Saturday, December 4, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !

ஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !

-

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி ஜெயா, நீதிமன்றத்தை வளைத்து நெளித்து வெளியில் வந்து முதல்வராகி தற்போது ஆர்.கே நகரில் செயற்கையாக ஒரு தேர்தலை உருவாக்கி போட்டியிடுகிறார்.

ஜெயா வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்வதில் ஒரு ‘புரட்சி’

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே நகருக்கு வந்த போது போக்குவரத்து நெருக்கடியை மட்டும் ஏற்படுத்தவில்லை, புரட்சித்தலைவி என்கிற பெயருக்கு ஏற்றாற் போல வேட்புமனு தாக்கல் செய்வதில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களை விட ஆர்.கே நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க வின் துணை அமைப்பு போலவே செயல்பட்டு வருகிறது. ஜெயா வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது நடந்த கூத்துகளை பத்திரிகைகளே கிண்டல் செய்கின்றன. ‘வேட்பாளராக ஜெயலலிதா நிற்பதால் தேர்தல் விதிகள் அனைத்தும் காற்றில் பறந்துகொண்டிருக்க.. அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போதோ அவை விண்ணில் பறந்தன’ என்று எழுதுகிறது ஜீனியர் விகடன்.

தேர்தல் நடக்க இருக்கும் வட சென்னையின் குண்டும் குழியுமான சாலைகள் எல்லாம் இரவோடு இரவாக பளிச் என்று புத்தம் புது சாலைகளாக மாறின; மின்னி மின்னி சோகமாக எரியும் தெரு விளக்குகள் எல்லாம் கூச்சமின்றி வெளிச்சம் வீசின; கழிவு நீர் கலந்து வரும் குழாய்களில் எல்லாம் திடீரென்று அமுதம் போல நல்ல நீர் வந்தது; தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய தூங்கவில்லை. புதிதாக போட்ட சாலைகளை கூட்டிப் பெருக்குவது முதல், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை புனரமைப்பது வரை அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்தது அமைச்சர்களும் அதிகாரிகளும் தான்.

அ.தி.மு.க அமைச்சர்கள்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய தூங்கவில்லை. (படம் : நன்றி ஜூனியர் விகடன்)

வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் ஜெயலலிதா புதிய சாலையில் சர் என்று சறுக்கிக் கொண்டு செல்வதற்காக நாற்பது சாலை போடும் இயந்திரங்கள் இரவோடு இரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டன. பாரிமுனை ரிசர்வ் வங்கி கட்டிடத்திலிருந்து தண்டையார்பேட்டை வரை புதிதாக சாலை போடப்பட்டது. அதே போல திரும்பிப் போவதற்கு மகாராணி தியேட்டரிலிருந்து கடற்கரை சாலை வரை புதிய சாலை போடப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சாலைகளில் எங்கும் வேகத்தடை இல்லை. பழைய சாலையில் இருந்த வேகத் தடைகளும் அகற்றப்பட்டன.

எழும்பூர் ஆணையர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தியாகராயர் கல்லூரி அருகே நின்று கொண்டு மேஸ்திரி போல சாலை போடும் வேலைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்ததாகவும், அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் சாலை போடுவதற்கான பொருட்களை எடுத்துக் கொடுத்து வேலை வேகமாக நடக்க உதவி செய்ததாகவும் எழுதுகின்றன பத்திரிகைகள்.

தண்டையார்பேட்டையில் உள்ள பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் மாநகராடசி அலுவலகம் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடம். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் இங்கே தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்தது தேர்தல் ஆணையம் அல்ல, ஜெயலலிதா தான். மேலும், அதை மற்றுமொரு அ.தி.மு.க அலுவலகமாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயாவின் தனி அறை எப்படி இருக்குமோ அப்படியே அலங்காரம் செய்யப்பட்டு எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று போயஸ் தோட்டத்தைப் போலவும் மாற்றப்பட்டிருந்தது. அந்தச் சின்ன அறைக்கு மூன்று ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டன. அதுவரை பாழடைந்து கிடந்த இடத்தில் ஃபால்ஸ் சீலிங், வால் பேப்பர், மின் விளக்குகள், ஸ்விட்சுகள், டேபிள் நாற்காலிகள், கடிகாரம், திரைசீலை, தரை விரிப்புகள், அலுமினிய கதவுகள் என்று அனைத்தும் புத்தம் புதிதாக வாங்கி மாட்டப்பட்டன.

அந்த குட்டி அறைக்குள் ஒரு குளியலறை வேறு கட்டப்பட்டிருந்தது. குளியலறை உள்ளே போவதற்கு மரத்தால் செய்யப்பட்ட தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அலுவலகத்திற்கு உள்ளே எப்படியோ அப்படி தான் முழுக் கட்டிடத்திற்கும் பச்சை வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அலுவலக வாசற்படிக்கட்டுக்குக் கீழே பிளாட்பாரம், அதற்குக் கீழே சாலையிலிருந்து அரையடி உயரத்தில் இருக்கிறது பிளாட்பாரம்.

அ.தி.மு.க அடிமை அமைச்சர்கள்
ஜெயலலிதாவை வரவேற்பதற்காக பிரியாணியும், சரக்கும், துட்டும் கொடுத்து பெருங்கூட்டத்தை கூட்டி சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்திருந்தார்கள் அமைச்சர்கள் (படம் : நன்றி ஜூனியர் விகடன்)

கப்பல் மாதிரி சாலையை அளந்து கொண்டு செல்லும் ரோடோ காரில் வந்து இறங்கும் ஜெயலலிதா, அங்கிருந்து அலுவலக படிக்கட்டில் ஏறி நடந்து வர முடியாதாம். எனவே சாலையிலிருந்து நேராக அலுவலகத்திற்குள் வருவதற்கு ஒரு படிக்கட்டு மேடை அமைக்கப்பட்டது. காலில் மிதிபடப்போகும் அந்த படிக்கட்டுக்கு ஒரு தனி விரிப்பு. அந்த விரிப்பின் மீது மண் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கு மேல் ஒரு வெள்ளைத்துணி விரிப்பு. அவ்வப்போது அந்த வெள்ளைத்துணியில் விழும் துகள்களை அப்புறப்படுத்துவதற்கு தனி ஆட்கள். இந்த பகட்டான படிக்கட்டில் ஏறும் போது பிடிப்பதற்கு வசதியாக இரு புறமும் சில்வர் கம்பிகள் என்று காரிலிருந்து இறங்கி சில நொடிகள் நடந்து வருவதற்காக இத்தனை ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மறு நாள் காலை. ஜூன் 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு தான் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார். ஆனால் காலை 8 மணிக்கே கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் 2,000 போலீசார் சாலை எங்கும் குவிக்கப்பட்டிருந்தனர். காலையிலிருந்து மதியம் நெருங்க நெருங்க போக்குவரத்து நெருக்கடி துவங்கியது. 12 மணிக்குள் தமது வேலைகளுக்குச் சென்று விட்டவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள். செயற்கையான இந்த இடைத்தேர்தலை போலவே செயற்கையான போக்குவரத்து நெருக்கடியையும் ஏற்படுத்தினர். ஆடம்பரமான வரவேற்பு நிகழ்ச்சிகளாலும், சாலைகளை முழுமையாக மூடியதாலுமே இந்த நெருக்கடி ஏற்பட்டது. சென்னை நகரின் முக்கிய சிக்னல்களில் போடப்பட்டிருந்த தடையரண்களை எல்லாம் கொண்டு வந்து இந்த சாலைகளில் குவித்து விட்டனர்.

12 மணி முதல் 3 மணி வரை கொளுத்தும் வெயிலில் மூடப்பட்டிருந்த பல்வேறு சாலைகளில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், கார்களும், துறைமுகத்திற்கு சரக்குப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரிகளும், பல்லாயிரக்கணக்கானோரை சுமந்து கொண்டிருந்த மாநகரப் பேருந்துகளும் செல்வதற்கு வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தன. அவசர வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்கள், மருத்துவமனைகளுக்குச் சென்றவர்கள், முன்பதிவு செய்துவிட்டு வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்று அனைவரும் இந்த நெருக்கடியில் மாட்டிக்கொண்டனர். இந்தப் போக்குவரத்து நெருக்கடியிலிருந்து தப்பிக்க பலர் குறுக்கு வழிகளிலும், பிற வாகனங்களை முந்திக்கொண்டும் செல்ல முயன்றதாலும் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்யப்போகும் அதிசயம் நடக்க இருந்ததால் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டவை இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, ரயிலே நின்றுவிட்டது. அன்று நிற்காமல் இயங்கியது இருந்த கடலில் மிதக்கும் கப்பல்களும், விண்ணில் பறக்கும் விமானமும் தான். “வேட்புமனுத்தாக்கல் முடிந்து அம்மா திரும்பும் வரை எந்த கூட்ஸ் வண்டியும் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் மோகன், ரயில்வே அமைச்சகத்திடம் நேரடியாக பேசியிருக்கிறார். அதன்படி ஜெயலலிதா சென்று திரும்பும் வரை எந்த சரக்கு ரயிலும் அந்தத் தடத்தில் இயக்கப்படவில்லை.

சி. மகேந்திரன்
ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று இரண்டு சீட்டுகளையும், சொற்ப ஓட்டுக்களையும் வாங்கி எவ்வளவு கேவலமாக அவமானப்பட்டாலும் சற்றும் சளைக்காத போலிக்கம்யூனிஸ்டுகள் போலி ஜனநாயக தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் காமடியில் முன்னணியில் இருக்கின்றனர். (போலி கம்யூனிஸ்டுகளின் வேட்பாளர் சி. மகேந்திரன்)

ஜெயலலிதாவை வரவேற்பதற்காக பிரியாணியும், சரக்கும், துட்டும் கொடுத்து பெருங்கூட்டத்தைக் கூட்டி சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்திருந்தார்கள் அமைச்சர்கள். அனைத்தையும் நேரங்காலம் பார்த்து சரியாகச் செய்யும் ஜெயா சசி கும்பல் போயஸ் தோட்டத்திலிருந்து சரியாக 1.30 மணிக்கு கிளம்பியது. ஆனால் அம்மாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் கார் நடுவழியில் கோளாறாகி நின்றது. இதனால் சில நிமிடங்கள் தாமதமானது. ரிப்பேரான காரிலிருந்து இறங்கி பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு காருக்கு மாற வேண்டும். ஜெயலலிதா இறங்கி ஏறினார். இதை மாபெரும் உலக அதிசயம் போலவும், தியாகமாகவும் அமைச்சர்கள் கருதினர்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு சரியாக 2 மணிக்கு வந்து இறங்கினார் ஜெயலலிதா. நாலடி நடப்பதற்குள் வெயில் பட்டுவிடுமாம், உடனே ஜெயலலிதாவை விட ஒரு பெரிய சைஸ் குடையை விரித்து பிடித்தனர் பாதுகாப்பு படையினர். அம்மா அமர்வதற்கு ஒரு ஸ்பெஷல் சேரை போட்டனர். சரியாக 2.01 மணிக்கு (நல்ல நேரம்) கடிகாரத்தை பார்த்தபடி தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்புமனுவை கொடுத்தார் ஜெயா. அவர் அதை எழுந்து நின்று வாங்கிக் கொண்டார். சவுரிராஜன் ஜெயலலிதாவிடம் மட்டும் எழுந்து நின்று வாங்கவில்லை, ஜெயாவிடம் மட்டும் எழுந்து நின்று வாங்கினால் பிரச்சினையாகிவிடும் என்பதால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த அனைவரிடமும் எழுந்து நின்றே வாங்கினார்.

முந்தைய தேர்தல்களில் அனைவரிடமும் உட்கார்ந்து வாங்கியதை வைத்து இங்கே ஜனநாயகம் ஆல் போல தழைத்துவிட்டதாக உருகியவர்கள் இப்போது எங்கே அறை எடுத்து அழுகிறார்கள், தெரியவில்லை.

ஜெயலலிதாவுக்கு பிடித்த எண் 11 என்பதால் அவர் 11-வது ஆளாக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். டிராபிக் ராமசாமி, பதமராஜன், அகமது ஷாஜகான், ரவி பறையனார், ஆபிரகாம் ராஜ்மோகன் ஆகியோர் 3-ம் தேதியும், ராமதாஸ், மனோகரன், வெங்கடேஷ், வசந்தகுமார், குமாரசாமி ஆகியோர் 5-ம் தேதியும் அதாவது ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாகவும் வரவழைக்கப்பட்டு மனுக்கள் அளிக்க வைத்திருக்கிறார்கள். 11-வது ஆளாக ஜெயலலலிதா வந்தார்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் இரண்டு நிமிடத்திற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து எத்தனை லட்சங்களை கொட்டி இறைத்தார்கள், தெரியவில்லை. வடசென்னை என்பது வறுமை நிறைந்த மக்களின் பகுதி. அந்தப் பகுதியில் கழிவறையில் ஏறுவதற்கு கூட மேடை அமைத்து பகட்டு காட்டி இழிவுபடுத்துகிறது ஜெயா சசி கும்பல்.

இந்த இடைத்தேர்தலில் பிரதான ஓட்டுக்கட்சிகள் எல்லாம் போட்டியிடாமல் பின் வாங்கிக்கொண்ட நிலையில், கூத்தில் கோமாளிகள் இல்லாத குறையை தீர்த்து வைக்கின்றனர் போலிக்கம்யூனிஸ்டுகள். ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று இரண்டு சீட்டுகளையும், சொற்ப ஓட்டுக்களையும் வாங்கி எவ்வளவு கேவலமாக அவமானப்பட்டாலும் சற்றும் சளைக்காத போலிக்கம்யூனிஸ்டுகள் போலி ஜனநாயக தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் காமடியில் முன்னணியில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் மகேந்திரனை காமடியாக்கி ஊடகங்கள் கேள்விகள் கேட்கின்றன. அவரும் ஏதோ இலட்சிய பயணத்தில் இருக்கும் சாகச வீரர் போல வெட்கமின்றி வாழ்வே மாயம் என தத்துவம் பேசுகிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இவரை அ.தி.மு.க சில்லுண்டிகள் கதறக் கதற போட்டுத் தாக்குகின்றனர். கம்யூனிஸ்டுகள் பேசுவார்கள், அம்மா அதை களத்தில் செய்வார் என ‘தோழர்களை’ பப்பி ஷேமாக்கி முடக்கிவிட்டனர்.

தேர்தல் ஆணையம் என்கிற அமைப்பு தனக்கென்று விதிக்கப்பட்ட குறைந்தப்பட்ச பணியைக் கூட நிறைவேற்ற முடியாத செயலற்ற உறுப்பாகிவிட்டது என்பதை இந்த இடைத்தேர்தலில் நன்கு காண முடிகிறது. எதிர்க்கட்சிகளோ நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கின்றனவே தவிர எதையும் செய்யத் திராணியற்றவையாக இருக்கின்றன. ஆளும்கட்சி நடத்தும் தேர்தல் இது, இங்கே ஜனநாயகமில்லை என்று அழுகிறார்களே தவிர ஜனநாயகமில்லாத அமைப்பில் தங்களுக்கு என்ன வேலை என்று அவர்கள் வெட்கப்படுவதில்லை.

ஜெயா கும்பலோ எதற்கும், யாருக்கும் கட்டுப்படாமல் ரெக்கார்டு டான்ஸை நடத்தி வருகிறது. இவ்வளவு கேலிக்கூத்துகளுக்கு பிறகும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ? இன்னமும் இது உண்மையான ஜனநாயகம் தான் என்று நம்புகிறீர்களா ?

–    வையவன்

 1. ஜனநாயகம் போலியானது இல்லை…. அந்த ஜனநாயகத்தின் பலத்தால் தான் உன்னால் இவ்வளவு சுதந்திரமாக ஒரு கட்டுரை எழுத முடிந்தது… இதே ஜெயலலித்தாவை போன தேர்தலில் மக்கள் மண்ணை கவ்வி “கொடா”நாட்டிற்க்கு பார்சல் கட்டினார்கள்… ஜனநாயகம் உண்மையானது ஆனால் உங்களை போன்ற ஆட் களால் தான் பிரச்சனையே.. இதில் அரசியில்வாதியும்,நீயும் ஒன்று தான்… இரண்டு பேருடைய குறிக்கோளுமே பணம் தான்!!!!!!111

  • இந்தக் கட்டுரை எழுத 24.63547 கோடி ரூபாவ எதிர்க்கட்சிகாரவுக போடில வச்சு கொடுத்தங்க. ரெகசியமாதான் கொடுத்தாங்கனு நினைச்சா, எப்படியோ இந்தியப் பெருமகானரு மோப்பம் புடிச்சுட்டாரு டோய்…….. இப்டிலாம் பின்னூட்டம் போடுடறதுக்கு நாக்க புடுங்கிகிட்டு சாகலா. ஓட்டு போடறதுதான் அசல் சனநாயகம்முனு கூவுன கேடிங்களே, தேர்தல புறக்கணிக்கறான். இவரு என்னமோ பெருசா சவுண்டு உடுறாரு… போங்கப்பு, போயி நாயி எதுனா இருந்தா குளுப்பாட்டி நடுவூட்ல வச்சு அழகு பாருங்க.

  • ஜனநாயகம் பணநாயகமாக மாறியது இந்தியன் போன்ற அல்லக்கைகளுக்கு தெரியாது போல …மேலும் அரசியல்வாதிகள் சரி இல்லைன்னு சொல்லும் நீ ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் கூஜ தூக்குற , ஐயர் பாசமாடா அம்பிப்பயலே….

 2. ஜனநாயகம் போலியனது இல்லையென்றால் தேர்தல்கமிஷன் ஏன் அ.தி.மு.க காரனைப்போல் செயல்படுகிறது?

 3. உலக முழுவதும் ஜனனாயகம் என்பது போலியாகத்தான் காணப்படுகிறது! உழைப்பவனை கட்டுப்படுத்த மதமும், சட்டங்களும் ஆளும் வர்க்கத்திற்கு தேவை! நாடு பெரிதாக, பெரிதாக ஜனனாயகம் மீடியாக்களைத்தான் அண்டியிருக்கிறது! மீடியாக்களோ யாருக்கு அடிமை என்பது தெரியுமே! பன்முக கலாச்சார பண்பாடு, மொழி, சாதி களால் பிளவுண்ட அடிமைகளுக்கு “ஜனனாயகம்” வெறும் ஏட்டு சுரைக்காய் மட்டுமே!

  • ஜனநாயகத்தில் என்ன போலி ? வாக்களிப்பவர்கள் தீர விசாரித்து சிந்தித்து விவாதித்து வாக்களிக்க வேண்டும் . ஒரு சினிமா பார்பதற்கு எத்துனை விசாரிகிரார்கள் , சினிமா நடிகையை பற்றி எவ்வளவு தெரிந்து கொள்கிறார்கள் ,ஆனால் தனது தொகுதியில் என்னென்ன திட்டங்கள் தேவை , யார் நிற்கிறார் என்று தெரிந்துகொள்ளாமல் ஒத்தையா ரெட்டையா என்று சின்னம் பார்த்து குத்தினால் அனுபவிக்க வேண்டியதுதான்

 4. ஸ்ரீரங்கம் இடை தேர்தலில் பொறுப்புள்ள எதிர் கட்சி என்ற முறையில் தி.மு.க தனது வேட்ப்பாளரை அறிவித்து,ஜனநாயக முறைப்படி மற்ற கட்சிகள் தி.மு.க வேட்ப்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று பொதுவான வேண்டுகோள் விடுத்தது.

  பொது எதிரியான ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்பதற்க்காக.

  ஆனால் அன்றையதினத்தில் அனைத்து சில்லரை உதிரி கட்சிகளும் கலைஞ்சரை எள்ளி நகையாடினர்.

  இவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்க வேண்டும் என்பதற்க்காகவே இம்முறை ஆர் கே நகர் தேர்தலை தி.மு.க புறக்கனித்தது.

  இப்போது அனைத்து சில்லரை உதிரி கட்சிகளும் செறுப்பை கடித்த நாய்கள் போல என்ன செய்வது என்று அறியாமல் ஒன்றை ஒன்றை பார்த்து முழிக்கின்றன,வறும் தேர்தலில் கூட்டனி ஆட்சி என்று ஒன்றை ஒன்றை பார்த்து குரைக்கின்றன.

 5. அய்யா ராமன் அவர்களே! ஜனநாயகத்தில் என்ன போலி என்றா கேட் கிறீர்கள்? ஜனனாயகம் என்றால் என்ன? மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த மக்கள் தலைவர்களை கொண்டதுதானே “ஜனனாயகம் அல்லது மக்களாட்சி” ? ஒவ்வொரு முக்கிய கொள்கை முடிவிலும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமல்லவா? சாதி, மத , இன வாதம் அடிப்படையிலும், இலவசங்கள் என்ற பெயரில் பிச்சை போட்டும், ப்ரெஸ்டிடுட் எனப்படும் விளம்பர விபச்சாரிகள் தயவிலும், அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை மூளைச்சலவை செய்து வாங்கப்படும் ஓட்டுகளுக்கும், ஜனனாயகத்திற்கும் என்ன சம்பந்தம்? பழைய வோட்டு சீட்டு முறையிலாவது, மறு எண்ணிக்கை சாத்தியப்படுமே; தற்போதைய குஜாராத் பெட்டிகள் சென்ர இடத்திலெல்லாம் அவாளே வெற்றி பெறுவது சந்தேகத்திற்கு இடமானதே! அது போகட்டும், இப்படி தில்லாலங்கடி செய்து வெற்றி பெற்றாலும் பாராளுமன்றத்தில் அவர்களின் உரிமை என்ன? மக்களுக்கு கட்டுப்படாத, மக்கள் மன்றத்துக்கு பதிலளிக்க தேவையற்ற அரசு அமைப்புகள் எப்போதும் ஒரு சாராருக்கு சாதகமாகத்தானே உள்ளது? மக்கள் மன்றத்துக்கு தெரிவிக்காமலேயே கச்சத்தீவு விற்கப்பட்டது எப்படி? மக்கள் மன்றம் அனுமதி பெறாதநிலையில் மீண்டும் , மீண்டும் அவசர சட்டங்கள் மூலம் ஆட்சிநடப்பது என்ன ஜனனாயகம்? அமெரிக்க, பிரிட்டன் முதலிய “ஜனனாயக”நாடுகளில் இப்படி மக்கள் பிரதினிதிகளை புறக்கணிக்க முடியுமா? பெரியார் இது “மேட் ஓவெர்” சுதந்திரம் என்றதில் என்ன தவறு? இருட்டில் வாங்கிய சுதந்திரம் என்பதால் யார் கொடுத்தார்கள், யார் வாங்கினார்கள் என்பது தெரியவில்லை போலும்!

  • வாக்களிக்கும் கடமையை சரியாக செய்தால் சரியான அரசாங்கம் அமையும் . சரியான அரசாங்கம் நடத்தி காட்டினால்தான் வாக்களிப்பேன் அப்படின்னு சொன்னா என்ன பண்றது

   கோழி முதல்ல வந்துச்சா முட்டை முதல்லா வந்திச்சான்னு பேசி என்ன ஆகா போகுது ?

 6. //வாக்களிக்கும் கடமையை சரியாக செய்தால் சரியான அரசாங்கம் அமையும் . சரியான அரசாங்கம் நடத்தி காட்டினால்தான் வாக்களிப்பேன் அப்படின்னு சொன்னா என்ன பண்றது

  கோழி முதல்ல வந்துச்சா முட்டை முதல்லா வந்திச்சான்னு பேசி என்ன ஆகா போகுது// This is the first real election in India so please Vote.

 7. நீங்கள் கூறுவது போன்று இந்திய ஜனநாயகம் கூறுகெட்டதாக இருந்தாலும், ஜெவை வீழ்த்த இந்த தேர்தல் ஒரு எளிய வாய்ப்பை அளிக்கிறது. தேர்தலுக்கு முந்தைய ஜெ ஆதரவு தேர்தல் கமிஷன் தகிடுதத்தங்கள் இருந்தாலும், முன்பு போலன்றி, கள்ள ஒட்டு போன்ற பிரச்சனைகள் சட்டமன்ற தேர்தலில் தற்காலத்தில் இல்லை. ஜெவை தவிர 25 வேட்பாளர்கள் உள்ளனர். நோட்டா கூட உள்ளது. மக்கள் ஜெவுக்கு வாக்களிக்காமல் இருந்தால் போதும். நீதிமன்றத்தில் “கணக்கு” ரீதியாக தப்பிய ஜெவை வீழ்த்த முடியும்.

  மக்கள் ஏன் செய்வதில்லை? வினவு இது பற்றி நேரிடையாக எழுத வேண்டும்.

 8. கொக்கு தலையில் முதலில் வெண்ணையை வைப்பது யார்? அப்புரம் இந்த ஜனனாயக கொக்கை பிடிக்கலாம்! பதினைந்து வருடமாக அரசு உதவிகள் கிடைக்காத மக்கள், ஏதோ அம்மா தயவில் பிழைத்து அய்ந்து, பத்து வாங்கும்போது ஜனனாயகமாவது வெங்காயமாவது! அதெல்லாம் சூடு, சொரணை உள்ள மக்கள் இருந்தால்தானே சரிவரும்? கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் புதிய தலைகள் மட்டும் என்ன ஜனனாயகத்தை பேணும்? அத்வானி அய்யா சொல்லிவிட்டார் , விரைவில் எமெர்ஜென்சி வர இருக்கிறதாம்! இந்திய முட்டாள்களுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?

 9. அன்பர் பொய்யாமொழி அறியவும்; தேர்தல் முன்பெ நடந்துவிட்டதே! இப்போது சும்மா ஒளிக்காட்சி பிற்சேர்க்கைக்கு படப்பிடிப்பு மட்டும்தானே!

 10. வருக வெங்கடேசன் அவர்களே! இருந்தாலும் நீங்கள் இப்படி கிண்டலடிக்க கூடாது!

  • நான் சீரியஸா எழுதினத கிண்டல்னு சொல்லி என்னைய கிண்டல் செய்யறீங்களே சார்.

 11. வெங்கடேசன்! உங்களை போன்றே எல்லாரும் அய் டீ படித்து அறிவு ஜீவிகளானால் அல்லவா “சிந்தித்து” செயல்பட முடியும்? நாங்கள் தான் இன உணர்வற்று, ரொட்டித்துண்டுக்காக. வாலையாட்டும்.நன்றியுள்ள பிராணிகளாயிற்றே! எங்களுக்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்! பணனாயகமே இங்கு ஜனனாயகமாவது புரிந்தும்,நீங்கள் மீண்டும் கிண்டலடிக்கலாமா?

  • ஏதோ அதிகார பணக்கார வர்க்கம் தனிச்சையாக முடிவெடுத்து , தலைவர்களை உங்கள் மீது திணித்து நடப்பது போல பேசுகிறீர் .

   ஜனநாயகத்தில் அதிகாரம் கைமாற பெரும்பான்மை வாக்களர்களின் ஆதரவு முக்கியம் . ஒவ்வொருவர் கையிலும் வாய்ப்பு தரபடுகிறது.

   அதிகார வர்க்கத்தின் கையில் ஜாதி , பணம் , மதம் , இலவசம் போன்ற டிரம்ப் கார்டுகள் உள்ளன . அதில் மயங்காமல் அனைவரும் சரியாக சிந்தித்தால் நிச்சயம் ஜனநாயகம் சிறப்பாக அமையும் .

   அது சரி , பிடல் காஸ்ட்ரோ மாதிரி உற்றார் உறவினரை அவரே தேர்ந்தெடுத்துவிட்டு , கங்க்ராட்ஸ் உங்களுக்கு புதிய தலைவர் கிடைத்திருக்கிறார் என்று சங்கர மடம் போல கூறினால் மகிழ்ச்சி தானே

  • 1989 முதல் கலைஞர்-ஜெ என மாறி மாறி வாக்களிக்கின்றனர். ஒரு முறை இன உணர்வோடும், மறு முறை இனவுணர்வற்றும் வாக்களிக்கிரார்களா? ஒரு முறை அவர்கள் அதிகமாகவும், மறுமுறை இவர்கள் அதிகமாகவும் பணம் தருகிறார்களா? இந்த விஷயத்தை இனம்-பணம் என சுருக்கிவிடமுடியாது என கருதுகிறேன்.

   துக்ளக் போன்ற ஊடகங்களும், மற்ற பலரும் (என்னையும் சேர்த்து) கலைஞரை மாபெரும் ஊழல்வாதியாக சொல்கின்றனர். மறுபுறம் வினவு உள்ளிட்ட மற்ற பலர் ஜெவை மாபெரும் ஊழல்வாதியாக சொல்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் இருவரையும் மொத்தமாக அழிக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் செய்யவதில்லை. இருவரில் ஒருவரே வெல்கின்றனர். குறிப்பாக இந்த ஆர்கே நகர் தேர்தல் எளிமையானது. மற்ற குழப்பங்கள் ஏதுமின்றி ஜெவை மக்கள் புறந்தள்ள முடியும். ஏன் செய்வதில்லை? “இனம்” “பணம்” “ஜாதி” போன்ற எளிய வாதங்கள் இதை விளக்குவதாக எனக்கு தோன்றவில்லை.

 12. சரியான பாயிண்டை பிடித்துவிட்டார் ராமன்!

  //அதிகார வர்க்கத்தின் கையில் ஜாதி , பணம் , மதம் , இலவசம் போன்ற டிரம்ப் கார்டுகள் உள்ளன . அதில் மயங்காமல் அனைவரும் சரியாக சிந்தித்தால் நிச்சயம் ஜனநாயகம் சிறப்பாக அமையும்//

  இதைத்தான் “கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது” என்பது! நடக்குமா?

  அது சரி,நாம் உருப்பட வழியை பாருங்கள் என்றால், சம்பந்தமில்லாமல், காஸ்ட்ரொவை ஏன் இழுக்கிறீர்?

 13. மக்களின் பொதுபுத்தியில் இலவச டிவி, மிக்சி, கிரைண்டர் போன்றவைகளை விட அனைவருக்கும் தரமான இலவச கல்வி தரமான கட்டுமானங்கள், சாலைகள், ஊழலில்லாத திறமையான மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன வழி?

  ஜனநாயகமோ, கம்மியுநிசமோ, மன்னராட்சியோ, மக்களுக்கு நல்லாட்சி அமைந்தால் சரி.

  மக்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்ற செய்தி அரசியல் கட்சிகளுக்கு தெளிவாக தெரிந்தால் அவர்களே ஒவ்வொருவராக மக்கள் வழிக்கு வருவார்கள். ஆக்கபூர்வமாக இதற்கு என்ன வழி என்று யோசிப்போம்.

  அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே பதவி மேல் பித்து இருக்கிறது. இதனால் தான் இலவசங்களை அள்ளி வீசினால் மக்கள் தேர்தலில் நமக்கு ஒட்டு போடுவார்கள் என்று நம்பி அவர்களும் மக்களுக்கு இலவசங்களை வழங்குகிறார்கள். ஊழலற்ற திறமையான ஆட்சி கொடுத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், நிலைத்து பதவியில் இருக்க முடியும் என்ற நிலையை மக்கள் அரசுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு மக்களை தயார் படுத்த வேண்டும்.

  இத்தகைய முயற்சி எடுக்கும்போது குறுக்கு சால் ஓட்டுவதற்கு சிலர் முயற்சிப்பார்கள். நமக்கு நண்பர்கள் என்பது போல போர்வையை போர்த்தி கொண்டு நமது வியூகங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  ஆரம்பம் முதல் நான் சொல்வது இதை தான். இவன் சரியில்லை, அவன் சரியில்லை என்று அனைவரையும் குறை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் கைதட்டுவார்கள், ஆனால் உங்கள் பின்னால் அணிவகுக்க தயங்குவார்கள். அவர்களுக்கு ஆக்கபூர்வமாக ஒரு உதவி உங்களிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் உதாரணத்திற்கு தெருவிளக்கு பிரச்சினை, சாக்கடை அடைப்பு பிரச்சினை, பேருந்து வசதிகள் போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையை தோடும் இன்றியமையாத முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் – வெறும் கோஷங்கள் அல்ல, போராட்டங்கள் அல்ல, முடிவான தீர்வுகள், உங்களிடம் இருந்து அவர்கள் பெற்றால் அவர்கள் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பக்கம் திரும்பும்.

  என் தந்தை கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1970 களில் சோ இராமசாமி சென்னை மெரீனா சீரணி அரங்கில் பேசும்போது பெரும் கூட்டம் கூடுமாம். அவர் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராக பேசும்போது பலத்த கைதட்டல், விசில் பறக்குமாம். மக்களின் பேராதரவு தனக்கு இருப்பதாக நினைத்து பெருமை அடைந்த சோ அடுத்த தேர்தலில் சுயேட்சையாக நின்றாராம், டெபாசிட் கூட கிடைக்கவில்லையாம்.

  இதனால் தான் சொல்கிறேன். குறை சொல்வது மிகவும் எளிது. குறை கூறும் நாம் மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஒரு தீர்வை அவர்கள் உணரும் வண்ணம் தர வேண்டும். வெறும் வாக்குறுதிகள் அல்ல, கோஷங்கள் அல்ல, நிலையான தீர்வுகள். பெரிய மாற்றங்கள் உண்டாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுக சிறுக, ஆனால் உறுதியான அளவில் ஒவ்வொரு சம்பவமாக நடக்க வேண்டும். மக்களின் கவனம் உங்கள் பால் முதலில் திரும்பும். பின்னர் மக்களில் சிலர் உங்களை ஆதரிப்பார்கள், பின்னர் மேலும் சிலர் உங்களோடு இணைவார்கள். படிப்படியாக, சிறுக சிறுக மக்கள் ஆதரவு முழுமையாக உங்கள் பக்கம் திரும்பினால் தானாக மக்கள் ஆட்சி அதிகாரத்தை முதலில் சிறிய அளவில், ஆதாவது ஒரு மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல், முனிசிபல் தேர்தல் அளவில் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். பின்னர் அடுத்த கட்டத்துக்கு கூட செல்லலாம்.

  ஆனால் முக்கியமானது, மக்களுக்கு உங்களது செயல்பாடுகள் தீர்வுகளை, அவர்கள் உணரும் வகையில் தர வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசியுங்கள்.

  ஐயா, என்னை போன்ற பொதுமக்களின் பொதுபுத்தியில் கம்மியுனிசவாதிகள் என்றால் மாஸ்கோவில் மழை வந்தால் மைலாப்பூரில் குடை பிடிப்பவர்கள் என்ற ரீதியில் தான் பிம்பங்கள் பதிந்துள்ளது. காலம் காலமாக உங்கள் (உண்மையோ, போலியோ) கம்மியுனிச அரசியல்வாதிகள் அடித்த கூத்துக்களை கண்டு கண்டு மக்களுக்கு கம்மியுனிசம் மேல் ஒரு இளக்காரம் ஏற்பட்டுள்ளது உண்மை. உலகில் கம்மியுநிசமும் சோசியலிசமும் கோலோச்சிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக முதலாளித்துவத்துக்கு மாறியதும் கம்மியுனிசம் மேல் ஒரு நம்பிக்கையின்மையை கொண்டு வந்தது. இப்போது கம்மியுனிச அரசியல்வாதிகள் என்றால் ஒன்றிரண்டு நாடாளுமன்ற சீட்டுகள், ஒரு பத்து, இருபது சட்டமன்ற சீட்டுகள் என்ற அளவில் அடங்கி விடுபவர்கள் என்ற நிலை உள்ளது.

  தீர்வுகள் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் எந்த பாதையை தேர்தேடுப்பீர்கள் என்பது உங்கள் கையில் உள்ளது. அந்த பாதை மக்களுக்கு நேரடி தீர்வுகள் அளிக்கும் வண்ணம் இருந்தால் மக்கள் கவனம் உங்கள் பக்கம் திரும்பும்.

  • கம்யூனிஸ்டுகள் நல்லது செய்கிறேன் என்று வந்தாலும் ஆட்சி கட்டிலில் வேண்டாம் . கற்றறிந்த கம்யூன்சிடுகளை விட ஜனநாயக கோமாளிகள் மேல் .

   we cannot tolerate worst case in communism
   best case rarely happens, if at all will be short lived.

   கொச்சையாக சொல்வது என்றால் ஆணியே புடுங்க வேண்டாம் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க