Wednesday, May 14, 2025
முகப்புசெய்திதேசியப் பேரழிவாய் மோடியின் ஆட்சி - பு.ஜ.தொ.மு

தேசியப் பேரழிவாய் மோடியின் ஆட்சி – பு.ஜ.தொ.மு

-

ndlf-letterheadதேதி: 22-02-2015

பத்திரிக்கை செய்தி

பொருள்: 22.2.2015 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள்

எமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று எமது சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளிலிருந்து மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகியார் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. மத்தியில் ஆட்சி செய்து வருகின்ற மோடியின் அரசானது காங்கிரசு கட்சி கொண்டு வந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரசை விட தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை மோடி அரசின் செயல்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர். மோடியின் ஆட்சி ஒரு தேசியப் பேரழிவுக்கு ஒத்ததாக இருக்கிறது என எமது செயற்குழு அறிவிக்கிறது.

2. மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் மத்தியில் ஒருமாத காலத்துக்கு பிரச்சார இயக்கம் மேற்கொள்வது எனவும், மார்ச் 23 அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியான பகத்சிங் நினைவு நாளில் தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

3. மத்திய தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற அரசு ஈட்டுறுதி நிறுவனம் (ஈ.எஸ்.ஐ) நடத்தி வருகின்ற மருத்துவமனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் மூடுவதற்கு மத்திய அரசு முயன்று வருவதை எமது செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைப்பதற்கு தொழிலாளர்களது நலன்களையும், உரிமைகளையும் அப்பட்டமாக பலியிடுகின்ற மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழ வேண்டும் என எமது செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

4. ஈ.எஸ்.ஐ திட்டத்தை மேலும் சிறப்பானதாக்குகின்ற வகையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் கீழுள்ள மருத்துவக் கல்லூரிகளை மூடக்கூடாது எனவும், கூடுதலான எண்ணிக்கையில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்க வேண்டும் எனவும், இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் எமது செயற்குழு வலியுறுத்துகிறது.

5. தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் எள்ளளவும் மதிக்கப்படுவதில்லை. தொழிற்சங்கம் அமைத்தாலே வேலைநீக்கம் செய்வது, கட்டாய இடமாற்றம் செய்வது போன்ற அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது என்கிற கருத்தை மேற்படி நிறுவனங்கள் உருவாக்கி வைத்துள்ளன. இந்த சூழலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நாடெங்கிலும் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய உத்தேசித்திருந்தது. இது போன்ற தருணங்களில் தலையிட வேண்டிய தொழிலாளர் நலத்துறையிடம் எமது சங்கத்தின் சொர்பில் முறையிட்ட பின்னரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர் விரோத கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமின்றி அவற்றின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கின்ற தொழிலாளர் நலத்துறையையும் எமது செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் உரிமைகளுக்காக பு.ஜ.தொ.மு கோவையில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

6. சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கிட விவசாய நிலங்களை கையகப்படுத்தியும், பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு உள்கட்டுமான வசதிகளை செய்து கொடுத்தும் சமூகத்தின் சொத்துக்களை அவற்றோடு பிணைத்துள்ளது, அரசு. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்ட போது, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிற வாக்குறுதிகளை அரசு வழங்கியது. ஆனால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் துவங்கி பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டிய நோக்கியா, பி.ஒய்.டி, ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் திடீரென ஆலைகளை மூடிவிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இது ஒரு சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுக்கும். எனவே, மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வேலையை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஆவன செய்யுமாறு மத்திய-மாநில அரசுகளை எமது செயற்குழு வலியுறுத்துகிறது.

7. தில்லியில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலியத் துறையின் தலைமை அலுவலகத்தில் புகுந்து அரசின் ரகசிய ஆவணங்களை திருடிய கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பெட்ரோலியம் எரிசக்தி தொழிலில் ஈடுபட்டுள்ள அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார், கெய்ர்ன் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களது உயரதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் அலுவலக ரகசிய ஆவணங்கள், எதிர்வரும் 2015-16-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்புக்கான ஆவணங்கள் பலவும் மேற்படி அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. திருடப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை இதோடு முடிந்து விடாது. அதே போல அரசு ஆவணங்களை திருடிய கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கையும் இதோடு நின்று விடவில்லை. மேலும் பல ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதற்கும், மேலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைக்குத் தெரியாமல் இந்தத் திருட்டுகள் நடந்திருக்க முடியாது. எனவே, இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களது தலைமை அலுவலங்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் தீவிரமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என எமது செயற்குழு வலியுறுத்துகிறது. இந்தத் திருட்டில் தொடர்புடைய கார்ப்பரேட் நிறுவனங்களது சொத்துக்களை முடக்குவதோடு, கார்ப்பரேட் முதலாளிகளை அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் எமது செயற்குழு வலியுறுத்துகிறது.

8. எமது செயற்குழு முடிவுகளை மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதோடு, தொழிலாளர்கள் மத்தியிலும் துண்டுப்பிரசுரங்கள், தெருமுனைக்கூட்டங்கள், ஆலைவாயில் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலமாக பரவலாக பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேவையெனில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,
(சுப.தங்கராசு)
பொதுச்செயலாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க