privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைகண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

-

நான்காம் ஆண்டு நினைவு கண்ணீர் அஞ்சலி

நேற்றுவரை எம்மோடு இருந்தாய்
எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய்
காலமெல்லாம் எமைக் காத்திருப்பாய் என்றிருக்க
கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீ போனாய்
ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா
உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.

– உன் நினைவால் வாடும் குடும்பத்தார்.

ந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பாத்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அது செத்தவனுக்காக வந்த அழுகை அல்ல, பற்றியெறியும் ஆத்திரத்தை தணிக்க கண்கள் கொட்டிய நீர்.

கண்ணீர் அஞ்சலிஊரைச் சுத்தி எங்கெ பார்த்தாலும் இவனோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மூஞ்சீல அடிச்சது. யோசிச்சுப் பார்த்தேன், இவன் செஞ்ச காரியத்துக்கு இவனைப் பெத்தவ கூட ஒரு சொட்டு கண்ணீரு வடிக்க மாட்டா. அப்படிபட்ட படுபாவிப்பயலு கண்ணீர் அஞ்சலி போஸ்டரெல்லாம் ஒரு கேடா?

ஊருல உள்ள பெரும் பணக்காரங்கள்ள இவனும் ஒருத்தன். பல ஏக்கர் சொத்துக்கு சொந்தக்காரன். கல்யாணம் பண்ணி 25 வருசமா பிள்ளை கிடையாது. அவம் பெஞ்சாதிய கூட்டிகிட்டு போவாத ஆசுபத்திரியும் இல்ல, அவளுக்கு பண்ணாத வைத்தியமும் இல்ல. ஆனா பிரச்சின இவன்கிட்டதான்னு ஊருக்கே தெரியும்.

சொத்து பத்து வச்சிருந்தாலும் தனக்கு வாரிசு இல்லேங்கறத ஒத்துக்க மனசில்ல. பிள்ள இல்லன்னாலே பொம்பளைங்கள மட்டும் சோதிப்பது பொதுவான ஊர் நீதியா இருக்கிற பழக்கத்த அவன் மட்டும் மாத்துவானா என்ன? அதை நல்லா பயன்படுத்திக்கிட்டான்.

மூத்த பொண்டாட்டிய மலடின்னு முத்திர குத்திட்டு சொத்துக்கு வாரிசு வேணுமின்னு நடாயிய (நடு ஆயி) கட்டிக்கிட்டான் இந்தப் பாவிப்பய. இவங் கையாலாகதனத்தால இன்னிக்கு வாழ வேண்டிய வயசுல எல்லாத்தையும் எழந்துட்டு எதிர்காலம் என்னன்னு தெரியாம கேள்விக்குறியாகி நிக்கிறா ‘நடாயி’. நாலு ஆணு; மூணு பொண்ணு – இவங்களுக்கு மத்தியில பொறந்ததால இவ பேரு நடாயி.

நடாயியோட மூத்த அக்கா புருசன் செத்துப் போக, ரெண்டு பொம்பளப்பிள்ளையோட பெத்த வீட்டுக்கே அவ திரும்பி வந்து நாலு வருசமாச்சு. மூத்த அண்ணனுக்கு பஸ் டிரைவர் வேலை. நிதானமெல்லாம் பஸ்சுலேர்ந்து எறங்கற வரைக்கும் தான், வீட்டுக்கு வரும் போது நிதானத்த டாஸ்மாக்குல வித்துட்டு வந்துருவான். பொண்டாட்டி பிள்ளைங்க இருந்தும் வீட்டுக்கு பொறுப்பில்லாதவன்.

சின்ன வயசுலேயே கால பறிகொடுத்து கட்டக்கால் வச்சுகிட்டு வாழ்க்கை கெடைக்குமாங்கற கனவோட கல்யாண வயச கடந்தவன் இன்னொரு அண்ணன். பள்ளிக்கூடத்துல முதல் மார்க்கு வாங்கியும் பணம் கொடுத்தாதான் நல்ல படிப்பு படிக்க முடியுங்கற நெலமைக்கி பலியானவன் தம்பி. பேருக்குப் பின்னாடி போட மட்டுமே ஆகிற பார்ட் டயம் படிப்பும் மத்த நேரத்துல வாயிக்கும் வயித்துக்குமான உதிரி வேலையுமா அல்லாடிகிட்டிருந்தான் தம்பி. இத்தன கஷ்டம் குடும்பத்துல இருந்தாலும் காதலில் உறுதியா இருந்தா தங்கச்சி.

நடாயியோட குடும்பம் தத்தளிச்சுகிட்டு இருந்த நெலமைய தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு நடாயிக்கு வாழ்க்கை கொ(கெ)டுக்கறேன்னு வந்தவன்தான் இப்ப கண்ணீர் அஞ்சலி போஸ்டருல மொறைச்சிப் பார்க்கிறவன்.

ஊர்ல கிராமத்துல பெத்தவங்களுக்கு என்னத்த பொறுப்பு; ஆண்டவன் அவங் கடமைக்கு புள்ளைய குடுத்தான், நம்ம கடமைக்குப் பெத்துப் போட்டாச்சி. ஏதோ கால் வயிறோ அரை வயிறோ சோத்தை மட்டும் போட்டு வளத்து விட்டா போதும். கை, கால் நல்லாருந்தா அதுங்க தானா பொழச்சுக்குன்னு நெனச்சாங்க பெத்தவங்க. படிப்பு, வரதச்சனை, வேலையின்னு பிள்ளைங்க வாழ்க்கைக்கு இவ்வளவு நெருக்கடி வரும்னு யோசிச்சிருக்க மாட்டாங்க. யோசிக்கவும் தெரியாது.

குடும்ப நெருக்கடிகள் ஒண்ணு கூடி நடாயி தலையில இடியா விழுந்தது.

அம்பது வயசான ஆம்பளைக்கும் இருவத்தி அஞ்சு வயசான நடாயிக்கும் நடக்குற கல்யாணத்துல எந்தத் தடையும் வந்துரக் கூடாதுன்னு ரகசியமா பேசி முடிச்சுட்டு, மொத தாரத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடிதான் சொன்னாங்க. அவங்க பொறந்த வீட்டுக்கும் இதப்பத்தி தெரியப்படுத்தல. நெருங்கிய உறவுக்காரங்க மட்டும் கலந்துகிட்டு ஒரு கோயில்ல வச்சு காலையில 7 மணிக்கி கல்யாணம் முடிச்சது. ஓட்டல்ல சாப்பாடு முடிஞ்சு 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுச்சு கல்யாணக் கும்பல்.

கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துக்கெல்லாம் முதல் தாரத்து வீட்டுல விசயம் தெரிஞ்சு அவங்க சொந்தபந்தம் ஊர்க்காரங்கன்னு பெரிய கூட்டமா வந்தாங்க. “என் சம்மதத்தோடதான் நடக்குது எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க”ன்னு சொல்லிக் கொடுத்தத, சொல்லிக் கொடுத்தபடி சொல்ல வச்சிட்டாங்க. மலடின்னு பட்டத்த சொமத்தி இருவத்தஞ்சி வருசமா படாத பாடெல்லாம் படுத்தினவங்க இப்படி பேசலைன்னா என்னெல்லாம் செஞ்சிருப்பாங்களோ. ஆனா, நம்பிக்கையா வாழ அனுப்பிச்ச பொண்ணோட வாழ்க்கை கண்ணு முன்னாடி பறிபோச்சேங்கற ஆத்தரம் அடங்கல அவங்களுக்கு.

பொருந்தாத் திருமணம்
நடாயி தலையில இடியா இறங்கிச்சு இந்த சேதி. அவ வயசுக்கு எல்லாருக்கும் வரும் அதே கல்யாணக் கனவுகளோட தான் அவளும் இருந்திருப்பா

“பிள்ள பெத்துக்க தகுதி இல்லாத மலட்டுப் பய நீ தான், என் தங்கச்சிதாண்டா உன்ன ஒதுக்கி வைக்கணும். ஒண்ணும் தெரியாத பொண்ண பயமுறுத்தி ஒத்துக்க வச்சிருக்கியா. இத இப்புடியே விட்டுட்டு போயிடுவோம்னு நினைக்காதே. யாருக்கு பிள்ள பெத்துக்க முடியலன்னு கோர்ட்டுல போயி தெரிஞ்சுக்குவோம். இன்னும் ஒரு மணி நேரத்துல போலீசோட வந்து ஒம்மானத்த சந்தி சிரிக்க வைக்கல, நாங்க ஒரு பக்கத்து மீசைய எடுத்துக்கிறோண்டா”ன்னு ஊரே பாக்க சத்தம் போட்டபடி வண்டிய எடுத்துகிட்டு கிளம்பிட்டாங்க.

தன்னோட ஆண்மை மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சு இருவத்தஞ்சி வருசமா போராடி தோத்தவன் அவன். வைத்தியத்தையும், மருந்தையும் கூட மொத தாரத்து தலைல சொமத்தி ஊருக்குள்ளே மீசைய முறுக்கிக்கிட்டு அலைஞ்சவன். அசட்டு நம்பிக்கையில ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுக்க துணிஞ்சி நின்னவனுக்கு முத தாரத்து குடும்பத்த சேர்ந்தவங்க சத்தம் போட்டுப் போன பின்னே திகிலடிச்சுப் போச்சு. அவங்க சொன்னா மாதிரி கோர்ட்டு கேசுன்னு போனா ரெண்டாவதா வந்தவ குடும்பத்து முன்னாடியும் ஊர் முன்னாடியும் அம்பலப்பட்டு போயிருவோமோ என்ற பயந்துட்டான்.

பவிசு கௌரவத்துல விட்டுக்கொடுக்காதவன் மலட்டுப்பட்டம்தான் கதின்னா என்ன செய்வான்?

அன்னைக்கி மதியம் மூனு மணியிருக்கும் ஊரே ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா கத்திகிட்டே ஓடுனாங்க. கரும்பு தோட்டத்து பம்பு செட்டுல வயலுக்கு வச்சிருந்த பூச்சி மருந்த குடிச்சுட்டு செத்துக் கிடந்தான் அந்த கௌரவக்காரன்.

“அய்யோ பாவமே எந்த ஊருல இப்படி ஒரு அநியாயம் நடக்கும். கடவுளே நீ இருக்கியா இல்லையா. எம்பது வருச வாழ்க்கையில இதுபோல நான் பாத்ததே கெடையாதே” என்று ஆளாளுக்கு ஆயாசத்த ஆச்சர்யமா பேசிட்டிருந்தாங்க கரும்புக் கொல்லையில.

காலையில கட்டுன பட்டுப்புடவ கசங்காம, புதுத்தாலி, மஞ்சள் குங்குமமுமா மணவறைக் கோலம் கலையாமல் இருந்த நடாயி தலையில இடியா இறங்கிச்சு இந்த சேதி. அவ வயசுக்கு எல்லாருக்கும் வரும் அதே கல்யாணக் கனவுகளோட தான் அவளும் இந்தக் கல்யாணத்துக்கு முந்தி இருந்திருப்பா. ஆனா நெனச்ச வாழ்க்கை, பிடிச்ச வாழ்க்கை எல்லாம் பொம்பளைக்கி கெடைக்கிறது அவ்வளவு சுலபமில்லங்கறது தான் இவ விசயத்திலும் நடந்தது.

சோகம்
இந்த கொடுமைய தடுத்து நிறுத்த தோணாம தாலி அறுப்பாங்களா இல்லையாங்கற உச்ச கட்ட சீனுக்காக காத்திருந்தாங்க சில பேரு.

விரும்பாத இந்த வாழ்க்கை போனதை நெனச்சு சந்தோசப்படுவாளா?, இருந்ததும் போச்சேன்னு வருத்தப்படுவாளா? சில மணி நேரத்துக்கு முன்னாடி வந்துபோன வாழ்க்கை மேல் என்ன உணர்வு வரும் அவளுக்கு? எந்த உணர்ச்சியக் காட்ட முடியும் அவளால? உணர்ச்சியற்ற சிலையாய் எதிர்காலம் என்னவாகும் என்ற கலவரப்பட்ட முகத்தோடு கருங்கல்லாதான் நின்னா.

ஊர் கூடியது, கல்யாண வீடு எழவு வீடா மாறியது. கல்யாணப் பொண்ணு காட்சிப்பொருளா மாறிப் போனா.

“சொத்துபத்த ஆள பிள்ள வேணுன்னு என்னா ஆசையா கல்யாணம் பண்ணினான். கொஞ்சம் புத்திய செலுத்தி இருக்காமே, இப்படி அல்ப ஆயிசுல போய்ட்டானே பாவிப்பய”

“யாரு விட்ட வாசாப்போ அன்னைக்கே கட்டி, அன்னைக்கே அறுத்துட்டா. போன பிறவியில என்ன பாவம் செஞ்சாளோ”

“அந்தப் பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருந்துருக்கு, சரியா சாதகம் பாக்காம இப்படி பண்ணிட்டாங்க”

“தாலி கட்டிட்டான், இனி பொண்டாட்டி இல்லேன்னு ஆயிடுமா? இனிமேட்டு எப்ப பாக்கப் போறா. கிட்டக்க வந்து அழுக விடாமெ வீட்டுக்குள்ளேயே எதுக்கு உக்கார வச்சுருக்காங்க.”

“நாலு பேருக்கு எழவு கொடுக்கவே பந்தல்ல உக்கார வைக்காத அவங்க அப்பமூட்டு சனம். தாலி அறுக்குற சடங்கெல்லாம் செய்ய விடுவாங்களா?”

எழவுக்கடையில ஊர் சனங்களால அவளுக்கு எழுதப்பட்ட நீதி இப்படிதான் இருந்துச்சு. இந்த கொடுமைய தடுத்து நிறுத்த தோணாம தாலி அறுப்பாங்களா இல்லையாங்கற உச்ச கட்ட சீனுக்காக காத்திருந்தாங்க சில பேரு.

மறுமணம்
நடாயிக்கு இன்னொரு கலியாணம் செஞ்சு வச்சா அவ வாழ்க்கை சரியாகுமின்னு பெத்தவங்களுக்கு தெரியாதா?

இரவு ஏழு மணிக்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செஞ்சதும் மொதோ தாரத்துக்கு தாலியறுக்கும் சடங்கு ஆரம்பமாச்சு. “சின்ன பொண்ணு பாவம், எதுவும் செய்ய வேண்டாம். மனசாட்சி வேணும் நமக்கும். காலையில தாலி கட்டி சாயந்தரம் அறுக்குறது ரொம்ப கொடுமை. இன்னும் ரெண்டு நாள் போகட்டும். அந்தப் பொண்ணையே கழட்டிட சொல்லலாம்”னு கூடியிருந்த ஆம்பளைங்க முடிவெடுத்தாங்க. அந்த அசிங்கத்த பெரிய மனசு பண்ணி விட்டுக் கொடுத்ததா நெனச்சாய்ங்க அந்த பெரிய மனுசனுங்க.

நடாயி நெலைமை அந்தப் பெரிய மனுசங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு வருமா? வந்தாலும், இதே மாதிரித் தான் பெருந்தன்மையா பேசுவாங்களா? ரோசங்கெட்ட புழுவுக்கும் கூட நாலு குத்து சேர்த்துக் குத்தினா கோபம் வருமே. அந்த கோபங்கூட சம்பந்தப் பட்டவங்களுக்கு இல்லையே. நடந்தது கல்யாணமும் இல்ல, அவ பொண்டாட்டியாவும் இல்லன்னு ஊருக்கே தெரிஞ்சு தான் இருந்துச்சு. ஆனாலும் செஞ்ச தப்புக்கு விதியை காரணம் காட்டி அமைதியா இருந்தது தான் ஊர்க்கார பெரியமனுச நியாயம்.

கூடப் பொறந்தவன் செத்துப் போன இழப்பை விட அவன் விட்டுப் போன கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து பெரிசாச்சே. செத்தவனோட தம்பிக்காரனுக்கு போஸ்டரடிக்கிற செலவை விட அண்ணங்காரனால வரவு பல மடங்கு அதிகம். அதனால தான் வருசத்துக்கு ஒருதரம் தன் துக்கத்த வண்ண வண்ணமா கண்ணீர் அஞ்சலி போஸ்டறடிச்சு ஊரு பூரா வளைச்சு வளைச்சு ஒடறான் தம்பிகாரன்.

நடாயி வாழ்க்கைக்கு சவக்குழி தோண்டி நாலு வருசமாச்சு. அவளுக்கு ஏதாவது வழி செய்யறதா நெனச்சு சொத்துல பங்கு வேணுன்னு கோர்ட்ல கேஸ் போட்டாங்க. எதுவும் சட்ட பூர்வமா நடக்கல. கட்டபஞ்சாயத்து பேசி ஒன்ட்ர லச்சம் பணம் கொடுத்து ஒதுக்கி விட்டுட்டானுங்க. நடாயிக்கு இன்னொரு கலியாணம் செஞ்சு வச்சா அவ வாழ்க்கை சரியாகுமின்னு பெத்தவங்களுக்கு தெரியாதா? ஆனா, திரும்பத் திரும்ப ஊரு, மரியாதை, சாதி, சனமுன்னு அவ வாழ்க்கையை கெடுத்த சமூகத்துக்கு பயந்து அதுக்குள்ளேயே இன்னமும் சுத்தி வாராங்க. அவங்க ஊருல விதவைங்கன்னா ஆயுசு பூரா அடக்கவொடுக்கமா ஆயுள் கைதியா சுத்தி வரணும்.

நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?

– சரசம்மா

(உண்மைச் சம்பவம்)