Tuesday, November 24, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஊழல் நீதிபதிகள் என்றால் நீதிபதி சந்துருவுக்கு பயம் பயம்

ஊழல் நீதிபதிகள் என்றால் நீதிபதி சந்துருவுக்கு பயம் பயம்

-

justice-for-sale

“நீலச் சாயம் வெளுத்துப் போச்சு! ராசா வேஷம் கலைஞ்சு போச்சு!”

ன்பார்ந்த வழக்குரைஞர்களே!

வழக்கறிஞர் போராட்டம்
“நீலச் சாயம் வெளுத்துப் போச்சு! ராசா வேஷம் கலைஞ்சு போச்சு!”

உரிமைகளுக்காக போராடும் வழக்குரைஞர்கள் என்ன ரவுடிகளா? முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் இந்து பத்திரிகையில் வெளிவந்த இரு கட்டுரைகளில் அப்படித்தான் சித்தரிக்கிறார்.

பிப்ரவரி18-ம் தேதியன்று “யாருடன் போராடுகிறார்கள் வழக்கறிஞர்கள்?” என்ற தலைப்பிலும், மார்ச் 16-ம் தேதியன்று “போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு” என்ற தலைப்பிலும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் அத்தகைய சித்திரத்தைத்தான் தருகின்றன. போராடும் வழக்குரைஞர்களை இழிவுபடுத்தி மற்றவர்கள் எழுதுவதற்கும் முன்னாள் வழக்குரைஞரும், நீதிபதியுமான ஒருவர் எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு என்பதனால்தான் நமது இந்த எதிர்வினை.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

கடந்த ஆண்டு “கொலிஜி”ய முறையில் தெரிவு செய்யப்பட்ட நீதிபதிகளின் முறைகேடான பட்டியலை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். இது குற்றமா? ஆமாம் சந்துருவின் கருத்துப்படி இது  குற்றமே. இதற்காக போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் “நீதிபதிகளின் நியமனத்தில் அவரது சமூகம், சட்டப்பின்னணியைத் தவிர அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உணர்ச்சி” என இன்னும் பலவற்றை பரிசீலிக்க வேண்டும் என தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போலக் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் நேர்மை கண்டு நமக்கோ புல்லரித்து போனது!

நீதிபதிகளின் நியமன விசயத்தில் “கொலீஜி”ய முறையில் நடந்தது என்ன? பொதுவாக சட்டத்தையும் நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் ரவுடிக் கூட்டமாக போலீசுதான் நடந்து கொள்ளும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் போலீசுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் நீதிபதிகள். சட்டம் தெரியாதவன், வழக்குரைஞர்  தொழிலை ஒப்புக்கு செய்தவன், நீதிபதிக்கு கூஜா தூக்குபவன், உனக்கு வேண்டியன், எனக்கு வேண்டியவன் என ரகசிய பேரம் நடத்தி தான் நீதிபதிகள் நியமனப் பட்டியல் தயாரித்து அனுப்பப்பட்டது. இதை மானமுள்ள, ஜனநாயக உரிமைக்காகப் போராடக் கூடிய வழக்குரைஞர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான சதாசிவத்தையும், கே.ஜி.பாலகிருஷ்ணனையும் காக்காய் பிடித்து நீதிபதியானவர்களெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி உலா வருவதை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதனை எதிர்த்துப் போராடுவது ரவுடித்தனமா?

கனவான் நீதிபதி சந்துரு அவர்களே!

போலீஸ் அடக்குமுறையை கண்டித்து
போலீஸ் அடக்குமுறையை கண்டித்து

போராடும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு” என்று வழக்குரைஞர்களுக்கு ஆலோசனை சொல்லும் நீங்கள், சக நீதிபதிகளுக்கு என்றைக்காவது ஆலோசனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களா? அல்லது நீதிபதிகள் அனைவரும் எத்தகைய அறிவுரையும் தேவைப்படாத யோக்கிய சிகாமணிகளாக இருக்கிறார்கள் என்று கருதுகிறீர்களா?

மார்ச் 25 அன்று தமிழ் இந்துவில் இராமசந்திர குஹா “அறம் பிறழ்கிறார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்” என்ற கட்டுரையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை துவைத்து தொங்கவிட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம் ஒரு கொலை வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்து இருக்கிறார். இதற்கு லஞ்சமாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இவருக்கு ஆளுநர் பதவி. இது போதாதென்று அடுத்த பதவிக்கு துண்டு போடுமுகமாக, பா.ஜ.க வின் தேசிய செயலராகி விட்ட பார்ப்பன பயங்கரவாதி அமித்ஷாவின் மகன் திருமணத்தில் மூக்குப்பிடிக்க உண்டு களித்துள்ளார்.

பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக  இருந்த பொழுது “நீதிபதிகளில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு பிரிவினர் சட்டங்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள். இன்னொரு பிரிவினர் சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என கிண்டலடித்தார். நீதிபதிகளுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளுக்கும் உள்ள ரகசியக் கூட்டு மாநிலத்திலும், மத்தியிலும் சந்தி சிரிக்கிறதே, இதனை எதிர்த்து  ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்?

நீதித்துறையில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடி போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக 50 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கும் சாந்திபூஷண் 2010-ல், “உச்சநீதி மன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் செய்தவர்கள்” என அறிக்கையாக தாக்கல் செய்தார். அதை அரசு இன்றுவரை வெளியிடவே இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் நீதிபதிகள் கூச்சமே இல்லாமல் சேவை செய்கிறார்களே, இவற்றுக்கு எதிராக நீங்கள் பேச மறுக்கிறீர்களே, ஏன்?

நீதிபதி நியமன முறையை கண்டித்து
நீதிபதி நியமன முறையை கண்டித்து

“நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம், வழக்குரைஞர்களாகிய நீங்கள் கண்டுகொள்ள கூடாது , தலையிடவும் உரிமை இல்லை” என்கிறீர்கள். தலையிட்டால் வழக்குரைஞர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுகிறீர்கள்.

பிப்ரவரி 19-ல் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீதான காவல்துறையின் வெறித்தனமான தாக்குதலை “வழக்குரைஞர்-காவல்துறை மோதல்“ என எழுதி இரண்டையும் சமன்படுத்துகிறீர்கள். கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசை குற்றத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களை குற்றவாளியாக்குகிறீர்கள். போலீசின் லத்திக் கம்பு நீதிபதிகளின் மண்டையையே உடைத்த போதிலும், போலீசுக்கு நோகாமல் வருடிக் கொடுக்கிறீர்கள்.

வருடத்தில் 30 நாட்கள் வரை வழக்குரைஞர்கள் போராடுவதால் வழக்காடிகளான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என வருத்தம் தெரிவிக்கிறீர்களே, பல நீதிபதிகள் வழக்கை வாய்தா, வாய்தா என ஜவ்வாய் இழுப்பதையோ ஒரு வழியாய் வழக்கை நடத்தினாலும், தீர்ப்பு எழுதும் திறனற்றவர்களாக இருப்பதையோ இப்படியே வழக்காடிகளை அலையவிடும் நீதிபதிகளையோ என்றைக்காவது கண்டித்திருக்கிறீர்களா? ஒரு வழக்கை பட்டியலில் கொண்டு வர ஒரு வழக்குரைஞர் படும்பாடு உங்களுக்குத் தெரியாதா?

வழக்காடிகள் பாதிக்கப்படுவது யாரால்? குஜராத் குற்றவாளிகள் முதல் ஹசிம்புரா படுகொலை குற்றவாளிகள் வரையிலான அனைவரும் விடுவிக்கப்படுவதற்கு காரணம் வழக்குரைஞர்களின் பொறுப்பின்மையா அல்லது நீதித்துறையின் சீர்குலைவா? நீதித்துறையின் தோல்விக்கு இன்னும் எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்?

பிப்ரவரி 19,  போலீஸ் தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர் போராட்டம்
பிப்ரவரி 19, போலீஸ் தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர் போராட்டம்

கிரானைட் கொள்ளை விவகாரத்தில் ரெவினியூ, போலீசு அதிகாரிகளை மட்டுமல்ல, கிரானைட் கொள்ளையர்களுக்கு சாதகமாக நீதிமன்றமே அவ்வப்போது தீர்ப்பளித்திருக்கிறது என்றும், இவற்றையெல்லாம் சகாயம் பரிசீலிக்க வேண்டுமென்று கட்டுரை எழுதினீர்கள். எவையெல்லாம் முறைகேடான தீர்ப்புகள், யார் யாரெல்லாம் சந்தேகத்திற்கிடமான நீதிபதிகள் என்று நீங்கள் அறிந்த விவரங்களை, உங்களது நம்பிக்கைக்கு உரிய தகவல்களை பகிரங்கமாக அல்லவா நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும்? இத்தகைய நபர்களை ரோட்டுக்கு இழுப்பது முறைகேடு என்று கருதுகிறீர்களா? அல்லது இத்தகைய ஒரு கொள்ளைக்கு துணைபோன நீதிபதிகளைத் தண்டிக்க நீங்கள் வைத்திருக்கும் வழிமுறைதான் என்ன?

ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாரிமன் ஆஜரானது முறைகேடு என்று கூறினீர்கள். அது ஒன்று மட்டுமா! அதில் நடந்த அனைத்துமே முறைகேடுதான். ஜெயலலிதா வழக்கில் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து வழங்கியுள்ள பிணையில் தொடங்கி, வழக்கை விரைந்து முடிக்குமாறு பிறப்பித்துள்ள உத்திரவு வரை அனைத்துமே அப்பட்டமான முறைகேடுகள்தான். இவற்றுக்கு எதிராக ஒரு முன்னாள் நீதிபதி என்ற முறையில் நீங்கள் செய்தது என்ன?

“சட்டப்படி வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு வா! நியாயப்படி வேண்டுமென்றால் ரோட்டுக்கு போ!” என்று சொன்னது நீங்கள்தானே! முறைகேடான நீதிபதிகள் பட்டியலை எதிர்த்து தெருவில் இறங்கி வழக்குரைஞர்கள் போராடும் பொழுது மட்டும் ஏன் கோபம் கொள்கிறீர்கள்.

தொழிலாளர்கள் போராட்டத்தினால், போக்குவரத்து தடைபட்டுப் போய், ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் போக முடியாமல் ஒரு நோயாளி பரிதவிப்பதைக் காட்டுவதன் மூலம், எல்லாவிதமான போராட்டங்களையும் கொச்சைப்படுத்துவது என்பது நாலாந்தர தமிழ் சினிமா இயக்குநர் சங்கர் கடைப்பிடிக்கும் உத்தி. நீங்கள் சொல்லும் கருத்துக்கும் சங்கர் சொல்லும் கருத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும்.

வழக்குரைஞர் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

தொடர்புக்கு : 9094666320

தொடர்புடைய சுட்டிகள் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க