privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசி.ஐ.ஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன் !

சி.ஐ.ஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன் !

-

ஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள அமெரிக்க செனட் அறிக்கை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புப் போரையும், சித்திரவதைகளையும் மட்டுமின்றி, இச்சித்திரவதைகள் அமெரிக்க அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்தேதான் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த செனட் அறிக்கை அம்பலமாக்கியிருக்கிறது.

விசாரணைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதைப்பது, பல நாட்களுக்குத்  தூங்கவிடாமல் தொடர்ந்து சித்திரவதை செவது, மலக்குழாய் வழியாக உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி வதைப்பது, வாட்டர் போர்டிங் எனப்படும் நீரில் மூழ்கடித்துச் சாவின் விளிம்புவரை கொண்டு சென்று வதைப்பது, நடுங்கவைக்கும் குளிரில் நீண்டநேரம் நிற்க வைப்பது, குறுகிய சங்கிலியின் மீது பல மணி நேரம் குனிந்தே நிற்க வைப்பது, நாய்களைக் காதருகே குரைக்கவிட்டு அச்சுறுத்துவது, சுவரில் கைதியைத் தூக்கிவீசி அறைவது, பெட்டிக்குள் கை, கால்களை மடக்கி நீண்ட நேரத்துக்கு உட்கார வைப்பது, சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்து மூச்சுத் திணற வைத்து வதைப்பது, பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி வதைப்பது, விசாரணைக் கைதிகளது குடும்பத்தாரையும், அண்டை வீட்டாரையும் மிரட்டி வதைப்பது-என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நடத்தியுள்ள கொடூரமான சித்திரவதைகள் இன்று பகிரங்கமாக வெளிவந்து உதிரத்தையே உறைய வைக்கின்றன.

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
“காலவரையற்ற சட்டவிரோதக் கைதுகளை ரத்து செய்! விசாரணைக் கைதிகள் மீது வழக்கைப் பதிவு செய்! அல்லது விடுதலை செய்!” என்ற முழக்கத்துடன், விசாரணைக் கைதிகளைப் போல வேடமணிந்து மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் இத்தகைய சித்திரவதைகளை நடத்தினால் அம்பலமாக நேரிடும் என்பதால், தனது விசுவாச – கைக்கூலி நாடுகளில் இரகசிய வதைக்கூடங்களை அமைத்து, சந்தேகிப்போரை இரகசியமாக கடத்திச் சென்று, இக்கொடூரங்களை கிரிமினல்தனமாக  சி.ஐ.ஏ.வும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நடத்தியிருக்கின்றனர். அமெரிக்காவுக்கும் அதன் விசுவாச கைக்கூலி நாடுகளுக்குமிடையே ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டு, அதன் படியே இத்தகைய வதைமுகாம்கள் அமெரிக்காவுக்கு வெளியே வைத்து இயக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவ விஞ்ஞானி கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்தபோது ‘காணாமல்’ போனார். அவர் ஒரு பயங்கரவாதி  என்று முத்திரை குத்தி சி.ஐ.ஏ.வால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளாக வெளியுலகுக்கே தெரியாமல் ஆப்கானிலுள்ள அமெரிக்க சித்திரவதைக் கூடமான பாக்ராம் விமான தளத்தில் அடைக்கப்பட்டு, மிருகத்தனமான சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளான கொடூரத்தை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர் வெளிக்கொணர்ந்தார். முஸ்லிமாகப் பிறந்ததைத் தவிர அந்தப் பெண் வேறெந்தக் குற்றத்தையும் செயவில்லை.

அபு சுபைதா என்ற இஸ்லாமியர் போலந்து நாட்டின் எல்லையில் உள்ள இரகசிய வதைமுகாமில் வைத்து வாட்டர் போர்டிங் எனும் தண்ணீரில் மூழ்கடிக்கும் சித்திரவதையால் உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை தள்ளும் வரை அவரை 12 ஆண்டுகளாக வதைத்துள்ளதை அவரது வழக்குரைஞர் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படித்தான் கியூபா அருகே குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் இரகசிய கொட்டடியிலும், மிதக்கும் சிறைச்சாலை எனும் கப்பல்களிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரகசிய சிறைக் கொட்டடிகளிலும் பலர் வதைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய இரகசிய ஆட்கடத்தல் – சித்திரவதைகள் நடந்துள்ளதைப் பற்றி ஏற்கெனவே சில மனித உரிமை அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும், ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த விசாரணைக் குழுவும், விக்கி லீக்சும் அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள் வலுவடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் விசாரணைக் கமிசன் அறிக்கை போல நீர்த்துப்போன வழியில் இப்போது இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இச்சித்திரவதைகளை ஏதோ கொள்கையில் நேர்ந்த தவறு போலத்தான் செனட் குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆனால், வரலாற்று ரீதியாகவே சி.ஐ.ஏ. என்பது பிற நாடுகளை உளவு பார்க்கவும், பயங்கரவாதப் படுகொலை – சித்திரவதைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே உண்மை. இதனால்தான் 6700 பக்கங்களைக் கொண்ட செனட் அறிக்கையில் தற்போது 500 பக்க அளவுக்கு வடிகட்டப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, ஏனைய பக்கங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.ஏ சித்திரவதை
சி.ஐ.ஏ, அமெரிக்க இராணுவம், ஜார்ஜ் புஷ் “ஆஹா, இதுதான் ஜனநாயகம்! இதுதாண்டா மனித உரிமை”

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் இத்தகைய சித்திரவதைகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒட்டுமொத்த சித்திரவதைகளில் ஒரு சிறு கூறுதான். ஆக்கிரமிப்புப் போரும், கொடிய சித்திரவதைகளும் ஏகாதிபத்தியத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள். கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து இதுவரை அறிந்திராத கொடூரமான சித்திரவதைகளை வியட்நாம் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் தலைவர்களை அது படுகொலை செய்ததோடு, முன்னணியாளர்களைக் கடத்திச் சென்று காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, காணாமல் போனதாக அறிவித்தது.

அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு உடன்படாத அல்லது அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் இத்தகைய சித்திரவதைகளைச் செய்துள்ளதாக செய்திகள் கசிந்தால், அதையே முகாந்திரமாக வைத்து மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் கூப்பாடு போட்டு அந்நாட்டின் மீது இந்நேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்திருக்கும். அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடமாக்கி அடிமைப்படுத்தியிருக்கும். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தகைய சித்திரவதைகளைச் செய்திருப்பதால், அது பயங்கரவாதத்துக்கு எதிரான செயலாகவும் தேசிய பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் நியாயப்படுத்தப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசுக் கொலைகள், போர்க் குற்றங்கள், உளவுத்துறையின் கொலைகள், நிதி மோசடிகள் பற்றிய எந்த விசாரணையும் அமெரிக்காவில் நடத்தப்பட்டதில்லை. எந்தக் குற்றவாளியும் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டதுமில்லை. ஜனநாயக நாடகமாடும் ஒபாமா ஆட்சியில், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்றொழித்த போதிலும் கூட, இக்கொடூரத்துக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ஏனெனில், அவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களால் பாதுகாக்கப்படுகின்றனர். அமெரிக்க பட்ஜெட்டில் பல நூறு கோடி டாலர்களை கொலைகார சி.ஐ.ஏ.வுக்கு ஒதுக்கி வருவதை அவர்கள் அங்கீகரித்தே வருகின்றனர். இதனால்தான் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனியும், சி.ஐ.ஏ. இயக்குனரான ஜான் ப்ரென்னனும், வெள்ளை மாளிகையின் வழக்குரைஞர்களும் நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.

வடிவங்களில் வேறுபட்டாலும் சாராம்சத்தில் ஏகாதிபத்தியம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். பெருமையாக பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகம், மனித உரிமைகளின் யோக்கியதையையும், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதே மோசடி ஜனநாயகம்தான் என்பதையும்  இப்போது செனட் குழுவின் அறிக்கையே அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. இந்த யோக்கிய சிகாமணிகள்தான் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை என்றெல்லாம் இன்னமும் வெட்கமின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

– தனபால்
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________