privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்

பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்

-

போதிய ஆசிரியரின்றி, வகுப்பறைகளின்றி, கரும்பலகையின்றி, கழிவறையின்றிதான் நாடெங்கிலும் பல அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிம் நகரில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஏறத்தாழ எழுநூறு மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் பணியிலிருப்பதோ வெறும் மூன்று ஆசிரியர்கள். இன்று, நேற்றல்ல; கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டதில் இருந்து, 11 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், இந்தி உள்ளிட்ட எந்த பாடத்துக்கும் பாடவாரியான ஆசிரியர்கள் இல்லை. எட்டாண்டுகளாக தலைமையாசிரியரும் இல்லை.

ராஜஸ்தான் மாணவியர் போராட்டம்
ஆசிரியர்களைப் போடுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து, பள்ளியை இழுத்து மூடிவிட்டுத் தெருவையே வகுப்பறையாக மாற்றி இளம் மாணவிகள் நடத்திய அதிரடிப் போராட்டம்

இதில் என்ன வியக்கத்தக்க செய்தி இருக்கிறதென்று நீங்கள் எதிர்க்கேள்வியெழுப்பக்கூடும். பிம் நகரின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அவலம் அல்ல பிரச்சினை! இந்த அவலநிலையை அப்பள்ளியின் மாணவிகள் எவ்வாறு மாற்றிக் காட்டினர் என்பதுதான் நாம் கவனிக்கத்தக்க விசயம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் கூட!
நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், பெண் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களுள் ஒன்று ராஜஸ்தான். பி.பி.பி. எனப்படும் தனியார் மற்றும் அரசு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திருப்பதில் முதன்மை மாநிலம். பெண்களுக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கித்தள்ளும் சித்தாந்தத்தை கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான்.

இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவிகள் பிம் நகரைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மாதந்தோறும் பீசு கட்டி தனியார் பள்ளியில் படிக்க வைக்க இயலாத ஏழை மற்றும் கூலித் தொழிலாளியின் வீட்டுப் பிள்ளைகள், இவர்கள். மேல்நிலைக் கல்வியைப் பெறுவதற்கு இவர்களுக்கான ஒரே வாய்ப்பு இந்த அரசுப்பள்ளி ஒன்றுதான்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. ராஜஸ்தானிலோ, பள்ளி மாணவர்களுக்கு இவை எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவழித்துத்தான் பள்ளிக்கு வந்தாக வேண்டும். “நானும் எனது சகோதரியும் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல ரூ 40.00 செலவாகிறது. இத்தொகை எனது விதவைத் தாயின் தினக்கூலியில் சரிபாதி” என்கிறார், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஹேமலதா குமாரி. தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பேருந்துக்காக 20 ரூபாய் வரையில் செலவு செய்து பள்ளிக்கு வந்தால், பள்ளியில் ஆசிரியர் இல்லை.

“வகுப்புக்கு வாத்தியாரைப் போடு”  என்று, அம்மாணவிகளின் பெற்றோர்கள் அரசாங்கத்திடம் பல முறை மனு கொடுத்துப் பார்த்தார்கள். இப்பள்ளியிலிருந்து கூப்பிடும் தொலைவிலுள்ள, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்து முறையிட்டுப் பார்த்தார்கள். “ஆகட்டும் பார்க்கலாம்” என்று பத்தாண்டுகளாக தட்டிக்கழித்தது அதிகார வர்க்கம். ஆனது ஒன்றுமில்லை.

இந்நிலையில், கடந்த அக்டோபர்-2 அன்று பள்ளிச் சீருடையில் அணிதிரண்ட 500-க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணவிகள், தமது பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். தமது நியாயமான இப்போராட்டத்துக்கு பிம் நகரைச் சேர்ந்த மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியையும், டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்லும் வகையில் தமது பேரணிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

“ரகுபதி ராகவ ராஜாராம்… கடவுளே… அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு!”, “நாங்கள் எழுநூறு பேர்; ஆசிரியரோ வெறும் மூன்று பேர்!”, “கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தைப் பெற்றிருக்கிறோம்; ஆனால், பாடம் நடத்த வாத்தியார்தான் இல்லை!”என்று அப்பள்ளி மாணவிகள் எழுப்பிய முழக்கங்கள், அந்நகரத்து மக்களை அவர்களை நோக்கித் திருப்பியது.

பின்னர் அம்மாணவிகள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலின் முன்பாக சாலையில் அமர்ந்து அவ்வலுவலகத்தை முற்றுகையிட்டனர். வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, வீதிக்கு வந்து போராடினால் உங்கள் படிப்பு பாழாகிவிடும் என்று அம்மாணவிகளை மிரட்டினர், போலீசாரும் அதிகாரிகளும். “பாடம் நடத்த வாத்தியாரே இல்லை; எந்தப் படிப்பு பாழாகிவிடும்?” என்று பதிலடிக் கொடுத்தனர் பள்ளி மாணவிகள்.

மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களும் குவிந்திருந்தன. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று நைச்சியமாகப் பேசினார், தாசில்தார். வெற்று வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை. “குறைந்த பட்சம் பாடத்திற்கு ஒரு ஆசிரியரையாவது நியமிக்க வேண் டும். எந்த தேதிக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று இப்பொழுதே சொல்லுங்கள்” என்று சமரசம் பேச முயன்ற அதிகாரிகளைத் திணறடித்தனர் மாணவிகள்.

“இன்னும் ஒரு வாரத்திற்குள் புவியியல், கணக்கு, இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து வாக்குறுதி கொடுத்தார். “அக்டோபர் 7-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையெனில், பள்ளியை இழுத்துப் பூட்டுவோம்” என்ற எச்சரிக்கை விடுத்து, கலைந்தனர் மாணவிகள்.

அக்டோபர் 7-ம் தேதி வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளி மாணவிகளிடம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினார் மாவட்ட ஆட்சியர். அக்டோபர் 8-ம் தேதி அன்று பள்ளியை இழுத்து மூடினர், மாணவிகள். பள்ளிக்கு வெளியே சாமியானா பந்தல் அமைத்து திறந்தவெளி வகுப்பறையாக தெருவில் அமர்ந்தனர்.

மாணவிகளின் துணிச்சலான இத்தகைய நடவடிக்கைகளால் உந்தப்பட்ட பிம் நகர மக்கள் அம்மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டனர். அம்மாணவிகளுக்கு டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினர். பள்ளி மாணவிகளுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் அணிதிரண்டதைக் கண்ட நிர்வாகம் செய்வதறியாது திகைத்தது. போராட்டத்தை கைவிடுமாறும் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மீண்டும் வாக்குறுதிகளை வீசினர் அதிகாரிகள். “ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் பள்ளியை திறக்க அனுமதிக்க மாட்டோம். இப்படித்தான் வெளியில் அமர்ந்திருப்போம்” என்றனர் மாணவிகள், உறுதியான குரலில்.

மாணவிகளின் போராட்டக் களத்திலேயே நான்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர் அதிகாரிகள். அதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்தே கலைந்தனர், மாணவிகள். தற்பொழுது, ஏழு ஆசிரியர்களுடன் இயங்குகிறது பிம்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

இதனைத் தொடர்ந்து, தெவைர், அவெட் ஆகிய ஊர்களில் உள்ள  பள்ளிகளும் பிம் நகர் பள்ளி மாணவிகளின் முன்னுதாரணமானப் போராட்ட வழிமுறையைப் பின்பற்றி போராடத் தொடங்கிவிட்டார்கள். “கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில், பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதற்காகப் பெருமை கொள்கிறோம்” என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கின்றனர், பிம்நகர் பள்ளி மாணவிகள்.

“வகுப்பறையைக் கட்டு; வாத்தியாரைப் போடு”  என்று வீதியிலிறங்கிப் போராடாமல் கல்விக்கான உரிமையை நிலைநாட்டமுடியாது என்பதை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்த்தியிருக்கின்றனர், இப்பள்ளி மாணவிகள். அதுவும், ஆணாதிக்க வக்கிரம் உச்சத்திலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி மாணவிகள் இத்தகையதொரு உறுதியானப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர் என்பதில்தான் இப்போராட்டத்தின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது.

– இளங்கதிர்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

    • இந்தப் போராட்டத்தின் வீடியோ பதிவு இணையத்தில் காணக் கிடைக்கிறது.

  1. பிற மதவெறி தேசியவாதிகள் நிறைந்த மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக இருந்த போதிலும். தமிழகத்திலும் கூட பெரும்பாலான அரசு பள்ளிகளில் சிறப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. மேலும் ஐந்தாம் வகுப்புக்கு கீழே படிக்கும் குழந்தைகள் இருக்கும் அரசு பள்ளிகளில் சிறப்பான காவல் வசதி மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் உதவியாளர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க