privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் போலீசு பயங்கரவாதிகள் !

பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் போலீசு பயங்கரவாதிகள் !

-

anna school 1 (1)குடிகெடுக்கும் சாராயக் கடையின் மீது கல்லெறிந்தார்கள் என்பதற்காக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதை நாடறியும். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களையும் தாக்குவோம் என்று நிரூபித்திருக்கிறது ஜெயா ஆசி பெற்ற தமிழக போலிசு.

ஆம். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சாலைமறியல் செய்ததற்காக, சென்னையில் பள்ளி மாணவர்கள் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டத்தில் முன்னின்ற 4 பள்ளி மாணவர்களை டி.சி. கொடுத்து வெளியேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி.

சென்னை பூந்தமல்லி, கல்லறைத் தோட்டத்தில் உள்ளது அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை தொலைக்காட்சிகளில் கண்டு ஆத்திரமுற்ற பள்ளி மாணவர்கள், தமது கண்டனத்தை அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று விழைந்தனர். இப்பள்ளியில் பயிலும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சக மாணவர்களை அணிதிரட்டினர். பு.மா.இ.மு. தோழர்களிடமிருந்து முழக்கங்களையும், கண்டன சுவரொட்டிகளையும், பிரசுரங்களையும் பெற்று பள்ளி மாணவர்களே போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

கடந்த ஆகஸ்டு-7 அன்று, பள்ளி முன்பாக அணிதிரண்ட மாணவர்கள், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் செய்தனர். ”உடனடியாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்; புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்” என்பதே அப்பள்ளி மாணவர்களின் கோரிக்கை.

பொது விசயத்துக்காக பள்ளி மாணவர்கள் தெருவில் இறங்கியிருப்பதை கண்டு, பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும், பொதுமக்களும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மறியலால் பூந்தமல்லி சாலையின் போக்குவரத்து முடங்கியது. ரோந்து போலீசால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்து போலீசு படை வந்தது. ”என்னடா பிரச்சினை உங்களுக்கு? எதுக்குடா ரோட்டை மறிக்கிறீங்க..? 5 நிமிசம் டைம் தரேன். ஒழுங்கா கலைஞ்சி ஓடிடுங்க…” என்று மிரட்டல் விடுத்தார், காவல் உதவி ஆய்வாளர் ராஜா. ”டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்கச் சொல்லுங்கள்.. இப்பவே கலைகிறோம்..” என்று தமது கோரிக்கையில் உறுதியாக நின்றனர் பள்ளி மாணவர்கள்.

‘‘நீங்கெல்லாம் சொன்னா கேட்கமாட்டீங்கடா… எடுடா அந்த லத்தியை…” என்று சினிமா வசனம் பேசியபடியே, லத்தியை சுழற்றினார் ராஜா. மாணவர்கள் சிதறி ஓடவில்லை. ”எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்று எதிர்த்து நின்றனர். பலர் கூடியிருக்க பள்ளி மாணவன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பதை சகித்துக் கொள்ள முடியாமல், முன்னைவிட மூர்க்கத்தனமாக லத்தியை சுழற்றுகிறார், காவல் உதவி ஆய்வாளர் ராஜா.

“வெறிநாய் துரத்துவதைப் போல மாணவர்களை விரட்டியடித்தனர். ஒரு மாணவன் ஓட முடியாமல் நடுரோட்டில் விழுந்த போதிலும், அவன் சட்டையைப் பிடித்து இழுத்து லத்தியால் அவனை மிருகத்தனமாக அடித்தனர். போக்குவரத்து நெரிசலுக்கிடையே, திக்குத் தெரியாமல் ஓடி முட்டுச் சந்தில் சிக்கிய மாணவர்களையும் அடித்து துவைத்தனர். அருகிலுள்ள சர்ச்சுக்குள் ஓடிய மாணவர்களையும் அடித்து இழுத்து வந்தனர். இவ்வாறு பள்ளி மாணவர்களிடம் சூரத்தனம் காட்டி மடக்கிப் பிடித்த 8 மாணவர்களை போலீசு வேனில் அள்ளிப் போட்டுச் சென்றனர்.” என்றார் சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர்.

பள்ளியின் முகப்பிற்கும் மறியல் நடத்திய இடத்திற்கும் ஏறத்தாழ அரை கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்கும். வகுப்பறை வரையில் மாணவர்களை விரட்டிச் சென்றனர் போலீசார். உதவி ஆய்வாளர் ராஜா சுற்றுச் சுவற்றை எகிறிக் குதித்து மாணவர்களை விரட்டினார். வகுப்பறை வகுப்பறையாகப் புகுந்து, மறியலில் பங்கெடுத்த மாணவர்களை தேடினார். விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களிடமும், ”நீ கலந்துகிட்டியா? நீ கலந்துகிட்டியா?” என்று கேள்வி கேட்டு, ”உங்களையெல்லாம் போட்டோ புடிச்சிருக்கு… அத வச்சி கண்டுபிடிச்சுக்கிறோம். அப்ப இருக்கு உங்களுக்கெல்லாம்” என்று மிரட்டினார்.

போலீசு வேனில் அள்ளிச் சென்ற 8 மாணவர்களிடம் யார் உங்களைத் தூண்டிவிட்டா? யார் உங்களைப் போராடச் சொன்னது? ஆளை மட்டும் காண்பி, உன்னை விட்டு விடுகிறேன்.” என்று, பாபநாசம் சினிமா போல ஒரே கேள்வியை தனித்தனியேக் கேட்டு சித்திரவதை செய்திருக்கின்றனர். மதியம் 12 மணிவாக்கில் இழுத்து செல்லப்பட்ட இம்மாணவர்களை மாலை 3.30 மணியளவில்தான் விடுவித்தனர். அன்றைய தினம் யார் யாரெல்லாம் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான விவரத்தைக் கொடுக்குமாறு பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டினர்.

வழக்கத்துக்கு மாறாக, 3.30 மணிக்கே பள்ளியை மூடவைத்தனர். பள்ளியை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களையும் நுழைவாயிலில் நின்றுகொண்டு, சட்டவிரோதமான முறையில் வீடியோ காமிராவில் மாணவர்களின் முகத்தை பதிவு செய்தனர். 11,12-ஆம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த வருகைப் பதிவேடுகளையும் அள்ளிச் சென்ற போலீசார், போராட்டம் நடைபெற்ற அன்று யார் யாரெல்லாம் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்ற விவரத்தை சேகரித்து வைத்திருக்கின்றனர்.

”பேருந்து நிறுத்தத்தில் எவனும் நிற்கக்கூடாது” என்று விரட்டியடித்த போலீசார், பூந்தமல்லி போக வேண்டியவனை போரூருக்கும், போரூருக்குப் போகவேண்டியவனை சிறீபெரும்புதூருக்கும் அனுப்பிவைத்தனர். பக்கத்து தெருவில் இருப்பவன்கூட அன்றைக்கு இரண்டு பேருந்தில் பயணம் செய்துதான் வீடுபோய் சேர முடிந்தது.

மறுநாள் பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் மிரட்டத் தொடங்கினர். ”படிக்கிற பசங்களுக்கு எதுக்குப் போராட்டம் சாலை மறியல் எல்லாம். 10 ந்தேதி திங்கட்கிழமை 11, 12 வது பசங்க எல்லாம் அவங்க அவங்க அப்பா அம்மாவைக் கூட்டிவரனும்… மீட்டிங் இருக்கு… போராட்டத்தில கலந்துகிட்டவங்களுக்கெல்லாம் டி.சி. கொடுக்கப்போறோம்” என்று பீதியூட்டினர்.

சொன்னது போலவே, பெற்றோர்களுடன் 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டார்கள். காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், நான்கு காவலர்கள் வந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல; திருவள்ளூர் மாவட்ட காவல் உதவி ஆணையர்., உள்ளூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

‘‘மதுவுக்கு எதிராக போராடறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம். அதெயெல்லாம் விட்டுட்டு சாலைமறியல் ஏண்டா பன்னுறீங்க? உங்களை யாருடா தூண்டிவிட்டது?” என்று கூட்டத்தை தொடங்கிவைத்தார் காவல் ஆய்வாளர் வினோத்குமார்.

‘‘உங்களையெல்லாம் உள்ள புடுச்சி போட எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு? உங்க மேல எஃப்.ஐ.ஆர். போட முடியாதா? ரெண்டு பேப்பர் ஒரு பேனா இருந்தா போதும். அதுவும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. கவெருமெண்டே கொடுத்துடுது. என்ன ஒரு பத்து நிமிசம் எங்க டையம் வேஸ்ட் ஆகும். நாங்க நினைச்சா இப்பவே எஃப்.ஐ.ஆர். போடலாம். ஏன் போடாம இருக்கோம்… பாவம் பசங்களாச்சே… கேசோட நாளைக்கு காலேஜில ஜாயின் பன்ன முடியாதே… பாவம் னுதான் போடாம இருக்கோம்… இதுதான் உங்களுக்கு கடைசி சான்ஸ்… இனியும் கேட்கலைன்னா கேசுதான்.. டி.சி. கொடுத்து உடனே அனுப்பி வச்சுருவோம்.” என்று வெளிப்படையாகவே மிரட்டினார் போலீசு உதவி ஆணையர்.

‘‘கண்டவன் பேச்ச கேட்டிட்டு போராட்டம்லாம் பன்னி லைஃப்-ஐ கெடுத்துக்காதீங்க… அம்மாவுக்கு எப்போ எதை பன்னனும்னு நல்லா தெரியும்… டாஸ்மாக் கடையை மூடிட்டா கள்ளச்சாராயம் பெருகிடும்… கண்டதுல தண்ணியை கலந்து போதையேத்திக்கிறானுங்க… அதனால மக்கள்தான் சாவாங்க.. அதான் அம்மா அமைதியா இருக்காங்க… 15-ஆம் தேதி நல்ல முடிவையும் அறிவிப்பாங்க… அதனால போராட்டம்லாம் திரும்ப பன்னாதீங்க.. இப்பவே மேலெடத்தில இருந்து டார்ச்சர்… பத்து பேரையாவது டி.சி.யை கொடுத்து அனுப்புங்கனு சொல்றாங்க… நான் தான் பாவம் பசங்கனு தடுத்து வச்சிருக்கேன்… பாத்து நடந்துக்கோங்க… நீங்கெல்லாம் யாருடா? என் தங்கச்சி புள்ளைங்க… அக்கா புள்ளைங்க மாதிரிடா… நல்லா படிச்சமா, பள்ளியை விட்டு போனமா, நல்ல காலேஜ்-ல சேந்தமானு போகாம ஏன்டா இப்படி பன்றீங்க? இனி எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லனும் சரியா.. .என்னோட நம்பர எல்லோரும் எழுதிக்கோங்க… 94440 23452 … இனி யார் வேனாலும் என்கிட்ட உரிமையோட எதுவும் கேட்கலாம்.” என்று மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பவரைப் போலப் பேசி வஞ்சகமான முறையில் மிரட்டல் விடுத்தார், எம்.எல்.ஏ. மணிமாறன்.

இதனைத்தொடர்ந்து, செவ்வாய்கிழமை பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, ”மேலிடத்தில இருந்து டார்ச்சர்.. என்னால ஒன்னும் பன்ன முடியாது.. 4 பேருக்காவது டி.சி.யை கொடுத்து அனுப்பச் சொல்லியிருக்காங்க.. இனிமே, போராட்டம் பன்னினா எல்லோருக்கும் டி.சி.தான் கிடைக்கும்” என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த மாணவர்களின் பெயர்களை இங்கே தவிர்க்கிறோம்.

உள்ளூர் இன்ஸ். தொடங்கி, ஏ.சி., எம்.எல்.ஏ., கல்வித்துறை அதிகாரிகள் வரையில் பள்ளிக்கு ஓடிவருகிறார்கள் என்பதிலிருந்தே, பள்ளி மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு அரசு எந்தளவுக்கு பீதியடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. பள்ளி மாணவர்களின் போராட்டம் அரசின் முகமூடியை கிழித்திருக்கிறது.

இந்நிலையில், அப்பள்ளி மாணவர்களை சந்தித்து அன்று நடைபெற்ற போராட்டம் குறித்தும், போலீசு, கல்வித்துறை அதிகாரிகளின் மிரட்டல்கள் குறித்தும் பேசினோம். ”பச்சையப்பா பசங்கள அடிச்சா நீங்க ஏன் ஸ்டிரைக் பன்றீங்க?” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, ”என்னன்னா இப்படி கேட்டிட்ட… எங்க அண்ணணுங்கன்னா அவங்கெல்லாம்.. இந்த ஸ்கூல்ல படிச்சவங்க பாதிபேரு அங்கதான் படிக்கிறாங்க… நியாயமா போராடுன அவங்கள அந்த அடி அடிச்சு அரெஸ்ட் பன்னி வச்சிருக்காங்க.. அவங்கள வெளிய விடனும்.. அதுக்காக நாங்க பன்றோம்..” என்று உணர்ச்சியுடன் பதிலளித்தினர் அப்பள்ளி மாணவர்கள்.

‘‘சாராயக் கடையை மூடச்சொல்லி அரசியல் கட்சிகள்தான் போராடிட்டு இருக்காங்கல்ல… பள்ளிக்கூட பசங்க நீங்க ஏன் போராடுறீங்க?”

‘‘குடியினால என்ன பாதிப்புனு மத்தவங்களவிட எங்களுக்கு நல்லாவே தெரியும்னா.. எங்கப்பா குடிகாரர். ஆட்டோ ஓட்டுறத நிறுத்தி நாலு வருசம் ஆச்சு. எங்கம்மாவோட மாச சம்பளம் 4500 வச்சுதான் எங்கம்மா குடும்பத்தை நடத்துது. லீவுல புரூட்டி கம்பெனிக்கு லோடுமேன் வேலைக்கு போயி அந்த காச வச்சுதான் என் படிப்பு செலவ பாத்துக்கிறேன்.” இது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனின் குரல். ”கல்லூரி செல்லும் அக்கா. கூலி வேலை செல்லும் தாயார். குடியினால் தந்தையை பிரிந்து வாழ்கிறது குடும்பம்.” – இது மற்றொரு மாணவனின் குடும்ப அவலம்.

‘‘டி.சி.யை கொடுக்கிறது, போலீசு மிரட்டுறதெல்லாம் மேட்டரே இல்லைன்னா… 4500 ரூபாய் மாச சம்பளத்தை வச்சிகிட்டு எங்கம்மா கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிது.. அவங்க மனம் கஷ்டப்படுமேன்னுதான்னா யோசிக்கிறேன்” என யதார்த்தமான உணர்ச்சியை வெளிப்படுத்தினார் மாணவன் ஒருவன்.

அன்றாடம் குடித்துவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் நிகழும் சண்டைகள்; தாயார் ஒருவரின் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டிய அவலம்; பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குழந்தை தொழிலாளியாய் மாற வேண்டிய நிர்ப்பந்தம்; தந்தை உயிருடன் இருந்தும் நிர்கதியில் நிறுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள்; கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் விதவைத் தாய்மார்களின் அன்றாடப் பிழைப்புக்கானப் போராட்டங்கள் – என குடியினால் ஏற்படும் பாதிப்புகளை சொந்தமுறையில் உணர்ந்தவர்கள் இப்பள்ளி மாணவர்கள்.

அதனாலேயேதான் தெருவில் இறங்கிப் போராடினார்கள். மாணவர்களின் போராட்டத்தை தூண்டியவரை கைது செய்யவேண்டுமெனில் போயஸ் தோட்டத்திற்கல்லவா போலீசு போயிருக்க வேண்டும்; மாறாக, மதுரவாயலில் பு.மா.இ.மு. தோழர்களைத் தேடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனம்!

  • இளங்கதிர்

 

  1. மாணவர்கள் போராட்டம் என்றுமெ வெற்றியை தான் கொடுக்கும்…………

    திண்டிவனம் கல்லூரியில் நாங்களும் பச்சயப்பன் கல்லூரி மாணவர்களுக்காக குரல் கொடுத்தோம் என்பதிள் மகிழ்ச்சியடைகிறோம்……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க