Saturday, August 13, 2022
முகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் பார்ப்பனரின் எச்சியிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்

பார்ப்பனரின் எச்சியிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்

-

கூக்கே சுப்ரமணியனும் திருநள்ளாறு சனிஸ்வரனும்

ர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் இருக்கிறது கூக்கே சுப்ரமணியசாமி கோவில். 12-12-2014 அன்று மதன் பி. லோகூர் மற்றும் ஆர். பானுமதி அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, இக்கோவிலில் நடைபெறும் ‘மட் சனா’ சடங்குகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பத்திருக்கிறது.

மட் சனா அல்லது உருளு சேவையின் படி பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியிலையில் பிற சாதிகள் உருளுவதன் மூலமாக பல்வேறு நோய்கள் தீரும் என்பது இந்துப் பார்ப்பனியம், இதர சாதிகளுக்கு வழங்கிய மருத்துவ சேவையாகும். காசுள்ளவனுக்கு கார்ப்பரேட் மருத்துவம், ஏழைகளுக்கு ஏதுமற்ற அரசு மருத்துவமனை என்பது மோடி துரிதப்படுத்தும் உலகமயமாக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஏழை பக்தர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனியம் அளிக்கும் சேவை இதுதான்.

கூக்கே சுப்பிரமணியா கோயில்
தலித் சிறுவன் தண்ணீர் குடிக்கப் போனால் மண்டையை உடைக்கும் பார்ப்பனியம் எச்சியிலையில் உருளச் சொல்கிறது.

இப்படி எச்சியிலையில் உருளும் இந்த ‘மரபு’ அல்லது ‘தொன்மம்’ அல்லது ‘ஐதீகம்’ இன்னும் சற்றும் நாசூக்காக சொன்னால் ‘நம்பிக்கை’ கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருவதாகவும் இது ‘இந்துப் பாரம்பரியம்’ என்றும் மனுதாரரின் எதிர்தரப்பு, பார்ப்பன மனுநீதியை உச்ச நீதிமன்றத்தில் நாட்டியிருந்தது. இந்தப் பாரம்பரியத்தின் பேரில்தான்  சூத்திர-பஞ்சமர்களும், தமிழும் கருவறையில் நுழைவதற்கு இன்று வரை அனுமதியில்லை.

மூட நம்பிக்கை என்று சொன்னால் ஒட்டு மொத்த பார்ப்பனியத்திற்கு வேட்டு வைக்க வேண்டிவரும் என்பதால் இக்கோயிலை ஏற்று நடத்தும் கர்நாடக அரசுத் தரப்பு, பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியைலையில் உருளுவது பொது அமைதி, நன்னடத்தை மற்றும் உடல் நலத்திற்கு தீங்கானது என்று புது ராகம் பாடியிருக்கிறது. எனில் தனிக்குவளையில் தலித்துக்கள் குடிப்பதோ, சேரிகளில் முடக்கப்படுவதோ கூட சுகாதாரம்தானே என்று ஆர்.எஸ்.எஸ் தத்துவ அறிஞர்கள் வாதிடலாம்.

எச்சியிலையில் உருளுவது மருத்துவம் தொடர்பானது (!) என்பதால் பார்ப்பனியம், இந்து எதேச்சதிகாரம் என்ற வாதங்களுக்குள் செல்லாமல் உடல் நலம்-சாதி என்ற கோணத்தில், முன்னர் நடந்த வழக்கை, நீதிமன்றங்கள் சாட்சியங்களாக மனசாட்சியின்றி புரட்டிக்கொண்டிருந்ததைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் ‘உயர்’ சாதி இந்துக்களின் நகத்தையும் மயிரையும் தின்றால் நோய்கள் தீரும் என்ற ‘மரபை’ அரசு தடைசெய்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி எச்சியிலையில் உருளுவதையும் தடைசெய்ய வேண்டும் என்பதை வழக்கறிஞர்கள் ஒருவாதமாக முன் வைத்திருக்கிறார்கள்!

ஏற்கனவே கர்நாடக உயர் நீதி மன்றம் இவ்வழக்கை வேறு விதத்தில் அணுகியிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது பார்ப்பனர்கள் தின்றுபோட்ட எச்சியிலையில் உருளுவதற்குப் பதிலாக பார்ப்பன கடவுளான சுப்ரமண்யத்திற்கு படைக்கிற நைவேத்யங்களை வைத்து உருளுவதன் மூலமாக இந்து மதத்தின் தொன்மத்தை மேற்கொண்டு தொடரலாம், ‘மட்-சனா’ என்பதற்கு பதிலாக ‘ஏதே-சனா’ என்று அழைக்கலாமென பரிந்துரைத்து எச்சியிலைக்கு பதிலாக உண்டகட்டியில் உருளுங்கள் என்று இந்து பாசிசத்திற்கே உரிய கரிசனத்தை நிலைநாட்டியிருந்தது. உச்சநீதிமன்றமே உச்சிக்குடுமி மன்றமாக இருக்கும் போது கருநாடக உயர்நீதிமன்றம் மட்டும் உருப்படியான மன்றமாக இருப்ப வாய்ப்பில்லை.

தற்பொழுது வழங்கியிருக்கும் இடைக்காலத் தடையே கர்நாடக உயர் நீதி மன்றத்தின் உண்டகட்டி ஆலோசனையை நிறுத்தியிருக்கும் இடைக்காலச் செயல் தான். எச்சியிலையில் உருளுவது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்கிற வாதத்தை வேறு வழியில்லாமல் ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதில் இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள், தலித்துகள், சமயங்களில் நீதிபதிகளும் (பானுமதி, தில்லைகோயில் நிர்வாகத்தை அரசின் கீழ் கொண்டுவர புரட்சிகர இயக்கங்கள் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தவர்) இருந்தாலும் கூட பார்ப்பன எதேச்சதிகாரத்தைப் பற்றி பேசாமல் தொடர்ச்சியான களப்போராட்டங்களை முன்னெடுக்கமால் இந்துப் பாசிசத்தை முறியடிக்க முடியாது. அப்படி பார்ப்பனியத்தை முறியடிக்க வேண்டுமானால் அதன் மற்றொரு பரிமாணத்தை நாம் கவனிக்க வேண்டும்.

சம்பவம்-2;

சனி பெயர்ச்சி
மேச ராசிக்கு அஷ்டம சனி, ரிசபத்திற்கு கண்ட சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சத்திற்கு ஜென்மச் சனி, தனுசுக்கு விரயச் சனி என்று சனி பகவான் கலந்து கட்டி அடிக்கவிருக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி 16-12-2014 அன்று பிற்பகல் 2.43 மணி அளவில் சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறாராம். இதனால் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களாம். ஏனெனில் சனியின் சஞ்சாரம் இங்கு இல்லையாம். அதே சமயம் கடகம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு லைட்டா ஏதாவது நடக்கலாமாம். மாறாக, மேசம், ரிசபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நோ சான்ஸ். ஜீரோ டாலரன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இனி வரும் காலங்கள் இவர்களுக்கு மிகக் கடினம்! மேம்போக்காக பார்த்தாலே சனியின் பார்வையே படிநிலையாகத்தான் இருக்கிறது! மொத்தமுள்ள 12 ராசிகளில் 6 ராசிக்காரர்களுக்கு அதாவது 50% பேருக்கு வாழ்வு கர்ண கொடூரமாக இருக்கப்போகிறது.

மேச ராசிக்கு அஷ்டம சனி, ரிசபத்திற்கு கண்ட சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சத்திற்கு ஜென்மச் சனி, தனுசுக்கு விரயச் சனி என்று சனி பகவான் கலந்து கட்டி அடிக்கவிருக்கிறார். இதுதவிர மற்ற மூன்று ராசிக்காரர்களுக்கு அதாவது 25% பேருக்கு வாழ்க்கை சற்று கடினம். மீதுமுள்ள 25% பேர்மட்டும் தான் ஓகோவென்று வாழப்போகிறார்கள். சனியின் பார்வையே பாசிசமாக இதுதாண்டா இந்து மதம் என்று 75% பேருக்கு மறுப்பும் 25% பேருக்கு விருப்பும் தெரிவிக்கிறது! சதவீதக்கணக்கே இப்படி இருக்கிற பொழுது மக்கள் சனியை எப்படி அணுகுகிறார்கள்? முதலாளித்துவத்திற்கு இந்து-பார்ப்பனியம் எப்படி இசைவாக இருக்கிறார்? என்பதை மேற்கொண்டு பார்க்க வேண்டும்.

இந்து மதத்தில் மட்டும் தான் கெட்ட கடவுள் நல்ல கடவுள் என்று இரு வகுப்புகள் உண்டு. இதில் சனி கெட்ட கடவுளாவர். இவர் பொங்கு சனியாக இருந்தாலும் சுயம்புவாக இருந்தாலும் திருமணக் கோலத்தில் இருந்தாலும் சனி சாமி வேண்டாத சாமி! பிறகு எதற்கு இத்தனை கெட்டப்பு! டிசம்பர் 16 லிருந்து அடுத்த பதினைந்து நாட்களுக்கு திருநள்ளாறில் தரிசனத்திற்காக வரும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் ‘சனியே தயவு செய்து எங்களை விட்டு விடு’ என்று இறைஞ்சுகிறார்கள். பக்தர்களின் கோரிக்கை எதுவாக இருப்பினும் இது பக்தியல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் மிரட்டி பணிய வைப்பது பக்தியல்ல. அது பாசிசமாகும்.

சனிப்பெயர்ச்சியின் போது பெருமாளை சேவிக்கச் சொல்கிறார்கள். அனுமாருக்கு வெண்ணெய்யும் உளுந்த வடையும் சாத்தச் சொல்கிறார்கள். ஏனெனில் சனி, பெருமாளிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம். உனது பக்தர்களை நான் பீடிக்க மாட்டேன் என்று சனி சொல்லியிருக்கிறாராம். ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!

இது ஒரு புறமிருக்க, தனியார்மயமும் தரகுமுதலாளித்துவமும் சிறுவணிகத்தை அழிக்கிற பொழுது தொழில் நட்டம் என்று சொல்கிற விரயச் சனி, வேலை வாய்ப்பை முதலாளித்துவம் நசுக்குகிற பொழுது அதற்குக் காரணமாக ஜென்மச் சனி, பைபாஸ் சர்ஜரி செய்ய வசதியில்லாமல் செத்துப்போகிற குடும்பத் தலைவன்களின் மரணத்திற்கு காரணம் கண்டச் சனி இது தவிர வீட்டுக்கடன், கோர்ட்டு வாய்தா, திருமணம் தள்ளிப்போவது என்று இச்சமூகத்தின் அனைத்து சீர்கேடுகளுக்கும் பார்ப்பனியம் சனியை ஒற்றை ஆளாய் கைகாட்டுகிறது. பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒன்று சேர்ந்து இயங்குகிறதே என்று சொல்கிறோமோ அது இப்படித்தான்.

சனி பெயர்ச்சி
ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!

பிரச்சனைகளுக்கு காரணம் என்று சனியையே கைகாட்டுபவர்கள் தீர்வுக்கு முதலாளித்துவத்தைக் கைகாட்டுகிறார்கள்! அதனால் தான் எட்டாவது மாதம் வயிற்றில் குழந்தை இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து சனிக்கிழமையைத் தவிர்த்து, பிறக்காத குழந்தைக்கு லக்னம் பார்த்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை அறுத்தெடுக்க தயங்குவதில்லை நடுத்தர வர்க்கம். தனியார் மருத்துவமனைகளும் இதற்காக சீசனை திறந்துவைத்திருக்கின்றன. கத்தி வைத்தாலும் வைக்காவிட்டாலும் டெலிவரி பேக்கேஜ் 7777-ல் இருந்து மூன்று இலட்சம் முடிய அறிவிக்கிற பொழுது பார்ப்பனியம் எப்படி முதலாளித்துவத்திற்கு தரகனாக இருக்கிறது என்பதையும் அறியலாம்.

இப்பொழுது முடிவுரைக்கு வருவோம். கூக்கே சுப்ரமண்ய கோவிலிலே இந்துப் பார்ப்பனியம் தன் சக மனிதனையே எச்சியிலையில் உருள வைப்பதை மரபு என்று சாதிக்கிறது. அரசும் ஆளும் வர்க்கமும் நீதி அமைப்புகளும் விசயத்தை பூசி மெழுகுகின்றன. ஓர் இடைக்காலத் தடையால் இந்தச் சமூகத்தின் ஆன்மா ஒன்றும் தட்டியெழுப்பப்படவில்லை. சமூகமே பார்ப்பனிய எச்சியிலையில் தான் இருக்கிறது என்பதை தில்லையாக இருந்தாலும் கூக்கேவாக இருந்தாலும் பார்க்கிறோம். இரண்டாவது சம்பவத்தில் பார்ப்பனியம் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதைப் பார்க்கலாம். பக்தி என்பதோ, கடவுள் என்பதோ இங்கு இல்லை. கத்தி முனையில் கடவுளை பார்த்து கடவுளே வராதே என்று மக்களை கும்பிட வைக்கிறது பார்ப்பனியம். முதலாளித்துவச் சுரண்டலுக்கு சனி பகவான் படிமமாக இருக்கிறார், பார்ப்பனியம் இயங்கு வடிவமாக இருக்கிறது.

ஆக இதற்கு தீர்வு என்ன? நாம் நம்மை ‘பார்ப்பனியத்தை எதிர்க்கிற அதிதீவிர விமர்சகர்களாக மாற்றிக்கொள்ளாதவரை’, ‘முதாலாளித்துவத்தை எதிர்க்கிற வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்காதவரை’ இந்த சமூகம் எச்சியிலையில் உருளுவதையோ எள் தீபம் ஏற்றுவதையோ தடுத்துவிட முடியாது.

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்

 1. SC stays controversial rituals “urulu seve” and “made snana” at temple
 2. SC steamrolls controversial ‘made snana’
 1. எபோலா வைரஸை விட மிகக் கொடியதான
  பார்ப்பன(இந்து) மதவெறி பாசிசம் உழைத்து வாழும் மக்களுக்கு பொது எதிரி என புரட்சியாளர்கள் கூறுவதை, நூற்றுக்கு நூறு இந்த பதிவு உணர்த்துகிறது. வல்லரசு என பீற்றிக் கொள்ளும் நாட்டில் இப்படி ஒரு மானங்கெட்ட செயல் இதற்கு கோர்ட்டான், விசாரனையான், தீர்ப்பான் என்னவென்று சொல்ல இந்த வெட்கக்கேட்டை. வெங்கயாத்தை அனுப்புரானான், ராக்கெட்ட அனுப்புரானான் வல்லராசன்.

 2. பார்ப்பான் எச்சி இலையை ஆன்டி-பயோடிக் மருந்தாகப் பயன்படுத்தும்படி மெடிக்கல் கடைகளுக்கு உச்சிக்குடுமி மன்றம் உத்தரவு போட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
  அவாளின் ஆட்டம்தானே இன்னும் நடக்குது!
  குடுமிகளின் பேச்சைக் கேட்டு எச்சி இலையில் உருளும் முட்டாள்களை செருப்பால் அடிக்கணும்.

 3. //பார்ப்பனரின் எச்சியிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்//

  இந்த மாதிரி ஒரு கேவலமான ஐடியாவை எப்படி மார்கெட்டிங் செய்திருப்பார்கள் ?

  இதே போல கோவில் ஏதோ ஒரு கோவிலில் காவாலம் என்று வாயில் துப்புவதை பிரசாதமாக உண்பதை தடை செய்ததை படித்து இருக்கிறேன்

  முட்டாளுங்க என்று சொல்வது எளிது . ஆனால் மருத்துவத்தின் மூலம் தீர்வு கிடைக்காதவர்கள், சரியாகவே திட்டுமிட்டு செய்து இருந்தாலும் வாழ்வில் தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள் போன்றவர்கள் ஏதோ ஒரு அற்புதத்தை எதிர்பார்கிறார்கள்.
  அடுத்து தவறு செய்து குற்ற உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு இது ஒரு வடிகாலாக அமைகிறது.

  மருத்துவம் முதலீட்டு தத்துவத்தின் உந்துதலால் மருந்துகளை கண்டுபிடித்து ஒரு சாராரை இதிலிருந்து மீட்கும் . ஆனால் மற்ற இரண்டு குழுவினரும் வெளியே வருவது கடினம் தான்

 4. இந்தக் கட்டுரை மிகவும் பரிச்சயமான நடையில் இருக்கிறதே.. கூக்கேயில் உருளுகின்ற கிறுக்கர்கள், பார்ப்பனர்களையே தாங்கள் பூசுரர்கள்தான் போலிருக்கிறது என்று நம்ப வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.. இங்கு உருளுவதைவிட கழுதைவிட்டையில் உருண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்று கதைகட்டிவிட்டால் அங்கு போய்விடுவார்கள்.. பிரச்சினை பார்ப்பானிடம் இல்லை, இவர்களிடம்தான்..

 5. எச்சில் இலையில் உருளுதல்
  கொடுமையாக இருக்கின்றது ஐயா
  எந்த நூற்றாண்டில் நாம் வாழ்கின்றோம்
  என்பதே புரியவில்லையே

 6. I’m ashamed to see that supreme court has top resolve this. Neither the exploiters note the devotees?!? Are realizing how stupid this is. One of the shames of Hinduism in the name of customs.

 7. \\எட்டாவது மாதம் வயிற்றில் குழந்தை இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து சனிக்கிழமையைத் தவிர்த்து, பிறக்காத குழந்தைக்கு லக்னம் பார்த்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை அறுத்தெடுக்க தயங்குவதில்லை//

  நல்ல நாள்,நேரம் பார்த்து குழந்தையை ”பிறக்க” வைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.பிறப்பதற்கு தகுதியான முதிர்ச்சி அடையும் வரை தாயின் கருவறையை விட பாதுகாப்பான இடம் அந்த குழந்தைக்கு இந்த உலகில் வேறெதுவும் கிடையாது,மருத்துவ காரணங்களின்றி அறுவை மருத்துவம் கூடாது என்பன போன்ற மிக சாதாரணமான எளிய உண்மை கூட இந்த படித்த முட்டாள்களுக்கு புத்தியில் உரைக்க முடியாத அளவிற்கு பார்ப்பனிய மூட நம்பிக்கைகள் மூளையில் பாசியாக படிந்துள்ளன.இது தவறு என்று அந்த மருத்துவ கொள்ளையர்களும் சொல்வதில்லை என்று தெரிகிறது.

  பார்ப்பனியமும் முதலாளித்துவ கொள்ளையும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக இயங்குகின்ற பல விதங்களில் இதுவும் ஒன்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க