privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்புதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்

புதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்

-

மீபத்தில் பொரி உருண்டை ஒன்று தன் ஏவல் பொரி உருண்டைகளை அனுப்பி டிபன் பாக்ஸில் பட்டாசை வைத்து புதிய தலைமுறை அலுவலக வாசலில் வீசிச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அடுத்த நாள் காலையில் ஏதோ ஒரு எலிவளையிலிருந்து வெளியே வந்த தலைமை பொரி உருண்டை மதுரையில் கைதாகியது.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
கேமரா மேனை தாக்கியது மட்டுமில்லாமல், அந்த வழியாக வந்த பெண் நிருபரையும் தாக்க முனைந்தனர்.

மோடி ஆட்சியில் சாமியாரெல்லாம் அமைச்சராகி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வெறுப்பு வாந்தியெடுத்து மக்களை சித்திரவதை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த ரவுடி கும்பலுக்கு தலைமை வகிக்கும் எச்.ராஜாவுக்கு அடுத்தப்படியாக அந்த பொரி உருண்டை கிளம்பியிருந்தது. இது ஏதோ ஒரு நமத்துப் போன பொரி உருண்டையின் ஊசிப்போன விளம்பர முயற்சி என்பது மட்டுமல்ல. பார்ப்பனிய இந்து மதவெறி பாசிசத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்தை எப்படியாவது அடிமைப்படுத்த வேண்டும் என்று காவி கும்பல் கொலை வெறியுடன் முயற்சித்து வருகிறது. பொரி உருண்டைகளும் அதன் ஒரு அங்கம்தான்.

சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு “நேருக்கு நேர்” நேர்காணல்களில் பிரபலமான வீரபாண்டியன் என்ற சன் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளர் – நிகழ்ச்சி தொகுப்பாளர், இஸ்லாமிய அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் போய் மோடியை எதிர்த்து பேசினார் என்றதுமே ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் துள்ளிக் குதித்தன. உடனே சன் டி.வி மாறன்களை மிரட்டி வீரபாண்டியனது நிகழ்ச்சிகளை தடை செய்தன. பார்ப்பனிய எதிர்ப்புக்கு புகழ் பெற்ற திராவிட இயக்கத்தை வைத்து ஆளான மாறன்களே இதை வெட்கமின்றி ஏற்றுக் கொண்டனர்.

இதே சன் நிர்வாகம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராஜாவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது. சட்டமன்றங்களிலேயே நீலப்படங்கள் பார்க்கும் பா.ஜ.க தலைவர்களின் தமிழக வாரிசுகள் இதை எதிர்க்காதது ஆச்சரியமல்ல. வேறு ஊடகங்களும், கட்சிகளும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல சன் நிர்வாகம் வீரபாண்டியனை முடக்கி போட்டதற்கும் யாரும் குரல் கொடுக்கவில்லை. காவி கூட்டத்தினை கண்டிக்கவும் இல்லை.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் லோகோவின் கீழ் இருக்கும் வாசகம் – உண்மை உடனுக்குடன்… ஆனால் பொய்களும், கோழைத்தனமுமே உடனுக்குடன் என்று வைப்பதே சாலச்சிறந்தது.

அசுரர்களைப் போற்றிய மண்ணில் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒளிபரப்பி பக்திச் சேவை செய்யும் சன் தொலைக்காட்சி, காவி பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தது எதேச்சையானது அல்ல. ‘வாழும் பெரியார்’ என்று பெரியாரின் பெயரை தவறாக பயன்படுத்தும் கருணாநிதியும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தவர்தான். அதற்கு கருணாநிதியை கன்வின்ஸ் செய்ததே முரசொலி மாறன்தான். அதற்கு தவறான கட்சியில் சரியான மனிதர் வாஜ்பாயி என்று சப்பைக்கட்டு வேறு.

புதிய தலைமுறையின் கதை வேறு. நடுநிலை வேசம் கட்டிக் கொண்டு ஊடக உலகில் நுழைந்த புதிய தலைமுறை உண்மையில் பா.ஜ.கவை ஆதரிப்பதுதான் நடுநிலைமை என்று நடுநிலைமைக்கு ஒரு புதிய விளக்கத்தையே உருவாக்கியிருந்தது. அப்பேற்பட்டவர்கள் மீது ஏன் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு? தன்னுடைய முதல் நிகழ்ச்சியிலிருந்தே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட தெரியாதவர்களாக வாழ்ந்த பா.ஜ.க காரர்களை வம்படியாக பிடித்து வந்து தமிழகத்திற்கு அறிமுகம் செய்து காவிப்பணியாற்றிய புதிய தலைமுறையின் மீது ஏன் இந்த குண்டு வீச்சு?

இது புதிய தலைமுறை ஊழியர்களுக்கே குழப்பமாக இருந்திருக்கும். அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்றாடம் புதிய தலைமுறைக்கு வந்து சென்றவர்கள்தான், இந்த காவி கூட்டத்தினர். அதே போல என்னதான் தேசியக் கட்சி, ஆளும் கட்சியாக வெயிட்டாக இருந்தாலும், வருவதற்கு பேட்டா காசும் வாங்கி சென்ற பா.ஜ.க.வினர், என்னை கூப்பிடலையா  என்று இந்த டி.வியில் கெஞ்சிக் கிடந்த பா.ஜ.க.வினர் இன்று மோடி ஆட்சி வந்தவுடன் நேரெதிராக மிரட்டுகிறார்களே, என்ன காரணம் என்று ஊழியர்கள் குழம்பித்தான் போயிருப்பார்கள். பா.ஜ.கவுடன் முதல் கூட்டணி அமைத்து பாதை போட்ட பச்சமுத்துவுக்கே நாம நல்லாத்தானே மோடிக்கு சொம்படிக்கிறோம் பிறகு ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என்று தோன்றியிருக்காதா என்ன?

“தாலி பெண்களை இழிவுப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?”  என்னும் விவாத நிகழ்ச்சிதான் தற்செயலாக சில விசயங்களை நிறைவேற்றி மேற்கண்ட குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் படபிடிப்பு முடிந்து முன்னோட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு புதிய தலைமுறையில் ஒளிப்பரப்பட்டது. அந்த முன்னோட்டத்தில் ஒரு பெண் ‘தாலிங்கிறது பெண்களுக்கு நாய்ச்சங்கிலி மாதிரிங்க’ என்று தெரிவித்தார்.  உடனே இந்து மனம் அதாவது வானர பரிவாரங்களால் வழிநடத்தப்படும் வெறி துள்ளி எழுந்து கத்த ஆரம்பித்தது.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
தமிழகத்தில் இந்த ரவுடி கும்பலுக்கு தலைமை வகிக்கும் எச்.ராஜா

தமிழ்நாட்டு பெண்கள் பெரும்பாலானவர்களின் தாலியை டாஸ்மாக் அவிழ்த்துக் கொள்ளும் அவலம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தாலி நாய்ச் சங்கலியா, தூக்கு கயிறா என்பதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அப்படி இல்லாத பிரச்சினையை இருப்பதாக ஆக்குவதற்கு காவி கும்பல்கள் முடிவெடுத்தனர். உடனே புதிய தலைமுறை அலுவலகத்திற்கு தொடர் மிரட்டல் அழைப்புகளால் தொந்தரவு செய்திருக்கின்றனர்.

பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்கே தாலியின் அவமானத்தை எதிர்க்கிறோம் என்று பொங்கிய கூட்டம் உண்மையில் புதிய தலைமுறை அலுவலகத்தின் வரவேற்பாளர்களாக வேலை செய்யும் பெண்களை கலப்படமில்லாத கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தது. இது போக தாலியை குறித்து அந்த முன்னோட்டத்தில் (டிரைலரில்) பேசிய அந்தப் பெண்ணையும் மிரட்டியிருக்கிறது. மன்னிப்பு கேட்கச் சொல்லி அச்சுறுத்தியிருக்கிறது. அந்த பெண்ணோ தன் அனுபவத்தில் உணர்ந்த தாலி பற்றிய உண்மைகளை மறுத்தெல்லாம் பேச முடியாது என்றிருக்கிறார்.

பிறகு அந்த பெண்ணின் வீட்டில் கல்லை விட்டெறிந்து தொடர் மிரட்டல்களை ஏவிவிட்டாலும் அந்த பெண்ணை பணிய வைக்க முடியவில்லை. இதற்காகவே இவர்கள் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண், வீட்டு முகவரியை ஆள் வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இல்லை மத்திய உளவுத்துறை கூட கண்டுபிடித்து கொடுத்திருக்கலாம்.

இதற்கு பிறகு முன்னோட்டம் ஒளிபரப்பான பிறகு அடுத்த நாள் காலையில் புதிய தலைமுறை வாசலில் இந்துமதவெறியர்கள் கூடினார்கள். அன்றைய புதிய தலைமுறையின் காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாலு வார்த்தை பொருளோடு பேசுவதற்கு திண்டாடும் டால்பின் ஸ்ரீதர் எனும் பா.ஜ.க ஆள் கிளம்பிய பிறகு வானரங்கள் புதிய தலைமுறை வாசலை சூழ்ந்துவிட்டன. ஒரு வாசலை அடைத்தால், மறு வாசலில் நுழையுமாம் நரி என்பதற்கேற்ப இன்னொரு வாசல் வழியாக வந்தும் காத்து கிடந்திருக்கின்றனர். அந்த வழியாக சென்று கொண்டிருந்த கேமரா மேனை தாக்கியது மட்டுமில்லாமல், அந்த வழியாக வந்த பெண் நிருபரையும் தாக்க முனைந்தனர்.

இதையடுத்து ஊழியர்களிடையே கொந்தளிப்பு மனநிலை தொற்றிக் கொண்டிருக்கிறது. அதை புதிய தலைமுறையின் செய்தியாளர் தியாகச் செம்மல் இயல்பாக வெளிப்படுத்தினார். தாக்கியவர்களை  இந்துத்வ குண்டர்கள் என்று குறிப்பிட்டார். அதற்கடுத்து புதிய தலைமுறை நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் இந்துத்துவ குண்டர்கள் என்ற உண்மை அடையாளம் தெரியாத நபர்களாக மாற்றப்பட்டது.

இந்துத்துவ குண்டர்கள் என்று அழைத்ததற்காக தியாகச் செம்மல் ஃபேஸ்புக்கின் காவிப் பக்கங்களில் மிரட்டப்பட்டார். அவருடைய திருமண புகைப்படத்தை போட்டு ஆபாச அர்ச்சனைகளை செய்தார்கள். தாலியின் மானம், மற்றும் பெண்களின் மானம் குறித்த கவலைப்பட்ட ஓநாய்களின் சுயரூபம் வெளிப்பட்டது.

தான் ஒரு முழு முட்டாள் என்ற உண்மை தெரிந்தும் தொலைக்காட்சியில் பேச வாய்ப்புக் கொடுத்தது பச்சமுத்து டிவிதான் என்பதையெல்லாம் மறந்து டால்பின் ஸ்ரீதர் போன்ற அனாமதேயங்கள் கூட சங்க பரிவாரங்களோடு சேர்ந்து பொங்கியது.

அந்த கோல்மால் டால்பின் பகிர்ந்திருந்த மற்றோரு பதிவு நம்பி நாராயாணன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்பியுடையது. அதில் தாலியை பற்றிய விவாதத்தை 2000 பேரின் எதிர்ப்பை மீறி நடத்த முயற்சித்தது அராஜகம் என்று சாடுகிறார். உண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினர், தாலி குறித்த சிறு எதிர்ப்பு வந்த உடனேயே முந்தைய நாள் இரவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வேறு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முடிவை எடுத்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தொடை நடுங்கிகள் என்பது மட்டுமல்ல, அவர்களே கூட பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வமற்ற தொலைக்காட்சியாகத்தான் இயங்கினார்கள்.

இது தெரிந்தும், அதாவது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நமது மேலாண்மை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று தெரிந்தும் இனி இப்படியான தலைப்புகளை  எடுக்கக் கூடாது என்று  ஒரு மிரட்டலுக்காகவே அங்கே வந்து, கேமராமேனை இழுத்துப் போட்டு அடித்து, நெஞ்சிலேறி மிதித்து, கேமராவை உடைத்து வீசியிருக்கிறது இந்த கும்பல்.

தங்களுக்கு சாதகமான தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கும் நோக்கம் இந்த இந்துத்வ வானரங்களுக்கு ஏன் வருகிறது என்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயணம் செய்து அங்குள்ள நிலையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை புதிய தலைமுறை ஒளிபரப்பி வந்தது. அதில் குஜராத் பற்றிய பதிவில், குஜராத் பற்றிய பிம்பம் உண்மையில் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என்று இருந்தது. இதெல்லாம் பச்சமுத்துவுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றாலும், இந்த மெல்லிய மயிலிறகு விமரிசனத்தை ஊட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இணைப்பு 1:

இணைப்பு 2:

பாரி வேந்தர் என்னும் கல்வி கொள்ளையர் மோடியுடன் கூட்டு வைத்திருப்பதற்கும், அவருடைய திருட்டு சாம்ராஜ்யத்தை காப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட புதியதலைமுறை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கேள்வி கேட்பதா?  என்று அவர்களுக்கு ஏற்கனவே ஒரு சிறு கடுப்பு உண்டு.

அடுத்த கடுப்பு….சட்டமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ப்ளூ பிலிம் பார்க்கும் செய்திகளை வெளியிட்டது. இதுமட்டுமில்லாமல், இவர்களின் பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாத சிலர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருப்பதும் அவாளுக்கு பிடிக்கவில்லை. இதை அவர்களின் இணைய தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவலாக பார்க்கலாம்.

puthiya-thalaimurai-screen-shot-1இவர்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்தான் அடுத்த வீட்டுக்காரர்களுக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்த பா.ஜ.க கோயிந்துகள் பலரை பிரலமாக்கினார்கள். தமிழகத்தில் இல்லாத பா.ஜ.க.வை இருப்பது போன்றதொரு தோற்றத்தை  ஏற்படுத்தியதும் இந்த தொகுப்பாளர்கள்தான். ஆனாலும், அவர்களை பார்ப்பன கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் சில நேரம் நிகழ்ச்சி சுவாரசியம், மற்றும் சமநிலை படுத்துவது என்ற நோக்கிலும் பா.ஜ.க முட்டாள்களிடம் ஏதாவது சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. இது கூட அந்த கோயிந்துகளுக்கு பிடிக்கவில்லை. கேள்வி கேட்பவர்களை பொதுவாகவே பாசிச கும்பலுக்கு பிடிப்பதில்லை.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
திருட்டு சாம்ராஜ்யத்தை காக்கத்தானே மோடி மஸ்தானின் விளம்பர ப்ரோக்கராக மாறி கோடிக்கணக்கில் ஸ்பான்சர் செய்தார், பச்சமுத்து.

‘ஜென்ராம் ஒரு கம்யூனிஸ்ட். குணசேகரன் ஒரு தி.க – இவர்களை புதிய தலைமுறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும்’ என்று இவர்கள் திரும்பத் திரும்ப கத்துகிறார்கள். மேற்கண்ட இருவரும் என்ன கருத்து வைத்திருக்கிறார்கள், எதை ஆதரிக்கிறார்கள்  என்பதாக நடந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்படிக் கேட்பதாக  வைத்துக் கொண்டாலும் அது  குறிப்பிட்ட பிரச்சினை குறித்து சமூகத்தின் மனநிலையோடு சேர்ந்தும் வரலாம். மேலும் ஒரு உரையாடலை விறுவிறுப்புடன் வளர்த்துக் கொண்டு செல்வதற்கே எதிரெதிர் கேள்விகளை கேட்பது உலகமெங்கும் உள்ள வழக்கம்.

‘மிஸ்டு கால் மூலம் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்ந்தும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெறும் 5000 வாக்குகள் வாங்கியது ஏன்’ என்று கேட்டால் அது தவறாம்! இதை பாண்டே கேட்பது போல, ‘மக்களுக்காக மோடி, பா.ஜ.க அனைவரும் மிகுந்த பணியாற்றியும் மக்கள் வோட்டுப் போடவில்லை ஏன்’ என்று கேட்க வேண்டுமாம். எனில் இதற்கு பெயர்தான் ஜெயா டி.வி. அதையெல்லாம் எந்த பொதுவான மக்கள் பார்க்கிறார்கள்? தந்தி டி.வி பாண்டே போன்ற ஒரு அக்மார்க் வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவே புதிய தலைமுறை தொகுப்பாளர்கள் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நிலை.

புதிய தலைமுறை தீபாவளி
“முந்தைய கால தமிழகத்தில் தீபாவளி எனும் பண்டிகையே கிடையாது”

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “தீபாவளிக்கு வெடி வெடிக்கும் பழக்கமே வங்காளத்திலிருந்து வெடி மருந்து தொழிற்சாலைகள் சிவகாசி பக்கம் வந்த பிறகே ஆரம்பித்தது” என்றார். அதேபோல், “முந்தைய கால தமிழகத்தில் தீபாவளி எனும் பண்டிகையே கிடையாது”  என்றார்.

இதற்கு எதிராக பேசிய ஆர்.எஸ்.எஸ்-இன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ராமமூர்த்தி வழக்கம் போல….எலி பொந்துக்குள் இருந்து பேசுவது போல, மெல்ல தொடங்கி, அங்கே கொண்டாடுனாங்க, இங்கே கொண்டாடுனாங்கன்னு கதை விட்டு ஆரம்பித்து பிறகு, “நம்பிக்கை தர்ற பண்டிகையை இப்படி கொச்சை படுத்துறாங்களே…கொச்சை படுத்துறதுக்கும் மெக்காலே புத்திரர்களின் இந்து விரோத மனபோக்கு காரணம்”னு நிகழ்ச்சிக்கு அவதூறு காவி மசாலா எபெஃக்ட் கொடுக்கத் தொடங்கினார். (7:35)

நாயக்கர் காலத்திற்கு பிறகுதான் தீபாவளி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறதேயொழிய, ஈராயிரம் ஆண்டுகளாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதற்கு சான்றில்லை என்று எஸ்.ரா கூறினார். உடனே, அது இருள் அகற்றி ஒளியேற்றும் நாள், நரகாசுரன் தமிழனெல்லாம் கிடையாது என்று மீண்டும் பொங்கினார், ராமமூர்த்தி. ஆனால், நேரலை அரங்கில் தங்கள் சுபாவத்தின் படி முழுமையாக அதாவது அம்மணமாக பொங்க முடியாது என்று மறுநாள் தங்கள் வானரங்களை அனுப்பி யாரையாவது பிராண்டிவிட அனுப்பியது பரிவார கும்பல்..

இணைப்பு :

 

வந்த கும்பல் அலுவலக வாயில் முன்னே கத்தியதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

அதில் அவர்கள் எஸ்.ராவை  விட்டுவிட்டு, சுப.வீரபாண்டியனை திட்டித் தீர்த்தார்கள். ஒத்தைக்கு ஒத்த வர்றியான்னு சுபவீயையும், ஏன் ஒரு கட்டத்தில் பச்சமுத்துவையும் திட்டிக் கொண்டே சவால் விட்டார்கள்.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான் தாலி நிகழ்ச்சி பிரச்சினைக்கு பிறகு பா.ஜ.க கும்பல், புதிய தலைமுறையை புறக்கணிக்கும் முடிவை அறிவித்தார்கள். தங்கள் இருப்பை குறைந்தபட்சம் கிராபிக்ஸிலாவது உறுதி செய்து கொள்ள வாய்ப்பளிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியை  என்ன தைரியத்தில் புறக்கணிக்கிறார்கள்?

பச்சமுத்துவின் கல்வி சாம்ராஜ்யம் ஒன்றும் அன்பு சாம்ராஜ்யம் இல்லை. ஊழலில் உருவான திருட்டு சாம்ராஜ்யம்தான். இந்த திருட்டு சாம்ராஜ்யத்தை காக்கத்தானே மோடி மஸ்தானின் விளம்பர ப்ரோக்கராக மாறி கோடிக்கணக்கில் ஸ்பான்சர் செய்தார். பச்சமுத்துவின் ‘தொழில்’ பலவீனத்தை நம்பித்தான் காவிகள் புதிய தலைமுறையை புறக்கணித்தார்கள். இதன்படி புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றுமே மோடிக்கு எதிராகவோ ஏன் மோடி வீட்டு கொசுவுக்கு எதிராக கூட பேசவோ, பார்க்கவோ முடியவே முடியாது. அதனால் நாளையே இவர்கள் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள். இப்போதே அதனுடைய முன்னோட்டோமாக பா.ஜ.கவின் எஸ்.வி.சேகர் எனும் நடிகர் விவாதங்களில் கலந்து கொள்கிறார். அவரை சில பா.ஜ.க நபர்கள் கண்டித்தாலும், பலர் ஆதரிக்கவே செய்கிறார்கள்.

ஆகவே இன்று புதிய தலைமுறையை புறக்கணிப்பதாக இந்துமதவெறியர்கள் அறிவித்திருப்பதற்கு காரணம் என்ன? பச்சமுத்து பாக்கெட்டில் இருந்தாலும் தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தமது சொல்படி கேட்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதை நிர்வாகத்திற்கு அழுத்தம் தருவதன் மூலம் ஊழியர்களை அச்சுறுத்தி தங்களுக்கு  எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த புறக்கணிப்பை செய்திருக்கிறார்கள்.

காவிகளுக்கு அடிபணிந்து நடப்பதை தங்களுடைய தார்மீக கடமையாக எண்ணும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் லோகோவின் கீழ் இருக்கும் வாசகம் – உண்மை உடனுக்குடன்…  ஆனால் பொய்களும், கோழைத்தனமுமே உடனுக்குடன்  என்று வைப்பதே சாலச்சிறந்தது.

பா.ஜ.க கும்பலுக்கு ஆதரவாக ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நிர்வாகம் இறங்கும் நேரத்தில் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கென்று அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் கூட இல்லை. அன்றியும் தொழிற்சங்கம் இல்லாததின் விளைவாக தொடர்ந்து ஊழியர்களை கட்டாய வெளியேற்றம் மூலம் அனுப்புவதும் அங்கே சகஜம். ஆரம்பத்தில் அதிகம் ஊழியர்கள் எடுக்கப்பட்டு பிராண்டை நிலை நிறுத்திய பிறகு ஆட் குறைப்பு சப்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி ஊழியர்களே ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுதான் கதை. அதைப் போல வெளியேற்றப்பட்ட சூர்யா  என்னும் பெண் எடிட்டர்  எழுதிய கடிதம் கீழே..

இந்தக் கடிதத்திலிருந்து பு.த நிர்வாகம் ஊழியர்களை எப்படி கொத்தடிமைகள் போல நடத்துகிறது, தூக்கி எறிகிறது, என்னென்ன பாதிப்புகள் உருவாகிறது எல்லாம் தெரியவரும். இது போக புதிய தலைமுறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறைந்த பட்சம் 8 மணி நேரமும், அதிக பட்சம் எவ்வளவு மணி நேரமும் வேலை பார்க்க வேண்டியது இருக்கும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். இப்படியெல்லாம் எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை.

மேலும் இன்க்ரீமெண்ட் கேட்கும் துணிச்சல் வந்துவிடக்கூடாதென்று , ஒவ்வொரு மூன்றாம் மாதமும் பணி நீக்கம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு செய்தியை பரப்பி விடுவதின் மூலம் ஊழியர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஊருக்கு நியாயம் சொல்லும் இவர்களது நிகழ்ச்சிகள்தான் எத்தனை?

இறுதியில் இந்துமதவெறியர்கள் கோரியது போல குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை நிர்வாகம் நீக்குவதற்கு விரும்பவே செய்யும். அதை எதிர்த்து அந்த பத்திரிகையாளர்கள் போராடுவார்களா என்பதும் சந்தேகம்தான். அத்தகைய போராட்டமும், அந்த போராட்டத்தை சாதிக்கின்ற தொழிற்சங்கமும் இருந்தால்தான் வெளியே அடிக்கும் இந்துமுன்னணி கும்பலிடமிருந்தும், உள்ளே அடிக்கும் நிர்வாகத்திடமிருந்தும் ஊழியர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

– வினவு செய்தியாளர்கள்

பொரி உருண்டை

காமராமேன் தாக்கப்பட்டார்

H Raja against frontline editor

Journalist protest

 

  1. That Pori orundai’s pori orundai who was arrested for bombing Puthiya thalaimurai actualy protested outside IIT during on Amedkar periyar de recognizen row. How it is possible? Arrested terrorist roaming freely

  2. நல்ல வேளை அவர்கள் இந்து மதம் ________________ பற்றி பேசி இருந்தால் உயிருடன் இருக்க முடியாது. ஆனால் இவர்கள் தைரியம் இல்லாதவர்கள். ______________.நம்ம வினவு போல்.

  3. விணவு,

    //‘வாழும் பெரியார்’ என்று பெரியாரின் பெயரை தவறாக பயன்படுத்தும் கருணாநிதியும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தவர்தான்//

    அன்றைய காலகட்டத்தை நினைவு கூருங்கள்.
    ஜெயா பி ஜெ பி அரசாங்கத்தை காலைவாரிவிட்டு கலைத்தவுடன்,
    காங்கிரசோடு கூட்டு சேர்ந்து கொண்டது.
    அன்றைய காலகட்டத்தில் தி மு க வின் நிலை வேறு எவ்வாறாக இருக்கமுடியும்.
    இருந்தாலும் தி மு க ,பி ஜெ பி உடன் பொது குறைந்த பட்ச்ச திட்டத்துடன்(Common minimum programme) பி ஜெ பி யின் முக்கிய திட்டங்களான் 370,ராமர் கோயில் காமன் சிவில் கோட் மற்றும் இது போன்றவற்றை எல்லாம் ஒதுக்குப்புறமாக ஒதுக்கிவைத்தது.

    நீங்கள் விரும்ம்புவதை எல்லாம்- கருணாநிதி செய்வதற்க்கு தமிழ் நாடு ஒன்றும் தனி நாடல்ல.

    இதே நிலைதான் 2009 எல் டி டி இ இறுதிகட்ட போரின் நிலையும்.
    There was no other alternative solutions.

  4. புதிய தலைமுறையை காவிகள் புறக்கணிப்பது ஒப்புக்கு தான். தன் உடலை தானே கொத்திப் புண்ணாக்கும் ஒரு வகை பாம்பின் முடிவை ஏன் பா.ஜ.க எடுத்தது என்று முதலில் வியந்தேன். சமூக ஆர்வலர் என்ற டைட்டில் கார்டுடன் வருகின்ற பானு கோம்ஸ், (அது என்ன கோம்ஸோ?; ஷெர்லாக் கோம்ஸ் பாதிப்பா, தெரியவில்லை) பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வருகின்ற ஜி.சி. சேகர், மோடி ஆதரவாளர் என்ற பெயரில் வருகின்ற நித்தியானந்தன் ஆகியோர் சுத்த சுயம்பிரகாச ஸ்வயம் சேவக்குகளே. அர்ஜுன் சம்பத், ராம ரவிக்குமார் ஆகியோர் புறக்கணிப்பு முடிவின் நிலை குறித்து எதுவும் அறிவிக்காமல் வெட்கமின்றி விவாதங்களில் பேசி வருகிறார்கள்.

    தாலி விவாதத்தை தடுக்க 2000 தொலைபேசி அழைப்புகள் புதிய தலைமுறை அலுவலகத்துக்கு சென்றுள்ளன. இதனை தமிழ் ஹிந்து இணையதளம் தெரிவிக்கிறது. இது திட்டமிட்ட சதி என்பதற்கு இதுவே ஆதாரம். இந்த 2000 நபர்கள் தான் சன் டி.வி வீரபாண்டியனையும் முடக்கியவர்கள்.

    புதிய தலைமுறை எதிர்ப்பையும் கூடவே எடுப்பது இக்கட்டுரையின் கருத்துக்களை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பரிசீலிக்க முன்வருவதை தடுக்கவே செய்யும். பச்சமுத்து என்ற தனிநபரின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு புதிய தலைமுறை ஊடகத்துக்கு ஒரு செல்வாக்கும், வீச்சும் மக்களிடையே இருக்கிறது. அது பச்சமுத்துவை மீறியது. அதுவே காவிகளின் மிரட்டலையும் மீறி காவிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட காரணமாக இருக்கிறது. அதனை முக மதிப்பில் ஏற்றுக் கொண்டு கருத்துக்களை முன்வைப்பது தான் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்கள் பணி குறித்து பெருமிதத்தை அளிக்கும்.

    இல்லையேல், அரசியல் சரியை முன்வைப்பதோடு இந்த கட்டுரை எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

  5. நீங்கள் என்ன சொல்றீங்க சுகதேவ் சார்? தியாகச் செம்மல் சொன்ன இந்துத்துவ குண்டர்கள் பின்னாடி அடையாளம் தெரியா ஆள்னு மாறுன மாறி புதிய தலைமுறை டிவி நண்பர்கள் பா.ஜகவை குத்தம் சொல்லக்கூடாதும்கிறதை நேரடியா சொல்லுங்க! இந்து முன்னணி போராட்டத்தை எதித்து ஊடக நண்பர்கள் நடத்துன கூட்டத்துக்கு பு.த பத்திரிகையாளருங்க யாரும் போகக்கூடாதுன்னு நிர்வாகம் உத்தரவு போட்டது தெரியுமா? பெரியார் திடல் தாலி நிகழ்ச்சியை காட்டக்கூடாதுங்கிற நிர்வாக உத்தரவை மறந்து தற்செயலா டிவியில காட்டுன குத்தத்துக்கு ஒருத்தர வேலைல இருந்து தூக்குனது தெரியுமா?

    என்னமோ புதிய தலைமுறை டிவி பச்சமுத்து பாஜக கையை மீறி செயல்படுதுங்கிறதுங்கிற உங்க வெள்ளேந்தினத்தை என்னண்ணு சொல்றது? சார், எனக்கு மீடியாவுல நிறைய நண்பர்ங்க இருக்காங்க! அவங்களோட பார்வையும் வினவு சொல்ற அரசியலும் சரியா பொருந்துது! அப்படி சொல்லக்கூடாது, நிர்வாகம் வேலையை விட்டு தூக்குணாலும், இந்து முன்னணி அடிச்சாலும் கம்னு இருக்கணும்னு சொல்ற உங்கள மாறி நடுநிலைமை கருத்துதான் பச்சமுத்துவுக்கும், பா.ஜ.கவுக்கு பலம்! மாத்திக்கங்க, உண்மை நிலையை தெரிஞ்சுக்க டிரை பண்ணுங்க, ப்ளீஸ்!

    • அய்யா பத்திரிக்கையாளர் பெருந்தகையே,

      பச்சமுத்துவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இருக்கும் உறவு அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அந்த உறவையும் மீறி பு.த.வில் இந்துத்துவ எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன என்பதை கருப்பு வெள்ளை அணுகுமுறையில் பார்ப்பதில் பிழை இருக்கிறது. நம்பி நாராயணன் என்கிற ஆர்.எஸ்.எஸ் அம்பி பு.த விவாதங்களில் சம்மணக்காலிட்டு உட்கார்ந்து இருந்தவர். அவர் பதிந்துள்ள கருத்து புதிய தலைமுறை மீது இந்துத்துவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள உதவும். அவர் கூறியதன் சாரத்தை தருகிறேன். ‘பு.த.வில் பணிபுரிபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நமது மாற்று சித்தாந்தங்களோடு நெருக்கம் இருக்கலாம். ஆனால், அவர்கள் நம்மை மதித்தே வந்துள்ளார்கள். ஒருமுறை ஒரு முக்கியமான புதிய தலைமுறை நிர்வாகியிடம் ஏன் எங்களை அதிகமாக அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் நீங்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் தான் விவாதிக்கிறீர்கள். திமுக, அதிமுகவை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கலைஞர், அம்மா என்பதற்கு மேல் எதுவும் கூற முடிவதில்லை என்றார். எனவே நமது கோபம் ஊழியர்கள் மீதல்ல. நிர்வாகம் மீதே. ராமேஸ்வரத்தில் நடந்த கோயில் திருவிழாவை காண்பிக்க அனைத்து ஊடகங்களையும் அழைத்தேன். அனைவரும் வந்தார்கள். சன் டி.வி கூட வந்தது. புதிய தலைமுறை மட்டும் வரவில்லை. கேட்டால், ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை என்கிறார்கள்’ என்று புகார் வாசிக்கிறார். அவர் ஒரு தொடரே எழுதினார். வேண்டுமானால் இணைப்பு தருகிறேன்.

      புதிய தலைமுறை ஊடகத்தை முழுக்க தங்கள் இந்துத்துவ நோக்கத்துக்கு மாற்ற முனைந்து இயலாமல் போனதன் துயரமே இவ்வளவு தூரம் இந்துத்துவர்கள் எதிர்ப்பதற்கு காரணம். வைகோ அடியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார். பச்சமுத்து அடியை சகித்துக் கொண்டு உள்ளே இருக்கிறார். இந்த கட்டுரை புதிய தலைமுறை ஊழியர்கள் மீது அனுதாபம் கொண்டு எழுதப்பட்டாலும் விரைவிலேயே அதன் தொனி ‘தந்தி டி.வி மாதிரி மாறி விடுங்கள்; எங்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று இருக்கிறது.

      பச்சமுத்துவின் கல்வி வியாபாரம் விமர்சிக்கப்பட வேண்டியது தான். ஆனால், ஒவ்வொரு கட்டுரையிலும் அதனை சுட்டிக்காட்டி கொண்டிருப்பது பயன் தராது. இந்த கட்டுரையின் தலைப்போடு பொருந்தவில்லை. தி.கவின் தாலி அகற்றும் போராட்டத்தை பு.த காட்டாமல் இருந்திருக்கலாம். புதிய தலைமுறையோ, பச்சமுத்துவோ நெருப்பாற்றில் நீந்தும் அரசியலையோ, அறவுணர்வையோ கொண்டவர்களில்லை. பதற்றத்தை ஆறப்போட தற்காலிகமாக அவர்கள் நினைத்திருக்கலாம். ஐ.ஐ.டி பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்டதே. உங்களை மாதிரியான நபர்கள் தவறான அபிப்பிராயங்களை வேதமாக பற்றிக் கொண்டு இருப்பவர்கள். வைகோ அல்லது நிதிஷ்குமார் போன்றவர்கள் தங்கள் பழைய தவறுகளிலிருந்து மீண்டு வருவதை புரிந்து கொள்ள இயலாத மங்குனிகள். ஒரு ஊனத்தையே சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி வதைப்பவர்கள். இந்துத்துவம் மென்மையான இந்துத்துவவாதிகளை உயிரோடு விடாது. ஒன்று அவர்களை உள்வாங்கி செரிக்கும்; அல்லது துப்பி விடும். பச்சமுத்துவுக்கு என்ன நேரவிருக்கிறது என்பது காலம் சொல்லும். இந்த கட்டுரை இந்துத்துவத்தின் பிடியிலிருந்து மீள வைக்கும் அற அழுத்தமாக இல்லை.

      • என்னை கருப்பு வெள்ளைன்னு சொல்றீங்க, ஓகே, ஆனா நீங்க கலர் ஃபுல்லா பாக்குறது அதை விட பிரச்சனை சார். ராஜ்தீப் சர்தேசாய உங்களுக்கு பிடிக்குமுணு நினைக்கிறேன். அவரும் உங்கள மாறி பிளாக் அண்ட் ஒயிட்டுக்கு எதிரிதான். இந்துத்துவாவை எதிர்த்துத்தான் ஃபேமசா ஆனாரு. பிறகு மெல்ல மெல்ல ஜோதியில கலந்துட்டாரு. இருந்தாலும் பா.ஜ.க ஆட்சி பிடிச்சப்புறம், நிர்மாலா சீதாராமன் அவருக்கு பிடிச்ச ஃபேவரேட் அமைச்சருன்னு புகழ்ந்தார் பாருங்க, இப்ப ஞாபகம் வருது,

        இப்ப கேட்டாலும் ராஜ்தீப் என்ன சொல்லுவாரு, பை பிரின்சிபிள் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்ன்னு சொல்வாறு. அதுனால பிஜேபியில இருக்குற ஒரு நல்ல அமைச்சரை பாராட்டாமா இருக்க மாட்டேன்னும் சொல்வாரு.

        இதையே தப்பான கட்சியில இருக்குற நல்லவருன்னு வாஜ்பாயை கலைஞர் சொன்னா ஊரூ உலகம் ஒத்துக்குமா? உடனே நான் திமுகன்னு முடிவு பண்ணிறாதீங்க.

        பாயிண்டு என்னண்ணா இந்துத்துவாவை எப்படி புரிஞ்சிக்குறோம், எப்படி எதிக்குறோம்குறதுதான். அதுல தப்பானவங்கள தப்பானவங்கன்னுதான் சொல்லணும். அதுல டிஸ்கவுண்டு கொடுத்தா பிறகு முதலுக்கு மோசம்தான்

  6. என்னது, இந்துத்துவாவினர் நிகழ்ச்சியல கருத்தோட பேசுறாங்களா? அட பாமா கருத்துக்கு வந்த சோதனையை பாருமா!

    சார் நேத்தைக்கு நேர்படபேசுவுல அறநிலயத்துறை இந்துக்கள் கையில இருக்கணும்னுங்கிற கோரிக்கையை ( இது இப்ப சமூகத்துல அஜண்டாவே இல்ல) ரொம்ப அழகா செலக்ட் பண்ணி அதுல மூணு ஆர்.எஸ்.எஸ் ஆளுங்க நடிகர் எஸ்.விசேகர், அர்ஜூன் சம்பத் கட்சி ராம ரவிக்குமார் (வினவுல கூலிப்படைன்னு எழுதுனாங்களே அவங்க) அப்புறம் விமரிசகர்ங்கிற பேருல ஏதோ ஒரு லூசு மூணு பேரும் பேசுறதா பாத்தா – அதுல இவங்கள அறிவாளிங்கன்னு நண்பர் சுக்தேவ சார் நினைக்கிறான்னு – நினைச்சுப் பாத்தா எனக்கு அழுகையே வருது!

    நீதிக்கட்சி காலத்துல கொண்டு வந்த அறநியலத்துறை சட்டத்தை நேரு கொண்டு வந்தாருன்னு ஒரு லூசு பேசுது, கூலிப்படை லூசு சிற்றம்பல மேடையில தேவாரம் பாடுறாங்கன்னு முழுப்பொய்ய சொல்லுது, இவங்க அறிவா பேசுறாங்கன்னு நிர்வாகம் சொல்லுது, அது சுகதவேம் நம்புறாறு!

    சார் நீங்க மீடியாவோட பரபரப்பு, கிராபிக்ஸ், புகழ், போதையெல்லாம் உண்மைன்னு நம்புறீங்க. இப்ப பாருங்க, நேத்து நடந்த அறநிலயத்த்துறை தலைப்பை தெரிவு செஞ்சது குணசேகருன்னு நீங்க நினைச்சா அது ரொம்ப தப்பு. டெய்லி காலையில என்னமாறி தலைப்புன்னு இவங்க பாரிவேந்தர் பையனுக்கு அனுப்புவாங்க. அதுல அபொலிட்டிகலான தலைப்புங்கள தெரிவு செஞ்சு, மோடிஜிக்கு ஜே போடுற இஷ்யூச நிர்வாகம்தான் சார் தீர்மானிக்கிறாங்க! நெக்ஸ்ட்டு ராமரவிக்குமார், விமிரசகருன்னு பல முட்டாள் ஆர்.எஸ்எஸ் காராருங்களெல்லாம் கமலாலயம் தீர்மானிச்சு சொன்னா நிர்வாகம்ஏத்துக்கிட்டு கூப்பிடுவாங்க. அதயும் குணசேகரோ இல்ல ஜென்ராமோ செலக்ட் பண்ணி கூப்பிடுறாறுண்ணு ஏமாறீதீங்க!

    பச்சமுத்து ஊழல் சொத்தும, அதுக்காக அவரு பாஜகவுக்கு பணம் கொடுக்குறுதும், அதானி மோடிஜிய ஆதரிக்கிறதும் எப்பவாச்சும் எழுதுனா போதும்கிற உங்க கருணை எனக்கு இல்லீங்க. வினவு சார்ந்த கட்சிக்கும் அப்படித்தான்னுன நினைக்கிறேன்.

    ஆனா பாருங்க வைகோ, நிதீஷ் குமாரையெல்லாம் , பாரிவேந்தரோட ஒப்பீடீரீங்க பாருங்க, அங்க நிக்கீறீங்க! ரொம்ப கஷ்டம்.

    மவுண்ட்ரோடு அரசினர் தோட்டத்துல இருக்குற பிரஸ் கிளப்பே நம்ம பாரிவேந்தர் போட்ட பிச்சையிலதான் கட்டுனாங்க, அவரோட ஊழல் பணம் இல்லாத ஒரு அரசுத்துறையோ இல்லை ஊடக, கலை துறையோ இங்க இல்லை. அடுத்து என்ன? பாரிவேந்தர் தமிழ் விருதுக்கு உங்களுக்கு பிடிச்ச ரைட்டர்ஸை செலக்ட் பண்ணி அவுங்கள எதிர்த்துவினவு எழுதுனா நீங்க அதை எதிர்ப்பீங்கன்னு நினைக்கிறேன், சரியா சார்?

  7. இதுவரை வந்து மிரட்டுனதிலேயே ஒரு மார்க்கமானது இது தான்.

    //பாரிவேந்தர் தமிழ் விருதுக்கு உங்களுக்கு பிடிச்ச ரைட்டர்ஸை செலக்ட் பண்ணி அவுங்கள எதிர்த்துவினவு எழுதுனா நீங்க அதை எதிர்ப்பீங்கன்னு நினைக்கிறேன், சரியா சார்?//

    //ராஜ்தீப் சர்தேசாய உங்களுக்கு பிடிக்குமுணு நினைக்கிறேன்.//

    நல்லா ரூம் போட்டு யோசிக்குது புள்ள.

  8. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு குண்டு வைத்த காவி கும்பல் வழக்கு எந்த நிலையில் உள்ளது?
    நண்பர் வழக்கறிஞர் உதயம் மனோகரன் சார்பில் (ஜீனியராக) பூந்தமல்லி பொடா நீதி மன்றத்தில் இரு வழக்குகளுக்கு செல்வது உண்டு. வடதமிழகத்தில் குண்டு வீசப்படும் அனைத்து வழக்குகளும் பூந்தமல்லி பொடா நீதி மன்றத்திற்குதான் வரும். பங்காளி சொத்து தகராறு, கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நாட்டு வெடிகுண்டுகள், கல்குவாரி வெடிக்கச் செய்யும் குண்டுகள் வழக்குகள் அனைத்தும் பூந்தமல்லி பொடா நீதி மன்றத்திற்குதான் வருகின்றது.
    ஆனால், ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு தாலி அவசியமா என்று விவாத நிகழ்ச்சியை எதிர்த்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு குண்டு வைத்த காவி கும்பலை சேர்ந்த சிலர் சேதப்படுத்தி ஊடகவியலாளர்களுக்கும், புதிய தலைமுறை தொலைக்காட்சி முதலாளிக்கும் கொலை மிரட்டல் விட்டனர். அது குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு இந்துத்துவா கும்பலில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
    இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதி மன்றத்திற்குதான் வர வேண்டும்..

    ஆனால் இன்று வரை திய தலைமுறை தொலைக்காட்சிக்கு குண்டு வைத்த காவி கும்பல் வழக்கு பூந்தமல்லி பொடா நீதி மன்றத்திற்கு வரவில்லை..
    அதிமுக ஆட்சியில் காவி கும்பல் குண்டு வைத்தால் அது குற்ற வழக்கு இல்லையா?
    புதிய தலைமுறை தொலைகாட்சி ஊடகவியலாளர்கள் இதற்கு பதில் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்?
    அல்லது நடுநிலை ஊடகவியலாளர்கள் இதுபற்றி ஏதாவது வாய்திறப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்?

Leave a Reply to K.Natarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க