privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

-

kanchiளர்ச்சி, முன்னேற்றம், வேலை வாய்ப்பு என்கிறது தனியார் மய, தாராள மய, உலகமயக் கொள்கை. மேக் இன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவக்கு பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்கிறார் மோடி. ஆனால், வேலை வாய்ப்பு வழங்குவதற்காக செயல்பட்டு வரும் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலை என்ன?

வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைக்கு செல்கிறார்களா? அவர்களுக்கு, இந்த அலுவலகம் எவ்வாறு உதவுகிறது? வேலையற்ற இளைஞர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயற்பாட்டைப்பற்றி என்ன கருதுகிறார்கள்?

சென்னை மாநகர் மற்றும் புறநகர் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு சென்றோம்.

வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள், வேலைத்தேடி அலுவலகத்திற்கு வரும் இளைஞர்கள், அவர்களுடன் வந்த பெற்றோர், உறவினர் மற்றும் அலுவலகத்தின் அருகில், ஆன்லைன் பதிவு மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்களிடமும் உரையாடினோம். அவர்களின் வாக்குமூலங்களை கேளுங்கள்!

ஜனனி, கொளத்தூர், சென்னை, (2011-ல் பி.காம்):

ஜஸ்ட், ரிஜிஸ்டர் பண்ணி வைக்கிறேன். வேலை, கிடைக்குமா கிடைக்காதா என்பது எனக்கு தெரியாது. இது வீட்டெல இருக்குறவங்க விருப்பம். எனக்கு, அப்பா இல்ல. பொண்ணாச்சே, புருஷன் பாத்துக்குவானோ இல்லையோனு அம்மாவுக்கு பயம். ஏதாவது எதிர்த்து சொன்னா அம்மா கோபப்படும்.

காண்ட்டீபன்,சென்னை. (B,E, 2014):

நான், அவரேஜ் பாஸ் 75%. கேம்பஸூல வேலைக்கு, ஆவல. 90% எடுத்தவனே அங்க க்யூல நிக்கிறான். இங்க ரிஜிஸ்தர் பண்ணி வைச்சா, கவர்மென்ட் எக்ஸாம் போது இந்த நெம்பர் கேக்கிறான், அதுக்காக இது.

guindy
அரசு வேலை வாய்ப்பு அலுவலகம், கிண்டி

சேகர், காஞ்சிபுரம், வயது 45 (SSLC)

பதிவு செய்து 18 வருடமாக ஒரு லெட்டர்கூட வரல. கூட இருந்தவங்களெல்லாம் வேலைக்கு போய்ட்டாங்க. எனக்கு வராததக்கு என்ன காரணம்னே தெரியல. 30, 40 முறை வந்து போயிருக்கேன். 10-வது பாஸ். கவர்மெண்ட் வேலையில்லானாலும் எதாவது சின்ன தொழிலுக் குடுத்தாக்கூட பொழைச்சிக்குவேன். வேலை எதுவும் இல்ல. 45 வயசாயிடுச்சி. என்கூட இருந்தவங்க எல்லாம், வாத்தியாரு, போலிசு, எல்ஐசி னு பெரிய பெரிய வேலை செய்றாங்க, என்னை மதிக்கமாட்டாறங்க. என் பையன் வக்கீலுக்கு படிக்கிறான் செங்கல்பட்டுல. ஒருபொண்ணு 10வது செய்யூர்ல படிக்குது. இன்னொரு பொண்ணு 8 வது படிக்கிது. என் பையனே வேலைவாங்கிடுவான் ஆனா எனக்கு வேலை கிடைக்காது உண்மைதான். வாழ்க்கையே தலைவலியா இருக்கு. உள்ளப்போய் எழுதிக்கொடுத்துட்டு வந்திடுறேன் சார். (இவர் ஒரு தலித்)

வசந்தா, வயது 45, காஞ்சிபுரம். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்துபவர்.

நிறையபேருக்கு கவர்மெண்டு மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி, அதுவும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கூட்டம் குறைஞ்சதுக்கு காரணமா சொல்லலாம், அதில்லாம இப்ப நிறையபேருக்கு கம்பியூட்டர் தெரிஞ்சி இருக்கறதாலே ஆன்லைனிலயே பதிவு, அடிஷனல், ரினிவல் பண்ணிடுறாங்க. வர்றவங்கள்ல, ஊனமுற்றவர்கள், விதவைகள் நம்பிக்கையோடு வந்து, போறது பாக்கறதுக்கு கவலையா இருக்கும்.

ராமு, முதியவர், காஞ்சிபுரம்:

என் பேத்திக்காக வந்திருக்கேன். இதுவரைக்கும் எங்க குடும்பத்துல ஒருத்தருக்கும் வேலை கிடைக்கல. நான் அந்த காலத்துலயே 8-வது படிச்சிருக்கேன். நான் பாக்கறவங்கள்ள பலபேரு ஒரே குடும்பத்துல நிறைய கவர்மெண்ட் வேலையில இருக்காங்க. ஏன்? நமக்கு மட்டும் கிடைக்க மாட்டேன்ங்குதுனு தெரியல. பேத்திக்கு வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கையெல்லாம் இல்லை. நிறைய படிக்க வைச்சிருக்கேன் எம்புள்ளய, கவர்மெண்ட் வேலையா இருந்தா நிரந்தரமா இருக்கும். சம்பளம் கம்மியா இருந்தாலும், வேலைநேரம் கரெக்டா இருக்கும், பொம்பள புள்ளக்கி சரியானதா இருக்கும்னு தான் அலைய வேண்டியதா இருக்கு.

விஜியா, காஞ்சிபுரம். படிப்பு M.COM

ரினிவலுக்காக வந்திருக்கேன். கண்டிப்பா வேலை கிடைக்காதுனு தெரியும். இருந்தாலும், பார்மலிட்டிக்காக வந்தேன். இல்லைனா எப்படியாவது எங்களையே குறை சொல்லிடுவாங்க. பதிவு பண்ணி வச்சிருக்கலாம் இல்லயானு. எங்கப்பா, விவசாயம் பாக்கறாரு. நான் வாலாஜாபாத் ல கடையில கேசியரா வேலைப் பாக்கிறேன். இந்த வேலையை முடிச்சிட்டு கடைக்கு போய்டனும். 2007-ல் பதிவு செய்தேன். இதுவரைக்கும் ஒரு கார்டு கூட வரல. கேட்டா, உள்ளிருக்கறவங்க சரியா பதில் சொல்ல மாட்டேன்றாங்க. அதியே தெரிஞ்சிரும், வேலை கிடைக்காதுனு. என் பிரண்ட்சுக்கும் யாருக்கும் இதுவரைக்கும் வேலை கிடைக்கல. ஆனா சிலரு மட்டும் டிஎன்பிசி எழுதி செலக்ட் ஆகி இருக்காங்க. எனக்கும் அதுலயும் அதிர்ஷ்டம் இல்ல.

துரை, வயது 55, காஞ்சிபுரம். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பிரவுசிங் சென்டர் நடத்துகிறார்:

துரை காஞ்சி
துரை, காஞ்சிபுரம்

போன கவர்மெண்ட்ல வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலின் மூப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. ஆனா, இந்த கவர்மெண்ட்ல அப்படி கிடையாது. எல்லாத்தையும் டி.என்.பி.சி, ஓபன் கால்ஃபார், அதனால, அதுமேல நம்பிக்கை போய்டுச்சி. கண்டக்டர், டிரைவர் வேலைகளுக்கும் பதிவு செய்த மூப்பு அடிப்படையில அப்ப எடுத்தாங்க. இப்ப, இன்னிக்கி லைசன்ஸ் எடுத்தவன்கூட வேலைக்கு அப்ளை பண்ற சூழ்நிலையா மாத்திட்டாங்க. அதனால, பதிவு செய்து வைத்தும் எந்த பிரயோசனமும் இல்லாத நிலைமை. இதனால, பதிவு பண்ணவங்களும் வேலை கிடைக்காது என்ற மனநிலைமைக்கு வந்துட்டாங்க. அதனால, அலுவலகத்துக்கு வரது சுத்தமா குறைஞ்சிபோச்சி.

தினேஷ் வயது 30 காஞ்சிபுரம்:

எல்லாரும் சொல்றாங்க, கலப்பு திருமணம் செய்துகிட்டவங்களுக்கு முன்னுரிமை இருக்குனு. அதானல என் மனைவியோட பத்தாவது படிப்பை பதிவு செய்ய காத்திட்டு இருக்கோம்.

காமாட்சி, வயது 30, காஞ்சிபுரம்: இரண்டு குழந்தைக்கு தாய், பிரவுசிங் சென்டரில் வேலைபார்ப்பவர்.

எம்பிளாய்மெண்ட் எதிர்ல 6 மாசமா வேலை பார்க்கிறேன். நானும் 12-வது முடிச்சிட்டு பதிவு செய்து வச்சிருக்கேன். 10 வருடமாக காத்திருக்கேன். கவர்மெண்ட் வேலைன்னு சொல்றது படித்த பெண்களுக்கு சிறந்த கணவன் மாதிரி. அது எல்லோருக்கும் கிடைக்கிறது இல்ல. ஆனா அது பெரிய கனவா இருக்கு. நம்பிக்கையில பதிவு செய்து வைத்திருக்கிறேன். என்னப் பொறுத்தவரைக்கும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சினு சொல்றது பொய். அப்போ வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்தோம். இப்ப, அரசியல்வாதிங்ககிட்ட அடிமையா இருக்கோம். இதப் பத்தி நிறைய பேசலாம், என் குடும்பம், குழந்தைகள் இல்லனா நிறைய பேசுவேன்.

காஞ்சி காமாட்சி
காமாட்சி, காஞ்சிபுரம்

எவ்ளோ அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்டமுடியாம கிடக்கிறேன். என் குடும்பம் குழந்தைகளை நினைச்சி. பெண்களுக்கு தனியார்கிட்ட வேலைக்குப் போன எந்த மதிப்பும் கிடையாது. மதிப்பு இல்லனாலும் சம்பளம் தேவையாயிருக்குறதால போக வேண்டி இருக்கு. அதுக்குதான் படித்த பெண்களுக்கு கண்டிப்பாக கவர்மெண்ட் வேலை கொடுக்கணும் உறுதியா சொல்லுவேன். ஆனா, நம்ம கவர்மெண்ட் கொடுக்கும் என்ற நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது. நப்பாசையில காத்திட்டுருக்கேன். இதுவரைக்கும் ஒரு லெட்டர்கூட வரல.

ஆனந்தன், வயது 53, காஞ்சிபுரம். தன்மகளுடன் வந்திருந்தவர், ஆட்டோமொபைல் கடை நடத்துகிறார்.

என் கைத்தொழில் எனக்கு கைகொடுத்து, என் குடும்பத்தையும், என் குழந்தைகளின் படிப்புக்கும் பெருந்துணையாயிருந்தது. அதை வைச்சி, என் பொண்ணை நல்லா படிக்க வைச்சிட்டேன். ஆனா, கவர்மெண்ட் வேலை கிடைக்குமானு தெரியல.அப்படியே, கிடைச்சாலும் அந்தப் பேப்பர் இல்ல, இந்தப் பேப்பர் இல்லனு அனுப்பிடுறாங்களாம். அதனாலதான் பதிவு செய்ய வேண்டியது நம்ம கடமை. என் குடும்பத்துலயே கவர்மெண்ட் வேலைனு இவதான் முதல்ல பதிவு செய்ய வந்திருக்கா. ஏன்னா? நிரந்தரமான வேலை, தனியார்கிட்ட போனா எப்ப மூடுவானு தெரியாது. பாண்டிச்சேரில ஒருகம்பெனி, மெட்ராசுல நோக்கியா இதெல்லாம் பாக்கும்போது நம்ம கொழந்த படிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறது தப்பா? அந்த ஆசைதான் எல்லாருக்கும் இருக்கு. எனக்கும் இருக்கு. என் தொழில என் பொண்ணு தொடர முடியாது. வெளியதான் வேலைக்கு போயாகணும். நம்பிக்கையோட பதிவு செய்துட்டு போறோம். மூணு வருசம் கழிச்சி வரசொல்லிட்டாங்க.

ரேவதி, இன்ஜினியரிங் முடித்த மாணவி: மேலே பார்த்த ஆனந்தனின் மகள்.

எங்கப்பாவின் ஆசைக்காகத்தான் பதிவு பண்றதுக்கு வந்தேன். என் பிரண்ட்செல்லாம் கிண்டல் பண்ணீனாங்க. கவர்மெண்ட்ல வேலையெல்லாம் கிடைக்காது. ஐ.டி கம்பெனிகளின் கேம்பஸ்லதான் ஒர்த்துனு சொன்னாங்க, நிறைய பேர் செலக்ட் ஆகி வேலைக்குப் போயிட்டாங்க, ஆரம்பத்துல 15ஆயிரம் சம்பளம் வாங்கறாங்க. இருந்தாலும், கேம்பஸ்ல செலக்ட் ஆனாலும் எம்பிளாய்மெண்ட் நெம்பர் கேட்பாங்கனுதான் பதிவு பண்ண வந்திருக்கேன். பார்மாலிடிக்காகத்தான் பதிவு பண்றேன். பெரிய அளவுல நம்பிக்கையெல்லாம் இல்ல. அப்பாவுக்காத்தான் வந்தேன்.

கோமதி நாயகம், 55, கிண்டி அரசு வேலை வாய்ப்பு அலுவலகம். ஊர், திருநெல்வேலி.

பெண்ணுக்காக வந்தேன். Msc IT,-யில 85%, ctc கம்பெனியில் வேலை. 5 வருஷமா அங்கு புரமோஷன் இல்ல, சம்பளமும் பெரிசா ஏத்தல. இப்ப 35,000 ரூ சம்பளம். தினமும், இரவு 12.45 க்குதான் வருது. கவர்மென்ட் வேலை கிடைச்சா 10 to 5 வேலை. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சி நடுராத்திரிக்கு போனா மாப்பள ஒத்துக்குவானா? இப்ப டிரைவரெ 10 பவுன் நகை டூவிலர் கேக்குறான். எங்க சாதியில பொண்ணுக்கு கல்யாணம் பண்ண 10 லட்சம் வேணும். அதன் பிறகு நான் ஊரோட போகவேண்டியதுதான். ஆனால்,இங்க பதிவு பண்றதுக்கே அலையவுடறாங்க.

தெய்வசிகாமணி, வயது 50, காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்.

சென்னை  சாந்தோம் mnc ஆள் பிடித்தல்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆள் பிடிக்கும் கவுன்சிலிங் கூட்டம் – அரசு வேலை வாய்ப்பு அலுவலகம், சாந்தோம்.

இப்ப கவர்மெண்ட் வேலையெல்லாம் கிடைக்காது. பாதிக்கு பாதியா குறைச்சிட்டாங்க, எங்க ஆபிசுலயே 32 பேர் வேலை செய்யணும். ஆனா, 16 வேலை காலியா இருக்கு. பல லட்சம் பதிவாளர்களை டீல் பண்றது 16 பேருதான். அதில 4 பேரு அதிகாரி, 4 பேர்தான் எழுத்தர். மீதிப்பேர் கீழ்நிலை ஊழியர்கள்.

இதுமட்டுமில்லாமல், பிரைவேட் கம்பெனிக்காரனுகளுக்கு ஆள் சேர்த்துவிடனும்.
சுத்துப்பட்டுல இருந்து சென்னையில இருக்கிற கம்பெனிக்காரங்க வரைக்கும் தனக்கு தேவையான ஆட்களை தெரிவு செய்துக் கொள்ள நாங்கதான் ஏற்பாடு செய்து தரணும். அதுக்கான லெட்டருல கலெக்டர் அனுமதி கையெழுத்துப் போட்டு அனுப்பிடுவாரு.
பிறகு, பதிவு செய்திருக்கறவங்களை கூப்பிடுவோம். அவங்ககிட்டயேயும், தனியார் வேலைக்கு போறதால உங்களுடைய எம்பிளாய்மெண்ட் மூப்பு எதுவும் பாதிக்காது. தொடர்ந்து புதுப்பிக்கிணும்னு தைரியம் சொல்வோம். அது போல, கோல்கேட் கம்பெனியிலிருந்து செக்யுரிட்டி கம்பெனி வரைக்கும் எல்லா தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பாடு செய்து தர்றோம். கம்பெனியில இருந்து ஜிஎம், எச்ஆர்ஒ, நிறையப் பேர் வருவாங்க. அவங்களுக்கு தேவையானவங்கள எடுத்துக்குவாங்க.

இப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சென்னை, மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்டது.

விரைவில், தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. இந்த மையங்களில் பதிவுதாரர்களின் திறமை, ஆர்வம், மனோபாவம் ஆகியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ற படிப்பை படிக்கவோ, தொழில் பயிற்சியை பெறவோ உளவியல் ரீதியாக கல்வி ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்களைப் போன்று உளவியல் பரிசோதனை (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) திறனாய்வு சோதனை (ஆப்டிடியூடு டெஸ்ட்) போன்ற பரிசோதனைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிண்டி வேலைவாய்ப்பு அலுவலகம்
என்றாவது கிடைத்து விடுமா?

HDFC bank இன்சுரன்ஸ் பாலிசி ஏஜெண்ட்

கவர்மெண்ட் வேலையில்லைனா என்னா? இன்சுரன்ஸ் பாலிசி பிடித்துக் கொடுத்தால் கமிஷன் வரும் தெரியுமா உங்களுக்கு? இருக்கறதுலேயே அதிகமா சம்பாதிக்கறது யாருனு பாத்திங்கனா, எல்ஐசி மற்றும் இன்சுரன்ஸ் ஏஜெண்டுகள் தான். குறைந்தது 2 லட்சம் மாசத்துக்கு சம்பாதிக்கலாம்.

ஒரு அரை மணிநேரத்துல நீங்க பாலிசி பேசிப் போட்டுடலாம். இன்சுரன்ஸ், ஜஸ்ட் ஒரு லைப் கவர்தான். 5 ஆயிரம் கொடுத்து வாங்குற செல்போனுக்கே ரூ- 100 க் கொடுத்து கவர் போட்டுடுறோம். அதமாதிரிதான் இது, லைப் கவர்னு பேசறோம்.
hdfc bank, இன்சுரன்ஸ் ஏஜண்டா டோனி மனைவி சாக்சி இருங்காங்க. நிறைய பேரு லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க. எல்லாரையும் லிஸ்ட் அவுட் பண்ண முடியாது. மேலும், சென்னையில லிடிங்ல இருக்கற சொர்ணலட்சுமியோட டார்கெட் பாத்திங்கனா 88 லட்சம் அப்ப அவங்களுக்கு மாசத்துக்கு எவ்ளோ கமிஷன் வரும். ரூ 25லட்சம். இதுல, வேலையினு பாத்தா, ஜம்முனு உட்கார்ந்துக்கினு பிரண்டுங்கிட்ட பேசப்போறோம். ஏஜண்டாக மாறி சம்பாதிக்கப்போறோம்.

என்றார்.

இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பயன் இதுதான். வேலை கிடைக்காது என்று நிச்சயமாக தெரிந்தும், வேறு வழியின்றியும், நமக்கு ஏதேனும் அதிர்ஷம் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்தும் இளைஞர்கள் இந்த பாழடைந்த அரசு கட்டிடத்திற்குள் வந்து செல்கின்றனர். அவர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை மேலும் அச்சுறுத்தி இத்தகைய காப்பீடு தரகர்கள் பணம் பறிக்கின்றனர்.

தனியார் மயம் வந்தால் நாட்டில் தேனும் பாலும் வெள்ளமென ஓடுமென கனவு கண்டவர்கள் இந்த இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும். எவருக்கும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலையோ, பணி பாதுகாப்போ இருக்குமென்பதை ஏற்கவில்லை. அதே நேரம் அரசு வேலைகள் பாதுகாப்பானது என்றாலும் அங்கே வேலையே கிடைக்காது என்பதும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.
ஏதோ கிடைக்கும் வேலையை வைத்துக் கொண்டு கனவில் மட்டும் ஒரு நல்ல வேலை கிடைக்குமென்ற நம்பிக்கையின்பாற்பட்டு இங்கே வருகிறார்கள். ஒரு வகையில் நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று கடவுளையும், மதத்தையும் நம்பி சாத்திரம் சடங்கு செய்யும் அப்பாவி ஆத்தீக நபர்களின் செயலோடும் இதை ஒப்பிடலாம்.

ஏழு கோடி தமிழ் மக்களில் 80 இலட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்கில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை நிலையை காட்டுகிறது. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்றே நம் மக்களின் வாழ்க்கை கடந்து போகிறது என்பதன் சாட்சியங்களாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் நிற்கின்றன.

இந்த விதியை மாற்ற முடியும் என்று இளைய சமூகம் வெடித்தெழாத வரை இங்கே வேலையும் இல்லை, வாழ்க்கையும் இல்லை.

– வினவு செய்தியாளர்கள்