புதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்

11
535

மீபத்தில் பொரி உருண்டை ஒன்று தன் ஏவல் பொரி உருண்டைகளை அனுப்பி டிபன் பாக்ஸில் பட்டாசை வைத்து புதிய தலைமுறை அலுவலக வாசலில் வீசிச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அடுத்த நாள் காலையில் ஏதோ ஒரு எலிவளையிலிருந்து வெளியே வந்த தலைமை பொரி உருண்டை மதுரையில் கைதாகியது.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
கேமரா மேனை தாக்கியது மட்டுமில்லாமல், அந்த வழியாக வந்த பெண் நிருபரையும் தாக்க முனைந்தனர்.

மோடி ஆட்சியில் சாமியாரெல்லாம் அமைச்சராகி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வெறுப்பு வாந்தியெடுத்து மக்களை சித்திரவதை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த ரவுடி கும்பலுக்கு தலைமை வகிக்கும் எச்.ராஜாவுக்கு அடுத்தப்படியாக அந்த பொரி உருண்டை கிளம்பியிருந்தது. இது ஏதோ ஒரு நமத்துப் போன பொரி உருண்டையின் ஊசிப்போன விளம்பர முயற்சி என்பது மட்டுமல்ல. பார்ப்பனிய இந்து மதவெறி பாசிசத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்தை எப்படியாவது அடிமைப்படுத்த வேண்டும் என்று காவி கும்பல் கொலை வெறியுடன் முயற்சித்து வருகிறது. பொரி உருண்டைகளும் அதன் ஒரு அங்கம்தான்.

சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு “நேருக்கு நேர்” நேர்காணல்களில் பிரபலமான வீரபாண்டியன் என்ற சன் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளர் – நிகழ்ச்சி தொகுப்பாளர், இஸ்லாமிய அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் போய் மோடியை எதிர்த்து பேசினார் என்றதுமே ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் துள்ளிக் குதித்தன. உடனே சன் டி.வி மாறன்களை மிரட்டி வீரபாண்டியனது நிகழ்ச்சிகளை தடை செய்தன. பார்ப்பனிய எதிர்ப்புக்கு புகழ் பெற்ற திராவிட இயக்கத்தை வைத்து ஆளான மாறன்களே இதை வெட்கமின்றி ஏற்றுக் கொண்டனர்.

இதே சன் நிர்வாகம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராஜாவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது. சட்டமன்றங்களிலேயே நீலப்படங்கள் பார்க்கும் பா.ஜ.க தலைவர்களின் தமிழக வாரிசுகள் இதை எதிர்க்காதது ஆச்சரியமல்ல. வேறு ஊடகங்களும், கட்சிகளும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல சன் நிர்வாகம் வீரபாண்டியனை முடக்கி போட்டதற்கும் யாரும் குரல் கொடுக்கவில்லை. காவி கூட்டத்தினை கண்டிக்கவும் இல்லை.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் லோகோவின் கீழ் இருக்கும் வாசகம் – உண்மை உடனுக்குடன்… ஆனால் பொய்களும், கோழைத்தனமுமே உடனுக்குடன் என்று வைப்பதே சாலச்சிறந்தது.

அசுரர்களைப் போற்றிய மண்ணில் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒளிபரப்பி பக்திச் சேவை செய்யும் சன் தொலைக்காட்சி, காவி பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தது எதேச்சையானது அல்ல. ‘வாழும் பெரியார்’ என்று பெரியாரின் பெயரை தவறாக பயன்படுத்தும் கருணாநிதியும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தவர்தான். அதற்கு கருணாநிதியை கன்வின்ஸ் செய்ததே முரசொலி மாறன்தான். அதற்கு தவறான கட்சியில் சரியான மனிதர் வாஜ்பாயி என்று சப்பைக்கட்டு வேறு.

புதிய தலைமுறையின் கதை வேறு. நடுநிலை வேசம் கட்டிக் கொண்டு ஊடக உலகில் நுழைந்த புதிய தலைமுறை உண்மையில் பா.ஜ.கவை ஆதரிப்பதுதான் நடுநிலைமை என்று நடுநிலைமைக்கு ஒரு புதிய விளக்கத்தையே உருவாக்கியிருந்தது. அப்பேற்பட்டவர்கள் மீது ஏன் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு? தன்னுடைய முதல் நிகழ்ச்சியிலிருந்தே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட தெரியாதவர்களாக வாழ்ந்த பா.ஜ.க காரர்களை வம்படியாக பிடித்து வந்து தமிழகத்திற்கு அறிமுகம் செய்து காவிப்பணியாற்றிய புதிய தலைமுறையின் மீது ஏன் இந்த குண்டு வீச்சு?

இது புதிய தலைமுறை ஊழியர்களுக்கே குழப்பமாக இருந்திருக்கும். அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்றாடம் புதிய தலைமுறைக்கு வந்து சென்றவர்கள்தான், இந்த காவி கூட்டத்தினர். அதே போல என்னதான் தேசியக் கட்சி, ஆளும் கட்சியாக வெயிட்டாக இருந்தாலும், வருவதற்கு பேட்டா காசும் வாங்கி சென்ற பா.ஜ.க.வினர், என்னை கூப்பிடலையா  என்று இந்த டி.வியில் கெஞ்சிக் கிடந்த பா.ஜ.க.வினர் இன்று மோடி ஆட்சி வந்தவுடன் நேரெதிராக மிரட்டுகிறார்களே, என்ன காரணம் என்று ஊழியர்கள் குழம்பித்தான் போயிருப்பார்கள். பா.ஜ.கவுடன் முதல் கூட்டணி அமைத்து பாதை போட்ட பச்சமுத்துவுக்கே நாம நல்லாத்தானே மோடிக்கு சொம்படிக்கிறோம் பிறகு ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என்று தோன்றியிருக்காதா என்ன?

“தாலி பெண்களை இழிவுப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?”  என்னும் விவாத நிகழ்ச்சிதான் தற்செயலாக சில விசயங்களை நிறைவேற்றி மேற்கண்ட குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் படபிடிப்பு முடிந்து முன்னோட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு புதிய தலைமுறையில் ஒளிப்பரப்பட்டது. அந்த முன்னோட்டத்தில் ஒரு பெண் ‘தாலிங்கிறது பெண்களுக்கு நாய்ச்சங்கிலி மாதிரிங்க’ என்று தெரிவித்தார்.  உடனே இந்து மனம் அதாவது வானர பரிவாரங்களால் வழிநடத்தப்படும் வெறி துள்ளி எழுந்து கத்த ஆரம்பித்தது.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
தமிழகத்தில் இந்த ரவுடி கும்பலுக்கு தலைமை வகிக்கும் எச்.ராஜா

தமிழ்நாட்டு பெண்கள் பெரும்பாலானவர்களின் தாலியை டாஸ்மாக் அவிழ்த்துக் கொள்ளும் அவலம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தாலி நாய்ச் சங்கலியா, தூக்கு கயிறா என்பதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அப்படி இல்லாத பிரச்சினையை இருப்பதாக ஆக்குவதற்கு காவி கும்பல்கள் முடிவெடுத்தனர். உடனே புதிய தலைமுறை அலுவலகத்திற்கு தொடர் மிரட்டல் அழைப்புகளால் தொந்தரவு செய்திருக்கின்றனர்.

பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்கே தாலியின் அவமானத்தை எதிர்க்கிறோம் என்று பொங்கிய கூட்டம் உண்மையில் புதிய தலைமுறை அலுவலகத்தின் வரவேற்பாளர்களாக வேலை செய்யும் பெண்களை கலப்படமில்லாத கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தது. இது போக தாலியை குறித்து அந்த முன்னோட்டத்தில் (டிரைலரில்) பேசிய அந்தப் பெண்ணையும் மிரட்டியிருக்கிறது. மன்னிப்பு கேட்கச் சொல்லி அச்சுறுத்தியிருக்கிறது. அந்த பெண்ணோ தன் அனுபவத்தில் உணர்ந்த தாலி பற்றிய உண்மைகளை மறுத்தெல்லாம் பேச முடியாது என்றிருக்கிறார்.

பிறகு அந்த பெண்ணின் வீட்டில் கல்லை விட்டெறிந்து தொடர் மிரட்டல்களை ஏவிவிட்டாலும் அந்த பெண்ணை பணிய வைக்க முடியவில்லை. இதற்காகவே இவர்கள் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண், வீட்டு முகவரியை ஆள் வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இல்லை மத்திய உளவுத்துறை கூட கண்டுபிடித்து கொடுத்திருக்கலாம்.

இதற்கு பிறகு முன்னோட்டம் ஒளிபரப்பான பிறகு அடுத்த நாள் காலையில் புதிய தலைமுறை வாசலில் இந்துமதவெறியர்கள் கூடினார்கள். அன்றைய புதிய தலைமுறையின் காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாலு வார்த்தை பொருளோடு பேசுவதற்கு திண்டாடும் டால்பின் ஸ்ரீதர் எனும் பா.ஜ.க ஆள் கிளம்பிய பிறகு வானரங்கள் புதிய தலைமுறை வாசலை சூழ்ந்துவிட்டன. ஒரு வாசலை அடைத்தால், மறு வாசலில் நுழையுமாம் நரி என்பதற்கேற்ப இன்னொரு வாசல் வழியாக வந்தும் காத்து கிடந்திருக்கின்றனர். அந்த வழியாக சென்று கொண்டிருந்த கேமரா மேனை தாக்கியது மட்டுமில்லாமல், அந்த வழியாக வந்த பெண் நிருபரையும் தாக்க முனைந்தனர்.

இதையடுத்து ஊழியர்களிடையே கொந்தளிப்பு மனநிலை தொற்றிக் கொண்டிருக்கிறது. அதை புதிய தலைமுறையின் செய்தியாளர் தியாகச் செம்மல் இயல்பாக வெளிப்படுத்தினார். தாக்கியவர்களை  இந்துத்வ குண்டர்கள் என்று குறிப்பிட்டார். அதற்கடுத்து புதிய தலைமுறை நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் இந்துத்துவ குண்டர்கள் என்ற உண்மை அடையாளம் தெரியாத நபர்களாக மாற்றப்பட்டது.

இந்துத்துவ குண்டர்கள் என்று அழைத்ததற்காக தியாகச் செம்மல் ஃபேஸ்புக்கின் காவிப் பக்கங்களில் மிரட்டப்பட்டார். அவருடைய திருமண புகைப்படத்தை போட்டு ஆபாச அர்ச்சனைகளை செய்தார்கள். தாலியின் மானம், மற்றும் பெண்களின் மானம் குறித்த கவலைப்பட்ட ஓநாய்களின் சுயரூபம் வெளிப்பட்டது.

தான் ஒரு முழு முட்டாள் என்ற உண்மை தெரிந்தும் தொலைக்காட்சியில் பேச வாய்ப்புக் கொடுத்தது பச்சமுத்து டிவிதான் என்பதையெல்லாம் மறந்து டால்பின் ஸ்ரீதர் போன்ற அனாமதேயங்கள் கூட சங்க பரிவாரங்களோடு சேர்ந்து பொங்கியது.

அந்த கோல்மால் டால்பின் பகிர்ந்திருந்த மற்றோரு பதிவு நம்பி நாராயாணன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்பியுடையது. அதில் தாலியை பற்றிய விவாதத்தை 2000 பேரின் எதிர்ப்பை மீறி நடத்த முயற்சித்தது அராஜகம் என்று சாடுகிறார். உண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினர், தாலி குறித்த சிறு எதிர்ப்பு வந்த உடனேயே முந்தைய நாள் இரவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வேறு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முடிவை எடுத்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தொடை நடுங்கிகள் என்பது மட்டுமல்ல, அவர்களே கூட பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வமற்ற தொலைக்காட்சியாகத்தான் இயங்கினார்கள்.

இது தெரிந்தும், அதாவது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நமது மேலாண்மை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று தெரிந்தும் இனி இப்படியான தலைப்புகளை  எடுக்கக் கூடாது என்று  ஒரு மிரட்டலுக்காகவே அங்கே வந்து, கேமராமேனை இழுத்துப் போட்டு அடித்து, நெஞ்சிலேறி மிதித்து, கேமராவை உடைத்து வீசியிருக்கிறது இந்த கும்பல்.

தங்களுக்கு சாதகமான தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கும் நோக்கம் இந்த இந்துத்வ வானரங்களுக்கு ஏன் வருகிறது என்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயணம் செய்து அங்குள்ள நிலையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை புதிய தலைமுறை ஒளிபரப்பி வந்தது. அதில் குஜராத் பற்றிய பதிவில், குஜராத் பற்றிய பிம்பம் உண்மையில் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என்று இருந்தது. இதெல்லாம் பச்சமுத்துவுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றாலும், இந்த மெல்லிய மயிலிறகு விமரிசனத்தை ஊட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இணைப்பு 1:

இணைப்பு 2:

பாரி வேந்தர் என்னும் கல்வி கொள்ளையர் மோடியுடன் கூட்டு வைத்திருப்பதற்கும், அவருடைய திருட்டு சாம்ராஜ்யத்தை காப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட புதியதலைமுறை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கேள்வி கேட்பதா?  என்று அவர்களுக்கு ஏற்கனவே ஒரு சிறு கடுப்பு உண்டு.

அடுத்த கடுப்பு….சட்டமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ப்ளூ பிலிம் பார்க்கும் செய்திகளை வெளியிட்டது. இதுமட்டுமில்லாமல், இவர்களின் பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாத சிலர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருப்பதும் அவாளுக்கு பிடிக்கவில்லை. இதை அவர்களின் இணைய தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவலாக பார்க்கலாம்.

puthiya-thalaimurai-screen-shot-1இவர்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்தான் அடுத்த வீட்டுக்காரர்களுக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்த பா.ஜ.க கோயிந்துகள் பலரை பிரலமாக்கினார்கள். தமிழகத்தில் இல்லாத பா.ஜ.க.வை இருப்பது போன்றதொரு தோற்றத்தை  ஏற்படுத்தியதும் இந்த தொகுப்பாளர்கள்தான். ஆனாலும், அவர்களை பார்ப்பன கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் சில நேரம் நிகழ்ச்சி சுவாரசியம், மற்றும் சமநிலை படுத்துவது என்ற நோக்கிலும் பா.ஜ.க முட்டாள்களிடம் ஏதாவது சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. இது கூட அந்த கோயிந்துகளுக்கு பிடிக்கவில்லை. கேள்வி கேட்பவர்களை பொதுவாகவே பாசிச கும்பலுக்கு பிடிப்பதில்லை.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
திருட்டு சாம்ராஜ்யத்தை காக்கத்தானே மோடி மஸ்தானின் விளம்பர ப்ரோக்கராக மாறி கோடிக்கணக்கில் ஸ்பான்சர் செய்தார், பச்சமுத்து.

‘ஜென்ராம் ஒரு கம்யூனிஸ்ட். குணசேகரன் ஒரு தி.க – இவர்களை புதிய தலைமுறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும்’ என்று இவர்கள் திரும்பத் திரும்ப கத்துகிறார்கள். மேற்கண்ட இருவரும் என்ன கருத்து வைத்திருக்கிறார்கள், எதை ஆதரிக்கிறார்கள்  என்பதாக நடந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்படிக் கேட்பதாக  வைத்துக் கொண்டாலும் அது  குறிப்பிட்ட பிரச்சினை குறித்து சமூகத்தின் மனநிலையோடு சேர்ந்தும் வரலாம். மேலும் ஒரு உரையாடலை விறுவிறுப்புடன் வளர்த்துக் கொண்டு செல்வதற்கே எதிரெதிர் கேள்விகளை கேட்பது உலகமெங்கும் உள்ள வழக்கம்.

‘மிஸ்டு கால் மூலம் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்ந்தும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெறும் 5000 வாக்குகள் வாங்கியது ஏன்’ என்று கேட்டால் அது தவறாம்! இதை பாண்டே கேட்பது போல, ‘மக்களுக்காக மோடி, பா.ஜ.க அனைவரும் மிகுந்த பணியாற்றியும் மக்கள் வோட்டுப் போடவில்லை ஏன்’ என்று கேட்க வேண்டுமாம். எனில் இதற்கு பெயர்தான் ஜெயா டி.வி. அதையெல்லாம் எந்த பொதுவான மக்கள் பார்க்கிறார்கள்? தந்தி டி.வி பாண்டே போன்ற ஒரு அக்மார்க் வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவே புதிய தலைமுறை தொகுப்பாளர்கள் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நிலை.

புதிய தலைமுறை தீபாவளி
“முந்தைய கால தமிழகத்தில் தீபாவளி எனும் பண்டிகையே கிடையாது”

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “தீபாவளிக்கு வெடி வெடிக்கும் பழக்கமே வங்காளத்திலிருந்து வெடி மருந்து தொழிற்சாலைகள் சிவகாசி பக்கம் வந்த பிறகே ஆரம்பித்தது” என்றார். அதேபோல், “முந்தைய கால தமிழகத்தில் தீபாவளி எனும் பண்டிகையே கிடையாது”  என்றார்.

இதற்கு எதிராக பேசிய ஆர்.எஸ்.எஸ்-இன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ராமமூர்த்தி வழக்கம் போல….எலி பொந்துக்குள் இருந்து பேசுவது போல, மெல்ல தொடங்கி, அங்கே கொண்டாடுனாங்க, இங்கே கொண்டாடுனாங்கன்னு கதை விட்டு ஆரம்பித்து பிறகு, “நம்பிக்கை தர்ற பண்டிகையை இப்படி கொச்சை படுத்துறாங்களே…கொச்சை படுத்துறதுக்கும் மெக்காலே புத்திரர்களின் இந்து விரோத மனபோக்கு காரணம்”னு நிகழ்ச்சிக்கு அவதூறு காவி மசாலா எபெஃக்ட் கொடுக்கத் தொடங்கினார். (7:35)

நாயக்கர் காலத்திற்கு பிறகுதான் தீபாவளி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறதேயொழிய, ஈராயிரம் ஆண்டுகளாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதற்கு சான்றில்லை என்று எஸ்.ரா கூறினார். உடனே, அது இருள் அகற்றி ஒளியேற்றும் நாள், நரகாசுரன் தமிழனெல்லாம் கிடையாது என்று மீண்டும் பொங்கினார், ராமமூர்த்தி. ஆனால், நேரலை அரங்கில் தங்கள் சுபாவத்தின் படி முழுமையாக அதாவது அம்மணமாக பொங்க முடியாது என்று மறுநாள் தங்கள் வானரங்களை அனுப்பி யாரையாவது பிராண்டிவிட அனுப்பியது பரிவார கும்பல்..

இணைப்பு :

 

வந்த கும்பல் அலுவலக வாயில் முன்னே கத்தியதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

அதில் அவர்கள் எஸ்.ராவை  விட்டுவிட்டு, சுப.வீரபாண்டியனை திட்டித் தீர்த்தார்கள். ஒத்தைக்கு ஒத்த வர்றியான்னு சுபவீயையும், ஏன் ஒரு கட்டத்தில் பச்சமுத்துவையும் திட்டிக் கொண்டே சவால் விட்டார்கள்.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான் தாலி நிகழ்ச்சி பிரச்சினைக்கு பிறகு பா.ஜ.க கும்பல், புதிய தலைமுறையை புறக்கணிக்கும் முடிவை அறிவித்தார்கள். தங்கள் இருப்பை குறைந்தபட்சம் கிராபிக்ஸிலாவது உறுதி செய்து கொள்ள வாய்ப்பளிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியை  என்ன தைரியத்தில் புறக்கணிக்கிறார்கள்?

பச்சமுத்துவின் கல்வி சாம்ராஜ்யம் ஒன்றும் அன்பு சாம்ராஜ்யம் இல்லை. ஊழலில் உருவான திருட்டு சாம்ராஜ்யம்தான். இந்த திருட்டு சாம்ராஜ்யத்தை காக்கத்தானே மோடி மஸ்தானின் விளம்பர ப்ரோக்கராக மாறி கோடிக்கணக்கில் ஸ்பான்சர் செய்தார். பச்சமுத்துவின் ‘தொழில்’ பலவீனத்தை நம்பித்தான் காவிகள் புதிய தலைமுறையை புறக்கணித்தார்கள். இதன்படி புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றுமே மோடிக்கு எதிராகவோ ஏன் மோடி வீட்டு கொசுவுக்கு எதிராக கூட பேசவோ, பார்க்கவோ முடியவே முடியாது. அதனால் நாளையே இவர்கள் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள். இப்போதே அதனுடைய முன்னோட்டோமாக பா.ஜ.கவின் எஸ்.வி.சேகர் எனும் நடிகர் விவாதங்களில் கலந்து கொள்கிறார். அவரை சில பா.ஜ.க நபர்கள் கண்டித்தாலும், பலர் ஆதரிக்கவே செய்கிறார்கள்.

ஆகவே இன்று புதிய தலைமுறையை புறக்கணிப்பதாக இந்துமதவெறியர்கள் அறிவித்திருப்பதற்கு காரணம் என்ன? பச்சமுத்து பாக்கெட்டில் இருந்தாலும் தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தமது சொல்படி கேட்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதை நிர்வாகத்திற்கு அழுத்தம் தருவதன் மூலம் ஊழியர்களை அச்சுறுத்தி தங்களுக்கு  எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த புறக்கணிப்பை செய்திருக்கிறார்கள்.

காவிகளுக்கு அடிபணிந்து நடப்பதை தங்களுடைய தார்மீக கடமையாக எண்ணும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் லோகோவின் கீழ் இருக்கும் வாசகம் – உண்மை உடனுக்குடன்…  ஆனால் பொய்களும், கோழைத்தனமுமே உடனுக்குடன்  என்று வைப்பதே சாலச்சிறந்தது.

பா.ஜ.க கும்பலுக்கு ஆதரவாக ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நிர்வாகம் இறங்கும் நேரத்தில் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கென்று அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் கூட இல்லை. அன்றியும் தொழிற்சங்கம் இல்லாததின் விளைவாக தொடர்ந்து ஊழியர்களை கட்டாய வெளியேற்றம் மூலம் அனுப்புவதும் அங்கே சகஜம். ஆரம்பத்தில் அதிகம் ஊழியர்கள் எடுக்கப்பட்டு பிராண்டை நிலை நிறுத்திய பிறகு ஆட் குறைப்பு சப்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி ஊழியர்களே ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுதான் கதை. அதைப் போல வெளியேற்றப்பட்ட சூர்யா  என்னும் பெண் எடிட்டர்  எழுதிய கடிதம் கீழே..

இந்தக் கடிதத்திலிருந்து பு.த நிர்வாகம் ஊழியர்களை எப்படி கொத்தடிமைகள் போல நடத்துகிறது, தூக்கி எறிகிறது, என்னென்ன பாதிப்புகள் உருவாகிறது எல்லாம் தெரியவரும். இது போக புதிய தலைமுறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறைந்த பட்சம் 8 மணி நேரமும், அதிக பட்சம் எவ்வளவு மணி நேரமும் வேலை பார்க்க வேண்டியது இருக்கும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். இப்படியெல்லாம் எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை.

மேலும் இன்க்ரீமெண்ட் கேட்கும் துணிச்சல் வந்துவிடக்கூடாதென்று , ஒவ்வொரு மூன்றாம் மாதமும் பணி நீக்கம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு செய்தியை பரப்பி விடுவதின் மூலம் ஊழியர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஊருக்கு நியாயம் சொல்லும் இவர்களது நிகழ்ச்சிகள்தான் எத்தனை?

இறுதியில் இந்துமதவெறியர்கள் கோரியது போல குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை நிர்வாகம் நீக்குவதற்கு விரும்பவே செய்யும். அதை எதிர்த்து அந்த பத்திரிகையாளர்கள் போராடுவார்களா என்பதும் சந்தேகம்தான். அத்தகைய போராட்டமும், அந்த போராட்டத்தை சாதிக்கின்ற தொழிற்சங்கமும் இருந்தால்தான் வெளியே அடிக்கும் இந்துமுன்னணி கும்பலிடமிருந்தும், உள்ளே அடிக்கும் நிர்வாகத்திடமிருந்தும் ஊழியர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

– வினவு செய்தியாளர்கள்

பொரி உருண்டை

காமராமேன் தாக்கப்பட்டார்

H Raja against frontline editor

Journalist protest

 

சந்தா