Sunday, September 15, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்அமர்நாத் – சோம்நாத்

அமர்நாத் – சோம்நாத்

-

சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி

வழக்கமாக அமர்நாத்தின் பனிலிங்கம் – அதாங்க அந்த குச்சி ஐஸ் – இரண்டு மூன்று மாதங்களுக்கு உருகாதாம். இந்த சீசனில் அந்த குச்சி ஐஸ் பக்தர்களை ஏமாற்றிவிட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே கரைந்து விட்டதாம். இதனாலொன்றும் பக்தர்கள் அதிர்ச்சியடையவில்லை. லிங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமர்நாத்திற்கு செல்வோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியும் உறுதியாக இருக்கிறார் – நாற்காலியை விடமாட்டேன் என்று! அமர்நாத்துக்கும் சோம்நாத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.புனிதம்தான் அந்த சம்பந்தம்.லிங்கம் இல்லையென்றாலும் அமர்நாத் புனிதமெனும்போது ஆதரவவை வாபஸ் வாங்கினாலும் நாற்காலி புனிதமானதில்லையா?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சி.பி.எம் வாபஸ் வாங்கியதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி போலிக் கம்யூனிஸ்டுகளைத்தான் மையம் கொண்டுள்ளது.இந்த மதிப்பீடும் விமரிசனமும் எம்முடையது என்று வாசகர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. இரண்டு நாள்களாகப் பத்திரிக்கைகளில் சி.பி.எம் அண்ணாச்சிகள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் நம்ம சரவணபவன் அண்ணாச்சி தோற்றார் போங்கள்.

காங்கிரசு அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கியதும் இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத் தலைமையில் ஒரு சுபமுகூர்த்தத்தில் குடியரசுத்தலைவரை பார்த்து ஆதரவு விலக்க கடிதத்தையும் எம்.பி.க்கள் பட்டியலையும் அளித்தனர். அதில் தோழர் சோம்நாத்தின் பெயரும் இருந்ததாம். பின் எப்படி இல்லாமல் போகும்? ஆனாலும் பிடித்தது சனி. இதை அறிந்த சோம்நாத் பொங்கி எழுந்து விட்டாராம். அனைவருக்கும் பொதுவான சபாநாயகரான தனது பெயரையும் அதில் சேர்த்தது தப்பு என்பது அவரது கருத்து. அதுவும் மாண்புமிகு என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சபாநாயகரை தோழர் என்று போட்டதில் தோழருக்கு மகா கோபமாம். சி.பி.எம் டிக்கெட்டில் போட்டியிட்டு எம்.பி. ஆன சட்டர்ஜி ராஜினாமா செய்யவேண்டும் என்பது பிரகாஷ் காரத் கோஷ்டியின் அதாவது கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலை. இந்த அதிகாரப்பூர்வமான நிலையையும் தோழரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பதற்கு கட்சிக்கு அதாவது காரத்துக்கு பயம். எனவே என்ன செய்வது என்பதை சோம்நாத்தே முடிவு செய்யலாம் என்று அறிவித்து விட்டார்கள். ஆனால் உள்குத்து தகவலின்படி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே சட்டர்ஜி ராஜினாமா செய்யவேண்டும் என்பது கட்சியின் விருப்பம். ஆனாலும் விருப்பத்தை பகிரங்கமாக கட்டளை போல அறிவிக்க பயம். இடையில் சுர்ஜித்தைப் போல தரகராகப் பணியாற்றுவதில் நிபுணரான எச்சூரி, தான் காரத் பக்கம் இல்லை என்பதை நாசூக்காக பத்திரிகைகளிடம் தெரிவித்து விட்டார்.  இதன்படி சோம்நாத்தின் அனுமதியில்லாமல் அவரது பெயரை எம்.பி.க்கள் பட்டியலில் போட்டது தவறுதான் என்றும், அப்படிப் போட்டாலும் அவர் சபாநாயகர் என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பாக தெரிவித்திருக்க வேண்டும் என்பது எச்சூரியின் சால்ஜாப்பு. இப்படி அடிக்குறிப்புகளெல்லாம் வரலாற்றில் இடம் பெறுகின்றன; முக்கியத்துவம் பெறுகின்றன! ஆனால் எச்சூரியின் அடிக்குறிப்பை வைத்து சட்டர்ஜியை காப்பாற்ற நினைக்கும் போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதாவது பிரகாஷ் காரத் கோஷ்டியுடன் எச்சூரி கோஷ்டி கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறது என்பதை மீடியாக்கள் கண்டு கொண்டு அதனை அம்பலப்படுத்தின. இருவருக்கும் கருத்து வேறுபாடெல்லாம் இல்லை என்று ஒரு இடதுசாரித்  தலைவர் அறிக்கை வெளியிட்டார். அவரை சி.பி.எம் கட்சி என்று நினைத்து விடாதீர்கள். அவர் சி.பி.ஐயின் அகில இந்திய தேசியச் செயலர் ராஜா. இப்படி சி.பி.எம்மின் உள்குத்துக்களைப் பஞ்சாயத்து பண்ணுவதற்கு சி.பி.ஐ தேவைப்படுகிறது. கட்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநபர்கள் வரலாமா என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது. மேலும் சி.பி.எம் ஒரு ஜனநாயகப்பூர்வமான கட்சி என்பதால்  இத்தகைய வேறுபாடுகளும் கோஷ்டிகளும் கட்சிக்குள் இருக்கத்தான் செய்யும்.துரதிர்ஷடவசமாக தமிழ்நாட்டு காங்கிரசு கும்பல்கள் வேட்டியை உருவி அடித்துக்கொள்ளும்போதும் காங்கரசின் தலைவர்கள் இதே விளக்கத்தைத்தான் கூறுகிறார்கள்.
போகட்டும்.

நாம் பிரச்சினைக்கு திரும்புவோம்.முதலில் சட்டர்ஜி இந்த சமாளிப்புகளை சட்டை செய்வதாக இல்லை. அனைத்துக் கட்சி எம்.பிக்களாலும் ஏகமனதாக சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட தன்னை ஒரு நாலாந்தர கட்சி உறுப்பினன் போல எப்படி நடத்தலாம் என்பதுதான் அவரது கோபம். இந்தக் கோபம் சபாநாயகருக்குத்தான் வானளாவிய அதிகாரம் என்று முழங்கிய பி.எச். பாண்டியனின் வகையைச் சேர்ந்ததல்ல. மாறாக பாராளுமன்றத்தின் மாண்பையும், மரபையும் கட்சி எப்படி இழிவு செய்யலாம் என்ற தார்மீக அறவழிக் கோபத்தைச் சார்ந்தது. பாராளுமன்றம் பன்றிகளின் கூடாரம் என்று நாம் ஒவ்வொரு முறையும் விளிக்கும்போதும் மற்ற பன்றிகளெல்லாம் “இதிலென்ன புதுசு” என்று அமைதியாக இருந்தாலும் சி.பி.எம்…….சும்மா இருப்பதில்லை. எனவே நாம் சட்டர்ஜியின் கோபத்தைப் புரிந்து கொண்டாக வேண்டும். ஆக கடைசியில் என்ன நடந்தது. காங்கிரசு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது தான்தான் சபாநாயகராக இருப்பேன் என்று சட்டர்ஜி அறிவித்து விட்டார். மேலும் தன்னை ராஜினாமா செய்யும்படி கட்சி வற்புறுத்தும் பட்சத்தில் சபாநாயகர் பதவியை மட்டுமல்ல, கட்சியை விட்டே விலகி விடுவதாகவும்  மீடியாக்களுக்கு செய்திகளைக் கசியவிட்டார். காரத் கோஷ்டி செய்வதறியாது திகைத்து நிற்கிறது. எப்படியும் 22ஆம் தேதி நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்திற்கு அவர்தான் சபாநாயகர் என்பது உறுதியாகி விட்டது. சி.பி.எம். கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் இன்னபிற மகாமித்யங்கள் காற்றில் பறப்பதும் உறுதியாகி விட்டது.

சோம்நாத்தின் ஈகோ இப்படி முறுக்கிக் கொள்வதற்கு சில அடிக்கட்டுமானங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. சோம்நாத்தின் தந்தை இந்து மகா சபாவில் தலைவராக இருந்தவராம். இவர்களது குடும்பமே வலிமையான நிலப்பிரபுக் குடும்பமாம். தனது பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடத்திய சோம்நாத் சட்டர்ஜிக்கு மட்டுமல்ல, சபாநாயகர் சட்டர்ஜிக்கும் இந்த பின்னணியைப் பொருத்திப் பார்ப்பது அவசியம்.

ஏற்கெனவே 98இல் வங்கத்து பிதாமகர் ஜோதிபாசு இந்தியப் பிரதமராக வருவதைக் கட்சி மறுத்திருக்கிறது. இதனால் மனம் சோர்ந்த பாசு இதனைக் கட்சியின் பெரும் வரலாற்றுப் பிழை (historical blunder) என்று புலம்பினார். இதை மற்றவர்கள் மறந்தாலும் இப்போது 96வயதான ஜோதிபாசுவும் கட்சிக்குள் இருக்கும் அவரது சீடர்களும் மறப்பதாக இல்லை. சோம்நாத், பாசுவின் சீடரென்பதை இங்கே நினைவில் கொள்க. இப்போது கட்சி வரலாற்றுப் பிழை எதுவும் செய்யாமலிருக்கும் பொறுப்பை சட்டர்ஜி சுமக்கிறார்.

இந்தச் சுகமான சுமையில் அரசியல் அறமொன்றும் கலந்திருக்கின்றது. அதாவது மதவாதக் கட்சியான பி.ஜே.பியுடன் இணைந்து காங்கிரசு கூட்டணி அரசை எதிர்ப்பதை சோம்நாத் விரும்பவில்லையாம். இத்தனை நாள் தாங்கள் புனைந்திருக்கும் புனிதவேடமான மதச்சார்பற்ற கட்சி என்ற பதாகையை இழப்பது சரியல்ல என்பது அவரது எண்ணமாம். இந்த எண்ணத்தை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இத்தனை நாள் சி.பி.எம் கட்சி தனது பித்தலாட்டங்களை நியாயப்படுத்துவதற்கு அடிக்கடி பயன்படுத்திய அந்தப் புகழ்பெற்ற சொல்லாடலான மதச்சார்பற்ற அரசியலைத்தான் சோம்நாத்தும் கவ்வியிருக்கிறார்.

நாற்காலியைக் காப்பாற்றும் நப்பாசைக்கு கொள்கைகள் கை கொடுக்கிறது என்றால் அது சட்டர்ஜயின் தவறல்ல. இந்தக் கொள்கை முழக்கத்தை சோம்நாத் மட்டுமல்ல, மேற்குவங்க கட்சி முழுவதும் எடுத்து முழங்குகிறார்களாம். புத்ததேவ் பட்டாச்சார்யா இதுகுறித்து ஜோதிபாசுவை இருமுறை சந்தித்து பேசினாராம். பின்னே புரிந்து கொள்வதற்கு இது எவ்வளவு கடினமான விசயம்!! மேலும் பிரணாப் முகர்ஜியும் பாசுவைச் சந்தித்து இடதுசாரிகள் ஆதரவை விலக்கியது தவறு என்று விளக்கினாராம். அந்த விளக்கத்தை பாசு ஏற்றுக்கொண்டதாகவும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.சீடப்பிள்ளை சோம்நாத்தின் நிலையும் சரி என்பது பாசுவின் நிலைப்பாடாம். இப்படியாக பிரகாஷ் காரத்தின் கோஷ்டிக்கு எதிரான கோஷ்டி வங்கத்தில் நிலை கொண்டுள்ளது.

மேற்குவங்க அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரான சுபாஷ் சக்கரவர்த்தி இதை வெளிப்படையாக மீடியாக்களிடம் தெரிவித்து விட்டாரம். அதாவது பி.ஜெ.பியுடன் இணைந்து காங்கிரசை எதிர்ப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று பட்டவர்த்தனமாக அறிவித்து விட்டார். இது குறித்து கட்சித்தலைமை அதாவது பிராகாஷ் காரத் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளாராம். தனது கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்று  முகத்தில் அடித்தாற் போன்ற பதிலை பத்திரிகைகளிடமே வெளிப்படையாக தெரிவித்து விட்டார் சக்கரபர்த்தி.

சி.பி.எம்மின் மேற்கு வங்க கோஷ்டி, கட்சித் தலைமையுடன் முறுக்கும் விசயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. அங்கே கட்சியில் இருக்கும் முசுலீம் எம்.எல்.ஏக்கள் பி.ஜே.பியுடன் இணைந்து வாக்களிப்பது குறித்து கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம். கட்சியில் இருக்கும் முசுலீம்கள் முசுலீம்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். சோம்நாத் சட்டர்ஜிக்கள் பார்ப்பனர்களாக இருக்கும்போது முசுலீம்கள் மட்டும் முசுலீம்களாக இருக்கக்கூடாதா என்ன?பொதுவில் இந்திய முசுலீம்களிடம் அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து அதிருப்திதான் நிலவுகிறது. அமெரிக்கா இசுலாமிய மக்களுக்கு எதிரானது என்பது அவர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். உ.பி.மாநிலத்தில் இருக்கும் மாயாவதிகூட இந்தக் கோணத்தில் பிரச்சாரம் செய்கிறார். இவர்களுக்கு இருக்கும் அறிவுகூட சி.பி.எம்இல் இருக்கும் முசுலீம்களிடம் இல்லையே?

தற்போது அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் சி.பி.எம் கட்சி சூறாவளிப் பிரச்சாரத்தை போர்க்கால அடிப்படையில் நடத்தி வருகிறது. இதில் ஊர் ஊராக நடக்கும் கூட்டங்களில் பிரகாஷ் காரத் முழங்கி வருகிறார். ஆனால் அவரது சுற்றுப்பயணதத்தில் மேற்குவங்கம் மட்டும் இடம் பெறவில்லை. காரணம் அங்கே சென்றால் வங்கத்து காம்ரேடுகள் குதறி விடுவார்கள் என்ற பயம்தான். வங்கத்தின் சங்கதியில் மற்றொரு இரகசியமும் ஒளிந்துள்ளது. அதன்படி அமெரிக்காவை எதிர்க்கும் இந்த அரசியலில் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு அவ்வளவு விருப்பமில்லையாம். பின்னே எல்லா தரகு முதலாளிகளும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும்போது டாடாவின் பாட்டாளித் தோழனுக்கு மட்டும் நெஞ்சு பொறுக்காதா என்ன? இப்போதும் நாம் வங்கத்தை விட்டுப் பிரியமுடியவில்லை.

மேலும் ஒரு முக்கியச் செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமையிருக்கிறது. மேற்கு வங்க சி.பி.எம் கட்சியின் செயலரான பிமன் போஸ் சமீபத்தில் இலண்டன் சென்றிருக்கிறார். அங்கே வங்க முதலாளி ஒருவர் அளித்த விருந்தில் பேசிய போஸ் ஒருவேளை பி.ஜெ.பி தனது மதவாத அரசியலை விட்டுவிட்டு வந்தால் தங்களது கட்சி பி.ஜெ.பியுடன் இணைந்து செயல்படுவதற்கும் அவர்களை ஆதரிப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை என்று பரவசமாக அல்ல நிதானமாகவே கூறியிருக்கிறார். கடவுளே, கடவுளே எது எதையெல்லாம் எழுதி எது எதற்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது! மத்தியத் தலைமையுடன் வங்கத்தலைமை முரண்படுகிறது என்று பார்த்தால் வங்கத்துக்குள்ளேயே பயங்கரமான முரண்பாடு இருக்கிறதே! முக்கியமாக பி.ஜெ.பி என்ற பார்ப்பன பாசிஸ்டுகளை மதிப்பீடு செய்யும் சி.பி.எம்மின் தலைவரை நினைத்தால்  நெஞ்சு விம்முகிறது. பெரிய அளவில் விம்முவதற்கு நுரையீரல் இடம் கொடுக்கவில்லை.

சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், காங்கரசு எனும் மூழ்கும் கப்பலில் இருக்கும் தங்களது நண்பர்கள் உடனே கப்பலை விட்டு குதித்து தங்கள் கட்சியுடன் வந்து சேரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அதாவது காங்கிரசின் கூட்டணியில் இருக்கும் காங்கிரசு தவிர்த்த எல்லா கட்சிகளும் மதசார்பற்ற கட்சிகளாம். அவர்கள் எல்லோரும் சி.பி.எம்முடன் அணிசேரவேண்டுமாம். உண்மையில் மதிப்பிற்குரிய இந்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

நம்பிக்கை வாக்களிப்பில் ஆதரவைப் பெறுவதற்கு காங்கிரசும், ஆதரவை முறியடிப்பதற்கு பி.ஜெ.பியும் வரிந்து கட்டி இறங்கியிருக்கின்றன.தற்போதைய நிலவரப்படி ஒருஎம் பிக்கு 50கோடிவிலை பேசப்படுகிறது.

சிறிய கட்சிகளுக்கு காங்கிரசு அரசால் வாக்குறுதியும், சலுகைகளும் வாரி இறைக்கப்படுகின்றன. இந்தக்கட்சிகளும் கிடைத்தவரை ஆதாயம் என்று காங்கிரசு அரசுடன் பேரங்களை சூடாக நடத்தி வருகின்றன.அஜித்சிங்கின் கட்சி ஆதரவைப் பெறுவதற்கு லக்னோ விமான நிலையத்திற்கு திடீரென்று சரண்சிங்கின் பெயர் வைக்கப்படுகிறது.302சட்டப்பிரிவில் கொலைக்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் சிபுசோரனுக்கு மத்தியமந்திரி அதுவும் காபினட் பதவி தரப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. முலாயம் சிங் கட்சிக்கு 39எம்பிக்கள் இருப்பதால் சலுகைகளும் அதிகம்.இதன்படி கொஞ்ச நாட்களுக்கு அனில்அம்பானிதான் நாட்டின் இரகசிய பிரதமர் என்று உள்குத்து ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.காடுவெட்டி பிரச்சினைக்காக பா.ம.க எம்பிக்கள் எம்.எல்.ஏக்களை பிரதமர் சந்திக்கிறார். தேவைப்பட்டால் புஷ்ஷும் கூட சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் திருச்சி விமான நிலையத்திற்கு காடுவெட்டிகுருவின் பெயரை வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.ஆக கிடைத்தவரை ஆதாயம் என்று வர்த்தகம் பேசிவரும் இந்தக் கட்சிக்களைத்தான் பிரகாஷ் காரத் நண்பர்கள் என்ற உச்சி மோருகிறார்.உனது நண்பர்களை யார் என்று சொல், உன்னை யார் என்று கூறுகிறேன் என்ற முதுமொழியை தயை கூர்ந்து நினைத்துக் கொள்ளவும்.

இத்தனைக்கு பிறகும் பிரச்சினை முடியவில்லை. இனிமேல்தான் கிளைமேக்ஸ். வாக்களிப்பு முடிந்த பிறகு காங்கிரசு அரசு தோற்கலாம், வெற்றிபெறலாம். அதன்பிறகு வரும் தேர்தலில் காங்கிரசும், பி.ஜெ.பியும் கணிசமான இடங்களை பிடிக்கிறது என்று வைத்துக்கொண்டால் சி.பி.எம்மின் நிலை என்ன என்று பல பத்திரிகையாளர்கள் கேட்டபோது அக்கட்சியின் தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியுமா? கண்ணை மூடிக்கொண்டு காங்கிரசை ஆதரிப்போம், மதவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பளிச்சென்று தெரிவித்தார்கள். பிறகு ஏன் இப்போது எதிர்க்கிறார்கள்? கேட்டால் இது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பார்கள். காங்கிரசை ஆதரிப்பதை மதவாத எதிர்ப்பு என்பார்கள். இந்த இரண்டு எதிர்ப்பில்தானே சி.பி.எம் உயிர்வாழ்கிறது.என்ன இரண்டு எதிர்ப்பும் ஒரே சமயத்தில் செய்யமுடியாது என்பதுதான் நமது அண்ணாச்சிகளின் துரதிருஷ்டம்!

இப்படி பாராளுமன்றம் சந்தி சிரித்து நாறுகிறது. இதன் புனிதம் காக்கத்தான் சோம்நாத் தனது நாற்காலியை விடமாட்டேன் என்று சொல்கிறார்.எனவே அமர்நாத்தின் புனிதத்தை விட சோம்நாத்தின் புனிதம் வீரியமானது.அதே அளவு நாற்றமும் அதிகம்தான்.

கேள்விகள்

22 ஆம் தேதி நெருங்குகிறது. சோம் நாத் என்ன செய்வார்?

சபாநாயகராக நீடித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திக் கொடுப்பாரா? 22 ஆம் தேதி காலை ஒரு திருக்குறள் (அல்லது வேதமந்திரம்) சொல்லிவிட்டு நாற்காலியில் இருந்தபடியே ராஜினாமாவை அறிவித்து இந்திய ஜனநாயகத்தை கண்ணீர் விட வைப்பாரா?

சபாநாயகர் பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் வாக்கெடுப்பு முடிந்தபின் ராஜினாமா செய்வாரா அல்லது முன்கூட்டியே செய்து விடுவாரா?

மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் பொருட்டு கட்சி மாறி காங்கிரசுக்கு தாவி விடுவாரா?

என்ன செய்வது என்று சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் காரத். சோம்நாத் 22 ஆம் தேதி சபாநாயகராகவும் உட்கார்ந்து விட்டு, அதன் பின்னும் ராஜினாமா செய்யாமல் கட்சி முடிவு செய்யட்டும் என்று சொன்னால்?

இந்தக்கேள்விகளுக்கு சரியான பதில் கண்டு பிடிப்பவர்களுக்கு சி.பி.எம்மின் உளவியலை அறிந்தவர்கள் என்ற விருது வாழ்த்துடன் அளிக்கப்படும்!

______________________________________

  1. வணக்கம் தோழர்,

    தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. போலிகளின் உண்மையான முகங்களை அழகாக தோலுரித்துக்காட்டினீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    தோழமையோடு கதிர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க