Tuesday, September 24, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சாஸ்திரி பவன் திருட்டினால் முதலாளிகளுக்கு ஆவதென்ன ?

சாஸ்திரி பவன் திருட்டினால் முதலாளிகளுக்கு ஆவதென்ன ?

-

bank-theft-may-still-impact-consumersத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திலிருந்து ‘இரகசிய’ ஆவணங்கள் திருடு போனதாக வெளியான செய்தி, சிலருக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆவணத் திருட்டு விவகாரத்தில், பெட்ரோலியம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சகங்களைச் சேர்ந்த ஐந்து அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களைச் ஐந்து பேர்களும், சாந்தனு சாய்க்கியா எனும் முன்னாள் பத்திரிகையாளர் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாடப்பட்ட ஆவணங்களில் பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேறவுள்ள நிதி நிலை அறிக்கை குறித்த இரகசியத் தகவல்களும், நிதி அமைச்சரின் உரைக்குத் தேவையான புள்ளி விவரங்களும் இருந்தனவாம். மேலும் எரிசக்தி, பெட்ரோலிய துறைகளில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள் மற்றும் இத்துறைகள் சார்ந்து இயங்கும் ஊக வணிகம் தொடர்பான முடிவுகள் குறித்த அடிப்படைக் குறிப்புகளும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தின் நகலெடுக்கும் எந்திரத்தின் அருகில் இரகசிய ஆவணம் ஒன்றின் பிரதிகள் காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தில்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வலைவிரித்ததாகவும், தில்லி போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் தான் இந்த ஐவர் குழு பிடிபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது பற்றி தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் ஒவ்வொன்றிலும் மோடி அரசின் ’கறார்த்தனம்’ பற்றிய விவரணைகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன. இதற்கிடையே, தில்லியின் புதிய முதல்வரான விளம்பர புகழ் கேஜ்ரிவால், ஆவணங்கள் களவு போன விவகாரத்தை தாம் சும்மா விடப்போவதில்லை என்று தானும் பயங்கர “டெரர்” பார்ட்டி தான் என்று தேசத்திற்கு அறிவித்துள்ளார்.

modiஊடகங்களோ, அரசு அலுவலகங்களின் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது, எங்கெல்லாம் கேமரா வைப்பது, கள்ளச் சாவி தயாரிப்பைத் தடுப்பது எப்படி என்றெல்லாம் அரசுக்கு ஆலோசனை தெரிவித்து வருகின்றன. அதிகார வர்க்கமே சிந்திக்கத் தடுமாறும் கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு, முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஆர்.கே ராகவனை வைத்து ஒரு நடுப்பக்க கட்டுரையை வெளியிட்டுள்ளது. அவரும் தனது போலீசு மூளையைக் கசக்கி திருட்டைத் தடுப்பது எப்படி என்று கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

ஆவணத் திருட்டு குறித்த செய்திகள் வெளியாகும் இணையதளங்களுக்கு படையெடுக்கும் மோடி பக்தர்கள் படை, காங்கிரசால் வளர்த்து விடப்பட்ட கார்ப்பரேட் பெருச்சாளிகளுக்கு மோடி ஆப்பு வைக்கத் துவங்கியுள்ளதாக குதூகலத்துடன் மறுமொழி எழுதி வருகிறார்கள். இதே வேலையில் சில ஆங்கில ஊடகங்களும் ஈடுபட்டு மோடி பக்தர்களுக்கு ”டஃப்” கொடுத்து வருகின்றன. மோடியின் கறார்த்தனத்தை போற்றும் பக்தர்களோ, அம்மாவுக்காக தன்னையே சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹுசைனியைப் பார்த்து வாய்பிளந்த தமிழக அமைச்சர்களின் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மக்களைப் பொறுத்தவரை மத்திய அரசு அலுவலகத்திலிருந்து ஆவணத் திருட்டு என்ற செய்தியே கடும் அதிர்ச்சியாக அவர்கள் தலையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசு போடும் பட்ஜெட்டே முதலாளிகள் சங்கமான சி.ஐ.ஐமுன் நிறைவேற்றப்பட்ட பின் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பது கடந்த சில பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மறைமுக நடைமுறை. மத்திய அரசு ஆண்டு தோறும் நிறைவேற்றும் நிதி நிலை அறிக்கையின் ஒவ்வொரு அம்சமும், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானவை என்பது நேற்றுப் பிறந்த குழந்தை கூட அறிந்த அப்பட்டமான உண்மை.

மோடி அரசு பதவியேற்ற பின் கடந்த ஓராண்டுக்குள் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்துள்ள நன்மைகளை நூலாகத் தொகுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், அது ஆண்டுக்கணக்கில் ஓடும் மெகாத் தொடரையே விஞ்சிவிடும் என்பதால், பருந்துப் பார்வையில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

 • அதானி குழுமம் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மோடியே நேரடியாக பாகிஸ்தான் பிரதமரிடம் புரோக்கர் வேலை பார்த்தார்.
 • இரயில்வே போன்ற துறைகளில் பாதியும் மற்ற பொதுத் துறை நிறுவனங்களில் 100 சதவீதமும், கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விட்டார்.
 • 88,000 கோடி ரூபாய்க்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
 • பாதுகாப்புத் துறையில் 100% நேரடி அன்னிய மூலதனத்தை திறந்துவிட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.
 • கார்ப்பரேட் முதலாளிகள் பல ஆயிரக் கணக்கில் நிலங்களை குவிக்கும் வகையில் நிலச் சீர்திருத்த சட்டதிருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார்.
 • கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு வழங்கிய வரிச்சலுகையைவிட பல மடங்கு அதிகமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்.
 • அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட பிரதமரே நேரடியாகச் சென்று புரோக்கர் வேலை பார்த்ததோடு, அதற்கான முதலீடுகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ஆறாயிரம் கோடி கடனுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
 • விவசாயிகள் வாங்கும் டிராக்டர் கடன்களுக்கான வட்டி வீகிதத்தை விட மேட்டுக்குடியினர் வாங்கும் கார் லோன்களின் வட்டி விகிதங்கள் குறைவு.
 • கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்குதடையின்றி சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதை உத்திரவாதப்படுத்த வனச் சட்டங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சட்டங்களில் திருத்தம்.
 • கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு அரசுத் துறைகளில் அனுமதி வாங்கிச் சிரமப்படுவதைத் தவிர்க்க ஒற்றைச் சாளர முறை
 • வங்கிக் கார்ப்பரேட்டுகள் கொழுக்க ஜன் தன் யோஜனா.
 • தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, அதனால் முதலாளிகள் மனம் புண்பட்டுப் போவதைத் தடுக்க தொழிலாளர் நலச் சட்டங்களின் பற்கள் பிடுங்கப்பட்டது.
 • தொழிற்சாலையின் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்கு இருந்த வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டது.

எதை விட எதை எடுக்க என்ற திணறலோடு இந்தப் பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்.

ஒட்டுமொத்த அரசும், அரசின் நடவடிக்கைகளும், அது முன்வைக்கும் நிதி நிலை அறிக்கை என்ற மோசடியும் முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் ஆவணங்களைத் திருடித் தான் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏன் ஏற்படுகிறது?

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த தில்லி சாஸ்திரி பவனுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பும் அந்த தொடர்பை பராமரிக்கும் லாபியிங் நிறுவனங்களும் யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சாந்தனு சாய்க்கியா என்ற முன்னாள் பத்திரிகையாளர் சொந்தமாக ஒரு லாபியிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பெட்ரோலியம், எரிசக்தி மற்றும் நிலக்கரி அமைச்சகங்களின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அந்த அமைச்சகங்களின் கொள்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதாக சொல்லிக் கொள்ளும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பகாசுர தரகு முதலாளிகளே உள்ளனர்.

தரகு முதலாளிகள் குறிப்பிட்ட ஒரு லாபியிங் நிறுவனம் என்றில்லாமல், அரசின் நடவடிக்கைகளை முன்னரே உளவறிந்து தெரிந்து கொள்வதற்காக பல்வேறு லாபியிங் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டிருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல.

the thiefகாங்கிரசோ, பாரதிய ஜனதாவோ மாறி மாறி வரும் எந்த அரசாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதே என்றாலும், அது எந்தளவுக்கு சாதகமானது, அதில் தனக்கு என்ன லாபம், தனது போட்டியாளருக்கு என்ன லாபம் என்று அறிந்து கொள்ள தரகு முதலாளிகளும் பெரும் கார்ப்பரேட்டுகளும் பெரும் ஆர்வம் காட்டுவதுண்டு.

சி.ஐ.ஐ, அசோசாம் போன்ற அமைப்புகள் மூலம் முதலாளிகள் அரசின் கொள்கைகளை தங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு மக்களின் செல்வங்களைச் சூறையாட தமக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றன. என்றாலும், ஒவ்வொரு முதலாளியும் தனது போட்டியாளனை தீர்த்துக் கட்டி போட்டி நிறுவனத்தின் சந்தையைக் கபளீகரம் செய்தன் மூலமே உயிர்த்திருக்க முடியும் என்பது மூலதனத்தின் விதி.

2ஜி, காமன்வெல்த், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் போன்ற மக்களின் கவனத்திற்கு வரும் முறைகேடுகளும் கார்ப்பரேட் பகற்கொள்ளைகளும் அரசின் நேர்மை நாணயத்தின் விளைவாக வெளிப்பட்டவை அல்ல. அவை ஒவ்வொன்றும் கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடக்கும் நாய்ச்சண்டையின் விளைவு. கனிமொழிக்கும் நீரா ராடியாவுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் வெளியானதும், அதைத் தொடர்ந்து 2ஜி ஊழல் பரந்துபட்ட அளவில் பேசு பொருளானதும் கார்ப்பரேட் சிண்டிகேட்டுகளிடையே நடந்த மோதலின் விளைவு தான்.

தற்போது நடந்திருக்கும் கைதுகளின் பின்னணியிலும், ’இரகசியங்களை’ முன்கூட்டியே அறிந்து கொள்ளத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளின் தவிப்பும், அதில் அவர்களுக்கிடையில் இருந்த போட்டியுமே வெளிப்படுகிறது. லாபியிங் நிறுவனங்கள் செயல்படுவதைத் தடுக்காத ஒரு நாட்டில், நாடாளுமன்ற விவாதங்களுக்கு முன்பே கார்ப்பரேட் கருவறையில் வைத்து நிதிநிலை அறிக்கை பூசிக்கப்படும் ஒரு நாட்டில், அதன் விவரங்களில் கொஞ்சம் கசிந்து விட்டதாக கூப்பாடு போடும் இந்த கேலிக்கூத்திற்கு காரணம் என்ன?

அடுத்து வரும் நாட்களில் கார்ப்பரேட்டுகளிடம் ’கட் அண்ட் ரைட்டாக’ நடந்து கொண்ட பிரதமர் சோட்டா பீம் பற்றிய பரபரப்புத் தகவல்களும், கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் இரகசியங்களை விற்ற காசில் எந்தெந்த நடிகைகளோடு ‘உல்லாசமாக’ இருந்தார்கள் என்ற ’அதிமுக்கியமான’ தகவல்களும் நாளிதழ்களின் பக்கங்களை அடைத்துக் கொள்ளப் போகின்றன. இந்த இடைவெளியில் எதிர் வரும் நிதி நிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவின் வளங்கள் சல்லிசான விலையில் அள்ளி வழங்கப்படும்.

2ஜி, நிலக்கரி ஊழல்கள் பரபரப்பாக பேசப்பட்ட அதே காலகட்டத்தில் தான் வரலாறு காணாத நிதிச் சலுகைகள் வரிவிலக்குகள் என்ற பேரில் அள்ளி வழங்கப்பட்டன, அதே காலகட்டத்தில் தான் பல்வேறு மக்கள் விரோத சட்ட திருத்தங்கள் பெரும் விவாதங்கள் இன்றியும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படாமலும் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு முறை பெரிய ஊழல் புகார்கள் வெடித்த போதும் நடந்தது இது தான். இம்முறை நாம் வெறுமனே திருட்டைப் பற்றி மட்டும் பேசப்போகிறோமா அல்லது திருட்டிற்கு காரணமான அரசின் கொள்கைகளைப் பற்றிப் பேசப் போகிறோமா?

–    தமிழரசன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க