வேலூர் மாவட்ட கலால் துறை டி.எஸ்.பி தங்கவேலு, செம்மரக்கடத்தல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டது தற்செயலாக தெரிய வந்ததும் தலைமறைவானார். ‘ஸ்காட்லாந்து போலீசுக்கு போட்டியாக துப்பறிவதில் உலகப்புகழ் பெற்ற’ தமிழ்நாட்டு போலீசு பல தனிப்படைகள் போட்டு 12 நாட்கள் கழித்து காட்பாடியில் வைத்து கைது செய்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய பலர் சில நாட்களிலேயே கைது செய்யப்பட்டாலும், வேலூர் மாவட்டத்திலேயே ‘பதுங்கியிருந்த’ தங்கவேலை கைது செய்ய 12 நாட்கள் தேவைப்பட்ட மர்மம் என்ன? போலிசே அவரைக் காப்பாற்றவும், அதனூடாக பேரங்கள் பேசவும் முயன்றதாக போலீசு வட்டாரமே கூறுகிறது. இந்த வட்டாரம் போட்டி வட்டாரம் என்பதறிக.
கடத்தல் கும்பலுக்கு செம்மரங்களை பதுக்க உதவிய பா.ம.க.வைச் சேர்ந்த சின்னபையனை, வெங்கடேசன் கோஷ்டி கொலை செய்ததையும், அந்த கொலைக் குற்றவாளிகளோடு தங்கவேலு கூட்டணி வைத்ததையும் முந்தைய பதிவில் எழுதியிருந்தோம். தற்போது, “கைது செய்யப்பட்டுள்ள பிற குற்றவாளிகளையும், டி.எஸ்.பியையும் போலீசு காவலில் எடுத்து விசாரிக்கிறோம்” என்கிற பெயரில் முதன்மைக் குற்றவாளியான தங்கவேலை காப்பாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது போலீசு.
தங்கவேலை தப்பிக்க வைப்பதற்கான பேரங்களை, அவரை தேடிக்கொண்டிருந்த 12 நாட்களில் போலீஸ் வட்டாரத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் பேசி முடித்துவிட்டதா ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதை போலீசே மறுக்காது என்பதற்கு அந்த 12 நாட்களே பகிரங்கமான சான்று.
கைது செய்யப்பட்டவர்களில் தங்கவேலுடன் நெருக்கமாக இருந்த நாகேந்திரன், ஜோதிலட்சுமி தம்பதிகளை முதலில் காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் அனுமதியளிக்க, கணவன் மனைவி இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும், “தங்கவேலு கூறியபடி தான் செயல்பட்டோம், மரங்கள் எப்போது வரும், அவற்றை எங்கே எப்போது அனுப்ப வேண்டும் என்பதையும் அவர் கூறுவார் நாங்கள் அதை செய்து முடிப்போம்” என்றும், “இந்த வழக்கில் முதல் குற்றவாளி தங்கவேலு தான்” என்பதற்கு போதுமான ஆதாரங்களையும் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இது உண்மை என்றாலும் பேரத்திற்கான முன் எச்சரிக்கையும் என்பதை நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.
தங்கவேலு கடந்த 10 -ம் தேதி காட்பாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக, கடத்தல் கும்பல் போதைப் பொருட்களை இடம் மாற்றி இடம் மாற்றி எடுத்துச் செல்வதை போல போலீசார் தங்கவேலை ஒவ்வொரு இடமாக மாற்றி மாற்றி அழைத்துச் சென்றனர். காட்பாடியில் கைது செய்யப்பட்டவரை முதலில் பொன்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். செய்தியறிந்த பத்திரிகையாளர்கள் அங்கே குவிந்து நிற்கவும் அங்கிருந்து குடியாத்தத்திற்கு அருகில் உள்ள பரதராமி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர், அங்கும் பத்திரிகையாளர்கள் வந்துவிடவே அங்கிருந்து ஆம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பத்திரிகையாளர்கள் அங்கும் வரவே, அங்கிருந்து மூன்று ஆட்டோக்களை வரவழைத்து ஒரு ஆட்டோவில் தங்கவேலுவையும் மற்ற இரு ஆட்டோக்களில் போலீசாரையும் ஏறிக்கொண்டு அங்கிருந்து நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.
ஆட்டோ எங்கே போகும் என்பதை அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் போலீசாருக்கு முன்பே அங்கு வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களை திசை திருப்புவதற்காக முதலில் இரண்டு ஆட்டோக்கள் நீதிபதியின் வீட்டுக்கு முன்பாக வந்து நின்றன. தங்கவேலு வந்த மூன்றாவது ஆட்டோ நீதிபதியின் வீட்டிற்கு பின்புறம் சென்றது.

ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்பதை அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் இரண்டு பக்கமும் பிரிந்து நின்றனர். ஆட்டோவிலிருந்து இறங்கிய டி.எஸ்.பி தங்கவேலு கண்ணிமைப்பதற்குள் நீதிபதியின் வீட்டிற்குள் புகுந்தார். உடனே வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.
வீட்டிற்குள்ளிருந்து திரும்பி வரும் போது, சுற்றுச்சுவர் அருகே ஒரு கான்ஸ்டபிளை குனிய வைத்து அவர் முதுகில் ஏறி சாலையில் குதித்த தங்கவேலு அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த போலீஸ் பைக்கில் ஏறினார். பாதி வழியில் காருக்கு மாற்றப்பட்டு சொகுசாக வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாருங்கள், ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை படம் பிடிக்கக் கூடாது என்று போலீசு எத்தனை மெனக்கெட்டிருக்கிறது.
நாகேந்திரன் ஜோதிலட்சுமியை அடுத்து தங்கவேலையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்காக தங்கவேலு வேலூர் சிறையிலிருந்து ஆம்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். நீதி மன்றத்திற்கு வந்த போது, குற்றம் செய்த குற்றவாளியை போல அல்லாமல் கைதிகளை அழைத்து வரும் போலீஸ் அதிகாரியை போல தோரணையுடன் நடந்து வந்தார். கைது செய்யப்பட்ட போது பத்திரிகையாளர்களுக்கு பயந்து இருட்டில் தப்பி ஓடியவர், நீதி மன்றத்திற்கு வந்த போது எப்படி வேணும்னா போட்டோ எடுத்துக்கங்க என்று பத்திரிகையாளர்களிடம் கோபத்தோடு முகத்தை காட்டினார், வேறு வழியின்றி.
போலிசு காவலில் வந்த பிறகு தங்கவேலிடம் ‘விசாரணை’ நடத்தப்பட்டது. என்ன விசாரணை நடந்திருக்கும்? ஏதாவது படம், பாட்டு போட்டு கேட்டு விட்டு டீலை முடித்திருப்பார்கள்.
செம்மரக்கடத்தல் மற்றும் சின்னபையன் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தங்கவேலு. ஆனால் தங்கவேலிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு அவரை மூன்றாவது குற்றவாளியாக்கிவிட்டனர். ‘”தங்கவேலு கூறி தான் நாங்கள் அனைத்தையும் செய்தோம்” என்று வாக்குமூலம் அளித்திருக்கும் நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும் முதல் மற்றும் இரண்டாம். குற்றவாளிகளாம், அவர்களுக்கு உத்தரவிட்டு வேலை வாங்கிய தங்கவேலு மூன்றாவது குற்றவாளியாம்’. இதில் மற்ற குற்றவாளிகளின் தர வரிசை பற்றி நமக்கு தெரியாது. அது தங்கவேலுக்கும், போலீசுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

வழக்கு இப்படி திசை மாறி பயணிப்பதற்கு காரணம், தங்கவேலு என்கிற ஒரு டி.எஸ்.பி மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை. போலீசு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளும், ஆளுங்கட்சியில் உள்ள பெரும் முதலைகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அவர்களின் பெயர்களையும், விவரங்களையும் மூடி மறைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
இதை நாம் சொல்லவில்லை. வேலூரில் செய்தியாளர்களிடையே பேசிய ஒரு ஆந்திர போலீசு அதிகாரியே கூறுகிறார், கேளுங்கள்:
“டி.ஸ்.பி. தங்கவேலுவை காப்பாற்ற வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டிய தங்கவேலுவை மூன்றாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இன்னும் 30 நாட்களில் தங்கவேலு ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. அதன் பிறகு இவ்வழக்கு ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில், வழக்கு விசாரணை மோசமாக நடந்து வருகிறது.
தங்கவேலுடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற டி.எஸ்.பி.க்கள் தான் இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் இருக்கின்றனர். இந்த வழக்கில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதால், அவர்கள் தங்கவேலுவைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். முதல் குற்றவாளியும், இரண்டாம் குற்றவாளியும் தங்கவேலு குறித்து விசாரணையில் கூறிய முக்கிய தகவல்களைப் பதிவு செய்யவே இல்லை. தங்கவேலு ஜாமீனில் வெளியே வந்துவிட்டால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கொல்கத்தாவுக்கு கடத்தப்படுவது நிச்சயம். இதுகுறித்து, ஆந்திர மாநில அரசுக்கும், ஆந்திர முதல்வருக்கும் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.”
என்கிறார், ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன்.

என்னடா ஆந்திர போலீசு இவ்வளவு பகிரங்கமாக பேசுகிறதே என்று வியக்கிறீர்களா? தமிழக தொழிலாளிகள் 20 பேரைக் கொன்ற குற்றத்தை தணிக்க ஆந்திர போலீசு இதை பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் செம்மரக் கடத்தலில் தமிழக கடத்தல் கோஷ்டிகளின் பங்கை குறைப்பதன் மூலம் ஆந்திர அல்லது போட்டி கோஷ்டிகளின் செல்வாக்கை அதிகரிக்கலாம். அல்லது மீட்கப்படும் செம்மரங்கள் ஆந்திர அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை தரலாம். இப்படி பல்வேறு ஆதாயங்கள் ஆந்திர போலீசு அதிகாரியின் கூற்றில் இருக்கின்றன. மேலும் போலீசுக்குள்ளே இப்படி முரண்பாடு வரும்போது சில பல உண்மைகள் வெளியே வந்தே தீரும் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கின் மூலம் பலருக்கு நீதி மன்றத்தின் மீதிருந்த மாயையை தகர்த்தார் ஜெயலலிதா. போலீசு என்றாலே பெரும்பாலான மக்கள் காறித்தான் துப்புவார்கள். எனினும், காக்க காக்க, சாமி, சிங்கம், காக்கிச்சட்டை போன்ற போலீஸ் உதார் படங்களைப் பார்த்துவிட்டு போலீசு மீது சில பல அப்பாவிகளுக்கு மதிப்பும் மரியாதையும் வந்தது.
தொப்பை இல்லாத போலிசு அதிகாரிகளெல்லாம் விகடன், குமுதம் இதழ்களில் முன்னுதாரணமான நட்சத்திரங்களாக உலா வந்தார்கள். ஆனால் இந்த ஜரிகையின் மினுக்கு சொற்ப காலம் வரைக்கும் நீடிக்காது என்பதற்கு பல சான்றுகள் உண்டு.
ஆனால் இந்த சம்பவம் வேறு மாதிரி. இதில் ஒரு போலிசு அதிகாரியே கடத்தல் கூட்டத்தின் பாஸ்-ஆக இருக்கிறார். செய்தியாளர்களிடையே கோபப்பட்ட தங்கவேலு தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்றும் இதை சுலபமாக உதறிவிட்டு வந்துவிடுவேன் என்று சவால் விட்டிருக்கிறார்.
போலிசிடம் அதிகாரத்தை விட்டுவைத்திருந்தால் என்ன நடக்கும் என்று இதற்கு மேல் சந்தேகம் இருக்கிறதா?
– வையவன்