நிமிர்ந்து நில்!
துணிந்து செல்!

கார்ப்பரேட் மூலதனத்துக்காக
எதை எதையோ கற்றோம்
வாழ்வதற்காக
போராடக் கற்போம்!
ஏ.சி. கியூபிக்கிளில்
அச்சத்தில் உறையவைக்கப்பட்ட
பனிக்கட்டிகளாய்
ஏன் இந்த அவலம்,
பக்கத்து மனிதர்களின்
மனக் கொதிப்பை
பகிர்ந்து கொள்ள மறுத்ததால்
வந்த துயரம்.
என்ன தவறு செய்தோம்?
என்ன சொன்னாலும் கேட்டோம்!
அதுதான் தவறு.
நாமும் ஒரு தொழிலாளிதான்
என்பதை
மறந்து போன துயரத்தால்
விளைந்த சோகம் இது!
இரவு, பகல் எந்த ஷிப்ட்டிலும்
இளரத்தம் சுண்டக் காய்ச்சினோம்,
இமைத் துடிப்பைத் தொலைத்து
கணினி இலக்கில்
கருவிழி பாய்ச்சினோம்.
எங்கோ இருக்கிற
அமெரிக்க ‘டீலை’
‘டேலி’ செய்தோம்,
சொந்த உடம்பில்
வைட்டமின் ‘டி’ ஐ
காலி செய்தோம்.
நிர்வாகத்தின்
டார்கெட் அழுத்தத்தில்
மவுஸ் துடித்ததை விட
நம் இதயம் துடித்தது அதிகம்!
மூலதனத்துக்கு தேவை
இதயம் அல்ல லாபம்.
நமக்குத் தேவை
தயக்கம் அல்ல இயக்கம்.
எது
கொத்து கொத்தாக விவசாயிகளை
விளை நிலத்தை விட்டு
பிடுங்கி எறிந்ததோ,
எது
லட்சக்கணக்கான தொழிலாளர்களை
திடீரென
தொழில்களை விட்டு விரட்டியதோ,
எது
மீனவரை
ஆழ்கடல் துரத்தி
அலைக்கழித்து விரட்டுகிறதோ
அதுதான்
நம்மையும்
ஒரு நொடியில்
வீதிக்கு விரட்டுகிறது!
நோக்கியாவின் கதவுகள்
சாத்தப்படுவதும்,
டி.சி.எஸ்.சின் கணினிகள்
சாத்தப்படுவதும்
வேறு வேறு அல்ல.
மொத்த தொழிலாளிகளின்
ஒரு பகுதி என
நம்மை உணர்ந்தால்
சித்தம் கலங்காது
ரத்தம் கொதிக்கும்!
லாபத்துக்கு தேவையற்றவர்களை
‘திறமையற்றவர்களாய்’ இழிவுபடுத்தும்
கார்ப்பரேட்டுகளுக்கு,
நமது திறமையை
நாம் தனி அல்ல
உழைப்பாளர் அணி என
ஓங்கி அறைந்திடுவோம் முகத்தில்!
உரிமைகளுக்கு
ஃப்ரெஷரானால்
நமக்கான வேலை
நிறைய இருக்கிறது
போராட்டம் இல்லாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது
போராடும்
ஒவ்வொரு நிமிடமும்
புதிய திசைகள் திறக்கின்றது.
அச்சம் தவிர் நண்பா!
சங்கமாய் சேர்ந்து அடி!
சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!
– துரை.சண்முகம்