Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு - விருத்தாசலம்

கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு – விருத்தாசலம்

-

ன்பார்ந்த பெற்றோர்களே! வணக்கம்!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுபெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில், பொதுப்பள்ளிகள் மூலமாக அரசுதான் முற்றிலும் இலவசமாக கல்வி வழங்குகிறது. அருகமைப்பள்ளிமுறை – அதாவது நம்ம ஊர் ரேசன் கடை போன்று அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள், தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, கல்வி கற்கும் முறை – தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல், தனி மனித ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றிற்கு அடிப்படையாக இருப்பது, அனைவருக்கும் ஒரே சீரான, தரமான கல்வி முறைதான். அதை அரசுதான் இலாப நோக்கமின்றி வழங்க முடியும். இந்தியாவின் பார்ப்பனிய சாதிக் கொடுமையுடன், வர்க்க பாகுபாடுகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், பணத்திற்கு தகுந்த பள்ளிக் கூடம் என்பது மேலும் இத்தகைய பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யும். பணம் சம்பாதிக்க மட்டும் படிப்பு என்ற, கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழிப்பது, பாம்பை பார்த்தவுடன் அடிக்கும் முடிவுக்கு ஒப்பானது. ஆனால், அதை வரவேற்பது என்ற இன்றைய நிலை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

தனியார் பள்ளி தரமானதா?

‘தனியார் பள்ளியில் படித்தால், நம் பிள்ளை ஆங்கிலத்தில் பேசுவான். அறிவு வளரும், டாக்டர், எஞ்சினியர் ஆவான், நம்மைப் போல கஷ்டப்பட மாட்டான். அதிகம் பணம் சம்பாதிப்பான்’ என்ற மூட நம்பிக்கையில், அவரவர் வசதிக்கேற்றாற் போல் தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி விட்டில் பூச்சியாய் ஓடுகிறார்கள்.

தனியார் பள்ளி தாளாளர்களுக்கு ஒழுக்கம், நேர்மை, எதுவும் கிடையாது. கட்டணக் கொள்ளை அடிப்பது, பணம் கட்டாத மாணவர்களை துன்புறுத்துவது, பெற்றோரை அவமானப்படுத்துவது, 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் படிக்கச் சொல்வது என்று மாணவர்களின் படிக்கும் முறையை, அர்த்தம் புரியாத தேசிய கீதம் போல், பாயாசத்தின் சுவை அறியாத கரண்டி போல் மாணவர்களிடம் பதிய வைக்கப்படுகிறது.

‘கருப்புப் பணமாக கல்விக் கட்டணம், வினாத்தாளை முன்கூட்டியே சொல்வது, காப்பி அடிப்பது, தேர்வு கண்காணிப்பாளரை ஃபிக்ஸ் செய்வது, என அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவது தவறில்லை, அதுதான் திறமை’ என்று மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை பள்ளிப் பருவத்திலேயே ஊழல்படுத்துகிறார்கள். தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை கொத்தடிமைகளாக, குறைந்த சம்பளத்திற்கு ஓய்வு இன்றி வேலை வாங்குவது, அவர்களை செங்கல் சூளைக்கு ஆள் பிடிக்கும், புரோக்கர் போல் மாணவர்களை பிடிக்க வெளியே அனுப்புவது அனைத்தும் தெரிந்த பெற்றோர்கள் காரியவாதமாக தனியார் பள்ளி பற்றி பேச மறுப்பதுடன், ஆசிரியர் இல்லை, சொல்லிக் கொடுப்பதில்லை என அரசுப் பள்ளிகளின் தரம் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அரசுப் பள்ளி நமது பள்ளி!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகடைக்கோடி ஏழை மாணவனுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும். அதை அரசால் மட்டுமே செய்ய முடியும். அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒரு நாளும் ஒப்பிட முடியாது. அரசுப்பள்ளி மாணவர் ரேசன் கடை, அப்பா குடிபோதை, விவசாய வேலை, ஊரில் நல்லது கெட்டது என்ற காரணத்தால் பள்ளிக்குப் போகாமல் இருப்பது, புரிந்து கொள்ள முடியாமை, டியூசன் படிக்க இயலாமை, இதை எல்லாம் தாண்டிதான் 80 சதவீத தேர்ச்சி, 495 மதிப்பெண் என பெறுகிறார்கள். இன்றைக்கு உயர்பதவிகளில் இருப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பெரும்பான்மையானவர்கள் அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்தவர்கள்தான். அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களும் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை என்ற குறைகளை பெற்றோர் கண்காணித்து போராடினால் சரிசெய்ய முடியும்.

அரசின் தனியார்மயக் கொள்கையால் வாழ்விழந்த மக்கள் வீதிக்கு வந்து போராடினால் போலீசு தடி அடி, பொய் வழக்கு, சிறை என சந்திக்கிறார்கள். அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நம்பிய காலம் முடிந்து விட்டது. அவர்கள்தான் இத்தனை பஞ்சமா பாதகங்களையும் அமல்படுத்துகிறார்கள். நீதிமன்றமும் அதை உறுதி செய்கிறது. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த மட்டுமல்ல, அனைத்திற்கும் நாம் ஒன்று திரண்டு போராடி பாதுகாக்க வேண்டும். ஆளுகின்ற அரசு மக்களுக்கு எதிராகப் போவதுடன், நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டது. ஆங்கிலேயனை எதிர்த்த சுதந்திர போராட்டம் போல நமக்கான அரசை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்கக் கிளையை உடனே ஏற்படுத்துங்கள். அனைத்திற்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்? கல்வி உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் சிறுதொகை கூட பல போராட்டங்களை உயிர்ப்பிக்கும்.

நிதி தாருங்கள், மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி.

கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு

பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி

ஜூன் 13, 2015 சனிக்கிழமை

பேரணி துவங்குமிடம் : திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்
நேரம் : மாலை 4 மணி

மாநாடு : வானொலித் திடல், விருத்தாசலம்
நேரம் : மாலை 5 மணி

  • தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு
  • பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி வழங்கு
  • அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உரிய உட்கட்டமைப்பு வசதிகளை உடனே செய்
  • அரசுப் பள்ளி நமது பள்ளி! அதனை மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம்.

அமர்வுகள்

  1. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அரசுப் பள்ளிகளை முன்னேற்றும்
  2. தாய்மொழிக் கல்வியே சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும்
  3. நகர்மன்ற ஊழலை ஒழித்தால், நகராட்சிப் பள்ளிகள் சிறக்கும்
  4. தனியார் பள்ளிகளால் தரமான கல்வி தர முடியாது

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – 93450 67646

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம் 93600 61121