privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

-

லங்கை அதிபர் தேர்தலில், சிங்கள இனவெறிப் போர்க் குற்றவாளிகளான இராஜபக்சேக்களின் வீழ்ச்சி மோடி, சோனியா போன்ற பாசிசக் கூட்டாளிகளுக்கும், இந்து ராம், சோ, சு.சாமி முதலிய கைக்கூலிகளுக்கும் அதிர்ச்சிகரமாகவும்; எஞ்சியுள்ள புலிகள், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கும் இங்குள்ள தமிழினவாதிகளுக்கும் எதிர்பாராததாகவும் அமைந்தது. இலங்கை அரசியலில் இவ்வாறானதொரு மாற்றம் நிகழும் என்பது அவர்கள் அனைவரும் கனவிலும் எண்ணிப்பாராதது.

மைத்ரிபாலா சிறீசேனா
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா

பிரபாகரனின் தற்கொலைப் போர்ப் பாதையைச் சாதகமாகக் கொண்ட சிங்கள இனவெறி பாசிச இராணுவம் விடுதலைப்புலிகளோடு இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை புரிந்து ஈழப்போரில் அடைந்த வெற்றியின் கவர்ச்சி மங்கிப்போவதற்கு முன்பு, பலனை மேலும் அறுவடை செய்ய்துகொள்வது மற்றும் சோதிடர்களின் ஆரூடங்களையும் வைத்து அரசியல் கணக்குப்போட்டார், இராஜபக்சே.

அவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் இரண்டாண்டுகள் இருந்தபோதும், அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியாது என்றாலும், சட்டத்தைத் திருத்தி தேர்தலை எதிர்கொண்டார். சிங்கள இனவெறி புத்தச் சாமியார்களின் உருமயக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட போலி கம்யூனிஸ்ட் குழுக்கள், தமிழின – இசுலாமியத் துரோகிகளின் குழுக்களுக்கு அதிகார, பதவி எச்சிலையை வீசி, வளைத்துப்போட்டு சிறுபான்மையாக இருந்த அவரது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைப் பெரும்பான்மையாக உருவாக்கிக் கொண்ட இந்த சிங்கள இனவெறி பாசிச இராஜபக்சே கும்பல், இலங்கையில் அசைக்க முடியாத சக்தியாகத் தன்னைக் கருதிக் கொண்டது.

ஆனால், இராஜபக்சே கும்பல் மூன்றாவது முறை அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள்-இசுலாமியர் ஆகிய சிறுபான்மையினருக்கும் சிங்கள சமூகத்துக்கும் பேரழிவை விளைவித்திருக்கும். அக்கும்பல்  நடத்தி வந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத, மக்கள் விரோத வெள்ளைவேன் ஆள்கடத்தல் – பாசிசக் கொலைவெறியும் இலஞ்ச-ஊழலும் அதிகார முறைகேடுகளும் நிரம்பி வழியும் இராஜபக்சேக்களின் குடும்ப அதிகாரத்தைக் கண்டு, இனங்களைக் கடந்து இலங்கை மக்களில் பெரும்பான்மையினர் அதற்கெதிராகக் குமுறிக் கொண்டிருந்தனர். இதனால்தான் முற்றிலும் எதிர்பாராத வகையில், மக்கள் ஆதரவு பெற்ற  எதிர்த்தரப்பை அக்கும்பல் திடீரென்று தேர்தல் அரசியல் களத்தில் கண்டது.

இராஜபக்சே கும்பலின் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபாலா சிறீசேனா வெளியேறினார். அவரோடு  வெளியேறிய போட்டி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரும் முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்து புதிய ஜனநாயக முன்னணியை அமைத்தனர். அதன் பொது வேட்பாளரான மைத்திரிபாலா சிறீசேனா, ஜாதிகா ஹெல உருமயா, ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவெறி அமைப்புகள், தமிழ் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவைப் பெற்று அதிபராகியுள்ளார். கொடுங்கோலன், போர்குற்றவாளி இராஜபக்சே கும்பல் வீழ்ந்தது. இலங்கையில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டப்போவதாக வாக்குறுதியளித்த கட்சிகளின் கூட்டணி அரசு ஏற்பட்டுவிட்டது.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இதனால், இலங்கையின், ஈழத் தமிழர்களின் இனச் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று மிகை நம்பிக்கை கொள்ள முடியாது. என்றாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றங்கள் சிங்களவருக்கும் இசுலாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழ்வுரிமைகளை அங்கீகரிக்கும்படி சிங்கள சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களின் ஆதரவில்லாமல், சிங்கள இனவெறி பாசிச சக்திகளின் கோரப்பிடியிலிருந்து விடுபடவும் தமது ஜனநாயக உரிமைகளைப் பெறவும் முடியாது. அதேசமயம், இலங்கையில் ஒரு ஜனநாயக ஆட்சியில்லாமல், சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெறாமல் ஈழத் தமிழர்களும் இசுலாமியர்களும் தமது வாழ்வுரிமைகளைப் பெறவும் முடியாது.

ஈழத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடு எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாதது; அவர்கள் எந்தவொரு புள்ளியிலும் ஒரு பொதுநோக்கில் ஒரே அணிவரிசையில் நிற்க முடியாது; சிங்கள மக்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பாடுகளின்றி, வெவ்வேறு பிரிவுகளின்றி, எவ்வித மாறுதலுமின்றி முக்காலத்திலும் ஒரே வார்ப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஒரு பகை இனம்; அவர்களிடையே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நட்புப் பாராட்டக்கூடிய சக்திகள் எவரும் கிடையாது – இவ்வாறான பார்வையையே மார்க்சியம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தியாகு, மணியரசன் போன்ற தமிழினவாதிகளும் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், புலிகளின் போர் வெற்றி மட்டுமே ஈழச் சிக்கலுக்கான ஒரே தீர்வு என்று நம்பச் சொன்னார்கள். புலிகளின் அழிவுகளுக்குப் பிறகு ஏகாதிபத்தியமும் மற்றும் சர்வதேச சமூகமும்தான் ஈழத் தமிழர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் கதியென்று வழி சொன்னார்கள். இராஜபக்சேக்களின் அரசியல் வீழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் சில கோரிக்கைகளையேனும் ஏற்கும் சிறீசேனா-ரணில் அரசு அமைந்திருப்பதும், ஈழச் சிக்கலுக்கான தீர்வுகளை மாறாநிலையியல் பார்வையில் அணுகக்கூடாது என்பதை அவர்களுக்கு இடித்துரைக்கிறது. இந்த உண்மையை  புதிய ஜனநாயகம் சொன்னபோதெல்லாம், தமிழினவாதிகள் எல்லோரும் நாம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று அவதூறு செய்ய்தார்கள்.

இராஜபக்சே
கனவு நொறுங்கிப் போன அதிர்ச்சியில் சிங்கள இனவெறி பாசிச போர்க்குற்றவாளி இராஜபக்சே.

2013 டிசம்பர் புதிய ஜனநாயகம் இதழில் பின்வருமாறு எழுதினோம் : தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் தமிழீழத் தனியரசு மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின்துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப் பிடிக்கலாம் என்கிறார்கள்.

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும் கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதேபோல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது, ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ஒற்றுமையல்ல. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந்தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க. வினர்  ஏற்கின்றனர்.

இவ்வாறு தெளிவாகச் சொன்ன பிறகும் ம.க.இ.க. வினர்  ஈழத்துக்கு எதிரானவர்கள் என்று தமது அவதூறுகளைத் தமிழினவாதிகள் தொடர்ந்தனர். ஆனால், இப்போதைய இலங்கையின் அரசியல் மாற்றங்களைச் சாக்குவைத்து, தேசிய சுயநிர்ணய உரிமையைக்கூட கைவிட்டு அதிகாரப் பகிர்வு, 13-வது சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்குள் சுருங்கிக் கொள்கிறார்கள். இனியாவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத தீர்வுகளையும் குறுகிய இனவாதங்களையும் கைவிட்டு, எதார்த்த அரசியல் நிலைமைகளையும் எதிரிகளையும் நட்பு சக்திகளையும் சரியாக மதிப்பிட்டு, ஈழத்மிழினத்துக்கான தன்னுரிமையுடன் கூடிய புதிய ஜனநாயகத்துக்கான இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும்.

– ஆர்.கே.
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

  1. ///ஈழத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடு எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாதது; அவர்கள் எந்தவொரு புள்ளியிலும் ஒரு பொதுநோக்கில் ஒரே அணிவரிசையில் நிற்க முடியாது; சிங்கள மக்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பாடுகளின்றி, வெவ்வேறு பிரிவுகளின்றி, எவ்வித மாறுதலுமின்றி முக்காலத்திலும் ஒரே வார்ப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஒரு பகை இனம்; அவர்களிடையே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நட்புப் பாராட்டக்கூடிய சக்திகள் எவரும் கிடையாது – இவ்வாறான பார்வையையே மார்க்சியம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தியாகு, மணியரசன் போன்ற தமிழினவாதிகளும் கொண்டிருக்கிறார்கள்.///

    மிக சரியான பார்வை. சிங்கள ஜனனாயக சக்திகள் வலுபெற்றால் தான் மொத்த இலங்கைக்கும் விடிவு காலம் என்பதை பலரும் இனிமேல் தான் புரிந்து கொள்ள போகிறார்கள்.

  2. //இவ்வாறான பார்வையையே மார்க்சியம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தியாகு, மணியரசன் போன்ற தமிழினவாதிகளும் கொண்டிருக்கிறார்கள்.///

    இது தான் உண்மையும் கூட, அறுபதாண்டுகளுக்கு மேல் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட பின்பும் தமிழ்த்தலைமைகள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை நம்பி சிங்களவர்களிடம் மீண்டும் ஏமாறப்போகிறார்கள் என்ற கவலை தான் ஈழத்தமிழர்களுக்கு. இந்தியாவின் நோக்கம் எப்படியாவது ஸிந்க்கலவர்களைத்ய்ஹ திருப்திப் படுத்தி, இலங்கையைச் சீனாவின் பக்கம் போக விடாமல் தடுப்பதே தவிர, இலங்கைத் தமிழர்களின் உரிமை அல்ல. அமெரிக்காவுக்காவது மனித உரிமைகள் பற்றிய சில நிலைப்பாடுகள் உண்டு ஆனால் இலங்கையில் தமிழர்களுக்குக் சிங்களவர்கள் செய்ததைத் தான், இந்தியாவும் காஷ்மீரில் செய்கிறது, போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களைப் பற்றி, அல்லது வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப்பட்டாலும் இந்தியா கணக்கிலெடுக்காது. சில சிலநாட்களுக்கு முன்பு வடமாகாண முதல்வரின் தலைமையில்இலங்கையில் நடைபெற்றது இனவழிப்பே என்று வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் கூட, ரணிலின் அரசின் சுத்துமாத்துகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம், என்று உலக நாடுகளை கேட்டுக் கொள்ளும் கோரிக்கை தான். அதை ம.க. இ.க வினர் அந்த தீர்மானத்தைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்பது தெரிகிறது.

    //சிங்கள மக்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பாடுகளின்றி, வெவ்வேறு பிரிவுகளின்றி, எவ்வித மாறுதலுமின்றி முக்காலத்திலும் ஒரே வார்ப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஒரு பகை இனம்; அவர்களிடையே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நட்புப் பாராட்டக்கூடிய சக்திகள் எவரும் கிடையாது.//

    இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு மட்டுமன்றி, முற்போக்கு, கம்யூனிசம் பேசும் தமிழ்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத் தமிழர்களின் நிலையையும், சிங்களவர்களையும் பற்றி ஈழத்தமிழர்களுக்குத் தெரியாதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தது போல், இபப்டிப்பட்ட அதிகப்பிரசங்கித்தனமான கட்டுரைகளை எழுதி ஈழத்தமிழர்களின் வயிற்ரெரிச்சலைக் க் கொட்டிக் கொள்வதே வழக்கமாகப் போய்விட்டது.

    உண்மை என்னவென்றால் மகிந்த ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமசிங்காவுக்கும், மைத்திரிபால சிறிசசேனாவுக்குமிடையில் பெரிய வேறுபாடு கிடையாது. ராஜபக்சவை விட, ரணில் விக்கிரமசிங்கா ஆபத்தானவர். அவரது நோக்கமெல்லாம் தமிழர்களுக்கு மேற்குநாடுகளில் உள்ள ஆதரவை முடக்குவதே தவிர, தமிழர்களுக்கு உரிமையளிப்பதல்ல. அவர் மட்டுமல்ல, எந்த சிங்களத் தலைவரும் இலங்கை ஒற்றையாட்சி(Unitary State) முறை கொண்ட நாடு என்ற நிலையை விட்டு இறங்கி வரமாட்டார்கள். அப்படிச் எய்தால் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும், ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது.

    //சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க. வினர் ஏற்கின்றனர்.//

    ம.க.இ.கவினர் ஏற்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை, __________ விவஸ்தை கேட்டவர்கள் தான் ம.க.இ.கவினர் என்பது ஈழத்தமிழர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களின் கருத்தைப் பார்க்கக் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. 🙂

    சிங்கள – ஈழத்தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கை அரசு அமையவில்லை. 50 % வீதத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் மகிந்த ராஜபக்சவுக்குத் தான் வாக்களித்தனர். சிறுபான்மை மக்களின் வாக்குகளில் சிறிசேன வென்றிருக்கிறார்.ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. பெளத்த சிங்ககளப் பேரினவாதமும், பெளத்த பிக்குகளும் ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையையும் அளிக்க அனுமதிக்க மாட்டார்கள். இலங்கையில் சிங்களக் கம்யூனிஸ்டுகள் கூட இனவாதிகள் தான்.

  3. //இராஜபக்சேக்களின் அரசியல் வீழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் சில கோரிக்கைகளையேனும் ஏற்கும் சிறீசேனா-ரணில் அரசு அமைந்திருப்பதும்….///

    எந்த சில கோரிக்கைகளை ஏற்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையை எழுதிய ‘தோழர்’ ஏன் கூறவில்லை.

    ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா?

    வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது வடக்கு -கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொள்கிறார்களா?

    திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் (Government Sponsored Sinhala Colonization) நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா?

    வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை மட்டுப்படுத்தி, இராணுவ ஆக்கிரமிப்பையும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத் தலையீட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்கிறார்களா?

    போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்கிறார்களா?

    தமிழர்களின் கோயில்களையும், தேவாலயங்களையும் சிங்கள பெளத்த பிக்குகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

    தேர்தல் அறிக்கையிலோ அல்லது தேர்தலுக்குப் பின்னர் கூட ரணில் –சிறிசேனா அரசு தமிழர்களின் பிரச்சனை பற்றை மூச்சுக்கூட விடவில்லை என்பது தான் உண்மை.

    ரணில் என்றதும் நல்லவர், வல்லவர், தமிழர்களின் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர், நேர்மையானவர் என்ற ஒரு பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி விட்டிருக்கின்றன. ஆனால் இலங்கையின் நரி (Master Fox) என்றழைக்கப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் மருமகனாகிய அவர் ஜே ஆரை விட அரசியல் தந்திரம் மிக்கவர். ஜே ஆர் எவ்வாறு ராஜீவ் காந்தியை ஈழத்தமிழர்களுடன் மோத வைத்தாரோ அதே போல, இந்தியாவையும் அமெரிக்காவையும் ஈழத்தமிழர்களுக்கெதிராகத் திருப்பக் கூடிய அரசியல் தந்திரமும், இனவாதமும் மிக்கவர் ரணில்.

    Rome Statute of the International Criminal Court இல் இலங்கை கையோப்பமிடுவதை 1998 இலேயே தடுத்த அரசியல்நரியும் ரணில் விக்கிரமசிங்க தான். அன்றைக்கு இலங்கை அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால், எப்பொழுதோ ராஜபக்சவையும் சகோதரர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தியிருக்கலாம். ஆகவே சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு ஒருபோதும் அமையாது. பாட்டாளி மக்களின் அரசை நீங்கள் இந்தியாவில், அதுவும் வேண்டாம், தமிழ்நாட்டில் அமைத்துக் காட்டுங்கள், அவ்வளவு எதற்கு குறைந்த பட்சம் ம.க.இ.கவினர் எல்லோரும் சேர்ந்து, அடுத்த தேர்தலில் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ்நாட்டு சட்டசபைத் தொகுதிகளையாவது கைப்பற்றி விட்டு வேண்டுமானால் சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் புதிய அரசு அமைக்கலாம் என்று கருத்துக் கூறினால், அதை ஏற்றுக் கொள்ளலாம். சிங்களத் தலைவர் யாராவது, தமிழர்களின் பிரிந்து போகும் உரிமையைப் பற்றிப் பேசினால் அவரது அரசியல் வாழ்வு முடிந்து விடுவது மட்டுமல்ல, சிங்களவர்கள் அவரை உயிரோடு கூட விட்டு வைக்க மாட்டார்கள். உண்மையில் ம.க. இ. கவின் கருத்துக்கள் எல்லாமே விவஸ்தை கெட்டவை தான். 🙂

  4. //இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். ///

    யார் அந்த சிங்கள “முற்போக்கு சக்திகள்”, உங்களுக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசியத்தைப் ஈழத்தமிழர்களும் மற்றவர்களும் அறியும் வகையில் வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த முற்போக்கு சக்திகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவுண்டா அல்லது அவர்கள் NGO க்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காகவும், வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளவும் சும்மா அறிக்கை விடுகிறார்களா என்பதையும் அறியத் தரவும். 🙂

  5. ஜனவரி 9,2015 : ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும்

    ஈழ தமிழருக்கு இனி என்ன ?

    ராஜபக்சவின் வெற்றிக்காக மறைமுக களம் கண்ட தெற்காசிய பிராந்திய வல்லரசான இந்திய வல்லான் அரசுக்கும் அதன் மதவாத பிராதமர் மோடிக்கும் கொடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை மணியோசை தான் சிறிசேனவின் வெற்றியும், ராஜபக்சவின் தோல்வியும். ராஜபக்சவின் தோல்வி முகம் போன டிசம்பர் மாதமே ஒளிர தொடங்கினாலும் அதனை முழுமையாக காட்டிய நாள் இன் நாள். ஈழ தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய வல்லான் அரசு எடுத்த நேரடியான ராஜபக்ச ஆதரவு கைகோர்ப்புகள் ,அனுப்பிவைக்கபட்ட ஆதரவு பிரச்சசார நடிப்புலக பிரங்கிகள் ஈழ மக்கள் சனநாயக சக்தியின் முன் செய்லிழந்தது ஒன்றும் உலக அரசியலில் முதலும் அல்லது இருதியுமானது அல்ல.ஆனால் வடக்கு மாகாண தமிழ் மக்கள் ,வடகிழக்கு தமிழ் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ,இந்திய வம்சாவழி மலையகத்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் ராஜபக்சவின் தோல்விக்கு மிக நேரடியான காரணமாக அமைந்தது என்பதனை பெரும்பான்மை சிங்கள பொதுமக்களே மறுக்க இயலாத நிலையில் அடுத்து பதவி ஏற்க்க வரும் சிறிசேனாவிற்கு ஒன்று பட்ட ஈழத்துக்கும் ,அதில் வாழும் அனைத்து இன மக்களின் அதிகார பகிர்விக்கும், வாழ்வுரிமைக்குமான அரசியல் செயல்பாட்டுக்கு உரிய அதிகப்ச்ச புரிதலை கொடுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

    இன ,மத வேறுபாடுகளை கடந்த ஈழத்து எளிய மக்களிடம் நடைமுறைக்கு வரவேண்டிய அரசியல் ,பொருளாதார ஐக்கியமும் ,அதனை நேக்கிய நீண்ட புரிந்துணர்வு பயணமும் ,இன சீற்றத்தை கடந்த வர்க்க ஒற்றுமையும் மட்டுமே அம்மக்களின் நீண்ட , நிலைத்த எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனையும் ,உலக ,பிராந்திய வல்லரசுகளின் ஆதிகத்தில் இருந்து ஈழத்தை மீட்டெடுக்கும் என்பதனையும் ,அவர்களின் நாட்டின் இறையாண்மையை காக்கும் என்பதனையும் ஈழ மக்கள் அனைவருமே புரிந்து கொள்ளவேண்டிய நாள் ஜனவரி 9,2015.

    அனைத்து இலங்கை[ஈழ] மக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள் !

  6. தி இந்து வுக்கு ஈழத்தமிழர்களின் நிலையில் உள்ள அக்கறையும் புரிந்துணர்வும் கூட, ம.க.இ.க தோழர்களுக்கு கிடையாது என்பது வெட்கக்கேடு.

    -சிங்கள சகோதரர்களின் மனசாட்சிக்கு ஒரு விண்ணப்பம்!- என்ற தலைப்பில் தி இந்து வில் வந்த தலையங்கத்தையும், இங்கே வர்க்கப் போராளி ஒருவர் – மீட்பர்கள் ரணிலும்- சிறிசேனாவும் வந்து விட்டார்கள், இப்பொழுது இலங்கையில் எல்லாமே Hunky-dory, நாங்கள் முன்பே சொன்னது தான் சரி. ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர்கள் எல்லாம் இனவாதிகள், என்ற மாதிரியான இந்தக் கட்டுரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். யாருக்கு இலங்கைப் பிரச்சனையைப் பற்றிய புரிந்துணர்வு உண்டு என்பது தெரியும்.

    http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article6890013.ece

  7. பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது என்றால் முதலில் புரட்சிகர, சிங்கள பேரினவாதம் பேசாத முற்போக்கு சக்திகளை தமிழ் நாட்டு ம.க.இ.க இலங்கையில் அடையாளம் காணவேண்டும் . அப்படி அடையாளம் காட்ட இயலாத வரை ம.க.இ.க வின் கருத்து கற்பனையானதாகவே இருக்கும்.

    //சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க. வினர் ஏற்கின்றனர்.//

  8. கட்டுரை மிகச் சரியான பார்வையைக் கொண்டுள்ளது.அவ்வப்போது இது மாதிரியான கட்டுரை எதிர்பார்க்கிறேன்.

  9. இந்தியா : இந்தியா இருக்கும்வரை எந்த தமிழனும் எழுந்து நிற்க முடியாது

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க