Tuesday, September 17, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

-

டவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் எங்கே இருக்கிறார்? கடவுளை எப்படிப் பார்ப்பது? – சுவாரசியமான கேள்விகள் இவை. ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் மதங்களின் இருப்புக்கே ஆதாரமான இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் வித விதமான ‘விடைகளில்’ தான் மதங்கள் உயிர் வாழ்கின்றன. இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேடும் ஒருவன் அவற்றை எப்படி ’அறிந்து’ கொள்ள வேண்டும் என்பதை விட எப்படி அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் மதபீடங்கள் தெளிவாக இருக்கின்றன. அந்த வகையில் உண்மை என்பது மதங்களைப் பொறுத்தவரையில் ‘தடுக்கப்பட்ட கனி’ தான்.

kadavul backஉண்மை என்கிற ’தடுக்கப்பட்ட கனியை’ அறிவியலின் துணையோடு அணுகுகிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ என்கிற நூல். அறிவியலைக் கற்பது, புரிந்து கொள்வது என்பதெல்லாம் மிகவும் கடினமானதென்றும் அறிவுத் தேடல் சாதாரணர்களுக்கானதல்ல என்பதுமே நாம் பழக்கப்பட்டிருக்கும் மனப்பாடக் கல்வி நமக்கு ஏற்படுத்தியிருக்கும் மனப்பதிவு. அறிவியல் என்கிற ‘டைனோசரை’ பாதுகாப்பான தூரத்தில் தள்ளி நின்று வியந்து நோக்கவே இந்தக் கல்விமுறை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இதற்கு மாறாக, அறிவியலை எளிமையான மொழிநடையில் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். வினவு இணையதளம் மற்றும் புதிய கலாச்சாரம் பத்திரிகையில் வெளியான அறிவியல் கட்டுரைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ளது ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ நூல்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளையும் இயற்கைத் தேர்வு கொள்கையையும் பள்ளிக்கூட பாடநூல்களில் வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் வறண்ட வரிகளில் அல்லாமல் உயிர்த்துடிப்பான வரிகளோடும் அந்தக் கோட்பாடு தோன்றியதற்கான வரலாற்றுப் பின்புலம் மற்றும் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் அறிமுகப்படுத்துகிறது முதல் கட்டுரையான ‘டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்’ என்ற கட்டுரை.

போலவே டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வெறி கொண்டு மறுத்த திருச்சபையைத் தோலுறிக்கிறது அடுத்த கட்டுரையான ‘அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!’. நவீன அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் மூலம் பரப்பும் ’நற்செய்தியாளர்களின்’ இரட்டை நாக்கு வரலாற்றில் விஞ்ஞான உலகத்தின் மேல் கக்கிய வெறுப்பையும் அதன் வெப்பத்தில் தங்கள் உயிரையே பலிகொடுத்த விஞ்ஞானிகள் பற்றிய விவரங்களையும் இந்தக் கட்டுரை ஒரு பருந்துப் பார்வையில் அறிமுகம் செய்து வைக்கிறது.

நவீன அறிவியல் வாழ்வின் இண்டு இடுக்குகளில் இருந்தும் ‘கடவுளை’ நெட்டித் தள்ளியபின், இறுதியாக பக்தர்களின் தனிப்பட்ட அனுபவங்களிலும், படைப்பு குறித்த மருட்சி என்ற பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ’கடவுளை’ புகை போட்டு வெளியே விரட்டுகிறது ‘கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்’ என்ற கட்டுரை. விஞ்ஞானம் என்ற சூரிய வெளிச்சத்தில் புரண்டு துடிக்கும் கடவுள் என்கிற புழுவின் அவஸ்தையான அசைவுகளை அந்தக் கட்டுரையின் கவித்துவமான வரிகளில் வாசிப்பது ஒரு பேரானந்தம்.

kadavul-iruttuபிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து மத நூல்களின் அம்புலிமாமா கதையாடல்களை ஊதித் தள்ளி அந்த இடத்தில் அறிவியல் ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கிறது ஹிக்ஸ் போசான் துகள் குறித்து வெளியாகியிருக்கும் இரண்டு முக்கியமான கட்டுரைகள். ஹிக்ஸ் போசான் துகள் பற்றிய செய்திகள் வெளியாகத் துவங்கியதும் அஞ்சி நடுங்கிய மதவாதிகள் தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விஞ்ஞானத்திற்கு தங்கள் அஞ்ஞான விளக்கங்களால் முலாம் பூச முற்படுவதை காத்திரமான வார்த்தைகளில் சாடுகிறது “கடவுளை நொறுக்கிய துகள்” கட்டுரை.

அறிவியலால் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்களை முன்வைத்து அவையெல்லாம் கடவுளின் இருப்புக்குச் சான்றுகளென்று அடித்து விளையாடிய கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளின் போங்காட்டத்தை இக்கட்டுரை ”பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து, கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டு பிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று எள்ளி நகையாடுகிறது.

ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் ஒன்று உள்ளது. “எல்லாம் சரிங்க. விஞ்ஞானம் கிட்டத்தட்ட எங்க கடவுளை காலி ஆக்கிடுச்சின்னே வச்சிக்கலாம்.. ஆனா உங்கள் விஞ்ஞானத்தால் ஒரு உயிரை உண்டாக்கிக் காட்ட முடியுமா? அழிவைத் தானே உங்கள் விஞ்ஞானம் இதுவரைக்கும் சாதித்திருக்கிறது?” என்ற வாதத்தை நொறுக்கிப் போடுகிறது ‘செயற்கை உயிர்ர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?’ என்ற கட்டுரை. இக்கட்டுரை கடவுளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, அறிவின் வளர்ச்சிக்கு மத்திய கால மதபீடங்கள் தடையரணாக இருந்ததைப் போல் இன்றைக்கு முதலாளித்துவ உடைமை உறவும் அதை நிலைநாட்டும் ஏகாதிபத்திய கட்டமைப்பும் எப்படி தகர்த்தெறிய வேண்டிய தடைச்சுவராக உள்ளன என்பதையும் விளக்குகிறது.

எதிர்வரும் புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பகத்தாரின் கடையிலும் பிற முற்போக்கு நூல்கள் கிடைக்க கூடிய கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்நூல் அவசியம் வாங்கியே ஆகவேண்டிய நூல்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நூல் ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’. இந்நூலை நீங்கள் வாங்கிப் படிப்பதுடன், தெரிந்தவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்நூலை பரிசளிப்பது அறிவியலைக் கற்பது குறித்த அச்சத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.

கடவுள் இருட்டு அறிவியல் வெளிச்சம்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 70

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

  1. புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் என்னவென்று தெரிவிக்கவும்

  2. பூமி தட்டையல்ல, உருண்டை என்று உலகுக்கு உணர்த்திய கலீலியோவை சிறையிலடித்தது அன்று கிறித்துவ மதம்.
    18 மில்லியன் வருடங்களுக்கு முன் மனித இனம் கூட தோன்றவில்லை, ஆனால் இராமன் பாலம் கட்டினான் என்று சொல்கிறது இந்து மதம். மேலும் மனிதனை சக மனிதன் நேசிப்பதை கூட தடுக்கிறது இந்து மதம். சுட்ட களிமண்ணால் ஆனவர்கள் தான் மனிதர்கள் என்கிறது, இஸ்லாம்.
    பெண்கள் மணலை போன்று உறுதியற்றவர்கள் என்கிறது புத்த மதம் ஆக மதம் கடவுள் என்ற பெயரால் மனிதனை மடமையாகவும், அடிமையாகவும் இருத்துகிறது. முதலாளித்துவம் தன்னுடைய லாபம் என்ற அகோர பசிக்கு கருதுகோளாக பயன்படுத்தும் கடவுளை அடித்து நொறுக்குவதற்கு “கடவுள் இருட்டு அறிவியல் வெளிச்சம்” என்ற இந்த நூல் இன்றைய சமூகத்திற்கு தேவையாக இருக்கிறது.

    • // பூமி தட்டையல்ல, உருண்டை என்று உலகுக்கு உணர்த்திய கலீலியோ

      இது கிரேக்க காலத்திலேயே தெரிந்திருந்தது. பூமிப் பந்தின் சுற்றளவு எவ்வளவு என்ற ஆராய்ச்சி கூட செய்தனர்.

      http://en.wikipedia.org/wiki/History_of_geodesy

    • ஐயா! சாமிங்களா! வளைகுடாநாடுகளில் கிடைக்கும், குரூட் ஆயிலில் இருந்து 70க்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கும் அறிவியல் நிச்சயமாக ரொம்ப “வெளிச்சம்”.அதுவே ஏன் அங்கும்ட்டும் கிடைக்கிறது? தெரியாது.வேறு எங்கும் ஏன் கிடைக்கவில்லை? தெரியாது. அங்கு மட்டும் எவ்வளவு நாள் கிடைக்கும். தெரியாது.ஐயா பொருட் காட்சியில் உள்ள பொருட் களையும, கருவிகளையும் பயன் படுத்தி குதூகலம் அடைவது, குழந்தைத்தனத்தின் அடையாளம்.அறிவியல் வளர,பொழுது போக்கு மனப்பான்மையும், மன அமைதியின்மையும், புகழ் போதையும், தனி மனித அரிப்பும் போதுமானது.சில விதிவிலக்கான கண்டுபிடிப்புகளைத் தவிர.பொருட் காட்சியின் உரிமையாளர் யார்? என அறியும் ஆவலே ஆன்மிகம். அதற்க்கு பொதுவான பாதை ஏதும் கிடையாது. தனி மனித ஈடுபாடும், இதய சுத்தமுமே வழிகாட்டும்.கொள்ளு, எள்ளு தாத்தாவிற்க்கு முன் இருந்த நம் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல் நம்மிடம் இல்லாவிட்டாலும்,அவர்கள வழ்ந்தார்கள் என்பதை, நம்பும் நமக்கு கடவுள்நம்பிக்கை இல்லாமல் இருப்பது உண்மையாகவே “பகுத்தறிவு” தான். பகுத்தறிவு வாதம் எடுபடாமல் போவதற்க்கு, பகுத்தறிவு வாதிகளும், சாதாரண மனித பலவீனங்களோடு இருப்பதே காரணம். அதைத்தாண்டுவது அவ்வளவு எளிதல்ல. அதுவரை இரண்டு தரப்புகளும் வாய்ச்சவடாலில் ஈடுபட்டு,தங்கள் மதியீனத்தை தாங்களே மெச்சிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.பலவீனங்களை வென்றவன் பகவான் ஆகிறான். பகவான் ரமண மகரிஷியே சிறந்த பகுத்தறிவு வாதி. “கடவுள் தரிசனம்” பற்றி பக்தர்கள் பேசும்போது, தரிசனம் தந்தவன் முக்கியமா? அதைக் கண்ட நீ முக்கியமா? என பதில் கொடுத்தவரே பகுத்தறிவு வாதி.

  3. அறிவியல் பக்தர்களுக்கு கோடி வணக்கங்கள்!
    அறிவியல்மேல் நீங்கள் கொண்டிருக்கும் காதல் சிலிர்ப்பூட்டுவது. நீங்கள் புளங்காகிதம் கொள்ளும் அறிவியலின், நவீன அறிவியலின் பிதாமகர்கள், குறிப்பாக இயற்பியல் பிதாமகர்கள் (விசேடமாக சார் இசாக் நியூட்டன், ஐன்ஸ்டீன், ஃஎஇசென்பெர்க் போன்றவர்கள்) கடவுளின் இருப்புக்குறித்து என்னதான் சொல்லியிருக்கிறார்கள்? அவர்கள் சொல்லியவற்றை நீங்கள் இருட்டில் வைக்கும் அறிவியல்நேர்மைதான் என்ன?
    உதாரணம், ஃஎஇசென்பெர்க் கூறியது:
    விஞ்ஞானக்கிண்ணத்தின் முதல் மிடறு ஒருவனை நாஸ்தீகனாக ஆக்குகிறது. ஆனாலும், கிண்ணத்தின் அடியில் கடவுள் காத்திருக்கிறார்.

    ஒருவேளை,அவர்கள் கண்டறிந்ததைவிட,நீங்கள் அதிகமாக கண்டுபிடித்துவிட்டீர்களா?

    • //உதாரணம், ஃஎஇசென்பெர்க் கூறியது:
      விஞ்ஞானக்கிண்ணத்தின் முதல் மிடறு ஒருவனை நாஸ்தீகனாக ஆக்குகிறது. ஆனாலும், கிண்ணத்தின் அடியில் கடவுள் காத்திருக்கிறார்.// சரிதான் ஆனா அவரு எந்த கடவுள்னு சொல்லாம போயிட்டாரே கர்த்தரா,அல்லாவா,சிவபெருமானானு. கேய்சன்பர்க் சொன்னாது அய்யப்பாட்டு கொள்கைதான் கடவுள் விசயத்துலலயும் …

      • கடவுளுக்கு மதமும் இல்லை, பெயரும் இல்லை. மனிதன் தனக்குதானே ஒரு பெயரை இட்டுக்கொண்டு, தான் சார்ந்த நம்பிக்கைக்கும் ஒரு பெயரை இட்டு, கடவுளுக்கும் ஒரு பெயரை வைத்தான். குர்ஆனில் கடவுள் 99 வகையான பெயர்களால் குறிப்பிடபடுவதாக சொல்கிறார்கள். இந்து மதத்தைப்பற்றி சொல்லவே தேவையில்லை. கேய்சன்பர்க் எந்தபெயரைத்தான் தெரிந்தெடுப்பார்?
        அடையாளஅட்டைகள் இல்லாமலே உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் அடையாளம் காணும் பொறிமுறைகள் பற்றி நவீன அறிவியல் வெளிச்சம் போட்டுக்காட்டவில்லையா? இவ்வளவு அற்புதமாக மனிதனைப் படைத்த கடவுளின் அடையாள அட்டையை கேட்பது பரிதாபகரமானது.

  4. அருள்,

    கடவுள் இருக்கிறாரா, இல்லையா, தெரியாது.
    ஆனால் கடவுள் பெயரை வைத்துக்கொண்டு இங்கு பலர் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, மக்களை எய்த்துக்கொண்டு, பஞ்சமாபாதகங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
    அவர்களை அந்த கடவுள் ஏன் தண்டிப்பதில்லை?

    கடவுள் இருக்கிறார் என்று கூறும் மதவாதிகள் கூட தான் வணங்கும் கடவுள் மட்டும் தான் உண்மை என்றும் மற்ற மதத்தவர் வணங்கும் கடவுள் பொய் என்று நாத்திகம் தானே பேசுகிறார்கள். கடவுள் இல்லை என்பது நாத்திகம் என்றால் அடுத்தவன் கடவுளை இல்லை என்று சொல்லும் மதவாதிகளும் ஒரு வகையில் நாத்திகர்கள் தானே?

    உலகில் அனைத்தையும் படைத்தது கடவுள் என்றால் மதத்தின் பெயரால் சக மனிதர்களை ஈவு இரக்கமின்றி கொள்ளும் அதீத மத வெறியர்களை படித்ததும் அதே கடவுள் தானே? அப்போது கடவுளின் செயல் தவறா? தவறான செயலை செய்பவர் எப்படி கடவுளாக இருப்பார்?

    செய்கிற பாவங்களை எல்லாம் செய்து விட்டு கடவுளை வணங்கினால் செய்த பாவங்கள் பொய் விடும், சொர்க்கத்திற்கு போகலாம் என்று கற்பித்து கடவுளை அவமதிப்பது ஆத்திகர்களா? இல்லை நாத்திகர்களா?

  5. நான் மேலே பதிவிட்ட பின்னூட்டத்தில் சில தட்டச்சு பிழைகள் ஏற்பட்டது. சரியான வாக்கியங்களை கீழே பதிவிட்டுள்ளேன், மன்னிக்கவும் நண்பர்களே:

    சக மனிதர்களை ஈவு இரக்கமின்றி கொள்ளும் அதீத மத வெறியர்களை படைத்ததும் அதே கடவுள் தானே? அப்போது கடவுளின் செயல் தவறா? தவறான செயலை செய்பவர் எப்படி கடவுளாக இருப்பார்?

    செய்கிற பாவங்களை எல்லாம் செய்து விட்டு கடவுளை வணங்கினால் செய்த பாவங்கள் போய் விடும், சொர்க்கத்திற்கு போகலாம் என்று கற்பித்து கடவுளை அவமதிப்பது ஆத்திகர்களா? இல்லை நாத்திகர்களா?

  6. மனிதனைத் தவிர, விலங்குள், தாவரங்கள் மற்ற பொருட்கள் இயற்கையின் தயவில் வாழுகின்றன.இவைகளில் கெட்டவை என்ற பேச்சிற்க்கே இடமில்லை. மனிதனுக்கு மட்டும் ஐம்புலன்கள் தவிர புத்தியை கொடுத்து “தேர்ந்தெடுக்கும் உரிமையான” விருப்பத்திற்க்கு ஏற்ப செயல்படும் வசதியையும் கொடுத்துள்ளான். அவரவர் விருப்பப்படி நடந்து கொள்ளும்போது (கொல்லும்போது?????) கெட்டவர்களை கடவுள் ஏன் படைத்தான் என்று கேட்பது அறிவீனமே.நன்நடத்தை இல்லாத ஆன்மீகச்சாமியாரும், மதகுருமாரும்,மதத்திற்காக உயிரை விடும் (எடுக்கும்) தியாகியும், கடவுளுக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாதவர்கள்.அது மட்டுமில்லாது மூன்று ரூபாய் கொடு, மோட்சம் தருகிறேன் என்று கூறும் எக்சானந்தாவிடமும், எனக்கு ஓட்டு போடு, ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுகிறேன் என்று கூறும் அறிஞரிடமும், வாக்களித்தால் வண்ணப்பெட்டி தருகிறேன் என்று கூறும் கலைஞரிடமும், ஆட்சியில் அமர்த்து ஆட்டுக்கல் (மின்சார) தருகிறேன் என்று கூறும் அம்மாவிடமும் ஏமாறக்கூடாது. மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அயோக்கியன் எவரிடமும் ஏமாறாதே என்று கூறுவது தான் பகுத்தறிவு. அது என்ன சாமியார்களிடம் மட்டும் விசேச கவனிப்பு.நாத்திகர்களின் மனசாட்சி சொல்லும், கடவுள் இருக்கிறார், ஆனால் அவரது நிர்வாகம் பிடிக்கவில்லை என்று. தனி மனிதனால் உலகை என்றும் மாற்ற முடியாது. தனக்கு கொடுக்கப்பட்ட வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தன்னை மட்டுமே உயர்த்திக் கொள்ள முடியும். கடவுள் நமது நோக்கங்களையும்,நடவடிக்கைகளையும் மட்டுமே பார்க்கிறார்.

  7. அறிவியலே அழிவுக்கு வழிகாட்டி!
    ——————————-

    அறிவியலால் மனிதனுக்கு அனேக நன்மைகள் கிடைத்திருந்தாலும் இறுதியில் மனித குலத்தை அடியோடு அழிக்க போவதும் அறிவியல்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இருக்காது என்றே நான் கருதுகிறேன்!

    அறிவியல் முன்னேற்றத்தால் அணுகுண்டுகளும் அதிநவீன ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு அவையாவும் சகமனிதர்களை சவகிடங்குக்கு அனுப்பவே பயன்பட்டு வருகின்றன!

    இதுபோன்ற குண்டுகளை எவன் கண்டுபிடித்தான்? ஏன் கண்டுபிடித்தான்? இதுபோன்ற குண்டுகளால் உயிரிழக்கும் ஒவ்வொரு உயிரின் மரணத்துக்கும் அந்த அறிவியல்காரனும் ஒரு போருப்பாளிதானே?

    ஒருபுறம் தீவிரவாதிகள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு கொல்லுகின்றனர் இன்னொருபுறம் சிலர் உலகின் காவலர்கள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு
    குண்டுபோட்டு கொல்கிறார்கள்! ஆனால் சாவது என்னவோ சகமனிதர்கள்தான்!

    எத்தனையோ விதமான அழிக்கும் ஆயுதங்களை கண்டுபிடித்த அறிவியலுக்கு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பகையை கொல்ல ஒரு ஆயுதம் கண்டுபிடிக்க முடியவில்லையே!!! அது அறிவியலுக்கு மிகபெரிய தோல்வியே!

    எந்த ஒரு அறிவியல் பொருட்களும் இல்லாமல் இயற்கையோடு இயற்கையாக மனிதன் வாழ்ந்த காலங்கள் வரலாற்றில் உண்டு! .

    இயற்க்கை என்பது ஒரு பொக்கிஷம்! நாம் சிறப்பாக வாழ தேவையான எல்லாமே குறைவற்று அமைத்ததுதான் உலகம்! அதில் திருப்தியடையாத, அதை அளவோடு அனுபவித்து வாழாமல் இயற்க்கை சமன்பாட்டை அறிவியல் என்னும் பேரால் கெடுக்கும் பேராசை பிடித்த அதிமேதாவிகளால்தான் இன்று உலகம் அழிவை நோக்கி பயணிக்கிறது!

    “எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு” என்ற வார்த்தையின்படி இன்று மனிதனின் சொகுசு வாழ்க்ககைக்கு பயன்படும் அறிவியல் ஒருநாள் மனிதனை பொசுக்கிவிடும், அதை அந்த அறிவியலாலேயே கூட தடுக்க முடியாமல் போய்விடும் என்றே நான் கருதுகிறேன்!

    உதாரணமாக ஒருவர் நாலு நாள் நல்ல சொகுசு வாழ்க்கையை நமக்கு கொடுத்து ஐந்தாவது நாள் நம்மை கொன்றுபோட்டால் அவர் நல்லவரா கெட்டவரா என்ற
    எண்ணத்தில் பார்க்கிறேன்!

    கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த மனிதனுக்கு சொகுசு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது அறிவியல்! இன்று அனேக மனிதர்களை கொன்று குவிப்பதும் அறிவியல்தான்! இயற்கையாய் நடக்கும் மரணங்களை விட செயற்கை அறிவியல் சாதனங்களால்தான் அனேக மரணங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன!

    அறிவியல் ஆயிரம் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாலும் ஆயிரத்து ஒண்ணாவதாக எதாவது ஒரு புதியதாக நோய் வந்துகொண்டுதான் இருக்கிறது! இயற்கையை மனிதன் ஒருநாளும் வெல்ல முடியாது!

    எல்லா நோயையும் ஒழித்துவிட்டோம் என்று அறிவியலால் ஒருநாளும் சொல்லமுடியாது! பின் அதனால் என்ன பெரிய பயன்? நேற்று வேற்றொரு பெயரில் ஆளை கொன்ற நோய் இன்று வேறொரு பெயரில் கொல்கிறது அவ்வளவுதானே? ஐம்பது வருடத்துக்கு முன் அபூர்வமாக இருந்த அறுவை சிகிச்சை இன்று ஆளாளுக்கு செய்துகொள்ளும் அவலநிலை ஏன் உருவானது? அறிவியலால் ஏற்றப்பட்ட சுற்றுசூழல் மாசுதான் அதன் அடிப்படை காரணம் என்று நான் கருதுகிறேன்!

    இயற்க்கை தன் சமநிலையை தானாகவே காத்துக்கொள்ளும். மனிதனின் உதவி அதற்க்கு தேவையில்லை! ஏனெனில் மனிதனும் இயற்கையின் ஓர் அங்கமே. ஆனால் மனிதன் அறிவியல் என்ற பெயரில், இயற்கையின் இடையில் புகுந்து அதை குழப்பி எதோ தான்தான் மனிதனை காப்பற்றுவதுபோல ஒரு மாயமான தோற்றத்தை உருவாக்கியுள்ளான் என்றே நான் கருதுகிறேன்!

    எனவே அறிவியலால் பல நன்மைகள் மனிதனுக்கு கிடைத்தாலும் அறிவியல் என்பது ஒரு அழிக்கும் சக்தியேயன்றி வேறல்ல என்றே நான் கருதுகிறேன்!

    படித்ததில் சுட்டது நன்றி திரு.நேசன்.

  8. ஆக்கும் சக்தி,அழிக்கும் சக்தி எல்லாம் கத்தியில் இல்லை, அதை பயன்படுத்தும் புத்தியில் தான் உள்ளது.

    எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்.
    அறிவியலை தவறாக பயன்படுத்துவது அறிவியலின் தவறல்லவே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க