privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசைமா சாயப்பட்டறையை விரட்ட கடலூர் மக்கள் போராட்டம்

சைமா சாயப்பட்டறையை விரட்ட கடலூர் மக்கள் போராட்டம்

-

மக்கள் வாழ்வாதாரத்தை காவு வாங்கும் நாசகர சைமாதிட்டத்தை விரட்டியடிப்போம்

கண்டன ஆர்ப்பாட்டம்

டலூர் மாவட்டம் முப்போகமும் பசுமையாக விளையக்கூடிய நீர் வளம் கூடிய நிலங்களை கொண்ட மாவட்டம். நெல், மணிலா, வெள்ளரி, தர்பூசணி போன்ற காய்கறி உணவு பொருட்கள் மற்றும் சவுக்கு, முந்திரி போன்ற பணப்பயிர்களும் நன்கு விளையக்கூடிய நிலங்களை கொண்டது.

அதுமட்டுமில்லாமல் கெண்டை, கெளுத்தி, இறால் உள்ளிட்ட ஐம்பது வகையான ரகங்களுடன் மீன் வளங்களை கொண்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன.

கடலூர் பச்சயாங்குப்பம் முதல் பரங்கிப்பேட்டை வரை உள்ள 30 கி.மீ. பரப்பில் 75 கிராமங்கள் உள்ளன. அதில் 1,80,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நிலங்களைஇந்நிலையில் கடலூர் சிதம்பரம் வட்டத்தில் உள்ள பெரியப்பட்டு ஊராட்சியில் ஜவுளிப்பூங்கா என்ற பெயரில் தமிழக அரசும் சிப்காட் நிர்வாகமும் இணைந்து விவசாயிகளை ஏமாற்றி 400 ஏக்கர் நிலங்களை பிடுங்கி சைமா சங்கத்திற்கு சாயப்பட்டறை கழிவுகளை கடலில் வெளியேற்றும் தொழிலுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளன.

இதற்கு முன்பே 1980-களில் தொடங்கப்பட்ட சிப்காட்டில் மருந்து கம்பனிகள், பெயின்ட் கம்பனிகள், கெமிக்கல் கம்பனிகள், பாலிவினல் குளோரைடு கம்பனிகள் இயங்கி வருகின்றன. இதில் 1000 பேருக்கு மட்டும் வேலை கொடுத்து விட்டு எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என தம்பட்டம் அடிக்கிறது தமிழக அரசு. இந்த கம்பனிகள் மூலம் காற்றில் மாசு 20 மடங்கு அதிகரித்துள்ளது.  நீரில் 14 வகையான ஆபத்தான கரிம சேர்மங்கள் கலந்து வருடத்திற்கு 1500 பேர் புற்று நோய், கருப்பை கோளாறு, உள்ளிட்ட ஆபத்தான நோய்களால் செத்து மடிந்து வருகின்றனர்.

இத்தனை கேடுகளை மக்களுக்கு வழங்கிய சிப்காட் அடுத்த அணுகுண்டை சைமாவின் சாயப்பட்டறை மூலம் கொண்டுவர துடிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யலாறும், உரத்துபாளையம் அணையும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் நடைபிணமாக வாழும் மக்களும் சைமாவின் ரத்த சாட்சியங்களாக உள்ளன.

ஆசியாவிலேயே அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் சிப்காட்டில் 2000% காற்றும் 80% தண்ணீரும் மாசுபட்டுள்ள நிலையில் சைமா கொண்டுவரவுள்ள சாயப்பட்டறைகளால் பெரியப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 75 கிராமத்து மக்கள் வாழத்தகுதியற்ற அபாயகரமான பகுதியாக மாறிவிடும்….

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிவப்பு பட்டியலில் உள்ள சாயப்பட்டறைத் தொழிற்சாலையின் கொடிய நச்சுத்தன்மையுள்ள சாயப்பட்டறை கழிவுநீரை கடலில் கலக்கும் வகையில் குழாய்கள் புதைத்துள்ளனர். மேலும் ராட்சத ஆழ்குழாய் மூலம் நாள் ஒன்றுக்கு 1.05 கோடி லிட்டர் தண்ணீர் சாயப்பட்டறைக்கு உறிஞ்சப்படும் போது சுற்றுவட்டார 50 கி.மீ தூரம் கிராமமெங்கும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு கீழே செல்வதோடு கடல்நீர் உட்புகுந்து விவசாயம் அடியோடு அழியும் அபாயம் உள்ளது.

சாயக்கழிவு நீர் கடலில் கலப்பதால் மீன்வளம், கடல்வளம், அழிந்து நஞ்சாகி மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயநிலை உள்ளது.

சைமாவின் கொடிய நாசகார விளைவுகளை உணர்ந்த கிராமத்து மக்கள் 2008-ம் ஆண்டு மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, ஓட்டு கட்சிகள் துணையோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து 73 முறை மனு கொடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் போராடினர். ஆனால் ஓட்டுக் கட்சிகள் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இதன் விளைவாக துவண்டு போன நிலையில் மக்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினர். இதன் படி 17-05-2015 அன்று சைமாவின் ஆழ்குழாய் கிணறு கிராம மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தையொட்டி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியாளர்கள் 11 பேர் மீது வழக்கு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்து பதினைந்து நாட்களாக பு.மா.இ.மு தோழர்கள் 35 கிராமத்திற்கும் வீடு வீடாக சென்று சைமாவின் நாசகார திட்டத்தையும், அதற்கு துணை போகும் அரசின் மக்கள் விரோத கொள்கையையும் மக்களிடம் விளக்கி அணிதிரட்டி பெரியப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் 04-06-2015 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

சைமாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
சைமாவின் நாசகார திட்டத்துக்கு எதிராக பெரியப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் திரு.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சைமாவின் நாசகார திட்டத்தை கண்டித்து பத்து பேர் பேசினார்கள்.

முதலில் கண்டன உரையாற்றிய மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முருகேசன்,

சைமாவுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்
“சைமா சாயப்பட்டறையை முறியடிக்க கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்”

“உலக நாடுகளின் முதலாளிகள் சந்தைக்காகவே இந்தியாவை தேர்வு செய்கின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் கழிவுகளை கொட்டுவதற்கும் தகுதியான நாடாக உள்ளது. அதனால் தான் சைமா சாயப்பட்டறையை இங்கே கொண்டு வந்து மக்களை நாசமாக்க துடிக்கின்றார்கள். இதனை முறியடிக்க கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்ததாக பேசிய கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் திரு சக்காப்பு அவர்கள்,

சைமாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
“சைமாவை அனுமதித்தோமானால் மக்கள் அழிந்து போவது நிச்சயம்.”

“கடலூர் மாவட்டம் புற்று நோய்களின் கூடாரமாக உள்ளது. இங்கு கிடைக்கும் நீர் தேன் சுவையாக இனிக்கும், இந்த தண்ணீரில் சாயப்பட்டறையின் கழிவுகள் கலந்து விஷத்தையே நமக்கு உணவாக கொடுக்க வருவது தான் சைமா சாயப்பட்டறை. இங்கு உள்ள ரசாயனக்கழிவுகள் மக்களை பாதுகாத்து வந்த அலையாத்தி காடுகளையே அழித்து வருகிறது.  சைமாவை அனுமதித்தோமானால் மக்கள் அழிந்து போவது நிச்சயம். ஆகவே இத்திட்டத்தை எதிர்த்து நம்பிக்கையோடு போராட வேண்டும்” என்று கூறி முடித்தார்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் திரு பஞ்சமூர்த்தி அவர்கள் பேசுகையில்,

சைமாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
“மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் துணையோடு போராடினோம். குவாரி இழுத்து மூடப்பட்டது”

“எங்கள் பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக 25 கிராம மக்கள் தான் போராடினோம். ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் மணல் கொள்ளையடித்தனர். ஊர் தலைவர்கள் பணம் வாங்கினார்கள். அதன் பிறகு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர்பு கிடைத்து அவர்களின் துணையோடு போராடினோம். குவாரி இழுத்து மூடப்பட்டது. நீங்கள் 40 கிராம மக்கள் போராடுகிறீர்கள் நிச்சயம் சைமாவுக்கு சமாதி கட்டலாம்” என்று கூறினார்.

சீர்காழி விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழர் அம்பிகாபதி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட இணைச்செயலர் தோழர் நந்தா, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் இணைச்செயலர் தோழர் புஷ்பதேவன் அவர்கள் ஆகியோர், “சைமா மட்டுமல்ல கடலூர் சிப்காட்டில் உள்ள அனைத்து நாசகார தொழிற்ச்சாலைகளையும் இழுத்து மூட வேண்டும் என்றால் ஆளும் அருகதையற்ற அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. இதனை தகர்த்து விட்டு மக்கள் அதிகாரத்தின் மூலம் தான் இந்த நாசகார கம்பனிகளை விரட்டியடிக்க முடியும்” என்பதை உணர்த்தி பேசினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக கண்டன உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, “மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசு, சாயப்பட்டறை அமைந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தெரிந்தே அனுமத்கிறது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் முக்கூட்டு களவானிகளாக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். கூடங்குளத்தில் அனு உலைக்கு எதிரான போராட்டம், கார்மாங்குடி மணல் கொள்ளைக்கெதிரான மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திலும் காவல்துறை மக்களை பிரிக்கும் நயவஞ்சக சதிசெயலில் ஈடுபட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்களை அச்சுறுத்தி பொய் வழக்குகள் போட்டது. எதற்கும் அஞ்சாமல் மக்கள் உறுதியாக போராடினார்கள். சைமாவை எதிர்த்த போராட்டத்திலும் மக்களை பிரிக்கும் கேவலமான சதி வேலைகளை காவல்துறையும், மானம் கெட்ட மாவட்ட நிர்வாகமும் செய்யும். ஏனென்றால் இந்த அரசு நமக்கான அரசு அல்ல. இந்த அரசு தான் சைமாவை கொண்டு வந்தது. இந்த அரசை தூக்கி எரிந்து அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும். கிராமம் தோறும் அதிகார அமைப்புகளை கட்ட வேண்டும். அதற்கு மக்கள் போராட்டம் தான் தீர்வு” என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.

இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட இணைச்செயலர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளுமாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் புரட்சிகர பாடல்கள் பாடியது எழுட்சியூட்டும் விதமாக இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு புதிய நம்பிக்கை பெற்ற மக்கள் சைமாவின் நாசகார திட்டத்தை முறியடிப்பதற்கான அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

  1. மக்களின் பேராதரவுடன். . . சைமாவுக்கும் , இந்த கேடு கெட்ட அரசுக்கும் பாடம் புகட்டுவோம், மக்களின் மனதில் இந்த அரசு நமக்கானது அல்ல- என்பதை புரிய வைப்போம். .

  2. இது போன்ற போராட்டங்கள. உடனடியாக முன்னறே தெரிவிக்கவவும்

Leave a Reply to MAGATHUVAN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க