privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககிரானைட் கொள்ளை - சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு

கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு

-

மனித உரிமைப்பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக்கிளை.

150-ஈ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20. – 9443471003.

மாவட்டச் செயலாளர் மாவட்ட துணைச்செயலாளர் மாவட்ட துணைத்தலைவர்
ம.லயனல் அந்தோணிராஜ் சே.வாஞ்சிநாதன். பா.நடராஜன்

****************************************************************************************************

விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலம்பட்டி.

தோழர் குருசாமி – வட்டாரச்செயலாளர், உசிலை வட்டம். (9894312290)

****************************************************************************************************

கிரானைட் கொள்ளை
கிரானைட் கொள்ளை பேரழிவை ஆய்வு செய்கிறார் சகாயம்

பெறுநர்

உயர்திரு. சகாயம் அய்.ஏ.எஸ் அவர்கள்
கிரானைட் குவாரி முறைகேடுகளுக்கான உயர்நீதிமன்ற ஆணையர்,
மதுரை.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக 90 குற்ற வழக்குகள் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மீது பதியப்பட்டு பி.ஆர்.பழனிச்சாமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தமிழக அரசின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மேற்படி நடவடிக்கைகள் சரியாக உள்ளதா? என்பதை விசாரிக்க தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய-ஜனநாயகம்
கிரானைட் கொள்ளையர்கள் குறித்த புதிய-ஜனநாயகம் அட்டைப்படம்

ஆனால் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில்

(அ) மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் நடந்த ஊழலின் மொத்தத் தொகை எவ்வளவு? அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அரசே கிரானைட் தொழிலை நடத்தியிருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்? ஊழல் பணத்தை பறிமுதல் செய்து, கிரானைட் அதிபர்களின் சொத்துக்களை முடக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பவை பற்றி உரிய விசாரணை நடத்தப்படவில்லை.

(ஆ) கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், 2012-ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி தாக்கல் செய்த அறிக்கையில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மாநிலம் முழுவதும் 20,000 ஏக்கருக்கும் மேலான பல நூறுகோடி பெறுமானமுள்ள நிலங்கள் வைத்திருப்பதாகவும், அந்நிலங்கள் வாங்கத் தேவையான பணம் எப்படி வந்தது? என விசாரித்து வருவதாகவும், மேலும் மத்திய கலால், சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தூத்துக்குடி, சென்னை துறைமுகக் கழகங்கள், கோல்டன், விமல், பிஎஸ்டிஎஸ் கப்பல் கம்பெனிகள் ஆகியோரிடமும் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை மேற்படி விசாரணை முழுமையடையவில்லை.

(இ) கடந்த 20.09.2012-ல் DIRECTORATE OF VIGILANCE AND ANTI CORRUPTION A.D.S.P. மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாய் இருந்த அய்.ஏ.எஸ் அதிகாரிகள் மதிவாணன், காமராஜ், கனிமவளத்துறை துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எஸ்.பி.யும் கடந்த 15 ஆண்டுகளாக கிரானைட் குவாரிகள் தொடர்பான துறைகள் சார்ந்து பணிபுரிந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோத கிரானைட் தொழிலுக்கு உடந்தையாய் இருந்த அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

(ஈ) கடந்த 29.08.2012-ல் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மேலூர் மற்றும் மதுரை வடக்குத் தாலுகா, பெரியாறு பாசனக் கால்வாய்ப் பகுதியில் 36 குளம், கண்மாய்கள், கால்வாய்கள் கிரானைட் முதலாளிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயம் முற்றிலும் இப்பகுதிகளில் அழிந்துள்ளது. விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்ய கிரானைட் குவாரிகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

(உ) மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை கிரானைட் அதிபர்கள் தாக்கல் செய்து குற்ற மற்றும் இழப்பீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்துகிறார்கள். தமிழக அரசும், அதிகாரிகளில் பலரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரும், மேலூர் குற்றவியல் நடுவரும் கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். குறிப்பாக மற்ற மாவட்டங்கள் எதுவென்றே குறிப்பிடாமல் பி.ஆர்.பி நிறுவனம் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிரானைட் அதிபர்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முக்கிய சாட்சிகளாக குற்றவாளிகளுக்கு வேண்டியவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரே குற்ற வழக்குகளில் புகார்தாரராகவும், இழப்பீடு வழக்கில் நீதிபதி போலவும் செயல்படுவதாக கிரானைட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றன. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மதுரை வந்த நாட்களில் கூட கிரானைட் குவாரி வழக்குகளில் ஆஜராகவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உத்தரவின்படி நடக்கும் விசாரணை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மேலும் சட்டத்தின் சந்து, பொந்துகளில் கிரானைட் குவாரி முதலாளிகள் புகுந்து தப்பிவிடும் வாய்ப்புள்ளது.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

ஆகவே கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் கிரானைட் குவாரி தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் (SPECIAL BENCH) மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும். குற்றவியல் வழக்குகளுக்கு பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கு போல் தனி நீதிமன்றம் அமைத்து உயர் நீதிமன்ற கண்காணிப்பில் தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்தப்படவேண்டும்.

(ஊ) கிரானைட் குவாரி வழக்குகளை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள், வழக்கை நடத்தி வரும் அரசு வழக்கறிஞர்கள் கிரானைட் குவாரி மாபியாக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சரியான விசாரணைக்கு நேர்மையான அதிகாரிகள் குழுவும், சரியான சட்ட நடவடிக்கைகளுக்கு நேர்மையான சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர் குழுவும் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட வேண்டும்.

கிரானைட் கொள்ளை ஆவணப் படம் 1
கிரானைட் கொள்ளை பற்றிய ஆவணப்பட வெளியீடு (கோப்புப் படம்)

(எ) கடந்த 22-12-2014 அன்று பல்லாயிரம் கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம், மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வுத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் பி.ஆர்.பி நிறுவனத்தினர் தெற்குத்தெரு ஆலையை இயக்கி வருகின்றனர். இதற்கு காவல்துறையும், அரசும் உடந்தையாக உள்ளனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆசியுடனே மீண்டும் பி.ஆர்.பி நிறுவனம் இயங்கி வருவதாகத் தெரிகிறது. அரசின் இவ்வாறான இரட்டை நிலைப்பாடுகள் குறித்து சகாயம் அவர்கள் விசாரணை நடத்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட எமது கோரிக்கைகளை உயர்நீதிமன்ற ஆணையர் சகாயம் அவர்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். இத்துடன் கிரானைட் கொள்ளை தொடர்பான எமது ஆவணப் பட டி.வி.டி. மற்றும் உயர்நீதிமன்றத்தில் அரசால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் இதர ஆவணங்களை இணைத்துள்ளோம்.

நாள்: 10.01.2015
இடம்: மதுரை

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க