privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

-

டவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் எங்கே இருக்கிறார்? கடவுளை எப்படிப் பார்ப்பது? – சுவாரசியமான கேள்விகள் இவை. ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் மதங்களின் இருப்புக்கே ஆதாரமான இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் வித விதமான ‘விடைகளில்’ தான் மதங்கள் உயிர் வாழ்கின்றன. இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேடும் ஒருவன் அவற்றை எப்படி ’அறிந்து’ கொள்ள வேண்டும் என்பதை விட எப்படி அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் மதபீடங்கள் தெளிவாக இருக்கின்றன. அந்த வகையில் உண்மை என்பது மதங்களைப் பொறுத்தவரையில் ‘தடுக்கப்பட்ட கனி’ தான்.

kadavul backஉண்மை என்கிற ’தடுக்கப்பட்ட கனியை’ அறிவியலின் துணையோடு அணுகுகிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ என்கிற நூல். அறிவியலைக் கற்பது, புரிந்து கொள்வது என்பதெல்லாம் மிகவும் கடினமானதென்றும் அறிவுத் தேடல் சாதாரணர்களுக்கானதல்ல என்பதுமே நாம் பழக்கப்பட்டிருக்கும் மனப்பாடக் கல்வி நமக்கு ஏற்படுத்தியிருக்கும் மனப்பதிவு. அறிவியல் என்கிற ‘டைனோசரை’ பாதுகாப்பான தூரத்தில் தள்ளி நின்று வியந்து நோக்கவே இந்தக் கல்விமுறை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இதற்கு மாறாக, அறிவியலை எளிமையான மொழிநடையில் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். வினவு இணையதளம் மற்றும் புதிய கலாச்சாரம் பத்திரிகையில் வெளியான அறிவியல் கட்டுரைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ளது ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ நூல்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளையும் இயற்கைத் தேர்வு கொள்கையையும் பள்ளிக்கூட பாடநூல்களில் வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் வறண்ட வரிகளில் அல்லாமல் உயிர்த்துடிப்பான வரிகளோடும் அந்தக் கோட்பாடு தோன்றியதற்கான வரலாற்றுப் பின்புலம் மற்றும் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் அறிமுகப்படுத்துகிறது முதல் கட்டுரையான ‘டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்’ என்ற கட்டுரை.

போலவே டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வெறி கொண்டு மறுத்த திருச்சபையைத் தோலுறிக்கிறது அடுத்த கட்டுரையான ‘அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!’. நவீன அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் மூலம் பரப்பும் ’நற்செய்தியாளர்களின்’ இரட்டை நாக்கு வரலாற்றில் விஞ்ஞான உலகத்தின் மேல் கக்கிய வெறுப்பையும் அதன் வெப்பத்தில் தங்கள் உயிரையே பலிகொடுத்த விஞ்ஞானிகள் பற்றிய விவரங்களையும் இந்தக் கட்டுரை ஒரு பருந்துப் பார்வையில் அறிமுகம் செய்து வைக்கிறது.

நவீன அறிவியல் வாழ்வின் இண்டு இடுக்குகளில் இருந்தும் ‘கடவுளை’ நெட்டித் தள்ளியபின், இறுதியாக பக்தர்களின் தனிப்பட்ட அனுபவங்களிலும், படைப்பு குறித்த மருட்சி என்ற பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ’கடவுளை’ புகை போட்டு வெளியே விரட்டுகிறது ‘கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்’ என்ற கட்டுரை. விஞ்ஞானம் என்ற சூரிய வெளிச்சத்தில் புரண்டு துடிக்கும் கடவுள் என்கிற புழுவின் அவஸ்தையான அசைவுகளை அந்தக் கட்டுரையின் கவித்துவமான வரிகளில் வாசிப்பது ஒரு பேரானந்தம்.

kadavul-iruttuபிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து மத நூல்களின் அம்புலிமாமா கதையாடல்களை ஊதித் தள்ளி அந்த இடத்தில் அறிவியல் ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கிறது ஹிக்ஸ் போசான் துகள் குறித்து வெளியாகியிருக்கும் இரண்டு முக்கியமான கட்டுரைகள். ஹிக்ஸ் போசான் துகள் பற்றிய செய்திகள் வெளியாகத் துவங்கியதும் அஞ்சி நடுங்கிய மதவாதிகள் தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விஞ்ஞானத்திற்கு தங்கள் அஞ்ஞான விளக்கங்களால் முலாம் பூச முற்படுவதை காத்திரமான வார்த்தைகளில் சாடுகிறது “கடவுளை நொறுக்கிய துகள்” கட்டுரை.

அறிவியலால் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்களை முன்வைத்து அவையெல்லாம் கடவுளின் இருப்புக்குச் சான்றுகளென்று அடித்து விளையாடிய கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளின் போங்காட்டத்தை இக்கட்டுரை ”பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து, கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டு பிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று எள்ளி நகையாடுகிறது.

ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் ஒன்று உள்ளது. “எல்லாம் சரிங்க. விஞ்ஞானம் கிட்டத்தட்ட எங்க கடவுளை காலி ஆக்கிடுச்சின்னே வச்சிக்கலாம்.. ஆனா உங்கள் விஞ்ஞானத்தால் ஒரு உயிரை உண்டாக்கிக் காட்ட முடியுமா? அழிவைத் தானே உங்கள் விஞ்ஞானம் இதுவரைக்கும் சாதித்திருக்கிறது?” என்ற வாதத்தை நொறுக்கிப் போடுகிறது ‘செயற்கை உயிர்ர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?’ என்ற கட்டுரை. இக்கட்டுரை கடவுளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, அறிவின் வளர்ச்சிக்கு மத்திய கால மதபீடங்கள் தடையரணாக இருந்ததைப் போல் இன்றைக்கு முதலாளித்துவ உடைமை உறவும் அதை நிலைநாட்டும் ஏகாதிபத்திய கட்டமைப்பும் எப்படி தகர்த்தெறிய வேண்டிய தடைச்சுவராக உள்ளன என்பதையும் விளக்குகிறது.

எதிர்வரும் புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பகத்தாரின் கடையிலும் பிற முற்போக்கு நூல்கள் கிடைக்க கூடிய கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்நூல் அவசியம் வாங்கியே ஆகவேண்டிய நூல்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நூல் ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’. இந்நூலை நீங்கள் வாங்கிப் படிப்பதுடன், தெரிந்தவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்நூலை பரிசளிப்பது அறிவியலைக் கற்பது குறித்த அச்சத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.

கடவுள் இருட்டு அறிவியல் வெளிச்சம்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 70

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367