Wednesday, May 14, 2025
முகப்புசெய்திவெட்டிப் பேச்சு விடிஞ்சா போச்சு - குறுஞ்செய்திகள்

வெட்டிப் பேச்சு விடிஞ்சா போச்சு – குறுஞ்செய்திகள்

-

Satirical-Drawings-by-Pawel-Kuczynski04ஏ ஃபார் ஆப்பிள்
– சிலருக்கு அது ஆங்கிலம்
சிலருக்கு அதுதான் ஆப்பிள்!

ஓவியம் நன்றி: Pawel Kuczynski

_____________________________

அமர்நாத் சோம்நாத் – மலரும் நினைவுகள் !

2008, ஜூலை 18-ல் துவங்கப்பட்ட வினவு தளத்தின் முதல் கட்டுரை இதுதான். இன்றைய ஆங்கில இந்து-வின் முதல் பக்க செய்தியே இப்படி ஒரு மலரும் நினைவை தூண்டி விட்டது. யாருக்கு மலரும் நினைவுகள் – நமக்கா, சி.பி.எம் கட்சிக்கா?

2008-ம் ஆண்டு அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, சி.பி.எம் கட்சி விலக்கிக் கொண்டது. உடன் அக்கட்சியின் எம்.பிக்கள் அடங்கிய பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளித்தனர். அதில் அப்போதைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் பெயரும் தோழர் அடைமொழியோடு இருந்தது. மாண்புமிகு என்று குறிப்பிடவேண்டிய சபாநாயகர் பதவியை தோழர் என்று எப்படி குறிப்பிடலாம், கட்சி சார்பற்ற பதவியான அவைத் தலைவர் பொறுப்பை இப்படி கட்சி சார்ந்து விலகச் சொல்வது தவறு என்று சோம்நாத் ஆணித்தரமாக முன்வைத்தார்.

பிறகு எதோதோ சுற்றி வளைத்து கட்சிக்கும், சட்டர்ஜிக்கும் பெரும் தத்துவப் போராட்டம் நடந்து அவர் கட்சியை விட்டு வெளியேறினார். எட்டாண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் கட்சி அவருடன் சமாதானம் செய்து அழைத்திருக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் விதமாக சோம்நாத் அவர்கள் கட்சிக்கு மீண்டும் வரவேண்டும் என்று பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி அழைத்திருக்கிறார். கட்சியுடனான கருத்து வேறுபாடு என்பது கொஞ்சம் தவறான புரிந்துணர்வினால் ஏற்பட்டதே அன்றி பாரிய அளவில் இல்லை என்று சட்டர்ஜியும் ஏற்றிருக்கிறார்.

சொல்லப் போனால் அவர் கட்சியை விட சபாநாயகர் பதவிதான் முக்கியமென்று வாதிட்ட போதும் இதே ஜனநாயகம்தான் விவாதப் பொருளாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த ஒரு தோழர் ஒரு சபாநாயகர் பதவியை எவ்வளவு பொறுப்போடும், நடுநிலையோடும் கையாள வேண்டும், இந்த நேர்மைதான் கட்சியை வரலாற்றில் இடம் பிடிக்க வைக்கும் என்று சட்டர்ஜி வாதிட்டார். அன்று ஜோதிபாசு போன்ற சில மூத்த தலைவர்களும் அவ்வாறே எண்ணியிருந்தனர். கூட்டணி வாய்ப்பு வந்த போது தனக்கு விருப்பம் இருந்தாலும், கட்சிக்கு இல்லை என்று பிரதமர் பதவியை பறிகொடுத்த பாசுவுக்கு ஏற்கனவே இது குறித்த தெளிவான புரிதல் இருந்ததில் ஆச்சரியமில்லை.

YECHURY

தற்போது அதே ஜோதிபாசுவின் 102-வது பிறந்த நாள் கூட்டத்தில்தான் கட்சியும், சோம்நாத்தும் சரியான புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றனர்.

முதலாளித்துவ நாடுகளின் பாராளுமன்றத்தில் சில நேரம் பங்கேற்பது அதை அம்பலப்படுத்துவதற்கே என்று லெனின் கூறியிருந்தாலும், அதே பாராளுமன்றம் தனது சொந்த ஆளும் வர்க்க நெருக்கடி காரணமாக தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் போதும் கூட கருணை கூர்ந்து அந்த நாற்றத்தை சந்தனம், ஜவ்வாது, ஜனநாயகம், மரபு, பண்பாடு என்று மறைக்கும் பணியினை சி.பி.எம் சிறப்பாக செய்து வருகிறது. ஆகவே சோம்நாத், சி.பி.எம் முரண்பாடு சுமூகமாக தீர்க்கப்பட்டதன் அடிப்படை இதுதான்.

குறையொன்றுமில்லை தோழர்களே!

கட்டுரையின் இணைப்பு: https://www.vinavu.com/2008/07/18/somnath/

_______________________

வெட்டிப் பேச்சு விடிஞ்சா போச்சு – 1

விவாதங்களை ஏட்டிக்குப் போட்டியாக நடத்தும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி இயக்குநர்களுக்கு தலைப்பு எப்படி இருந்தாலும், சுவாராசியம் குன்றக் கூடாது. இடையிடையே கொஞ்சம் கருணையுடன்சில பல சமூக பிரச்சினைகளையும் எடுத்துக் கொள்வார்கள். என்றாலும் ‘சுவாரசி’யத்திற்கு கட்டுப்பட்டே சமூக விசயங்கள் இருக்க வேண்டும்.

ஒரு முறை குடியின் கேடுகளை ஒட்டி ஒரு விவாதம். குடியினால் ஒரு கணவன் உடலைக் கெடுத்து, மனைவி மேல் சந்தேகப்பட்டு, அவள் கன்னத்தை வெட்டி பிறகு செத்தே போகிறான். வெட்டுத் தழும்புடன் அந்தப் பெண் கதையை விவரிக்கும் போது கல்லுள்ள நெஞ்சங்களும் கொஞ்சமாவது கரையும். இப்படி ஒரு எதிர்பார்ப்போடு நிகழ்ச்சி உதவி தயாரிப்பாளர்கள் அப்பெண்ணை அழைத்து வருகின்றனர்.

எனினும் அவர்களது எதிர்பார்ப்பை மீறி வேறு ஒரு பெண் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாள். வெட்டுத் தழும்பு பெண்ணுக்கு என்ன ஆச்சு? அவள் கருப்பாகவும், ‘அழகற்றவளாகவும்’ இருந்தாளாம். பங்கேற்ற பெண்? அவள் நிறையவே அழகோடு குடிகார கணவனால் கொஞ்சம் பாதிக்கப்பட்டவளாகவும் இருந்தாளாம். இது குறித்து நிகழ்ச்சி இயக்குநரிடம் கேட்கிறார், ஒரு இளைஞர்.

tv“அழகா உள்ளவங்க சொன்னாதான் நம்ம ஜனங்க காது கொடுத்து கேப்பாங்க! நேரம் ஒதுக்கி பாப்பாங்க! நல்ல விசயத்தை சொல்லணும்னா கூட அது அழகா இருக்குறவன் சொன்னாத்தான் எடுபடும், புரிஞ்சுக்கோ” என்றார் அந்த இயக்குநர்.

செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்று ஊடக அறிஞர் பெருமக்கள் பின்பற்றுவதை ஏதோ ஒரு தமிழ் சினிமாவின் காமடியாக கருதுகிறோம். ஒரு மனிதன் நல்லவனா, கெட்டவனா, பாதிக்கப்பட்டவனா என்பதையெல்லாம் விட அவன் அழகுள்ளவனாக இருப்பதே முக்கியம்.

ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கே இதுதான் கதி என்றால் இதர நட்சத்திர பதவிகள், பொறுப்புகளை நினைத்துப் பாருங்கள்! காசுள்ளவனுக்கே கல்வி, மருத்துவம், வாழ்க்கை, மின்சாரம் அளிக்கப்படுமென்று சாதாரண மக்களை விரட்டிவரும் உலக மயம், கருத்துரைக்கும் கந்தசாமி – காயத்திரிக்களின் நாற்காலிகளுக்கும் ‘அழகுள்ளுவர்களையே’ அமர்த்த விரும்புகிறது.

பாசிசத்தை ஆட்சி முறை, நிர்வாகம், இராணுவம், போலிசு துறைகளில் நிலைபெறச் செய்வதற்கு முன்னர் கருத்து ரீதியான பாசிச சிந்தனை முறையை ஏற்படுத்துவார்கள். அதன் அங்கம்தான் இது…..!

________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க