Saturday, June 15, 2024
முகப்புஅரசியல்ஊடகம்உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

-

”விளம்பரங்கள்…. தொழில்-வர்த்தக உலகத்தின் நரம்பு மண்டலம். மனித உடலின் நரம்பு மண்டலம் எப்படி நமக்கு புற உலகின் பல்வேறு பரிமாணங்களை அறியத்தருகிறதோ அவ்வாறே, சந்தைக்கு வரும் உற்பத்திப் பண்டங்களின் வெவ்வேறு பரிமாணங்களை நுகர்வோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரங்கள் அறியத் தருகின்றன” – இதுதொழில் மேலாண்மை படிப்பின் (MBA) வகுப்பு ஒன்றில் விரிவுரையாளர் சொல்லக் கேட்டது.

விளம்பரங்களின் உலகம்
இரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களை சமூகங்களை நாடுகளை, முதலாளித்துவம் பொருட்களுக்கான சந்தையாகச் சுருக்கியிருக்கிறது.

சமகால உலகம் விளம்பரங்களின் உலகமாயிருக்கிறது. இரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களை சமூகங்களை நாடுகளை, முதலாளித்துவம் பொருட்களுக்கான சந்தையாகச் சுருக்கியிருக்கிறது. மனித சமூகம் மொத்தமும் நுகர்வோர்களின் கூட்டுத் தொகையாக முன்னிறுத்தப்படுகிறது.

பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல், பண்பாடு, கலை, கலாச்சாரம், மதம், ஆன்மீகம் அனைத்தும் விளம்பரங்கள் இன்றி நமது பார்வைக்கு வராது. அந்த வகையில் மோடியும், பாபா ராம்தேவும், ராகுல் காந்தியும், ஃபேர் & லவ்லியும், கல்யாண் ஜுவல்லர்சும், ஹமாம் சோப்பும் சந்தையின் பரிவர்த்தனைப் பொருட்கள் என்ற முறையில் ஒரே நேர்க் கோட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஒபாமாவின் இந்திய வருகையின் போது பத்து லட்ச ரூபாய் மேல் கோட்டில் வலம் வந்த மோடியின் திருவுருவைப் பார்த்து முகம் சுளித்த நண்பர் ஒருவர், “இவனுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காதா?” என்று சலித்துக் கொண்டார். இந்தியர்களின் சலிப்பு நேபாளிகளின் வெறுப்பாக சமீபத்தில் தான் வெளிப்பட்டது. நேபாள பூகம்பம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய செய்தியாளர்கள் மோடியின் விளம்பரத் தூதுவர்கள் போல செயல்பட்டதை அந்தக் குட்டி நாட்டின் மொத்த மக்கள் தொகையும் சேர்ந்தாற்போல் காறித் துப்பியது.

நடிகர் பிரபு முன்னெடுத்த ’புரட்சிப் போராட்டமும்’, கல்யாண் ஜுவல்லர்ஸ் தமிழர்களின் மேல் தொடுத்த விளம்பரத் தாக்குதலும், கடந்த பத்தாண்டுகளாக நகைக்கடைகள் செய்து வரும் அதீத விளம்பரங்களும், கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ள பல்வேறு வகையான ஒப்பனைப் பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனி விளம்பரங்களையும் நாம் அறிவோம்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் தமிழர் மீது தொடுத்த விளம்பரத் தாக்குதல்
தமிழர்களின் மேல் தொடுத்த விளம்பரத் தாக்குதல்.

அமேசான் வனத்தில் விளைந்த அரியவகை மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட எர்வாமேட்டினில் தொடங்கி, சென்னைக்கு மிக அருகில் வேலூரில் விற்கப்படும் வீட்டு மனை, டேபிள் மேட், டீ.வி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிக்ஸ் பேக் வயிறை உருவாக்கும் அதிசய எந்திரம், முஸ்லி பவர், சிவராஜ் சித்த வைத்தியர், வீடு பெருக்கும் நவீன துடைப்பம், கக்கூஸ் கழுவி விடும் அதிசய எந்திரம், குஜராத் கிர் காட்டின் சிறப்புத் தயாரிப்பான நரேந்திர மோடி வரையிலான விளம்பர நிகழ்ச்சிகள் ஒருவகை என்றால், அச்சு, காட்சி, வானொலி, இணையம் வரையில் சகல ஊடகங்களையும் நிறைத்துக் கொண்டு சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவில் இருந்து எம்.ஜி.ஆர் அணிந்த லுங்கி வரையிலான காணக்கிடைக்காத பொருட்களை விற்கும் விளம்பரங்கள் இன்னொரு வகை.

இவை தவிர டெலி காலிங், தனி மின்னஞ்சல்கள், வீட்டுக் கதவைத் தட்டும் ஆம்வே பாணி நச்சரிப்புகள், தெரு முக்கில் நீலக் குடையின் கீழ் நிற்கும் ஹெர்பா லைஃப் பாணி இம்சைகள், அலுவலக வாசல்களில் வினியோகிக்கப்படும் வங்கி லோன் பற்றிய நோட்டீசுகள்… என்று சகல திசைகளிலிருந்தும் வெள்ளமெனப் பாயும் விளம்பர வெள்ளத்தில் மக்கள் மூழ்கித் திணறுகின்றனர். அவசரத்துக்கு ஒன்றுக்குப் போகலாம் என்று ஒதுங்கினால் பேருந்து நிலையங்களின் அழுக்குப் படிந்த கழிவறையினுள் கூட விடாமல் பின் தொடரும் “மலைமேல் சித்தர்” ‘ஆணுறுப்பின் நீளத்தை அதிகரித்துத் தருகிறேன் வா’ என்று கையைப் பிடித்து இழுக்கிறார்.

பாபா ராம்தேவ் விளம்பரம்
ஆன்மீக அனுபவத்தை புட்டியில் அடைத்து ரக வாரியாக விற்பனைக்கு வைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விளம்பர உலகின் உத்தேசமான வருவாய் 2014-15-ம் ஆண்டில் மட்டும் $66,800 கோடி (சுமார் ரூ 41 லட்சம் கோடி). இது 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மத்திய அரசின் ஆண்டு செலவுத் தொகையான $20,000 கோடி (சுமார் ரூ 12 லட்சம் கோடி) விட மூன்று மடங்கு அதிகம். இந்த ரூ 41 லட்சம் கோடியில் உள்ளூர் அளவிலான விளம்பரங்கள், அரசியல்வாதிகள் தேர்தல் கமிஷனுக்காக காட்டும் போலிக் கணக்குகளையும் சேர்த்தால் மொத்த விளம்பரத்துக்கான செலவுத் துகை இருமடங்காகவும் இருக்கலாம்.

பொருளாதார உலகமயமாக்கல் நடவடிக்கைகள் வேகமெடுத்த பின் – குறிப்பாக சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வரவுக்குப் பின் – விளம்பர உத்திகள் பாரிய அளவுக்கு மாற்றமடைந்தன.

விளம்பரங்கள் பொருட்களை மட்டும் தான் விற்கின்றனவா?

உடன்படித்த பால்யகால நண்பனுக்கு சமீபத்தில் திருமணமானது. நன்கு வறுத்த காப்பிக் கொட்டையின்  நிறம் கொண்ட அவனுக்கு மிக நேர்த்தியான முக அமைப்பு உண்டு. களையான, எப்போதும் சிரித்தாற் போன்ற முகம். இருந்தாலும் தனது நிறத்தைக் குறித்த பெரும் தாழ்வு மனப்பான்மை அவனுக்கு உண்டு. தன்னுடைய தலையில் ஆண்டவன் தப்பாக ஏதோ எழுதி விட்டாரென்றும், தனது சந்ததியாவது சிவந்த நிறத்தில் பிறக்காதா என்ற ஏக்கதோடே வெளுத்த தோல் பெண்ணாகத் தேடி வந்தான்.

சிகப்பழகு கிரீம்
முகத்தோலின் மேற்பரப்பு தனது இயல்பான நோயெதிர்ப்புத் திறன் மற்றும் சூழலுக்குத் தாக்குப் பிடிக்கும் திறனை இழந்து முகமெங்கும் திப்பித் திப்பியாய் கொப்புளங்கள் வெடித்து ரணமான நிலையில் அந்தப் பெண்ணை காண நேர்ந்தது.

ஒரு வழியாக வெளுத்த தோலினள் ஒருத்தியை தரகர் மூலம் கேள்விப்பட்டு, நேரில் பார்த்து திருமணமும் நிச்சயமானது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வெளுப்பின் காரணம் கனமான மேல்பூச்சு என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. திருமணத்தை நிறுத்தவும் முடியாத நெருக்கடியில், அந்த ஒரு நாளிலாவது பெண்ணை வெளுப்பாக காட்ட திறமையான மேல்பூச்சு நிபுணரை சென்னையில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் இறக்கினான்.

திருமணத்தின் பின் இவனது குத்தல் பேச்சுக்களைத் தாளாமல் தோலின் மெலனின் எண்ணிக்கையைக் குறைக்க அந்தப் பெண் கிலோ கணக்கில் பேர் & லவ்லி பயன்படுத்தியிருக்கிறாள். விடிந்தும் விடியாத வேளையில் சோறு வடித்த சுடு கஞ்சியில் ஆவி பிடிப்பதில் ஆரம்பிக்கும் அவளது ஒரு நாள் பொழுது, முகத்தில் ஈஷிக் கொண்ட கார்னியர் களிம்பைக் கழுவியகற்றும் போது தான் அடையும்.

கடைசியில் முகத்தோலின் மேற்பரப்பு தனது இயல்பான நோயெதிர்ப்புத் திறன் மற்றும் சூழலுக்குத் தாக்குப் பிடிக்கும் திறனை இழந்து முகமெங்கும் திப்பித் திப்பியாய் கொப்புளங்கள் வெடித்து ரணமான நிலையில் அந்தப் பெண்ணை சமீபத்தில் காண நேர்ந்தது. நண்பனின் தீர்மானங்களை மாற்றும் அளவிற்கு நட்பு இறுக்கமானதில்லை என்றாலும், தனியே அழைத்து கடிந்து கொண்ட போது அழுதே விட்டான்.

மோடியின் ரூ 10 லட்சம் கோட் உருவாக்கும் மன பிம்பம்
மோடியின் ரூ 10 லட்சம் கோட் உருவாக்கும் மன பிம்பம்

அவன் தன்னைக் கொஞ்சம் தேற்றிக் கொண்ட பின் பேசினான். வெளிறிய முகமும், மெலிந்த உடலும், ஒட்டிய கன்னங்களும், எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் தோல்களுமே பெண்ணழகின் இலக்கணங்கள் என்பதாக தொலைக்காட்சி விளம்பரங்கள் விதைத்திருக்கும் கருத்துக்களின் வீரியத்தை அந்த உரையாடல் உணர்த்தியது.

நுகர்வோரைத் தம் பண்டங்களை வாங்கத் தூண்டுவது தான் விளம்பரங்களின் பிரதான நோக்கம். ஆனால், இந்தப் பிரதான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பாரதூரமானவை.

சமூகப் பொதுப்புத்தியில் நிலவும் கருத்துக்கள், படிமங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விளம்பர நிறுவனங்கள், பொருட்களை நுகர்வோரின் தலையில் கட்டுவதற்கு முன் அவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் சிந்திக்க பயிற்றுவிக்கின்றனர் (entraining the through process). இதற்கென அச்சமூகத்தின் பழக்க வழக்கங்கள், சமூக பொருளாதார வரலாறு, அதன் கலாச்சாரப் பண்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்களை விரிவாக ஆய்வு செய்கிறார்கள்.

தோலின் நிறம் குறித்து கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் கருத்து அழகு சாதனப் பொருட்களை சந்தைப்படுத்தும் விளம்பர நிறுவனங்களின் கச்சாப் பொருள். தமது இயல்புக்கு முரணான வெளுத்த தோலின் மீது இயல்பாக எழும் ஆச்சர்யத்தை பயன்படுத்திக் கொள்வது, அந்த இயல்பைத் தாழ்மையானதாக கட்டமைப்பது, அந்தத் தாழ்மையின் மேல் வெறுப்பு கொள்ளச் செய்வது, பின்னர் அந்த கருத்து நிலையை ஒரு குறியீடாகச் சுருக்கிக் கொள்வது என்கிற தந்திரங்களைக் கையாள்கிறார்கள்.

தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் வெண்மையாக்கும் களிம்புகளின் விளம்பரங்களில் மிக வெளிப்படையாக கருமையை இழித்துப் பழிக்கும் காட்சிகள் இடம் பெற்றன. தற்போது வரும் விளம்பரங்களிலோ அந்தளவுக்கு கச்சாவாகவும் வெளிப்படையாகவும் கருமையை பழிப்பதில்லை என்றாலும், அவர்கள் ஏற்கனவே கட்டமைத்துள்ள கருத்து நிலையை வலுவான குறியீடாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்போது கருமை என்பது இழுக்கு என்று பாடம் நடத்தியவர்கள் இப்போது வெண்மை என்பது தன்னம்பிக்கை அளிக்கக் கூடியது என்கிறார்கள்.

மோடி சரக்கு
மக்களின் பொதுப்புத்தியில் மோடியை ஒரு சரக்காக நுழைப்பதில் வெற்றி கண்ட விளம்பர நிறுவனங்கள்.

மோடியின் விளம்பர இயக்கத்தை மேலாண்மை செய்த ஓகில்வி மேதர் இந்தியா (Ogilvy & Mather India) மெக்கேன் உலகக்குழுமம் (McCann World Group), மேடிசன் வேர்ல்ட் ஆகிய நிறுவனங்கள் ஏறக்குறைய இதே உத்தியைத் தான் பின்பற்றினர். உலகப் பொருளாதார நெருக்கடியின் துணை விளைவாக சுருங்கிப் போன இந்திய பொருளாதாரம், ஏகாதிபத்தியங்கள் தமது நெருக்கடியைத் தீர்க்க மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டச் செய்த முன்னெடுப்புகள், அதற்கு காங்கிரசு துணையாக நின்று அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஊழல்களாக வெடித்துக் கொண்டிருந்தது – இந்தப் பின்புலத்தில், செயல்படாதவர் என்று மன்மோகன் சிங்குக்குக் கிடைத்த பெயர் மற்றும் குஜராத்தின் செயல்பாட்டாளராக தன்னை மிக கவனமாக பத்தாண்டு காலமாக முன்னிருத்திக் கொண்ட மோடியின் பிரச்சாரங்கள்.

இந்த விதமாக ஏற்கனவே தயாராக இருந்த களத்தில் இறங்கிய இம்மூன்று நிறுவனங்களும், ’செயல்பாட்டுக்கு ஏதுவான தலைவரை’ அதாவது ஒரு மீட்பரை எதிர்பார்த்து நின்ற மக்களின் பொதுப்புத்தியில் மோடியை ஒரு சரக்காக நுழைப்பதில் வெற்றி கண்டனர். இதற்காக, மோடியின் கடந்த காலங்கள் மற்றும் குஜராத்தில் அவரது செயல்பாடுகள் குறித்த உண்மையான தகவல்கள் ஆகியவற்றை மூழ்கடிக்க வேறு தந்திரங்களைக் கையாண்டனர்.

மோடியை மீட்பராகவும், ஆம்பிள்ளைச் சிங்கமாகவும் பதிவு செய்ய அவரைக் குறித்து மிகையான மற்றும் பொய்யான தகவல்களை மீள மீளச் சொல்லி உருவேற்றும் வேலையைச் செய்தனர் (Stereotyping). இது ஒரு எல்லையைக் கடந்த போது முதன் முறையாக வாக்களிக்க காத்திருந்த சுமார் 15 கோடி இளம் வாக்காளர்கள் கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

ஆம்வே விளம்பரம்
நுகர்வோரின் தலையில் திணிக்கப்படும் சரக்கோடு சேர்த்து சில கருத்துக்களையும் ஒருவிதமான சிந்தனை முறையையும் சுமத்துகின்றன.

மோடியின் பிம்ப மேலாண்மை நிழல் நிறுவனங்களின் (image management) சார்பில் களமிறக்கப்பட்ட போலி சமூக வலைத்தள கணக்குகள் கணிசமானவை என்றாலும், அதனை உண்மை என்று நம்பியவர்களும் கணிசமானவர்கள் என்பது கவனத்திற்குரியது.

முகத்திலறையும் இந்த தொடர் பிரச்சாரங்களும் விளம்பரங்களும் சந்தையில் நுகர்வோரின் தலையில் திணிக்கப்படும் சரக்கோடு சேர்த்து சில கருத்துக்களையும் ஒருவிதமான சிந்தனை முறையையும் சுமத்துகின்றன.

கருத்தவன் பொய்யன்; வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்; அட்சய திருதையில் தங்கம் வாங்குவது நல்லது; தமிழ்நாட்டிலேயே நேர்மையானவர் கல்யாண் ஜுவல்லர்ஸ் முதலாளி; இந்தியாவிலேயே யோக்கியர் கிங் பிஷர் மல்லையா; இந்தப் பால் வெளி மண்டலத்திலேயே நல்லவர் நரேத்திர மோடி; இளமையின் ’தவறுகளை’ பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே உள்ள லாட்ஜில் முகாமிட்டுள்ள சேலம் சித்த வைத்தியர் திருத்திக் கொடுப்பார்; ஹமாம் சோப்பு போட்டு குளித்தால் எய்ட்ஸ் நோய் கூட அண்டாது; பல் டாக்டர்கள் எல்லோரும் கோல்கேட் பயன்படுத்துகிறார்கள்; செண்டு வாசனைக்கு பெண்கள் மயங்குவார்கள்; குளோசப் பசையில் பல் துலக்கினால் பெண்கள் மயங்குவார்கள்; ஸ்மார்ட் போனும், அதில் ஏர்டெல் இணைப்பும் இணையமும் இருந்தால் சோம்பேறியாய் இருந்தாலும் தப்பில்லை; பிங்கோ சிப்ஸ் தின்னுவது இளமையின் அடையாளம்; வளர்ச்சி என்றாலே அது குஜராத்தும் பாரதிய ஜனதாவும் தான்; ஆணுறுப்பின் நீளத்தை மலைமேல் சித்தரால் அதிகரிக்க முடியும்; குடும்ப குத்து விளக்காக இருந்தால் பொம்மீஸ் நைட்டீஸ் தான் அணிய வேண்டும் – விளம்பரங்கள் விதைத்துள்ள அல்லது விதைக்க முற்படும் கருத்துக்களின் பட்டியலுக்கு முடிவே கிடையாது. மேலே உள்ளவை சில வகை மாதிரிகள் தான்.

நைக்கி ஜஸ்ட் டூ இட்
மீள மீளச் சொல்லி உருவேற்றம்

நுகர்வோரின் சிந்தனையில் கருத்துக்களை விதைக்க, வியாபார நிறுவனங்கள் மீள மீளச் சொல்லி உருவேற்றம் செய்கின்றன (Stereotyping). இதற்காக சில எடுப்பான முழக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன – “கறை நல்லது(Arial)” “Neighbors envy, owners pride(onida)” “Just Do it(Nike)” “Connecting people (Nokia)” “My Man (Moods Condom)”, “Ab ki bar Modi sarkar / Achi din (வேற யாரு? அவரே தான்)

நுகர்வோரின் தர்க்கப்பூர்வமான அல்லது பகுத்தறியும் திறனை மூழ்கடிக்கும் விதமாக உணர்ச்சி சார்ந்த அம்சங்களையே விளம்பர நிறுவனங்கள் குறிவைக்கின்றன. அது அதீத தேசிய வெறியாக இருக்கலாம் (Jingoistic Nationalism) அல்லது பெண்ணுடல் குறித்த ஆழ்மன படிமங்களாக இருக்கலாம், அல்லது பெண்ணை உடமையாக கருதிக் கொள்ளும் கலாச்சார பின்னணியாக இருக்கலாம், அல்லது ஆண் திமிராக இருக்கலாம்.

’கடவுளை’ உணர்த்துவதாகச் சொல்லிக் கொள்ளும் ராஜ யோகம் என்பது கூட இப்போது சந்தையில் பரிவர்த்தனைப் பண்டமாக பேக்கேஜ்ஜுகளில் கிடைக்கிறது. ஜக்கி வாசுதேவின் பதினைந்து நாள் பேக்கேஜ் வேதாத்ரியின் குண்டலினி பேக்கேஜை விட விலை அதிகம். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பேக்கேஜ் இன்னும் அதிக விலை. இவர்களெல்லாம் பொருளாக எதையும் விற்காமல் வெறும் வாயில் வடை சுடும் கோஷ்டிகள் என்றால், பாபா ராம்தேவ் ஆன்மீக அனுபவத்தை புட்டியில் அடைத்து ரக வாரியாக விற்பனைக்கு வைத்துள்ளார். மாட்டு கோமியத்தின் நாற்றத்தை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒன்று மட்டுமே *Conditions Apply.

”காசை எடுத்து நீட்டு கழுதை பாடும் பாட்டு.. ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு” என்று நடிகர் சந்திரபாபு, ஆண்டவன் கட்டளை படத்தில் பாடி 51 ஆண்டுகள் ஆயிற்று – இப்போது நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், காசுக்கு கழுதை மட்டுமல்ல – கடவுளே இறங்குகிறார். கடவுளே இறங்கும் போது கல்வி?

கல்லூரி விளம்பரம்
கல்வி நிறுவனத்தின் சாதனைகளைப் பட்டியலிடும் போது அழுத்தம் தாளாமல் மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் எத்தனை பேர், தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை.

கல்வி நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் இம்மாத செய்தித் தாள்களின் பக்கங்களை அடைத்துக் கொண்டு வருகின்றன; அதில் தங்கள் கல்வி நிறுவனத்தின் சாதனைகளைப் பட்டியலிடும் போது அழுத்தம் தாளாமல் மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் எத்தனை பேர், தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை. ஸ்மார்ட் கிளாஸ், முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், கராத்தே பரத நாட்டியம் நீச்சல் பயிற்சிகள், எட்டாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி நுழைவுப் போட்டித் தேர்வுக்கு தனிப் பயிற்சி… ஒவ்வொரு பள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் தாங்கள் வழங்கும் பேக்கேஜ்ஜின் சிறப்பாம்சங்களைப் பட்டியலிட்டு வருகின்றன. காசுக்கேற்ற தோசை.

சமூகத்தில் சகல துறைகளும் அவற்றின் நடவடிக்கைகளும் அவை சந்தைக்கான – காசுக்கான – பரிவர்த்தனைப் பண்டங்களாக்கப்பட்டு விட்டன. இதனையே ஒரு மேம்பட்ட கலாச்சாரம் போல் மக்களிடையே நிலைநாட்டும் முயற்சியை விளம்பரங்கள் செய்து வருகின்றன.

ஹமாம் விளம்பரம்
இன்னும் எத்தனை நாட்கள் கோயிந்துகளாக இருக்கப் போகிறோம்?

மனிதர்கள் கொண்டிருந்த சமூகம் சார்ந்த தார்மீக கடமைகள் இவற்றின் பாற்பட்ட ஒழுக்கம், கண்ணோட்டம், மதிப்பீடுகள் என்ற மனித சமூக சாரத்தின் கூறுகள் ஒவ்வொன்றாக உருவி எரிந்துள்ள ஏகாதிபத்திய பொருளாதார ஒழுங்கு, மொத்த மனித சமூகத்தையும் வெறும் நுகர்வோராக எந்திரமாக மாற்றியிருக்கிறது.

வங்கிகளைச் சுற்றி அலையும் ஜேப்படித் திருடர்கள், பிஸ்கட்டை மென்று அப்பாவி கோயிந்துகளின் சட்டை மேல் துப்பி விட்டு ”சார், உங்க சட்டையில ஏதோ ஆயி மாதிரி கிடக்கு சார்” என்று சொல்ல, நம் கோயிந்து ”ஙே” என்று திரும்பிப் பார்க்கும் இடைவெளியில் கையில் உள்ள பையைப் பறித்துக் கொண்டு ஓடுவார்கள்.

மோடியிலிருந்து வணிக கார்ப்பரேட்டுகள், கல்விக் கார்ப்பரேட்டுகள், ஆன்மீக கார்ப்பரேட்டுகள் என்று சகலரும் நம் சட்டையில் பின்பக்கமாக பிஸ்கோத்தை சவைத்து துப்பி விட்டு “சார், ஆப் கி பார் அச்சே தின்….” என்று செய்தித் தாளில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.

இன்னும் எத்தனை நாட்கள் கோயிந்துகளாக இருக்கப் போகிறோம்?

– தமிழரசன்

 1. தமிழரசன் எத்தனை சுவராசியமாக எழுத வேண்டியக் கட்டுரை இது. முனைவர் பட்டம் பெற எழுதிய ஆய்வுக்கட்டுரை போல ஏன் இத்தனை இறுக்கம்?

  வாய்ப்பிருந்தால் இதனைப் படித்துப் பாருங்க.

  திருட அனுமதிக்கும் விளம்பரங்கள்

  http://deviyar-illam.blogspot.com/2012/09/blog-post.html

  • தோழர் ஜோதி,

   விளம்பரங்களை கண்டு ஏமாறாமல், வரவுக்கு மேல் தேவையில்லாமல் செலவழிக்காமல்
   வாழ, நம் பகுத்தறிவை பயனபடுத்த தடை இல்லையே ? மேலும் விளமபரங்கள் அனைத்தையும்
   நிராகரிக்க முடியாது. புதிய பண்டங்களை அறிமுக படுத்துவது, மேம்படுத்தபட்ட பண்டங்களை
   பற்றியும், அவைகளின் விலைகள் பற்றியும் information அளிக்கும் முக்கிய பணியை விளம்பரங்கள்
   செய்கின்றன. சரி, உங்க துறையில் விளம்பரம் செய்வதில்லையா ? பின்னலாடைகளை பற்றியும்,
   அதன் நிறுவனங்கள் பற்றியும் விளம்பரம் செய்வதையும் இப்படி ‘வகை’ படுத்த முடியுமா ?

   பிராச்சாரம் என்பதும் விளம்பரத்தின் ஒரு வகை தான். இங்கு வினவு தோழர்கள் சட்டென்று கவனத்தை ஈர்க்கும் வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டுவதும் இதில் சேர்க்க முடியும் !! 🙂

   Advertising pays the advertiser only if the examination of the first sample bought does not result in the consumer’s refusal to buy more of it. It is agreed among businessmen that it does not pay to advertise products other than good ones. Entirely different are conditions in those fields in which experience cannot teach us anything. The statements of religious, metaphysical, and political propaganda can be neither verified nor falsified by experience. With regard to the life beyond and the absolute, any experience is denied to men living in this world.

   In political matters, experience is always the experience of complex phenomena which is open to different interpretations; the only yardstick which can be applied to political doctrines is aprioristic reasoning. Thus political propaganda and business propaganda are essentially different things, although they often resort to the same technical methods.

   https://mises.org/library/advertising-sham

   • அண்ணே அதியமான், சிலபேரு விளம்பரங்கள பாத்தே தத்துவம், முதலாலித்துவம், பொருளாதாரம்ணு அவங்க பயிச்சிக்கினதா நினைச்சிக்கிணு மத்தவங்களையும் படி படின்னு போட்டு கொல்லுராய்ங்களே, அதப் பத்தி இன்னா சொல்றீங்க!

    • கம்யூனிசம் என்றால் ஏதோ அநியாயத்தை தட்டி கேட்பது போலவும் , எளைகளுக்கனது எனபது போலவும் படம் எடுத்து விளம்பரம் செய்யவில்லையா

     ஆனால் அப்படி படம் எடுத்து தோழர்களின் ஜோபியில் இருக்கும் காசுகளை உருவும் காபிடளிஸ்ட் ஐ பாராட்டுகிறேன் 🙂

   • Dear Sir,
    The point in the article is not only about the advertisement. However, the trajectory of ideas we derived out of the influence of an advertisement is dangerous. For example, The advertisements made us to think that oily skin is ugly skin, however, oily skin is ageless(less wrinkle) and healthy skin.

    • yes, this needs to be stopped thru regulation. no issues. but at the same time, Vinavu & Co continioulsy promises total solution for all problems thru their method of ‘revolution’ ; they use marketing and advertisements thru posters, etc propagating this, while misleading the public about the past history of their idealogy and its effects. மாவோ, ஸ்டாலின், போல் போட், ஃபிடல் போன்ற பெரும் தலைவர்களின் செயல்களை பற்றி ஒரு பக்க செய்திகளை மட்டும் ‘விளம்பரம்’ செய்து மக்களை ஏமாற்றுவது மட்டும் என்னவாம் ? 🙂

     முழு உண்மைகளை யாராவது பேசினால், உடனே அது அவதூறுகள் என்பது என்னவாம் ? சகட்டுமேனிக்கு யாரை வேண்டுமானாலும் ‘அவதூறு’ செய்தவதை விட இந்த விளம்பரங்கள் பெரும் கேட்டை விளைவிக்கின்றனவா என்ன ? உதாரணமாக நண்பர் சம்ஸ் பற்றிய மேலோட்டமான, மிக கடுமையான ‘விமர்சனங்கள்’ ! ஜெயலலிதா ஆட்சியில் (இதர ஆட்சிகளை போல் அல்லாமல்) சுதந்திரமாக செயல்படுவது கடினம் என்பதால் அடக்கி வாசிப்பதை, பார்பனிய ஆதரவு என்று திரிப்பது தான் சரியான பிரச்சாரமா ? ஃபாசிச ஆட்சியை கண்டு பயத்தில் அடக்கி வாசிப்பதை பார்பனிய ஆதரவு என்பது சரியா ? தினமணி வைத்தி வேறு விசியம். அவரை இதொடு சேர்க்க முடியாது. ஆனால் சமஸ் போன்ற தைரியமான, வெளிப்படையான, அரிதான ஊடகவியலாளர்களின் முழு பங்களிப்பை கணக்கில் கொள்ளாமல், போட்டு தாக்கி, முற்றாக நிராகரிக்கும் போக்கை, இங்கு பிரச்சாரம் செய்வது என்னவாம் ?

  • ஜோதிஜி சார், உங்களோட ரொம்ப ரொம்ப சுமாரான கட்டுரைக்கு நைசா ஒரு விளம்பரத்தை போட்ட மாறியும் இருக்குதே! சரி வுடுங்க, இந்தக் கட்டுரையை நீங்கள படிச்சு புரிஞ்சுக்கிட்டீங்களான்னே நேக்கு ரொம்ப சந்தேகமாக இருக்கு! என்னமோ சொல்லணும்ணு தோணுச்சு, அம்புட்டுதேன்

  • படித்துப் பார்த்தேன் ஜோதிஜி. மிக்க ஏமாற்றம். உங்களின் கட்டுரை விளம்பரங்களால் உண்டாகும் தாக்கத்தையும் பாதிப்பையும் பற்றி மட்டுமே பேசுகிறது; அதன் பின்னணியைப் பற்றிப் பேசவில்லையே. ஆனால் வினவின் கட்டுரையில் இவ்விளம்பரங்கள் யாரால், ஏன் திணிக்கப்படுகின்றன என்கிற அதன் பின்னாலுள்ள அரசியலும் பேசப்படுகின்றதே. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுதானே மிக இன்றியமையாதது.

   ஆனாலும் வினவு இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். காட்டாக, “ஆத்தா உன்ன மன்னிப்பாளா, தாய்ப்பால் உனக்கு கொக்கோ கோலா” என்று பாடிவிட்டு கொக்கோ கோலா விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள், “ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறணும், நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்ட வளக்கனும்” என்று பாடிவிட்டு தனியார் கல்வி விளம்பரங்களில் நடிக்கும் நடிக, நடிகையர் ஆகியோரை அம்பலப்படுத்தும் விதமாகவும் இருந்திருக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க