Sunday, July 21, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் தடை - ஆர்ப்பாட்டங்கள்

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை – ஆர்ப்பாட்டங்கள்

-

சென்னை ஐ‌.ஐ‌.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையையொட்டி தமிழகமெங்கும் நடத்தப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள் பற்றிய செய்திகளின் அடுத்த பகுதி…

முந்தைய செய்திகள்

  1. சென்னை ஐ.ஐ.டி முன்பு
  2. திருச்சி என்.ஐ.டி, சட்டக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
  3. ஒசூர், தருமபுரி, கரூர், விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்

கோவை

02.06.2015 அன்று கோவையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் மணிவண்ணன் தலைமையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலர் திலீப் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்சி‌.ஆர்‌.ஐ, எஸ்‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களும், அரசுக் கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்றனர்.

பேருந்து நிலையத்துக்கே எதிரே என்பதால் பெருவாரியான மக்களின் பார்வையில் பதிந்தது. உளவுப் பிரிவு, அதில் பல வகைகள் மற்றும் போலீசு என ஒரு பெரும் படையே நின்று கொண்டிருந்தனர். நிருபர் ஒருவர், “தோழர் சீக்கிரம் துவங்குங்க, பாரத் சேனா கலெக்டர் ஆபீஸ் முற்றுகையாமா..? நாங்க அங்க போகணும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
சி‌.ஆர்‌.ஐ, எஸ்‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களும், அரசுக் கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்றனர்.

நாம் ஒரு உளவுப் பிரிவு போலீஸிடம், “என்னங்க, கலெக்டர் ஆபீஸ் முற்றுகையாமா, அங்க போகாம இங்க நின்னுகிட்டுருக்கீங்க..” என கேட்க,

அவர், “அவனுக சும்மா டம்மி பீசுங்க, நீங்க இங்க முதல்ல முடிங்க., நாங்க அப்புறமா போய்க்கிறோம்” என்று கூறிவிட்டார்.

தோழர்களின் எழுச்சிகரமான முழக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை ஈர்த்தது.

அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் பேசுகையில், “மாணவ வர்க்கம் என்பது எப்போதும் துடிப்புடன் இருக்கும் வர்க்கம். நீ அங்கயே கை வச்சுட்ட. தேன் கூட்ல கை வச்ச மாதிரி, இனி இந்த நெருப்பு இந்தியா முழுக்க பற்றி படரும்” என சூளுரைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பின்னர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி பேசுகையில்,

“பார்ப்பானுக்கு முன் புத்தியும் இல்ல, பின் புத்தியும் இல்லைனு அய்யா சொன்னது சரியா போச்சு. சும்மா இல்லாம இப்பிடி பண்ணி, இப்ப இந்தியா முழுக்க பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு போய்ட்டான்.

இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் மாதிரி டூமாங்கோலிகள் எல்லாம், எங்களுக்கு அம்பேத்கர் வேணும் பெரியார் வேண்டாம்னு சொல்லப் போக, எல்லோரும் ஏன்னு, கேட்க ஆரம்பிச்சு பெரியாரை படிக்க ஆரம்பிக்கராங்க.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தம்பி, இது நீ சொன்னதா கேள்வி கேட்காம ஏத்துக்கற லும்பன் கும்பல் அல்ல. படித்துக் கொண்டிருக்கும் மாணவ வர்க்கம். ஏன் எதுக்கு ன்னு கேள்வி கேட்கற வர்க்கம். அம்பேத்கரை கூட பார்ப்பனியம் அரவணைச்சு கெடுத்துருச்சு. ஆனா இறந்து போயி நாப்பது வருஷம் ஆனாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான நேர் நிகரான முனை மழுங்கா வாளாக இருக்கிறது அய்யா தந்தை பெரியார் தான். அதனால் தான் சொல்றோம். இந்த ஆரிய பார்ப்பன கும்பலை முறியடிக்க நாம பெரியாரிய ஆயுத பாணிகளாக மாறணும்னு.

சென்னை ஐ‌.ஐ‌.டி மாதிரி இந்தியா முழுக்க இருக்கிற ஐ‌.ஐ‌.டிகள்ல அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் துவங்குவோம். நீ என்ன புடுங்க முடியுமோ புடுங்கு, அப்டினு சொல்லி மாணவர்கள் தன்னெழுச்சியா துவங்கறாங்க..!

பார்ப்பானுக இப்ப கடும் சிக்கல்ல மாட்டிட்டானுக. தமிழ்நாடு பி‌ஜெ‌பி காரனுகளுக்கு என்ன பேசறதுன்னே தெரியாம ஒளரிட்டு இருக்கானுக. இப்டி தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கிட்டானுக இந்த காவிக் கல்லுளி மங்கனும் அவன் கூட்டமும்” என பேசி முடித்தார். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மதுரை

02/06/2015 மாலை 5.30 மணிக்கு மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ” எந்தவொரு நபரையும் பற்றி பேசக்கூடாது. எந்தவொரு சாதியை பற்றியும் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தை பற்றியும் பேசக்கூடாது” என ஏகப்பட்ட கூடாது களை நிபந்தனையாக்கி நெருக்கியது காவல்துறை .

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர்.ராமலிங்கம் “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு மோடி அரசு தடை போட்டுள்ளது. இன்று மோடி அரசு அமல்படுத்தி வரும் இந்துத்துவ கொள்கைகளுக்கு அம்பேத்கரும் பெரியாரும் எதிரானவர்கள். பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்கள். மோடியின் இந்து பாசிச திணிப்பு நடவடிக்கைகளை அம்பேத்கர் பெரியார் சிந்தனை கொண்டவர்கள் எதிர்ப்பதால் தான் இந்தத் தடை. இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை முறியடிக்க பள்ளி, வீடு, வீதி என எல்லா இடங்களிலும் இத்தகைய படிப்பு வட்டங்களை உருவாக்க வேண்டும். இது தான் அதற்கு சரியான தருணம்.” என உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பு.ஜ.தொ.மு தோழர்.போஸ், “ஐ.ஐ.டி.யில் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்ததை அ.தி.மு.க எதிர்க்கவில்லை. மேலும், ஐ.ஐ.டி.யில் இந்துத்துவ கருத்துக்களை தடை செய்யவில்லை . மோடியின் ஆட்சி நீடிக்க நீடிக்க இது போன்ற தடைகள் அதிகரிக்கும் ” என அம்பலப் படுத்தி பேசினார்.

உசிலை வட்ட வி.வி.மு தோழர் தென்னரசு, ‘மொட்டை கடுதாசியை வைத்துக் கொண்டு தடை செய்திருப்பதை’ சுட்டிக்காட்டி, “ஹெச்.ராஜா போன்றவர்கள் பெரியாரை இழிவு படுத்தி பேசிய போது, ரோட்டில் விட்டு செருப்பால் அடித்திருந்தால், இன்று திமிர்த்தனமாக பேசி இருக்க மாட்டான்” என ஹெச்.ராஜா பேச்சிற்கு செருப்படி கொடுத்தார்.

ம.உ.பா.மைய மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனி ராஜ், பிஜேபி அரசு பெரியார் அம்பேத்கர் கருத்துக்களுக்கு தடை விதித்துக் கொண்டே, அம்பேத்கருக்கு விழா எடுப்பதை அம்பலப் படுத்தியும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாளர் போல பேசும் மோடியின் இரட்டை நாக்கை தோலுரித்தும் பேசினார் . தமிழகம் மட்டுமே பார்ப்பன எதிர்ப்பு மரபை வரித்துக் கொண்டு போராடி வருகிறது என்றும் இந்தத் தடையை முறியடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் , “கல்விக் கூடத்தில் பெரியாருக்கு என்ன வேலை ?” என்ற இமக அர்ஜுன் சம்பத் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக , “அதே ஐ.ஐ.டி யில் ஜெய்ஹிந்த் , வந்தேமாதரம், துருவா போன்ற 20க்கும் மேற்பட்ட பார்ப்பன அமைப்புகள் பயங்கரவாத பிரச்சாரம் செய்வது ஏன்” என கேள்வி எழுப்பியும் , “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தேசவிரோத சக்திகள் என்று சொல்லும் ஹெச்.ராஜாவே ! மோடி உலகம் முழுவதும் டூர் அடித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டை கூவிக் கூவி விற்பது தேசத் துரோகம் இல்லையா ?” என பார்ப்பனக் கும்பலின் புளுகை , அவர்களின் தேசத் துரோக செயல்களை அம்பலப் படுத்தி உரையாற்றினார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படியாக இருந்தது.

ஆர்ப்பாட்டம் எழுச்சியூட்டும் முழக்கங்களுடன் மக்களுக்கு உணர்வூட்டும் படியாகவும், பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படியாகவும் இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாகினர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் தலைமையில் பழைய ரயில்வே ஸ்டேசன் அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் முற்றுகையின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு இழுத்துமூடினர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் முற்றுகையின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சமூக ஆர்வலர் ஜீ.வரதராஜன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். சுற்றிலும் கூடியிருந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வழக்கம் போல காலதாமதமாக வந்த போலிசார் சுமார் 30-க்கும் மேற்பட்ட தோழர்களை கைது  செய்தனர்.

தகவல்
பு.ஜ செய்தியாளர்,
திருச்சி
9943176246

விழுப்புரம்

விழுப்புரத்தில் வி.வி.மு , பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் 02.06.2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் ரஞ்சித் தலைமை தாங்கி பேசுகையில், “ஐ.ஐ.டி என்கிற நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அது பார்ப்பனர்களின் கோட்டையாகவே செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் 400 க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள் தான். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமில்லை என்பது தான் அதன் வரலாறு. அப்பேற்பட்ட பார்ப்பனர்களின் கோட்டைக்குள் அம்பேத்கர்- பெரியார் கருத்துக்கள் நுழைந்தது தான் பார்ப்பன இந்துமதவெறி பாசிச மோடி கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்துத்துவாவை விரட்டியடித்து தமிழகத்தில் சுயமரியாதையை நிலை நாட்டியவர் தந்தை பெரியார். இந்த மண்ணில் அம்பேத்கர்-பெரியாருக்கு தடை விதித்ததை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உடனடியாக தடையை நீக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று கூறி முடித்தார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
“உடனடியாக தடையை நீக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.”

அடுத்ததாக திரு.ஜனார்த்தனன், புதுவை பல்கலைக்கழக மாணவர் பேசுகையில், “அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது மாணவர்களின் கருத்துரிமையை பறிக்கும் செயல். மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது. அப்படி பேசினால் தடை விதிக்கப்படும் என்றால் உண்மையில் இது ஜனநாயக நாடு தானா” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஐ.ஐ.டி யில் சம்ஸ்கிருத-இந்தி திணிப்பு, மாட்டுகறிக்கு தடை, நிலம் கையகப்படுத்துதல் மசோதா போன்றவை குறித்தெல்லாம் மாணவர்கள் பேசியதால்தான் தடை விதித்துள்ளார்கள். அம்பேத்கர்-பெரியாரின் சித்தாந்தம் இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் இயங்க முடியாது. உடனடியாக இந்தத் தடையை நீக்க வேண்டும். இல்லை என்றால் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
“மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது.”

அவரை தொடர்ந்து பேசிய திரு. புருசோத்தமன், புதுவை பல்கலை கழகம் மாணவர்,  “ஐ.ஐ.டி வளாகத்தில் விவேகானந்தர் படிப்பு வட்டம், வசிஸ்டர் படிப்பு வட்டம், ராமாயணம், வந்தே மாதரம் உள்ளிட்ட பிற்போக்கு மாணவர் அமைப்பினர் செயல்படுகின்றனர். அவற்றைத் தடை செய்யாமல் முற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்த, இந்தி, சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராக கருத்தரங்கம் நடத்திய அம்பேத்கர்-பெரியார் அமைப்பை தடை செய்தது இந்து மதவெறியர்களின் காட்டுமிராண்டி செயல்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி,சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராக கருத்தரங்கம் நடத்திய அம்பேத்கர்-பெரியார் அமைப்பை தடை செய்தது இந்து மதவெறியர்களின் காட்டுமிராண்டி செயல்.

இறுதியாக, கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “மோடி அரசு பதவியேற்றது முதல் மக்கள் விரோத செயல்களையே செய்து வருகிறார். குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் சட்டம், மாட்டிறைச்சிக்கு தடை, மாணவர் அமைப்பிற்கு தடை என்று கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார். தாயையும் தண்ணீரையும் ஒன்று என்பார்கள். அது போல் தான் நிலமும். காலம் காலமாக உழுது பயிரிட்டு வந்த நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கொடுக்கும் புரோக்கர் வேலை செய்யும் தேச துரோகி மோடி என்பதை தான் அம்பலப்படுத்தினர் மாணவர்கள்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் பெரியார் பெயரில் இயங்குவது தான் பார்ப்பன மதவெறி கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு தான் இந்த தடை.

இதற்காக அமைப்பை தடை செய்வது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அம்பேத்கர் பெரியார் பெயரில் இயங்குவது தான் பார்ப்பன மதவெறி கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு தான் இந்த தடை. இந்த சமூக அமைப்பில் மாணவர்கள், சமூக ஜனநாயக சக்திகள் என யாரும் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதை தான் இந்த தடை நமக்கு உணர்த்தும் உண்மை… எனவே நிலவுகின்ற இந்த அரசு கட்டமைப்பை தகர்த்துவிட்டு நமக்கான அரசமைப்பை நிறுவினால் தான் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். உழைக்கும் மக்கள் அனைவரின் பிரச்சனைக்கும் தீர்வு. அதற்கு நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரள வேண்டும்” என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்- இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும், குழந்தைகள்,பெண்கள் ஜனநாய சக்திகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ௦2.௦6.2015 அன்று மாலை 5:30 மணிக்கு முத்தியால் பேட்டை மார்கெட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாநில பு.ஜ.தொ.மு தலைவர் எம்.கே.கே.சரவணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவை பெரியார் திராவிட விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல்காந்திநாத், புதுவை பு.ஜ.தொ.மு இணை செயலர் தோழர் ஆர்.லோகநாதன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

apsc-ban-pududvai-demo-1தோழர் சரவணன் தனது தலைமை உரையில், “ஒரு இனபடுகொலை குற்றவாளியான மோடியின் கையில் நாடு ஒப்படைக்கப்பட்டதால் அவர் இன்று கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக, எடுபிடியாக செயல்பட்டு வருவதையும் நாடு மீண்டும் அடிமையாக்கப்படும் தேசதுரோகச் செயலையும்” அம்பலப்படுத்தினார்.

“சென்னை ஐ.ஐ.டி யில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் ஆய்வு மாணவர்களை சிந்திக்கத் தூண்டுவதால் அதற்கு இந்த பார்ப்பனபாசிச அரசு தடைவிதிக்கிறது” என்பதை தோலுரித்து, “இதை முறியடிக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என்று அறைகூவினார்.

apsc-ban-pududvai-demo-2தோழர் கோகுல்காந்தினாத் தனது கண்டன உரையில் பார்ப்பன மதவெறி பாசிச மோடிகும்பலை பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலபடுத்தினார். மோடி பதவிக்கு வந்ததும் சங்கராச்சாரி உட்பட கொலைகார கும்பல்களை அடுத்து அடுத்து விடுதலை செய்து நாட்டையே பாசிசமயமாக்கி வருவதை அம்பலப்படுத்தினார். “கருத்து சுதந்திரத்தை எப்போதும் தடுப்பதுதான் மோடியின்  இழிசெயலாக தொடர்ந்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகதான் ஐ.ஐ.டி யில் படிப்பு வட்டத்தின் மீதான தடை” என அம்பலப்படுத்தினார். “பெரியாரும், அம்பேத்கரும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடியதில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இங்குள்ள பார்ப்பன பாசிச கும்பலோ அம்பேத்கரை ஏற்பதாகவும் பெரியாரை எதிர்ப்பதாகவும் உளறிவருகின்றன” என்று கேலிக்கூத்தை திரைகிழித்து பேசினார்.

apsc-ban-pududvai-demo-3தோழர் லோகநாதன் தனது கண்டன உரையில், “ஐ.ஐ.டி என்பது உயர்கல்வி தொழில்நுட்ப கல்லூரி. அங்கு அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் பார்ப்பன பாசிச கும்பலின் பித்தலாட்டங்களை, ஜனநாயக ஒடுக்கு முறைகளை, சட்டத்தை மதிக்காமல் மனுநீதியை நடைமுறைப் படுத்தி வரும் மக்கள்விரோத செயல்களை அம்பலபடுத்தியது.

apsc-ban-pududvai-demo-4உழைக்காமல் உட்கார்ந்து தின்னும் இந்த பார்ப்பனபாசிச கும்பல் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது கண்டு நமக்கு கோவம் வரவேண்டாமா?” எனக் கூடிநின்ற மக்களிடம் கேள்வி எழுப்பினார்.  “எச் ராஜா என்கிற பார்ப்பனபாசிச நச்சுப்பாம்பு மாணவர்களுக்கு அரசியல் கூடாது. எனவும் படிக்க மட்டும் செய்ய வேண்டும் எனவும் உளறிவருகிறார். ஆனால் இந்த பார்ப்பன பாசிச கும்பல் பள்ளி மாணவர்கள்உட்பட நாடுமுழுவதும் “ஷாகா” என்கிற பெயரில் பார்ப்பன நச்சுக்கருத்துக்களை ஊட்டி அவர்களை கொலைகார கும்பல்களாக தனது அடியாள்படையாக வளர்த்து வருவதை அம்பலப்படுத்தி இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் ரவுடிகளையும் உருவாக்கிவரும் பாசிச கும்பல்களுக்கு முடிவு கட்ட ஜனநாயாக சக்திகளையும் புரட்சிகர அமைப்புகளோடு இணைத்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடவேண்டும் ” என விளக்கி பேசினார்.

“மக்கள் அதிகாரத்தை கையில்எடுக்காமல் இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க முடியாது ” என்ற உண்மையை உணர்த்தி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

கடலூர்

apsc-ban-cuddalore-demo-2டலூரில் “பார்ப்பன இந்துத்துவா தாக்குதல் முறியடிப்போம்” என்ற தலைப்பில் 02-06-2015 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பு.மா.இ.மு தோழர்கள் பார்ப்பனபாசிச நடவடிக்கையை கண்டித்து  கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்குரைஞர் செந்தில்குமார் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருக்கிற ஸ்மிருதி இரானி மோசடி செய்து படித்து பதவிக்கு வந்தவர் என்று அம்பலப்படுத்தி பேசினார்.

apsc-ban-cuddalore-demo-4புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இணைச்செயலர் தோழர் நந்தா, “ஐ.ஐடி ஒரு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். ஆனால், அது எப்போதும் பார்ப்பன-பாசிச நச்சு கருத்துகளை பரப்புகின்ற கூடாரமாக செயல்படுகிறது.

பெரியார்-அம்பேத்கர் இருவரும் பார்ப்பன கொடுங்கோன்மையை தோலுரித்து காட்டி மக்களுக்கு வழி காட்டியவர்கள். அப்பேற்பட்ட தலைவர்கள் பெயரில் இயங்குவதற்கு தடையா? மாணவர்கள் ஜனநாயக பூர்வமாக சிந்தித்து மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை விவாதிப்பது தவறா? அதே ஐ.ஐ.டி. யில் ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு மூலம் அறிவியலுக்கு புறம்பான புராண கட்டுக்கதைகளை பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள்.

முகவரி இல்லாத யாரோ அனுப்பிய மொட்டை கடிதத்துக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் அன்றாடம் திங்கள் கிழமை மனுநாளில் கலக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்து பல வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள், மக்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆகவே, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் இந்த அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

apsc-ban-cuddalore-demo-3

இறுதியாக தோழர் புருசோத்தமன் நன்றி உரையாற்றினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க