தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ 13,985.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நட்டம் ரூ 2,305 கோடி அதிகமாகும். மேலும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ 74,113.11 கோடியாகவும் அதிகரித்து, இது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் சரி பாதியாக உள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ரூ 16,000 கோடி அளவிற்கு இரண்டுமுறை மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரியத்தின் நட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதென்றால், மக்களிடமிருந்து கட்டணமாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்குதான் கொட்டப்படுகிறது? மின்வாரியம் சந்தித்து வரும் நட்டத்திற்கு உண்மையான காரணம் என்ன?
குறிப்பிட்ட சில தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதுதான் மின்வாரியம் சந்தித்திருக்கும் நட்டத்திற்கான பிரதான காரணம் என்றும், மின்வாரியம் இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டுமென்றும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்கேற்று கேள்வி எழுப்பினர் ம.க.இ.க., பு.மா. இ.மு., மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள்.
“கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லாமலேயே, மின்கட்டணத்தை உயர்த்துவது சரியான அணுகுமுறையல்ல” என்று கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது கருத்தை அறிக்கையாகவும் சமர்ப்பித்திருந்தார், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.
கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இதுவரை விடையில்லை. நாகல்சாமி எழுப்பிய கேள்விக்கும் பதிலில்லை.
“இன்று மொத்த மின் தேவையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை தனியாரிடமிருந்து, அதிக விலை கொடுத்துக் கொள்முதல் செய்வதுதான் மின்வாரியம் சந்தித்து வரும் நட்டத்திற்கான காரணம்” என்கிறார், பொறியாளர் காந்தி.
மேலும், “ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பில் குறைபாடு, இயந்திரப் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அதன் முழு உற்பத்தித் திறனில் பகுதியளவு உற்பத்தி முடங்கியுள்ளது. இவற்றைச் சரி செய்து, புதிய மின்உற்பத்தி நிலையங்களை அரசே தன் சொந்த பொறுப்பில் தொடங்கும் பட்சத்தில், தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை எழாது. நட்டத்தையும் சந்திக்கத் தேவையில்லை” என்கிறார் அவர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், 2007 முதல் 2012 வரையிலான 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 7,808 மெகாவாட் திறன்கொண்ட புதிய மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு மெகாவாட் அளவுக்குக்கூட புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படவில்லை” என்று தமிழக அரசை கண்டிக்கிறது, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை.
“மின் உற்பத்தியில் தனியாரை ஊக்குவிக்க வேண்டும்; மின்வாரியத்தைப் படிப்படியாகத் தனியார்மயமாக்க வேண்டும்” என்பது அரசின் கொள்கை முடிவாகவே இருக்கிறது. இதன்பொருட்டு, பற்றாக்குறையை தொடர்ந்து பராமரிக்கவே விரும்புகிறது அரசு. இதற்குத் தோதாக, அரசின் மின்திட்டங்கள் திட்டமிட்டே முடக்கப்படுகின்றன என்பதுதான் முகத்திலறையும் உண்மை.
தற்பொழுது, பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் 3 ரூபாய்க்கு மின்சாரம் கிடைக்கும் நிலையில், எஸ்.டி.சி.எம்.எஸ். எலெக்ட்ரிக் நிறுவனம், அபான் பவன் நிறுவனம், பென்னா எலெக்ட்ரிக்சிட்டி ஆகிய தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.5 என்ற விலையில் கொள்முதல் செய்கிறது. ஜி.எம்.ஆர்.பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள் நல்லூர் பவர் கார்ப்பரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ 14 வரையில் மின்சாரம் வாங்கப்படுகிறது.
இந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம், மொத்த மின்சாரத் தேவையில் வெறும் 3.22 சதவீதம்தான். ஆனால், வெறும் 3 சத மின்சாரத்தை பெறுவதற்கு, தனது ஆண்டு வருமானத்தில் 15 சதவீதமான ரூ 4,940 கோடி ரூபாயை கொட்டுகிறது அரசு. இது, முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத ஒன்று. ஆனாலும், மின்வாரியம் தொடர்ந்து இதை செய்து வருகிறது.
மேலும், ஜி.எம்.ஆர். நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கக் கூடாதென்று, நாகல்சாமி எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், அவரது எதிர்ப்பை மீறி, யூனிட் ஒன்றுக்கு ரூ 12.19 பைசா வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் எஞ்சிய இரு உறுப்பினர்கள் அனுமதியளித்திருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள், இவர்களின் நோக்கத்தை சந்தேகிக்கத்தக்க வகையில்தான் அமைந்துள்ளன.
இவற்றுக்கெல்லாம், “மின்வெட்டைத் தவிர்த்து, மின்பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டே தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைகொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய இக்கட்டில் தள்ளப்பட்டிருப்பதாக” ஒற்றை வரியில் வாயடைக்க எத்தணிக்கிறது, தமிழக அரசு.
2003-04 நிதியாண்டில் 39,240 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த தமிழகத்தின் மொத்த மின்சாரத் தேவை தற்பொழுது 91,642 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. புதிய மின் இணைப்பு, மின்சாதனப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக சாமானிய மக்களின் மின்பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், ஏறத்தாழ, இரண்டரை மடங்குக்கு மேல் மின்தேவை அதிகரித்திருப்பதற்கான காரணம் இவைமட்டுமே அல்ல! பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாக ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்; கேளிக்கை விடுதிகள், ஷாப்பிங் மால்கள், விளம்பர போர்டுகள் என மேட்டுக்குடி கும்பலின் ஆடம்பரத் தேவைகளுக்கான மின்சாரப் பயன்பாடும் அதிகரித்திருப்பதன் காரணமாகத்தான் இவ்வளவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழக அரசு கடுமையான மின்பற்றாக்குறையைச் சந்தித்து வரும் நிலையில், “பன்னாட்டு நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் தமக்கு தேவையான மின்சாரத்தை தாமே சொந்த முறையில் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்” என்றோ; “உனக்குத் தேவையான மின்சாரத்தை நீயே தனியாரிடம் நேரடியாக வாங்கிக்கொள்” என்றோ அரசு கூறுவதில்லை. “எனக்கு இலாபத்தை உத்திரவாதப்படுத்த வேண்டும்; சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வேண்டும்” என்று ஆணையிடுகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அந்தக் கடமையைத் தனது சொந்தப் பொறுப்பில் எடுத்து அரசு நிறைவேற்றுகிறது. தனியார் மின்உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ 14.00 வரையில் ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கி, அதனைச் சலுகை விலையில் இவர்களுக்கு வழங்குகிறது, அரசு.
ஒருபுறம், ஐ.டி. நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கி அவர்களின் இலாபத்தை உறுதிப்படுத்தும் அதேசமயம், இதனைக் காரணம் காட்டி தனியாரிடம் கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் தனியார் மின் உற்பத்தியாளர்களின் இலாபத்தையும் உத்திரவாதப்படுத்துகிறது, அரசு. இந்த இரட்டைச் சுமையையும், இதனால் ஏற்படும் நட்டத்தையும் மின்கட்டண உயர்வுகள் என்ற பெயரில் மக்களிடமிருந்து வழிப்பறி செய்கிறது, அரசு.
– இளங்கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________