privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்தமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு - நாகை வே. சாமிநாதன்

தமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு – நாகை வே. சாமிநாதன்

-

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை தமிழுக்கு தந்த கவிஞர் நாகை. வே. சாமிநாதன்

kavignar-ve-saminathanநாகை மாவட்டம் அந்தனப் பேட்டையில் 1905-ம் ஆண்டு பிறந்து 1981-ம் ஆண்டில் மறைந்தவர் கவிஞர் நாகை. வே. சாமிநாதன். இடதுசாரித் தோழர்கள் பலரும் அறிந்திராத பொது உடைமை கவிஞரை நினைவுகூர, நினைவாற்றல் இழந்துவரும் சிலரே தற்போது உள்ளனர். மா. வளவன்-சி. அறிவுருவோன் ஆகியோரின் முன்முயற்சியில் கவிஞரின் கவிதைகள் சில தொகுக்கப்பட்டு எண்பதுகளில் வெளிவந்தன. மறுபதிப்பு வந்த்தாக தெரியவில்லை.

அறியாப் பருவத்திலேயே தந்தையை இழந்து தாய் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். பன்னிரெண்டு வயதில் மளிகைக் கடையில் சேர்ந்து உழைப்பாளியாய் வாழ்க்கையை தொடங்கி நாகையில் செயல்பட்ட ரயில்வே பணிமனையில் பணியாற்றி வந்தார். தொழிற்சங்க இயக்கத்தில் ஊக்கமான செயல்பாடு காரணமாக 1947-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். இறுதிக் காலத்தில் முதியோர் ஓய்வூதிய தொகையில் சுயமரியாதையுடன் வாழ்ந்து மறைந்தார்.

சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு கலகக்காரராகவே வாழ்க்கையை தொடங்கினார். தமது குழந்தைகளுக்கு லெனின் என்றும், சோகன் (பஞ்சாப் கம்யூனிஸ கட்சி தலைவர்களில் ஒருவர்) பெயரிட்டுள்ளது கவிஞரது பொதுவுடைமைக் கொள்கை ஈடுபாட்டுக்கு ஒரு சான்றாக உள்ளது.

தொடக்க காலங்களில் காங்கிரசு கட்சியிலும், பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் செயல்பட்டார். 1935-ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஐந்தாவது சுயமரியாதை மாநாட்டில் பொதுவுடைமை திட்டம் என்று கருதப்பட்ட ஈரோட்டு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார், பெரியார். அம்மாநாட்டில் பூவனூர் செல்வகணபதி, முத்துச்சாமி வல்லத்தார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோருடன் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினார்.

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக சேரவில்லை என்றாலும் இறுதிவரை பொதுவுடைமைக் கொள்கைக்கு விசுவாசமாகவே வாழ்ந்து வந்தார். மேடை நாடகங்கள் எழுதி கட்சி கூட்டங்களில் அரங்கேற்றி நடித்தும் வந்தார். பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்டுகளை ஆதரித்து வந்தாலும் இடதுசாரி சக்திகள் என்று கருதுபவர்கள் அனைவருக்கும் உதவிகள் செய்து வந்தார்.

ஐந்தரை கட்டை சுருதியில் பாடும் அவரது குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். இப்போதும் அவரது குரலை நினைவு கூர்பவர்கள் சிலர் உள்ளனர். பகத்சிங் குறித்து “பகத்சிங்கை கொன்றது படுமோசம் ! படுமோசம்” என்ற பாடலை இயற்றி பாடியுள்ளார்.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரசோ, சுயமரியாதை இயக்கமோ நாகையில் எதுவும் செய்யாதபோது சொந்த முயற்சியில் இரங்கல் கூட்டம் நடத்தினார். அச்சம் காரணமாக அக்கூட்டத்தில் பங்கேற்க அப்பகுதி தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. காங்கிரசு கட்சியில் செயல்பட்டு வந்த மணலூர் மணியம்மா முன்வந்து தலைமை தாங்க சுயமரியாதை வீரர் குஞ்சிதபாதம் மற்றும் கவிஞர் உரையாற்ற அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரசு கட்சி மணியம்மாவை கட்சியை விட்டு நீக்கியது. மூவரும் இணைந்து அடக்குமுறைகளை எதிர்கொண்டு முறியடித்துள்ளனர். காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணலூர் மணியம்மா பொதுவுடைமை கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

கவிஞர் சிறந்த லாவணி கலைஞர். சைவ – வைணவ போராட்டத்தின் குறியீடாக உள்ள மன்மதன் எரிந்த கட்சி – எரியாத கட்சி லாவணி கச்சேரியில் எரியாத கட்சியில் பாடி வந்தார். மன்மதன் எரியாத கட்சிக்கு பாடினால் பெருநோய் (குஷ்டம்) வரும் என்ற சைவர்களின் பிரச்சாரம் மக்களிடம் வலுப்பெற்றிருந்த காலம் அது. எரியாத கட்சிக்கு பாட யாரும் முன்வராத நிலை. லாவணி கலைஞர்கள் பாபுதாசர், கோபால்சாமி பிள்ளை, ஷக் தாவூது, அப்துல்காதர், நாகை சாமிநாதன் ஆகியோர் துணிந்து எரியாத கட்சிக்கு பாடினர். சித்தர் பாடல்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்து மக்களைக் கவரும் வகையில் வாதங்களை முன்வைத்து பாடியது இவர்களின் சிறப்பு. இதற்கு அவர்களின் சுயமரியாதை, பொதுவுடைமை இயக்க சிந்தனையே ஊக்கமளித்து உள்ளது.

கவிஞர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோதே 1930-ல் சலவை தொழிலாளர் சங்கத்தையும், 1933-ல் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தையும் தொடங்கி வழி நடத்தியுள்ளார். தொழிலாளர் விவசாயிகள் சங்க போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

யூஜன் பார்ட்டியாரின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்தார் கவிஞர்.

இந்திய செங்கொடி இயக்க வரலாற்றில் உழைப்பால், தியாகத்தால் தடம் பதித்து கொண்டவர்கள் சாமிநாதன் போன்ற சிலர். மணலூரில் தொடங்கி வெண்மணியில் முடிவுற்ற கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்க வரலாற்றில் மணலூர் மணியம்மா, நாகை சாமிநாதன், ஆடாமங்கலம் ஒண்டாடித் தேவர், நாரணமங்கலம் தட்சிணாமூர்த்தி, பூத்தாழங்குடி பக்கிரிசாமி என்று பலர் புதைந்து இருக்கிறார்கள்.

இவர்களை புறம் தள்ளி ஓட்டுச்சீட்டு அரசியல் மூலம் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டவர்கள் பலர். கவிஞர் சாமிநாதன் மொழிபெயர்த்த பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதப் பாடலில்

”வேதம் ஓதி உடல் வளர்க்கும்
காதகர்க்கிங் கிடமில்லை.”

”நாம் உணர்த்தும் நீதியை
மறுப்பவர்க்கிங் கிடமில்லை”

என்ற வரிகள் சிபிஐ, சிபிஐ(எம்) கட்சி வெளியீடுகளில் நீக்கப்பட்டு திருத்தி பாடப்படுகிறது என்பதை அவர்களின் அணிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் பார்ப்பன அடிவருடித்தனம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் குறித்த திருத்தல்வாதம், ஓட்டுச்சீட்டு அரசியலுக்கேற்ப ஒரு ஆவணத்தை திருத்தும் கேடுகெட்ட இந்த முயற்சி தெரிந்திருந்தாலும் கண்டித்து கேள்வி எழுப்பும் துணிவு அணிகளிடமும் இல்லை.

கீழத்தஞ்சை மண்ணைக் காக்க நடக்கும் மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் ஊடாக அம்மண்ணில் தோன்றி தியாகம் புரிந்த பொதுவுடமை தியாகிகளின் வாழ்வை பதிவுகளாக்க முயற்சிப்போம். தியாகிகளின் வாழ்விலிருந்து கற்றுக் கொண்டு மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.

-இராவணன்
செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை.