privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

-

னநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகங்களை இன்னமும் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் காறித்துப்பியுள்ளன, நடுநிலை நாடகமாடும் தமிழக ஊடகங்கள். பாரம்பரியமிக்க தேசிய நாளேடாகவும், உண்மைகளை உரைப்பதாகவும், நடுநிலையுடன் செய்தி வெளியிடுவதாகவும் கூறிக்கொள்ளும் இந்த ஊடகங்கள், நேற்று ஜெயா தண்டிக்கப்பட்டபோது ஒப்பாரி வைத்தன; இப்போது ஜெயா கும்பல் விடுதலையானதும் தமது சொந்த விடுதலையாகக் கருதிக் கூத்தாடுகின்றன.

ஜெயாவின் ஊடக விசுவாசிகள்
ஜெயாவின் ஊடக விசுவாசிகள்: (கடிகாரச் சுற்றுப்படி) தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தி இந்து ஆசிரியர் அசோகன், எழுத்தாளர் சமஸ், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன்.

தனது நீண்டகால வாசகர்களேகூட முகம் சுளிக்கும் அளவுக்கு, “இது ஜெயாவின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி” என்று குதூகலிக்கும் தினமணி, “நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானிய தமிழ் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளித்திருக்கிறது… ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு, மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை” என்று பார்ப்பன பாசத்துடன் துதிபாடி, “ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று சரித்திரம் படைக்க வந்துள்ளதாக” புளகாங்கிதமடைகிறது. நீதிபதி குமாரசாமி விரிவாக அலசி ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார் என்று அ.தி.மு.க. வழக்குரைஞர்களையே விஞ்சும் வகையில் தலையங்கம் தீட்டி, தனது விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார், தினமணி ஆசிரியர் வைத்தி.

தினமணிக்குப் போட்டியாக அறிவார்ந்த முறையில் காவடி தூக்கிய “தி இந்து”வோ, குமாரசாமி தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஜெயலலிதாவின் மறுவருகை நல்லதாக அமையட்டும் என்று தலையங்கம் தீட்டியது. அதில் ஜெயாவின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக ஆரூடம் கூறும் ஆசிரியர் அசோகன், “சுணங்கி நிற்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது” என்கிறார்.

ஜோதிகா, மீண்டும் சினிமாவில் நடித்துள்ள 36 வயதினிலே படத்தில் வரும் “வாடி ராசாத்தி” பாடலானது எழுத்தாளர் மாலனுக்கு ஜெயாவை அழைப்பது போலத் தெரிகிறதாம். குன்ஹாவின் தீர்ப்பு அப்போதே தவறு என்று தான் தொலைநோக்குடன் கூறியது, இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் பூரித்துப் போகிறார்.

“ஜெயலலிதா வழக்கு அ.தி.மு.க.வுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்து கொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே வரிந்து கட்டிக் கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த மக்களை அணி சேர்க்க இவர்களுக்குத் தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா என்ன?” என்று எதிர்க்கட்சிகளைச் சாடி, ஜெ.கும்பலின் ஊழல் கொள்ளை மட்டும்தான் பிரச்சினையா, வேறு பிரச்சினைகளே இல்லையா என்று தி இந்துவில் எழுதுகிறார் சமஸ். அந்த வேறு பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளை தமிழகத்தின் தலையாய பிரச்சினை அல்ல என்று மடைமாற்றும் திருப்பணியைத் திறமையாகச் செய்கிறார் சமஸ்.

நீதிபதி குமாரசாமி கணக்கில் செய்துள்ள மோசடி அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கும்போது, நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தாதொகையைக் கூட்டினால் இந்தக் கணக்கு நேராகிவிடும் என்று ஜெ. கும்பலுக்கு ஆறுதல் கூறும் தி இந்து, ஜெ. கும்பல் வாரியிறைத்த பல கோடி பணத்தில் நீதித்துறையின் ஒவ்வொரு படிக்கட்டையும் உரிய முறையில் கவனித்துப் பச்சையான அயோக்கியத்தனங்கள் மூலம் ஜெ. கும்பலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ள அ.தி.மு.க. வக்கீல்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தவர்கள், “ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று தலைப்பிட்டு ஏதோ மாபெரும் சாதனையாளர்களாகக் காட்டுகிறது. இப்போது சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெரிய தடையைத் தாண்டியுள்ள அம்மா, இடைத்தேர்தல் என்ற சிறிய தடையை அலட்சியமாகத் தாண்ட ஓடோடி வருவதைப் போல கருத்துப்படம் போட்டு தனது விசுவாசத்தைப் பறைசாற்றுகிறது.

தி இந்து கருத்துப்படம்
நமது எம்.ஜி.ஆர் நாளேட்டுக்குப் போட்டியாக ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடிக் குதூகலிக்கும் தி இந்து கருத்துப்படம்.

ஊழல் கிரிமினல் பேர்வழியான ஜெயலலிதா விடுதலையானதும், இந்தத் தீர்ப்பு எவ்வளவு அயோக்கியத்தனமானது என்று ஊரே காறித் துப்பிக் கொண்டிருக்கும்போது, அனைத்து தளங்களிலும் இனி ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை பிரபலங்களிடம் கேட்டு, அதன் மூலம் மக்களின் வெறுப்பை மடைமாற்றும் வேலையைத் திறமையாகச் செய்கிறது ஆனந்த விகடன். இதில் டிராபிக் ராமசாமி மட்டுமே இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பையும் அதன் விளைவுகளையும் பற்றி கூறியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான சந்துரு, பேரா. அ.மார்க்ஸ், பேரா. சரசுவதி, முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் அருள்மொழி, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் – என இந்தப் பிரபலங்கள் எல்லாம் மலத்தைத் தின்னும் பன்றி, சாக்கடையைவிட்டு வெளியே வந்துவிட்டால் நன்றாக இருக்கும், அதன் மூக்கை கொஞ்சம் சரிசெய்து கொண்டால் அழகாக இருக்கும் என்றெல்லாம் கருத்து கூறுகிறார்கள்.

இத்தீர்ப்பைப் பற்றி இணையத்தின் வாயிலாகக் கருத்து கேட்டதில் பெரும்பான்மையினர் ஜெயாவை ஆதரிப்பதாகப் புள்ளிவிவர சதவீதக் கணக்குக் காட்டி சதிராடியும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதை நேரடி வர்ணனையுடன் ஒளிபரப்பு செய்தும் இந்த ஊடகங்கள் தமது விசுவாசத்தைப் பறைசாற்றின. அதிக முறை ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, பின்னர் நீதித்துறையை விலைக்கு வாங்கி விடுதலையாகி முதல்வராகியுள்ள ஜெயலலிதா, 5-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று கருணாநிதியைச் சமன் செய்துவிட்டார் என்று பூரித்துப் போகும் இந்த ஊடகங்கள், இந்துத்துவ அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றியவர், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் ஈழப் பிரச்சினையில் மைய அரசைத் துணிவுடன் எதிர்த்து நின்றவர் என்றெல்லாம் வாதங்களை அடுக்கி, ஜெ கும்பலை வெட்கமின்றி ஆதரித்து நின்றன.

துக்ளக் சோ கூட அன்றைய ஜெ. கும்பலின் ஆட்சியை ஊழல் ஆட்சியாகத்தான் இருந்தது என்று அப்போது அவரது ஏட்டிலும் பேச்சிலும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று ஜெ கும்பலுக்குக் காவடி தூக்கும் இந்த ஊடகங்களிடம் கடந்த கால வரலாறுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் ஆவணக் காப்பகம் போலக் கையில் உள்ளன. அதை ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே 1991-96-ல் ஜெயாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கான ஆதாரங்களையும், அது எப்படிப்பட்டதொரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருந்தது என்பதையும், என்ன வழிகளில் அக்கும்பல் தமிழகத்தைச் சூறையாடியது என்பதையும், அடுத்து வந்த தேர்தலில் அக்கும்பல் மக்களால் அடித்து விரட்டப்பட்டதையும் அவர்களால் தொகுத்துக் கூற முடியும். ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு ஏதோ தி.மு.க.வினர் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடுத்ததைப் போலவும், நிரபராதிகளான ஜெ. கும்பல் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதைப் போலவும் இப்போது இந்த ஊடகங்கள் கதையளக்கின்றன என்றால், இவர்களது நேர்மையின் யோக்கியதைதான் என்ன?

2ஜி ஊழல் விவகாரத்திலும், ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல் விவகாரங்களிலும் ஊழலுக்கு எதிராக கம்பு சுழற்றியவைதான் இந்த ஊடகங்கள். அன்னாஹசாராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வரவேற்று ஆதரித்து, ஊழலற்ற இந்தியாவைப் படைக்க அறைகூவியதும் இந்த ஊடகங்கள்தான். இப்போது ஊழல் கிரிமினல் ஜெ. கும்பலை நிரபராதிகளாகச் சித்தரிப்பதும் இந்த ஊடகங்கள்தான். ஓட்டுக்கட்சிகளுக்கு எவ்வாறு அருகதையில்லாமல் போவிட்டதோ, அதேபோல ஊழலை எதிர்த்துப் பேச தகுதியிழந்து கிடப்பதும் இந்த ஊடகங்கள்தான்.

– தனபால்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________