Friday, July 3, 2020
முகப்பு சமூகம் சினிமா நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல்

நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல்

-

சினிமா நேர்காணல் – 4

ஜூலை 2014-ல் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஒலிப்பதிவு கோப்பை கேட்டு எழுதி, தொகுப்பதற்கு உடன் நேரம் கிடைக்கவில்லை என்பதால் இந்த தாமதம். சினிமா தொழிலாளிகள் மற்றும் துணை நடிகர்கள் அதிகம் வாழும் சாலிக்கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்கிறார் அமிர்தலிங்கம். சென்னையில் குடியேறி பல வருடங்கள் ஆகியிருந்தாலும் நெல்லை வழக்கு மொழியே அவருக்கு சரளமாக வருகிறது. பேச்சில் மட்டுமல்ல, இன்னமும் நகரத்து மனிதர்களின் செயற்கைத்தனம் அண்டாத எளிய கிராமத்து மனிதராகவும் இருக்கிறார். அவர் பா.ஜ.கவில் இருப்பதாக கூறினாலும் அது இன்னமும் அவருக்கு ஒட்டாத வேடமாகவே எங்களுக்கு தோன்றியது.

நேர்காணலை படியுங்கள்.

_____________

னக்கு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு அருகில் உள்ள நாடார் குடியிருப்பு தான் சொந்த கிராமம். விவசாய பின்னணி. 1970 ல் சென்னைக்கு வந்து பலசரக்கு கடை வைத்திருந்த எனது அண்ணனிடம் அம்மாவால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டேன்.

கோடம்பாக்கம் பகுதியில் கடை திறந்த போது சினிமா மற்றும் நாடகத் துறை தொடர்பு கிடைத்தது. சிறுவயதியேலேயே நாடகத்தில் ஆர்வம் உண்டு. அதன் தொடர்ச்சியாக இங்கே அமெச்சூர் வகை நாடகங்களை மேடைகளில் நடிக்க ஆரம்பித்தேன்.

பூக்கடை காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சௌந்தரி மகால் என்ற இடம் தான் எனக்கு முதல் மேடை. அதில் தியாராஜ பாகவதர் போன்றவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். சென்னை அருங்காட்சியக அரங்கம், நடிகர் சங்கம், வாணி மகால் என தொடர்ந்து பல இடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம்
நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம்

வினவு : முதல் நாடகம் என்ன? என்ன பாத்திரத்தில் நடித்தீர்கள்?

அமிர்தலிங்கம் : நீண்ட காலமாகி விட்டதால் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எனக்கு முதலில் சினிமாவில் கிடைத்த பாத்திரம் பிச்சைக்காரன். (சிரிக்கிறார்) அப்படி ஒரு பாத்திரம் முதல் படத்திலேயே கிடைப்பது அதிர்ஷ்டம் என்றுதான் சொன்னார்கள். அதாவது நமக்கும் அந்த கலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக அர்த்தமாம். ஆனால் காலப்போக்கில் சினிமாவில் ஒன்றும் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் அது ஒரு வேடம்தானே.

வினவு : நாடகத்திலிருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

அமிர்தலிங்கம் : 1980-ல் வந்தேன். கே.ஏ கிருஷ்ணன் என்ற இயக்குநர் அப்போது அசோகன் அண்ணன், நம்பியார் அண்ணன், என்னத்த கண்ணையா அண்ணன் ஆகியோரை வைத்து தஞ்சாவூர் மேகம் என்று ஒரு படம் பண்ணினார். அவர் பழம்பெரும் இயக்குநர் சாந்தாராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இதுல அசோகன் அண்ணனுடைய கையாளாக நடிச்சேன்.

அப்போது மெய்வழிச் சாமி என்று ஒரு கடத்தல் தொழில் செய்யும் சாமியார்கள் இருந்து வந்தனர். அசோகன் அண்ணன் சித்து வேலையெல்லாம் செய்வார். நம்பியார் அண்ணன் அதெல்லாம் செய்ய மாட்டார். இரண்டு பேருமே சாமியார்கள்.

வினவு : வில்லன் பாத்திரம் என்பதால் உடம்பை நன்றாக பராமரிப்பீர்களா?

அமிர்தலிங்கம் : அப்படியெல்லாம் இல்லை. அந்தப் படத்திலேயே காமெடி சீன்தான் எனக்கு. படமே காமெடி படம் தான். அப்போதெல்லாம் மீசையெல்லாம் வளர்க்கல. திருமணமும் ஆகவில்லை. 1992-லதான் கல்யாணம் செய்தேன்.

வினவு : அந்தக் காலத்துல நீங்க சினிமாவுக்கு வந்ததை உங்க வீட்டுல எப்படிப் பார்த்தாங்க?

அமிர்தலிங்கம் : என்னோட அண்ணன்மார்கள் எல்லாரும் விரட்டி விரட்டி அடிச்சாங்க. நமக்கு சம்பந்தமில்லாத துறை எதுக்குடான்னு கேட்டாங்க. எங்க அம்மா மட்டும் தான் எல்லோரும் கடை வியாபாரம்னு போறாங்க, நீ போய் முயற்சி செஞ்சு ஜெயிச்சுக் காட்டுன்னாங்க.

வினவு : மத்தவங்க சினிமாவ அப்படி வெறுக்க காரணம் என்ன?

அமிர்தலிங்கம் : பணத்தை போட்டு இழந்து விடக் கூடாதுன்னு ஒரு பயம். வீண் பழக்க வழங்கங்களுக்கு உள்ளாகி நடத்தை மாறி விடக் கூடாதுன்னு இன்னொரு பயம். அப்போ சினிமாவில் இருப்பவர்களை கூத்தாடிகள்ன்னுதான் பொதுவாக நடத்துவாங்க. எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகுதான் இந்த துறைக்கு மதிப்பு வந்தது. நடிகர்களை ஒரு ஆளாக மதிக்கிறது அப்புறம்தான். முன்னாடி கிராமப்புறங்கள்ல சினிமா, நாடகத்துல நடிக்கப் போனா, கூத்தாடப் போறானா, ஆடப் போறானா, நடிக்கப் போறான்னு கேவலமாத்தான் பார்த்தாங்க.

வினவு : ஆரம்பத்துல சினிமாவுல நீங்க கஷ்டப்பட காரணம் வாய்ப்புகள் நிறைய இல்லேன்னா?

அமிர்தலிங்கம் : ஆமா. அப்போ சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்தது. இப்போது தான் வீதி வீதியாக வந்து விட்டது. ஏவிஎம், ரோகிணி போன்ற ஸ்டூடியோக்களை தாண்டி உள்ள போக முடியாது.

படிப்பு, தகுதியை விட நாடக அனுபவத்தைத்தான் எதிர்பார்ப்பாங்க. வசனங்களை பாவனையோடு உச்சரிக்கணும். கூச்சத்துடன் நடிச்சா ஃபிலிம் விரயம். ஒவ்வொரு அடியும் நூற்றுக்கணக்கான ரூபாய்கள். அவ்வளவு சீக்கிரம் அதனை வீணடிக்க மாட்டாங்க.

அதனால் மேடை அனுபவங்களை எதிர்பார்த்தாங்க. எனக்கு முதலில் ஓரிரு டயலாக்குகளை தருவார்கள். ஒரே டேக்கில் அதனை சிறப்பாக செய்து முடித்து விட்டால், அடுத்த சீன் வரும்போது ‘ஏம்பா! இவன் வசனத்தை சரியாக பேசுவான்’ என்று சொல்லி வாய்ப்பு தருவாங்க. வந்தவுடனே யாருக்கும் வாய்ப்பு கிடையாது.

இன்றைக்கு டிஜிட்டல் வந்த பிறகு எத்தனை தடவை வேண்டுமானாலும் அழித்து அழித்து எடுத்துக் கொள்ளலாம். ஒரே சிப் தான்.

வினவு : வாய்ப்பில்லாம வாழ்க்கையை எப்படி நடத்துனீங்க?

அமிர்தலிங்கம் : அப்ப ஐம்பது ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விசயம். ஒரு நாள் சம்பளம் அது. அதுவும் உடனே கிடைக்காது. முன்னாடி சூட்டிங்கிறது பத்து பதினைந்து பேருடன் முடிந்து போகும். இப்போ அந்த நாடக பாணியைத் தாண்டி விரிவடைந்து விட்டதால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு உண்டு. முன்னர் கல்யாண சீன் என்றால் இரண்டு பொம்மைக்கு மாலையை மாந்நி, நேரா படுக்கையறை காட்சிக்கு போயிருவாங்க. கல்யாண சூழலை காட்ட மாட்டாங்க. இப்ப அதை காட்டுவதால் 300 பேருக்கு வேலை கிடைக்கிது. அப்போதுள்ள படங்கள் ஒரு வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி இப்ப உள்ள சீரியல் மாதிரி இருக்கும்.

இதுக்கு செலவு குறைவாக இருக்கணும்கிறது ஒரு காரணம். இரண்டாவது, ஊடகங்கள் அதிகமாக இல்லை. பெரிய நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி இவங்கல்லாம் அவுங்க படத்துல நடிக்க வைக்க தனி குழுவையே வெச்சிருப்பாங்க. மத்தவங்க நடிக்க முடியாது. இத விட்டா மத்த சிறு நடிகர்கள் படங்களில் தான் நடிக்க முடியும்.

எண்பதுகளில் எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு மார்க்கெட் போய், ரஜினி, கமல், விஜயகாந்த்ன்னு அடுத்த தலைமுறை வந்துவிட்ட காரணத்தால் நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

வினவு: எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் தங்களுக்கென தனியான நடிகர் கோஷ்டிகளை வைத்திருந்தது ஏன்? ஏதேனும் ரகசியங்களை பாதுகாக்கவா?

அமிர்தலிங்கம் : உண்மையில் சினிமாவை ரகசியமா இருட்டுலதான் பராமரிக்கணும். இருட்டுல ஜோலிப்பது தான் சினிமா. அதுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டால் ஒன்னுமில்லைன்னு ஆகிரும். ‘நடிகர்களை தெருவிலே போய் உட்கார வைத்து படப்பிடிப்பு நடத்தாதீர்கள்’ ன்னுதான் எம்ஜிஆரே சொல்வார். ஏன்னா படத்தில் ஆஜானுபாகுவாக தெரியும் பல நடிகர்கள நேரில் பாத்தால் அப்படி இருக்க மாட்டாங்க.

உதாரணமாக நான் கொஞ்சம் குள்ளம். அசோகன் அண்ணன் ஆறடி உயரம். அவரது தோள்பட்டை உயரத்துக்குத்தான் இருப்பேன். எம்ஜிஆரும் என் உயரம் தான். ஆனா எம்ஜிஆரையும் அசோகன் அண்ணன் உயரத்துக்கு இருக்குமாறு வசதியான கோணத்தில் இருந்து கேமராவில் படம் பிடிப்பாங்க. அதுதான் ரகசியம். அந்த ரகசியத்தை வெளியே கசிய விட்டா மக்களுக்கு சினிமா கவர்ச்சியே போயிரும்.

வினவு : இப்படி அவர்கள் தனியாக குழுக்களை வைத்திருப்பதால் சினிமாத் துறையில் ஜனநாயகமே இருக்காதே? உங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காதே!

அமிர்தலிங்கம் : இதனால் தான் சினிமாவுல எல்லாருக்கும் தனித்தனியா சங்கம் துவங்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு துணை நடிகருக்கும் தினசரி மூன்று ரூபாய் அல்லது நான்கு ரூபாய் என கணக்கிட்டு படப்பிடிப்பு முடியும்போது பணத்தை செட்டில் பண்ணி விடுவார்கள். அப்போதே பதினைந்தாயிரம் பேர் வரை உறுப்பினர்களாக இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் இங்குதான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இங்கு யூனியன் பலமாக இருந்தது.

மூவாயிரம் பேர் வரை ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை இருந்தனர். கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு இருநூறு பேர் வரை எடுத்துக் கொள்வார்கள். இதுபோக நாடக நடிகர்கள் வேறு இருந்தனர். டயலாக் பேசுவதற்கும், சூழலில் நடிப்பதற்கும் என்று தனித்தனியாக பிரித்து எடுத்து விடுவார்கள்.

டயலாக் பேசும் ஆர்ட்டிஸ்டுகளான நாங்கள் சம்பளம் இவ்வளவு என்று பேசி முடிவுசெய்து விட்டு அதன் பிறகுதான் போவோம். சூழலுக்கு (அட்மாஸ்பியர் நடிப்பு – கூட்டத்தோடு மட்டும் காட்சியளிப்பது, வசனம் பேசவேண்டியிருக்காது) நடிப்பவர்களுக்கு யூனியன் முடிவு செய்திருக்கும் சம்பளம் தான் கிடைக்கும். இப்போது 300 அல்லது 350 ரூபாய் ஒரு கால்ஷீட்டுக்கு சம்பளம் வைச்சிருக்காங்க. ஒரு கால்ஷீட்டுன்னா எட்டு மணி நேரம்.

டயலாக் ஆர்ட்டிஸ்டு வேறு, சூழல் ஆர்ட்டிஸ்டு வேறு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டு வேறு. இப்போது நானே ஒரே நாளில் இரண்டு மூன்று சீன்கள் நடிக்க நேர்ந்தால் அதற்கு சம்பளம் பேசிக் கொண்டு, கம்பெனிக்கு ஏற்ப தொகையை நிர்ணயம் செய்து பெற்றுக் கொள்வோம்.

வினவு : நீங்கள் என்ன நோக்கத்திற்காக திரைப்படத் துறைக்கு வந்தீர்கள்?

அமிர்தலிங்கம் : நான் இத்துறைக்கு வந்தது நடிப்பதற்காக வரவில்லை. கதை, பாட்டு எழுத வேண்டும் என்ற படைப்பாற்றல் ஆர்வம் காரணமாகத்தான் வந்தேன்.

வினவு : கதை, கவிதை எல்லாம் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறீர்களா?

அமிர்தலிங்கம் : ஆம், அந்த நோக்கத்தில் தானே சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அந்த கதை கவிதையெல்லாம் தூக்கிச் சுமந்து கொண்டு செல்ல கஷ்டமாக இருந்தது. ஏனெனில், அப்போது கதை இலாகா என்று ஒன்றை வைத்திருந்தார்கள். கதையை விலை கொடுத்து வாங்கி அவர்கள் வசனம் எழுதிக் கொள்வார்கள். அதற்கு பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ஒருவரே செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்போது நான் போன இடங்களிலெல்லாம் இயக்குநர்கள் ‘என்னிடமே நாற்பது கதைகள் இருக்கின்றன. இதை விட்டுவிட்டு நான் உன்னிடம் எப்படி வாங்குவது?’ என்று சொல்லி விட்டனர்.

அப்புறம் கதைகள் அவ்வளவு சீக்கிரம் விலை போகாது என்று தெரிந்த பிறகு, சினிமாவில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறித்தனம் இன்னமும் இருக்கவே, கே.ஏ. கிருஷ்ணன் அவர்கள் தான் ‘நான் எடுக்கும் படத்தில் அசோகனோடு ஒரு ஆளாக உன்னைப் போட்டு விடுகிறேன். உன் தலையெழுத்து நல்லாயிருந்தா அதிலும் பிரகாசிக்கலாம்’ என்று அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.

வினவு : உங்களைப் போன்ற கிராமப்புற பின்னணி கொண்டவர்கள் ஏன் சினிமாவில் கதாநாயகர்களாக மாற முடியவில்லை?

அமிர்தலிங்கம் : பாரதி ராஜா இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மதுரையிலிருந்து பாண்டியனை கொண்டு வந்தார். சந்திரசேகர் கூட தெற்கேயிருந்து கிராம்புறத்திலிருந்து வந்தவர்தான். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டத்தில் மாற்றம் வரும் சார். இப்போது அரசியலைப் போலவே சினிமாவிலும் வாரிசு முறை வந்து விட்டது. வாரிசு மட்டுமின்றி, பணபலமும் அவசியம்.

என்னைப் போன்றவர்கள் ஜெயிப்பது கஷ்டம். எனக்கு கூட வாரிசு இருக்கிறான். ஆனால் வசதியுள்ள மகனாக இருப்பதுதான் முன்நிபந்தனை. என் பையனை வைத்து படமெடுக்க பத்து கோடி ரூபாய் தேவை. அது என்னிடம் இல்லை. அடுத்து யாருடைய பிள்ளை என்ற லேபிளை மக்களும் எதிர்பார்க்கிறார்கள். முதலீட்டுக்கும் இது முன்நிபந்தனை

வினவு : திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் சொல்வார்களே?

அமிர்தலிங்கம் : உதாரணமா ரஜினிகாந்த் ஒரு பெரிய ஸ்டாராகினார் என்றால், ஓரிரு காட்சிகளில் பாலசந்தர் வாய்ப்பை கொடுத்தார். அவரிடம் ஒரு தனித்திறமை இருந்த காரணத்தால் தான் சின்ன பாத்திரத்தில் சிகரெட்டை லாவகமாக தூக்கிப் போட்டு பிடித்து ஸ்டைல் காட்டினார்.

வினவு : அந்த திறமை பெங்களூருவில் நடத்துனராக இருந்து ஒரு தொழிலாளியாக இருந்து வளர்த்துக் கொண்டது. இன்றைக்கு வாரிசுகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்று பத்து கோடி ரூபாய் வரை முதலீடு செய்கிறார்கள்?

அமிர்தலிங்கம் : இன்றைக்கு பணம் தான் முன்னால் நிற்கிறது. அன்றைக்கு டயலாக் பேசி நடிப்பவர்களை நாடக கம்பெனிகளில் இருந்து தேர்ந்தெடுத்து சினிமாவில் நடிக்க வைத்தார்கள். சிவாஜி கணேசன் இப்படி உயிரோட்டமாக, உரத்த குரலில் பேசி நாடகங்களில் நடித்து அதன் மூலம் தான் சினிமாவுக்கு வந்தார். நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே வெறும் கணேசனாக இருந்த அவரைப் பாராட்டி சிவாஜி பட்டத்தை கொடுத்தவர் பெரியார்.

இன்றைக்கு நாடகம் என்பதே இல்லை. பார்க்கவும் ஆட்கள் இல்லை. நாடகத்தில் நடிப்பது சினிமாவை விட கஷ்டம். அதில் கட் எல்லாம் கொடுக்க முடியாது. பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்வதோடு, அதன் குணாதிசயங்களையும் உள்வாங்கி நடிக்க வேண்டும். எதிரே உள்ளவன் ஏதாவது வசனத்தை விட்டுவிட்டாலும் சாமர்த்தியமாக பேசி நடிக்க வேண்டும். அப்படி திறமையானவர்களைத்தான் அப்போது சினிமாவுக்கு நாடகம் மூலமாக எடுத்தார்கள். இப்போதுள்ள சினிமாவில் அத்தகைய திறமையில்லாதவர்களையும் திறமையுள்ளவர்கள் போல காட்ட முடியும்.

வினவு : பெரியார் கூட்டங்களை நேரில் கேட்டிருக்கிறீர்களா?

அமிர்தலிங்கம் : நான் சென்னைக்கு வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெரியாரும் ராஜாஜியும் இறந்து விட்டார்கள். எனவே அவர்களது கூட்டங்களை கேட்ட அனுபவம் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு 75ல் இறந்த காமராசரையே சந்திக்க முடியாமல் போய் விட்டது.

வினவு : இதுவரை எத்தனை படங்களில் நடித்திருப்பீர்கள்?

வடிவேலுவுடன் நடிகர் அமிர்தலிங்கம்
வடிவேலுவுடன் நடிகர் அமிர்தலிங்கம்

அமிர்தலிங்கம் : கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. 450 முதல் 500 படம் வரை பண்ணியிருப்பேன். சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி, செந்தில் உடன் நிறைய படங்களில் நடித்தேன். பிறகு வடிவேல் சாருடன் நடித்தேன். அவர் வந்த பிறகு தான் காமடி சேனல் என்றே ஒன்று வந்தது.

வினவு : வடிவேல் போன்ற காமெடி நடிகர் திமுக-வுக்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் பட வாய்ப்பு மறுக்கப்படுகிறதே. அதே நேரத்தில் பெரிய கதாநாயகர்கள் அரசியல் கட்சி எனப் போனால் ஏற்றுக் கொள்கிறார்களே! ஏன் இந்த பாகுபாடு?

அமிர்தலிங்கம் : அவருக்கு உள்ளுக்குள் நிறைய பிரச்சினை இருந்தது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இது. அவருக்கு கொஞ்சம் சொத்துப் பிரச்சினை இருந்தது. ஏமாற்றியதாகவும், நீதிமன்ற வழக்கு என்று வந்து விட்ட காரணத்தால், உட்கார்ந்து இரண்டு ஆண்டுகளில் இவற்றை சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாக என்னிடம் சொன்னார். நடிப்பு நடிப்பு என்று போய்விட்டதால் பணம் எங்கே போகிறது, அதன் பிறகு என்ன ஆகிறது, தெரியவில்லை என்று கவலைப்பட்ட அவர் அவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டார்.

அதன் பிறகும் வந்து தனியாக காமெடி டிராக் பண்ணுவதற்கு பதிலாக கதாநாயகனாக முதலில் இரண்டு படங்கள் பண்ணிய பிறகு அதனை தொடரலாம் என்று தான் முடிவெடுத்தார். தெனாலிராமன் படம் கூட பண்ணினார். அப்போதே நிறைய கம்பெனிகள் அவரிடம் அணுகிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்தான் மறுத்து வந்தார். ஆனால் வெளியே அவருக்கு படமில்லை என்றவுடன் மக்கள் இப்படி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நான் கூட பாஜக உறுப்பினர்தான். அவர்களது மேடைகளில் கூட ஏறியுள்ளேன். அரசியல் என்பது கருத்துப் பரிமாற்றம் தானே. யாரைப் பற்றியும் தப்பாக பேசக் கூடாது. அவ்வளவுதானே! கொள்கையை, கருத்தை சொன்னால் பிரச்சினை வராது.

வினவு : பெரிய நடிகர்கள் உங்களைப் போன்ற துணை நடிகர்களை எப்படி பார்க்கிறார்கள்? எப்படி நடத்துகிறார்கள்?

அமிர்தலிங்கம் : நான் யாரிடமும் காசு எதிர்பார்த்து இதுவரை போனதில்லை. சகஜமாக பழகுவார்கள். என்னை எல்லோரும் நன்றாக மதிப்பார்கள். மற்றபடி அவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள். பிறருக்கு போதுமா போதாதா என்றெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மற்றபடி ஈகை என்பது இயற்கையாக உள்ளுக்குள் இருந்து வர வேண்டும்.

மற்றபடி சகஜமாக பேசினால் தான், இயக்குநர் டயலாக்கை ஒன்றாக உட்கார வைத்து பேசினால் தான், அனைவரும் ஒத்துழைத்தால் தான் காட்சி நன்றாக அமையும்.

வினவு : தற்போது உங்கள் சினிமா வாழ்க்கை எப்படி போகிறது?

அமிர்தலிங்கம் : எனக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் வரை வேலை இருக்கும். சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் தான் வேலை இருக்கும். சில சமயம் இல்லாமலும் இருக்கும். அப்படி இல்லாத காலங்களில் டப்பிங் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளை ஒருங்கிணைத்து காண்டிராக்டு எடுத்து வேலை செய்து கொடுப்பேன். தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும் இந்த வேலைகளை 1995 முதல் செய்து வருகிறேன். இரண்டுக்குமே ஒரே யூனியன்தான்.

நான் வரும்போது யூனியனில் சேருவதற்கு ரூ.100 தான் கட்டணம். இப்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனெனில் டப்பிங் பேசுவதற்கு இப்போது ஒரு கால்ஷீட் சம்பளம் ரூ.3000. எட்டு மணி நேரம் தான் என்ற போதிலும், முன்னர் போல ஐந்து மைக் வைத்து லூப் முறையில் ரிக்கார்டு செய்த காலம் போய் இப்போது தனித் தனியாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து பேசி விட்டு போய் விடலாம் என்று ஆகி விட்டது. எனவே வேலை விரைவில் இப்போது முடிந்து விடும். ஆனாலும் அரை மணி நேரத்தில் வேலை முடிந்தாலும் மூவாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விடலாம்.

ஒரே நாளில் மூன்று நான்கு கால்ஷீட் கூட கிடைக்குமென்றால் அது உங்களது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் நிரந்தரமற்ற ஒரு துறையில் இருந்து கொண்டு நிரந்தரமாக வருமானம் நன்றாக பெற முடியுமெனில் அது கட்டாயம் இறைவன் அளித்த அதிர்ஷ்டம்தான்.

amirthalingam (6)வினவு : டப்பிங்கிற்கு என்ன தகுதி?

அமிர்தலிங்கம் : அதில் கொஞ்சம் திறமை வேண்டும். அதாவது உயிரற்ற பொம்மைக்கு உயிர் கொடுக்கும் கலை அது. மாடுலேசனில் பேச வேண்டும். வசனங்களை மூளையில் உள்வாங்கி தன்னை மறந்து அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். பேச்சில் ஏற்ற இறக்கும் மிகவும் முக்கியம். வட இந்தியாவில் இருந்து வரும் பல நடிகர்களையும் பின்னால் இருந்து பேசி வாழ வைத்தவர்கள் தமிழ் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான். இவர்களைப் பற்றி மக்களுக்கு எதுவும் பெரிதாக தெரியாது.

வினவு : வாய்ப்புகளை நீங்களே தேடிப் போவீர்களா?

அமிர்தலிங்கம் : ஒரு காலத்தில் நாங்கள்தான் தேடி அலைந்தோம். அப்போதெல்லாம் படபூஜை என்றால் ஏவிம், வாகிணி எல்லாம் பயங்கர அலங்காரமா இருக்கும். செய்தித் தாளில் விளம்பரமும் நிரம்பியிருக்கும். சினிமா இப்போது எங்கே என்றே தெரியவில்லை. காரணம் ஸ்டுடியோவும் இல்லை. இப்போது ஏவிஎம் இன் பூமி உருண்டை மட்டும் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது, சினிமா இருந்த்து என்ற தடயத்திற்காக. கற்பகம், அருணாச்சலம் எல்லாம் இடித்து பிளாட் கட்டி விட்டார்கள். வாஹிணியும் இல்லாமல் போய் விட்டது. ஏவிஎம் மட்டும் தான் இருக்கிறது. பிரசாத்தில் கூட இரண்டு தளங்களில் மட்டும் தான் சினிமா.

வினவு : ஆனால் தொழில் வளர்ந்துள்ளதே!

அமிர்தலிங்கம் : உண்மைதான். இப்போது யாரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சேர்வதில்லை. காரணம் இப்போது படப்பிடிப்பு என்பதே மதுரை, பொள்ளாச்சி எனப் போய் விட்டது. அங்கிருப்பவர்களை நடிக்க வைத்து படமெடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விவசாய கூலிகள். அங்கே 75 ரூபாய் சம்பளம். ஆனால் இங்கே நூற்றியம்பது ரூபாய் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பதால் இதற்கு எளிதில் போய் விடுகிறார்கள். இதனை எதிர்த்து யூனியன் ஒன்றும் பண்ண முடியாது. சிதறிப் போய்விட்ட தொழிலை ஏரியா தாண்டி போய் அதிகாரம் பண்ண முடியாது.

வினவு : ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து கொண்டு குடும்பம், இரண்டு பிள்ளைகள் என குடித்தனமாக வாழ்வது சாத்தியமா?

அமிர்தலிங்கம் : அது மிகவும் கஷ்டம். இன்றைய பொருளாதார வளர்ச்சி நிலைமையில் மாதம் குறைந்தது ஒரு முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் தான் வாடகை, குழந்தைகள், படிப்பு என குடும்பம் ஒன்று வாழ முடியும். ஆனால் சினிமாவில் முப்பதாயிரம் சம்பாதிப்பது என்பது அசாத்தியமானது.

எனவே துணை நடிகர்கள் அனைவரும் சூட்டிங் இல்லாத காலங்களில் கல்யாண காலங்களில் பந்தி பரிமாறுவது, காய்கறி வெட்டுவது என்ற வேலைகளுக்கு போய்விடுவார்கள். எல்லாக் காலங்களிலும் சூட்டிங் இருப்பது எப்படி சாத்தியமில்லையோ அது போலத்தான் கல்யாணம் இருப்பதும் சாத்தியமில்லை. அப்போது என்ன வேலை கிடைக்கிறதோ அதற்கு போய்க் கொள்ள வேண்டியது தான். இன்றைய நிலைமையில் நான்கு வகையான வேலைகள் செய்தால் தான் பிழைக்க முடியும்கிறது நிலைமை.

வினவு : கோச்சடையான் போன்ற திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகிறது. 50 கோடி 100 கோடியில் தமிழ் சினிமா வியாபாரம் நடக்கிறது. இது நீங்கள் சொல்வதற்கு எதிராக இருக்கிறதே?

அமிர்தலிங்கம் : அது வேற. திரையரங்கிற்கு செல்வது. எத்தனை கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கினாலும் அதனை யாரும் யாருக்கும் பகிர்ந்து தரப் போவதில்லை. அவர்கள் வாங்கிய பணமூட்டையைக் கொண்டு உலக நாடுகளை சுற்றி வருவார்கள். நமக்கு தர வேண்டும் என்று ஏதும் கட்டாயமிருக்கிறதா என்ன? அப்படி யாரும் தருவதில்லை.

யாராவது கடைகோடி நடிகர்கள் பெரிய நடிகர்களுக்கு பரிச்சயமாகி இருந்தால் மாத்திரம் ஏதாவது பிள்ளைகள் படிப்பதற்கு உதவி கேட்டால் கிடைக்கும். எல்லோருக்கும் அது கிடைத்து விடாது.

என்னை விட வெளிச்சத்திற்கு வராத சிறு நடிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஓடிவிட்டால் தப்பித்துக் கொள்வார்கள். மற்றபடி அவர்களது வாழ்க்கையை பற்றி சொல்ல என்ன இருக்கிறது (கையை விரித்து பெருமூச்சு விடுகிறார்). இன்றில்லாவிட்டாலும் நாளைக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற நம்பிக்கைதான் இத்தனையாண்டுகளையும் ஓட்டி விட்டது. இனிமேல் வேறு துறைக்கும் போக முடியாது. சரி இதையே தொடர்ந்து முயற்சி செய்து பார்ப்போம் என்று தொடர்கிறேன்.

வினவு : இன்றைக்கு கம்ப்யூட்டர் ஆபீசு, பெரிய கட்டிடம், அபார்ட்மெண்ட் என சென்னையே மாறி விட்ட நிலைமையில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளே சுத்தமாகவும், சிவப்பாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைமை தானே. அப்படியானால் தமிழர்களது நிறத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் இல்லையா?

அமிர்தலிங்கம் : ஆமாம். கிராமபுறங்களுக்கு போகின்றவர்கள் அங்கிருக்கும் ஜனங்களை வைத்தே படம் எடுத்து விடுகிறார்கள். நகரம் சார்ந்த கதை பண்ணும் போது தான் சேட் மற்றும் இந்திப் பசங்களை தேடுகிறார்கள். இப்போது வரும் கதாநாயகர்களே அப்படி கிளாமராக முடியெல்லாம் வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த சேட் பசங்களுக்கு சம்பளமும் அதிகம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாவிடிலும் அண்டர்டேக்கனில் தான் வருகிறார்கள். ரிச் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர்.

பெரிய நட்சத்திர விடுதியில் பல தரப்பட்ட மக்கள் இருப்பதாக அட்மாஸ்பியரை காட்ட வேண்டுமானால் அப்படி செய்து தான் ஆக வேண்டும். அங்கு போய் சாதாரண ஆட்களை நீங்கள் வைக்க முடியாது.

வினவு : நகரம் சார்ந்த திரைப்படங்கள் அதிகமாக வருவதால் மாநிறமாக இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் சினிமாவில் இனி இடமில்லை என்று சொல்லலாமா?

அமிர்தலிங்கம் : அது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். இன்று வரை தமிழ் கதாநாயகர்கள் எத்தனை பேர் வந்துள்ளார்கள்.? ஆரம்பத்திலிருந்தே வெளியில் இருந்து தான் வந்துள்ளார்கள். ஆனால் அப்படி வந்தவர்களும் நன்றாக துறையில் நடித்து பிரகாசித்துள்ளார்கள்.

வினவு : இத்துறைக்கு வந்து எத்தனை வருடம் ஆனது? என்ன சம்பாதிச்சிருக்கீங்க?

அமிர்தலிங்கம் : நாற்பது ஆண்டுகள் ஆகிறது. மூன்று பசங்களை படிக்க வைத்திருக்கிறேன். வாடகை வீடுதான். இன்றைக்கு விலைவாசி எங்கேயோ போய் விட்டது. அன்றைக்கு வாங்கிய ஐம்பது ரூபாயின் மதிப்புதான் இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய்க்கும். ஆனால் அந்த ஐயாயிரம் ரூபாய் பெரிதில்லை. வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. இந்த வீட்டின் வாடகை 7200 ரூபாய்.

வினவு : உங்களது மாத செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அமிர்தலிங்கம் : மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை தேவை. நான்கு பேருக்கு போனை போட்டு தேடினால் இந்த தொகை தேறும். உட்கார்ந்தால் எல்லாம் கதை வேகாது. கடனும் வாங்கித்தான் ஆக வேண்டும். கடனில்லாமல் யார் இருக்கிறார்கள். இந்தியாவே கடன்கார நாடாக இருக்கிறது. அப்புறம் ஒரு சாதாரண இந்தியன் கடன் வாங்காமல் இருக்க முடியுமா?

வினவு : இத்தனையாண்டு கால போராட்டத்திற்கு பிறகும் குறைந்தபட்ச தேவைக்காக வாய்ப்பு தேடி அலைய வேண்டியிருப்பது உங்களுக்கு கோபத்தை தூண்டவில்லையா?

அமிர்தலிங்கம் : அதான் முதலிலேயே சொன்னேன். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று முதலிலேயே போயிருக்க வேண்டும். எதையாவது பண்ணி பிக் அப் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தப் பழத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குதித்து குதித்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

வினவு : நேற்று வந்த ஹீரோ பத்து கோடி சம்பாதிக்கிறாரே!

அமிர்தலிங்கம் : ஒரு விசயம் சார். அம்பானியை பார்த்து எல்லோருமே அம்பானியாக ஆசைப்படுவது தப்பு. ஒரு எம்ஜியார் வந்தார், ஒரு சிவாஜி வந்தார் என்பதற்காக எல்லோரும் அப்படி ஆக முயற்சிக்க முடியுமா? ஒரு நாட்டுக்கு ஒருவன் தான் தலைவன். எல்லோரும் தலைவனாக முடியுமா? அந்த அதிர்ஷ்டம், வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறதோ அவன் வாழ்கிறான்.

நீங்க ஏன் அவன் போல வரவில்லை என யாரையும் கேட்காதீர்கள். கடவுள் இருக்கிறானோ இல்லையோ நம் நாடு கேப்பிடலிச நாடு, கம்யூனிச நாடு இல்லை. பத்து முதலாளி இருந்தால் தொன்னூறு வேலைக்காரன்கள் தான் இருப்பார்கள். முதலாளிகளின் ஆதிக்கத்தில் தான் இந்நாடு வாழ்கிறது. ஏன் அந்த பத்து முதலாளிகளில் தொன்னூறு பேர் வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

வினவு : உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது ? இந்த துறையில் நீங்கள் இருப்பதை உங்களது துணைவியார் ஏற்றுக் கொண்டார்களா?

அமிர்தலிங்கம் : 1992 ல் நடைபெற்றது. நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதை சொல்லி தான் திருமணம் நடைபெற்றது. அவளும் பெரிய பணக்கார பின்னணி உடையவள் அல்ல. நம்மைப் போன்ற சாதாரண பின்னணிதான். இதுவரை முகம் சுழிக்காமல் என்னுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

வினவு : பிள்ளைகளை படிக்க வைக்கின்றீர்களா? அவர்களை சினிமா துறைக்கு அனுப்புவீர்களா?

அமிர்தலிங்கம் : இல்லை. நான் அவர்களை படிக்க வைக்கிறேன். எனக்கு சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டதால் படிப்பு கிடைக்காமல் போய் விட்டது. எனது மகளை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படிக்க வைக்கிறேன். ஒரு மகன் 12, இன்னொருவன் 11 படிக்கிறான்.

வினவு : பாஜகவில் எப்போது சேர்ந்தீர்கள்?

அமிர்தலிங்கம் : 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் போய் சேர்ந்தேன். ஏனெனில் பாஜக என்பது கொள்கை ரீதியாகவே ரொம்ப காலமாகவே பிடிக்கும்.

வினவு : பாஜக வின் எந்த கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

அமிர்தலிங்கம் : பொது சிவில் சட்டம் வேண்டும் என்பது எனக்கு பிடிக்கும். இந்து, முசுலீம், கிறிஸ்தவன் என்று தனித்தனியாக பிரித்து இருப்பதால் அது தான் நம்மை அடிமைப்படுத்துகிறது. ஒரு நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.

இந்து மதத்தில் மனைவி உயிரோடு இருக்கையில் இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது. ஆனால் இசுலாமியன் தலாக் சொன்னாலே போதும் என்றுதானே இருக்கிறது. அப்படியில்லாமல் பொதுச் சட்டம் வேண்டும் என்கிறோம்.

இது முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடு. கம்யூனிச நாடு இயற்கையானதல்ல. ஆளானப்பட்ட ரசியாவே உடைந்து போய் விட்டது. உங்களுக்கு தெரியாத விசயமா.

வினவு : இந்து மதத்திற்குள்ளேயே அக்ரகாரம், சேரி என்ற பிரிவினை இருக்கிறது. முன்னொரு காலத்தில் தென்மாவட்டங்களில் கோவில் நுழைவு சாணார்களுக்கு மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் அய்யா வழி தோன்றியது. பொது சிவில் சட்டம் வந்தால் இந்த ஏற்றத் தாழ்வெல்லாம் இந்து மதத்தில் ஒழிக்கப்படுமா?

அமிர்தலிங்கம் : ஒரு காலகட்டத்தில் அப்படியான அடிமைத்தனம் இருந்திருக்கலாம். கல்விதான் இதனை நீக்க முன்வர முடியும். குருகுலம் வைத்து பிராமணர்கள் அன்று படிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் செய்த சிலையோ, அவன் வடித்த கோவிலோ இருக்கிறதா? ராணித் தேனீ போல உள்ளே உட்கார்ந்து கொண்டு தங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவனிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டார்கள். இன்று அந்த அடிமைத்தனத்தை கல்வி வந்து உடைத்திருக்கிறது. அந்தப் புண்ணியம் காமராசருக்கும் சேரும். வெள்ளைக்காரன் காலத்திலும் அவன்தான் ஆட்சி நடத்தினான். கீழ்குடி மக்களால் அப்போது எந்திரிக்க முடியவில்லை.

வினவு : பா.ஜ.கவில் யாராவது சொல்லிப் போய் சேர்ந்தீர்களா? அல்லது நீங்களாகவே போய் சேர்ந்தீர்களா?

அமிர்தலிங்கம் : இல்லை. நானாகத்தான் போய் சேர்ந்தேன். தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தேன். நான் அங்கு ஒரு மேடைப் பேச்சாளனாக இருக்கிறேன்.

amirthalingam (2)வினவு : 2011 தேர்தல் பிரச்சாரத்தில் எத்தனை கூட்டங்களுக்கு போனீர்கள்? எவ்வளவு தொகை கொடுத்தார்கள்?

அமிர்தலிங்கம் : ஒரு பத்து பதினைந்து கூட்டங்கள் போயிருப்பேன். எவ்வளவு கொடுத்தார்கள் என்று வெளியில் சொல்ல முடியாது. சம்பளம் கொடுத்தார்கள். ஒரு கலைஞன் என்ற முறையில் மதித்து சம்பளம் கொடுத்தார்கள். பாஜக வில் சம்பளம் என்று ஒரு முறை கிடையாது. அது ஒரு சேவை மையம் என்பதால் பணத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொல்லி விடுகிறார்கள். வெளியில் தான் தப்புதப்பாக பேசுகிறார்கள்.

வினவு : பா.ஜ.க தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினீர்கள்?

சென்னையில்தான் பேசினேன். நான் ஒரேயொரு விசயத்தைதான் எடுத்து எல்லா கூட்டங்களிலும் பேசினேன். அதாவது திராவிடம் பாரம்பரியம் என்று சொல்வது பொய். அப்படி எந்த மலையாளியும், தெலுங்கனும், கன்னடனும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும். திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர் அவ்வளவுதான். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பதிலாகத்தான் தனது கடைசி திருவாரூர் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் ‘திராவிடம் என்பது தேசிய கீதத்தில் உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தில் உள்ளது’ என்று பதிலாக சொன்னார். இதுவே ஒரு ஏமாற்று தான். மொழிவாரியாக சொல்ல வேண்டியது தானே. உங்களைத் தவிர யாரும் சொல்லவில்லை. திராவிடம் என்று நீங்கள் சொல்ல காரணம் இந்த மக்களை அடிமைப்படுத்தி உங்களது காலடிக்குள் வைத்திருக்க நினைப்பதால் தான்.

வினவு : உங்களை விட பெரிய நடிகர்களுக்கு உங்களுக்கு தெரிந்த அளவுக்கு அரசியல் விபரங்கள் ஓரளவுக்காவது தெரியுமா?

அமிர்தலிங்கம் : எல்லோருக்கும் அரசியல் பிடிக்காது. விஜயகாந்த் உடன் விருத்தகிரி என்ற படத்திற்கு டப்பிங் பண்ணப் போகும் போது பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரிடமும் என்னென்ன கட்சி என்று கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாஜக என்றவுடன், ‘அது மதவாத கட்சி இல்லையா?’ என்றார். ‘அது மதவாத கட்சி என்று பறைசாற்றப்பட்ட கட்சி. அவ்வளவுதான். முசுலீம் லீக் மதவாத கட்சி இல்லையா? கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி மதவாத கட்சி இல்லையா? அவரவர் மார்க்கத்துக்கு ஒரு கட்சி வைத்துக் கொள்ளும்போது இதை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘நீங்கள் சொல்வது சரிதான். மக்களுக்கு அது தெரிய மாட்டேங்குதே’ என்றார் அவர். பிறகு அவரே கூட்டணிக்கும் வந்தார்.

வினவு : அதிமுகவில் கூப்பிட்டால் போய் பேசுவீர்களா?

அமிர்தலிங்கம் : ஒரேயொரு விசயம் தான். பச்சையாக பேசினாலும் அது நியாயமாகவும், தர்மமாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். இந்த நாடு நாசமாகப் போனதற்கு முக்கிய காரணம் திராவிட கழகங்கள். 1970 ல் கருணாநிதி கள்ளுக்கடையை திறந்து 74-ல் மூடி விட்டார். குதிரை பந்தயத்தை ஒழித்தார். பெண்களின் தாலியை அறுத்து நடந்த அதனை மூடிய அவர், கள்ளுக்கடையையும், சாராயக் கடையையும் மூடினார். ஆனால் பிராந்திக் கடை வைத்திருந்தார். அதனை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். பர்மிட் இருந்தால் தான் பிராந்தி தருவார்கள். அதற்கு இவனுக்கு இத்தனை அவுன்சு பிராந்தி தேவை என மருத்துவர் சான்றிதழ் தர வேண்டும். சும்மா போய் எல்லாம் வாங்க முடியாது.

கள்ளச் சாராயம் என்பது மது ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அதில் வெட்டு குத்து நடப்பது தனிக்கதை. 1983-ல் தரும்புரியில் 165 பேர் கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனார்கள். அந்த மாவட்டத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சுண்டு விரல் போன்ற தரும்புரியின் காயத்திற்கு தமிழகம் என்ற உடம்பு முழுக்க பேண்டேஜ் சுற்றினார் எம்ஜிஆர். தருமபுரியில் செத்தது 165 பேர்தான். ஆனால் நீங்கள் திறந்த சாராயக் கடை வாசலில் செத்துக் கிடந்தவர்களின் எண்ணிக்கைக்கு எதாவது உங்களிடம் கணக்கிருக்கிறதா? அப்படியே சுருங்கி செத்துக் கிடப்பான். போலீசுக்காரன் வருவான். அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வான், ரிக்ஷாக்காரனை கூப்பிட்டு பத்து ரூபாய் கொடுத்து ‘டே! இத ஜி.எச்-ல் போய் போடு!’ என்பான்.

அந்தக் கணக்குதான் இன்றைக்கு பாட்டிலாக க்யூவில் வந்து நிற்கிறது. மும்பையில் விபச்சாரம் இருக்கிறது, கொல்கத்தாவில் இருக்கிறது என்பதற்காக இங்கும் திறக்க முடியுமா?

நமது அரசியல் கட்சிகள் எல்லாம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் பண்ணுவதால் மதுவிலக்கை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.

________________________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. நமது அரசியல் கட்சிகள் எல்லாம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் பண்ணுவதால் மதுவிலக்கை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.–நகைச்சுவை நடிகர் சொல்வது உண்மைதான்.

  2. அமிர்தலிங்கம் அண்ணாச்சிக்கு காது துடித்துவிட்டது போல் உள்ளது அவிங்க ஆளு பொன் ராதாகிருஷ்ணன் பிஜேபியில் மத்திய மந்திரியா இருப்பதால…., வினவு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. அவிங்களுக்கு மத்திய மந்திரி,பிஜேபி தலைமை பதவி என்று கொடுத்து கட்சியை வளர்க்க பிஜேபி முயலுவதை நாம் அறியமுடிகின்றது. என் நண்பன்[கல்லூரியில் HOD யாக இருக்கும்] கூட அவிங்களுக்கு ஹிந்து மதம் செய்த இழிவுகளை எல்லாம் மறந்து விட்டு பொன் ராதா “நம்ம ஆளு பாஸ்” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.எதுக்கு சாதி பெயரை சொல்லாமல் டிசெண்டா ஒதுங்கனும். நாமதான் சார்லியின் ஆதரவாளர் ஆயிற்றே ! அவிங்க என்று நான் கூறுவது நாடார் மற்றும் சாணார் மக்களை தான்

  3. // எத்தனை கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கினாலும் அதனை யாரும் யாருக்கும் பகிர்ந்து தரப் போவதில்லை.

  4. இவர் தேற மாட்டார்……..பி.ஜெ.பியை அருமையான கட்சி என்று சொல்லும் போதே தெரியுது இவரின் லட்சனம் ………..முஸ்லீம் லீக் / கிரிஸ்த்துவ கட்சிகள் என்னைக்கு அடுத்தவர் கோவிலை இடித்துள்ளன………அவர்கள் மதகட்சிகள்………………ஆனால் பி.ஜெ.பி மதவெறி பிடித்த கட்சி

  5. பரையன தொட்டாத்தான் தீட்டு நாடான பார்த்தாலே தீட்டுன்னு சொல்ற பார்ப்பனர்களின் மனுதர்ம கொள்கைகளை நிலைநாட்ட தொடங்கப்பட்ட பாஜக கட்சியில அந்த மானங்கெட்ட பொன்ராதா தமிழிசை போன்றோர்கள் எல்லாம் பிழைப்புக்காக இருக்கிறார்களென்றால் இவரும்கூட அங்கே இருப்பது அதே பிழைப்புக்காக தான் என்று தோன்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க