Sunday, January 17, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் டெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்

டெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்

-

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே எதிரானது ஆர்.எஸ்.எஸ் என்று கருதுவது எவ்வளவு பிழையானது!

ஆர்.எஸ்.எஸ்டில்லியின் ராஜேந்திர நகர் பகுதியின் தலித் குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அலுவலகமான ஹெட்கேவர் பவன். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அதன் எதிர்ப்புறத்தில் இருக்கும் வால்மீகி சாதியைச் சேர்ந்த தலித் மக்கள் வாழும் குடியிருப்பில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிய பந்து குடியிருப்பை கடந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் சுற்றுசுவருக்குள் போய் விழுந்தது. பந்தை எடுக்க ஒரு சிறுவன் சென்றுள்ளான். அச்சிறுவனை அடித்து, உதைத்து அனுப்பியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் ‘வீரர்கள்’.

என்னதான், இந்து ஒற்றுமை பேசினாலும், ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்புக்கு இயல்பாக இருக்கும் ஆதிக்க சாதி உணர்வு இங்கு வெளிப்பட்டிருக்கிறது.

நொண்டிக் கொண்டு, அழுதபடியே வீடு திரும்பிய மகனின் நிலையைக் கண்டு தன் தாய் கமலா தேவியுடன், ஹெட்கேவர் பவனுக்கு விசாரிக்கப் போயிருக்கிறார் சிறுவனின் தந்தை ராஜீவ்குமார்.

நாய்களை போன்று பாய்ந்து லத்த்திகளாலும், கம்புகளாலும் தாயையும், மகனையும் தாக்கியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் காலிகள். அதற்கு மேலும் வெறி தணியாமல் தலித் மக்களுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தது ஆர்.எஸ்.எஸ். சுமார் 40-50 ஆர்.எஸ்.எஸ் ‘வீரர்கள்’ திரண்டு தங்கள் அணிவகுப்புகளில் ஏந்தி செல்லும் தடிக்கம்புகளுடன் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கியதில் பலர் காயமடைந்தனர். ராஜீவ்குமாரின் கால்களிலும், கைகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. கமலா தேவி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். அனைவரும் சோன்பட்டில் இருக்கும் நிதான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றனர்.

ராஜேந்திர நகர் கடை ஒன்றில் வைக்கப்பட்ட கண்காணிப்பு காமிராவில் ஆர்.எஸ்.எஸ் காலிகள் சாரை சாரையாக தலித் மக்கள் குடியிருப்புக்குள் தடிக்கம்புகளுடன் புகுவதும், ஏழை தலித் மக்களை தாக்குவதும் பதிவாகியுள்ளது. எனினும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய காவல்துறை மறுத்து விட்டது. மாறாக, நிராதரவான பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டி, வற்புறுத்தி ஆர்.எஸ்.எஸுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து பிரச்சினையை ‘முடித்து’ வைத்துள்ளது போலீஸ்.

‘கைது நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னரே சம்பந்தபட்ட இரண்டு தரப்பினரும் சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டார்கள்’ என்ற போலீஸின் கூற்றை மறுக்கிறார்கள் தலித் மக்கள். சமரச ஒப்பந்தம் எழுதப்பட்டு, கையெழுத்தானதே டில்லியின் 15-வது வட்ட காவல் நிலையத்தில் தான் என்கிறார்கள் அவர்கள்.

மேலும், ஆர்.எஸ்.எஸுடனான சமரச ஒப்பந்தத்தை நிராகரிக்கிறார்கள் தலித் மக்கள். சமரச ஒப்பந்தத்தின் மூன்று பகுதிகளும் பொய்யானவை. தலித் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் நடத்திய தாக்குதலை மறைத்து விட்டு அதனை இரு பிரிவினருக்கும் (ராஜேந்திர நகர் மக்கள் & ஆர்.எஸ்.எஸ்) இடையேயான மோதல் (clash) என்று எழுதியிருப்பது சமரச ஒப்பந்தத்தின் முதல் மோசடி. ‘மோதலுக்கான’ காரணமும் ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை. தாக்கப்பட்டவர்கள் தலித் மக்கள் என்பதும், தாக்குதல் நடத்தப்பட்டது  ஒரு தலித் குடியிருப்பு மீது என்ற உண்மையும் சமரச ஒப்பந்தத்தில் கவனமாக தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸின் தலித் மக்கள் விரோத செயல்பாட்டை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் அமுக்கும் மோசடிக்கு போலீஸ் துணை போவதன் சாட்சி தான் இது.

மேலும், ‘இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைக்கு இரண்டு தரப்பும் முயலக் கூடாது’ என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட தலித் தரப்பு சட்டப்பூர்வ போராட்டம் கூட நடத்தக் கூடாது.

டெல்லி, ஹரியானா எல்லைக்கு மிக அருகில் இருக்கும் ராஜேந்திர நகரில் நடந்த இந்த வன்முறை தாக்குதல் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், “ராஜேந்திர நகர் மக்கள் மத்தியில் அது உருவாக்கிய பயமும், கையாலாகத்தனமும் யாராலும் தவற விட முடியாதது” என்கிறது, இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் scroll.in இணைய தளம்.

வன்முறையை ஏவி விட்ட பிறகு பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைத்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது, ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகளின் முடிவில் இந்து பெருமையை (Hindu Pride) விளம்பரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை அடக்கி வாசிக்கிறது.

டில்லியின் திரிலோக்புரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மக்களை பயன்படுத்தி கொண்டது ஆர்.எஸ்.எஸ். தற்போது தலித் மக்களுக்கு எதிராக நேரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை புரிந்து கொள்வது எப்படி?

‘சாதி, மதக்கலவரங்கள் ஏற்படும் காலங்களை தவிர மற்ற காலங்களில் தமக்குள் தொடர்பு உண்டு என்கிற உணர்வே இந்து சாதிகளுக்குள் இருப்பதில்லை,’’ என்கிறார், பாபாசாகேப் அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ்-சுக்கு இது அப்படியே பொருந்துகிறது. முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதிகளை சேர்ந்த மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் கைவிடுவதும், ஒடுக்குவதும், சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதும் தான் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடு.

அதனால்தான் வட இந்தியாவில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்க்கிறார்கள்.

சிறுபான்மை மதப்பிரிவு மக்களுக்கு எதிரான கலவரங்களுக்காக மட்டுமே ஆர்.எஸ்.எஸ் கட்டியெழுப்பும் போலியான இந்து ஒற்றுமையை தகர்த்து மதங்களையும், சாதிகளையும் கடந்த வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்பாமல் உலகம் கண்டிராத மிகமோசமான ஃபாசிஸ அமைப்பான ஆர்.எஸ்.எஸை வீழ்த்துவது எங்ஙனம்?

– சம்புகன்

இது தொடர்பான செய்தி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க