privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நாங்கள் சார்லி அல்ல !

-

து ‘கருத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திர’த்திற்கான போராட்டங்களின் காலம். ஐரோப்பிய மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களோடு மகா கனம் பொருந்திய பெட்ரோ பொரெஷென்கோ அவர்களும் கைகோர்த்து பாரீஸ் வீதிகளில் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஊர்வலத்தில் நடந்து சென்ற அழகை நீங்கள் பார்த்தால் பிரமித்திருப்பீர்கள். ஆனால், உக்ரைனியர்களோ இந்த ஆபாசக் கூத்தை காறித் துப்புகிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் சுமார் 33 பத்திரிகையாளர்களை கடத்தி, 47 பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையிலடைத்த பெட்ரோ பொரெஷென்கோ உக்ரைனின் தற்போதைய அதிபர்.

சார்லி ஹெப்டோ கொலையாளிகள்சார்லியின் மேல் தாக்குதல் தொடுத்து பதினேழு உயிர்களைக் கொன்றொழித்த ஜிஹாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமானது;  கண்டனத்திற்குரியது. உலகமே காறித்துப்பும் தங்களது மூடத்தனமான செய்கையால் ஆகக் கீழ்த்தரமான கடைந்தெடுத்த ஒரு தெருப் பொறுக்கியான பெட்ரோ போன்ற கனவான்களுக்கெல்லாம் கருத்துரிமை போராளிகளாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.

சார்லி ஹெப்டோ படுகொலையும், அது குறித்த போராட்டங்களும், விவாதங்களும் அனைவரையும் உணர்ச்சி வேகத்தில் சில விசயங்களை பரிசீலிக்க அல்லது பார்க்க விடுவதில்லை.

சார்லி ஹெப்டோ ஒரு பிரெஞ்சு மஞ்சள் பத்திரிகை. அறுபதுகளில் பிரபலமாக இருந்த ஹாரா கிரி என்ற பத்திரிகையின் வழித்தோன்றல் தான் சார்லி ஹெப்டோ. எந்தப் பொறுப்புமின்றி சகலரையும் வம்பிழுப்பது சார்லியின் சிறப்பு. அவர்களது கார்டூன்களுக்குத் தப்பியவர்கள் மிகச் சிலரே. ஓரினச் சேர்க்கையாளர்கள், கத்தோலிக்கர்கள், பெண்கள், புலம்பெயர்ந்த கருப்பின மக்கள், ஆசியர்கள் என்று நீளும் இந்தப் பட்டியலில் அரிதாக யூதர்களும் இசுரேலும் கூட இடம் பெற்றதுண்டு. சார்லி ஹெப்டோ ப்ரெஞ்சு மக்களின் நாசூக்கான ரசனைக்கு தீனி போட்ட பத்திரிகை இல்லை என்பதால் அது எப்போதும் வணிக ரீதியில் வெற்றிகரமான பத்திரிகையாக நடந்ததில்லை.

ஐரோப்பிய கருத்து சுதந்திரம்2000 ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து (அல்லது 1990-களின் இறுதிப்பகுதியில் இருந்து) சார்லி ஹெப்டோவின் ‘பகடியின்’ தரம் ஆக கீழ்த்தரமாக செல்லச் செல்ல அதன் விற்பனை எண்ணிக்கையும் கணிசமாக சரியத் துவங்கியது. இந்நிலையில் தனது வர்த்தக இருப்புக்காக இசுலாமியர்களைக் குறிவைக்கத் துவங்கியது இப்பத்திரிகை. ஏறக்குறைய அதே சமயத்தில் இரட்டை கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து மேற்குலகில் கலாச்சார ஒதுக்குதலை எதிர்கொள்ளத் துவங்கியிருந்தனர் இசுலாமிய மக்கள்.

அமெரிக்கா தலைமையிலான ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில்’ அங்கம் வகித்து அமெரிக்காவின் போர் தந்திர நலன்களுக்கு கணிசமாக செலவு செய்யத் துவங்கின ஐரோப்பிய நாடுகள். அதே நேரம் இரண்டாயிரங்களின் பிற்பகுதியில் துவங்கவிருந்த பொருளாதாரப் பெருமந்தத்தின் வருகையை முன்னறிவிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை நாடத் துவங்கியிருந்தன. இந்நடவடிக்கைகளின் உடனடி பலி – மக்கள் நலத் திட்டங்கள். இது பரவலாக ஐரோப்பாவெங்கும் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.

எழுந்து வரும் மக்களின் அதிருப்திக்கு இணையாக ஐரோப்பிய வலதுசாரிகளும் நியோ நாஜிகளும் மெல்லத் தலையெடுக்கத் துவங்கியிருந்தனர். அந்த சமயத்தில் ஐரோப்பாவெங்கும் தலைவிரித்தாடிய இசுலாமிய வெறுப்பின் அறுவடையில் சார்லி ஹெப்டோ தனது பங்கையும் எதிர்பார்த்தது. விளைவாக இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து கார்ட்டூன்களை வெளியிடத் துவங்கினர்.

’இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து’ என்ற இந்த மூன்று வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், இன்று “ஜெசூயிஸ் சார்லி” (அதாவது ‘நான் சார்லி’) என்பது மேற்குலகில் ஒரு முழக்கமாகியுள்ளது. இந்த முழக்கம், பொதுவில் கருத்துரிமைக்கான அறைகூவலாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் மேற்குலகில் மெல்ல மெல்ல திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் இசுலாமிய வெறுப்பே இதன் அடிநாதமாக உள்ளது.

ஜனநாயகத்தின் தொட்டிலான ஐரோப்பியாவின் சிறப்பான தனிமனித சுதந்திரம், வாழும் உரிமை மற்றும் இவற்றின் வழி சொல்லப்படும் கருத்துரிமை என்பதெல்லாம் முக்காடிட்ட முல்லாக்களுக்கு புரியாத சமாச்சாரங்கள் என்ற கோணத்தில் ஒரு பொதுபுத்தி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கருத்துரிமை என்ற திரையை நாம் கொஞ்சம் விலக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பிரான்ஸ் நாடு ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களின் ஒரு முன்மாதிரியாக போற்றப்பட்ட நாடு; தனிமனித சுதந்திரத்தின் உச்சங்களைத் தொட்ட தேசம் என்பதெல்லாம் பிரான்சைக் குறித்து வெளியுலகில் அறியப்படும் நைந்து போன பிரச்சாரங்கள்.  “சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் என்பது மானுடத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்து மானுடத்தின் உச்சநிலை நோக்கி செய்யப்பட்ட தாக்குதல்” –  என்று கேட்டுத் தேய்ந்து போன அதே ரிக்கார்டை மீண்டும் ஓட்டுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இதே பிரான்சில் தான் அல்ஜீரியாவிலிருந்தும் பிற ஆப்ரிக்காவின் முன்னால் பிராஞ்சு காலனிய நாடுகளில் இருந்தும் குடியேறிய கருப்பின மக்கள் இன்றும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு இணையாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல்பழுப்பு மற்றும் கருப்புத் தோல் மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வாடகைக்கு வீடு பிடிப்பதும் கூட அத்தனை சுலபமல்ல.

நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்து ஜனநாயகத்திற்கான – விடுதலைக்கான – முதல் குரலைக் கொடுத்தவர்கள் பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் தான். ஆனால், உழைக்கும் மக்களின் வெற்றி வெகு சீக்கிரத்திலேயே முதலாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது; முதலாளித்துவ ஜனநாயகத்தின் ’மாண்பும்’ சந்தி சிரித்தது. அதன்பின் உலகுக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்த ’உச்சநிலை மாந்தர்கள்’ தான் ஆப்ரிக்காவில் அடிமை வியாபாரம் செய்தார்கள். மூன்றாம் உலக நாடுகளைச் சூறையாடும் போட்டியில் முன்னிற்பதும் ஜெயமோகன் உச்சிமோந்த அதே ‘உச்சநிலை மாந்தர்கள்’ தாம்.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரையவே கூடாது, குரானை விமரிசிக்கவே கூடாது, இசுலாமிய பிற்போக்குத்தனங்களை இடித்துரைக்கவே கூடாது என்பது போன்ற தலீபானிய கடுங்கோட்பாட்டுவாதத்தை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால், பொருளாதார ரீதியிலும், சமூக கலாச்சார தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா? அவர்களை மேற்குல வெறுப்பிற்கான பலனை முன்னிட்டு இழிவுபடுத்தவது சரியா?

கருத்துரிமை ‘போராளிகளுக்கு’ புரியும் விதத்தில் சொல்வோம். பார்ப்பனியத்தின் அடையாளமாக உழைக்கும் மக்களை ஒடுக்கும் ராமன்-கிருஷ்ணன் போன்ற பார்ப்பன தெய்வங்களை கிண்டலாக வரையும் நாம் அதே போன்று நாட்டுப்புறத் தெய்வங்களை வரைவோமா? இசக்கியும், சுடலைமாடனும், மதுரை வீரனும், முனியாண்டியும் என்னதான் சுருட்டு, சாராயம், கறி சகிதம் வணங்கப்பட்டாலும் இந்த தெய்வங்களையும் பார்ப்பனிய தெய்வங்களையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். அதே நேரம் இப்பிரிவு மக்களிடமும் நாத்திகமும், மூடநம்பிக்கை எதிர்ப்பும் பிரச்சாரம் செய்வோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் அஜென்டாவாக ஆடு கோழி பலி தடை சட்டம் வந்தால் அதை எதிர்த்தும் போராடுவோம்.

இசுலாமிய மதவெறியையும், மதப்பிற்போக்குத்தனங்களையும் எதிர்ப்பவர்கள், அதற்கு மேல் அவர்களது கடவுளையோ, தூதரையோ ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும். ஏசுவையும், மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம். அதே போல பார்ப்பனியத்தின் மீதான நமது விமரிசனம் என்பது அதன் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பை நியாயப்படுத்தும் அதன் புராண, இதிகாச, கடவுள், சடங்குகள் மீதானே அன்றி வெறுமனே கடவுளை கிண்டல் செய்வது என்றல்ல.

வேறு ஒரு பின்புலத்தில் இதை வைத்துப் பார்க்கலாம். தமிழகத்தின் ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரே நேரத்தில் – “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?

ஏற்கனவே சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு மக்களின் தவறுகளையோ பிற்போக்குத்தனங்களையோ சுட்டிக்காட்டும் போது சொற் தேர்விலும், சொல்லும் தன்மையிலும் ஒரு குறைந்தபட்ச கவனம் தேவைப்படுகிறது. இங்கோ சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முகமது நபியைக் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் விமரிசனம் என்ற வரையறைக்குள் வருவன அல்ல. அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.

ஜெயமோகன் அராஜகவாதம்
வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன்

ஒரு உள்ளடக்கத்தோடு வரும் போது தான் விமரிசனம் அல்லது எதிர்க்கருத்து என்பவை அவற்றுக்கான பொருளைப் பெறுகின்றன. தமிழ் பத்திரிகை உலகில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையதளத்திற்கு இணையாக ஜெயலலிதாவை காட்டமாக விமர்சிக்கும் வேறு பத்திரிகைகள் இல்லை – ஆனால், நாங்கள் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான ஜெயலலிதாவின் ஆபாச கேலிச்சித்திரத்தை எதிர்க்கிறோம் என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன். இத்தனை ‘ராவாக’ சொல்வது 21-ம் நூற்றாண்டின் நாஸ்டர் டாமஸான ஜெமோவுக்கு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். எனவே தான் ‘வசைபாடும் உரிமைக்கு’ அரசின்மைவாதம் (அராஜகவாதத்தின் ஜெயமோகனிய மொழிபெயர்ப்பு) என்ற மேக்கப்பை போட்டு விடுகிறார்.

அராஜகவாதம் என்கிற ‘ஐரோப்பிய மையவாத’ கருத்தியலை ஜெயமோகனின் வாயில் இருந்து வரவழைத்த அன்னிய சக்தி யார் என்று தெரியவில்லை.கட்டுப்பட்டிற்கும் சமூக ஒழுங்கிற்கும் எதிரான ’உன்னத’ நிலையான அரசின்மைவாதத்திற்கு காட்டுமிராண்டி இனக்குழு மனப்பான்மை கொண்ட நாம் சென்று சேர்வதில் இருக்கும் சிக்கலை ஜெயமோகன் பீராய்ந்துள்ளார் – அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. விஷ்ணுபுரம் வட்ட உன்னதர்களின் ஊட்டி சந்திப்புகளுக்கான விதிமுறைகளே புத்தகமாக அச்சிடும் அபாக்கிய நிலையில் தானே நாம் இன்னமும் இருக்கிறோம்.

அராஜகவாதத்தைப் போற்றிப் புகழும் ஜெயமோகன், அவரது வாசகர் சந்திப்புக் கூட்டங்களில் அராஜகவாத அணுகுமுறை பின்பற்றப்படுவதற்கு அவரே விதித்துள்ள தடைகளுக்கு என்ன காரணம்? என்னதான் அராஜகவாதத்தைப் பற்றி கதாகலாட்சேபம் நடத்தினாலும் கேட்பவர்கள் சரக்கடித்து விட்டு அராஜகாவாதத்தை கடைபிடித்தால் பிறகு பிரசங்கத்தை எப்படி நடத்துவது? ஆக ஒரு வீணாப் போன இலக்கியக் கூட்டத்திற்கே இத்தகைய ஒழுங்குகள் தேவையென்றால் பெருந்திரளான மக்கள் கூட்டம் அதன் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் ஒரு வரைமுறை தேவையா இல்லையா?

சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரம் ஒன்றை கவனியுங்கள்: (இங்கே பிரசுரிக்கப்படவில்லை)

க்வென்னொலி வணக்க முறை!
க்வென்னெல்லி வணக்க முறை!

அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான்.

இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.

க்வென்னெல்லி உணவுப் பதார்த்தம் வேறு வேறு வடிவங்களில் செய்யப்படும் போது, ஏன் குறிப்பாக வாழைப்பழ வடிவத்தை ஓவியர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் வாழைப்பழத்தின் பெயரை நினைவூட்டும் தலைப்பு வைக்க வேண்டும்? (போன் அனானியா – பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா)

போனானியா என்பது வாழைப்பழம் மற்றும் கோகோ கலந்து செய்யப்படும் ஒரு பானம். அதன் டப்பா முகப்பில் முதலாம் உலகப் போர் சமயத்தில் பிரெஞ்சு இராணுவத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய நலனுக்கான போரில் பங்கேற்ற செனகலைச் சேர்ந்த வீரர் ஒருவரின் படம் இடம்பெற்றிருக்கும். இன்றளவிற்கும், அவ்வாறு செனகல் வீரரை விளம்பர முகப்பில் பயன்படுத்துவது பிரான்சின் கடந்தகால இனவெறி மேலாதிக்கத்தின் குறியீடாக உள்ளது என்ற விமரிசனம் பிரான்சின் முற்போக்காளர்கள் மத்தியில் உண்டு.

இப்போது கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்பதை சேர்த்துப் பாருங்கள். எமது இனப் பெருமையின் அன்றைய காலாட்படை கருப்பர்கள், இன்றைக்கு எமக்குத் தேவையானதை (நியோ நாஜிசம்) பேசும் வேலையையும் அவர்களே செய்வார்கள் (அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள்கள்) என்ற ஒரு பொருள் வருகிறதா? இது இன்னொரு அடுக்கு.

மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு –

இது பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.

பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர்
கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம். (கருப்பின மக்களை குரங்குகள் என்று வெறுப்பை உமிழ்வது ஐரோப்பிய இனவாதிகளின் வழக்கம்)

இது போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.

போகோ ஹராம் பாதிக்கப்பட்ட பெண்கள்இந்தச் சித்திரம் மேல் தோற்றத்தில் ப்ரான்சு அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை நிறுத்துவதாக சொல்லிவருவதற்கான விமரிசனமாக தெரியலாம். அனால், அதில் ஏன் வெளிநாட்டைச் சேர்ந்த போகோஹராம் பெண்கள்? அப்பெண்களின் கவலையெல்லாம் தீவிரவாதிகளிடம் தாம் பாலியல் அடிமைகளாக இருப்பதில் இல்லை – காசு தான் அவர்களது குறிக்கோள் என்று அவதூறு செய்வது உண்மை நோக்கம்.

Surrogacy என்ற வாடகைத் தாய் முறையைக் கேலி செய்வது போன்ற இந்த கேலிச் சித்திரத்தில், நிர்வாணமான கருப்பின பெண்ணை இழுத்து வருபவர்கள் இரண்டு ஐரோப்பிய ஓரினச் சேர்க்கையாளர்கள்.

வாடகைத் தாய் முறைமேல் விளக்கம் தேவையில்லை.

கருத்துச்சுதந்திரம் என்கிற வஸ்து அந்தரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கும் மந்திர மாங்காய் இல்லை. அது வாழும் உரிமையோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்தது. சார்லி ஹெப்டோவின் கருத்துரிமை என்பது ப்ரான்சில் வாழும் சிறுபான்மையினரான கருப்பர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழும் உரிமையை கருத்தியல் ரீதியில் பாதிக்கக் கூடியது. அல்லது சிறுபான்மை மக்களை வெறுக்கும் வெள்ளை நிறவெறியின் அதிகாரத்திற்கு மயிலிறகு ஆட்டுவது போன்றது. இந்துக்கள் அல்லாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று சொல்வதும் கூட ஒரு ‘கருத்து’ தான். இதை வெளிப்படுத்துவதற்கு இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு இருக்கும் உரிமையை அறிவுள்ளவர்களால் ஆதரிக்க முடியுமா? இலக்கியத் தவளைகளை விடுங்கள், கிணற்றுக்கு வெளியே வாழும் மனிதர்களாக சிந்தித்துப் பார்ப்போம்.

நம்மால் சார்லியாக இருக்க முடியுமா? பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். அபூகிரைபின் சொந்தக்காரர்கள் தம்மைச் சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். நரோதா பாட்டியாவின் கசாப்புக்காரர்கள் தம்மை சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள அரபு நாட்டுத் தலைவர்கள் தங்களைச் சார்லி என்கிறார்கள்.

ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?

– தமிழரசன்.

தொடர்புடைய சுட்டிகள் :