Thursday, May 1, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி

தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி

-

“தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டு” – இதுதான் மோடி பிராண்டு “வளர்ச்சி”!

ன்மோகன் சிங் அரசு மிச்சம் வைத்துவிட்டுப் போன துறைகளை, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் படையல் போடும் வேலையை வெளிப்படையாகவும் கமுக்கமாகவும் என இரண்டு வழிகளிலும் நிறைவேற்றி வருகிறது, மோடி அரசு. காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவது; இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியத் தரகு முதலாளிகளை அனுமதித்திருப்பதோடு, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் அத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்வதற்கும், சில குறிப்பிட்ட இனங்களில் 100 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது; பல்வேறு உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைக் காப்புப் பட்டியலில் இருந்து விடுவித்து, அவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகபோக நிறுவனங்களுக்கு அளிப்பது என்பவையெல்லாம் வெளிப்படையாக நடந்திருக்கும் அதேசமயம், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் மிகவும் கமுக்கமாகவும் சதித்தனமாகவும் அரங்கேறி வருகிறது.

ராஜன், சுப்பிரமணியன், நாயக்
அரசு வங்கிகளைக் கொல்வதற்குத் தயாராகிவரும் தனியார்மயக் கோடாரிகள் : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் நாயக் கமிட்டியின் தலைவர் பி.ஜே.நாயக்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வந்த சமயத்தில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் இன்ஸ்டிட்யுட் என்ற சிந்தனைக் குழாம்-குடிமைச் சமூக அமைப்பில் உயர் பொறுப்பிலிருந்த இந்தியரான அரவிந்த் சுப்பிரமணியன் இந்திய பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்ட வேண்டியதை வலியுறுத்தி கட்டுரையொன்றை எழுதியிருந்தார். பொதுத்துறை வங்கிகளை, இந்திய அரசின் கழுத்தில் தொங்கும் தேவையற்ற சுமையாகச் சாடியிருந்த அவரைத்தான், தனது தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமித்துக் கொண்டார், மோடி. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளைச் சீரமைப்பது தொடர்பான வழிகளை ஆராவதற்காக மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட நாயக் கமிட்டி, தனது அறிக்கையை பிரதமர் மோடியிடம் அளித்தது. இவையிரண்டும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க மோடி அரசு வெறித்தனமாக முயலும் என்பதை எடுத்துக் காட்டின என்றால், மோடி அரசின் இரண்டு பட்ஜெட் (2014-15, 2015-16) அறிக்கைகளும் அதனைத் தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தின.

பொதுத்துறை வங்கிகளின் அழிவில்தான் தனியார் வங்கிகள் வளர முடியும் எனக் கூறும் அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரை, அதற்காகப் பொதுத்துறை வங்கிகளை நைச்சியமான முறையில் கொன்றுவிட வேண்டும் என வெளிப்படையாகவே பரிந்துரைக்கிறது. “இந்திய வங்கித் தொழிலில் 75 சதவீத பங்கு இன்னமும் பொதுத்துறை வங்கிகளிடம்தான் உள்ளன. மேலும் மேலும் தனியார் வங்கிகளைத் திறப்பதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் இந்த செல்வாக்கைக் குறைத்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுத்துறை வங்கிகளின் இந்தச் செல்வாக்கைச் சுருக்காமல், தனியார் வங்கிகள் வளர்வதற்கான வாய்ப்பே இல்லை. நல்ல இலாபமீட்டும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதை இந்திய அரசியல் சூழல் அனுமதிக்காது. அதற்குப் பதிலாக, வாராக் கடன் பிரச்சினையால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைக் கவிழ்ப்பதன் மூலம்தான் ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளின் செல்வாக்கைக் குறைக்க முடியும்” என்கிறது, அவரது கட்டுரை.

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க மறுத்த இந்திய அரசு வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

பொதுத்துறை வங்கிகளைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயமாக்க ரிசர்வ் வங்கியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கும் அவரது கட்டுரை, “வாராக் கடன் பிரச்சினையால் தடுமாறும் பொதுத்துறை வங்கிகளைக் கைதூக்கிவிடும் நோக்கில் அரசு அந்த வங்கிகளில் மேலும் மூலதனமிட முயலும்பொழுது, அத்தகைய ‘பெயில் அவுட்’ நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தலையிட்டுத் தடுக்க வேண்டும். பொருளாதார மந்த நிலையில் இத்தகைய பெயில் அவுட் நடவடிக்கைகள் நிதிப்பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; திறமையற்ற வங்கிகள் அரசின் ஆதரவோடு உயிர் பிழைத்திருப்பதை அனுமதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அரசிடம் உறுதியாக எடுத்துச் சொல்ல வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை எந்தளவிற்கு மோசமாக உள்ளதோ, அந்தளவிற்கு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பொதுத்துறை வங்கிகளை பெயில் அவுட் செய்வதற்கு எதிராகப் பேச வாப்புகள் கிடைக்கும். மோசமடைந்த பொதுத்துறை வங்கிகளைத் தீர்த்துக் கட்டுவதை ஒருபுறமும், இலாபகரமான வங்கிகளைத் தனியாருக்குக் கைமாற்றிவிடுவதை இன்னொருபுறமும் செய்வதற்கு இந்த வாப்புகளை ரிசர்வ் வங்கி கவர்னர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றவாறு பொதுத்துறை வங்கிகளைத்
தனியார்மயமாக்கும் திட்டத்தை விவரிக்கிறது, அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரை. பொதுத்துறை வங்கிகளுக்கு “சைலண்டாக” சங்கு ஊதச் சொல்லும் இந்தக் கட்டுரைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு – “சாகடித்துச் சீர்திருத்துவோம் (Reform by Death)”

நாயக் கமிட்டி அறிக்கையும் வாராக் கடன் பிரச்சினையை முன்வைத்து பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கோருகிறது. “பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதற்கு அரசின் தலையீடும் நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம்” எனக் கூறும் நாயக் கமிட்டி, இதற்குத் தீர்வாக, “மைய அரசு பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கி முதலீட்டு கம்பெனி என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி, அதனிடம் இப்பங்கு மூலதனத்தையும் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும். முதலீட்டாளர் என்ற முறையில் அரசு பொதுத்துறை வங்கிகள் மூலம் கிடைக்கும் இலாபத்தை எண்ணிக் கொண்டிருப்பதைத் தாண்டி வேறெந்த வகையிலும் வங்கி நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது” எனப் பரிந்துரைக்கிறது.

வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
வங்கிப் பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கம் டெல்லியிலுள்ள இந்திய அரசு வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

அரவிந்த் சுப்பிரமணியன் போலவே பி.ஜே.நாயக்கும் அமெரிக்க இறக்குமதி சரக்குதான். 2008-ல் அமெரிக்காவில் வெடித்த சப்-பிரைம் (வீட்டுக் கடன்) மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுள் ஒன்றான மார்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அவர், இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். இரத்த வெறி கொண்டு அலையும் செந்நாய் கூட்டம் போல, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், பி.ஜே.நாயக் உள்ளிட்ட ஏகாதிபத்திய அடிவருடி நிபுணர்கள் கும்பல் இந்தியாவின் நிதித்துறையை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கத் துடிக்கிறார்கள்.

***

2000-ஆம் ஆண்டின் முதல் எட்டு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கண்ட வளர்ச்சிக்கும், அம்பானி சகோதரர்கள், அதானி, ரூயா உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளிகள் உலகக் கோடீசுவரர்களாக வளர்ந்ததற்கும் அடிப்படையாக இருந்தது பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்கள்தான். 1999-ல் அடிக்கட்டுமானத் துறைக்குப் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் வெறும் 724 கோடி ரூபாய்தான். இது 2012-13-ல் 78,605 கோடி ரூபாயாக அதிகரித்தது. அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் (Public Private Partnership) தொடங்கப்பட்ட அடிக்கட்டுமான திட்டங்களில் தனியார் பங்களிப்பு என்பது பூஜ்யம்தான். அத்திட்டங்கள் அனைத்தும் வங்கிகளின் கடனைப் பெற்று உருவாக்கப்பட்ட அரசு திட்டங்கள்தான் என்கிறார், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்கரவர்த்தி.

பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட இத்தகைய கடன்கள்தான் பொதுத்துறை வங்கிகளைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளின. பொதுத்துறை வங்கிகளை நிதி நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் வாராக் கடனில் பெரும் பகுதி ஒரு முப்பது நிறுவனங்களிடம் தேங்கியிருப்பதாக செப்டம்பர் 2013-ல் மையப் புலனாய்வு துறை வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியது. அரசியல் செல்வாக்குமிக்க கிங்ஃபிஷர் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தியிருக்கிறது. 36 தனியார் அனல் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட 2,09,000 கோடி ரூபாய் கடன் வசூலிக்க இயலாத சிக்கலில் இருப்பதாக கிரெடிட் சூயிஸ் என்ற ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

டெல்லி பாலம் விமான நிலையம்
உமி கொண்டுவந்தவன் அவல் தின்ற கதையாக அரசுப் பணத்தில் நவீனமான முறையில் சீரமைக்கப்பட்ட டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையம் ஜி.எம்.ஆர் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வாராக் கடன்கள் ஒருபுறமிருக்க, கடனைக் கட்டாமல் ஏய்த்து வரும் தரகு முதலாளிகள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, கடன் தொகையிலும் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்து, திருப்பிக் கட்டுவதற்கான தவணை முறைகளை நீட்டிப்புச் செய்து தரும் அயோக்கியத்தனத்தைக் கடன் மறுசீரமைப்பு என வங்கி நிர்வாகங்கள் அழைக்கின்றன. இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால், அது இன்னொரு கொள்ளையாக விரிகிறது.

2008-ல் வெடித்த பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய ஐந்தாண்டுகளில் வாராக் கடன் பட்டியலுக்குள் கொண்டு வராமல் தந்திரமாக மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை ஐந்து இலட்சம் கோடி ரூபாயாகும் என சி.பி.ஐ. குற்றஞ்சுமத்தியிருக்கிறது. அந்த ஐந்தாண்டுகளில் அரசுடமை வங்கிகளின் இலாபத்திலிருந்து 1.41 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, வங்கி ஊழியர் சங்கம்.

இப்படி பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை தொழில் கடன்கள் என்ற பெயரில் கொள்ளையடித்து, அதன் மூலம் தங்களின் சொத்து மதிப்புகளை உயர்த்திக் கொண்டுள்ள இந்தியத் தரகு முதலாளிகள் கும்பல், வாராக் கடனால் வங்கிகள் நொடித்துப் போயிருப்பதால், அவற்றைத் தனியார்மயமாக்கித் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருகிறார்கள். இது மாட்டை இரண்டு முறை தோலுரிப்பதற்கு ஒப்பானது. இம்மாபாதகத்தைக் கச்சிதமாகவும் விரைவாகவும் முடித்துக் கொடுக்க முனைந்துள்ளது, மோடி அரசு.

தனது பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பொதுத்துறை வங்கிகளைச் சத்தமில்லாமல் தனியார்மயமாக்குவதற்கு என்ன வழியை முன்வைத்தாரோ, அதே வழியை, பொதுத்துறை வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கடுமையாக வெட்டுவதன் மூலம், போதுமான அளவிற்கு இலாபம் ஈட்டாத பொதுத்துறை வங்கிகளைச் சந்தையை நோக்கித் தள்ளிவிடும் (தனியார்மயமாக்கும்) முதல்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது, மோடி அரசு.

மன்மோகன் சிங் ஆட்சியிலும்கூடப் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி வெட்டப்படுவது வாடிக்கையாக இருந்தாலும், மோடி ஆட்சியில் இந்த வெட்டு கடுமையாகியிருப்பதோடு, ‘திறமையாகச் செயல்படாத’ பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதித்தனத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது. மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் (2014-15) பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்கு 11,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக கணக்குக் காட்டப்பட்டது. இந்தத் தொகை அதற்கு முந்தைய பட்ஜெட்டைக் காட்டிலும் 2,800 கோடி ரூபாய் குறைவானது என்பது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் பொதுத்துறை வங்கிகளுக்கு முழுமையாகத் தரப்படவில்லை. பட்ஜெட்டில் 11,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, வெறும் 6,990 கோடி ரூபாய்தான் பொதுத்துறை வங்கிகளுக்குத் தரப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலோ, கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாக 7,940 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்குக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டாலும், அந்த நிதி அனைத்து வங்கிகளுக்கும் கிடைப்பதற்கு ஏற்றவாறு, அவற்றின் தேவை கணக்கில் கொள்ளப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், மோடி அரசோ பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்கு அவற்றின் இலாபத்தை மையமாகக் கொண்ட புதிய விதியைப் புகுத்தியது. இந்த விதியும்கூட ஒரு நியாயமான முறையில் உருவாக்கப்படாமல், வாராக் கடனால் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ள வங்கிகளைப் புறக்கணிக்கும் தீய நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின்படி 22 பொதுத்துறை வங்கிகளுள் 9 வங்கிகளுக்கு மட்டுமே மறுமூலதன நிதியைப் பெறும் தகுதியிருப்பதாகக் கூறப்பட்டு, மீதமுள்ள 13 வங்கிகளும் நட்டாற்றில் விடப்பட்டன.

அரசின் நிதி கிடைக்காத இந்த 13 வங்கிகளுள் ஏழு வங்கிகள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைச் சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ள அனுமதித்திருப்பதன் மூலம், அவற்றைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது, மோடி அரசு. இப்படி அனுமதி அளிக்கப்பட்ட அதே சமயத்தில், ஏகாதிபத்திய தரநிர்ணய நிறுவனமான மூடி, சென்ட்ரல் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டும் மூலதனமிடுவதற்கு ஏற்றவையல்ல என அறிவித்திருக்கிறது. அரசும் நிதி ஒதுக்காது, சந்தையிலிருந்தும் நிதி திரட்ட முடியாது என்ற நிலையில் இந்த இரண்டு வங்கிகளும் தமது கடையை மூடிவிட்டு, வேறொரு பெரிய வங்கியோடு இணைய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.

ஒருபுறம் வாராக் கடன் நெருக்கடி, இன்னொருபுறம் அரசின் நிதியுதவி மறுக்கப்படுவது என்ற இரட்டை இடியைப் பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் இந்த நிலையில்தான், ஏகாதிபத்திய நாடுகளாலும் பன்னாட்டு வங்கிகளாலும் வரையறுக்கப்பட்டுள்ள “பாசல் 3” விதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தையும் பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்டுள்ளன. “பாசல் 3” விதிகள் அமலுக்கு வரும்பொழுது இந்திய வங்கிச் சட்டங்கள் செல்லாக்காசாகிவிடும்.

வங்கிகள் வழங்கும் கடன்களின் மதிப்புக்கு ஏற்ற விகிதத்தில் அவற்றின் மூலதன/சொத்து மதிப்பு இருக்க வேண்டும் என வரையறுக்கிறது, “பாசல் 3” விதிகள். இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் புதிய பணக்கார நடுத்தர வர்க்கத்திற்கும் கடன்களை வாரிக் கொடுப்பதற்கு ஏற்றவாறு வங்கிகள் தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறல்ல. இதன்படி 2018-ம் ஆண்டுக்குள் மேலும் 2,40,000 கோடி ரூபாயை மூலதனமானத் திரட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டை எதிர்கொண்டுள்ளன பொதுத்துறை வங்கிகள்.

அனைத்துப் பொதுத்துறை வங்கிகளையும் ஒரேவீச்சில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிடுவதற்குக் கிடைத்த வாப்பாக “பாசல் 3” விதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு. இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் செலுத்த வேண்டிய வாராக் கடன்களையும் மறுசீரமைக்கப்பட்ட கடன்களையும் வசூலித்தாலே பொதுத்துறை வங்கிகளின் மூலதனத் தேவையை ஈடுகட்டிவிட முடியும். ஆனால், அரசோ தரகு முதலாளிகள் மீது கைவைப்பதற்கு மாறாக, தன் வசமுள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைச் சந்தையில் விற்று “பாசல் 3” விதிகளை நிறைவேற்றத் திட்டமிடுகிறது.

மொத்தமுள்ள 27 பொதுத்துறை வங்கிகளுள் 22 பொதுத்துறை வங்கிகள் மைய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், 5 பொதுத்துறை வங்கிகள் இந்திய அரசு வங்கியின் (ஸ்டேட் பாங்கி ஆஃப் இந்தியா) கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த வங்கிகளில் 65 முதல் 80 சதவீதப் பங்குகள் மைய அரசு மற்றும் இந்திய அரசு வங்கிக்குச் சொந்தமாக உள்ளன. இதனைத் தடாலடியாக 52 சதவீதமாகக் குறைப்பதன் மூலம், 1,60,825 கோடி ரூபாயைச் சந்தையிலிருந்து திரட்டத் திட்டமிடும் மோடி அரசு, இது தொடர்பான அறிவிப்பையும் கடந்த டிசம்பரில் வெளியிட்டிருக்கிறது.

இதற்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகளின் தலைமைப் பதவிகளைத் தனியார்மய ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பும் வேலையையும் தொடங்கிவிட்டது, மோடி அரசு. குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியத் தொழில்வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாப்பு விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்குப் பொருந்தாதவாறு, கொட்டைபோட்ட பங்குச்சந்தை சூதாட்ட நிபுணர்களை, தனியார் வங்கியாளர்களை அப்பதவிகளில் உட்கார வைப்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களை அபகரிக்க நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க தொழிலாளர் சீர்திருத்த சட்டம் என்ற வரிசையில் பொதுமக்களின் சேமிப்புகளைத் தங்கு தடையின்றிச் சூறையாடப் பொதுத்துறை வங்கிகளை முற்றிலுமாகத் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு. விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும், வங்கி ஊழியர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் இவற்றைத்தான் மோடி அரசு ‘வளர்ச்சி’ என அழைக்கிறது.

– செல்வம்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________