Saturday, May 3, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

-

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

மெரிக்க சிலிக்கான் வேலி”யின் ஐ.டி. ஊழியர்களை “சிலிகான் பள்ளத்தாக்கின் தோட்டத் தொழிலாளிகள்” என்று கூறுவதுண்டு. தோட்டத்தொழிலாளிகள் கூட சங்கம் வைக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் ஐ.டி. துறையில் இல்லை. காரணம், புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் முதலாளி வர்க்கம் பராமரிக்க விரும்பும் தொழிலுறவுக் கொள்கைக்கு இந்தத் துறை ஒரு முன்மாதிரி. ஊழியர்களின் சிந்தனை முறையை ஊழல்படுத்துவது, அச்சுறுத்தல் ஆகிய இரண்டு வழிமுறைகளின் மூலமும் ஐ.டி. நிர்வாகங்கள் இதனைச் சாதித்திருக்கின்றன.

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!குறிப்பிட்ட தகுதியிலான ஊழியர்களின் ஊதியத்திலேயே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நிராகரிப்பது, ஊதியத்தில் கணிசமான பகுதியை பணித்திறன் அடிப்படையில் (performance based) மாதந்தோறும் தீர்மானிப்பது, ஊதியம் மற்றும் பதவி உயர்வை பணி மூப்பின் அடிப்படையில் அல்லாமல் அப்ரைசல் மூலம் தீர்மானிப்பது. இதன் மூலம் அடிமைச் சிந்தனைக்கு அனைவரையும் பயிற்றுவிப்பது – என்பன போன்ற வழிமுறைகளின் மூலம் “நாம்” என்ற உணர்வே எழவொட்டாமல் தடுத்து “நான்” என்ற சிந்தனையும், கழுத்தறுப்புப் போட்டியும் ஊழியர்களுக்கிடையே திட்டமிட்டே ஊக்குவிக்கப்படுகிறது.

“உன்னுடைய அப்ரைசல் ரேட்டிங்கை சக ஊழியனிடம் சொல்லாதே, எல்லா இடங்களிலும் உன்னை முன்நிலைப்படுத்தக் கற்றுக்கொள், குழு உறுப்பினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளாதே, கருத்து வேறுபாடு குறித்து வாதம் செய்து சூழலை மாசுபடுத்தாதே” – என்பன போன்ற நடத்தை விதிகள் மூலம் ஊழியர்கள் கோழைகளாகவும், சுயநலமிகளாகவும் வனைந்து உருவாக்கப்படுகின்றனர். அதனால்தான் அநியாயமாக வெளியேற்றப்படும் ஊழியர்கூட எச்.ஆரிடம் குரலை உயர்த்திப் பேசுவதில்லை.

“நான் நல்ல ரேட்டிங் வாங்கியிருக்கிறேனே, வாடிக்கையாளரின் பாராட்டைப் பெற்றிருக்கிறேனே, என்னை ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று ஈனச்சுரத்தில் முறையிட மட்டுமே செய்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பது திறமைசாலிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சிந்திக்கும்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆட்குறைப்பினால் வேலை இழப்பவர்களுக்கு இணையப் பத்திரிகைகளும், உளவியல் ஆலோசகர்கள் எனப்படுவோரும் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்குகின்றனர்:

“லே-ஆஃப் என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. அதுவே வாழ்க்கையல்ல. நம்பிக்கை இழக்காதீர்கள். எந்தக் கம்பெனியும் வாழ்நாள் பூராவும் வேலை தர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒரு புரபஷனல் போல சிந்திக்கப் பழகுங்கள். இந்த வேலை போனால் என்ன ஆகும் என்று வேலையில் இருக்கும்போதே சிந்தித்துப் பழகுங்கள். இடையறாமல் புதுப்புது திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.”
முதலாளித்துவ அடிமைத்தனத்தை இயற்கை நியதியாகக் கருதிச் சரணடைவதற்கு ஊழியர்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பு, நிர்வாகத்தை எதிர்ப்பது போலக் கனவு கூடக் காணமுடியாமல் ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தி வைப்பதற்கு ஒரு ஏற்பாட்டை வைத்திருக்கிறது. ஐ.டி. துறையில் வேலை தேடுபவர் தேசிய திறனாளிகள் களஞ்சியத்தில் (National Skills Repository) பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். நிறுவனங்கள் திறமையாளர்களை அடையாளம் காண்பதற்கும், திறமையாளர்கள் தங்களை எளிதில் சந்தைப்படுத்திக் கொள்வதற்குமான ஏற்பாடுதான் என்று கூறப்பட்டாலும், இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறு.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்குத் தமது பணிகளை அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு, தங்களது தரவுகளைக் கையாளும் இந்திய ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், ஊழியர்களின் ரேகை முதல் கருவிழி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் திரட்டப்படவேண்டும் என்று கோரியதன் அடிப்படையில்தான் ஜனவரி, 2006-ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு ஊழியர் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், அவரைப் பற்றிய எல்லாத் தரவுகளும் இதில் தொகுக்கப்படும் என்பதால், ஒரு ஊழியர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நிர்வாகத்தை எதிர்க்கும் பட்சத்தில் அவரது பெயர் கறுப்புப் பட்டியலில் ஏற்றப்பட்டு, அவர் வேறு எங்குமே வேலை தேட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர் ஐ.டி. முதலாளிகள். தொழிற்சங்கம் இல்லாத காரணத்தினால், சட்டவிரோதமான இந்தக் கிரிமினல் நடவடிக்கையை அம்பலமாக்கவோ, தடுக்கவோ ஊழியர்களால் இயலவில்லை.

ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் பொருந்துமா?

டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட ஒரு பெண் ஊழியர், தான் கருவுற்றிருக்கும் நிலையில் வேலைநீக்கம் செய்யப்படுவதாகவும், தன்னை வேலைநீக்கம் செய்வது தொழிற்தகராறு சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த டி.சி.எஸ். நிர்வாகம், தான் கருவுற்றிருக்கும் தகவலை அந்தப் பெண் ஊழியர் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவில்லை என்றும், கருவுற்றிருக்கும் பெண்களைப் பணி நீக்கம் செய்வது தங்களது விதிமுறைகளுக்கே எதிரானது என்பதால் அந்தப் பெண்ணை மீண்டும் பணியமர்த்துவதாகவும், மற்றபடி தொழிற்தகராறு சட்டமெல்லாம் தங்கள் நிறுவனத்துக்குப் பொருந்தாது என்றும் கூறியது. அதாவது “எங்கள் சட்டத்துக்குத்தான் நாங்கள் கட்டுப்படுவோமேயன்றி, உங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்பதுதான் டி.சி.எஸ். நிறுவனத்தின் வாதம்.

கர்நாடகாவில் தொழில் நிறுவனங்கள் நிலையாணைச் சட்டம், 1946-ன்படி, ஐம்பது பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒவ்வொரு நிறுவனமும், தொழிற்தகராறு சட்டத்தின் அடிப்படையிலான ஒரு நிலையாணையை வகுத்து அமல்படுத்த வேண்டும். ஐ.டி. முதலாளிகளை மகிழ்விக்கும் பொருட்டு அப்படியொரு நிலையாணையைக் காகிதத்தில்கூட வகுத்து வைத்துக் கொள்ளத்தேவையில்லை என்று கடந்த 18 ஆண்டுகளாக ஐ.டி. நிறுவனங்களுக்கு விலக்களித்திருக்கிறது கர்நாடக அரசு. தமிழகத்திலோ தாங்கள் “ஷாப்ஸ் அண்டு எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் ஆக்ட்” – இன் கீழ் வருவதாகப் பித்தலாட்டம் செய்து வருகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

எல்லா ஐ.டி. நிறுவனங்களும் தொழில் தகராறு சட்டத்தின் கீழ்தான் வரும் என்பதை நிலைநாட்டுவதன் வாயிலாகத்தான் பணிப்பாதுகாப்பை உத்திரவாதம் செய்து கொள்ள முடியும். இதனை நிலைநாட்டுவதற்கே கூட ஊழியர்கள் தொழிற்சங்கமாகத் திரள்வது அவசியம்.

உதயமானது ஐ.டி.துறை ஊழியர் சங்கம்!

டி.சி.எஸ். ஆட்குறைப்பு குறித்த செய்தியை வினவு  இணைய தளம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆட்குறைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் ஈடுபட்டனர். சங்கம் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதுதான் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் படி என்ற அடிப்படையில் பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டது. படூரில் ஜனவரி 10-ம் தேதி மாலை நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் – பெரும்பான்மையினர் பல மாநிலங்களையும் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள்; மற்றவர்கள் மாணவர்கள் மற்றும்  தொழிலாளர்கள்.

பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஒருங்கிணைத்து நடத்திய இக்கூட்டத்தில், உரையாற்றிய ஐ.டி. பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம், தனது 17 ஆண்டு கால  ஐ.டி. பணி அனுபவத்திலிருந்து சங்கம் அமைப்பதன் தேவையை வலியுறுத்தினார். ஊழியர்களுடைய வாழ்க்கைப் பின்புலமும், ஐ.டி. துறை பணிச்சூழலும் ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதை விளக்கிய மனநல மருத்துவர் ருத்ரன், சங்கமாகச் சேர்வது அவர்களை இப்பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க எங்ஙனம் உதவும் என்பதை விளக்கினார்.

ஐ.டி. ஊழியர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை சட்டப்படியே இல்லையா, சங்கத்தில் சேர்ந்தால் வேலை போகுமா, இந்த ஆட்குறைப்பை முறியடிக்க முடியுமா – என்பன போன்ற ஊழியர்களின் கேள்விகளுக்குத் தனது உரையில் விடையளித்தார் வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ். நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கின்ற அதேநேரத்தில், ஊழியர்கள் சங்கமாகத் திரண்டு போராடுவதுதான் அவர்களது வேலையையும் உரிமைகளையும் பாதுகாக்கப் பயன்படும் என்று விளக்கிப் பேசினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள்.

தாங்கள் சங்கத்தில் சேருவதாக அங்கேயே இரண்டு ஊழியர்கள் அறிவித்திருப்பதும், ஐ.டி. துறை ஆட்குறைப்புக்கு எதிராக வினவு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் பார்த்திருப்பதும், கட்டுரைகளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படித்திருப்பதும் ஐ.டி. ஊழியர்களிடையே போராட்டச் சிந்தனை அரும்பத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றன.
_________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
_________________________________