Monday, March 27, 2023
முகப்புகலைகதைசிறுகதை : எங்கள் பிதாவே

சிறுகதை : எங்கள் பிதாவே

-

“… எங்கள் பிதாவே”

“எனக்குத் தூக்கம் வருது, குளிருது.”

women-children“அட கடவுளே! எனக்குந் தான் தூக்கம் வருது. ஊம், உடை மாட்டிக்கொள். தொப்பியைப் போட்டுக்கொள். கம்பளிக் காலணிகளை அணிந்துகொள். கையுறைகள் எங்கே? அசையாமல் நில். நெளியாதே.”

பையன் உடை அணிந்துகொண்டதும், அவனது கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினார்கள். பையனுக்கு இன்னும் முழுவதும் விழிப்பு வரவில்லை. அவனுக்கு நான்கு வயது. நடக்கையில் நடுங்குவதும் இடறுவதுமாக இருந்தான். பொழுது அப்போதுதான் புலரத் தொடங்கியிருந்தது. கூதல் நிறைந்த வெளிர் நீல மூடுபனி வெளியில் அடர்ந்திருந்தது. தன் பையனின் கழுத்தைச் சுற்றி லேஞ்சியை இன்னும் இறுகக் கட்டி காலரை நிமிர்த்துவிட்டாள், தூங்கி வழியும், முரண்டு ததும்பும் முகத்தில் முத்தமிட்டாள்.

உடைந்த கண்ணாடிகள் கொண்ட வெளித் தாழ்வாரத்தின் மரச் சட்டங்களில் தொங்கிய காட்டு முந்திரி கொடியின் உலர்ந்த தண்டுகள் கடும் பனியின் காரணமாகச் சர்க்கரையால் ஆனவைப் போலத் தோற்றமளித்தன. குளிரோ உறை மட்டத்துக்கு இருபத்தைந்து டிகிரி கீழே இருந்தது. அவர்களது வாய்களிலிருந்து அடர் ஆவி வெளிவந்து. முற்றத்தில் கழிவு நீர் கண்ணாடியாய் உறைந்து கிடந்தது.

“அம்மா, நாம் எங்கே போறோம்?”

“அதுதான் சொன்னேனே: உலாவப் போறோம்.”

“அப்படியானால் பெட்டி எதற்கு?”

“வேண்டும், அதனால்தான். சும்மா இரு. பேசாதே. வாயை மூடிக்கொள். இல்லாவிட்டால் தடுமல் பிடித்துக் கொள்ளும். குளிர் எப்படியிருக்கிறது, பார்த்தாயா. தரையைப் பார்த்து நட. இல்லையோ, வழுக்கி விழுந்துவிடுவாய்.”

வெளி வாயிலின் அருகே காவலாளி ஆட்டுத்தோல் கோட்டும் வெள்ளை ஏப்ரனும் அணிந்து, ஏப்ரன் மார்பில் உலோகப் பட்டயம் துலங்க நின்றுகொண்டிருந்தான். அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து சென்றாள். அவர்கள் வெளியேறியதும் அவன் பக்கக்கதவை மௌனமாகச் சாத்தி, பெரிய இரும்புத் தாழ் இட்டான். அவர்கள் தெருவோடு நடந்தார்கள். தரையில் வெண்பனி இல்லை. நாற்புறமும் பனிக்கட்டியும் ஊசிமுனை பனியும் மட்டுமே இருந்தன. பனிக்கட்டியோ ஊசிமுனைப் பனியோ இல்லாத இடங்களில் மழுமழுப்பான கற்கள் அல்லது கற்கள் போன்றே மழுமழுவென்று கடினமாயிருந்த மண் தரை தென்பட்டன. இலைகள் அற்ற மொட்டைக் கருவேல மரங்களின் அடியே அவர்கள் நடந்தார்கள். கடுங்குளிரில் இழுவிசையுடன் அம்மரங்கள் சடசடத்தன.

தாயும் மகனும் அநேகமாக ஒரே மாதிரி உடை அணிந்திருந்தார்கள். ஓரளவு நல்ல, செயற்கை மென்மயிர்க் கோட்டுகளும் நமுதா காலணிகளும் பலநிறக் கம்பளிக் கையுறைகளும் அணிந்திருந்தார்கள். ஒரே வித்தியாசம், தாயார் கட்டம் போட்ட கம்பளிக் குட்டையைத் தலையில் கட்டியிருந்தாள், மகனோ காதுமூடிகள் உள்ள வட்ட மென்மயிர்த்தோல் தொப்பி அணிந்திருந்தான். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. நாற்சந்தியை அவர்கள் அடைந்ததும் அங்கு பொருத்தியிருந்த ஒலிபெருக்கி உரக்கச்சீறவே தாய் திடுக்கிட்டாள். மறு கணமே, இது வானொலியின் காலை நிகழ்ச்சித் தொடக்கம் என்று ஊகித்துக்கொண்டாள். வழக்கம் போலவே சேவலின் கூவலுடன் தொடங்கியது வானொலி நிகழ்ச்சி. சேவலின் மிக உரத்த கூவல் தெருக் கோடிவரை ஒலித்து, புது நாளின் ஆரம்பத்தை அறிவித்தது. சிறுவன் ஒலிபெருக்கிப் பெட்டியை நிமிர்ந்து நோக்கினான்.

“அம்மா, இதென்ன, சேவலா?”

“ஆமாம், குழந்தாய்.”

“சேவலுக்கு அங்கே குளிராதா, அம்மா?”

“இல்லை. கொஞ்சங்கூடக் குளிராது. இழுக்காதே, தரையைப் பார்த்து நட.”

பின்பு ஒலிபெருக்கி இன்னொரு முறை சீறியது. அதைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் மென் குரல், “காலை வணக்கம்! காலை வணக்கம்! காலை வணக்கம்!” என்று தெய்வீக நயத்துடன் மூன்று முறை கூறியது.

அப்புறம் அதே குரல் ருமேனிய மொழியில் நிதானமும் பயபக்தியுமாக கர்த்தரின் செபத்தைப் படித்து:

“பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! தெய்விகம் பொலிக நின் திரு நாமம். நினது அரசாட்சி நிலவுவதாக. நினது சித்தமே நிறைவேறுவதாக…”

jewish-womenதெரு மூலையில் அந்தப் பெண் காற்றின் போக்கிலிருந்து திரும்பி, சிறுவனைத் தன்னோடு இழுத்துக் கொண்டு, சந்து வழியாக அநேகமாக ஓடினாள் – ஒலி பெருக்கியிலிருந்து வந்த மிகவும் உரத்த, மிக மென்மையான குரல் தன்னை விரட்டிக்கொண்டு தொடர்வது போல. விரைவில் குரல் அடங்கிவிட்டது. செபம் முடிந்து விட்டது. தெருவின் பனிப்பாதை வழியே கடற்காற்று வீசியது. முன்னே, செம் மூடுபனி சூழ்ந்த நெகிடி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் ஜெர்மானிய ரோந்துக்காரர்கள். அதைக் கண்ட அவள் திரும்பி வேறு திசையில் நடந்தாள். கம்பளிக் காலணிகளுடன் அவள் அருகே ஓடி வந்தான் சிறுவன். அவன் கன்னங்கள் கொவ்வையாய் கன்றிச் சிவந்திருந்தன. மூக்கின் அடியில் பனியாலுறைந்த துளி ஒன்று தொங்கியது.

“அம்மா, நாம் உலாவுகிறோமா?” என வினவினான் சிறுவன்.

“ஆமாம். உலவுகிறோம்.”

“இவ்வளவு வேகமாக உலாவ எனக்குப் பிடிக்கவில்லை.”

“பொறுத்துக்கொள்.”

இரு வாயில்கள் கொண்ட முற்றம் ஒன்றினுள் புகுந்து அவர்கள் வேறொரு தெருவை அடைந்தார்கள். கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டது. வெண் நீல மேகங்களுக்கும் குளிர்பனி மூட்டத்துக்கும் இடையே மெல்லிய ரோஜா வானம் உதய ஒளி காட்டியது. அதன் இளஞ் செந்நிறத்திலிருந்து வெளிப்பட்ட கடுங்குளிரினால் தாடைகள் ஒட்டி கொண்டன. தெருவில் ஆள் நடமாட்டம் தொடங்கி இருந்தது. எல்லாரும் ஒரே திக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அநேகமாக அனைவருமே சாமான்களைச் சுமந்து சென்றார்கள். சிலர் கைவண்டிகளைத் தள்ளியவாறு நடந்தர்கள். வேறு சிலர் சுமை நிறைந்த ஸ்லெட்ஜூகளை இழுத்துச் சென்றார்கள். சாலையின் பனிபடியாத இடங்களை ஸ்லெட்ஜ் அடிகள் தேய்த்தன.

அன்று காலை நகரின் எல்லா மூலைகளிலுமிருந்து மக்கள் சுமைகளுடன் ஒரே திசை நோக்கி மெல்ல ஊர்ந்த வண்ணமாயிருந்தார்கள். இவர்கள் யூதர்கள். ‘கெட்டோ’ எனப்படும் யூதர் முகாமுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ‘கெட்டோ’ அமைக்கப்பட்டிருந்த பெரேஸீப் என்னும் இடம் நகரின் ஆளரவம் அற்ற, தாழ்நிலப் பகுதி. எரிந்து போன எண்ணெய் டாங்கிகள் கடல் மட்டத்திற்குச் சரியாக நாடோடி சர்க்கஸ் கூடாரங்களை ஒத்த தோற்றத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தன. பாசிஸ்டுகள் அழுக்கடைந்த சில பகுதிகளை வளைத்து, துருப்பிடித்த முள்கம்பிகளின் இரட்டை வரிசைகளால் வேலி போட்டு, அதில் எலிப்பொறி போன்று ஒரே வாயில் அமைத்திருந்தார்கள். யூதர்கள் இருப்புப் பாதைப் பாலங்களின் அடி வழியாகச் சென்றார்கள். பனிப்பாளம் இறைந்த நடைபாதைகளில் வழுக்கினார்கள். நடக்க மாட்டாத தொண்டு கிழவர்களும் டைபாய்டு நோய் கொண்டவர்களும் அவர்களில் இருந்தார்கள். இவர்கள் தூக்கு படுக்கைகளில் எடுத்துச் செல்லப் பட்டார்கள். சிலர் நடக்கையில் விழுந்தவர்கள், எழுந்து நடக்கத் திராணியின்றி, விளக்குக் கம்பங்களில் சாய்ந்தவாறோ, தெருவோரமாக நட்டிருந்த இரும்புக் கால்களைப் பற்றிக் கொண்டோ கிடந்தார்கள். யூதர்களுடன் யாரும் வரவில்லை. அவர்கள் காவலர் எவரும் இன்றித் தாமாகவே நடந்தார்கள். வீடுகளில் தங்கியிருப்பவர்கள் சுடப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் கிளம்பிச் சென்றார்கள்.

womenயூதர்களை மறைத்துவைப்பவர்களுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. மறைத்துவைக்கப்பட்ட ஒரு யூதனுக்காக, அந்த வீட்டில் உள்ள எல்லாரும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்படுவார்கள் என்பது உத்தரவு. எனவே நகரின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இருப்புப் பாதைப் பாலங்களின் அடியேயும், கைவண்டிகளைத் தள்ளிக்கொண்டும் இறுகப் போர்த்து மூடிய குழந்தைகளைக் கைபிடித்து அழைத்துக் கொண்டும் ‘கெட்டோ’வை நோக்கி நடந்தார்கள். ஊசி போன்ற பனி மூடிய மரங்களுக்கும் வீடுகளுக்கும் இடையே அவர்கள் எறும்புகள் போன்று ஒருவர் பின் ஒருவராகச் சென்றார்கள். அவர்கள் பூட்டிய கதவுகளையும் வாயில்களையும் கடந்து, புகையும் நெகிடி நெருப்புக்களைக் கடந்து ஏகினார்கள். இந்த நெகிடிகளின் அருகே ஜெர்மானிய, ருமேனியப் படைவீரர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். யூதர்களைக் கவனிக்காமலே, கால்களைத் தொப்புத் தொப்பென்று அடிப்பதும் கையுறைகளால் காதுகளைத் தேய்த்துச் சூடேற்றிக்கொள்வதுமாகக் குளிர்காய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

பயங்கரக் குளிர். வடபகுதி நகரங்களில்கூட இத்தகைய குளிர் கடுமையானதாகவே கருதப்பட்டிருக்கும். ஒதேஸ்ஸா நகருக்கோ இது நம்ப முடியாத விந்தை நிகழ்ச்சி. இம்மாதிரிக் குளிர் ஒதேஸ்ஸாவில் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அடிப்பது வழக்கம். வெண்ணீலமும் கருநீலமும் பசுமையுமாகக் குமைந்த ஆவிப் படலங்களின் வழியே கதிரவனின் சிறு வட்டம் மங்கலாக ஒளிர்ந்தது. பறக்கும் போதே குளிர் தாக்கியதால் இறந்த குருவிகள் பாதையில் விழுந்து கிடந்தன. தொடுவானம் வரை வெள்ளை வெளேரென்று கடல் உறைந்திருந்தது. காற்று அங்கிருந்து வீசியது.

இவளோ பார்வைக்கு ருஷ்யப் பெண் போன்று காணப்பட்டாள். சிறுவனின் தகப்பன் ருஷ்யன் போலத் தோற்றமளித்தான். சிறுவனின் தகப்பன் ருஷ்யன்தான். எனினும் இதனால் ஒன்றும் பயனில்லை. அவன் தாய் யூதப் பென். ஆகவே ‘கெட்டோ’ செல்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. சிறுவனின் தந்தை செஞ்சேனையில் அதிகாரி. இவளோ தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து, அன்று காலை கழிவறைக் குழாயில் எறிந்துவிட்டாள். இந்தச் சந்தடி எல்லாம் ஓய்ந்துபோகும் வரை நகரில் அலைந்து திரிவது என்ற தீர்மானத்துடன் தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். எப்படியாவது சமாளிக்கலாம் என்று நினைத்தாள். ‘கெட்டோ’ செல்வது அறிவீனம். அது நிச்சயமான சாவைக் குறித்தது. ஆகவே அதிக மக்கள் நடமாட்டமுள்ள வீதிகளிலிருந்து ஒதுங்கிச் செல்ல முயன்றவாறு மகனுடன் நகரில் சுற்றி அலைந்தாள். தாங்கள் உலாவுவதாக ஆரம்பத்தில் எண்ணிய சிறுவன் அமைதியாக இருந்தான். ஆனால் விரைவிலேயே அவன் முரண்டு பண்ணத் தொடங்கினான்.

“அம்மா, நாம் ஓயாமல் நடக்கிறோமே, ஏன்?”

“நாம் உலாவுகிறோம்.”

“இவ்வளவு வேகமாக நாம் ஒருபோதும் உலாவியது கிடையாதே. நான் களைத்து விட்டேன்.”

“பொறுத்துக்கொள், மகனே. நானுந்தான் களைத்துவிட்டேன். நான் முரண்டு பண்ணுகிறேனா?”

Budapest, Festnahme von Judenதான் உண்மையிலேயே மிக விரைவாக, யாரோ தன்னை விரட்டிக் கொண்டு வருவதுபோல, நடப்பதை அவள் கவனித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். தாயை நிமிர்ந்து பார்த்த சிறுவன், அவள் அடையாளம் தெரியாதபடி மாறிப் போயிருப்பதைக் கண்டான். கடித்துக் கடித்தது வீங்கியிருந்த உதடுகளையும், சால்வைக்கு வெளியே அலங்கோலமாக நீட்டிக் கொண்டிருந்த, பனியால் வெளிறிய கூந்தல் புரிகளையும், கூர்த்த பாவைகள் கொண்ட அசைவற்ற கண்ணாடிக் கண்களையும் திகிலுடன் நோக்கினான். பொம்மை மிருகங்களில் இத்தகைய விழிகளை அவன் பார்த்ததுண்டு. அவள் கடிகாரத்தைப் பார்த்தாளே தவிர அவனை நோக்கவே இல்லை. குழந்தையின் சின்னக் கையை இறுகப் பிடித்துத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பையன் கலவரமடைந்து அழ ஆரம்பித்தான்.

“வீட்டுக்குப் போவோம். எனக்குப் பசிக்கிது…”

சிறுவனை ஓர் அருந்தகத்திற்குத் தாய் அழைத்துப் போனான். ஆனால் நாய்த்தோல் காலர்கள் வைத்த அகன்ற மேலங்கிகள் அணிந்த ருமேனிய போலீஸ்காரர்கள் அங்கே உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவளிடமோ தஸ்தாவேஜூகள் எவையும் இல்லை. ஆகவே, தன்னைக் கைது செய்து ‘கெட்டோ’வுக்கு அனுப்பிவிடுவார்களோ என்று அவள் அஞ்சினாள். ஆகவே ஏதோ தவறுதலாக நுழைந்துவிட்டது போன்று பாவனை செய்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு, மணிகள் பூட்டிய கதவைப் படாரென அறைந்து சாத்தினாள். சிறுவன் ஒன்றுமே புரியாமல் அவள் பின்னே ஓடியவாறே அழலானான்.

அடுத்த அருந்தகத்தில் ஒருவரும் இல்லை. குதிரை லாடம் பதித்த அதன் நிலைவாயிலுக்குள் நிம்மதியுடன் புகுந்தார்கள். மகனுக்கு ஒரு புட்டி தயிரும் வட்ட ரொட்டியும் வாங்கித் தந்தாள். இறுக்கமாக உடையணிந்த சிறுவன் உயர்ந்த முக்காலியில் அமர்ந்து தனக்கு மிகப் பிடித்த தயிரைக் குடித்து ரொட்டியைத் தின்பதில் முனைந்தான். அவளோ மேற்கொண்டு என்ன செய்வது என்று பதைபதைப்புடன் யோசிக்கலானாள். எதுவுமே அவள் மூளையில் உதிக்கவில்லை. அருந்தகத்தில் இரும்புக் கணப்பு எரிந்து கொண்டிருந்தது. அதனருகே சென்று குளிர்காய வாய்ப்பாயிருந்தது. குளிர்காய்கையில் கடைக்காரி தன்னை மட்டுமீறிய கவனத்துடன் நோட்டமிடுவதாக அவளுக்குப் பட்டது. அவள் அவசர அவசரமாகக் கணக்கை முடித்தாள்.

கடைக்காரி சன்னல் வழியே கலவரத்துடன் பார்த்துவிட்டு இன்னும் சற்று நேரம் கணப்பருகே அமர்ந்து கதகதப்பு உண்டாக்கிக்கொண்டு போகும்படி அவர்களிடம் சொன்னாள். கணப்பு செஞ்சூடாகத் தகதகத்தது. கருமையோடிய கொவ்வைச் சிவப்பாக ஒளிர்ந்த அதன் மீது பொறிகள் பறந்தன. அதன் வெம்மை சிறுவனை அயர்த்தியது. அவன் கண்கள் செருகிக்கொள்ளலாயின. ஆனால் அவன் தாய்க்கு நிற்க நேரமில்லை. கடைக்காரிக்கு நன்றி தெரிவித்து, அவசரமாயிருப்பதாகச் சொன்னாள். இருந்த போதிலும் அவர்கள் அங்கே சுமார் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

வயிறார உண்டு, தூக்க மயக்கத்தில் சொக்கிய சிறுவன் நிற்க அரும்பாடுபட்டான். அவள் அவன் தோள்களைக் குலுக்கி, காலரைச் சரிப்படுத்தி இறுக்கி, வாயிற் பக்கம் மெல்லத் தள்ளினாள். பையனோ நிலையில் பதித்திருந்த குதிரை லாடத்தில் தடுக்கிக் கொண்டான். பின்பு அவன், தாயார் தன் கையைப் பிடித்துக்கொண்டு விட்டான். அவள் மீண்டும் அவனை அழைத்துக்கொண்டு தெருவில் நடந்தாள். முதிர்ந்த பிளேன் மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்தன. பனி படிந்த பட்டைகள் கொண்ட அவற்றின் மென்மையான அடிமரங்களின் அருகாக அவர்கள் சென்றார்கள். பனிக்கட்டிபோல் குளிர்ந்த காற்றில் உடல் நடுங்க, “எனக்குத் தூக்கம் வருது” என்றான் சிறுவன்.

அது தன் காதில் படாதது போல அவள் நடித்தாள். தங்களது நிலைமை புகலற்றது என்பதை அவள் அறிந்திருந்தாள். நகரில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அநேகமாக எவரும் இல்லை. போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவள் இங்கு வந்தாள், வெளியேற வகையின்றி மாட்டிக்கொண்டாள். முற்றிலும் தனியளாய் இருந்தாள்.

“என் முழங்கால்கள் குளிரில் விறைத்துப் போச்சு” என்று தேம்பினான் பையன்.

அவனை ஓரமாக அழைத்துச் சென்று அவனது முழங்கால்களைத் தேய்த்துவிட்டாள். அவன் சமாதானமடைந்தான். நகரில் தனக்கு அறிமுகமான குடும்பம் ஒன்று இருப்பது சட்டென அவள் நினைவுக்கு வந்தது. நோவரஸ்ஸீய்ஸ்க்கிலிருந்து ‘கரூஸியா’ என்ற கப்பலில் ஒதேஸ்ஸாவுக்கு வருகையில் இந்தக் குடும்பத்தினர் அவர்களுக்கு அறிமுகமானார்கள். பிறகு சில தடவை அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் பாவ்லோவ்ஸ்கிய் என்ற குடும்பப் பெயர் கொண்ட புதுமணத் தம்பதிகள். கணவன் பல்மானத் தொழிற்பள்ளியில் அப்போதுதான் படிப்பை முடித்திருந்தான். அவள் பெயர் வேரா.

இரண்டு பெண்களுக்கும் ஒருவரையொருவர் மிகப் பிடித்துவிட்டது. கப்பல் நோவரஸ்ஸீய்ஸ்க்கிலிருந்து ஒதேஸ்ஸா போய்ச் சேர்வதற்குள் இருவரும் மிக நெருங்கிப் பழகிவிட்டார்கள். ஒதேஸ்ஸாவிலும் அவர்கள் இரண்டொரு முறை ஒருவர் வீட்டுக்கு மற்றவர் விருந்தினராகச் சென்று வந்திருந்தார்கள். அவர்களது கணவர்களுக்கிடையிலும் நட்பு ஏற்பட்டது. ஒரு தடவை கார்க்கவ் நகருக்கும் ஒதேஸ்ஸா நகருக்குமிடையே நடந்த காற்பந்தாட்டப் போட்டியைக் காண இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்தாற் போலச் சென்றார்கள். பாவ்லோவ்ஸ்கிய் குடும்பத்தினர் ஒதேஸ்ஸா தரப்பை ஆதரித்தார்கள். அவளும் அவளது கணவனும் கார்க்கவ் குழுவுக்கு ஆதரவாயிருந்தார்கள். முடிவில் ஒதேஸ்ஸாவே வெற்றி பெற்றது.

அடக் கடவுளே, கடலோரத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த விசாலமான புதிய விளையாட்டரங்கில் மக்கள்தான் என்னவாகக் கொந்தளித்தார்கள்! கூச்சல்கள், கத்தல்கள், புழுதிப் படலங்கள். அப்போது இரு குடும்பத்தினரும் விளையாட்டின் பொருட்டு சச்சரவு இட்டுக்கொள்ளாததுதான் குறை. இப்போதோ, அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இன்பமாயிருந்தது. பாவ்லோவ்ஸ்கிய் இப்போது ஒதேஸ்ஸாவிலேயே அகப்பட்டுக்கொண்டாள். சமீபத்தில்தான் அவள் வேராவை சந்தையில் கண்டு கொஞ்சம் உரையாடக் கூடச் செய்தாள். ஆனால் சந்தையில் நெடு நேரம் நிற்பது அபாயமானது, ஏனேனில் ஜெர்மானியர்கள் அநேகமாகத் தினந்தோறும் சோதனையிடுவதும் கைது செய்வதும் நடத்திவந்தார்கள். ஆகவே வேராவும் அவளும் ஐந்து நிமிடங்கூடப் பேசிக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் சந்திக்கவில்லை.

ஆயினும் வேரா நகரில்தான் இருக்க வேண்டும். வேறு அவளுக்குப் போக்கிடம் ஏது? பாவ்லோவ்ஸ்கிய் தம்பதிகள் ருஷ்யர்கள். வேரா வீட்டில் சிறிது காலம் தங்க முயற்சி செய்யலாம். மகனை மட்டுமாவது அங்கே வைக்கலாம். பாவ்லோவ்ஸ்கிய் தம்பதிகள் வெகுதொலைவில், பிரெஞ்சு வீதியின் கோடியில் வசித்து வந்தார்கள். எனவே அவள் திரும்பினாள்.

“அம்மா, நாம் எங்கே போறோம்? வீட்டுக்கா?”

“இல்லை கண்ணே, ஒருவரைப் பார்க்கப் போறோம்.”

“யாரை?”

“வேரா அத்தையை நினைவிருக்கா உனக்கு? அவள் வீட்டுக்குத்தான் போகிறோம்.”

“சரி” என்று பையன் சமாதானமடைந்தான். மற்றவர்கள் வீட்டுக்குப் போவதில் அவனுக்கு விருப்பம். அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஸ்த்ரோகனொவ்ஸ்கிய் பாலத்தின் வழியாக, துறைமுகம் செல்லும் தெருவை அடைந்தார்கள். அது குவாரன்டைன் சரிவு என்று அழைக்கப்பட்டது. தெருவின் கீழ்ப்புறத்தில் சரளைக் கல்லால் கட்டப்பட்ட அழகற்ற சதுர வீடுகள் நின்றன. அவற்றில் சில வெறும் இடிபாட்டுக் குவியல்களாக ஆக்கப்பட்டிருந்தன. சில தீக்கிரையாகி இருந்தன. தெருவின் கோடியில் வேறொரு பாலத்தின் வளைந்த கமான்கள் தென்பட்டன. அந்தப் பாலத்துக்கு மறுபுறம், துறைமுகத்தின் கூர்த்த சிதைவுகள் தெரிந்தன. இன்னும் தொலைவில், எரிந்து தகர்ந்த முகடுகளுக்கு அப்பால், தொடுவானம் வரை உறைந்து கிடந்தது வெண்கடல். தொடுவான விளிம்பில் உறையா நீர் ஆழ் நீலப் பட்டை போன்று காட்சி அளித்தது. புகழ்பெற்ற ஒதேஸ்ஸாக் கலங்கரை விளக்கத்தின் வெண்ணிற இடிபாடுகளைச் சுற்றிலும் கரீயச் சாம்பல் நிறம் தீட்டிய சில ருமேனியத் துருப்புக் கப்பல்கள் நின்றன. இடப்புறம் தூரத்திலிருந்த மலையின் மேல், ரோஜா நிறமும் மென் நீல வண்ணமும் கொண்ட மூடுபனிக்கு இடையே, நகரத்தின் உயரே சங்கு போன்று கவிழ்ந்து விளங்கியது நாடக அரங்கின் கும்மட்டம். ஸ்த்ரோகனொவ்ஸ்கிய் பாலத்தின் இரும்புக் கிராதிகள் உயரமான ஈட்டி வரிசை போலக் காணப்பட்டன. அவை கருத்துக் காணப்பட்டன. கீழே, வாளிகளை ஏந்தியவாறு மக்கள் குவாரன்டைன் சரிவின் மேலே ஏறி வந்து கொண்டிருந்தார்கள். வாளிகளிலிருந்து ததும்பிய நீர் வழியிலேயே பனிக்கட்டியாய் உறைந்து, ரோஜா வெயிலின் மங்கிய ஒளியில் கண்ணாடி போலப் பளிச்சிட்டது. இவை எல்லாமே எழிலுடன் பொலிந்தன. என்ன இருந்தாலும் வேரா வீட்டில் கொஞ்ச நேரம் தங்குவது சாத்தியந்தான். அடுத்து நடப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளளலாம் என எண்ணினாள்.

அவர்கள் வெகு நேரம் நடந்தார்கள். சிறுவன் களைத்துப் போனான், எனினும் சிணுங்கவில்லை. சின்னக் கம்பளிக் காலணிகளைத் தொப்புத் தொப்பென அடித்தவாறு விரைவாக நடந்து, தாயின் பின்னே சிரமத்துடன் வந்துகொண்டிருந்தான். போக வேண்டிய வீட்டைச் சீக்கிரமாக அடை அவனுக்கும் ஆசையாய் இருந்தது. மற்றவர்களைச் சென்று காண்பதை அவன் எப்போதுமே விரும்பினான். வழியில் பல தடவை தாயார் அவனது வெளிறிய கன்னங்களைத் தேய்த்து விட்டுச் சூடேற்றினாள். வேரா வசித்துவந்த வீட்டருகே நடைபாதை மீது நெகிடித் தீ எரிந்து கொண்டிருந்தது. படைவீரர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். வீடு பெரியது, பல பகுதிகள் கொண்டது. வாயில் கதவு சங்கிலியுடன் சேர்ந்துப் பூட்டப்பட்டிருந்தது. சோதனை நடந்துகொண்டிருந்தது. உள்ளே போகிறவர்களும் வெளியவருபவர்களும் தஸ்தாவேஜூகளைக் காட்ட வேண்டியிருந்தது. இவளோ அவசரமாகச் செல்பவள் போன்ற தோற்றத்துடன் வாயிலின் அருகாக முன்னே சென்றாள். அவளை யாருமே கவனிக்கவில்லை.

பையன் மறுபடியும் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். நடைபாதையில் பாவியிருந்த கருநீல உருக்காங்கற்கள் மீது அவளது காலணிகள் சடசடத்தன. பையன் அமைதியாக இருந்தான். அவள் மறுபடியும் நகரில் சுற்றித் திரியலானாள். தான் ஒரே இடங்களையே அடிக்கடி கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மக்கள் தன்னைக் கூர்ந்து நோட்டமிடுவதாகவும் அவளுக்குத் தோன்றியது. சில மணி நேரத்தைத் திரையரங்கில் கழிக்கலாமே என்ற யோசனை அவள் மனத்தில் உதித்தது. மாலை எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாடுவது தடுக்கப்பட்டிருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆகவே திரைப்படக் காட்சிகள் வெகு முன்னதாகவே ஆரம்பிக்கப் பட்டன.

அவளைப் போலவே கடுங்குளிரிலிருந்து தப்பும் பொருட்டு வந்திருந்த போர் வீரர்களாலும் வேசிகளாலும் நிறைந்திருந்த திரையரங்கில் ஒரே இறுக்கமும் நாற்றமுமாயிருந்தது. ஆகவே அவளுக்குக் குமட்டலெடுத்து, தலை சுற்றியது. எனினும் குறைந்த அளவேனும் அங்கே கதகதப்பாவது இருந்தது, உட்கார்ந்திருக்க முடிந்தது. பையனது கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்து விட்டாள். தாயின் முழக்கைக்கு மேல் இருகரங்களாலும் பற்றியபடி அக்கணமே பையன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

hitler-mussoliniதிரையில் நடப்பது என்னவென்று புரிந்து கொள்வதே கடினமாயிருந்தது, எனினும் அவள் தொடர்ச்சியாக இரண்டு காட்சிகள் முடியும் வரை உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஒருவேளை முதலில் போர் பற்றிய செய்திப்படமும் அப்புறம் வேடிக்கைப் படமோ அது போன்ற ஏதேனுமோ காட்டப்பட்டிருக்கலாம். கதை தொடர்ச்சி குழம்பியது. சில வேளைகளில் நேர்த்தியான ஒருத்தியின் தலை திரை முழுவதையும் வியாபித்துக் கொண்டிருந்தது. கொம்புகள் போலச் சிங்காரிக்கப்பட்ட வெளிர்முடியுடன் இருந்த அவள், தலையற்ற உயரமான ஆடவன் ஒருவனது தட்டை மார்பின்மீது முகத்தை வைத்து அழுத்துவதும் அவனுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவதுமாயிருந்தாள். பின்பு இதே பெண் தாழ்வான பந்தய மோட்டாரில் ஏறி அமர்ந்துகொண்டாள். அப்புறம் வெடிகள் கறுத்த ஊற்றுக்கள் போன்று சிதறின – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பட்டைகளாகப் – பிய்க்கப்பட்டு விட்டன போன்று தடதடவென்ற உலோகச்சத்தத்துடன் சிதறின. கரு மண்கட்டிகள் ஆலங்கட்டிகள் போல விழுந்து இரும்பு முரசு அதிர்வது போலக் கணகணத்தன. பீரங்கிக் குண்டுகளால் உழப்பட்ட தரையில், இழவுக்குறியான கருஞ் சிலுவைகளுடன் டாங்கிகள் ஊர்ந்தன. அவை கடகடத்தன, நொடிகளில் எகிறி விழுந்தன. அவற்றின் நீண்ட பீரங்கிக் குழாய்களிலிருந்து நீண்ட தீ நாக்குகளும் சுருளும் வெண்புகைப் பெருக்கும் கிளம்பின.

செப்பனிட்ட காலணிகளும், காதுமூடிகள் கொண்ட ருஷ்ய மென்மயிர்த் தொப்பியும் அணிந்திருந்த ஜெர்மானியப் படைவீரன் ஒருவன் அவளது தோள்மீது கனமாகச் சாய்ந்து, சிறுவனை எழுப்புவதற்காக அழுக்கடைந்த பெரிய விரல்களால் அவன் கழுத்தில் கிச்சுக் கிச்சு மூட்டினான். வெள்ளைப்பூண்டின் மணமும் பட்டைச் சாராய நெடியும் அவனிடமிருந்து குப்பென்று அடித்தது. அவன் ஓயாமல் சுமுகமாகச் சிரித்துக்கொண்டு, “தூங்காதே, புபே, தூங்காதே, புபே” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜெர்மன் மொழியில் புபே என்றால் பையன் என்று அர்த்தம். பையன் தலையைத் திருப்பி, தூக்கத்தில் ஏதோ முனகினானே தவிர விழித்துக்கொள்ளவில்லை. அப்போது ஜெர்மனியன் கனத்த தலையை அவளது தோள் மேல் சாத்திக்கொண்டு, அவளை ஒரு கையால் அணைத்தவாறு மற்றொரு கையால் பையனது முகத்தைப் பிசையத் தொடங்கினான். சிப்பாய் கோபித்துக் கொண்டு விடுவானோ என்ற அச்சத்தால் அவள் ஒன்றும் சொல்லவில்லை. தஸ்தாவேஜூகளைக் காட்டுமாறு அவன் கேட்டுவிடக் கூடாதே எனப் பயந்தாள். ஜெர்மானியனிடமிருந்து மற்ற நாற்றங்களுடன் கருவாட்டுக் கவிச்சும் சேர்ந்து அடித்தது. அவளுக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் சீற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டாள். பதற்றப்படாமல் சமாதானமாயிருக்கும்படி தன்னையே தேற்றிக்கொண்டாள். பார்க்கப் போனால் ஜெர்மானியன் அப்படி அதிகக் கெடுதல் எதுவும் செய்துவிடவில்லை. காட்டான், அவ்வளவுதான். ஜெர்மானியர்களுக்குள் நல்லவன் என்றே சொல்ல வேண்டும். இவனைப் பொறுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவள் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே ஜெர்மானியன் அவள் தோள்மேல் வைத்த தலையுடன் உறங்கிவிட்டான். அவள் அசையாது வீற்றிருந்தாள். ஜெர்மானியன் மிகக் கனமாயிருந்தான். நல்ல வேளை, தூங்கிப்போனான்.

கொம்பு நெளிகள் கொண்ட வெளிர் கூந்தல் அழகி திரையில் மறுபடி வளையவந்தாள். வெண்மையும் கறுப்புமான நீண்ட கதிர்க் குச்சங்கள் அவளோடு கூட அரங்க முழுவதிலும் அசைந்தாடின. கருப்பு ஊற்றுக்கள் உலோகத் தடதடப்புடன் கொங்கிச் சிதறின. டாங்கிகள் ஊர்ந்தன. ஜெர்மானியப் பட்டாளங்கள் பாலை மணலில் அணி நடை போட்டன. பாரிஸிலுள்ள ஐபல் கோபுரத்தின் உச்சியில் பெரிய பாசிஸ்ட் கொடி ஏற்றப்பட்டது. கூரிய சிறு மூக்கும் பெண்ணினது போன்ற மேவாயும் கொண்ட ஹிட்லர், பெண்ணுடையது போன்ற பின்பக்கத்தைத் துருத்தியவாறு விழிகளைச் சுழற்றுவதும் வாயை விரைவாக மூடிமூடித் திறப்பதுமாகத் திரையிலிருந்து நாயாய்க் குரைத்தான். தாடைகளை அவன் வெகு விரைவாக அசைத்தபடியால் ஒலி சற்றுப் பொறுத்தே காதில் பட்டது: வள், வள், வள், வள்… என்று.

படைவீரர்கள் இருளில் பெண்களைச் சீண்டினார்கள். பெண்கள் கீச்சிட்டார்கள். திரையரங்கில் ஒரே புழுக்கமும் இறுக்கமுமாக இருந்தது. உள்ளிப்பூண்டு, கருவாடு, பட்டைச் சாரயம், ருமேனிய ‘ஷா-நுஆர்’ அத்தர் எல்லாம் கலந்த வாடை அடித்தது. ஆயினும் வெளியே குளிரில் நடுங்குவதைவிட இங்கே இருப்பது மேலாயிருந்தது. அவளும் கொஞ்சம் களையாறினாள். சிறுவன் உறங்கிவிட்டான். ஆக, கடைசிக் காட்சியும் முடிந்தது. அவள் மீண்டும் வெளியே செல்ல வேண்டியதாயிற்று. குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் வெளியேறினார்கள்.

நகரில் கும்மிருட்டு. குளிர்ந்த மூடுபனி மட்டுமே இருளடைந்த வீடுகளுக்கிடையே திரளாக எழுந்தது. அதனால் இமைமயிர்கள் ஒட்டிக்கொண்டன. தெருக்களில் புகை மண்ட எரிந்த நெகிடி நெருப்புக்கள் கடுங்குளிராக தழல் வீச முடியாது அநேகமாக அவிந்தன. தனித் துப்பாகிக் குண்டுகள் எங்கேயோ வெடிக்கும் ஒலி எப்போதாவது கேட்டடது. ரோந்துச் சிப்பாய்கள் தெருவழியே நடந்தார்கள். எட்டு மணி அடித்தாகி விட்டது. ரோந்துக்காரர்கள் தங்களைத் தடுக்கக்கூடும் என்ற ஒரே எண்ணத்தால் அவள் சிறுவனைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். பொதுவில் வெறுமையாக இருந்த சந்துகளாகத் தெரிந்தெடுத்து விரைந்தாள்.

churchபிளேன் மரங்களும் கருவேல மரங்களும் கண்ணாடிப் பனியால் மூடப்பட்டு, தெருவோரங்களில் பூதங்கள் போல நின்றன. நகரம் வெறிச் சோடி இர்ண்டு கிடந்தது. திடீரென்று இருளில் ஒரு வீட்டின் கதவு திறக்கும். வாயிலருகே பளிச்சிடும். விபசார விடுதிக்குள்ளிருந்து முறையிடும் பிடிலின் மோகாவேசம் தொனிக்கும் இசை அதைத் தொடர்ந்து வரும். இவ்வாறாக நடந்து அவள் ஷெவ்சேன்கோவின் பெயர் கொண்ட பூங்காவை அடைந்தாள். இந்தப் பிரமாண்டமான பூங்கா கடற்கரையோரமாக நீண்டிருக்கிறது. இங்கே ஒரே கும்மிருட்டும் நிசப்தமும் நிலவின. கீழே குத்துப் பாறைகளின் அடியில், தொடுவானம் வரை உறைந்த கடல் மீதோ, இன்னும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. கடலின் நிசப்தம் சுவர் போன்று பருமை கொண்டு இலகியது. சில பெரிய விணமீன்கள் மரங்களின் வெண் கிளைகளுக்கு மேல் மினுமினுத்தன. சர்ச் விளக்கின் நீலக் கதிர் தாரகைகளுக்கிடையே வழுக்கிச் சென்றது.

அகன்ற தார் சாலை வழியாக அவள் நடந்தாள். அவளது இடப்புறம் இருந்தது விளையாட்டரங்கம், ஒதேஸ்ஸா – கார்க்கவ் காற்பந்தாட்டப் போட்டியை அவர்கள் சேர்ந்து பார்த்த இடம். தகர்ந்து சிதைந்த விளையாட்டரங்கிற்கு அப்பால் இருந்தது கடல். இருளில் அது அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆயினும், அமைதியிலிருந்து அது இருக்குமிடத்தை ஊகிக்க முடிந்தது. அவளது வலப்புறம் பூங்கா இருந்தது. அகன்ற தார் சாலை நட்சத்திர வெளிச்சத்தில் உப்புத்தாள் போல பளபளத்தது. பல்வகை மரங்கள். அவற்றின் காய்க் குமிழ்கள் கயிறுகள் போன்ற நீண்ட காம்புகளில் தரை வரையில் தொங்கின. மற்ற இடங்களில் கோபுர வடிவான கருவேல மரங்கள், பிளேன் மரங்கள், காடி மரங்கள் ஆகியன இருந்தன. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அடர்ந்த கண்ணாடிப் பனியால் மூடப்பட்டிருந்த அம்மரங்கள் மேகத்திரள்கள் போன்று தரைமீது கவிந்திருந்தன.

அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னிலும் மெதுவாக நடந்து எல்லையற்ற நீண்ட வரிசையாக நின்ற காலி பெஞ்சுகளை ஒட்டினாற் போலச்சென்றாள். ஒரு பெஞ்சின் மீது மட்டும் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள அவள் அந்த உருவத்தின் அருகாகப் போனாள். பெஞ்சின் பின்பக்கம் தலையைச் சாய்த்தவாறு கூனி அமர்ந்திருந்த அக்கரிய உருவம் அசையவேயில்லை. அந்த ஆள் மரங்களைப் போலவே கண்ணாடிப் பனியால் பாதிவரை மூடப்படிருப்பை அவள் கவனித்தாள். பூங்காவின் வெண் மரங்களுக்கு நடுவே உயரந்து நின்ற வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கரிய கும்மட்டத்துக்கு மேலே சப்தரிஷி மண்டலத்தின் பல் கோண விண்மீன்கள் கண்சிமிட்டின. அந்த இடம் ஒரே அமைதியாக, முற்றிலும் அச்சம் விளைக்காததாக இருந்தது. அவளுக்குத் திகில் உண்டாகாதது ஒருகால் அவள் மிகவும் களைத்திருந்ததனால்தான் போலும்.

மறுநாள் புலர்காலை வேளையில், முந்திய இரவில் குளிரால் விறைத்து மடிந்தவர்களின் உடல்களைச் சேகரிப்பதற்காக லாரிகள் நகர் முழுவதிலும் சுற்றிவந்தன. அவற்றில் ஒன்று ஷெவ்சேன்கோ பூங்காச் சாலையில் மெதுவாக ஊர்ந்தது.

லாரி இரண்டு முறை நின்றது. ஒரு தடவை, குளிரில் விறைந்துப்போன கிழவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் நின்றது. இரண்டாந் தரம் அது ஒரு பெண் சிறுவனுடன் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு அருகே நின்றது. அவள் பையன் கையைப் பற்றியிருந்தாள். இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அநேகமாக ஒரே மாதிரி உடை அணிந்திருந்தார்கள். ஓரளவு நல்ல, செயற்கை மென்மயிர்க் கோட்டுகளும், நமுதா காலணிகளையும் பலநிறக் கம்பளி கையுறைகளையும் இருவருமே அணிந்தார்கள். உயிருள்ளவர்கள் போலவே வீற்றிருந்தார்கள்.

முந்திய இரவு கண்ணாடிப் பனியால் மூடப்பட்டிருந்த அவர்களது முகங்கள் மட்டும்தாம் ஒரேயடியாக வெளிறியிருந்தன. அவர்களது கண்ணிமைகளில் உறைபனி விளிம்பு கட்டியிருந்தது. படைவீரர்கள் தூக்கிய போது இருவரது உடல்களும் நிமிரவேயில்லை. அமர்ந்த பாங்கிலிருந்த அவளது உடலைப் படைவீரர்கள் வீசியாட்டி லாரிக்குள் எறிந்தார்கள். அது கிழவனின் உடல் மீது கட்டை போலச் சொத்தென்று மோதியது. பின்பு, உட்கார்ந்த நிலையிலிருந்த சிறுவனுடைய உடலைப் படைவீரர்கள் சுலபமாக லாரியில் வீசிப் போட்டார்கள். அது அவளது உடல் மேல் கட்டை போல மோதியதுடன் கொஞ்சம் துள்ளவும் செய்தது.

லாரி புறப்பட்டதும் தெரு ஒலி பெருக்கி வழியாகச் சேவல் கூவி, புது நாள் புலர்வதை அறிவித்தது. பின்பு மென்மையான குழந்தைக் குரல், தெய்வீக நயத்துடன் மூன்று முறை பின்வருமாறு கூறியது:

“காலை வணக்கம்! காலை வணக்கம்! காலை வணக்கம்!”

அப்புறம் அதே இனிய குரல் ருமேனிய மொழியில் நிதானமும் பயபக்தியுமாகக் கர்த்தரின் செபத்தைப் படித்தது:

“பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! தெய்வீகம் பொலிக நின் திரு நாமம். நினது அரசாட்சி நிலவுவதாக….”

______________________________________________

கதை : ருஷ்ய அமர இலக்கிய வரிசை – ருஷ்யச் சிறுகதைகள்
படங்கள் : இணையத்திலிருந்து

 

  1. ஏனோ தெரியவில்லை படித்து முடித்தவுடன் மனது ஒரு மாதிரி பாரமாக இருந்தது. எந்த இடத்தில் இருந்து இந்த மாற்றம் என்று குறிப்பாக தெரியவில்லை.

    ஆனால் முதல் வரியில் இருந்து சிறிதாக ஆரம்பித்த சூடு கடைசி வரிகளில் கொதிநிலை அடைகிறது. முதல் வரிகளில் கண்களுக்குள் ஒரு அழுத்தம் வருவதை உணர முடியவில்லை. அது ஒரு இயலாமையாக இரக்கமாக கடைசி வரிகளில் கண்களில் நீர் கோர்க்கும் போது தான் உணர முடிகிறது .

    எந்த ஒரு ஆடம்பர வார்த்தைகளும் இல்லை கொப்புளங்களும் இல்லை. உண்மையில் நெஞ்சை பிசையும் வரலாறு கதையாகும் போது இப்படி தான் இருக்கும் போலும்.

    நன்றி !

  2. நாஜி பயங்கரவாதமே ஒரு ஆயுதமாக மாறி ஓசையின்றிப் பல கொலைகளைச் செய்யும் கொடூரம் நேரில் பர்ப்பது போல் படைக்கப்பட்டிருக்கிறது.ஜெயா டாஸ்மாக்கும் பலரை இப்படித்தான் மெல்லக் கொல்லுகிறது கவனியுங்கள் நண்பர்களே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க