privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாரைக்குடி TCPL ஆலையை இழுத்து மூடு ! பொதுக்கூட்டம்

காரைக்குடி TCPL ஆலையை இழுத்து மூடு ! பொதுக்கூட்டம்

-

கோவிலூர் மற்றும் காரைக்குடி சுற்றுவட்டார பொதுமக்களின் எமனாக விளங்கும் TCPL ஆலையை இழுத்து மூடு! கண்டன பொதுக்கூட்டம்.

டி.சி.பி.எல் ஆலையை இழுத்து மூடு - பொதுக்கூட்டம்
டி.சி.பி.எல் ஆலையை இழுத்து மூடு – பொதுக்கூட்டம்

டந்த பிப்ரவரி மாதம் TCPL இரசாயன ஆலையில் ஏற்பட்ட விசவாயு கசிவினைத் தொடர்ந்து, “ஆலை தற்காலிகமாக மூடப்படும், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்விற்கு பின் ஆலையைத் தொடர்ந்து இயக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கலெக்டர் அறிவித்தார்.

ஆனால் மாசுக்கட்டுபாட்டு வாரியமோ “ஆலையை சரியாக பராமரித்தால் மட்டும் போதும், வேறு பிரச்சனைகள் இல்லை” என்று வாலைக் குழைத்தது. கசிவிற்கு காரணம் கூற மறுத்தது.

கலெக்டரோ தான் அளித்த வாக்குறுதியையும் மீறி, மக்களை கலந்தாலோசிக்காமலேயே, ஆலையை உடனே திறக்க உத்தரவிட்டு, தனது ‘ஜனநாயகக் கடமை’யை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டம்
டி.சி.பி.எல் ஆலையை மூடக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இச்சூழ்நிலையில் தான், காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக இக்கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர். நாகராசன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், “ இந்த ஆலைக்குள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் உள்ளன. இத்தொழிற்சங்கங்கள், TCPL ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிட் நோட்டீஸ் அடித்து அதை நாளிதழ்களுக்குள் வைத்து விநியோகித்துள்ளார்கள். நேரடியாக மக்களிடையே அவர்கள் அடித்திருந்த நோட்டிசை கொடுத்திருந்தால் அந்த இடத்திலேயே அவர்களுக்கு செருப்படி விழுந்திருக்கும்” என, அனைத்து ஓட்டுக் கட்சிகளையும், அவர்களின் தொழிற்சங்கங்களையும் அம்பலப்படுத்தினார்.

மேலும் ”’நான் ஒரு இந்து, இந்துக்களின் பிரச்சனை என்னுடைய பிரச்சனை’ என்று வாய்ச் சவடால் அடிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த பா.ஜ.க.வின் எச்சி (H). ராஜா, கோவிலூர் மக்களுக்காக ஒரு வார்த்தைகூட இதுவரை பேசவில்லையே? ஏன்? இவர்களெல்லாம் ‘இந்து’க்கள் இல்லையா?” என்று கேள்வி எழுப்பி, “அனைத்து ஓட்டுக்கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான், அது முதலாளிய ஆதரவுக்கொள்கை. இவர்களுக்குள் இருக்கின்ற வேறுபாடெல்லாம் கட்சி கொடிகளில் தானே ஒழிய, மக்கள் விரோதப் போக்கு என்ற கொள்கையில் அனைவரும் ஒன்றுதான்” என்று விளக்கினார்.

தொடர்ந்து, காவல்துறையும், நீதிமன்றங்களும் கூட போராடும் மக்களுக்கு ஒரு போதும் உதவ முன்வராது என்பதனை, செம்மரக்கடத்தல் மற்றும் ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு உதாரணம் மூலம் விளக்கினார்.

“போலீசுக்காரன் ஒருபோதும் நமக்காக இருக்கமாட்டான் என்பதற்கு ஆதாரம் 20 தமிழர்கள் ஆந்திர போலீசால் சுட்டுகொல்லப்பட்டது. இன்று செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள டி.ஜி.பி. தங்கவேலு கடத்தல்காரன்தானே? அவனை ஏன் இன்னும் என்கவுண்டர் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பி ஒட்டுமொத்த காவல்துறையும், கேடிகளுக்கும், கிரிமினல்களுக்கும், முதலாளிகளுக்கும், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் தான் என்று அம்பலப்படுத்தினார்.

“நீதித்துறையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. திருட்டு முதல்வர் அம்மா போதும்,  நீதிமன்றம் விலைபோகியுள்ளதை அம்பலப்படுத்த. உச்ச நீதிமன்ற நீதிபதி தத்து பல கோடிகள் ஜெயா விடுதலைக்காக லஞ்சம் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தத்துவின் மாணவர் தான் நீதிபதி குமாரசாமி. இவர்கள் படித்த பள்ளிக்கூட்த்தில் 4+3=8-ன்னு தான் சொல்லிக்குடுத்துள்ளார்கள். இது கொள்ளையர்கள் பக்கம் வளைக்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை சாதரண மக்கள் பக்கம் இல்லை. பணம் இருந்தால் தான் நீதியை விலைக்கு வாங்க முடியும் , அது உடையாரால் முடியும். ஏழை மக்களால் முடியுமா” என்று கேள்வி எழுப்பினார்.

“இந்தப் பிரச்சனைனயை தீர்க்க வேண்டுமானால் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். அதன் மூலமே இந்த ஆலையை இழுத்து மூடமுடியும்” என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து காரைக்குடியைச் சேர்ந்த தோழர் கல்யாணகுமார் அவர்கள் கூறும்போது “இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பொய். தொழிற்சாலையை ஆரம்பித்த ஆறே வருடங்களில் ரசாயன தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு இஞ்சினியர் ஆகியோர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிடாமல் மூடி மறைத்துவிட்டார்கள். மேலும் இரண்டு காவலாளிகளும் இறந்துள்ளனர். பலரும் விச வாயு தாக்கி பல்வேறு பிரச்சனைகளால் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள்” என்று பல்வேறு ஆதரங்களுடன் விளக்கினார்.

பிறகு, “இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே கோவிலூர் மக்களுக்காக போராடுவதாக நாம் தமிழ்ர் கட்சியின் மாறன் மற்றும் அவரது சகாக்கள், ஆலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் போய் காரைக்குடி நகர வீதிகளில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே பெரும் எதிர்ப்பையே சம்பாத்தித்துள்ளது. இங்கு இன்னொரு விசயத்தை பதிவு செய்ய வேண்டும். TCPL ஆலையின் ஒரு செங்கலைக்கூட இவர்கள் பெயர்த்தெடுக்கவில்லை. உடைப்பதாக இருந்தால் போய் ஆலையை அடித்து நொறுக்கு. ஆலைக்கு சப்ளை ஆகும் நீர் (அருகில் உள்ள சம்பை ஊற்று என்னும் இடத்தில் எடுக்கப்படுகிறது) நீரேற்று நிலையங்களைஉடை, நாங்களும் வருகிறோம்” என்று அறைகூவலோடு முடித்தார்.

அடுத்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த அலாவுதீன் பேசினார். “கொள்ளைகும்பலுக்காக நீதிபதிகள் அணி, நீதிமன்றமே உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை நம்பி எந்த பயனும் இல்லை.

இங்கு உள்ள போலீசுக்காரர்கள் எதற்காக நாம் பேசுவதை வீடியோ எடுக்க வேண்டும். இவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக நம்மைக் கண்காணிப்பவர்கள். இவர்கள் உண்மையிலேயே மக்கள் பக்கமாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும், ஆலைக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்றல்லவா கண்காணித்திருக்க வேண்டும். அதைச் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் முதலாளிகளின் கையாட்கள்”

“இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக இந்த ஆலையை மூட ம்க்கள் கெடு விதிப்போம். அதற்கு இந்த அரசாங்கமும் முதலாளிகளும் பணியவில்லை என்றால், அதிகாரத்தை நாமே கையிலெடுத்து ஆலையை இயங்கவிடாமல் நாமே அடித்து நொறுக்குவோம்” என்று கூறி உற்சாக வரவேற்புடன் நிறைவு செய்தார்.

அடுத்ததாக கோவிலூர் பகுதியின் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரான மணிமேகலை அவர்கள் பேசியதாவது, “எங்கள் பெண்களுக்கு கருக்கலைவு ஏற்படுகிறது. குழந்தைகள் மூளை வளர்ச்சியில்லாமல் பிறக்கின்றன. அதிகாரிகள் சொல்கின்றார்கள் பிரச்சனையை சரி செய்கிறோமென்று. ஆனால் இர்வு 10 மணிக்கு மேல் இரசாயன வாயுவைத் திறந்து விடுகின்றனர். அது எங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் கோவிலூர் மக்களை போலீஸ்காரர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள், ஆனால் இன்று எங்கு போனாலும் கோவிலூர் மக்கள் பின்னால் மோப்பம் பிடிக்கும் நாயாக அலைகிறார்கள்” என்று போலீஸ்காரர்கள் எப்படி முதலாளிக்காக வேலை செய்கிறார்கள் என்பதை தடாலடியாக பேசினார். அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் நமக்காக இல்லை என்பதை நடைமுறையில் உணர்ந்து பேசி தனது சிற்றுரையை முடிவு செய்தார்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசியதாவது, “கோவிலூர் ஆலைக்கு பல்வேறு வளர்ந்த நாடுகளுடன் தொடர்பிருக்கிறது. அங்கெல்லாம் இந்தத் தொழிற்சாலையின் பயன்பாட்டை அவர்களே அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அப்புறம் ஏன் அவர்கள் நாட்டில் இந்தத் தொழிற்சாலையை அமைக்காமல், நம்து நாட்டில் அமைக்கிறார்கள்? அவர்களின் நாட்டில் உயிரின் மதிப்பு அதிகம். நம் நாட்டிலோ உயிரின் மதிப்பு மிகவும் மலிவு. அதனால் தான் இங்கு வருகிறான்”.

“ஒரே ஒரு முதலாளிக்காக ஒட்டுமொத்த கோவிலூர் மற்றும் காரைக்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிர் படிப்படியாக ப்றிக்கப்படுகிறது. இப்படி வாழ்வாதாரத்தை, உயிர்களை பறிப்பது பயங்கரவாதமில்லையா? ஆனால் இதை எதிர்த்து போராடும் நம்மை இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்கள். இன்று அரச பயங்கரவாதம் தான் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கு காரணமாக உள்ளது”.

“வெயிலினால் ஆந்திராவில் பலபேர் இறந்துள்ளனர். ஆனால் வெயில் கொளுத்தும் அரபு நாடுகளில் கூட இத்தகைய வெயிலுக்கு செத்தவர்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் இத்தனை பேர் சாகக் காரணம் என்ன? சாதாரண உழைக்கும் மக்கள் நீர்சத்துகூட இல்லாமல் வெயிலில் தொடர்சியாக உழைக்கிறான். அதனால் இறக்கிறான். இறப்பவர்களில் அரசியல்வாதியோ, பணக்காரனோ, முதலாளியோ, அதிகாரியோ எவனாவது உண்டா? அவனெல்லாம் சொகுசாக ஏ.சி. அறையில் வாழ்கிறான். ஆனால் அன்றாடம் தனது அடிப்படைத் தேவையை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத உழைக்கும் மக்கள்தான் வெயிலுக்கும், மழைக்கும் சாகின்றார்கள். இதே போல்தான் யாரோ ஒருவனுடைய லாபவெறிக்காக கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்” என்றார்.

“இந்தப் பிரச்சனையை நீதிமன்றமோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ தீர்த்து வைப்பார்கள் என்று நினைப்பது ஒருநாளும் நமது பிரச்சனையை தீர்க்க உதவாது.

நீதிமன்றங்களை நம்பக்கூடாது என்று நாம் என்ன சொல்ல! உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே’வே கூறியுள்ளார். ‘நீதிமன்றங்கள் அனைத்தும் கேடி, கிரிமினல்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை’, என்று கூறியுள்ளார்.”

காவல்துறையும் நமக்காக வேலை செய்யகூடியவர்கள் இல்லை என்பதனையும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.

“அரசியல் கட்சிகள், கேடி, கிரிமினல்மயமாகிவிட்டது. தனியார் பள்ளிக்கூடங்களின் கொள்ளைகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் தனியார் பள்ளி முதலாளிகள் தான். அப்படியென்றால் இன்று ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளில் உள்ள பலரும் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள். இந்த கொள்ளைக் கூட்டமா நமக்காக வரப்போகிறது.”

“அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறையினர் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, நமக்கே எதிராக மாறிவிட்டார்கள். இவர்களை நம்பி பயனேதுமில்லை. ஆகவே நாம்தான் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்பதைப் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் நிறைய எடுத்துக்காட்டுகள் மூலம் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் டாஸ்மாக்குக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும், இயற்கைவள அழிப்பு, மக்களின் வாழ்வாதர அழிப்பு பற்றியும், அதற்கு தீர்வான விசயங்கள் பற்றியும் பல்வேறு பாடல்கள் அமைந்தன.

இறுதியாக “மக்கள் அதிகாரம் ஓன்றே வழி, அதற்காக பாடலாலும், இசையாலும் உங்களுடன் என்றும் வருவோம்” என்று கூறி தங்களது நேரத்தை நிறைவு செய்தனர்.

இறுதியாக தோழர் மாணிக்கம் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல்:
செய்தியாளர், புதிய ஜன்நாயகம்,
சிவகங்கை

தொடர்புக்கு:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை.
9443175256