privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுசெம்மரம் கடத்தும் டி.எஸ்.பி – இதுதாண்டா போலீசு

செம்மரம் கடத்தும் டி.எஸ்.பி – இதுதாண்டா போலீசு

-

ங்கவேலுக்கு சொந்த ஊர் முதுகுளத்தூர். முதுகுளத்தூர் என்றதும் நினைவுக்கு வருவது என்ன ? கொம்பன் மீசை, தேவர் மகன் பாட்டு, தேவர் குருபூஜை இத்யாதிகள்தானே. அப்பேற்பட்ட மண்ணிலிருந்துதான் இந்த தங்கவேல் ஆளாகி போலீஸ் வேலையில் சேருகிறார்.  வேலை கிடைத்ததும் சென்னையில் வீடு கட்டி குடியேறுகிறார். துவக்க ஆண்டுகளில் ஆயுதப்படையில் துணை ஆய்வாளராக பணிபுரிந்தவர் பிறகு காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையப் பணிக்கு மாறுகிறார்.

இன்ஸ்பெக்டர் தங்கவேலு
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து மணல் மாஃபியாக்களும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், பிற சமூக விரோதிகளும் ஐயாவுக்கு மிகவும் நெருக்கம் – இன்ஸ்பெக்டர் தங்கவேலு

பட்டாளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த போது மாவட்டம் முழுவதும் நடந்த மணல் கொள்ளையர்களுக்கு உற்ற துணையாக இருந்து அவர்களை பாதுகாத்து, மணல் கொள்ளையர்கள் அடித்த கொள்ளையில் பங்கை பெற்றுக்கொண்டு சொத்துக்களை குவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து மணல் மாஃபியாக்களும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், பிற சமூக விரோதிகளும் ஐயாவுக்கு மிகவும் நெருக்கம். அந்த நட்பு கொடுத்த பணத்தில் மாவட்டம் முழுவதும் வீட்டு மனைகளை வாங்கி குவித்தார்.

அதன் பிறகு 2015 ஜனவரி மாதம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று வேலூருக்குச் சென்றார். செம்மரக்கடத்தல் கும்பலின் மையமாக இருக்கும் வேலூருக்கு வந்த பிறகு, தான் மணல் கொள்ளையில் பார்த்த பணம் எல்லாம் கொசுறு என்பதை அறிகிறார்.

பிறகு தனது தொழிலை ரியல் எஸ்டேட்டிலிருந்து செம்மர கடத்தலுக்கு மாற்றுகிறார். லோக்கல் ரியஸ் எஸ்டேட்டிலேயே இலட்சங்களை சுருட்டியவர் இன்டர்நேஷ்னல் செம்மர பிசினசில் எத்தனை கோடிகளை சுருட்டினார் என்று யாருக்கும் தெரியாது. செம்மரம் கடத்துகின்ற கும்பலுக்கு தங்கவேலு ஐயா துணை போகவில்லை, அவர்களோடு நேரடியாக ஒப்பந்தம் போட்டு பார்ட்னராகவே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் மே 27-ம் தேதி இரு கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பா.ம.க.வைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சின்னப்பையன் அப்போது பா.ம.க பொறுப்பில் இல்லை. கடத்தல் தொழிலுக்கு வருவதற்கு முன்பு வரை பா.ம.க.வின் ஒன்றியச் செயலாளராக இருந்திருக்கிறார். தொழிலில் பிசியானதும் கட்சி வேலைகளுக்கு முழுக்கு போட்டு விட்டார். ஆனால் கட்சிக்கு முழுக்கு போடவில்லை.

சின்னப்பையன் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த பா.ம.கவினர் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு ஏதாவது ஆதாயம் அடையலாம் என்கிற நோக்கத்துடன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு சின்னப்பையன் வீட்டுக்கு வந்தனர்.

அரசியல் காழ்ப்புணர்வு, பின்னணியால் தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று பா.ம.கவினர் சாவுக்கு காரணம் தேடிக் கொண்டிருந்தனர். இடைமறித்த போலீசார் செம்மரக்கடத்தல் தொடர்பான பிரச்சினையில் தான் கொலை நடந்திருக்கிறது உங்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்றதும் வீராதி வீர பா.ம.கவினர் முதலுக்கே மோசமாகிவிடுமென்று ஓட்டம் பிடித்தனர்.

செம்மரக் கடத்தல்
ஆந்திராவிலிருந்து செம்மரங்களை கடத்தி வரும் கடத்தல் கும்பல், அவற்றை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மறைவான இடங்களில் பதுக்கி வைத்து இரவோடு இரவாக வெட்டி சிறு துண்டுகளாக்கி அதன் பிறகு கடத்துகிறது.

அடுத்த சில நாட்களில் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் போலீசில் சரணடைந்தனர். அவர்களை விசாரித்த போது கடத்தல் கும்பலோடு சேர்ந்து டி.எஸ்.பி தங்கவேலும் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது ஏதோ போலீசுக்கு இப்போதுதான் முதன்முறையாக தெரிய வந்ததாக பொருள் இல்லை. ஐயா சம்பாதிப்பதில் போதுமான அளவு சக போலீசாருக்கு வரவில்லை என்றான பிறகே போலிசுக்குள் பங்காளிச் சண்டை வரும் உலகமறிந்த உண்மை.

சின்னப்பையனுக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள பாலூர். இவர் ஐந்து கோழிப்பண்ணைகளை நடத்தி வந்திருக்கிறார். ஆந்திராவிலிருந்து செம்மரங்களை கடத்தி வரும் கடத்தல் கும்பல், அவற்றை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மறைவான இடங்களில் பதுக்கி வைத்து இரவோடு இரவாக வெட்டி சிறு துண்டுகளாக்கி அதன் பிறகு கடத்துகிறது.

சின்னப்பையனின் கோழிப்பண்ணைகள் மறைவான இடத்தில் அமைந்திருந்ததால் கடத்தல்காரர்கள் அவரை கூட்டாளியாக்கி தொழிலில் ஒத்துழைக்க வைத்தனர். அதன் பிறகு மரம் பதுக்குவது முதன்மையானது, கோழிப்பண்ணை அந்த தொழிலை செய்வதற்கான இடமாக மாறியது.

சின்னபையன் பதுக்கல் தொழிலில் இறங்கிய பிறகு பல்வேறு ஏஜெண்டுகளின் கடத்தல் மரங்களோடு தேடி வந்தார்கள். நள்ளிரவு நேரங்களில் பண்ணைக்குள் வைத்து மரங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அடுக்கி, மறுநாள் காலை வெட்டிய மரங்களை கோழிகளோடு கோழியாக வைத்து சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது சின்னப்பையனின் வேலை. இதன் மூலம் லட்சம் லட்சமாக காசு பார்த்திருக்கிறார்.

இவ்வாறு கோழிப்பண்ணைகளில் செம்மரங்களை பதுக்கி வைக்கும் கடத்தல்காரர்களில் வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரனும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த வெங்கடேசனும் அடங்குவர். மரங்களை பதுக்கி வைப்பதற்கே லட்சங்கள் வருமானம் வந்தது சின்னபையனுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது,

டி.எஸ்.எபி தங்கவேலு
இந்த மாதிரி கேஸ் என்றால் நீதியை நிலைநாட்டும் சாக்கில் நிதியை கபகளீரம் செய்ய தங்கவேலு உடனடியாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுவார்.

பிறகு தொழில் அத்துப்படியான பிறகு கமிஷனில் பணம் பார்ப்பதை விட தானே நேரடியாக செம்மரங்களை விற்று லம்பாக பணம் பார்த்தால் என்ன என்கிற ஆசை பிறந்தது. ஆசையை நிறைவேற்ற வழியும் வந்தது. நாகேந்திரன் ஒரு முறை மூன்று டன் மரங்களை கொண்டு வந்து பதுக்கினார். அதை அவருக்குத் தெரியாமல் இரவோடு இரவாக வெளிமாநில புரோக்கர்களுக்கு விற்றுவிட்டார் சின்னபையன்.

நாகேந்திரன் தனது மரத்தை எடுக்க வந்த போது, பண்ணையில் போலீஸ்காரர்கள் ரெய்டு வந்து எல்லா மரங்களையும் எடுத்துச்சென்று விட்டனர் என்று கூறியிருக்கிறார், சின்னப்பையன். இந்தக் கதையை நம்புவதற்கு நாகேந்திரன் தயாராக இல்லை. அவரைப் போன்ற ஒரிஜினல் கடத்தல்காரர்கள்தான் போலிசாரோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். தனக்கே தெரியாமல் போலீசு எப்படி வரும் என்பது அவரது சந்தேகம்.

இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதமும் சண்டையும் நடந்திருக்கிறது. இறுதியில் எச்சரித்துவிட்டுச் சென்ற நாகேந்திரன் சின்னபையனை கொலை செய்ய திட்டமிட்டார்.

மேற்கண்ட சம்பவம் நடந்த சில நாட்களில் நாகேந்திரனின் வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கப்பட்டிருப்பதாக டி.எஸ்.பி தங்கவேலுக்கு ஒரு ‘ரகசிய’ தகவல் வருகிறது. இந்த மாதிரி கேஸ் என்றால் நீதியை நிலைநாட்டும் சாக்கில் நிதியை கபகளீரம் செய்ய தங்கவேலு உடனடியாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுவார். அதன்படி நான்கு போலீசாரை அழைத்துக் கொண்டு நாகேந்திரன் வீட்டுக்கு சென்று சோதனையிடுகிறார். சோதனையில் கள்ளச்சாராயத்திற்கு பதிலாக டன் கணக்கில் செம்மரங்கள் சிக்குகின்றன.

அனைத்தையும் பறிமுதல் செய்த தங்கவேலு நாகேந்திரனை கைது செய்து ஜீப்பில் ஏற்றவில்லை. மாறாக, “நான் கைது செய்து வழக்கு போடமாட்டேன், என்ன தருவாய்” என்று நாகேந்திரனிடம் பேரம் பேசுகிறார். ஏதோ சில ஆயிரங்கள் என்று காத்திருந்த தங்கவேலுக்கு சுளையாக ஐந்து லட்சத்தை எடுத்து வைத்தார், நாகேந்திரன். அதிர்ந்து போன தங்கவேலு அதன் பிறகு நாகேந்திரனோடு நண்பராகிறார். கடத்தல் தொழிலுக்கு துணையாக இருந்தார் இந்த டி.எஸ்.பி ஐயா.

சின்னப்பையன் தன்னை ஏமாற்றி 7 டன் செம்மரங்களை விற்றுவிட்டதையும், அவை திருவண்ணாமலை வெங்கடேசனின் பண்ணையில் தற்போது இருப்பதையும் தங்கவேலிடம் கூறுகிறார் நாகேந்திரன். என்ன செய்யலாம் என்று இருவரும் சதி திட்டம் தீட்டுகின்றனர். இறுதியில் சின்னபையனை அவருடைய வழியிலேயே பழி வாங்கி ஏழு டன் மரங்களையும் மொத்தமாக தூக்குவது என்று முடிவு செய்தனர்.

திட்டப்படி தங்கவேலு நான்கு போலீசாரை அழைத்துக் கொண்டு நேராக சின்னப்பையனின் பண்ணைக்கு சென்று சோதனையிட வேண்டும் என்கிறார். போலீசைக் கண்டு பீதியான சின்னபையன் வேறு வழியின்றி பண்ணையை திறக்கிறார். செம்மரங்களை கண்டுபிடித்த தங்கவேலு அனைத்தையும் பறிமுதல் செய்வதாக கூறி லாரியில் ஏற்றுகிறார். சின்னபையனை எதுவும் செய்யவில்லை. சின்னப்பையனை கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதும் பணம் பெற்றுக்கொண்டாரா, இல்லை எடுத்த செம்மரங்களில் பல கோடிகளை வரப்போகிறது என்பதால் விட்டுவிட்டாரா தெரியவில்லை. எதாக இருந்தாலும் சின்னப்பையனும் இதை லீகலாக போலீசுக்கு கொண்டு செல்ல முடியாது.

பறிமுதல் செய்த மரங்களை நாகேந்திரன், தங்கவேலு இருவரும் சரிபாதியாக பிரித்துக்கொண்டனர். தங்கவேலு தனது பங்கை ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவில் விற்று 32 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

நாகேந்திரன், ஜோதி லட்சுமி
செம்மரக் கடத்தல்காரன் நாகேந்திரனின் வீடு, உள்படத்தில் வெங்கடேசன், அவனது மனைவி ஜோதி லட்சுமி. (படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)

இதற்கிடையில் வெங்கடேசன் தனது செம்மரங்களை எடுப்பதற்காக சின்னப்பையன் பண்ணைக்கு வந்திருக்கிறார். போலீசு பறிமுதல் செய்துவிட்டது என்கிற உண்மையை சின்னபையன் கூறினார். ஆனால் வெங்கடேசன் அதை ஏற்கவில்லை டென்ஷனாகி கத்தியிருக்கிறார். ஏனெனில் வெங்கடேசனுக்கு தெரியாமல் எந்த போலீசும் இங்கே வரமுடியாது என்று அவருக்குத் தெரியும். வந்தது உண்மையான போலீசு என்றாலும் கடத்தலுக்காக வந்த கள்ளப் போலீசு என்பது சின்னைப்பையனுக்கு தெரியாது.

இறுதியில் அடியாட்களை வைத்து சின்னபையனை தூக்கிய வெங்கடேசன் அவரை தனி இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உண்மையை கூறுமாறு மிரட்டியிருக்கிறார். சின்னப்பையன் திரும்ப திரும்ப கூறியதையே கூற அவரை கொலை செய்து சாலை ஓரமாக வீசிவிட்டனர்.

மறுநாளே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேசன் உள்ளிட்ட நான்கு பேரும் ஆம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நான்கு பேரை அடுத்து நாகேந்திரனும் அவருடைய மனைவி ஜோதிலட்சுமியும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வழக்கமான கொலைகளில் இந்த சரண்டர் நடந்து வழக்கு நீர்த்து போய் உண்மையான குற்றவாளிகள் வெளியே வருவார்கள்.

எனினும் இந்த விவகாரத்தில் புரளும் பணம் அதிகம், அந்தப் பணத்தை கைப்பற்ற போட்டியும் அதிகம் என்பதால் டி.எஸ்.பி ஐயா இதில் இருக்கும் உண்மை தவிர்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டது. தங்கவேலுடன் சென்ற கலால் துறை ஏட்டுகள் சவுந்தர் ராஜன், சாமுவேல், ராஜேஸ், சீனிவாசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தங்கவேலு தலைமறைவாகி அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கிறார் என்றும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது என்றும் இரு வேறு தகவல்கள் முதலில் கூறப்பட்டது.

இதை நாம் பேரத்திற்கான பேச்சு வார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக பண்ணையிலிருந்து ஏழு டன் மரங்களை கடத்திச் செல்ல உதவியாக இருந்த மாமண்டூர் மாரியப்பன், லாரி உரிமையாளர் கோபு, டிரைவர் லோகநாதன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கவேலு காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் இன்ஸ்பெக்டராக இருந்த போது இந்த மூன்று பேரும் பழக்கமாகியிருக்கின்றனர். அப்போது அவர் கூறிய வேலைகளை எல்லாம் செய்து கொடுத்திருக்கின்றனர்.

தங்கவேலு சின்னப்பையனின் பண்ணையில் மரங்களை கைப்பற்ற  போகும் போது வீடு மாற வேண்டும் என்று கூறி தான் இவர்களை அழைத்துச் சென்றதாக கூறுகின்றனர். பண்ணையில் செம்மரங்களை ஏற்றும் போது தான் இவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அப்போது தங்கவேலு மூன்று பேரின் செல்போன்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் எனவே வேறுவழியின்றி மரங்களை ஏற்றிக்கொண்டு நாகேந்திரன் வீட்டில் இறக்கியதாகவும் கூறியுள்ளனர்.

28-ம் தேதி, சின்னப்பையனின் உறவினர் விஸ்வநாதன் என்பவர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள இருமுடிபுலியூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ்,  சத்தியமூர்த்தி, வெங்கடேசன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அளித்த வாக்குமூலத்தின்படி, “நாங்கள் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். செம்மரக்கட்டைகளை கடத்தி வர ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜண்டுகளாகவும் செயல்பட்டோம். எங்கள் கூட்டாளியான நாகேந்திரன் லாரி உரிமையாளர் என்பதால், கடத்தல் தொழில் பிரச்சினை இல்லாமல் நடந்து வந்தது. சின்னப் பையன் செய்த பிரச்சினையால் இந்த விவகாரம் டி.எஸ்.பி, தங்கவேலுக்கும் தெரிய வந்து பிறகு அவரும் எங்களோடு கூட்டு சேர்ந்து கொண்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு போலீசு துணையுடன் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, சின்னப்பையனின் கோழிப் பண்ணையில் பதுக்கி வைத்தோம். ஆனால், சின்னப்பையன் எங்களுக்குத் தெரியாமல் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை விற்று விட்டார். அதைப் பற்றி கேட்டபோது, போலீசு கைப்பற்றியதாக கூறினார். எனவே அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினோம்.

எனவே, சின்னப்பையனை கடத்தி பண்ணையில் இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் நாகேந்திரன் வீட்டில் பதுக்கினோம். மரங்களை லாரியில் ஏற்றியபோது, டி.எஸ்.பி யும் போலீசாரும் வந்திருந்தனர்” என்று கூறியுள்ளனர்.

தற்போது தங்கவேலுவும் போலிசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அல்லது போலிசாருக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்து இந்தக் கைது அறிவிக்கப்பட்டிருக்கலாம். இவ்வளவிற்கு அவர் வாணியம்பாடியில் இருந்ததாக போலீசு கூறுகிறது. இதைக் கண்டுபிடிக்க இவர்கள் போட்ட தனிப்படைகள், அதற்கான தீவன செலவுகள் எல்லாம் நமது வரிப்பணம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் தங்கவேலு பத்துக்கு மேற்பட்ட வீட்டுமனைகளை வாங்கிப்போட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய இடங்கள். செங்கல்பட்டு பகுதியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியுள்ளார்.

பணிபுரிந்த மாவட்டங்களிலும், சொந்த ஊரிலும் வீட்டுமனைகள், விவசாய நிலங்கள், சொகுசு பங்களாக்கள் என்று வாங்கி குவித்திருக்கிறார். இந்த இடங்களைத் தவிர 10 டிப்பர் லாரிகளையும் சொந்தமாக வைத்திருந்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த போது இந்த லாரிகளை தான் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தியிருக்கிறார்.

தங்கவேலு மாட்டிக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வு தான். செம்மரக்கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் இவரைப்போன்ற போலீசு அதிகாரிகள் இன்னும் பல பேர் இருக்கலாம் அவர்கள் அந்த துறையாலேயே பாதுகாக்கப்படலாம். செம்மரக்கடத்தலில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடந்து வரும் மணல் கொள்ளையில், மணல் கொள்ளையர்களுக்கு முழு பாதுகாப்பளித்து இயற்கை வளத்தை சூறையாட உதவியாக இருப்பது போலீசு தான்.

போலீசின் பிடியில் இருக்கும் டி.எஸ்.பி., தங்கவேலு, தற்போது வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். செம்மரம் கடத்தலில், அ.தி.மு.க., பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்பட, 37 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள 37 பேர் விவரம்;

* கடத்தல்காரர்கள் – 10 பேர்

* அ.தி.மு.க., பிரமுகர்கள் – 4 பேர்

* வனத்துறையினர் – 12 பேர்

* போலீஸ் அதிகாரிகள் – 11 பேர்

ஆக ஆந்திராவில் தமிழக தொழிலாளிகள் 20 பேரைக் கொன்ற போலீசு இங்கே தங்கவேலால் பட்டியலிடப்பட்டிருக்கும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யுமா? செம்மரக்கடத்தலில் அரசின் அனைத்து துறைகளும், ஒரு டி.எஸ்.பியும் இருக்கின்றனர் என்றால் இந்த அரசுக் கட்டமைப்பு என்பது மக்களுக்கானது அல்ல என்று விளக்க வேண்டுமா? இங்கே யார் யாரை தண்டிக்க முடியும்? இல்லை மக்கள்தான் யாரிடம் சென்று புகார் கொடுக்க முடியும்?

மணற்கடத்தல், செம்மரக் கடத்தல் மூலம் ஒரு சப் இன்ஸ்பெக்டரே இத்தனை கோடிகள் சம்பாதிக்க முடியுமென்றால் நாட்டில் நடக்கும் மற்ற கனிம வளக் கொள்ளையினை நினைத்து பாருங்கள்!

இந்த அரசு, போலீசு அனைத்தையும் தூக்கி எறிய வேண்டுமா என்பது இப்போது நமது தெரிவல்ல. அதுதான் ஒரே வழி என்பதை டி.எஸ்.பி தங்கவேலுவிவின் குற்றக்கதை கூறுகிறது.

–    வையவன்.

(நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ஜூனியர் விகடன்)

  1. காசு பணம் துட்டு மனி மனி !! பணம்னா பொணமும் வாய பொளக்கும் போது போலீசாவது மந்திரியாவது. சாதாரண திருடன் பயந்து பயந்து திருடணும் ! ஆனா போலீசு திருட்டு வேலை செய்ய பயப்பட வேண்டியதில்லை. மாமூல் வாங்குறது, கந்துவட்டி தொழில் செய்யிறது, பொய் கேஸ் போடுவேன்னு மெரட்டுறது, கடத்தல் எல்லா மொள்ளமாறித்தனமும் பண்றது. இது தான் இந்தியா ! ஒரு சம்பவம் ஞாபகம் வந்து தொலைக்குது. 1980 வருடம் சவூதியில் 2 போலீஸ் ஒரு வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழிச்சி கொன்னதுக்கப்புறம் பிடிபட்டுட்டுது. கற்பழிப்புக்கு தலைவெட்டு தான் ஆனா போலீசே செஞ்சதுனால் மன்னர் ஒரு சிறப்பு உத்தரவு போட்டார். ரெண்டு பேரையும் பொது இடத்துல தலைகீழா தொங்க விட்டு அடிச்சி கொல்லுங்க பிணத்தை 2 நாளைக்கு தொங்க விடுங்க. இந்த சம்பவத்துக்கப்புறம் போலீசு பெண்களை கண்டா 10 அடி தள்ளிதான் நிற்கும். இந்தியாவுல என்ன நடக்கும்ன்னு நினைச்சா சிரிப்பு தான் வருது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க