கத்தோடு நியூஸ்7 என்ற விளம்பரம்.

பொறுப்பு, பொதுநலன்னா டன் என்ன விலை என்று கேட்கும் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் நியூஸ் ரீல்தான் மேற்கண்ட சேனல். இந்தத் தத்துவத்துக்கு கைகட்டி கம்பீரமாக மேலே போஸ் கொடுப்பது ‘க்ளீன் இண்டியா’ கமல்ஹாசன்! உலகத்தில் ஒரு கொசு பறந்தாலும் அதன் உள்ளடி வேலைகளை கண்டு விண்டு தனது கலைப் பசியை அப்டுடேட் செய்துகொள்ளும் உலக நாயகனுக்கு, உள் ஊரில், மூன்று மாவட்டத்தின் கடற்கரையையே உருக்குலைக்கும் கொலைப்பசி கொண்ட தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜனின் இயற்பகை பற்றி ஏதும் தெரியாது என்று சொல்லமுடியுமா?

கமல்ஹாசன்
இயற்கையைச் சூறையாடும் மாஃபியாவுக்கு ஏத்தம் போட்டு போஸ் கொடுக்கும் உலகநாயகனுக்கு என்ன வேண்டியிருக்கிறது மரியாதை?

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி மோடி வெளக்கு மாரைத் தந்தாலும் போஸ் கொடுப்பேன், இயற்கையின் குலை வாங்கிய வைகுண்டராஜன் சேனல் விளம்பரத்திற்கும் போஸ் கொடுப்பேன்! என்று பிழைக்கும் கலையில் உண்மையிலேயே ‘அண்ணன்’ விஸ்வரூபம் தான். தலைமறைவு ‘சீன்’ காட்டும் வைகுண்டராஜனின் குற்றக் கலைக்கு மெருகூட்டி கம்பீரமாக போஸ்கொடுக்கும் இந்த உலகநாயகனை முதலில் உள்ளே தள்ள வேண்டும்! சைக்கிள் திருடனோடு டபுள்ஸ் போனவனையே உள்ளே விட்டு நெம்பும் போது, இயற்கையைச் சூறையாடும் மாஃபியாவுக்கு ஏத்தம் போட்டு போஸ் கொடுக்கும் உலகநாயகனுக்கு என்ன வேண்டியிருக்கிறது மரியாதை? பொதுநல வழக்கில் உள்ளே தள்ள வேண்டும்!

“நாலு காசு கெடச்சா எதுவுமே தப்பில்லை!” என்று சமூக விரோதிகளை நத்திப் பிழைக்கும் இந்த ‘நாயகன்தான்’ தேசத்தை சுத்தப்படுத்தப் போகிறாராம். கெடுவாய்ப்பாய் துடைப்பங்கள் இப்படியெல்லாம் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது! தாய்நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது, தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதலுக்கும், அவமானத்துக்கும் உள்ளாவது, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் கார்ப்பரேட்டுகளால் பறிக்கப்படுவது… என்று சமூகத்தைப் பாதிக்கும் எந்த விசயத்திலும் தவறுகளை தட்டிக் கேட்காத இந்த ஆளும்வர்க்க கலை ஒட்டுண்ணிகள்தான் தேசம், தேசபக்தி, அமைதி, வளர்ச்சி பற்றி மக்களுக்கு ஊடக உபதேசங்கள் செய்கின்றன.

வாரன் ஆண்டர்சன்
நச்சுவாயு படுகொலையில், “ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துவிட்டு நடைமுறையில் வில்லனாக விளங்கிய ஆன்டர்சன்.

எல்லா செல்வாக்கு மண்டலங்களோடும் காரியவாதமான உறவைப் பேணிக் கொள்ளும் இந்த அடிமைப் புழுதிகள் தம்மைத்தாமே சூப்பர் ஸ்டார்கள், உலகநாயகன் என்று ஊதிப் பெருக்கும் காலத்தில்தான், ஹாலிவுட்டின் 74 வயது நடிகர். “மார்ட்டின் சீன்” தான் நடிக்கும் “BHOPAL: A PRAYER FOR RAIN” எனும் படத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் கதாபாத்திரத்தை ஹீரோவாக காட்டினால் நடிக்கமுடியாது என்று நிபந்தனை விதித்து அப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

1984 -ல் போபாலில் நடந்த யூனியன் கார்பைடு அமெரிக்கக் கம்பெனியின் நச்சுவாயு படுகொலையில், “ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துவிட்டு எந்த பொறுப்பும் ஏற்காமல், எந்த மருத்துவ உதவியும் செய்யாமல், பிரச்சனையை எதிர்கொள்ளாமல் நடைமுறையில் வில்லனாக விளங்கிய ஆன்டர்சனை அந்தத் தன்மையோடு நடிக்கவே சம்மதம்” என்றும், “இதற்கு மாறாக அவரை ஹீரோவாக காட்டுவது உண்மையில்லை, ஏற்க முடியாது” என்றும் மார்ட்டின்சீன் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி கலந்துரையாடலில் கூறி இருக்கிறார். (THE HINDU, NOV. 29,2014).

மார்ட்டின் சீன்
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் கதாபாத்திரத்தை ஹீரோவாக காட்டினால் நடிக்கமுடியாது என்று நிபந்தனை விதித்த “மார்ட்டின் சீன்”,

“Badlands, Apocalylse Now, The Final Countdown, The Amazing Spider Man, Gandhi…” போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இந்த நடிகர், இந்த பேட்டியில் “ஆன்டர்சன் மட்டுமல்ல, பல சி.ஈ.ஓ.க்கள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களையும், உழைக்கும் மக்களின் நலத்தையும் அழித்து தங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பல எண்ணெய் நிறுவனங்கள் இதை தொடர்ந்து செய்கின்றன, கார்ப்பரேட் அமெரிக்காவின் உலகளாவிய நடத்தையாக இது உள்ளது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள் அனைத்தும் லாபத்துக்கானது, இது தேசபக்தி அல்ல! என்று சொந்த நாட்டு முதலாளிகளின் கொள்ளை லாப வெறியையும் கண்டிக்கிறார். ஒப்பீட்டுப்பாருங்கள், “உலகநாயகனின்” யோக்கியதை கமலுக்கு உண்டா? “பவுடர் போட்டு போட்டு கூச்சம் போச்சு” என்று நடிப்பதற்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் வாழ்வதற்கு கொஞ்சமாவது சுரணை வேண்டும்!

இந்த உலக நாயகனுக்குத்தான் உத்தம எழுத்தாளர் ஜெயமோகன் இணையத்தில் சொம்படிக்கிறார். இனி வைகுண்டராஜனின் மணல் கொள்ளை பணம் விருதுப் பணமாய் வெண்முரசுவுக்கும் வழங்கப்படலாம். பச்சமுத்துவிடம் பல்லிளித்து வாங்கியவர் வைகுண்டராஜன் என்றால் டபுள் ஓகே சொல்வார்.

கலைஞன் விலை போகிறான் என்றால் அந்தக் கலையின் யோக்கியதை என்ன?

– துரை.சண்முகம்