Wednesday, October 16, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎங்கம்மா களவாணி ... ஆனா அவதான் எங்க மகராணி ...

எங்கம்மா களவாணி … ஆனா அவதான் எங்க மகராணி …

-

திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என ‘திருவிழா’க் கோலம் பூண்டிருந்தது தஞ்சை.

ஜெயலலிதா பேனர்
பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என ‘திருவிழா’க் கோலம் – ஆர்.வைத்திலிங்கத்தின் ஊழல் செலவழிக்கும் காலத்தின் கோலம்

காவிரி ஆற்று நீர் சிக்கல், மீத்தேன் வாயு எடுப்புத் திட்டம், உரத்தட்டுப்பாடு, விவசாயிகளின் போராட்டங்கள், பெட்டிச் செய்தி அளவுக்குக்கூட இடம்பெறாமல் இருட்டடிப்பு செய்யப்படும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளென இருள் அப்பிக் கிடக்கும் தஞ்சையில் ‘திருவிழா’க் கோலமா?

‘மக்களின் முதல்வர்’ என்ற அருவருப்பான அடைமொழியுடன் அழைக்கப்படும் தண்டனைக் கைதி ஜெயலலிதாவின் 67-ம் பிறந்த நாள் விழாவாம். அதற்காக, தனது வட்டங்களுக்கு உத்தரவிட்டு ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது மாவட்டம்.

தஞ்சை திலகர் திடலில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் தலைமையில், 113 ஜோடிகளுக்கு மெகா திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்தன சுவரொட்டிகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சந்தைக்கு ஓட்டிவரப்படும் ஆட்டு மந்தைகளைப்போல திணித்துக்கொண்டு வந்து  மக்களையெல்லாம் திடலுக்கு வெளியே கொட்டின, ஷேர் ஆட்டோ, டாடா ஏஸ், மற்றும் டிராக்டர்கள்.

திடலுக்குள் நுழையும் வழியில் நம்மை வழிமறித்ததோ அம்மாவின் அடிமைகள் வந்திறங்கியிருந்த டாடா சுமோ, பொலிரோ, டஸ்டர் மற்றும் பல உயர்ரக வாகனங்கள். அவற்றுள் பல சைரன் விளக்குகளைத் தாங்கி நின்றன.

மேடையில், அடிமைகளின் பெயர்களையெல்லாம் விளித்து, புல்ஸ்டாப் வைப்பதையே மறந்து பத்து நிமிடத்திற்கும் மேலாக ஒரே வாக்கியத்தில் அம்மாவை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஒரு ரத்தத்தின் ரத்தம்  (தமிழுக்காக அம்மா செய்த பங்களிப்பு இதுவென்று, இதற்கு ‘அம்மா இலக்கியம்’ என்றும் பெயர் சூட்டப்படலாம்! அம்மா நாமம், வாழ்க!!)

அ.தி.மு.க அடிமைகள்
பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்…. ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.

பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்…. ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள். மேடையின் மையத்தில் வீற்றிருந்ததும், டிரேடு மார்க் வெள்ளுடையில் ஜொலித்த ரத்தத்தின் ரத்தங்களின் அணிவரிசைதான். அந்த மேடையின் காட்சியையும், அவர்களின் பேச்சுக்களின் வீச்சையும் கண்டபொழுது, ”மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற டிரஸ் என்னோடது” என்ற காமெடிக் காட்சியின், ரஜினி கதாபாத்திரம்தான் நினைவுக்கு வந்து தொலைத்தது.

அ.தி.மு.க அடிமைகள்
”மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற டிரஸ் என்னோடது”

கட்சி கரைவேட்டிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துகொண்டிருந்தனர், மேடையேறுவதற்காக! “கட்சிக்காரங்க எல்லாம் மேடைய விட்டு கீழ எறங்குங்க! நீங்கல்லாம் இங்க தேவையில்ல, போங்க, போங்க” என்று கீழ்மட்ட அ.தி.மு.க அடிமைகளை,  மைக்கில் விரட்டிக் கொண்டிருந்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அம்மாவின் முன்பு அமைச்சர்கள் அடிமைகள்,  அமைச்சர்களின் முன்பு உள்ளூர் கட்சிக்காரர்கள் அடிமைகள் என்ற படிவரிசை கச்சிதமாக தெரிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மணமக்களோ இந்த அடிமை கட்சிக்காரர்களின் தயவில் விழாவுக்கு வந்திருந்தார்கள்; ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையின் இரு ஓரங்களிலும், அய்யோ பாவமாய் அமர வைக்கப்பட்டிருந்தனர்; பலரின் முகத்தில் திருமணக் களையே இல்லை. மணமக்கள் அமர வைக்கப்பட்ட இருக்கைகளிலும், மணமக்கள் கையில் தாங்கியிருந்த மஞ்சள் பையிலும் கொட்டை எழுத்தில் எண்கள் அச்சிடப்படிருந்தன. அதுவே அவர்களது அடையாளமாகவும் மாறியிருந்தது. டோக்கன் நம்பர் 1, டோக்கன் நம்பர் 2 என அந்த எண்களாலேயேதான் மணமக்கள் அழைக்கப்பட்டனர்.

மேடையில் ஒரு ஜோடியின் மணமகள் கர்சீப்பால் அடிக்கடி துடைப்பதுபோல் மக்களை பார்ப்பதை தவிர்த்தார். சாதாரண மனிதர்களுக்கு மேடையில் அமர்வது கொஞ்சம் கௌரவமாகத்தான் தெரியும். ஆனால் அப்பெண்ணிடம் அங்கே அமர்ந்திருப்பது அசிங்கமாய் உணர்வதை சிலகணங்கள் காட்டிச் சென்றன.

kalyana-pandal-1மணமக்களின் உறவினர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக பந்தலில் இடம் பிடித்து உட்கார்ந்திருந்தனர். “நம்ம வீட்டில கல்யாணம் நடத்தினா என்னா காட்டுவாங்க, இங்க எல்லாம் கப்சிப்” என்றார் ஒரு மணமகனின் அண்ணன்.

விழாப்பந்தலின் கடைசியில் ஒரு ஜோடி தமது குடும்பத்தினருடன் தனியே அமர்ந்திருந்தனர். என்ன வென்று கேட்டால் பொண்ணு, மாப்ளை நிமிர்ந்து கூட பாக்கவில்லை. பக்கத்தில் இருந்த பெரியவரிடம் “ஏன்யா… இவங்க மேடையில இல்லாம இங்க ஒக்காந்து இருக்காங்களா…” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, “நீ வேற அங்க இடம் இல்லாமத்தான்” என எரிச்சல்பட்டார் அந்தப் பெரியவர். மீண்டும் ஒருமுறை மேடையை நோக்கினோம், அ.தி.மு.க. அல்லக்கைகள் நெருக்கியடிக்கும் மேடையில் இவர்களுக்கு இடம் இல்லாமல் போனது சரிதான்.

kalyanam-ashamedஇந்த அடிமைகள் நடத்தும் கல்யாணத்தில் இடம் பிடிக்க கட்சி, அரசு எல்லாம் சேர்ந்து வேலை செய்திருக்கின்றன. “ஊரு கவுன்சிலருகிட்ட மனு கொடுக்கனும். வி.ஏ.ஓ.கிட்ட இதுதான் முத கல்யாணமுன்னு சர்டிபிகேட்டு வாங்கித் தரனும். அதெல்லாம் செக்கப் பண்ணிதான், தேர்ந்தெடுப்பாங்க” என்றார், அவர்.அம்மா ஆட்சியில், கல்யாணம் ஆகாத ஜோடிகளை மட்டும் வடிகட்டி தனது மெகா திருமணத்தை செய்யும் அமைச்சரின் நிர்வாகத் திறமையை  பாராட்டத்தான் வேண்டும்.

கல்யாண சாப்பாட்டுக்கு வரிசையில் குவிந்த உறவினர்கள்
கல்யாண சாப்பாட்டுக்கு வரிசையில் குவிந்த உறவினர்கள்

“மணமக்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்க”
“மாலை மாத்திக்கோங்க”
“மணமகன்கள் மணப்பெண்களுக்கு தாலி கட்டுங்க”

என்று டிரில் போல கல்யாணத்தை நடத்தி வைத்தார் அறிவிப்பாளர். தாலி கட்டும் வைபவம் முடிந்ததும் கல்யாண உணவுக்காகக் காத்து நின்றது பெருங்கூட்டம்.

முறைப்பெண்ணை முறைத்துப் பார்த்து கொண்டிருந்த, இளைஞர் ஒருவரை வம்படியாக ஓரங்கட்டி, “உங்க குடும்பத்துல யாருக்கு கல்யாணம்? இவ்ளோ செலவு பண்ணி, இந்த கல்யாணத்தை யாரு நடத்துறா?” என்றோம். “என் அண்ணனுக்குத்தான் கல்யாணம். அமைச்சர் நம்ம பக்கத்து ஊர்காரர்தான். வருசா வருசம் நடத்துறார். ஏழைப்பட்டவங்களுக்கு உதவி செய்ற மனுசன்” என்று, ஏதோ அமைச்சரே தனக்கு சொந்தக்காரர்தான் என்பது போன்ற உணர்விலிருந்து பதிலளித்தார் அவர்.

kalyana-bridegrood-roomவயல்களின் நடுவே போடப்படும் ஆட்டுக்கிடையை ஞாபகப்படுத்தியது, திடலுக்கு நடுவே தகர தகடுகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த அந்தத் தடுப்புகள். மணமகன்/மணமகள் அறையென்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தால், மூத்திரக்கவிச்சிகளுக்கு மத்தியில் சிதறிக்கிடந்தது புதுச்சட்டைகளைத் தாங்கியிருந்த அட்டைப் பெட்டிகள். “எல்லாமே, காஸ்ட்லி சட்டை வேட்டிதான்” என்று பெருமைபொங்க பதிலளித்தார், தனது பட்டாபட்டி டிராயரை சரிசெய்துகொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறிய முதியவர் ஒருவர்!

மேடைக்கு இடப்புறம், பசுங்கன்றுடன் பசுமாடுகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கழுத்திலும், கொட்டை எழுத்தில் எண்கள் எழுதி தொங்கவிடப்பட்டிருந்தன. மேடையில் ஜோடியாக மணமக்கள். மேடைக்கு அருகிலேயே ஜோடியாக பசுமாடும் கன்றும். ஆகா, என்ன பொருத்தம்! அவர்களைப் பொருத்தவரையில், ஆடு, மாடுகளைப் போல மணமக்களும் ஒரு உருப்படி அவ்வளவுதான்.

kalyana-cattle-2“கல்யாண ஜோடி 113 இருக்கு. இங்க கட்டியிருக்க மாடுகள் 25 தானே இருக்கு?” வாயைக் கிளறினோம், ஒருவரிடம். “இப்போதைக்கு இருக்கிற மாட்டை இங்க வச்சி கொடுக்கிறதாகவும், பிறவு மிச்ச பேத்துக்கு டோக்கன் கொடுத்துருவாங்களாம், மாடு இருக்கிற தாவுக்கு போயி ஓட்டியாந்திரனும்னு பேசிக்கிட்டாங்க” என்றார் அவர். மாட்டுக்கு காவல் காத்து நின்றவர்களிடம் இதே கேள்வியை கேட்டதற்கு, “மிச்ச மாடெல்லாம், பக்கத்து தெருவுல நிப்பாட்டியிருக்கோம் சார்” என்றார், படபடப்பாக. இந்தக் கதையை நம்பி, மணமக்களின் உறவினர்கள் பழைய பஸ்டாண்ட் வரையில் தெருத் தெருவாக அலைந்ததுதான் மிச்சம். எங்கும் மாடுகள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

எந்த ஜோசியக்காரன் சொல்லி, பசுமாடும் கன்றும் கொடுக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, பசுவை தெய்வமாக பூஜிப்பதால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் கையேடும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அம்மாவின் படத்தோடு உள்ளே பகவான் பலராமன் மற்றும் கோமாதா படங்களும் இடம்பெற்றிருந்தன. பச்சை அட்டைக்குள் காவிக் கருத்துக்களைத் தாங்கியிருந்தது அந்த கையேடு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஏழை மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து, அம்மாவின் ஆணைக்கிணங்க மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டுவேட்டி, பட்டு சட்டை, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படுவதாக மேடையில் பீற்றிக்கொண்டிருந்தனர் உடன்பிறப்புக்கள்.

அப்படி என்னதான் 72 வகையான பொருட்களை கொடுக்கிறார்கள் என்று அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது எங்களுக்கு! ஜாடி, ஜக்கு, சோம்பு, டம்ளர், பூரி கட்டை, தேங்காய்த்துருவி, மசால் டப்பா, ‘சரோஜா தேவி யூஸ் பண்ணின’ சோப்பு டப்பானு… போகுது அந்த லிஸ்ட். நல்லவேளை, பட்டு சட்டையில் குத்தி வந்த குண்டூசிகளை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை! இவ்வாறு, பெருந்தன்மையோடு பட்டியலில் சேர்க்காத பொருளையும் கணக்கிட்டால், நூறு நூற்றம்பதைத் தாண்டும்!

சீர்வரிசை கொடுகக்கூப்பிட்ட ஜோடியில் வேறொருஜோடி வர நெரிசலில், “அறிவிருக்கா தள்ளிப்போ” என அந்த மணமகனை அ.தி.மு.க அடிபொடி கோபித்தது.

kalyana-kuthattamகச்சேரி இல்லாமல் கல்யாணமா? குத்தாட்டத்துக்கே ஏற்பாடு செய்திருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். “எங்கம்மா களவாணி… ஆனாலும் அவதான் எங்க மகராணி..” ச்சீ.. ச்சீசீ… மன்னிக்கணும் அப்பிடியில்ல…”எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி” என்ற கொள்கை விளக்க – தத்துவப் பாடலுக்கு அயிட்டம் சாங்க் ரேஞ்சுக்கு மேடையை ரணகளப்படுத்தினர் குத்தாட்ட கலைஞர்கள்.  எனக்கு வேணும், நல்லா வேணும் என்று அ.தி.மு.க. கொடியில் அறையப்பட்டிருந்த அண்ணா, யாரையோ கையை நீட்டி கொண்டிருந்தார்.

வளர்ப்பு மகன் திருமணம் என்ற பெயரில், அடிச்ச கொள்ளை இதுதான் என்று ஊருக்கே காட்டியதோடல்லாமல், ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையே எச்சில் இலை எடுக்க வைத்து மாநில அளவில் ‘புரட்சி’ செய்தார் புரட்சித்தலைவி. அன்று அவர் ஊரை வளைத்து உலையில் போட்டு செய்த ‘புரட்சி’க்காகத்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழந்து, சிறைக்கு சென்று பின்னர், பிணையில் வெளிவந்த தண்டனைக் கைதியாக போயஸ் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்.

இப்போது, அம்மாவின் உள்ளூர் அடிமைகள் தமது ரேஞ்சுக்கு ஏழை தம்பதிகளை திரட்டி திருமணம் நடத்தி தமது செல்வாக்கை தம்பட்டம் அடிக்கின்றனர்.

jaya-birthday-celebrations-1இந்தக் கூத்துக்களெல்லாம், தஞ்சையில் மட்டுமல்ல; கோடிகளைக் கொட்டி மாவட்டங்கள் தோறும், கலர் கலராய் கல்யாணம், காதுகுத்து, கோயில்களில் அங்கப் பிரதட்சணம், அன்னதானம், சிறப்புப் பூஜைகள், தங்கத் தேர் இழுத்தல், அலகு குத்துதல் என மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. அல்லக்கைகளின் அளப்பறைகள் தாளாமல் திணறுகிறது தமிழகம். அம்மாவுக்காக கையில் ஆணியடித்து சிலுவையில் அறைந்து கொள்ளும் அடிமைகளையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றும் புரியவில்லை.

jaya-birthday-celebrations-2காணச்சகிக்காத இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கடந்து செல்கிறபொழுது, நரகலுக்கு நடுவே நடந்து செல்லும் உணர்வுதான் மேலிடுகிறது. அப்பட்டமாக ஊரைக் கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்ற கும்பல் ஒன்று இப்படி பகிரங்கமாக தனது கொள்ளையை பறைசாற்றி தானதருமம் என்று ஊளையிடுகிறதே, இதுதான் ஆபாசாமானது.

– எஸ்.எஸ். உதவியுடன் இளங்கதிர்

    • கவிஞரே மடமை எல்லம் சம்பாதிக்கதான் சும்மவா பால் குடம் மண்சோரு எல்லாம் அடிமைகள அம்மாவின் பார்வை பட்டலே போதாத வட்டச்செயலாளர் ,எம் எல் ஏ ,மந்திரினு ஆயி காசு சம்பாதிக்கலாமுன ஆசைதான் அதுக்காக என்ன வேணா கூத்து பண்ணலாம் ஆனா அது உங்களுக்குதான் கூத்து மடமை ,அதிமுக அடிமைகளுக்கு கடமை இருந்தாலும் அந்தம்மா ஆசைப்பட்டத வுட குடுத்த காசுக்கு கொஞ்சம் ஓவாராத்தான் கூவுராங்க போல தெரியுது ,எப்பா எனக்கும் பால் குடம் எடுக்க சாண்ஸ் குடுங்கப்ப எனக்கும் டாடா சுமோல அம்மா படத்த முன்னடி வச்சுக்கிட்டு கைஸ்பீடு ல போக ஆசையா இருக்குது என்ன தன்மானம் அப்பிடினு ஒன்னு தமிழனுக்கு இருக்கனும் அப்பிடிங்கிறாங்க அதான் தடுக்குது ….

  1. “எங்கம்மா களவாணி … ஆனா அவதான் எங்க மகராணி ல் நடந்திருக்கிற அளப்பரைகள படித்ததில் விளங்காத மடமை கூட்த்தால் …”அடுத்தும் இவுகதான் தமிழ்குடிநாட்டு க்கு மகாராணி என தோன்றுகிறது

  2. அறியாமைகளை அகற்றிய மார்க்ஸ் , லெனின் போன்றோர்களின் உன்னதமான உழைப்புகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

  3. நான் ரொம்ப நல்லவன் எனக்கொரு அடிமை சிக்கவே மாட்டேங்குறான். ஆனா கொள்ளைக்காரிக்கு ஆயிரக்கணக்கில் அடிமைகள். அடிமைகளுக்கு புத்தி வந்துட்டா முதலாளிங்க எப்படி வாழுறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க