Sunday, July 21, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு

சட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு

-

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு குறித்து வழக்குரைஞர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதறிய சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு சென்றோம்.

காலை 10.30 மணி, சைதாப்பேட்டை நீதி மன்ற வளாகம். அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு போலீசு வாகனங்களில் இறங்கும் விசாரணைக் கைதிகள், அவர்களைச் சுற்றி பாதுகாப்பாக நிற்கும் போலீசு, கத்தை கத்தையாக கேஸ் கட்டுகளுடன் பரப்பாக இருக்கும் வழக்குரைஞர்கள் என்று இறுக்கமான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கும் நீதி மன்ற வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த வழக்குரைஞர்களை இடை மறித்து பேசினோம்.

ஒரு சிலர் ஜெயா விடுதலை பற்றிய கேள்விகளுக்கு வாய் திறவாமல் விநோதமாக பார்த்தார்கள். தொடர்ந்து வலியுறுத்தினால் ‘நோ கமன்ட்ஸ்’ ‘ஐ ஏ ம் ஐகோர்ட் லாயர்‘ என்று பறந்து போனார்கள்.

சட்டம் படித்த வழக்கறிஞர்களே ஒரு வழக்கு குறித்து பேசுவதற்கு ஏன் அஞ்சுகிறார்கள்? இது ஏதோ நீதிமன்ற அவமதிப்பு குறித்த பயமல்ல; பொதுவில் சமூக விசயங்கள் குறித்து நிலவும் அக்கறையற்ற உணர்வு இங்கேயும் இருக்கிறது. மேலும் அ.தி.மு.கவை ஆதரிக்கும் கருத்துக்களை பேசியவர்கள் வெளிப்படையாக பேசினார்கள். வழக்கை எதிர்த்து பேசியவர்கள் அதிகம் என்றாலும் வெளிப்படையாக பேசியவர்கள் குறைவே. அது ‘அம்மா’ கட்சி குறித்த பயத்தின் காரணமாக இருக்கிறது. இனி உரையாடிய வழக்கறிஞர்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு……

சைதாப்பேட்டை நீதி மன்றத்தின் வாயிலிலேயே ஒருவர் நீறு பூசிய நெற்றியுடனும், கருப்பு அங்கியுடனும் அமர்ந்திருந்தார். அவர்தான் வழக்குறைஞர் சைதை செல்வம்

சைதை செல்வம்
நீதிபதி தீர்ப்புல தப்புன்னா எங்கிட்ட காட்டுங்க பாக்கலாம்! வழக்குறைஞர் சைதை செல்வம்

“குமாரசாமி தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனரே ?”

“யார் சொன்னது எந்த எடத்துல தப்புன்னு என்கிட்ட காட்டுங்க பாக்கலாம்.”

“ஆச்சார்யா, சுப்பிரமணியசாமி, பல கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஆதாரபூர்வமா சொல்லியிருக்காங்களே ?”

“அவங்க சொன்னா நாங்க ஏன் சார் ஏத்துக்கனும், இவங்க வேணும்னே காழ்ப்புணர்ச்சில சொல்றானுங்க ? சுப்ரமணியசாமியை பத்தி தெரியாதா ? திருட்டு பய அம்மா மேல இருக்க காழ்ப்புணர்ச்சியால தான் அவன் இப்படி பேசுறான். மத்த கட்சிக்காரனுங்க யோக்கியதை ஊருக்கே தெரியும். எங்களை பொருத்தவரை தீர்ப்பு சரியானது அவ்வளவு தான். இந்த மாதிரி சின்ன தப்பு நடந்திருந்தா அதுக்கு ஜட்ஜ் பொறுப்பாக மாட்டார். அது தீர்ப்பையும் பாதிக்காது.”

“இப்போது வழங்கப்படுகிற பல தீர்ப்புகள், ஜாமீன்களால் நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டதாக மக்கள் சொல்றாங்களே உண்மையா ?”

“உண்மை தான் நீதிமன்றங்கள் மேல மக்களுக்கு நம்பிக்கை குறைஞ்சிருக்கு. 2ஜி வழக்கு அதுக்கு ஒரு உதாரணம்.”

“சொத்துக்குவிப்பு வழக்கை அப்படி சொல்ல முடியாதா ?”

“என்ன சார் நீங்க திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டுருக்கீங்க. இந்த கேசே காழ்ப்புணர்ச்சியில போடப்பட்ட பொய் வழக்குன்னு இத்தனை காலமா சொல்லிகிட்ருக்கோம். நீதிமன்றமும் தண்டனை இல்லைன்னு தீர்ப்பு குடுத்துடுச்சி அதுக்கப்புறமும் எதுக்கு அதையே சொல்றீங்க. எதிர்க்கட்சிக்காரனுங்க தான் தேர்தல் ஆதாயத்துக்காக பேசுறானுங்க உங்களுக்கு என்ன வேணும் ?”

“பெரும்பாலான நீதிபதிகள் ஊழல்பேர்வழிகள்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?”

“அது பத்தி தெரியல சார்.”

“நீதித்துறையில் இது பற்றி பரவலாக பேசப்படுதே ?”

“எனக்கு  தெரியலைன்னா தெரியலைன்னு தான் சார் சொல்வேன். வேற என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறீங்க ?”

“நீங்க எந்த கட்சி அ.தி.மு.க வா ?”

“ஆமாம்” .

_______________________

வழக்குரைஞர் ஷாந்த், சைதாப்பேட்டை

“குமாரசாமியின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது சார். தீர்ப்பில் முறைகேடு நடந்துள்ளது. எல்லா இடத்திலும் அப்படித்தான் பேசிக்கிறாங்க. ஒரு வேளை மேல் முறையீட்டுக்குப் போனால் தண்டனை வரும் என்று தான் நினைக்கிறேன்.

ஒரு நீதிபதி  இது மாதிரி அடிப்படை கணக்கிலேயே தவறு பண்ணக்கூடாது, தீர்ப்பு ஒருத்தரோட தலைவிதியையே மாத்தும் என்கிறப்ப கவனமா செயல்பட்டிருக்கனும். குன்காவோட தீர்ப்ப எடுத்துகிட்டா அதுல ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியாது. இதுவரைக்கும் அவர் எழுதின தீர்ப்பு எதுவுமே தவறா இருந்தது இல்ல. சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போயும் கூட ரிஜெக்ட் ஆனதில்ல. ஆனா குமாரசாமியோட தீர்ப்ப எடுத்துகிட்டா சாதாரண கூட்டல் கழித்தல் கணக்கு கூட சரியா போடல. இதனால அட்வகேட்ஸ் மட்டுமில்ல பொது மக்களே கூட இந்த தீர்ப்பை மதிக்கமாட்டேங்கிறாங்க.”

வளர்ப்பு மகன் திருமண செலவு…

“அது நாட்டையே திரும்பிப் பாக்க வச்ச கல்யாணம் சார். தீர்ப்பை மாத்துனவங்களுக்கு அதை மட்டும் மாத்தத் தெரியாதா என்ன ? ஊடகங்கள்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவா இருக்குறப்ப எப்படி தீர்ப்பை எதிர்த்து எழுதுவாங்க ? இங்க எந்த ஊடகமும் சரியில்ல அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.

பார் கவுன்சில் தலைவர் செல்வம் சொல்றது தவறான கருத்துன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க. குன்காவை விமர்சனம் பண்ணப்ப ஒன்னும் சொல்லாம இப்ப மட்டும் பேசக்கூடாதுன்னா எப்படி ?

நீதித்துறை மேல யாருக்குமே நம்பிக்கை இல்லங்க.  ஒரு சில நீதிபதிகள் நல்லவங்களா இருக்காங்க அவ்ளோ தான்!”

____________

வழக்குரைஞர் காசி, சைதாப்பேட்டை

“நீதிபதி சொல்லறது தான் தீர்ப்பு. தவறுன்னா மேல் கோர்ட்டுல அப்பீல் போட்டு நிரூபிக்கணும், அது தான் தீர்வு. மக்கள் பல கருத்துகள் சொல்லுவாங்க அதைதெல்லாம் ஏத்துக்க முடியாது. வழக்கு, குற்றப் பத்திரிக்கை, தீர்ப்பு இதுல என்ன சொல்லியிருக்காங்கன்னு மக்களுக்குத் தெரியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி நான் கருத்து சொல்ல விரும்பல” என்று சட்டம் தெரியாதவர்களிடம் எல்லாம் நான் என்ன பேசுவது என்பதாக நம்மை பார்த்தார்.

___________

பெயர் கூற விரும்பாத ஒரு பெண் வழக்குரைஞர், “சார் சிம்பிளா சொல்லணும்னா இந்த தீர்ப்பில் அட்வகேட்ஸ் யாருக்கும் திருப்தி இல்லை அவ்ளோதான்” என்று முடித்துக்கொண்டார்.

இவரும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு வழக்கறிஞர்:

“இந்த தீர்ப்பை எல்லாம் எவனாவது முட்டாளாக இருந்தால் தான் வரவேற்க முடியும் நான் இதை கடுமையாக எதிர்க்கிறேன்.”

“என்ன காரணத்தால் எதிர்க்கிறீங்க ?”

“இது நேர்மையான ஜட்ஜ்மெண்டே இல்லை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பு மாதிரி தெரியுது. ஜட்ஜ்மெண்டே நான்சென்ஸா இருக்கு. சில லட்சங்கள்ல கல்யாணம் செய்ததா குமாரசாமி சொல்லியிருக்காரு. ஆனா குன்கா உண்மையான செலவு என்னன்னு சொல்லியிருக்காரு. அவரோட தீர்ப்பு தான் சரியான தீர்ப்புன்னு கருதுறேன்.”

“கூட்டல் கழித்தல் கணக்கின் பின்னணி என்ன என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் நீங்கள் கேட்பது போல நிச்சயம் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது” என்றார் சிரித்துக்கொண்டே. “பத்திரிகைகள் அமைதியாக இருப்பதற்கும் ஒரு பின்னணி இருக்கும். எல்லாம் அவங்க அதிகாரத்திற்குட்பட்டது தானே ?”

“ஜட்ஜ்மெண்ட் பத்தி யார் வேணும்னாலும் டிஸ்கஸ் பன்னலாம். நீதிபதியை தான் விமர்சிக்கக்கூடாது, தீர்ப்பை தாராளமா விமர்சிக்கலாம். பார் கவுன்சில் தலைவர் செல்வம் அவங்க சார்பான ஆளா இருக்கலாம் தெரியல. நீதி மன்றத்தின் மேல மக்களுக்கு நம்பிக்கை குறைந்திருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும், கார்பரேட்டுகளுக்கும் நீதி மன்றம் துணை போவது சமீப காலத்தில் அதிகமாகியிருக்கிறது.”

“அப்படியானால் இனி சட்டப்படி நீதி பெற முடியாது ஆனால் நீதிபதிகள் நினைத்தால் குற்றவாளிகளை காப்பாற்றலாம் என்றால் இந்நிலைமை எங்கு கொண்டு போய் விடும் ?”

“நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். நீதிபதிகள் தான் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தத்து மீது மட்டுமில்லை நிறைய நீதிபதிகள் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சட்டுகள் இருக்கு.”

“நீங்க எந்த கட்சி ?”

“எந்த கட்சியும் இல்லை.”

வழக்குரைஞர் ஆத்திச்சூடி, சைதாப்பேட்டை.

“லா மேனுக்கும் லே மேனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தீர்ப்பை எல்லாம் நீதிபதிங்க கையில எழுதறது இல்ல டிக்டேட் பண்றதோட. சரி அதுல தப்பு வர்றது சகஜம் ஜூடிசியல் எரரை ஜூடிசியல் ரிவ்யூவ்ல திருத்தலாம்.

வழக்குரைஞர் ஆத்திச்சூடி
நீதியரசர் குமாரசாமி அய்யா குற்றமே பண்ணலைன்னு சொல்லலை. சாட்சிகள் மூலம் அதை சரியா நீருபிக்கலைன்னு தான் சொல்றாரு – வழக்குரைஞர் ஆத்திச்சூடி

நீதியரசர் குமாரசாமி அய்யா குற்றமே பண்ணலைன்னு சொல்லலை. சாட்சிகள் மூலம் அதை சரியா நீருபிக்கலைன்னு தான் சொல்றாரு. வாயில்லாத மாட்டின் புகாருக்கு தன் மகனைக் கொன்று நீதி வழங்கிய மனுநீதி சோழன் வாழ்ந்த மண் இது. அதே நேரத்தில் ஏமாத்துறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாறுறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க. அதனால தான் பானிப்பூரி வாங்கிற மாதிரி பெயில் வாங்குறாங்க.

பணம் இருக்கிறவங்களுக்கு உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், பணம் இல்லாதவங்களுக்கு லோக் அதாலத், ஆர்பிட்ரேட்டர், மீடியேசன், கவுன்சிலிங் இப்படி நிறைய நீதித்துறைகள் இருக்குது. மக்கள் அதை பயன்படுத்தணும். மக்களுக்கு நீதித்துறை பற்றிய விழிப்புணர்வு வரணும். ஒரு பேப்பர்ல எழுதி புகார் அனுப்புனா கூட அதை நீதி மன்றம் வழக்கா பதிவு செய்யும். புகாரே பண்ணலைன்னா கூட சூ மோட்டோ மூலம் நீதிமன்றமே வழக்கு தொடுக்கும். நீதி துறையில் எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கு நாம தான் அதை பயன்படுத்தணும்.”

பெயர் கூற விரும்பாத வழக்குரைஞர்.

“இந்த கேசில் சரியான முறையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்களா என்பது சந்தேகம் தான். கர்நாடகா அரசுக்காக வாதாடிய அட்வகேட் ஆச்சாரியாவே தனக்குப் போதுமான நேரம் தரப்படவில்லை என்று குற்றஞ் சாட்டியுள்ளார். இந்த கேசில் முற்றிலும் தவறான கணக்கு போடப்பட்டுள்ளது என்று குமாரசாமி மீது ஆச்சார்யா குற்றம் சாட்டிய பிறகு தான் குமாரசாமி தனது அசிஸ்டென்டுகளிடம் இது குறித்து ஆய்வு செய்யுமாறு கூறியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய தவறு ?

கல்யாணத்தில் எவ்வளவு நகை போட்டிருந்தார்கள், எவ்வளவு செலவானது என்பதை நீதிபதி மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது அட்வகேட் தரும் ஆதாரங்களை வைத்துத் தான் மதிப்பிட முடியும். ஆனால் மக்கள் இதற்குத் தேர்தலில் தான் தீர்ப்பு வழங்குவார்கள்.

சல்மான் கான் வக்கீல் அவருக்காக வாதாடுகையில், ஏன் இந்த மக்கள் ரோட்டில் படுத்து உறங்குகிறார்கள் என்று கேட்கிறார். நாட்டில் வீடு இல்லாதவர்கள் எல்லாம்  ரோட்டில், ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டாப்புகளில் தான் உறங்குகிறார்கள். அரசாங்கம் இந்த ஏழை மக்களுக்கு எதுவும் செய்ய வக்கில்லாத கேவலமான நிலையில் இருக்கு.

90% பணக்காரர்களுக்கு ஈசியா ஜாமீன் கிடைக்குது, ஆனா 2.5 லட்சம் பேர் ஜாமீன் கிடைக்காத விசாரணைக்கைதிகளாக இருக்காங்க. நீதிபதிகள் நினைத்தால் வழக்கின் தன்மையையோ அல்லது ஆதாரங்களையோ உதறிவிட்டு தாங்கள் நினைத்தபடி தீர்ப்பு கொடுக்கும் நிலைமை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய்விடும்.

எனவே ஒட்டுமொத்த நீதித்துறையையும் குறை சொல்வது தவறு. நிறைய நீதிபதிங்க மோசமா இருப்பதும் உண்மை தான். இப்ப கூட ஆந்திராவில் ஒரு ஜட்ஜ் தீர்ப்புக்காக ஐந்து கோடி ரூபாய் பேரம் பேசி அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. இப்ப நீதிபதிகள் எல்லாம் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கானோ அப்படி இருக்காங்க.

எந்த கட்சியிலும் இல்லை கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி ஓட்டுபோட்டேன்.”

வழக்குரைஞர் குமரன், சைதாப்பேட்டை.

“அ.தி.மு.க அட்வகேட்ஸ் வேணும்னா ஏத்துப்பாங்க, எங்களை மாதிரி ஆளுங்க எப்படி வரவேற்க முடியும். தீர்ப்பில் நிறைய பிரச்சினைகள் இருக்கு சார், குன்கா தீர்ப்பு மாதிரி இது அவ்வளவு அலசி ஆராயப்பட்டு வழங்கிய தீர்ப்பு மாதிரி தெரியல. அதனால சரியா இருக்கும்னு தோனல. தீர்ப்பை பத்தி விமர்சிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல, அது நீதி மன்ற அவமதிப்பும் இல்லை நீதிபதிகளை பத்தி தான் விமர்சிக்கக்கூடாது.

சொத்துக் குவிப்பு வழக்கு, சல்மான் கான் ஜாமீன் போல நீதிமன்றங்கள் பல மோசமான தீர்ப்புகளையும் ஜாமீன்களையும் வழங்கியிருக்கு உண்மை தான், ஆனா நீதி மன்றங்கள் மட்டுமா அப்படி இருக்கு. நீங்க கேட்ட மாதிரி பத்திரிகைகள் ஏன் இந்த தீர்ப்பை பத்தி துணிச்சலா எழுதல? எல்லாம் ஊழல்பட்டிருக்கு நீதிமன்றங்கள் மட்டுமில்ல இங்கே எதுவுமே சரியில்லை. பல கேஸ்ல போலீசே திருடர்களோடு சேர்ந்து கொள்ளையடித்தது அம்பலமாகியிருக்கு.”

வழக்குரைஞர் முகம்மது, சைதாப்பேட்டை.

“குமாரசாமியின் தீர்ப்பு முற்றிலும் தவறானது. ஒரு வழக்குன்னா அதுல ரெண்டு தரப்பு விவாதத்தையும் முழுமையா கேட்டுட்டு தான் தீர்ப்பு கொடுக்கனும் இது மிக மிக அடிப்படையான விசயம். ஆனா அதுலயே தப்பு நடந்துருக்கு. இன்னொரு பக்கம் அவருக்கு என்ன பிரஷர்னு யாருக்குத் தெரியும் ?

வழக்குரைஞர் முகமது
“குமாரசாமியின் தீர்ப்பு முற்றிலும் தவறானது” – வழக்குரைஞர் முகம்மது

குமாரசாமியின் பழைய ஜட்ஜ்மெண்டை எல்லாம் பாத்தீங்கன்னா ரொம்ப நியாயமா இருக்கும், அதனால தான் அவரை அரசு அப்பாயிண்ட் பன்னுச்சு, மத்த தீர்ப்பெல்லாம் தப்பா கொடுத்திருந்தாலோ அல்லது கணக்குல தவறு பண்ணியிருந்தாலோ அது இவரோட நேச்சர்னு விட்டுடலாம். ஆனா குமாரசாமி அப்படி இல்ல. இதுல மட்டும் இத்தன தப்பு இருக்குன்னா பாக்குறப்பவே வேற ஏதோ நிர்ப்பந்தம்ணு தோணுது.

எவ்வளவோ நல்ல ஜட்ஜஸ் இருக்காங்க என்ன பிரச்சினைன்னா யாரு ரூலிங் பார்ட்டியா இருக்காங்களோ அவங்க தான் ஜட்ஜுகளை செலக்ட் பண்றாங்க ஐந்து நீதிபதிங்கள் ஒரே வயசுல எல்லா தகுதியும் உள்ளவங்களா இருக்காங்கன்னா, திடீர்னு ஆறாவதா ஒருத்தரை சம்பந்தமே இல்லாம சீஃப் ஜஸ்டிஸா போடுறாங்க. எல்லா துறையும் எப்படி மோசமா இருக்கோ அதே போல தான் இதுவும் களங்கமுள்ளதா இருக்கு. யார் ரூலிங் பார்ட்டியோ அவங்க கையில தான் நீதி துறை இருக்கு.

போன தேர்தல்ல நோட்டாவுக்குத் தான் போட்டேன். போட்டோ செய்தியெல்லாம் போட்டு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குற அளவுக்குப் போகாம பாத்துக்கங்க.”

வழக்குரைஞர் சரவணன், சைதாப்பேட்டை.

“ஒரு ஜட்ஜை விமர்சனம் பண்றதுக்கு நமக்கு அருகதை இல்ல! லீகல் லாங்வேஜ்ல அழகா சொல்லனும்னா ‘அரசன் தவறிழைப்பது இல்லை’ என்ற முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கணும். ஒரு கருத்து இருந்தா அதற்கு எதிர் கருத்து வரும். மக்கள் ஆயிரம் சொல்வாங்க. சட்டப்படி லோயர் கோர்ட்டு நமக்கு எதிரா தீர்ப்பு சொன்னா அதுக்கும் மேல் ஹைகோர்ட்டுக்கு போய் நீதி கேக்கணும் அது தான் வழி. நம்ம கையில ஐந்து விரல் இருக்குது. ஐந்தும் ஒண்ணு மாதிரியா இருக்குது ?இது இந்த நீதிமன்ற கண்ணோட்டத்திலிருந்து கொடுத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை நாம தப்புன்னு சொல்லமுடியாது அது ரொம்ப தப்பு” என்றார்.

சந்திரசேகர், கார்பரேட் நிறுவனத்தின் வழக்குரைஞர், சைதாப்பேட்டை

வழக்குரைஞர் சந்திரசேகர்
“இப்போது நீதியான ஜனநாயம் இல்ல பணநாயகம்தான் இருக்கிறது. ” – வழக்குரைஞர் சந்திரசேகர்

“இப்போது நீதியான ஜனநாயம் இல்ல பணநாயகம்தான் இருக்கிறது. பல்வேறு கோணங்களில் பார்த்தாலும் நீதி தோற்றுள்ளது. உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுமா ? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பது இந்தியாவின் மிகப்பெரும் மூன்று பதவிகளில் புரொட்டொக்கால்படி பெரும் பதவி. ஒரு சாதாரண குடிமகன் , சர்வசாதாரணமாக ஒரு குற்றச்சாட்டை அந்த பதவியில் இருபவர் மீது கூறி விட முடியாது, கூறக்கூடாது. யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் அது பிரதமராகவே இருந்தாலும். மன்மோகன்சிங் ரிட்டயர்ட் ஆனாலும் சி.பி.ஐ இப்போது விட்டதா என்ன ?”

வழக்குரைஞர் சிங்காரம், சைதாப்பேட்டை.

“இந்த தீர்ப்பை பற்றி நாங்க  சொல்லறதை விட, ஜனங்க சொல்லறது தான் சரி. நான் எங்க ஆளுனு சொல்ற செல்வம் சொன்னதுக்கு மட்டும் பதில் சொல்றேன்.

ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை விமர்சனம் பண்ணா அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவேன்னு சொல்றதுக்கு இவர் யார்? எல்லாருக்கும் இவரா தலைவர் ? இவர் அ.தி.மு.க சாயம் பூசிய ஆளு. அ.தி.மு.க கொடுத்த பதவி அது. அ.தி.மு.க  வாரிய தலைவர் மாதிரி, இவர் பார் கவுன்சில் சேர்மன் அவ்வளவு தான். இதுக்கு முன்னாடி குன்கா தீர்ப்பு வழங்கிய போது அ.தி.மு.க காரங்க கேவலமா போஸ்டர், கட் அவுட் வைச்சி அவரை திட்னாங்களே அப்ப எங்க போனாரு இந்த செல்வம் ?

நீதிபதி குமாரசாமி தீர்ப்பால் நீதிமன்ற மாண்பு மட்டுமல்ல இந்திய மானமும் போச்சு. ஜெயலலிதா ஊழல் செய்தாரா இல்லையானு தீர்ப்பு சொல்லச் சொன்னா 10% ஊழல் செய்தாரு அது ஊழல் இல்லைன்னு சொல்றாரு இதுவா நீதி?”

பெயர் குறிப்பிடாத தி.மு.க வழக்குரைஞர், எழும்பூர்.

“ஊரறிய கொள்ளையடித்த குற்றவாளிகளை விடுவித்திருக்கும் இந்த தீர்ப்பை எப்படி சார் வரவேற்க முடியும்?

வளர்ப்பு மகன் கல்யாணத்தை எப்படி கோடி கோடியா கொட்டி நடத்தினார்கள் என்பதை தமிழ்நாடே பார்த்தது. நாங்க சொன்னா தி.மு.க காரன் சொல்றான்னு சொல்லுவாங்க. குமாரசாமி வேணும்னா கல்யாணத்துக்கு போன தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை கூப்பிட்டு விசாரிக்கட்டும். இல்லைன்னா தேவாரத்துக்கிட்ட கேட்கட்டும்.”

வழக்குரைஞர் முருகன், எழும்பூர்.

“சட்டமே இப்ப கார்ப்பரேட்மயமாகி வருது சார். ஜெயலலிதா அம்மாவை ஊழல்னு கண்டிக்கிறோம், முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபர், இப்படி செய்வது ஜனநாயகத்தை சிதைக்குது. ஆனா கார்ப்பரேட்காரனுங்க வரிச்சலுகையா பல லட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கிறானுங்க நிலம் கையப்படுத்தும் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம் இப்படி பல சட்டங்களை அவனுங்களுக்காக போடுறாங்க ஏழைகளுக்கு என்ன சட்டம் இருக்கு ?

அம்மா தீர்ப்பு மட்டுமா இங்கு பிரச்சினை ? இது சரியா இல்லையான்னு மேல் கோர்ட்டு பார்த்துக்கும். எப்பவும், அவங்கள புடிச்சவங்க ஒரு மாதிரியும் புடிக்காதவங்க ஒரு மாதிரியும் தான் பேசுவாங்க. பொதுவா நீதிமன்றத்தின் மேல நம்பிக்கை குறைஞ்சிக்கிட்டே தான் போவுது, தப்பு எங்க சார் இல்ல?”

ஜெயராமன், அ.தி.மு.க, எழும்பூர்

வழக்குரைஞர் ஜெயராமன்
“எங்க அம்மா விடுதலை ஆகியிருக்காங்க, அதை வரவேற்காம எதிர்க்கச்சொல்றீங்களா ?” – வழக்குரைஞர் ஜெயராமன்

“தீர்ப்பை வரவேற்கிறோம் மக்களும் ஆதரிக்கிறாங்க தி.மு.க காரனுங்களும் மற்ற கட்சிக்காரனுங்களும் தான் எதிர்க்கிறானுங்க அதுக்கு அம்மா மேல உள்ள காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.”

“ஏன் வரவேற்கிறீங்க ?”

“இது என்ன சார் கேள்வி எங்க அம்மா விடுதலை ஆகியிருக்காங்க, அதை வரவேற்காம எதிர்க்கச்சொல்றீங்களா ?”

“கூட்டல் கழித்தல் கணக்கு பிரச்சினை பற்றி ?”

“எதுவாயிருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கும், ஹைகோர்ட்டுக்கு மேல சுப்ரீம் கோர்ட் இருக்கு இவனுங்க எதுக்கு சும்மா சாமி ஆடுறானுங்க. கூட்டல் கழித்தல் பிரச்சினைங்கிறது டைப்போகிராபிக்கல் எரர் அதுக்கு நீதியரசர் பொறுப்பாக மாட்டார்.”

“தீர்ப்பை பற்றி விமர்சிக்கக்கூடாதுன்னு பார்கவுன்சில் செல்வம் கூறியிருக்கிறாரே ?”

“ஆமா ஒரு ஜட்ஜ்மெண்ட் வந்த பிறகு அதை பற்றி விமர்சிக்கக்கூடாது. சட்டப்படி பார்த்தா இந்த ஜட்ஜ்மெண்ட்டுக்கு எதிரா பேசிக்கிட்ருக்க எல்லோர் மேலையும் கண்டம்ப்ட் ஆஃப் கோர்ட் போடனும்.

இந்த மாதிரி நல்ல தீர்ப்பு வந்ததனால தான் மக்களுக்கு நீதி மன்றத்தின் மீது நம்பிக்கையே வந்திருக்கு. தீர்ப்பு வேற மாதிரி வந்திருந்தா தான் நம்பிக்கை போயிருக்கும்.

2ஜி வழக்குல என்ன ஆச்சு குற்றஞ்சாட்டப்பட்ட எல்லாம் வெளிய இருக்காங்க, நிலக்கரி ஊழலில் என்ன ஆச்சு, யார் தண்டிக்கப்பட்டிருக்காங்க ? காங்கிரஸ் தி.மு.க ஆட்சியில் எத்தனை ஊழல் நடந்திருக்கு ? கருணாநிதி குடும்பம் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கு ஆனா யாரும் தண்டிக்கப்படலையே. இப்படி இருந்தா மக்களுக்கு நீதி மன்றத்தின் மேல நம்பிக்கை குறையத்தான் செய்யும்.

அதோட இப்பல்லாம் ஊழல்ங்கிறது ரொம்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு. யார் தான் ஊழல் பண்ணாம இருக்காங்க, எந்த கட்சி யோக்கியம் ?”

வழக்குரைஞர் மோகன், எழும்பூர்.

வழக்குரைஞர் மோகன்
“நடுநிலையான யாரும் இந்த தீர்ப்பை ஏத்துக்க மாட்டாங்க. ஏன்னா அவ்வளவு மோசமான தீர்ப்பு இது” – வழக்குரைஞர் மோகன்

“அ.தி.மு.க காரங்க வேணும்னா வரவேற்பாங்க. நடுநிலையான யாரும் இந்த தீர்ப்பை ஏத்துக்க மாட்டாங்க. ஏன்னா அவ்வளவு மோசமான தீர்ப்பு இது.

இப்படி ஒரு தீர்ப்பு வரும்னு யாருமே எதிர்பார்க்கலைங்க. குறைந்தபட்சமாகவாவது தண்டனை கிடைக்கும்னு தான் நாங்களே நினைச்சிட்ருந்தோம். ஆனா இது பெரிய அதிர்ச்சியா இருக்கு. அட்வகேட்ஸ் எல்லோரோட மனநிலையும் இது தான்.

இந்த கணக்கு தப்பை ஏத்துக்க முடியாது. இது ஏதோ ஒரு சாதாரண சின்ன தப்பு இல்ல. ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிற ஜட்ஜ் இந்த மாதிரி விசயத்திலேயே கவனமில்லாம இருந்தா தீர்ப்பு எப்படி இருக்கும் ?”

வழக்குரைஞர் செழியன்.

“தீர்ப்பை வரவேற்கிறீர்களா ?”

வழக்குரைஞர் செழியன்
“இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பால் நடுநிலையுடன் இருக்கும் அட்வகேட்ஸ் அத்தனை பேரும் ஷாக் ஆகியிருக்காங்க.” – வழக்குரைஞர் செழியன்

“இல்லை இந்த தீர்ப்பை வரவேற்க முடியாது. குன்கா வழங்கிய தீர்ப்பை போல இந்த தீர்ப்பை பார்க்க முடியவில்லை. இதில் நிறைய பிரச்சினைகள் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பால் நடுநிலையுடன் இருக்கும் அட்வகேட்ஸ் அத்தனை பேரும் ஷாக் ஆகியிருக்காங்க.

கணக்கு பிரச்சினையை சிலர் டைப்போக்கிராப்பிக்கல் எரர்னு சொல்றாங்க ஆனா குன்கா தீர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கும்போது மொத்த தீர்ப்புமே எரராக இருக்கிறது.

என்னோட மகன் ஜட்ஜ்மெண்ட்டை டவுன்லோட் பன்னினான், ரெண்டு ஜட்ஜ்மெண்டையும் படிச்சோம். குன்கா தீர்ப்பு எவ்வளவு அற்புதமான தீர்ப்பு, அதுல எவ்வளவு உழைப்பு செலுத்தியிருக்காரு அவர். அதோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இதில் பிரச்சினை இருப்பது நல்லா தெரியுது.”

“ஊரே அறிந்த கூட்டல் கழித்தல் தவறை பற்றி ஊடகங்கள் எழுதாமல் இருப்பது ஏன் ?”

“அவங்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கலாம், பயம் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது இருக்கலாம்.”

“தீர்ப்பைப் பற்றி விமர்சிக்கக்கூடாதுன்னு பார்கவுன்சில் செல்வம் கூறியிருப்பது பற்றி ?”

“தப்பு, ஒரு ஜட்ஜ்மெண்டை யார் வேணும்னாலும் விமர்சிக்கலாம்னு தைரியமா சொல்லுங்க.”

“நீதிபதிகள் நினைத்தால் குற்றவாளிகளை காப்பாற்றலாம் என்கிற நிலைமை எங்கு கொண்டு போய் விடும் ?”

“நீதிபதிகளுக்கும், நீதி மன்றத்திற்கும், அட்வகேட்சுக்கும் மக்களிடம் கெட்ட பெயர் வரும். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள். அப்பாவிகள் தண்டனை அனுபவிப்பார்கள். மொத்ததில் நீதி இருக்காது.”

வழக்குரைஞர் சாரதி, எழும்பூர்.

“அவங்க ஒழுங்கா சட்டப்படி விடுதலை ஆகியிருந்தா யாரும் பேச முடியாது! இது சட்டத்த வளைச்சி,நெளிச்சி வாங்குன தீர்ப்பு. இதை நீதிக்கும், நீதிமன்றத்துக்கும் நேர்ந்த அவமானமாத்தான் நாங்க கருதுகிறோம். கூட்டல், கழித்தல் கணக்குல தப்புப்பண்ணி அத வச்சி ஒரு தீர்ப்பு வருதுன்னா இதை விட அசிங்கம் வேறு என்ன ?

வழக்குரைஞர் சாரதி
“10% தான் ஊழல் பன்னாரு அதனால அது தப்பில்லான நீதி மன்றத்தை இனிமே யார் மதிப்பாங்க ?” – வழக்குரைஞர் சாரதி

ஏற்கெனவே இவங்கள மாதிரி ஆளுங்களுக்குன்னு சட்டத்துல ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்குது அது வழியா வந்திருந்தா கூட சரி ஆர்க்கியூமெண்ட்ல வெளியே வந்துட்டாங்கன்னு ஏத்தூக்குலாம்! பதவி,பணத்தை வச்சி எதுவும் பண்ணலாமா? ரொம்ப அசிங்கம் சார் இது. இப்ப ஜனங்களுக்கு நீதிமன்றத்து மேல எந்த நம்பிக்கையும் இல்லாம போயிடுச்சு!

இந்தம்மா வளர்ப்பு மகனுக்கு பண்ண திருமணம் உலகத்துக்கே தெரியும் அதுல அவங்க போட்டுகினு வந்த நகை, அவங்க பண்ண அமர்க்களம் எல்லாத்தையும் இப்ப ஒன்னுமே இல்லன்னு சொன்னா யார் நம்புவாங்க. அப்படி சொன்னா நீதிபதியையும் நீதிமன்றத்தையும் யார் நம்புவாங்க ? நான் எதுவும் பண்ணுவேன் எப்படியும் பூந்து வெளிய வந்துருவேன்னு சொன்னா அநியாயம் இல்லயா ? 10% தான் ஊழல் பன்னாரு அதனால அது தப்பில்லான நீதி மன்றத்தை இனிமே யார் மதிப்பாங்க ?

இந்த அம்மாவ விடுதலை பன்றதுக்காக கூட்டல், கழித்தல் கணக்குல கூட நீதி மன்றம் தப்பு பண்ணியிருக்குது, அது டெக்னிக்கல் எரரோ, டைப்போகிராப்பிக்கல் எரரோ இல்ல மட்டமான எரர் ” என்றார் வெறுப்புடன்.

வழக்குரைஞர் சங்கர், எழும்பூர்.

“அ.தி.மு.க காரங்களே இந்த நீதியை பார்த்து மிரண்டு போயிருக்காங்க. அம்மாவுக்கு குறைந்தபட்ச தண்டனையாவது கிடைக்கும்னு தான் நினைச்சாங்க. ஆனா இப்படி மொத்தமா ஒண்ணுமில்லாம போயிரும்னு நினைக்கவே இல்ல. சம்திங் இவ்வளவு தூரம் பாயும்னு அவங்களுக்கே தெரியாது. இப்ப மக்களுக்கு நீதிமன்றத்துல நீதி இல்லைன்னு நல்லா புரிஞ்சிப்போச்சு. ஸ்பெஷல் கோர்ட்டு 100 கோடி ரூபாய் அபராதம், நான்காண்டு சிறைத்தண்டனைன்னு சொல்லுது, மேல் கோர்ட்டு தப்பே பண்ணலைன்னு விடுதலை பன்னுதுன்னா இது கூத்தா இல்ல.”

___________________

இவ்வாறு பெரும்பாலான வழக்குரைஞர்கள் இது விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு என்பதை பல்வேறு கோணங்களிலிருந்து விளக்கினர். அ.தி.மு.க, தி.மு.க மற்றும் பிற கட்சி சார்ந்த வழக்குரைஞர்களைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் பிற வழக்கறிஞர்கள் ஒரு சேர தீர்ப்பை எதிர்க்கின்றனர். பொதுவில் இந்த தீர்ப்பு வழக்குரைஞர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக பலரும் குறிப்பிட்டனர்.

வழக்குரைஞர்கள் மட்டுமின்றி நீதி மன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடமும் பேசினோம். அவர்களும் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை இது பணத்தால் அடித்து வாங்கப்பட்ட தீர்ப்பு என்றனர்.

________________

–    வினவு செய்தியாளர்கள்

 1. //இது சட்டத்த வளைச்சி,நெளிச்சி வாங்குன தீர்ப்பு.//

  -இது சட்டத்த வளைச்சி நெளிச்சி வாங்கின தீர்ப்பு இல்லை.கோமரசாமி கையிலே பனத்தை கொடுத்து மூஞ்சியிலே செருப்பால் அடித்து வாங்கின தீர்ப்பு.

  //சட்டம் படித்த வழக்கறிஞர்களே ஒரு வழக்கு குறித்து பேசுவதற்கு ஏன் அஞ்சுகிறார்கள்?//

  -எந்த அம்மா ரவுடியாவுது பார்க்கின்றானா, என்ற பயம் தான் காரனம்.அதனால்தான் பொது இடங்களில் கூட சாதாரன மனிதர்கள் பேச பயப்படுகிறார்கள்.

  //மக்களுக்கு நீதித்துறை பற்றிய விழிப்புணர்வு வரணும். ஒரு பேப்பர்ல எழுதி புகார் அனுப்புனா கூட அதை நீதி மன்றம் வழக்கா பதிவு செய்யும். புகாரே பண்ணலைன்னா கூட சூ மோட்டோ மூலம் நீதிமன்றமே வழக்கு தொடுக்கும். நீதி துறையில் எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கு நாம தான் அதை பயன்படுத்தணும்.//

  “புண்னாக்கு”,எத்தனையோ பேப்பர்களிள் எழுதி போட்டாகிவிட்டது,

  எவனாவது ஜட்ஜ்க்கு பொழுது போகவில்லை அல்லது உப்பு சப்பு இல்லாத விவகாரம் எதுக்கும் லாயக்கு இல்லாத விஷயம் என்றால் பொழுதுபோக்கிற்க்காக சூ-மோட்ட கேசாக விசாரிப்பான்.

  இந்த கொமாரசாமி தீர்ப்பை சூ-மோட்ட கேசாக விசாரிக்க எந்த ஒரு சூடு சொரனை உள்ள ஹைகோர்ட் ஜட்ஜ் இந்தியாவில் இல்லையா?
  மேல் முறையீடுதான் செய்ய வேண்டுமா?

  //“ஒரு ஜட்ஜை விமர்சனம் பண்றதுக்கு நமக்கு அருகதை இல்ல! லீகல் லாங்வேஜ்ல அழகா சொல்லனும்னா ‘அரசன் தவறிழைப்பது இல்லை’ என்ற முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கணும். ஒரு கருத்து இருந்தா அதற்கு எதிர் கருத்து வரும். மக்கள் ஆயிரம் சொல்வாங்க. சட்டப்படி லோயர் கோர்ட்டு நமக்கு எதிரா தீர்ப்பு சொன்னா அதுக்கும் மேல் ஹைகோர்ட்டுக்கு போய் நீதி கேக்கணும் அது தான் வழி. நம்ம கையில ஐந்து விரல் இருக்குது. ஐந்தும் ஒண்ணு மாதிரியா இருக்குது ?இது இந்த நீதிமன்ற கண்ணோட்டத்திலிருந்து கொடுத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை நாம தப்புன்னு சொல்லமுடியாது அது ரொம்ப தப்பு” //

  -“மன்னாங்கட்டி”(வழக்குரைஞர் சரவணன்) வேண்டுமானால் அருகதை இல்லாமல் இருக்கலாம்.
  இது ஒரு கருத்து இல்லை மாற்று கருத்து கூறுவதற்கு.
  இது ஒரு அயோக்கியத்தனமான,அகங்காராமிக்க,அறுவெற்கதக்க
  முன்கூட்டியே எழுதப்பட்ட தீர்ப்பு என்ற அவலம்.
  கன்டெம்ட் கேஸ் போட்டாலாவது கோர்ட்டில் இந்த தீர்ப்பை பற்றி விமர்சிக்க முடியும்.

 2. பணம் பத்தும் செய்யும்! பார்ப்பனீயம் பதினொன்றும் செய்யும்! இதுதான் அவாள் அரசியல்! அர்த்த சாஸ்திரம் படித்தவர்களுக்கு புரியும், படைத்தவர்களின் தந்திரங்கள்! இது தான் பிரம்மாஸ்திரம் அய்யா! எதிர்ப்பவர்களை அழிக்கும், பணிந்தவர்களை பாதுகாக்கும்! அனுமானுக்கு தெரிந்தது, ராவணாதியருக்கு தெரியவில்லை!

 3. தீர்ப்பு வழங்கும்நாள் காலை 10.30 மணியளவில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட ஒரு அ.தி.மு.க வழக்குரைஞர் நெறியாளர் கேட்ட இந்தத்தீர்ப்பு எப்படி வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற வினாவுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? தண்டனைக் காலம் குறைக்கப்படும். அபராதத்தொகையும் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கிறேன் என்றார். அவருக்கே தீர்ப்பு வந்தவுடன் மிகவும் ஆனந்தமான அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

 4. அந்த அதிமுக அன்பர் மீது உமக்கு என்ன கோபம்? இப்படி பொட்டுகொடுத்து விட்டீர்களே! அக்ரிக்கு வந்த சோதனையை அறிந்துமா இப்படி செய்தீர்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க