Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஐ.டி தம்பதியினர் தற்கொலை - குற்றவாளியை மறைக்கும் ஊடகங்கள்

ஐ.டி தம்பதியினர் தற்கொலை – குற்றவாளியை மறைக்கும் ஊடகங்கள்

-

முன்னணி ஐ.டி நிறுவனம் செய்த இரட்டைக் கொலைக்கு எப்போது தண்டனை?

ன்னிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளரை “ஆன்சைட்” வேலைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருந்தது, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்று. தனது ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை சென்னைக்கு வரவழைத்து வேலையில்லாத நிலையில் ‘பெஞ்ச்’சில் அமர்த்தியது. பின்னர் ஒரு நாள் அவரை வேலையை விட்டுத் துரத்திவிட்டது.

ஐ.டி தம்பதி தற்கொலை
மனைவியின் கோரச்சாவைக் கண்டு மனம் வெதும்பிய அவர் ஓடும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

சென்ற மாதம் அவரின் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் கோரச்சாவைக் கண்டு மனம் வெதும்பிய அவர் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

அந்த சோக முடிவுக்கு அவர்கள் வரும் வரை இத்தம்பதியினரின் பெயர் நம் யாருக்கும் தெரியாது. அந்த நபரின் பெயர் ராதாகிருஷ்ணன். அவரது மனைவியின் பெயர் ஜாக்குலின். பத்திரிகைகளில் இவை செய்தியான பின்னர்தான் இந்த விபரங்கள் நமக்குத் தெரியவந்தது.

ஆனால், இவர்களை இக்கோர முடிவை நோக்கித் தள்ளிய நிறுவனத்தின் பெயர் இன்னமும் வெளியுலகுக்கு வரவில்லை. இவர்களை சட்டவிரோதமாக ‘ஆட்குறைப்பு’ செய்த போதும் அந்நிறுவனம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை, இப்போது இவர்களது உயிர் பறிக்கப்பட்ட பிறகு அந்நிறுவனத்தின் பெயர் கூட வெளியில் சொல்ல முடியாதபடி மூடி மறைக்கப்படுகிறது.

ஐ.டி தம்பதி தற்கொலை
உண்மையில் அவர்களைக் கொன்றது எது என்று தெரிந்து கொள்வதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டியவை இன்னமும் உள்ளன.

ஐ.டி. ஊழியர்களின் மத்தியில் மவுனம் நிலவுகின்ற வரைக்கும், ஐ.டி நிறுவனங்கள் பல நூறு கோடிகளை தமது லாபக்கணக்கில் சேர்த்தபடி ஓராயிரம் ஜாக்குலின், ராதாகிருஷ்ணன்களை சாவுக்குத் தின்னக் கொடுத்து விட்டு இந்தியாவின் தரகு முதலாளிகளின் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டுதான் இருக்கும்.

ராதாகிருஷ்ணன், ஜாக்குலின் ஆகியோரின் உடல்கள் அப்போதே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுவிட்டன. இருவரும் யாராலும் கொல்லப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருப்பதால் அந்த போஸ்ட் மார்ட்டம் நடந்திருக்கிறது.

உண்மையில் அவர்களைக் கொன்றது எது என்று தெரிந்து கொள்வதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டியவை இன்னமும் உள்ளன.

இவர் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்த தினகரன் நாளிதழ், “கடந்த சில மாதங்களாக ராதாகிருஷ்ணன் வேலையின்றி ஊர் சுற்றி வந்தார்” என்றும் “குடிப்பழக்கமும் அவரை தொற்றிக் கொண்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்” என்றும் துப்பறிந்து தனது பத்திரிகை அறத்தை நிலைநிறுத்தியது.

ஐ.டி தம்பதி தற்கொலை
‘கொடுக்கிற காசை விட அதிகமாகக் கூவும்’ கார்ப்பரேட் சேவகர்கள்.

இறப்புக்கான பொறுப்பை முழுக்க இறந்து போன ராதாகிருஷ்ணன் பக்கமே தினகரன் தள்ளி விட்டுள்ளது. அவரை மன்னிக்க முடியாத குடும்பத் தலைவனாக ஆக்கி ‘வேலையின்றி ஊர் சுற்றி இருக்கிறான்’. என்றும் ‘குடிக்கவும் செய்திருக்கிறான்’ என்றும் எழும்பிவந்து பதில் சொல்ல முடியாத ராதாகிருஷ்ணன் மீது அவதூறு செய்துள்ளது.

ஐ.டி தம்பதி தற்கொலை
தினகரனின் புலனாய்வு திறன்

ராதாகிருஷ்ணன் தங்கி இருந்த வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் அந்த நடுத்தர வயதுப் பெண்மணி, ‘அவங்க வீட்டில இருந்தாங்க என்பதே தற்கொலை பரபரப்புக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லுவதோ, ‘சண்டை எல்லாம் அவர்கள் போட்டதில்லை’ என்று சொல்வதோ தினகரனின் புலனாய்வு திறனுக்கு புலப்படவில்லை. ஆனால், செத்தவர்களின் ஆவியிடம் பேசி ‘பல உண்மை’களைக் கண்டறிந்திருக்கிறது, தினகரன்.

ஆவியிடம் பேசும் கலையில் தேர்ந்த தினகரன் ஜாக்குலின் தற்கொலை செய்வதற்கு முன், தகராறில் பேசிய உரையாடல் முதற்கொண்டு, பதிந்துள்ளது.

ஆத்திரமடைந்த ஜாக்குலின், ‘குடிப்பதற்கு மட்டும் பணம் இருக்கிறது. வேலைக்கும் போவதில்லை. வீட்டு செலவுக்கும் பணம் தருவதில்லை’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு ராதாகிருஷ்ணன், ‘ நான் அப்படிதான் குடிப்பேன் என்னை கேட்க உனக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறியதாக தெரிகிறது.

இறந்து போன இருவரும் பேசிய இவ்வாக்கியங்களை தினகரனுக்குத் தெரிவித்தது செத்துப் போனவர்களின் ஆவியா அல்லது கார்ப்பரேட்டிடம் எச்சில்காசு பொறுக்கிய ஆதம்பாக்கம் காவல் நிலையமா என்பதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஐ.டி தம்பதி தற்கொலை
தினமணியின் திரைக்கதை

ராதாகிருஷ்ணன் “வேலைக்கு செல்லாமல், மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது.இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஜாக்குலின், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.” என்று எழுதிய இணையப் பத்திரிக்கையின் பெயரோ ‘சத்தியம்’.

ராதாகிருஷ்ணன் ‘சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்ததைக்’ கண்டறிந்த தினமணி, அவர் வேலை பறிக்கப்பட்டதை மூடி மறைத்துவிட்டு, அவரை குடிகாரனாக்கி, குடும்பத்தகராறு உருவாக்கி சாவுக்கான திரைக்கதையை எழுதிச் சென்றுள்ளது.

ஆனால் தமிழ் இந்து அந்த அளவுக்கு மோசமில்லை. அவர் குடிகாரர் ஆனதை நம்பும்படிச் சொல்ல சில காரணங்களைக் கண்டுபிடித்திருந்தது. அக்காரணம் ‘அவர் சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை’ என்பதோடு நின்று விட்டது.

tamil-hinduஏன் வேலைக்குச் செல்லவில்லை என்று அந்தக் கேள்வி நீளவில்லை. இக்கதைக்கு நம்பகத் தன்மையை வரவழைக்க இராதாகிருஷ்ணன் தன் மனைவியை சம்பவம் நடந்த இரவன்று ‘அடித்தார்’ என்று இறந்து போனவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை எழுதி வழக்கை மூடிக் கொண்டது.

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவே, அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்தார் என்ற கதையை எழுதிவிட்ட பிறகு, கள்ளக்காதல்களையும் லாட்ஜ்களில் பிடிபட்ட அழகிகளையும் வைத்து கல்லாப்பெட்டி கட்டிய சி.பா.ஆதித்தனாரின் பத்திரிக்கை தன் பங்குக்கு ‘வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது’ என்றும் எழுதி விட்டது.

வேலை இழப்பு உருவாக்கிய மன அழுத்தமும், பொருளாதார நெருக்கடியும் ஒரு இணையையே கொன்றொழித்து விட்டது. இதை டெக்னிக்கலாக தற்கொலை எனக் குறிப்பிட்டாலும் மனசாட்சிப்படி பார்த்தால், அந்த ஐ.டி நிறுவனம் தூண்டிவிட்டு இரு உயிர்களைக் கொன்றுள்ளது. பச்சைப் படுகொலையை நடத்திவிட்டு அனைத்து ஊடகப் பொறுக்கிகளையும் இக்கொலைகளைத் திரித்து எழுத வைத்துள்ளது அந்த நிறுவனம். அந்த நிறுவனம் எது என்பதை வெளியிடாமல் மூடி மறைக்கின்றன அனைத்து பத்திரிக்கைகளும்.

ஐ.டி தம்பதி தற்கொலை
ஆப்பிள் நிறுவனத்தின் தற்கொலைகளை தூண்டும் நடவடிக்கைகளை கண்டித்து, அதன் விளம்பரத்தை கிண்டல் செய்யும் படம்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வேலை பறிப்பினாலும் மன உளைச்சலாலும் தம்பதியினர் தற்கொலை செய்தனர் என்ற செய்தி வந்தவுடன் இதன் பின்னணியை விசாரித்து உண்மையைக் கண்டறிய 4 நாட்களுக்கும் மேலாக நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பின் பல கசப்பான உண்மைகள் தெரியவந்தன, ஒன்றே ஒன்றைத் தவிர.

அது, எந்த நிறுவனத்தால் ராதாகிருஷ்ணன் பலிகடாவாக்கப்பட்டார் என்பதே..

பத்திரிகைச் செய்தியாக இக்கோரச் சாவின் பின்னணியை விவரித்து நாம் எழுதிய பிறகு சில பத்திரிகை நிருபர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை வெளியிடக்கூடாது என்ற விசயத்தில் அனைவரும் உறுதியாக நின்றனர். நெருக்கமான தொடர்பு மூலம் சிலரை விசாரிக்கச் செய்தபோது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், “முதல் தகவல் அறிக்கையில் நிறுவனத்தின் பெயர் இல்லை” என்று சொன்னார்கள்.

அத்தம்பதியினர் வசித்த வீட்டின் எதிர்புறம் இருந்த ஒரு மூதாட்டி, இச்சாவுகளுக்காக நம்மிடம் வருந்தினார். ‘சரிங்கம்மா…அந்தப் பையன் வேலை பார்த்த கம்பெனி தெரியுமா?’ என்று கேட்டதுமே ‘இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாதுபா…எந்தக் கம்பெனின்னு யாருக்கு தெரியும்..நீங்க போய்டுங்க’ என்று கடுமையாகக் கூறிக் கதவை அடைத்தார். கடும் பிரயத்தனப்பட்டு அந்த வீட்டின் உரிமையாளர் எண்ணைக் கண்டுபிடித்துப் பேசினோம். ‘சாப்ட்வேர்னு சொன்னார். எந்தக் கம்பெனின்னு சத்தியமாத் தெரியாதுப்பா’ என்றார்.

ஐ.டி தம்பதி தற்கொலை
கோவை, ஓசூர், சென்னை தொழிலாளர் வர்க்கம் ஆலையில் அநீதி இழைக்கப்படுகையில் தீர்வு காணும் வரை போராடுகிறது

எல்லோரையும் ஒரே மாதிரி ‘தெரியாது’ எனக் கூறவைத்தது எது? ‘அந்த’ நிறுவனத்தின் செல்வாக்கா? அது தந்த அச்சுறுத்தலா? அல்லது நமக்கேன் வம்பு என்ற நடுத்தர வர்க்க ‘பாதுகாப்பு’ உணர்வா?

எதுவும் புரியாத நிலையில் ஒரு பத்திரிகையின் நிருபர், ஜாக்குலினின் சகோதரி எண்ணைத் தந்தார். அவரிடம் பேசினோம். அவர் மனம் வருந்திப் பலவாறு பேசினார். அவரிடம் ‘எந்த நிறுவனம்’ எனக் கேட்டவுடன் தொலைபேசித் தொடர்பை நிறுத்திக் கொண்டார்.

ராதாகிருஷ்ணனின் முக நூல் பக்க நண்பர்கள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியதில் அனைவரும் மவுனம் சாதித்தனர். சிலர் மட்டும் ‘அவர் எங்க ஊருக்காரர். ஆனால் கம்பெனி எதுன்னு தெரியாது’ எனச் சொல்லி உண்மையை மறைப்பதில் பிடிவாதம் காட்டினர்.

கணவன் மனைவி இருவரையும் வேலை பறிப்பு சாகடித்து விட்டது. செத்த பிறகு போலீசு தரும் திரைக்கதையை கூடுதலாக செதுக்கி புதுப்புதுக் கதைகளை உருவாக்குகின்றன, ஊடகங்கள. அதன் மூலம் செத்துப்போனவரை வில்லனாக்கி, கொலையாளியான ஐ.டி நிறுவனத்தைக் காப்பது யார்? நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தார் அனைவரிடமும் அச்சத்தையோ சுயநலத்தையோ விதைத்துள்ளன, கார்ப்பரேட் கொலைகார நிறுவனங்கள். சாவுக்குப் பின்னும் இத்தகைய மவுனத்தால் ராதாகிருஷ்ணனை அவதூறு செய்து அவரின் மீது சேறு அடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு ஏதுமின்றி கார்ப்பரேட்டின் விருப்பத்துக்கு அனைவரும் பக்கமேளம் வாசிக்கின்றனர்.

அந்த ஐ.டி.நிறுவனத்தில் ராதாகிருஷ்ணனுடன் பணி புரிந்த நண்பர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவரை வேறொருவர் மூலம் தொடர்பு கொண்டபோது, ‘அதான் செத்துப் போயிட்டானே..இன்னும் அந்தக் கம்பெனி பெயரை ஏன் கேக்கிறே..சொல்ல முடியாது போ’ எனச் சொன்னது நம்மிடம் அதிர்ச்சியை உருவாக்கியது.

சக நண்பனின் சாவுக்குக் காரணமான கொலையாளியை தப்புவிக்க, இதைச் சொன்னால் எங்கே நமது கேரியர் பாதிக்கப்படுமோ என்ற சுய நலத்தின் பேரில் சுரணையின்றி ஐ.டி. நட்பு வட்டம் இருந்துகொண்டிருப்பதை எண்ணிப் பார்க்கவே உடலெல்லாம் நடுங்குகிறது.

(“யூதாசுக்காவது 30 வெள்ளிக்காசுகள் தர வேண்டியிருந்தது. ஆனால் பேதுருவோ யாரும் சில்லரை தராமலேயே கோழி கூவும் முன் 3 முறை இயேசுவை மறுதலித்தார்” – புதிய ஏற்பாடு நூலில் இருந்து.)

ஆளை அட்ரஸ் இல்லாமல் ஆக்குவது என்பார்களே…அக்கொடுமையை உறவினர்களும் நண்பர்களுமே செய்து கொண்டுள்ளனர் என்பதுதான் இன்னும் கொடுமை.

ஒரு நாள் ராதாகிருஷ்ணனின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் அந்த வீட்டைக் காலிசெய்ய வந்திருந்தபோது ஒரு பத்திரிகை நண்பர் அவ்வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது ராதாகிருஷ்ணனின் உறவினரிடம் ‘டி.சி.எஸ். இல் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தார்?’ என்று கேட்டதற்கு முதலில் ‘சில ஆண்டுகள்தான்’ எனச் சொல்லியுள்ளார். ஆனால் உடனே குறுக்கிட்ட ராதாகிருஷ்ணின் தாயார், ‘அவர் படிச்சது கேட்டரிங்’ எனச் சொல்லி தனது மகனின் மரணத்தைக் கூட கார்ப்பரேட், போலீசின் கதையை வைத்து மறைக்க முயன்றுள்ளார்.

(சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போலீசால் கொல்லப்பட்ட உதயகுமாரின் தந்தை..’செத்துப்போனவர் என் மகனே அல்ல’ என்று கூறினார்)

கோவை, ஓசூர், சென்னை தொழிலாளர் வர்க்கம் ஆலையில் அநீதி இழைக்கப்படுகையில் தீர்வு காணும் வரை போராடுகிறது. தங்கள் வயிற்றில் அடிக்கும் முதலாளியையும், அவர்களின் கைக்கூலி ஹெச்.ஆர்.களையும் துரோகியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரித்து அந்தக் கைக்கூலிகளின் புகைப்படத்தை மக்கள் மத்தியில் சுவரொட்டிகளாக்கி அம்பலப்படுத்தி போர்க்குணத்தோடு போராட்டத்தில் நிற்கின்றது.

ஆனால், ஐ.டி.துறையிலோ, கார்ப்பரேட்டுகள் மரணத்தையே பரிசாகத் தந்தபோதும், தன் உயிர் நண்பனைக் கொலை செய்த கார்ப்பரேட்டின் நற்பெயரை காப்பாற்றும் துரோகத்தை மனம் உவந்து செய்கின்றது.

இந்த முடிவு நாளை ஒவ்வொருவருக்கும் காத்திருக்கிறது. அப்போதும் கார்ப்பரேட்களும், காவல் துறையும், ஐ.டி. நட்பு வட்டமும் நம்மை அடையாளமில்லாதவர்களாக்கத்தான் முயல்வார்கள்.

ஐ.டி.யில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த உண்மையை உணர முன்வர வேண்டும். நமது நண்பர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து நின்றாக வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு கோபம் வர வேண்டும்.

“அதான் செத்துப் போயிட்டானே..அப்புறம் என்ன?’ எனக் கேட்கும் சொரணையற்ற தனமே போதும் என முடிவெடுத்து விட்டால் நமது முடிவுக்குப் பின்னர் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கேட்கையில் இதே வசனத்தைதான் சொல்லுவார்கள்.

இந்த நிலை ஐ.டி. நண்பர்களிடம் தொடரும் வரை ஐ.டி நிறுவனங்கள் தாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் தற்கொலைகளுக்காக தண்டிக்கப்படப் போவதில்லை. ராதாகிருஷ்ணன், ஜாக்குலின் தம்பதியினரைப் படுகொலை செய்ததற்காக விசாரிக்கப்படப் போவதில்லை. நாம் வாயைப் பிளந்தபடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு

கற்பகவிநாயகம், அமைப்பாளர்
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com