Sunday, July 12, 2020
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் இந்துமதவெறி எதிர்ப்பு போராளி தீஸ்தா : சென்னைக் கூட்டம்

இந்துமதவெறி எதிர்ப்பு போராளி தீஸ்தா : சென்னைக் கூட்டம்

-

1990-கள் முதல் மத அடிப்படைவாதிகளுக்கு குறிப்பாக இந்துமதவெறிக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தீஸ்தா சேதல்வாத் கலந்து கொண்ட கூட்டம் 20-03-2015, வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது.

கூட்டம் நடந்த பின்னணி

தீஸ்தா சேதல்வாத்
தீஸ்தா சேதல்வாதின் உரையை தமிழில் மொழிபெயர்க்கும் பத்திரிகையாளர் ஞாநி.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், 2002 குஜராத் முஸ்லீம் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை நடத்தி, 120 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு முதன்மை பங்காற்றியவர் தீஸ்தா. குஜராத் இனப்படுகொலையாளி மோடி பிரதமராகவும், அவரது கூட்டாளி அமித் ஷா பா.ஜ.க தலைவராகவும் ஆகியிருக்கும் நிலையில் தீஸ்தா மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டு அவரை முடக்கி விடும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர் மீதான வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் கோரும் மனு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உச்சநீதி மன்ற வழக்கு விசாரணைகளுக்கு மத்தியில், எந்த நேரமும் குஜராத் போலீசால் கைது செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு இடையே சென்னைக்கு வருகை தந்த தீஸ்தா சேதல்வாதும், அவரது கணவர் ஜாவித் ஆனந்தும் அக்கறையுள்ள குடிமக்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தினர் மத்தியில் தீஸ்தா
கூட்டத்தினர் மத்தியில் தீஸ்தா.

“உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடத்தில் முன்ஜாமீன் கொடுக்க முடியும். ஆனால், ‘தவணை முறையில் முன் ஜாமீன்’ என்று சொல்லும் அளவுக்கு தீஸ்தாவை இழுத்தடித்து வருகிறது. தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களை பெருமளவு பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பை முடக்க முயற்சிப்பதில் முன்னணியில் இருந்த மாநிலம் குஜராத். பொடா சட்டத்தை அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தியது மோடி அரசு. இத்தகைய மதவாத அரசுக்கு எதிரான இயக்கத்தை விடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் வீராங்கனை தீஸ்தா” என்று உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் நீதியரசர் சந்துரு.

ஜாவித் ஆனந்த்
பத்திரிகையாளரும் தீ்ஸ்தாவின் சக போராளியுமான ஜாவித் ஆனந்த்

மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த காலிகள் ஜனநாயக சக்திகளையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கி வரும் நிலையில், அன்றைய கூட்டத்தில் அத்தகைய முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் திரண்டிருந்தனர். சென்ற ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் தீஸ்தா உரையாற்றும் போது திட்டமிட்டுக் கொண்டு கூட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீஸ்தாவிடம் சரியான பதிலடி வாங்கிச் சென்ற காவி பூனைகள், நேற்றைய நிகழ்ச்சிக்கு வராமல் ‘எஸ்கேப்’ ஆகியிருந்தனர்.

தீஸ்தா சேதல்வாத் கூட்டம்
நிறைந்திருந்த அரங்கம்

பத்திரிகையாளர் ஜாவித் ஆனந்த் பேசும் போது, “இந்துத்துவ பாசிசத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தீர்வில்லை” என்பதை விளக்கினார். “சையது சித்திக்கி எனும் ஊடகவியலாளர் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது முன்பாக இந்திய முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு “ஜெசியா” வரி செலுத்திக் கொண்டிருப்பதாக கூறியிருப்பதையும், எம்.ஐ.எம் என்ற தீவிரவாத இஸ்லாமிய குழுவின் தலைவர் அஸாவுதீன் ஒவைசி முஸ்லிம்கள் மதச்சார்பின்மையின் கூலிகள் அல்ல என்று குறிப்பிட்டதையும் கண்டித்தார். “’இந்தியாவுக்கு மதச்சார்பின்மை; சவுதி மற்றும் ஈரானுக்கு மதவாதம்’ என்ற அவர்களின் இரட்டை நிலைப்பாடு பாசிச மதவாதிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவப் போவதில்லை” என்று கூறினார்.

குஜராத் படுகொலைகளும் ம.க.இ.க.-வின் பார்ப்பன பாசிச எதிர்ப்பும்

தீஸ்தா உரையாற்றும் போது, மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் கூட்டத்துக்கு வந்திருப்பதை குறிப்பிட்டு, 2003-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை கண்டித்து ம.க.இ.க தஞ்சையில் நடத்திய மாநாட்டில் (பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு) தான் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். அப்போது குஜராத் படுகொலைகள் தொடர்பான செய்திகளுடன் வெளியிடப்பட்டிருந்த கம்யூனலிசம் காம்பட் (தீஸ்தாவும் ஜாவித் ஆனந்தும் நடத்தும் மதவாத முறியடிப்பு என்ற பத்திரிகை) சிறப்பு இதழை ம.க.இ.க தமிழில் மொழி பெயர்த்து அதற்கு பொருத்தமான ஒரு முகப்புப் படமும் சேர்த்திருந்ததை குறிப்பிட்டார்.

மோடி கார்ட்டூன்
2002 மார்ச் மாத கம்யூனலிசம் கம்பட் இதழில் வெளியான மோடி கார்ட்டூன் (புத்தாயிரத்தாண்டின் குகை மனிதன்)

அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அகமதாபாதுக்கு வந்து நிவாரண முகாம்களை பார்வையிட்ட  போது, குஜராத் அரசின் தடைகளை மீறி பர்தா அணிந்து கொண்டு தான் முகாமில் தங்கியிருந்ததையும், ம.க.இ.க கொண்டு வந்திருந்த அந்த தமிழ் இதழை கலாமுக்கு தான் கொடுத்ததையும் குறிப்பிட்டார்.

குஜராத் மதத் தாக்குதல்கள் நடந்த பிப்ரவரி 28, மார்ச் 1, 2 தேதிகளில் நாள் ஒன்றுக்கு தனக்கு 600-லிருந்து 700 அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்று நிலைமையின் குரூரத்தை விளக்கினார். அவரது உரையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

மதக்கலவரங்களுக்கு தயாரிப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ்

மதக் கலவரங்கள் திடீரென்று நடப்பதில்லை. வன்முறைக்கான தயாரிப்புகள் மதவாத அமைப்புகளால் பல ஆண்டுகளாக செய்யப்படுகின்றன. நாம் இந்து மதவெறியர்கள் வன்முறைகளை நிகழ்த்திய பிறகு எதிர்வினைகள் ஆற்றுகிறோம். ஆனால், வன்முறைக்கான தயாரிப்புகள் செய்யப்படும் காலத்திலேயே அவற்றை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும் வேண்டும்.

மதக்கலவரங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகள் செய்யும் முன்தயாரிப்புகள் குறித்து பல நீதி விசாரணை அறிக்கைகள், மதக் கலவரங்கள் பற்றிய பத்திரிகை செய்திகள், மதக் கலவரங்கள் குறித்து செய்தி சேகரித்த சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

மத வன்முறை மட்டுமின்றி, சாதி வன்முறையும் இதே மாதிரியான நடைமுறையிலான முன்தயாரிப்புக்கு பின்பே நடத்தப்படுகிறது. வதந்திகளை பரப்புதல், வெறுப்பைக் கக்கும் பேச்சுக்கள், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுதல் என்று வன்முறைக்கான சூழலை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

அகமதாப் மத பிரிவினை
2003-ல் வெளியான ஃபிரன்ட் லைன் இதழில் வெளியான புகைப்படம் (இந்து – முஸ்லீம் பகுதிகளை பிரிக்கும் இடத்தில் இருந்த கதவுக்குப் பதிலாக சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது).

விசுவ இந்து பரிசத் 1991-ம் வருடம் வெளியிட்ட ஒரு வரைபடத்தில் அகமதாபாதை ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் இந்து நகரம், முசுலீம் நகரம் என்று பிரித்திருந்தது. இந்த அறிகுறிகளை, அடையாளங்களை தொடர்ந்து கவனித்து நாம் எதிர்வினை ஆற்ற வேண்டும்.

இந்தியாவில் நடைபெற்ற மதக் கலவரங்கள் தொடர்பான நீதி விசாரணை அறிக்கைகள் ஆர்.எஸ்.எஸ்-ன் பெரும்பான்மை மதவாதம் வன்முறைக்கு உகந்த சூழலை தகவமைத்து கொடுத்து சிறுபான்மையினரை குறி வைக்க வசதி செய்ததை தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனினும், நமது அரசு அமைப்புகள் அவற்றிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொண்டு மதக் கலவரங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

மதவாதம் ஊடுருவியிருக்கும் அரசு அமைப்புகள்

நாம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், ஆனால் ஜனநாயக அமைப்புகளை முழுமையாக வளர்க்கவில்லை. பெரும்பான்மை மதவாதம் காவல் துறை, கல்வித் துறை, நீதித்துறை என அரசின் ஒவ்வொரு அமைப்பிலும் ஊடுருவியிருக்கிறது.

இன்று குஜராத் வன்முறை தொடர்பாக 120 பேர் தண்டிக்கப்பட்டதை கொண்டாடும் நிலையில் நாம் இருக்கிறோம். 2100 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 120 பேர் தண்டிக்கப்பட்டதை ஒரு பெரிய வெற்றியாகவும் பார்க்கலாம், அல்லது மிகச் சிறிதளவான முன்னேற்றம் என்றும் கருதலாம்.

2002-ம் வருடம், குஜராத் வகுப்பு கலவரங்களை தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் விசாரணை நடத்த வந்திருந்த நீதியரசர் வர்மா முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய உதவும்படி என்னை அழைத்தார்.

அதன்படி, அகதிகள் முகாமில் தமக்கும் உறவினர்களுக்கும் இழைக்கப்பட்ட பாலியல் வன்முறை குறித்து வாக்குமூலங்களை அடுத்தடுத்து கேட்டோம். ஒரு சிறுவன் தனது தாயும், சகோதரியும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதை முகத்தில் எவ்வித உணர்ச்சி மாறுதலும் இல்லாமல், குழந்தைமைக்குரிய இயல்புணர்ச்சியுடன் விவரித்துக் கொண்டிருந்தான். தான் என்ன சொல்கிறோம் என்பது கூட புரியாதவனாக அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி வர்மாவின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. “நாளை இந்தச் சிறுவன் பயங்கரவாதி ஆகவில்லை என்றால், வேறு யார் ஆவார்கள்” என்று கேட்டார் நீதியரசர் வர்மா.

அவர் வெளியிட்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் அந்த வாக்குமூலங்கள் இடம்பெற்றன. நீதியரசர் வர்மாவின் அறிக்கை தான் குஜராத் படுகொலைகளுக்கு உச்சநீதிமன்ற தலையீட்டை கோருவதற்கான முக்கிய ஆவணமாக திகழ்ந்தது. குஜராத் இனப்படுகொலையின் போது மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணைய தலைவர் ஜேம்ஸ் லிண்டோ போன்றவர்கள் சிறப்பான அறிக்கையை சமர்ப்பித்தனர்.

நீதிபதிகள் வர்மா, ஆனந்த் தலைமையில் மனித உரிமை ஆணையம் 2 அடி முன் நோக்கி வைத்தது. ஆனால், தலைமை மாறும் போது மனித உரிமை ஆணையம் தனது சொந்த அறிக்கையையே கைவிட்டு 5 அடி பின்வாங்கி விடுகிறது. இன்றும் உச்சநீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையத்தின் மனு மீதான விசாரணையில் அவர்கள் கவனம் சொலுத்துவதில்லை. நாங்கள்தான் நடத்தி வருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுடன் பேசிய பிறகுதான் நீதிபதி வர்மாவுக்கு உண்மையான புரிதல் கிடைத்தது. தனது இந்துத்துவா தீர்ப்பு குறித்து வருத்தப்படுவதாக அவர் பின்னர் குறிப்பிட்டார். நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

குஜராத்தில் நீதி தேடிய பயணம்

ஹரேன் பாண்டியா
குஜராத் படுகொலைகளுக்கு முன்பு முதலமைச்சர் மோடி இல்லத்தில் நடந்த கூட்டம் பற்றி  அக்கறையுள்ள குடிமக்கள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த மோடியின் அமைச்சர் ஹரேன் பாண்டியா.

குஜராத் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்திய அக்கறையுள்ள குடிமக்கள் ஆணையம் 18 நாட்கள் சுற்றித் திரிந்து, 15 இடங்களில் 18000 நேரடி வாக்குமூலங்களை பதிவு செய்தது.

வன்முறைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் முதலமைச்சர் வீட்டில் நடந்த கூட்டம் பற்றிய தகவலை சில காவல்துறை அதிகாரிகள் என்னிடம் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், யாரும் அதைப் பற்றி அதிகாரபூர்வமாக வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை. திடீரென்று 2002-ம் வருடம் மே 12-ம் தேதி மோடியின் அமைச்சர் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் ஆணையத்திற்கு வந்து வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாக கூறினார்.

நாங்கள் அனைவரும் கண்காணிப்பில் இருந்தோம். நீதிபதிகளின் கார்கள் தாக்கப்பட்டிருந்தன. எனது ஓட்டுனர்கள் 5 பேர் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று கூறி போய் விட்டிருந்தனர். இத்தகைய அச்சுறுத்தலான சூழலில், அந்த அமைச்சரிடம் “நீங்கள் உறுதியாக வாக்குமூலம் கொடுக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டேன்.

கடைசியில் நீதிபதிகள் சாவந்த், நீதிபதி சுரேஷ், நீதிபதி கண்ணபிரான் முன்பு அவர் வாக்குமூலம் அளித்தார். நானும் உடன் இருந்தேன். பிப்ரவரி 27-ம் தேதி நடந்த கூட்டம் பற்றிய விபரங்களை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அவரை குறுக்கு விசாரணை செய்யும்படி நீதிபதிகள் என்னை கேட்டுக் கொண்டனர். அந்த வன்முறையில் அவரும் பங்கேற்றதை பற்றி கேட்ட போது, தான் யாரையும் கொல்லவில்லை என்றும், முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கும்படி மட்டுமே கும்பலை வழிநடத்தியதாகவும், தனது பங்கை மறைக்காமல் கூறினார்.

அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் மோடி நடத்திய கூட்டத்தில் கலவரம் குறித்த திட்டம் பற்றிய குறிப்பும் இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, “சாட்சியம் அளித்த அமைச்சர் ஹரேன் பாண்டியா தான்” என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாக கசிந்துவிட, மார்ச் 26, 2003-ம் வருடம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முதலமைச்சர் மோடி, ஹரேன் பாண்டியாவின் உடலுக்கு மரியாதை செலுத்த அவரது வீட்டுக்குச் சென்ற போது, பாண்டியாவின் மனைவியும், சகோதரிகளும் நேரடியாக மோடியை  குற்றம் சாட்டினர்.

இன்று வரை ஹரேன் பாண்டியாவைக் கொன்ற கொலையாளிகள் யார் என்று நமக்குத் தெரியாது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குஜராத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். முக்தி சுஃபியான் என்ற முதல் குற்றவாளி போலி மோதல் கொலை புகழ் வன்சாரா உதவியுடன் வங்கதேசம் வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முக்தி சூஃபியானை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நாம் எதிர்த்துக் கொண்டிருக்கும் நபர்கள் இப்படிப்பட்டவர்கள்.

நீதியை தடுத்த குஜராத் அரசு

ஜகீரா ஷேக்
ஜகீரா ஷேக்

பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் வழக்கின் போக்கில் பிறழ் சாட்சியாக மாறியதையும் நான் அவரை கடத்தி வைத்ததாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவத்சவாவின் தூண்டுதல் பொய் சாட்சியம் அளித்ததையும் குறிப்பிட்டார் தீஸ்தா. அதைத் தொடர்ந்து வழக்கை மறுவிசாரணை நடத்தக் கோரி அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, உச்சநீதிமன்றம் வழக்கை குஜராத்துக்கு வெளியில் நடத்த உத்தரவிட்டது ஆகியவற்றை குறிப்பிட்டார். இந்தியாவில், ஒரு வழக்கை மறு விசாரணை செய்யவும், மாநிலத்துக்கு வெளியில் இடம் மாற்றவும் உத்தரவிட்டது அதுதான் முதல் முறை.

“அதன் பிறகு மறு விசாரணை மும்பையில் ஆரம்பித்தது. ஆனால், ஜகீரா ஷேக் மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அவர் சாட்சியம் சொல்வதற்கு ஒரு நாள் முன்பு பரோடாவிற்கு சென்று இரண்டாவது முறை பிறழ் சாட்சியாக மாறினார். நாங்கள் அவரை கடத்தி, பொய் வாக்குமூலம் பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறினார். அதைத் தொடர்ந்து நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி ஒரு உயர்மட்ட விசாரணையை நடத்தும்படி கோரினோம்.

உச்சநீதிமன்ற பதிவாளர் பி.எம் குப்தாவின் தீவிர விசாரணையில், எங்கள் அமைப்பு எந்த தவறும் செய்யவில்லை என்று முடிவானது. எங்கள் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜாகிரா ஷேக்குக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ஜகீரா ஷேக்கை தூண்டிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவஸ்தவா -அவர் ஜகீரா ஷேக்குக்கு ரூ 18 லட்சம் கொடுத்ததாக தெகல்கா விசாரணையில் தெரிய வந்தது – உச்சநீதிமன்றத்தில் சாட்சி சொல்லக் கூட மறுத்தார். ஆனால், அவருக்கு எந்த தண்டனையும் இல்லை. இப்படித்தான் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்குள் நீதியைத் தேட நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு, எங்கள் மீது குற்றம் சுமத்தி அவதூறு செய்யும் முதல் முயற்சி 2004-ல் நடந்தது. என் மீது பொய் சாட்சி சொல்ல தூண்டியது, கல்லறைகளை தோண்டியது என்று அடுத்தடுத்து 6 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன.

தீஸ்தா சேதல்வாத்
“பிப்ரவரியில் 1 வாரம் எங்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சென்னையில் நேற்று முதல் நாங்கள் பார்த்து வரும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கத்தை தருகிறது”

இறுதியில் பெஸ்ட் பேக்கரி வழக்கில், ஜாகீராவின் பிறழ் சாட்சியம் இருந்தாலும் 9 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது .மேல் முறையீட்டின் போது இன்னும் ஒரு சாட்சி பிறழ் சாட்சி ஆனது. 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

119 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பிறகு மேல் விசாரணையில் அவசர அவசரமாக இந்த தண்டனைகள் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும். நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை செய்வோம்.

கார்ப்பரேட் மயமான ஊடகங்கள், காவி மயமாகும் வரலாறு.

இந்த வழக்குகள் பற்றிய தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். கடந்த 10 ஆண்டுகளின் மிகப்பெரிய இழப்பு ஊடகங்கள். 2002-2003ல் ஊடகங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக செயல்பட்டன. இன்று அவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால், இத்தகைய வழக்குகள் பற்றிய செய்திகளுக்கு இடம் கொடுக்க முன்வருவதில்லை.

பிப்ரவரியில் குஜராத் போலீசின் பொய் வழக்கை எதிர் கொண்ட போது எங்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சென்னையில் நேற்று முதல் நாங்கள் பார்த்து வரும் ஆதரவு எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தருகிறது.

2002 கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களில் இன்றும் 517 சாட்சியங்கள் உறுதியாக உள்ளனர். அவர்களில் 220 பேர் பெண்கள், மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்து வந்தாலும் தமது நிலையில் உறுதியாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு, இது வரை ஈட்டிய வெற்றிகளையும் பாதுகாக்க போராட வேண்டும்.

2 வாரங்களுக்கு முன்பு சி.பி.ஐ-ன் பூபேஷ் குப்தாவுடன் கோவிந்த் பன்சாரேவின் நினைவு கூரும் கூட்டத்தைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தோழர் கோவிந்த் பன்சாரே, ஹரேன் பாண்டியா போலவே காலை நடைப் பயிற்சியின் போது சுடப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் போலவே பகுத்தறிவாளர் நாராயண் தாபோல்கர் கொல்லப்பட்டார்.

ஷிவாஜி கோன் ஹோத்தா
மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே, “ஷிவாஜி யாராக இருந்தார்” என்ற நூலை எழுதி ஆர்.எஸ்.எஸ்-ன் வரலாற்று திரிபுகளை கேள்விக்குள்ளாக்கினார்.

கோவிந்த் பன்சாரே “சிவாஜி யார்” என்ற புத்தகத்தை எழுதினார். அது 1.3 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. 1964-ம் ஆண்டு மராத்தியில் எழுதப்பட்ட அந்த புத்தகம் ஆங்கிலம், உருது, குஜராத்தி, ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

மதவாத அரசியல், வரலாற்றை திரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது இல்லாமல் இளம் உள்ளங்களுக்கு மதவாத நஞ்சூட்ட முடியாது.

1949 எஸ்.ஏ.டாங்கே, தாதரில் உரையாற்றும் போது, “நமது சிவாஜி, அவர்களது சிவாஜி” என்று குறிப்பிட்டார். சிவாஜி எப்படி ஒரு இந்து மன்னராக கட்டமைக்கப்பட்டார் என்று விளக்கினார்.

சிவாஜி குறித்து பல ஆவணங்கள் உள்ளன. அவர் ஒரு பார்ப்பனரோ ஷத்திரியரோ இல்லை. அவர் விவசாய, உழைக்கும் சாதியைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் இதை மறைக்கிறது.

அவுரங்கசீபுடனான அவரது போராட்டம் மத அடிப்படையிலானது அல்ல. அது நியாயமான வரிவிதிப்பை குறித்தது. அவர் அவுரங்கசீபுக்கு இசுலாமை போற்றி கடிதங்கள் எழுதியிருக்கிறார். பன்சாரே, டாங்கே போன்றவர்கள் சிவாஜியின் அமைச்சரவை, இராணுவத்தில் முஸ்லீம்கள் இருந்ததை ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.

காந்தி கொலை
“சந்தேகத்திற்கு அப்பால் – காந்தி கொலை பற்றிய பதிவுகள்”

நமது தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் வரலாறு குறித்து மக்கள் மத்தியில் பேசுவதில்லை.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து அதை கண்டித்து ஒரு பேரணி நடத்தலாம் என்று கோரிய போது ‘என்ன செய்வது எமது அணிகள் காலையில் பாட்டாளிகளாக இருக்கிறார்கள்; மாலையில் சிவ சேனை தொண்டர்களாக இருக்கிறார்கள்’ என்பதே மகாராஷ்டிராவின் தொழிற்சங்க தலைவர் தத்தா சமந்தின் பதில். தொழிற்சங்கங்கள் பொருளாதாரவாதத்தை மட்டும் பின்பற்றும் போது அரசியல் அரங்கில் பெரும் வெற்றிடம் ஏற்படுகிறது. வரலாற்றை நமது மக்களுக்கு, குழந்தைகளுக்கு புகட்டுவதன் மூலமாக மட்டுமே இந்துத்துவர்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியும்.

மதவாத சக்திகள் முதலில் அதிகார அமைப்புகளுக்கு வெளியில் செயல்படுகின்றனர். பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றி இப்போது மனித வள அமைச்சகம் செய்வது போல அரசதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தனது 95 ஆண்டு வரலாற்றில் சிசு மந்திர், சரஸ்வதி மந்திர் மூலம் குழந்தைகளுக்கு வரலாற்றைப் பற்றிய அவர்களது கண்ணோட்டத்தையும், எதிர்காலம் பற்றிய அவர்களது திட்டங்களையும் போதித்து வந்தனர்.

இத்தகைய மதவாத, பாசிச மயமாக்கலை எதிர்கொள்வதுதான் இன்றைய சவால்” என்று கூறி தீஸ்தா தனது உரையை நிறைவு செய்தார்.

தீஸ்தாவின் உரையை பத்திரிகையாளர் ஞாநி தமிழில் உடனுக்குடன்  மொழிபெயர்த்து வழங்கினார். இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டது.

காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் தொடர்பு பற்றி தீஸ்தா எழுதிய “சந்தேகத்திற்கு அப்பால் – காந்தி கொலை பற்றிய பதிவுகள்” (“Beyond Doubt-A Dossier on Gandhi’s Assassination,” by Teesta Setalvad) என்ற நூல் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

செய்தி, கூட்ட புகைப்படங்கள் : வினவு செய்தியாளர்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. சிறிது வருத்தம் வினவு மீது :

    கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்காக வருந்துகின்றேன் வினவு. திரு ஞானியின் முக நூலில் 19/3 ., 20/3 அன்று எல்லாம் தொடர்ந்து இந்த கூட்டம் பற்றி விளம்பர படுத்திக்கொண்டு இருந்தார் என்பதை இன்று தான் கண்டேன். பெருமாள் முருகன் விடையத்தில் திரு ஞானியின் முகனூலை தொடர்ந்து படித்தவன், அதன் பின்பு விட்டுவிட்டேன். அதனால் எனக்கு கூட்டம் பற்றிய தகவல் கிடைக்காமல் போய்விட்டது. வினவாவது கூட்டத்தை பற்றி முன்கூட்டியே விளம்பர படுத்தியிருக்கலாமே . எனவே எனக்கு சிறிது வருத்தம் வினவு மீது .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க