Saturday, August 20, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்

அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்

-

திகார வர்க்கத்தினர் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளைப் போல இலஞ்ச – ஊழல்களில் ஈடுபடமாட்டார்கள், படித்த வர்க்கத்தினரான இவர்கள் கண்ணியமாக நடப்பார்கள்; அரசியல் தலையீடு இல்லாமல் அதிகார வர்க்கத்தினர் சுயமாக இயங்கினால் ஊழல் என்பதே இருக்காது; ஊழல் முறைகேடு என்றாலே அதற்கு முதன்மைக் காரணம் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்தான் – என்று தூய்மையான நிர்வாகத்துக்கு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்தான் வில்லன்களாக இருப்பதைப் போல துக்ளக், தினமணி போன்ற ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இம்மோசடித் தனமான கருத்தைப் பொய்யாக்கும் வகையில் அடுத்தடுத்து நடந்துள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் – மோசடிகள் பல ஆயிரம் கோடிகளை விஞ்சிவிட்டது. இலஞ்சம் பெறுதல், அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்துதல், வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்தல் முதலான குற்றங்களின் கீழ் நாடு முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் 157 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்தது. இவற்றில் 71 வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நாடு முழுவதும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல், பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

உ.பி அரசுப் பொறியாளர் யாதவ் சிங்
உ.பி அரசுப் பொறியாளர் யாதவ் சிங். பல நூறு கோடிகளைச் சுருட்டிய கிரிமினல் ஊழல் பெருச்சாளி.

உண்மையில், அதிகாரிகள் நடத்தும் ஊழலும் கொள்ளையும்தான் அரசியல்வாதிகளின் ஊழலைவிட மிகப் பெரியதாக இருக்கிறது. இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் செய்வதற்கும் மோசடி அம்பலமானால் அதைத் திட்டமிட்டே மூடி மறைப்பதற்கும் தப்பித்துக் கொள்ளவும் தேவையான தொழில் ரகசியங்களை ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளுக்குக் கற்றுக் கொடுத்துப் பயிற்றுவிப்பதே அதிகாரிகள் கூட்டம்தான். இவர்கள் வாங்கும் இலஞ்சத்தைக் கணக்கிடவும் முடியாது. இலஞ்சம்தான் அதிகார வர்க்கத்தின் இரத்தத்தின் இரத்தமாக இருக்கிறது. ஆதர்ஷ், காமன்வெல்த், அலைக்கற்றை, நிலக்கரி – என எல்லாவிதமான மெகா கொள்ளைகளிலும் அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் திருடுவதற்கு வழிசொல்லிக் கொடுத்திருப்பவர்கள் அதிகாரிகள்தான். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் – என இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் எல்லா மாஃபியாக்களிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு திருடுவதற்கும் தப்புவதற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் ரூட்டு போட்டுக் கொடுக்கிறார்கள்.

அண்மையில், உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பொறியாளர் யாதவ் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், 2 கிலோ தங்கம், கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் ஆகியனவும், அவருக்கு 20 இடங்களில் அசையாச் சொத்து உள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதை ஊடகங்கள் அதிர்ச்சியுடன் செய்தியாக வெளியிட்டன. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சிக் காலத்தில் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் வழி திட்டங்களில் ஏறத்தாழ ரூ. 900 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் மெதுவாகக் கசிந்து, இத்திட்டங்களுக்கான மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய யாதவ் சிங் இப்போது சிக்கிக் கொண்டுள்ளார்.

ம.பி. ஊழல் அதிகாரிகள்
ம.பி.யின் ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான டினு ஜோஷி மற்றும் அவரது கணவர் அரவிந்த் ஜோஷி; அரசுத் தேர்வாணைய ஊழலில் சிக்கி பதவி விலகியுள்ள ம.பி. ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்.

உ.பி. அரசுப் பொறியாளரின் ஊழல் விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே, மத்தியப் பிரதேச அரசுத் தேர்வாணையத்தில் தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்துள்ள ஊழலில் கோடிக்கணக்கில் சுருட்டியுள்ள அமித் பாண்டே என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் அவரது கணவரையும் கடந்த ஜனவரியில் ம.பி. சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளது. பணி நியமனத்திற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக முன்னாள் ம.பி. அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, அவரது சிறப்புப் பணிக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரி சுக்லா, ஆளுநரின் சிறப்புப் பணிக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்ராஜ் யாதவ் ஆகியோரும் கைதாகியுள்ளனர். இந்த ஊழல் மோசடியில் ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்-க்கும் தொடர்பு உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவரைப் பதவி விலகுமாறு மைய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே ம.பி.யில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பணியாற்றிய டினு ஜோஷி மற்றும் அவரது கணவர் அரவிந்த் ஜோஷி ஆகியோரது வீடுகளை 2010-ம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது ரொக்கமாக ரூ 3 கோடியும், அந்நிய கரன்சியும், சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் சிக்கின. அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ஏறத்தாழ ரூ 360 கோடிக்கு அளவுக்குச் சொத்துக்களைக் குவித்துள்ளதாக 2014-ல் லோக் ஆயுக்தா போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். பலமுறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றத்துக்கு வராமல் இழுத்தடித்த அவர்கள், அண்மையில் சிறையிடப்பட்டுள்ளனர்.

போலீசு ஐ.ஜி. பிரமோத்குமார்
பாசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஒருவரான கமலவள்ளியைக் கடத்திச் சென்று ரூ 2.96 கோடி பணம் பறித்த போலீசு ஐ.ஜி. பிரமோத்குமார்

மும்பையைச் சேர்ந்த “மிட் டே” என்ற நாளேடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களின் மூலம் மகாராஷ்டிராவின் மாவட்ட அளவிலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏறத்தாழ ரூ 271.88 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக மார்ச் 2014-ல் அம்பலப்படுத்தியது. ஏழைகள், பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஒப்பந்ததாரர்கள் விழுங்கி ஏப்பம் விட்ட கதையையும் இதில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு இப்போது அரசு வெளியிட்டுள்ள ஆரம்பநிலை விசாரணை அறிக்கையில், இந்த மோசடியில் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக ஒப்புக்கொண்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த பாசி நிதி நிறுவனம், முதலீட்டுக்குக் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 48,000 முதலீட்டாளர்களிடம் ஏறத்தாழ ரூ 1,600 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்ட அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோகன்ராஜ், இயக்குநர்கள் கதிரவன், கமலவள்ளி ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கடந்த 2010 ஜனவரியில் இயக்குநர்களில் ஒருவரான கமலவள்ளி திடீரென மாயமானார். விசாரணை நடத்திய அப்போதைய திருப்பூர் மாவட்ட போலீசு சூப்பிரண்டு ஏ.அருண், அப்போதைய ஐ.ஜி. பிரமோத்குமார் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் கமலவள்ளியைக் கடத்திச் சென்று ரூ 2.96 கோடி பணம் பறித்த விவகாரம் அம்பலமானது. ஐ.ஜி. பிரமோத்குமார், அப்போதைய திருப்பூர் டி.எஸ்.பி. ராஜேந்திரன், மத்திய குற்றப் பிரிவு போலீசு நிலைய ஆவாளர்களான மோகன்ராஜ், சண்முகயா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகி, அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ஏறத்தாழ 80 புகார்தாரர்கள் விசாரிக்கப்பட்டு, 312 ஆவணங்கள் மட்டுமே பார்வையிடப்பட்டுள்ளது. விசாரணையோ நத்தை வேகத்தில் இன்னமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ம.பி ஆர்ப்பாட்டம்
டினு ஜோஷி – அரவிந்த் ஜோஷி தம்பதிகளின் ஊழல்-கொள்ளைக்கு எதிராக ம.பி இளைஞர்கள் அணிதிரண்டு 2011-ல் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்களைத் தேர்வு செய்யும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி. எஸ்.சி.) மிகப் பெரிய ஊழலும் மோசடியும் நடந்த விவகாரம் கடந்த 2011-ல் அம்பலமானது. தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள், குரூப் 1 தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளில் – குறிப்பாக உதவி பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பணி, வி.ஏ.ஓ. பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், இதில் பல கோடிகள் சுருட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. தேர்வாணையத் தலைவரான செல்லமுத்து உள்ளிட்ட 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்தி பணி நியமன ஆணை, அரசியல் வாதிகளின் சிபாரிசுக் கடிதங்களைக் கைப்பற்றினர். ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் ஏறத்தாழ ரூ. 5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியுள்ள விவகாரமும் அம்பலமானது.

கணக்கில் வராத ரொக்கப் பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டு, தேர்வாணையத் தலைவரான செல்லமுத்து பதவி விலகிய பின்னர், தேர்வாணையம் மீண்டும் அக்குறிப்பிட்ட பணிகளுக்கான தேர்வுகளை நடத்த முன்வந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேற்கொண்டு விசாரணையைத் தொடர முடியாமல் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியுள்ளதால், விசாரணை முன்னேறாமல் முடங்கி நிற்கிறது. இதனால் சி.பி.ஐ.யின் விசாரணை தொடருமா, மோசடிகள் வெளிவருமா, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடர வேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை என்று சட்ட விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில முதல்வர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும் ஊழல் அதிகாரிகளைத் தப்ப வைப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமா சங்கர் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில் நடந்த பல ஊழல் விவகாரங்களில், அதிகாரிகள் மீது வழக்கு தொடர முடியாததற்கு இக்குழுவின் அனுமதி கிடைக்காததுதான் காரணம் என்று போட்டுடைத்துள்ளார்.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்போது, எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் அம்பலப்படுத்தப்படுகின்றன. ஆனால் அதிகார வர்க்கம் செய்யும் ஊழல்களும் மோசடிகளும் வெளியே தெரிவதில்லை. ஊழல் அதிகாரிகள் தமக்கு உரிய பங்கு கிடைக்காத ஆத்திரத்தில் போட்டுக்கொடுக்கும்போதுதான் அதிகார வர்க்கத்தினரின் ஊழல்-கொள்ளைகள் மெதுவாகக் கசிகின்றன. இருப்பினும், அதையும் முடக்கவும் மூடிமறைக்கும் தகிடுதத்தங்களில் இறங்குவதும், துறை சார்ந்த விசாரணை நடப்பதாக பூசி மெழுகுவதும், விசாரணையை இழுத்தடிப்பதும்தான் நடக்கிறது.

அரசு எனும் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் இந்த அதிகாரிகள்தான். அரசு எனும் ஆயிரங்கால் பூதத்தின் கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாக இருப்பது அதிகார வர்க்கம்தான். ஆட்சி நடத்துவதே அவர்கள்தான். அதனால்தான் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இலஞ்ச ஊழல் – அதிகார முறைகேடுகள் மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், அரசின் வரவு-செலவுகள், கொள்கைகள் – திட்டங்களை ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல், ஆதிக்கம், கொள்ளைக்கு ஏற்ற வகையில் வகுத்து, அவற்றைச் செயல்படுத்துபவர்கள்தான் இந்த அதிகாரிகள் கூட்டம். ஆளும் கும்பலுக்குச் சேவை செய்யுும் இத்தகைய ஊழல்-மோசடி அதிகார வர்க்கத்தைக் கொண்டுள்ள அரசுக் கட்டமைவில், லோக்ஆயுக்தா போன்ற ஊழல் தடுப்பு ஏற்பாடுகளும் சட்டங்களும் போட்டாலும் அவையனைத்தும் அடுத்தடுத்து தோல்வியைத்தான் தழுவுகின்றன.

இந்நிலையில், சட்டபூர்வ கிரிமினல் கும்பலாக வளர்ந்துவிட்ட இத்தகைய ஊழல் அதிகார வர்க்கத்தை தனிநபர்களின் போராட்டங்களால் ஒழித்துவிடவோ, கடுமையான சட்டங்களால் திருத்தியமைத்துவிடவோ ஒருக்காலும் சாத்தியமில்லை. இத்தகைய அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறைகளின் அதிகாரத்தைப் பறிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவரவும் புரட்சிகர அமைப்பும் போர்க்குணமிக்க போராட்டங்களும் அவசியமாக உள்ளன என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.

– குமார்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

  1. // தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடர வேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை என்று சட்ட விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில முதல்வர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும் ஊழல் அதிகாரிகளைத் தப்ப வைப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமா சங்கர் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளார். //

    இரு கோடுகள் போட்டு அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகள் என்று காட்ட முயல்கிறீர்கள்.. அது முடியவில்லை, சரியுமல்ல என்பதற்கு மேற்படி மேற்கோளே ஒரு எடுத்துக்காட்டு..

    யாதவ் சிங்குக்கும், ஜோஷி ஜோடிகளுக்கும் மற்ற ஊழல் அதிகாரிகளுக்கும் இப்படி அரசியல்வாதிகளின் பின்பலம் இருந்ததால்தான் ஊழல் செய்ய துணிவும், தோதான பணியிடங்களும் வாய்த்தன.. அரசியல்வாதிகள்,கார்ப்பரேட்டுகளின் நலனை விட நாட்டுநலன், மக்கள் நலன், கடமை, நேர்மை என்று பணியாற்றும் உயர் அதிகாரிகளை எந்த அரசியல்வாதியாவது அதிக பட்சம் ஒரு வருடமாவது அந்த பணியிடத்திலேயே விட்டுவைப்பானா..?!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க