privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் - 1996 ம.க.இ.க ஆவணம்

ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்

-

1991-1995 முதலாவது ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆற்றிய ‘சாதனையின்’ ஆவணத் (ஆணவத்) தொகுப்பு இது. முழு தமிழகத்தையே கேட்பார் கேள்வியின்றி கொள்ளையடித்தன் விளைவாக அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயா-சசி கும்பல் மக்களால் செருப்படியுடன் துரத்தப்பட்டது.

இந்த ஆட்சிக்காலம் முழுவதிலும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பாசிச ஜெயா கும்பலை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடி வந்தன. அதன் முத்தாய்ப்பாக 1996-ல், “ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்” என்ற தலைப்பில் ரூ 2 விலையில் இச்சிறு வெளியீடு கொண்டு வரப்பட்டது.  அன்றைய காலத்திலேயே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் மக்களிடையே விற்கப்பட்டன.

இதன் இறுதியாக ஜெயா சசி கும்பலின் சொத்துக்களை கைப்பற்றுவோம், நீதிமன்றமும், சட்ட மன்றமும் அக்கும்பலை தண்டிக்காது எனும் முழக்கங்களுடன் தஞ்சை வினோதகன் மருத்துவமனை (ஜெயா-சசி கும்பலின் சொத்துக்களில் ஒன்று) கைப்பற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆவணத்தை இங்கே வெளியிடுகிறோம்.

– வினவு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ஜெயலலிதா சசிகலா கும்பலிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பிடுங்கி விட்டார்கள், தமிழக மக்கள். ஆனால், கோடி கோடியாய் அவர்கள் கொள்ளையடித்த மக்கள் சொத்துக்களை யார் பிடுங்குவது? என்றைக்குப் பிடுங்குவது? அவர்கள் புரிந்த கிரிமினல் குற்றங்களுக்கு எப்போதுதான் தண்டனை வழங்குவது?

5 ஆண்டுகள் ஆளலாம், அகப்பட்டதைச் சுருட்டலாம். தேர்தலில் தோற்றுவிட்டால் கொள்ளையடித்த காசை வைத்து உல்லாசமாக அனுபவித்து விட்டு, ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்; இதுதான் ஓட்டுச்சீட்டு அரசியலில் இன்றுவரை உள்ள நடைமுறை. இந்த நடைமுறையைப் பின்பற்றி தாங்களும் அடித்த கொள்ளையுடன் தப்பி விடலாம் என்று கணக்குப் போடுகிறது, ஜெயா – சசி கும்பல்.

அதனால்தான் ஜெ.ஜெ. டி.வி.யின் அந்நிய செலவாணி மோசடி பற்றி பத்திரிகை நிருபர் கேள்வி கேட்டபோது, ’’யார் செய்யவில்லை?’’ என்று திமிராகத் திருப்பிக் கேட்கிறார், ஜெயலலிதா. ’’என்னைப் பழிவாங்கத் திட்டம் போடுகிறார், கருணாநிதி’’ என்று கூறி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!’’பழிவாங்க மாட்டோம்’’ ’’சட்டம் அதன் கடமையைச் செய்யும்’’ என்று வாக்குறுதியளிக்கிறார் முதல்வர் கருணாநிதி. சட்டம் தன்னுடைய கடமையைச் செய்த லட்சணத்தை நாம் பார்க்கவில்லையா என்ன? கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஜெயலலிதா மீது நீதிமன்றத்தில் போட்ட வழக்குகள் எத்தனை? கவர்னருக்கு அளித்த மனுக்கள் எத்தனை? அவற்றால் விளைந்த பயன் என்ன?

நூறும், இருநூறும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்ட சிறுவர்கள் வழக்கு, விசாரணை எதுவுமின்றி லாக் அப்பில் வைத்து அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஜெயலலிதாவின் ஆட்சியில்.

ஜேப்படி திருடனுக்கு ஒரு நீதி. ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? நம்பி வாக்களித்த மக்களை மோசடி செய்து தமிழகத்தையே தங்கள் பரம்பரை சொத்தாகவும், அரசு கஜானாவை தங்கள் சொந்த பணப்பெட்டியாகவும் மாற்றிக்கொண்ட ஜெயா – சசி கும்பலுக்கு என்ன தண்டனை? தேர்தல் தோல்விதான் தண்டனையா?

மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா?

ஜெயா – சசி கும்பல் நிலத்தை வளைக்காத ஊர் ஒன்று உண்டா? அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் திருடாத அரசுத் திட்டம் ஒன்று உண்டா? அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டத்திற்கு கப்பம் கட்டாமல் அரசுத் துறையில் வேலை வாங்கிய ஆள் ஒருவர் உண்டா? பத்திரிகைகளில் ஊழல் செய்தி வெளிவராத நாள் ஒன்று உண்டா?

ஜெயா – சசி கும்பல் அடித்த கொள்ளை பற்றி சில விவரங்களை மட்டும் தொகுத்துத் தருகிறோம். அடித்த கொள்ளையில் அரைப்பங்கு கூட பத்திரிகைகளில் அம்பலமாகவில்லை. அவ்வாறு அம்பலமானவற்றில் அரைப்பங்கைக் கூட நாங்கள் தற்போது வெளியிடவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிப் பிரமுகர்கள், அதிகாரிகள், பினாமி முதலாளிகள் ஆகியோர் அடங்கிய கொள்ளைக் கூட்டம் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை சூறையாடிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டால், அது அளவில் ’ஆக்ஸ்போடு’ அகராதிக்கு இணையாக இருக்கும். அவ்வாறு அச்சிடக் கூட எங்களிடம் காசு இல்லை.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்’’அவசரப்பட்டு பழிவாங்க மாட்டோம்’’ என்று சட்டசபையில் பேசியிருக்கிறார், அமைச்சர் அன்பழகன். அவசர நடவடிக்கை அவசியமா இல்லையா என்பதை இவ்வெளியீட்டைப் படித்த பின் நீங்கள் முடிவு செய்யுங்கள்!

1. வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்

2. ஆடம்பர அடுக்கு மாளிகைகள் – வீட்டு மனைகள்

3. ஆலைகள் – தொழில்களில் முதலீடு

4. அந்நிய நாடுகளில் போடப்பட்டுள்ள முதலீடுகள்

5. ஊழல்கள் – மோசடிகள் – முறைகேடுகள்

6. ஊழலுக்குத் துணைநின்ற உயர் அதிகாரிகள்

7. பினாமி முதலாளிகள்

8. பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிப்பு

9. கோயில் கொள்ளைகள்

10. ஜெயா ஆட்சியில் போலீசின் கற்பழிப்பு லாக்-அப் கொலைகள்

11. நியாயம் கேட்போருக்கு எதிராக அ.தி.மு.க ரவுடிகளின் தாக்குதல்

(விபரங்கள் பதிவின் இறுதியில்)

நீங்கள் படித்தது ஜெயா – சசி கும்பல் அடித்த கொள்ளை மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளின் அரைகுறை பட்டியல். கடந்த 5 ஆண்டுகளில் கோடீசுவரன் ஆகாத அமைச்சனோ, எம்.எல்.ஏ-யோ யாரும் கிடையாது. குறைந்தபட்சம் லட்சாதிபதி ஆகாத வட்டச் செயலர்கள் கிடையாது.

’’கடைசிக் காசு வரை பறிமுதல் செய்து கஜானாவில் சேர்ப்போம்’’ என்ற தனது தேர்தல் வாக்குறுதிக்கு விசுவாசமாகவும், நாணயமாகவும் தி.மு.க அரசு நடந்து கொள்ளுமேயானால், அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பல்லாயிரம் கோடி பணத்தையும், தங்கத்தையும், வைரத்தையும் பாதுகாப்பாக வைப்பதற்கென்றே புதிய கருவூலங்களைக் கட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க என்ற பெயர் கொண்ட கிரிமினல் கும்பலை அடைப்பதற்கென்றே புதிய சிறைச்சாலைகள் கட்ட வேண்டியிருக்கும்.

எத்தனை நூறு கோடி கொள்ளையடிக்கப்பட்டது, எத்தனை ஏக்கர் நிலம் வளைக்கப்பட்டது என்ற பொருளாதார புள்ளி விவரம் மட்டும் போதாது. அத்தகைய லஞ்ச, ஊழல், அதிகார முறைகேடுகளால் எத்தனை ஆயிரம் விவசாயிகள் நிலத்தை இழந்தனர், எத்தனை ஆயிரம் ஏழைகள் வீடுகளை இழந்தனர், எத்தனை ஏழைகள் அரசு மருத்துவமனையில் சரியான மருந்தின்றி உயிரை இழந்தனர், எத்தனை குழந்தைகள் கல்வி இழந்தனர், விஷ சாராயத்திற்கு கணவனைப் பறிகொடுத்து எத்தனை பெண்கள் தாலி அறுத்தனர் – என்ற விவரங்கள் வேண்டும். அவை தெரியவரும்போது புதிதாக பல தூக்குமரங்கள் நிறுவ வேண்டியிருக்கும்.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சூறையாடும் ’பொருளாதாரக் குற்றம்’, தனிப்பட்ட பகைமையினால் செய்யப்படும் கொலையைக் காட்டிலும் கொடிய குற்றமல்லவா?

ஊழல் பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள் – காடுகள், மலைகள், ஆறுகள், கனி வளங்கள், கட்டிடங்கள், காலி மனைகள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சத்துணவு, முட்டை, இலவச சேலை, சுடுகாட்டுக் கூரை… எதை விட்டு வைத்தார்கள்?

‘பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பது பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதியின் அடிப்படை உரிமை’ என்ற இலக்கணத்தையே உருவாக்கி, தமிழகத்தின் அரசியல் பண்பாட்டையே அருவருக்கத்தக்கதாக மாற்றிய இந்தக் கூட்டத்தை பொது வாழ்வில் நீடிக்க அனுமதிக்கலாமா?

அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், கட்சிக்காரர்களும் எதில் கொள்ளையடிக்கிறார்கள், எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்று போலீசை வைத்து வேவு பார்த்து அதில் தமக்குரிய பங்கை போலீசை வைத்தே மிரட்டியும், அடித்தும் வசூல் செய்த மாஃபியா கும்பல் தலைவி, ’முன்னாள் முதல்வர்’ என்ற அடைமொழிக்குப் பின்னே ஒளிந்துகொள்ள அனுமதிக்கலாமா?

சட்டத்தின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு, வழக்கறிஞர்களையும், பத்திரிகையாளர்களையும், எதிர்க்கட்சிக்காரர்களையும் தாக்குவதற்கும், கொலை செய்வதற்கும் அ.தி.மு.க ரவுடிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படுமா? காவல் நிலையங்களை கற்பழிப்புக் கூடங்களாகவும், லாக்-அப்-களைத் தூக்கு மேடைகளாகவும் மாற்றிய காவல் மிருகங்கள் தண்டிக்கப்படுவார்களா?

அண்ணாமலை நகர் காவல் நிலையக் கொலையும், வாச்சாத்தி கற்பழிப்பையும் விளம்பரம் செய்து ஓட்டு வாங்கிய தி.மு.க ஆட்சி பதில் சொல்லியாக வேண்டும்.

அந்நியச் செலாவணித் திருடனுக்கும், ஆதி ராஜாராமுக்கும் ’நெஞ்சு வலி’ என்று போலிச் சான்றிதழ் தந்து, அரசு மருத்துவமனையில் குளுகுளு அறையில் வைத்துப் பாதுகாத்த மருத்துவ அதிகாரியை ’பெருந்தன்மையாக’ மன்னித்து விட்டுவிடப் போகிறதா திமுக அரசு? ஜெயா – சசி கும்பலின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் திட்டம் தீட்டிக் கொடுத்து, துணையாகவும் நின்ற தேவாரத்திற்கும், ஹரிபாஸ்கருக்கும் பதவி மாற்றம் தான் தண்டனையா? அவசர நிலைக் காலத்தில் கொலைவெறியாட்டம் நடத்திய அதிகாரிகளைப் போலவே இவர்களையும் தப்ப விடுவதுதான் நீதியா?

கருணா - ஜெயா கார்ட்டூன்“ஆளும் கட்சி சொன்னதை அதிகாரிகள் செய்தார்கள். அதற்காக அதிகாரிகளை எப்படி குற்றம் சொல்ல முடியும்” என்று வாதிடுவதாக இருந்தால், ’’அவன் சொன்னதால் திருடினேன், இவன் சொன்னதைக் கேட்டுத்தான் கொலை செய்தேன்’’ என்று கூறும் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கேற்றபடி ’இந்திய தண்டனைச் சட்டம்’ திருத்தப்பட வேண்டும். ’ஐ.ஏ.எஸ் குடிமகனுக்கு’ப் பொருந்தும் சட்டம் அத்தனை குடிமக்களுக்கும் பொருந்த வேண்டும். தேவாரத்தின் மீதும், ஹரிபாஸ்கர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப் படாது என்றால் இன்பசாகரனையும், தியானேசுவரனையும் கூட விடுதலை செய்து விடலாமே!

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக வாங்கிய ஜெயா – சசி கும்பலும், அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான கோடிகளை லஞ்சமாக கொடுத்து, ஆயிரக்கணக்கான கோடிகளை ஆதாயமாகப் பெற்ற முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் 50 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு, கிராமப்புற வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருந்த தனியார் பேருந்துகளை நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஓட்ட அனுமதித்திருக்கிறது, ஜெயா – சசி கும்பல்.

தனியார் பேருந்து முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட இச்சலுகையை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது, திமுக அரசு. லஞ்சம் கொடுத்த தனியார் பேருந்து உரிமையாளரான ஒரு சட்டசபை உறுப்பினர் ’65 லட்சம் போயிற்றே’ என்று வருந்தினாராம். எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப் பணம் அனைத்தையும் ஜெயா – சசி கும்பலிடமிருந்து வசூலித்து முதலாளிகளுக்கு தர வேண்டும் என்று கோரியிருக்கிறார் த.மா.கா தலைவர் பாலகிருஷ்ணன். எவ்வளவு கொடுத்தோம், யாரிடம் கொடுத்தோம் என்று தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர்.

jayalalitha-imsaiஇது எந்த ஊர் நியாயம்? எந்த நாட்டு சட்டம்? லஞ்சம் கொடுத்து லாபம் அடைபவர்களும் லாபமடைய முனைபவர்களும் 163-வது பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.

கிராமப்புற மக்களைப் பேருந்து இல்லாமல் தவிக்க விட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களைத் திவாலாக்கி அதன் மூலம் கோடி கோடியாய் லாபம் அடிக்கத் திட்டம் போட்ட தனியார் முதலாளிகள் சட்டத்தின்படியே கூட கிரிமினல் குற்றவாளிகள். கறியைத் தின்பதற்காக எலும்பை எறிந்த எத்தர்களுக்கு அவர்கள் கொடுத்த லஞ்சப் பணம் திரும்ப வசூலித்துத் தரப்படுமென்றால்,

ஸ்பிக் நிறுவனத்தில் தமிழக அரசுக்குச் சொந்தமான பங்குகளை விழுங்குவதற்காக முத்தையா செட்டியார் ஜெயலலிதாவுக்கு கொடுத்த பல கோடி லஞ்சமும், தாபர் – டூபாண்ட், ஃபோர்டு மோட்டார் நிறுவனங்கள் கொடுத்த லஞ்சமும், நெய்வேலி ஜீரோ யூனிட் அனல் மின்நிலையத்தை விழுங்க அமெரிக்க நிறுவனம் கொடுத்த லஞ்சமும், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற பல துறைகளில் கொள்ளையடித்த காண்டிராக்டர்கள், அதற்காக அமைச்சர்களுக்குக் கொடுத்த லஞ்சமும்… அவரவர்களுக்கே திருப்பித் தரப்படுமா?

மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே லஞ்சம் கொடுத்த குற்றவாளிகளான தரகு முதலாளிகள், காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை கிடையாது என்பதுடன், ஊக்க போனசும் வழங்கும் உலக அதிசயத்தை நீங்கள் எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா? இந்த அநீதியை நாம் அனுமதிக்க முடியாது. இந்த அவமானத்தை நாம் சகித்துக்கொள்ள முடியாது.

  • ஜெயா – சசி கும்பலுக்கு கையூட்டு கொடுத்து தாபர் – டூபாண்ட், ஃபோர்டு மோட்டார் போன்ற அமெரிக்க தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் பெற்றுள்ள உரிமங்களும், நெய்வேலி ஜீரோ யூனிட் அனல் மின்நிலைய ஒப்பந்தமும், ஸ்பிக் நிறுவன பங்கு விற்பனையும் உடனே ரத்து செய்யப்பட வேண்டும். நாட்டை மீண்டும் காலனியாக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • ஜெயா – சசி கும்பலை உடனே கைது செய்து சிறையில் வைத்து விட்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் குவித்து வைத்துள்ள அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
  • ஜெயா – சசிகலா கும்பல் உருவாக்கிய ’போலீசு – பினாமி முதலாளிகள் – அதிகார வர்க்கம் – கிரிமினல்கள்’ அடங்கிய கும்பல் பகிரங்கமாக விசாரித்துத் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இட்லரின் நாஜி கட்சியினர் மீது நடத்தப்பட்ட ’நூரம்பர்க் விசாரணை’யைப் போல சிறப்பு நீதிமன்றம் அமைத்து தண்டனை வழங்க வேண்டும். இனி மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்க எண்ணும் எவனுக்கும் ஜெ – சசி கும்பலுக்கு வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும். இன்று இதை நாம் செய்யத் தவறினால், எத்தகைய அட்டூழியங்களும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், அது தமது உரிமை என்கிற அளவுக்கு அரசியல் கிரிமினல்கள் துணிந்து விடுவார்கள்.

jaya-police“தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ரூ. 5 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்தால் அ.தி.மு.க கொள்ளையர்களும், அவர்களது பினாமிகளும் பிடிபட்டு விடுவார்கள்” என்று சட்டசபையில் பேசியிருக்கிறார் ஒரு உறுப்பினர்.

தேர்தலில் அ.தி.மு.க.வைத் துடைத்தெறிந்தது மட்டுமின்றி, வேட்பாளர்களை அடித்து விரட்டியதன் மூலம் தங்களது ஆத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்கள், தமிழக மக்கள். திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளையும், மக்கள் விரோதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் நேரடியாக தண்டிக்கும் உரிமை வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

சட்டம் தானாகவே தன் கடமையைச் செய்ததாக வரலாறில்லை. கொள்ளையடிக்கப்பட்ட தமது சொத்துக்களை மீட்கும் உரிமையும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையும் மக்களுக்கு உண்டு. இதை நிறுவுவதற்கான ஒரு முன்மாதிரி நடவடிக்கை தான் ஜெ – சசி கும்பலின் பினாமி சொத்தான தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம்.

அணிதிரண்டு வாருங்கள்!

“ஜெயா – சசி கும்பல் கொள்ளையிட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய் ! ”
என்ற முழக்கத்துடன் அந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி  தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசே,

  • மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த ஜெயா – சசி கும்பலின் சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கைது செய் ! தண்டனை கொடு !
  • சட்டம் – வழக்கு – வாய்தா என்று ஜெயா – சசி கும்பலைத் தப்பிக்க விடாதே!
  • கும்மிடிப்பூண்டி தாபர் – டூபாண்ட், நெய்வேலி-ஜீரோ யூனிட் அனல்மின் நிலையம், சென்னை ஃபோர்டு மோட்டார் போன்ற நிறுவனங்களுடன் ஜெயா – சசி கும்பல் போட்ட நாட்டை மறுகாலனியாக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்!

ஜெயா – சசி கும்பலின் ஊழல் சாம்ராஜ்யம் குறித்த விபரங்கள்

வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்

  • subramaniam-swamy-and-jayaமன்னார்குடி அருகே ரிஷியூரில் முப்போகம் விளையக்கூடிய 80 ஏக்கர் பூமி; இதில் ஜெயா – சசிகலா வகையறாக்கள் ஓய்வெடுத்துத் தங்கிச்செல்ல பண்ணை வீடு
  • வாழாச்சேரியில் 21 ஏக்கர் நஞ்சை நிலம்
  • மூவாநல்லூரில் 15 ஏக்கர் தென்னந்தோப்பு
  • இலஞ்சிக்குடியில் மா, பலா, தென்னை மரங்கள் கொண்ட 250 ஏக்கர் தோப்பு
  • வல்லத்திற்கு அருகிலுள்ள ஆலக்குடி கிராமத்தில் சிறு விவசாயிகளை மிரட்டி வளைக்கப்பட்ட 250 ஏக்கர் நிலம்
  • சிதம்பரனார் மாவட்டத்தில் அரசகுளம், வல்லக்குளம், கிளாங்குளம், கால்வாய், மீரான்குளம், சேரங்குளம் கிராமங்களில் பாமாயில் விதை விவசாயத்திற்காக 2000 ஏக்கர் நிலம்
  • பசும்பொன் மாவட்டத்தில் மாங்குளம், விளாக்குளம், புளியங்குளம், எஸ். காரைக்குடி, தெற்கு சந்தனூர், வடக்கு சந்தனூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கொடுத்த நிலங்கள், மற்றும் களம் புறம்போக்கு, கால்வாய் ஓடை புறம்போக்கு, மேய்ச்சல் காடுகள் என கிராம பொது நிலங்கள் உள்ளிட்ட 13,000 ஏக்கர் பூமி
  • பட்டுக்கோட்டை – அதிராம்பட்டிணம் சாலையில் பள்ளிக்கொண்டான் கிராமத்தில் 15 பம்ப் செட் கொண்ட 60 ஏக்கர் தென்னந் தோப்பும், நீச்சல் குளத்துடன் உள்ள மாளிகையும்,
  • அதிராம்பட்டிணம் – மதுக்கூர் சாலையில் ராசியங்காட்டில் 6 பம்ப் செட் கொண்ட 20 ஏக்கர் தென்னந்தோப்பு
  • சென்னைக்கு அருகே பூண்டி ஏரியை ஒட்டியுள்ள வேளகாபுரம் கிராமத்தில் 50 ஏக்கரில் மாந்தோப்பு
  • தஞ்சை – குருங்குளம் வட்டத்தில், உடையான்பட்டி கிராமத்தில் 230 ஏக்கர் முந்திரித் தோப்பு.
  • கும்பகோணம் – ஒரத்தநாடு சாலையில் தட்டுமால் படுகை கிராமத்தில் 15 ஏக்கரில் தென்னந்தோப்பு

ஆடம்பர அடுக்கு மாளிகைகள் – வீட்டு மனைகள்

  • தஞ்சையில் அருளானந்த நகருக்கும், பிலோமினா நகருக்கும் இடையே சசிகலாவின் கணவன் நடராசனுக்கும், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்கும் சொந்தமான பளிங்குக்கல் பதித்த இரு மாளிகைகள்
  • நாகை – வெளிப்பாளையத்திலுள்ள 89 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள மேட்டு பங்களா
  • ஜெயலலிதா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்சென்னைக்கு அருகே கொரட்டூரில் 8 கோடி ரூபாய் செலவில் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர மாளிகை
  • சென்னையில் கிண்டி தொழிற்பேட்டையில் 3 கோடி மதிப்புள்ள 2 அடுக்கு பட்டை தீட்டிய கருங்கல் கிரானைட் மாளிகைகள்
  • மதுரையில் உள்ள பிரமாண்டமான தங்கம் தியேட்டர்
  • சென்னை – லஸ் பகுதியிலுள்ள 1 கோடியே 13 லட்சம் மதிப்பு கொண்ட நாகேஸ்வரராவ் மாளிகை.
  • மதுரை கிருஷ்ணராய தெருவில் உள்ள 18 கோடி ரூபாய் மதிப்புடைய 37,114 சதுர அடி பரப்பு கொண்ட காலி மனையும், அடுக்கு மாடி கட்டிடங்களும்
  • மன்னார்குடியில் திவான் பங்களா
  • மகாபலிபுரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் திருப்போரூர் செல்லும் வழியில் பையனூர் கிராமத்தில் 50 ஏக்கர் தோப்பில் மையமாக அமைந்த நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர பங்களா
  • ஹைதராபாத்தில் 100 ஏக்கர் திராட்சை தோட்டம். அதன் நடுவில் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்ட ஆடம்பர பண்ணை வீடு; செகந்திராபாத் – மேற்கு மர்ரேட்பள்ளி பகுதியில் இரண்டு அடுக்கு மாளிகை. இவ்விரண்டு மாளிகைகளிலும் பாதுகாப்பு வசதிக்காக நவீன மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆலைகள் – தொழில்களில் முதலீடு

  • தஞ்சையில் நவீன வசதிகள் கொண்ட விநோதகன் மருத்துவமனை
  • திருவாரூர் அருகே வண்டாம்பாளையம் எனுமிடத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் அரவை ஆலை. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற இவ்வாலை சசிகலாவின் கணவர் நடராசனின் சகோதரர் சம்பந்த மூர்த்தி பெயரில் உள்ளது. இங்கிருந்து தான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டன.
  • தஞ்சை அருகே விளாரில் நடராசனின் மூத்த அண்ணன் சாமிநாதனின் பெயரிலுள்ள ’’மருதப்ப மன்னையார் ஆலை’’.
  • தஞ்சை மேம்பாலம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மைதானத்தில் எஸ்.டி.எஸ்-ன் பினாமி சொத்தாக ’’டெம்பிள் டவர்’’ என்ற பெயரில் ஆடம்பர நட்சத்திர விடுதி.
  • நாகையில் 6 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்’’.
  • ஸ்ரீ பெரும்புதூர் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் 15 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’மைக்கம் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்’’ என்ற தோல் ஏற்றுமதி நிறுவனம்
  • திருத்துறைப்பூண்டியில் இராஜஸ்தான் பளிங்கு கற்களால் அழகு செய்யப்பட்ட மூற்று அடுக்குகள் கொண்ட அன்னை சந்தியா திருமண மண்டபம்.
  • சென்னை – மகாபலிபுரம் சாலையில் பண்டிதமேடு எனுமிடத்தில் 255 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் ’’பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட்’’ எனும் சுற்றுலா ஓய்வு விடுதி.
  • ஊட்டியில் 1264.01 ஏக்கர் பரப்பு கொண்ட 45 கோடி ரூபாய் மதிப்புடைய கிரேக்மோர் எஸ்டேட்; கோத்தகிரிக்கு அருகில் 7.60 கோடி ரூபாய் மதிப்புடைய கோடநாடு தேயிலைப் பண்ணை.
  • மன்னார்குடிக்கு அருகில் சுந்தரக்கோட்டையிலுள்ள செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி
  • கிண்டி தொழிற்பேட்டையிலுள்ள பத்து கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’.
  • வினோத் வீடியோ விஷன், மெட்டல் கிங், ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், மார்பிள் மார்வல், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.ஜெ. லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், விக்னேஷ்வர் பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், நமசிவாயம் ஹவுசிங் டெவலப்மெண்ட், ஐயப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சீ என்க்ளேவ், நவசக்தி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் பில்டர்ஸ், ஓசியானிக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மெண்ட்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 21 நிறுவனங்கள்
  • அந்நிய நாடுகளுடன் தொடர்புடைய ஜெ.ஜெ. டி.வி மற்றும் சூப்பர் – டூப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள்.

அந்நிய நாடுகளில் போடப்பட்டுள்ள முதலீடுகள்

  • ஜெ.ஜெ. டி.வி. நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புவதற்காக 10 லட்சம் அமெரிக்க டாலர் (4 கோடி ரூபாய்) ரிம்சாட் என்ற அமெரிக்க நிறுவனத்தில் முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது.
  • சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் மலேசியாவில் வசிக்கும் சுசீலா என்பவர், அந்நிய நாட்டில் வசிக்கும் இந்தியர் என்ற தகுதியில் 3.35 கோடி ரூபாய் முதலீடு செய்தார். இந்த தொகை பின்னர் இவ்வங்கியில் சசிகலாவின் நிறுவனமான பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட். வாங்கியிருந்த மூன்று கோடி ரூபாய்க்கு ஈடு செய்யப்பட்டது.
  • அந்நியச் செலவாணி மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன் ’’டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் விர்ஜின் இந்தியா’’ எனும் பெயரில் 35 கோடி ரூபாயை இங்கிலாந்திலுள்ள பார்க்ளெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.
  • நிலக்கரி இறக்குமதி ஊழலில் கிடைத்த பணத்தில் ’வெர்ஜின் தீவு’ என்றொரு தீவை விலைக்கு வாங்கி அங்கே ரூ.300 கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும், அத்தீவை அரசுக்கு சொந்தமாக்க வேண்டும் என்றும் த.மா.கா தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஊழல்கள் – மோசடிகள் – முறைகேடுகள்

  • 22jaya2பத்து கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, 176 புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதியை உயர்நீதி மன்றம் முறைகேடானது எனக் கூறி ரத்து செய்தது. இந்நிறுவனங்களில் பயிற்சி முடித்த 50,000 மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர்.
  • தரமற்ற நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதில் 31 கோடி ரூபாய் ஊழல்.
  • தென் இந்திய கப்பல் போக்குவரத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் விற்பனை மதிப்பு கொண்ட பங்குகளை 47 கோடி ரூபாய்க்கு ’’எஸ்ஸார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு’’ விற்றதில் 50 கோடி ரூபாய் முறைகேடுகள்
  • தூத்துக்குடியில் இயங்கும் ஸ்பிக் உர நிறுவனத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 50 லட்சம் பங்குகளை தரகு முதலாளி ஏ.சி. முத்தையாவுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதில், கிட்டத்தட்ட 49 கோடி ரூபாய் முதல் 77 கோடி ரூபாய் வரை கமிஷன். இதில் கையெழுத்திட மறுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. மதுசூதனன், சாராய உடையார், எம்.ஏ. சிதம்பரம், ஜெயா – சசிகலா ஆகியோர்தான் இதற்கு சூத்திரதாரிகள் என்று திராவகம் வீசிய சுர்லா நீதிமன்றத்திலேயே கூச்சலிட்டான். அவனுக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தி தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டது.
  • ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான மயானங்களில் மேற்கூரைகள் அமைப்பதில் 10.5 லட்ச ரூபாய் கையாடல். இப்படி எல்லா மாவட்டங்களிலும் நடந்தது.
  • இலவச வேட்டி – சேலை மற்றும் சீருடை வழங்குவதில் பலவித மோசடிகள் செய்தும், வேட்டி – சேலைகளைப் பதுக்கி வைத்தும் 34 கோடி ரூபாய் ஊழல்
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான சொட்டு மருந்துகள் வாங்கியதில் ஐந்து கோடி ரூபாய் ஊழல்
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபகரணங்கள் வாங்க ஏலம் விட்டதில் 400 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள்
  • தனியார் (ஆம்னி) பேருந்துகளுக்கு வரி குறைத்ததில் 6 கோடி ஊழல்
  • கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகளுக்கு, நகரங்களுக்கு திருப்பி விட்டு, உரிமங்களை மாற்றி உத்திரவிட்டதில் 50 கோடி ரூபாய் தனியார் பஸ் முதலாளிகளிடமிருந்து லஞ்சம். இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 170 கோடி ரூபாய்.
  • கிராமப்புறங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியதில், ஒரு பெட்டிக்கு 4300 ரூபாய் வீதம் கமிஷன் அடித்ததில் 19.48 கோடி ரூபாய் ஊழல்
  • அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் / நடத்துனர் நியமனத்தில் ஊழல். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக வேலை செய்யும் நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்குக் கூட வேலை தராமல், பதவி ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் இவ்வாறு வேலை ‘வாங்கியவர்கள்’ பல ஆயிரம் பேர்.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் பணி நியமனம், 2000 தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் நியமனம், 500 விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் பேரங்கள் – முறைகேடுகள்
  • 8000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்காக பதவி ஒன்றுக்கு 50,000 ரூபாய் விலை
  • சென்னை புழலேரியில் போதுமான அளவு நீர் இருந்தும், அந்நீரைப் பொதுமக்களுக்கு வழங்காது ஏரியில் தண்ணீர் சப்ளை வால்வுகளை அடைத்து விட்டு, லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கியதில் நாளொன்றுக்கு 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சூறையாடல்
  • ’டான்சி’க்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தையும், கட்டிடத்தையும் ஏலம் விடாது ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’ நிறுவனத்திற்காக சுருட்டியதில் 3 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள். இதுவன்றி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நூல்களை இங்கு அச்சிட்ட அதிகார முறைகேடு
  • சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான 47.36 ஏக்கர் காலி மனையை ஜெ.ஜெ. டி.வி.-க்கு வளைத்துப் போடுவதற்கு வசதியாக, தரமணி திரைப்பட நகருக்கு மாற்றி அரசு ஆணை வெளியிட்டதில் அதிகார முறைகேடுகள்.

ஊழலுக்கு துணை நின்ற உயர் அதிகாரிகள்

தியானேசுவரன், ..எஸ்: தமிழ்நாடு கனிம வள வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து, இவ்வாரியத்தில் ஜெயா – சசி கும்பல் அடித்த 100 கோடி ரூபாய் மோசடிகளுக்கு துணை நின்றவர்; தான் சுருட்டிய பணத்தை ’’நமச்சிவாயம் – தர்மாம்பாள் டிரஸ்ட்’’ என்ற பெயரில் முடக்கியுள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது அண்ணா நகர் வீட்டை சோதனையிட்ட பொழுது, 80 லட்சம் பெறுமான 16 கிலோ தங்க நகைகள் – வைரங்கள், 21 லட்ச ரூபாய்க்கான வங்கி முதலீடுகள், ரொக்கமாக இந்திய பணம் 1.7 கோடி ரூபாய், அமெரிக்க டாலர் 5000 (2 லட்ச ரூபாய்) முதலியவற்றைக் கைப்பற்றினர். அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான விசாரணைக்கு வராமலேயே, தலைமறைவாக சுற்றித் திரிகிறார்.

இன்பசாகரன், ..எஸ்: தமிழக அரசின் மருத்துவத் துறைச் செயலாளராக இன்பசாகரன் இருந்த பொழுது, அத்துறையில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்கியதில் 56 கோடி ரூபாய் ஊழல் நடந்தது. தரக்குறைவான மருந்துகளை, அரசு அங்கீகாரம் பெறாத கம்பெனிகளிலிருந்து தன் மனைவியின் பெயருக்கு வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கிய முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இன்பசாகரன் வீட்டில் இருந்து 80 லட்சம் பெறுமான பணம் – நகைகள், 40,000 ரூபாய் பெறுமான அமெரிக்க டாலர்களை வருமான வரித்துறையினர் சோதனையிட்டுக் கைப்பற்றினர். வேறு வழியின்றி இவரைத் தற்காலிக வேலை நீக்கம் மட்டும் செய்தது ஜெயா அரசு.

பாண்டா, ..எஸ்: தமிழக அரசின் வேளாண்துறைச் செயலர். 2.6.94 அன்று சென்னை அண்ணா நகரிலுள்ள இவரது பங்களாவினுள் நுழைந்த ஒரு ‘கொள்ளைக் கும்பல்’ ஒரு கோடி ரூபாயை அவரிடமிருந்து பறித்துக் கொண்டதோடு, சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றது. 55 கோடி ரூபாய்க்கு உரங்கள் – டிராக்டர்கள் வாங்கியதில் ஜெயா – சசி கும்பலுக்கு சேர வேண்டிய தரகுத் தொகைதான் ஒரு கோடி ரூபாய் என்பதும், ’கொள்ளைக் கும்பல்’ மாநில புலனாய்வுத்துறைப் போலீசு அதிகாரிகள் என்பதும் பின்னர் அம்பலமாகி சந்தி சிரித்தது.

இராசகோபாலன்: பதிவுத் துறையின் உதவித் தலைவர். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் மாளிகை, மதுரை தங்கம் தியேட்டர் இரண்டையும் சசிகலா கும்பல் வாங்கிய பொழுது, கிரய மதிப்பைக் குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்து, அரசுக்கு சேர வேண்டிய வருமானத்தை மோசடி செய்தவர். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மூன்று காலி மனைகளும், மேற்கு மாம்பலத்தில் உள்ள சீனிவாசா திரையரங்கும் இவரின் மோசடிகளுக்கு ‘பம்பர்’ பரிசாக கிடைத்தவை.

சி.ராமச்சந்திரன், ..எஸ்: தமிழக அரசின் தொழில் துறையின் முன்னாள் முதன்மைச் செயலர். கிரானைட் ஏற்றுமதி ஊழல், ஸ்பிக் நிறுவன பங்குகள் விற்பனை ஊழல், மற்றும் ஹவாலா மோசடிகளில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க அரசால் தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சி.என். ராமதாசு, ..எஸ்: ஜெயாவின் ஹவாலா மோசடி தொடர்பாக, அரசின் அனுமதி பெறாமலேயே பத்து தடவைகளுக்கு மேல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

ஹரிபாஸ்கர், ..எஸ்: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர். ஜெயா – சசிகலா கும்பலின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்த தலைமை கிரிமினல். மின்வாரிய தலைவராக இருந்தபொழுது நிலக்கரி இறக்குமதி ஊழலிலும், மின் உபகரணங்கள் வாங்கிய 400 கோடி ரூபாய் ஊழலிலும் இவரின் பங்குண்டு. வக்கீல் விஜயன் தாக்குதலில் போலியான குற்றவாளிகளைப் பிடித்து சிறைக்குள் தள்ளி வழக்கை திசைதிருப்ப முயன்ற போலீசு அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்தவர். ’’சசி டிஸ்டில்லர்ஸ்’’ எனும் சாராய ஆலையின் அதிபர் வேலு முதலியார் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு எரி சாராயத்தைக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

ராஜரத்தினம்: 1992-க்கு முன்னால் இன்னாரென்று தெரியாத நபர். 1992-லிருந்து 96-க்குள் 100 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட 11 தொழில் நிறுவனங்களுக்கு அதிபதி. ஏற்கெனவே இயங்கிவரும் பிரபலமான தொழில், வர்த்தக, நிதி நிறுவனங்களைக் கைப்பற்றுவதுதான் இவரது பாணி. பெரிய பெரிய நிறுவனங்களை விலை பேசும் இந்த ’திடீர் முதலாளி’ யார் என்று துப்பறிந்த பம்பாய் பத்திரிகைகள், ராஜரத்தினம் ஜெயலலிதாவின் பினாமி என்பதை அம்பலப்படுத்தின. சிங்கப்பூரில் இருந்து கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஸ்ரீதரன் எம்.பி கடத்தி வந்ததில் இவருக்கும் பங்குண்டு. ’’துங்கபத்ரா ஷுகர் ஒர்க்ஸ், ஈ.பி.எஃப் பைனான்ஸ், சியர்ஸ் எல்காட், இண்டர் கான்டினேண்டல் லெதர்ஸ், பனாரஸ் ஸ்டேட் பேங்க், அப்போலோ டியூப்ஸ், மெட்ராஸ் மோட்டார் பைனான்ஸ் அண்ட் கியாரண்டி கம்பெனி, கோவை அன்னபூர்ணா புட்ஸ் அண்ட் பீவரெஜஸ், ராஜாதிராஜ் ஆயில் இண்டஸ்ட்ரீஸ், கார்வார் பெயிண்ட்ஸ், ராஜ் ஏர், தேவே ஷுகர் – இவை அனைத்தும் ராஜரத்தினத்தின் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள்.

ரெங்கேஷ்: எம்.ஜி.ஆரின் குடும்ப வக்கீல் ரங்காச்சாரியின் மகன். ஜெயா – சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ’’மைக்கம் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்’’ நிறுவனத்தின் ஒரு பங்குதாரர். சிங்கப்பூரில் இருந்துகொண்டு, ஜெயாவின் ஹவாலா மோசடிகளுக்கு உடந்தையாக இருந்து வந்தவர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரிப்பு

  • நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் கும்பல் அறிமுகப்படுத்திய நாட்டை மறுகாலனியாக்கும் புதிய பொருளாதார கொள்கை, ஜெயா – சசி கும்பலின் கொள்ளைக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு தொழில் துறையை வளர்க்கிறோம், அந்நியச் செலவாணியைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் தமிழ் நாட்டையே கூறுபோட்டு அந்நிய நிறுவனங்களுக்கு விற்று விட்டது இந்தக் கும்பல்
  • காடுகளில் பழத் தோட்டங்கள், விளை நிலங்களில் இறால் பண்ணைகள், மலைகளில் சுற்றுலா விடுதிகள் ஆகியவை அமைப்பதற்காக பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்பட்டு விட்டன.
  • நெய்வேலியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க பெல் நிறுவனம் கோரிய தொகையைக் காட்டிலும் இரு மடங்கு தொகை கேட்ட அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதியளித்ததில் ஜெயா – ராவ் கூட்டணி பல கோடிகளை விழுங்கியுள்ளது.
  • தூத்துக்குடி மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஃபோர்டு கார் தொழிற்சாலை அமைப்பதற்காக, சென்னைக்கு அருகே கீழ்கரனை, சித்தமலூர், செங்குன்றம் கிராமப் பகுதிகளில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, 200 ஏக்கர் நிலம் ஃபோர்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிரான அக்கிராம மக்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. ஃபோர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காக விற்பனை வசதி, மூலதன வரி, மற்றும் மின்சார கட்டணச் சலுகைகளை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
  • சென்னை – கும்மிடிப்பூண்டியில் அமையவுள்ள தாபர் – டியூபாண்ட் ஆலை சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியது. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கழிவுகளை இவ்வாலை வெளியிடும். இதன் காரணமாகவே இவ்வாலை கோவா மக்களினால் துரத்தியடிக்கப்பட்டது. ஆனாலும் ஜெயா அரசு இவ்வாலை கும்மிடிப்பூண்டியில் அமைய தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததோடு, ஆரணி ஆற்றில் இருந்தும், நிலத்தடி நீரையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள சலுகை வழங்கியுள்ளது.

கோவில் கொள்ளைகள்

  • மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோவில் நகைகள் கொள்ளை போனது.
  • திருக்காரவாசல் தியாகராசர் சுவாமி கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
  • நாகப்பட்டினம் நீலயதாட்சி அம்மன் கோவிலில் கோமேதக லிங்கம் திருட்டு
  • மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
  • கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் 1 கோடி ரூபாய் பெறுமான நகைகள் கொள்ளை
  • சிதம்பரம் கோவில் நடராசர் காலில் இருந்த வைரக் கொலுசும், 2.25 கிலோ வெள்ளிக் கிரீடமும் களவு போனது.
  • கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூபாய் 5 கோடி பெறுமான நகைகள் திருட்டு. மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமான மதுசூதனன் என்பவனுக்கு இக்கொள்ளையில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
  • தென் மாவட்டங்களில் மட்டும் சிறிதும், பெரிதுமான 400 கோவில்களில் திருட்டு நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
  • எந்தவொரு கோவில் கொள்ளையிலும், திருட்டுப்போன தங்க, வைர நகைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை. கோவில் கொள்ளையர்களுக்கும், கோட்டைக் கொள்ளையர்களுக்கும் இருந்த தொடர்புக்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்?

ஜெயா ஆட்சியில் போலீசின் கற்பழிப்பு, லாக்-அப் கொலைகள்

போலீசு அராஜகத்தில் இந்தியாவிலேயே பஞ்சாபுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் தமிழ் நாட்டுக்குத்தான் என்று கூறுகிறது தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை.

வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் சின்னாம்பதியிலும், வாச்சாத்தியிலும் கும்பல் கும்பலாக பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்ட கணவனைத் தேடி காவல் நிலையத்திற்கு வந்த சிதம்பரம் பத்மினி போன்ற எண்ணற்ற பெண்களும், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்களும் காவல் நிலையத்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டனர்.

திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு 15 வயது சிறுவன் கூட காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டான். சாராயம் விற்க மறுத்த பலர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

கொலை அல்லது கற்பழிப்புக்காக எந்தவொரு போலீசுக்காரனும் தண்டிக்கப்படவில்லை. மாறாக ’நிவாரணம் வாங்குவதற்காக கற்பழிக்கப்பட்டதாக புளுகுகிறார்கள்’ என்று பேசி காமவெறி கொண்ட போலீசு நாய்களுக்கு வக்காலத்து வாங்கினார், ஜெயலலிதா. அ.தி.மு.க ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் போலீசு துணை நின்றனர். போலீசுக்கோ ஜெயலலிதா துணை நின்றார்.

நியாயம் கேட்போருக்கு எதிராக அ.தி.மு.க ரவுடிகளின் தாக்குதல்

ஜெயா ஆட்சியில் தாக்கப்படாத பத்திரிகை நிருபர்கள் வெகு குறைவு. நக்கீரன் நிருபர்கள் பலர் தாக்கப்பட்டனர்; அச்சக உரிமையாளர் கணேசன் போலீசு சித்திரவதையால் இறந்தார்; தராசு அலுவலகம் தாக்கப்பட்டு, இரு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்; தினகரன், தினமலர் நிருபர்களும், சன் டிவி தொழில்நுட்ப மேலாளரும் தாக்கப்பட்டனர்; இல்லஸ்டிரேடட் வீக்லி, மாலை முரசு, முரசொலி பத்திரிகையாளர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார், சபாநாயகர்.

தி.மு.க. வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் ஆகியோர் தாக்கப்பட்டனர். கொடியன் குளம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசு வேடமிட்ட அ.தி.மு.க குண்டர்கள் புகுந்து இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர்.

ஜெயா – சசி கும்பலுக்கெதிராக பேச முனைபவர்கள் யாராக இருந்தாலும், தமிழகத்தில் எந்த ஊராக இருந்தாலும், அவர்களைத் தாக்குவதற்கும் பின்னர் தப்பிச் செல்வதற்கும் அ.தி.மு.க ரவுடிகளுக்கு முழு பாதுகாப்பும் அளித்தது போலீசு.

வெளியிட்டவர்கள்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

  1. இதைத் தெரிந்த பின்பும் ஒன்றும் செய்யாமல் வாழ்வதற்குப் பதில் அரசாட்சியே இல்லாத இடம் ஒன்று இருந்தால் அங்கு சென்று காட்டுவாசியாக வாழ்ந்து விடலாம்.அந்த இடத்தைத் தேடுவதற்குப் பதிலாக இவர்களை எதிர்த்து விடலாம்.நல்லவர்கள் அமைதியாக வாழ்வதை விட கொடுமையானது உலகில் வேறொன்றும் இருக்க முடியாது.

    • காட்டதான் பிஜெபி கடங்காரனுக கம்பெனிகாரங்கலுக்கு பட்டா போட்டு குடுத்துடானுகல.

  2. 15 அல்லது 13 வருடங்களுக்கு முன் 5 ரூபாய் விலையில் ஏனது நண்பர் ஒருவர் கொடுத்தார் வாங்கி படித்த அனுபவம் அப்பொழுதே எனக்கு ரொம்ப பிரமாண்டமா இருந்தது .என்னடா இவ்வளவு சொத்து கொள்ளை , திருட்டு போயிருக்கிறதே யாரையும் கேள்வி கேட்க என்று நினைத்ததுண்டு அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஒரு கேள்வி இருந்தது .ஒன்று எப்படி இவங்களுக்கு இவ்வளவு ஊழல் பட்டியல் கிடைத்தது என்றும் , இதையெல்லாம் யார் கேட்பார் என்றவாறே ஒரு வேளை எதிர் கட்சிக்காரர்கள் கேட்பார்கள் என்ற கேள்வியும் இருந்தது . பின் இவர்களும் ஊழல் என்ற குட்டையில் ஊரி திளைத்தனர் , இப்பொழுது இவை ஒவ்வொன்றும் மிக பெரிய கண்டங்களை, கடல்களை போன்று உள்ளது .இவையாவும் இந்திய சட்டம் , நீதிமன்றங்களால் ஒன்றுமே செய்ய முடியாது . ( யானையை அடக்க அங்குசம்,மாட்டை குதிரையை அடக்க சாட்டை குச்சி அல்லது சாட்டை வார் ) அதே போன்று இந்த நாட்டின் கிரிமினல்கள் குற்றவாளிகளை அடக்க இருக்கும் ஒரேயொரு அங்குசம் அது நக்சல்பாரிகளாகிய ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மட்டுமே .

  3. நந்தன் பாபு அவர்களே,

    அங்குசம் என்பது மக்களின் விழிப்புணர்ச்சியே.
    இந்த நாட்டின் தலை எழுத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். புரட்சி என்பது கொலை ஆயுதம் ஏந்தி தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் எழுச்சியும் ஒரு ஆயுதம் தான். மக்களின் அறியாமையை களைந்து, நாட்டை நல்வழி படுத்த வழி உண்டு என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தினால் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    ஒரு சிறு குழுவினர் ஆயுதம் மூலம் செய்ய முற்படும் புரட்சியை விட, ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்து ஆயுதம் இல்லாமலும் புரட்சியை கொண்டு வர முடியும்.

  4. ஆயுதம் ஏந்துவது போராளிகளின் வேட்கையல்ல. நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா அல்லது எந்த ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மாணிக்கிறான்.

    • இல்லை பாவல்,

      நம் ஆயுதத்தை எதிரி நிர்மாணிக்கிறான் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. நாம் ஆயுதம் எந்துகிரோமா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது.

      நீங்கள் சொன்ன லாஜிக் படி பார்த்தால் நாம் என்ன ஆயுதத்தை தூக்குகிறோம் என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான் என்றால் எதிரி என்ன ஆயுதத்தை தூக்குகிறான் என்பது நாம் தீர்மானிக்க முடியும் என்றும் அர்த்தம் கொள்ளலாமில்லையா?

      மக்களின் விழிப்புணர்ச்சியை மிஞ்சிய ஆயுதம் உலகில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
      ஹீரோ வொர்ஷிப், அறியாமையில் மூழ்கி கிடக்கும் தமிழர்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்து அவர்களை அறிவு வழி பாதையில் நடத்தி சென்றால் நிச்சயம் நல்லாட்சி நடக்கும்.

      போராட்டங்களில் பொதுமக்களின் பங்கு அதிகரிக்க என்ன வழி என்று யோசிக்கலாம்.

      • கற்றது கையளவு லாஜிக் வைத்து தீர்ப்பு எழுதுவதைப்பார்த்தால் கொமரசாமியே தோத்துப்போவாரு! இவர் பேசும் லாஜிக் “நாம் என்ன ஆயுதத்தை தூக்குகிறோம் என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான் என்றால் எதிரி என்ன ஆயுதத்தை தூக்குகிறான் என்பது நாம் தீர்மானிக்க முடியும் என்றும் அர்த்தம் கொள்ளலாமில்லையா?” என்று போகிறது.

        அன்னாரின் லாஜிக்கைத் திருப்பிப்போட்டால் இரண்டாயிரம் பேரைக்கொன்ற மோடி ஏகே 47ஐ ஆயுதப்பூசையில் வைத்து பூசிப்பதும் கொள்ளைக்காரி ஜெயா தனியே வந்தால் கல்லடி பட்டே சாவார் என்கிற பொழுதும் மோடி ஏகே 47தூக்குவதற்கும் ஜெயாவிற்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு இருப்பதற்கும் மக்கள் தான் காரணம் என்றாகிறது.

        அப்படியானால் கல்லடி பட்டு சாவதற்கு பயந்து எதிரி ஏகே 47 தூக்குகிறான் என்றால் ஏகே 47தூக்குகிறவனுக்கு நிகராக மக்கள் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் கற்றது கையளவு?

        சுற்றிவளைத்து வந்தால் ஜெயாவும் மோடியும் சரி. மக்கள் ஆயுதம் ஏந்துவது தான் தவறு என்று முடிப்பார். அங்கே தான் கற்றது கையளவு இன்னொரு கொமாரசாமி!!

        • தென்றல் அவர்களே,

          நான் சொல்வதை அவதூறாக திசைதிருப்புவதையே முழு நேர தொழிலாக வைத்திருக்கிறீர்கள்.
          என்னுடைய பதிவுகளில் எங்கேயாவது மோடி செய்வது சரி, ஜெயலலிதா செய்வது சரி என்று கூறி இருக்கிறேனா? நீங்கள் தான் குமாரசாமி போல பேசுகிறீர்கள்.

          இந்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அது சாத்தியம் இல்லை. முதல் படியாக அவர்களை பதவியில் இருந்து தூக்கியெறிய வேண்டும். இதற்கு இப்போதும் வழி உள்ளது. தேர்தல் வரப்போகிறது. மக்களிடம் தெளிவாக விளக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை பூஜ்யமாக்க முடியும்.

          மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தற்போதைய காலகட்டத்தில் ஆயுத போராட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றன என்பது சமீப கால சரித்திரத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும். அப்படி ஆயுதம் ஏந்தி ஆட்சியை கைபிடிக்கும் நபர் அதே ஆயுதத்தாலேயே மரணம் அடைவதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

          உண்மையான புரட்சி என்பது மக்கள் விழிப்புணர்ச்சியே ஒழிய வேறில்லை.
          ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பொதுமக்களிடம் அவர்களின் மேல் ஒரு அச்சம் இருக்கும், எப்போதும் ஒரு சிறு எச்சரிக்கையோடு தான் அவர்களை கவனிப்பார்கள், எடை போடுவார்கள். அதுவே மக்கள் சக்தியை திரட்டி பாருங்கள். மக்களே உங்கள் ஆயுதம், ஒட்டு மொத்த ஆதரவு உங்களுக்கு கிட்டினால் பின் எந்த ஆயுதமும் இன்றியே நம் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்பது என் கருத்து.

          சரியான தருணத்தில் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அறப்போராட்டத்தை கையிலேடுக்காததால் தான் விடுதலை புலிகள் தோற்றார்கள் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஆயுத போராட்டத்தின் வெற்றி என்பது நிரந்தரமானதல்ல தென்றல்.

          உங்கள் ம.க.இ.க வின் ஆதரவாளர்கள் ஒரு நூறு பேராக இருக்கும் போது அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் உங்களை கண்டு கொள்ள கூட மாட்டார்கள். அதுவே ஒரு ஆயிரம் பேராக இருக்கும் போது அரசு உங்களை கவனிக்க ஆரம்பிக்கும, அவர்களின் பாதையில் நீங்கள் குறுக்கிடுவீர்கள் என்று தெரிந்தால் உங்களுக்கு தடைகளை உண்டாக்க முயல்வார்கள். அதுவே இலட்சம் பேராக இருந்தால் உங்களை வீழ்த்த வியூகங்களை அமைப்பார்கள். அதுவே ஒரு கோடி பேராக இருந்தால் உங்களை எதிர்ப்பதை தவிர்த்து நண்பனாக்க்க முயற்சிப்பார்கள்.
          எண்ணிக்கை என்பது முக்கியம் தென்றல். மக்கள் பேராதரவு இல்லாத எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றாலும் அது தற்காலிக வெற்றியாக தான் இருக்கும். நீடித்த வெற்றிக்கு மக்கள் துணை உங்களுக்கு நிச்சயம் நிச்சயம் நிச்சயம் வேண்டும்.

          • இப்ப திசை திருப்பறது யாரு? மக்கள் ஆயுதம் எடுப்பதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். மகஇக என்ற சின்ன குழு ஆயுதத்தை அணுகுகிறது என்ற பாணியில் எழுதுவது வழக்கம் போல உங்களது அவதூறு பாணி விவாத அணுகுமுறை. விவாதிலிருந்து முற்றிலும் திசை திருப்புகிற போக்கு. கிராமங்களிலே இதைச் சொலவடையாக “பையக் குசுவி பானையில் வைப்பது” என்பார்கள். இந்த நரித்தனம் தேவையற்ற ஒன்று.

            ஜெயலலிதாவை தேர்தலில் பூஜ்யமாக்க முடியும் என்று பச்சைபுள்ள கூட சொல்வதில்லை. இப்படிச் சொல்பவர்கள் ஜெயாவின் கொள்ளைச் சுரண்டலை மூடி மறைக்கும் ஆளும் வர்க்க கைக்கூலிகள் என்பது தங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன்.

            மோடி ஆயுதம் ஏந்துவதையோ ஜெயலலிதாவிற்கு ஆயுத பாதுகாப்பு வழங்குவதைப் பற்றியோ தாங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? இந்த எதிரிகள் ஆயுதம் எடுத்த தற்கு யார் காரணம்?

            மக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்பது புரட்சிகர இயக்கத்திற்கு அடிப்படை தான். உங்கள் வாதப்படியே சொல்லுங்கள். ஏன் இந்த மக்கள் திரள், ஆயுதம் தரித்திரிக்கிற ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தக் கூடாது? அல்லது ஆளும் வர்க்கத்தின் ஆயுத அரசியலுக்கு எப்படி முடிவுகட்டுவது? பாசிச ஜெயலலிதாவை எப்படி அப்புறப்படுத்துவது? தேர்தல் இதற்கு பதில் அல்ல. ஏனெனில் தேர்தல் ஜெயாவை ஆட்சியிலிருந்து மட்டுமே அகற்றுகிறது. இவரது கொள்ளையை எப்படி தண்டிப்பது. நீதிமன்றங்களால் முடியவில்லை. இப்பொழுது என்ன தீர்வு?

            • தென்றல்,

              ஆட்சியில் இருந்து ஜெயலலிதாவை அகற்றுவது என்பது முதல் படியே.
              அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் நேர்மையானவர்களாக, மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி இருக்கிறதென்று நாம் யோசிக்கலாம். என்னை பொறுத்தவரை ம.க.இ.க போன்ற குழுக்கள் தேர்தல் களத்தில் குதித்து மக்களுக்கு களப்பணியாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம்.

              மக்கள் ஆயுதம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது என்ன ஆயுதம் என்பதை பொறுத்து தான் போராட்டத்தின் வெற்றி இருக்கும். கொலை கருவிகளை நம்பி ஈடுபடும் போராட்டங்கள் நீண்ட நாள் நிலைக்காது தென்றல். மக்கள் விழிப்புணர்ச்சி தான் ஆயுதமாக இருக்க வேண்டும்.

              • நேர்மையான ஆட்சியாளர்கள் வந்தால் ஊழல்வாதி அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் அனைவரையும் சட்டப்படியே தண்டிக்க முடியும்.

          • கற்றது கையளவு ,

            புரட்சிகர அமைப்புகள் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுகையில் தாங்கள் ஆயுத போராட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள் மற்றும்ம் விடுதலைப் புலிகளுடனும் கள்ளத்தனமாக ஒப்பிடுகிறீர்கள்.

            மக்களை அணிதிரட்டுவது என்பதும் மக்களின் ஆதரவை பெறுவது என்பதும் வேறு வேறா? மக்களை அணிதிரட்டி மக்கள் அதிகார கமிட்டிகளை அமைப்போம் என்ற முழக்கம் என்ன சொல்கிறது?

            மக்களை அணித்திரட்டுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டுவதும் இரு வேறு பணிகளா? உண்மையில் மக்களை அணிதிரட்டுவதும், மக்களின் ஆதரவைப் பெறுவதும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பான பணிகளாகும். இவையாவற்றையும் மக்களை அரசியல்ரீதியில் ஐக்கியபடுத்த புரட்சிகர அமைப்புகள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் தமது உடல் பொருள் ஆவியை அவர்களுடன் ஒருமுகபடுத்துகையில், தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள் தோழர்களின் போராட்டத்தை கொச்சைபடுத்துவதை தவிர?

            ஜெயலலிதா , மோடி போன்ற மக்கள் விரோத ஜனநாயக விரோத கேடிகள் இந்த அரசை ஆளுவதும், அவர்களது சமூக விரோத செயல்களை இந்த அதிகார அமைப்பு மூலம் தண்டிக்க இயலாமல் இந்த கட்டமைப்பே புழுத்து நாருவதையும் மக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களிடம் அதன் ஊடே ஒரு போர்குணத்தையும் உருவாக்கி அணிதிரட்டுவதே புரட்சிகர அமைப்புகளின் தலையாய பனியாய் உள்ள நேரத்தில், தாங்கள் அங்கெ என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?

            என்ன செய்வது? மோடிக்கு கூட கோடி பேர் முகனூலில் இருப்பதாக கூறுகிறார்கள் அம்மா கட்சியில் கூட ரெண்டு கோடி பேரு இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இதை வைத்து என்ன சொல்ல வருகிறீர்கள்? எண்ணிக்கை தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்றா?

            துப்பாக்கி குண்டுகளில் இருந்து அரசியல் பிறப்பதில்லை அதிகாரம் மட்டுமே பிறக்கிறது என்று தோழர் மாவோ சொன்னார். அதையேதான் தோழர்களும் சொல்கிறார்கள். தாங்கள் அவதூறுகள் அள்ளி வீசுவதைப் பொறுத்துக் கொள்வது என்பது கருத்து சுதந்திரம் என்ற அளவில் மட்டுமே.

            இந்த அரசின் மீதும், போலிசு மீதும் இராணுவம் மீதும் நீதி மன்றங்கள் மீதும் மக்கள் மதிப்பிழந்து போனது என்பது இந்த கட்டமைப்பு புழுத்து நாறுகிறது என்பதையே கட்டியங்கூறுகிறது எனும் போது மீண்டும் மீண்டும் மக்கள் ஆதரவு என்று தாங்கள் பம்மாத்து காண்பிப்பது ஏன்?

      • கற்றது கையளவு,

        கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேலாக வினவில் கருத்திட்டு வருகிறீர்கள். தங்களது வாதங்கள் பெரும்பாலும் நிலபிரபுத்துவ அறநெறி ஒழுக்கங்கள் மற்றும் தனிநபர் வாதங்களாகவே இருக்கின்றன. இன்னும் நெருக்கி சொல்வதானால் ஒரு குட்டி முதலாளியின் பார்வையாகவே உள்ளது. அரசின் குணங்கள், இன்றைய ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் வெகுவாக மாறிவிட்ட சூழலில், இன்னும் நன்னெறிகளை பாடிக் கொண்டு இருந்தால் இருக்கும் கோவணத்தையும் உருவி விடுவார்கள்.

        இன்று குறிப்பிட்ட அளவிற்கு மக்கள் சிறு குறுந் தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மோடி அரசு அவற்றை காலி செய்ய முன்முயற்சியில் ஈடுபடுகிறது. அதாவது இந்த தரகு அரசு அதன் ஆயுதத்தை எடுத்து இந்த மண்ணின் மைந்தர்களை குதறும் போது நாம் என்ன செய்வது?

        ……..
        மக்களை போராட்டங்களில் ஈடுபடுத்த இதுவரையில் தாங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை இந்த அவையில் வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் வினவில் தாங்கள் முதன் முதலில் கருத்துக்கள் பதியும் காலத்தில் இருந்து இதுவரையில் ஒரு ஆக்கபூர்வமான வழிகளையும் தாங்கள் முன்வைக்கவில்லை என்பதையும் இங்கே பணிவுடன் கூற கடமைபட்டுள்ளேன்.

        அதாவது உங்கள் வாதங்கள் பெரும்பாலும் “போராட்டங்களில் பொதுமக்களின் பங்கு அதிகரிக்க என்ன வழி என்று யோசிக்கலாம்” என்று தான் இருக்கிறது. இதில் சரக்கு ஒன்றுமில்லை.

        சரி இப்பயும் ஒன்னும் கேட்டு போகவில்லை. ஜெயலலிதாவை தண்டிக்க தங்கள் வசம் என்ன ஐடியா உள்ளது?

        • சிவப்பு,

          வழியை நான் சொல்லாமல் இல்லை. நான் சொன்ன வழி உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று வேண்டுமானாலும் கூறுங்கள்.

          மக்கள் நலன் மேல் அக்கறை உள்ளோர் அரசியலில் ஈடுபட வேண்டும். மக்களுக்கு ஊழல்வாதிகளால் பாசிசவாதிகளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், ஹீரோ/ஹீரோயின் வொர்ஷிப் மக்களை எந்த அளவுக்கு கீழே கொண்டு போய் வைத்திருக்கிறது என்ற உண்மையை அவர்களுக்கு விளக்க வேண்டும்.விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

          தனி ஒரு மனிதனாக என்னால் முயன்ற வரை இந்த சமுதாயத்திற்கு என்னால் ஆன பயனை செய்து கொண்டு தான் இருக்கிறேன். இது பத்தாது என்று எனக்கும் தெரியும். ஆனால் தற்போதுள்ள நிலையில் ஒரு சாமானிய பொதுமக்களில் ஒருவன் என்ற நிலையில் தான் உள்ளேன்.

          ஜெயலலிதாவை அவர் ஆட்சியில் இருக்கும் போது தண்டிப்பது என்பது இயலாத காரியம். வேதனையான விடயம் தான். பதவியில் இருக்கும் ஒரு அரசியல்வாதியை தண்டிப்பது நம் நாட்டில் மிக மிக கடினம். அதுவும் ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்தவர் என்றால் கேட்கவே வேண்டாம். முதல் படியாக அவரை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். அதற்கு மக்கள் மனதில் அவரது ஊழல், பாசிசம் பற்றிய தெளிவான விளக்கத்தோடு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

          நேர்மையான ஒரு புதிய ஆட்சி அமைந்தால் தான் ஜெயலலிதாவை சட்டப்படி தண்டிக்க முடியும். ஆட்சி அதிகாரம் நேர்மையானவர்கள் கையில் இருந்தால் நாடு நன்மை அடையும்.

          • நல்ல வாதங்கள் மேலே ….
            அரசின் கட்டமைப்புக்கு உட்பட்டு அரசியல் செய்து மக்கள் மனதை மாற்றி ஒரு அரசை உருவாக்கி அதன் பிறகு குற்றவாளிகளைத் தண்டிப்போம் என்பது ,நாம் பிரெஞ்சுப்புரட்சிக்கு முன் உள்ள காலத்தில் வாழ்வது போல் உள்ளது வரலாறு எண்ண்றிய பாடங்களை நமக்கு விட்டுச் சென்ற்ள்ளது … ஆனால் கொள்ளையர்கள், தவறு செய்பவர்கள் திருந்துவது என்பது கிடையாது . இதுதான் மனித இயல்பு இம் மனிதப் பண்புகளுக்குள் தான் மக்கள் நல விரும்பிகளும் தோன்றி தங்களை பதிய விட்டுச் சென்ற்ள்ளனர். அவர்களது எண்ணங்களில் வெற்றிபெற்றவர்களும் உண்டு ,தோல்விஅடைந்தவர்களும் உண்டு ஒரு நல்ல செயல்பாட்டிற்காக நமக்கு ஏற்படும் தோல்விகளும் வெற்றியே! .மக்கள் அனைவரும் ஆட்டுமந்தைகள் அல்ல. கெட்டதை எதிர்க்க வழி தெரியாமல் இருப்பவர்கள் அனேகர். அவர்களுக்கு நம்மைப்போல் உள்ளவர்கள் வழிகாட்டினால் என்ன? மாவீரன் பகத்சிங் எந்த போர்க்களம் சென்று மாவீரனான்? அவரது தீரமான செயல்பாடு அவரை நமக்கு அடையாளம் காட்டியது..அவர் செயல்பாட்ட்டை இந்த நாடு உற்றுநோக்கி, அதன் காரணமாக மக்கள் மனதிலும் உலகநாடுகளின் மத்தியிலும் மாற்றங்கள் ஏற்பட தானும், தனது சகாக்களும் காரணமாக வேண்டும் என்று எண்ணினார்… செயல்பட்டார்கள் செயலில் வெற்றியும் பெற்றனர் ஆனால் நாம் என்ன செய்கிறோம்….? செயல்பாடுகள் இல்லாத எழுத்துகளால் ஒன்றும் நிகழப்போவதில்லை. செயலில் கவனம் வைப்போம் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் ஒன்று படுவோம். நூறு கோடி மனிதர்கள் என்ன இந்த உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்கும் செயல்பாடுகளைச் செய்ய நம்மால் முடியும். தயாரா நண்பகளே?

  5. இன்று நீதிமன்ற அவமதிப்பென்று சண்டமாருதம் செய்யும் பார் கவுன்சில் முந்தைய தீர்ப்பில் குன்காவை தரக்குரைவாக விமர்சித்த போது எங்கு போயிருந்து?

  6. புரட்சி வெடிக்கும் நேரம் இது.

    நம் கருத்தை மிக தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய நேரமும் இதுதான்.

Leave a Reply to கற்றது கையளவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க