25,000 ஊழியர்களை வெளியேற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்திற்கு எதிராக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இதன் அங்கமாக இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் தொழிலாளர்களும், பு.ஜ.தொ.மு வழக்கறிஞர்களும் அங்கே வீச்சாக பிரச்சாரம் செய்தனர். நாளை நடைபெறும் அரங்க கூட்டத்தின் துண்டுப்பிரசுரத்தை நூற்றுக்கணக்கில் விநியோகித்தனர்.
ஆங்கிலம், தமிழ், மலையாளத்தில் தோழர்கள் உரையாற்றினர். வாயில் அருகே பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களில் வந்திறங்கிய டி.சி.எஸ் ஊழியர்கள் ஆர்வத்துடன் உரையை கேட்டதோடு, பிரசுரத்தையும் வாங்கி வைத்துக் கொண்டனர். பலர் கலந்துரையாடினர்.
இதுவரை இணையத்திலும், சிப்காட்டுக்கு வெளியேயும் நடந்த பிரச்சாரம் இன்று தமது அலுவலகத்திற்குள்ளேயே நுழைந்தது குறித்து டி.சி.எஸ் நிர்வாகம் கலகலத்துப் போனது. உடனே பாதுகாவலர்களும், அவர்களின் மேலதிகாரிகளும் தோழர்களிடம் காலி செய்யுமாறு மிரட்டினர். அசைந்து கொடுக்காத தோழர்கள் இது தமது அடிப்படை உரிமை என்றவாறு பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.
ஹெச்.ஆர் அதிகாரிகளும் உடன் வந்து அருகே கலவரத்துடன் கிசுகிசுத்துக் கொண்டனர். இத்தகைய போர்க்குணமிக்க தொழிற்சங்கத்தை அவர்கள் இதுவரை கண்டதில்லை போலும். பிறகு போலீசுக்கு போன் போட்டு வரவழைத்தனர். போலீசிடம் விவாதித்தவாறே தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். இவ்வாறாக ஒரு மணிநேரம் பிரச்சாரம் தொடர்ந்தது.
ஐ.டி ஊழியர்களே இனி எதற்கு பயம்? ஆட் குறைப்பு அநீதிக்கு எதிராக அணிதிரளுங்கள். நாம் சேர்ந்தால் டாடா என்ன, அமெரிக்காவே நினைத்தால் கூட நமது வாழ்க்கையை பறிக்க முடியாது.
இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், டாக்டர் ருத்ரன் உள்ளிட்டோர் உரையாற்றும், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 5 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்!
டி.சி.எஸ்-ன் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
தொழிற்சங்கமாய் அணிதிரள்வோம்!
Join us…….
https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com
Meeting at
Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm
கலந்துரையாடல் கூட்டம்
பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி




_________________
வினவு – vinavu.com
New Democratic Labour Front
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி