privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்

ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்

-

“நாங்கள் மனிதர்கள் இல்லையா? – ஆம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசார் வேதனை” என்று தலைப்பிட்டு “தி இந்து” தமிழ் நாளிதழ் (ஜூலை, 22) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. காயம்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண் போலீசாரைப் பற்றி விவரித்து விட்டு, கலவரத்துக்குக் காரணமான முக்கியப் புள்ளிகள் கைது செயப்படவில்லை என்று போலீசார் மனம் குமுறுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

பவித்ரா என்ற பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்ற இளைஞரை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் லாக் அப் கொலை செய்ததுதான் இப்பிரச்சினைக்குக் காரணம். கொலைக் குற்றவாளி மார்ட்டின் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், இதன் எதிர்வினையாக நடந்த “ஆம்பூர் கலவரம்” முதன்மைக் குற்றமாக்கப்பட்டுவிட்டது.

ஷமீல் அகமது.
சட்டவிரோதமாக அடைத்து வைத்து போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஷமீல் அகமது.

இப்பிரச்சினை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள் போன்ற அனைத்தும் போலீசை நிரபராதியாக்கி விட்டு, ஆம்பூர் முஸ்லிம் மக்களையும், ஷமீலையும், பவித்ராவையும் குற்றவாளியாகக் காட்டுகின்றன. நம் கண் முன்னே நடைபெற்ற ஒரு சம்பவம் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஆம்பூர் கலவரம் என்று அழைக்கப்படும் இந்தச் செய்தியின் விவரங்களைப் பார்ப்போம்.

***

ள்ளிகொண்டாவுக்கு அருகில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் பவித்ரா, கடந்த மே 24 அன்று காணாமல் போகிறார். பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்த அவளது கணவன் பழனி, பின்னர் உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார். ஜூன் 5-ம் தேதி விசாரணைக்கு வந்த அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், போலீசுக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்து வழக்கைத் தள்ளி வைக்கின்றனர். 19-ம் தேதி இந்த வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஷமீல் அகமது என்ற இளைஞரை பள்ளி கொண்டா போலீசு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார். பவித்ராவைக் கண்டுபிடிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று போலீசு கேட்க, மீண்டும் அவகாசம் தருகிறார்கள் நீதிபதிகள்.

பவித்ராவும் ஷமீல் அகமதுவும் 6 மாதம் முன்பு வரையில் ஆம்பூரில் ஒரே தோல் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள். சமீபத்தில்தான் திருமணமான ஷமீல், தன் மனைவியோடு ஈரோட்டில் குடியேறிவிட்டார். வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோடு சென்று ஷமீலைத் தொடர்பு கொண்டிருக்கிறார். பவித்ராவிடம் வழிச்செலவுக்கு காசு கொடுத்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு புத்திமதி சொல்லி, பவித்ராவின் வீட்டுக்குத் தனது செல்பேசியிலிருந்தே போன் செய்து அவள் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவலும் சொல்லியிருக்கிறார் ஷமீல். இருப்பினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய பவித்ரா வீட்டுக்குத் திரும்பவில்லை.

பவித்ரா.
தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிய போதிலும் நடத்தை கெட்டவள் என்று முத்திரை குத்தப்பட்ட பவித்ரா.

ஜூன் 16-ம் தேதி ஷமீலை விசாரணைக்கு வருமாறு அழைத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ். தவ்கீத் ஜமாத்தின் மாவட்டத்தலைவரும் ஷமீலின் மாமனாருமான முகமது கவுஸ், விசாரணைக்காக ஷமீலை ஒப்படைத்திருக்கிறார். 24 மணி நேரத்திற்குப் பின் ஷமீலை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் 19-ம் தேதி வரை வெவ்வேறு இடங்களில் வைத்து ஷமீலை கொடுரமான முறையில் சித்திரவதை செய்திருக்கிறார் மார்ட்டின். மாமனார் முகமது கவுஸ் அந்த நான்கு நாட்களில் பல முறை போலீசு நிலையத்துக்கு நடையாய் நடந்தும், போனில் விசாரித்தும் யாரிடமிருந்தும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் மார்ட்டின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் கைதேர்ந்த போக்கிரி. மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடிய சிவலிங்கம் என்பவரை லாரி ஏற்றிக் கொல்ல முனைந்த கிரிமினல். இரண்டாண்டுகளுக்கு முன் ரியாஸ் கான் என்ற இளைஞரை அடித்தே கொலை செய்தவர். இவையெல்லாம் அந்த வட்டாரம் முழுவதும் தெரிந்த விசயங்கள் என்பதால் செய்தி அறிந்தவர்களிடையே பதற்றம் பரவுகிறது.

ஷமீலை 19-ம் தேதியன்று விடுவிக்கிறார் மார்ட்டின். நடை பிணமாக வீடு திரும்பிய ஷமீல், உடனே ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். உடல்நிலை மோசமடைந்ததால், 23-ம் தேதி வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஷமீல் 26-ம் தேதி மாலை மரணமடைகிறார்.

இது லாக் அப் கொலை என்றே போலீசு ஒப்புக்கொள்ளவில்லை. ஷமீலை ஜூன் 16 அன்றே வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், மறுபடியும் 19 அன்று அழைத்து விசாரித்துவிட்டு மீண்டும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அப்பட்டமாகப் புளுகினார் வேலூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமாரி.

“என்ன வேண்டுமானாலும் செயலாம்” என்ற போலீசின் இறுமாப்புக்கும் திமிருக்கும் சூடு வைக்கும் விதத்தில், 26-ம் தேதி இரவே ஆயிரக்கணக்கில் ஆம்பூர் போலீசு நிலையத்தின் முன் திரண்டார்கள் முஸ்லிம் மக்கள். இரண்டு போலீசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. 8 பெண் போலீசார் உள்ளிட்ட 38 போலீசாருக்கு காயம். போலீசு படை சிதறி ஓட வேண்டியதாயிற்று. இதனைத் தொடர்ந்து சுமார் 115 பேர் மீது கொலை முயற்சி, சதி, கலவரம் செய்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீவைத்தல் – எனப் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கும் போடப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மார்ட்டினோ அன்றைக்கே தலைமறைவாகிவிட்டார்.

கொட்டடிக் கொலைக்கு எதிராக போலீசு நிலையத்தின் முன் திரண்டு போராடிய ஆம்பூர் மக்கள்.
கொட்டடிக் கொலைக்கு எதிராக போலீசு நிலையத்தின் முன் திரண்டு போராடிய ஆம்பூர் மக்கள்.

“பவித்ராவைத் தேடிய தனிப்படைப் போலீசார், ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து கொண்டு, அம்பத்தூரில் ஒரு மகளிர் விடுதியில் பதுங்கியிருந்த பவித்ராவை வளைத்துப் பிடித்தனர்” (தினமலர்). தனக்கும் ஷமீலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தன்னைத் தவறான பெண்ணாகச் சித்தரிப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார் பவித்ரா. பவித்ராவின் கணவன் பழனி கொடுத்த புகாரில்கூட ஷமீலின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.

இருந்த போதிலும், ஷமீல் கொல்லப்பட்டு விட்டார். கொலை செய்த மார்ட்டினை சி.பி.சி.ஐ.டி தனிப்படை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான், கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசாரின் “கண்ணீர்க்கதை” வெளியிடப்படுகிறது.

***

ணவனுடன் வாழப்பிடிக்காத ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறினால் அது ஏன் ஒரு கலவரத்தில் வந்து முடிய வேண்டும்? பவித்ரா என்ற பெண்ணுக்கு பழனியுடன் வாழப் பிடிக்கவில்லை. பழனிக்கு பவித்ராவை விடுவதற்கு மனமில்லை. இதில் யார் தரப்பில் நியாயம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வாழப்பிடிக்காத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு மண உறவில் இருத்தி வைப்பது முறையற்றது, சாத்தியமற்றதும் கூட.

இன்று ஆயத்த ஆடை நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை முதல் பல்வேறு தொழிற்சாலைகளில் இளம் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் காதல் திருமணங்கள் அதிகமாக நிகழ்வது இயல்பே.

பல இளம்பெண்கள் திருமணத்துக்குப் பின் கைவிடப்பட்டு பிள்ளையுடன் நிராதரவாக நிற்கின்றனர். சிலர் வேறு துணையுடன் சேர்ந்து வாழ்கின்றனர். கணவனையும் பிள்ளையையும் கைவிட்டு வேறு ஒருவருடன் செல்லும் பெண்களும் உண்டு. கணவன் குடிகாரனாகவோ, பொருந்தா மணமாகவோ இருக்கும் பட்சத்தில், திருமணமான பெண்கள் பழைய மண உறவை ரத்து செய்ய விரும்புகின்றனர்.

நகரமயமாதல் காரணமாக பெண்கள் ஒரே நேரத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கும் பண்பாட்டு சீர்கேடுகளுக்கும் அறிமுகமாகின்ற சிக்கலானதொரு சமூகச் சூழலையும், அது தோற்றுவிக்கும் முரண்பாடுகளையுமே பவித்ரா – பழனி விவகாரம் பிரதிபலிக்கிறது.

தன்னை யாரும் கடத்தியதாக பவித்ரா கூறவில்லை. எனவே, இந்த வழக்கில் போலீசு தலையிடுவதற்கான முகாந்திரமே இல்லை. ஒரு வேளை ஷமீலுக்கும் பவித்ராவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அது பவித்ராவும் பழனியும் நீதிமன்றத்திலோ, தமது உறவினர்கள் – நண்பர்கள் முன்னிலையிலோ வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையே அன்றி, போலீசு தலையிடவேண்டிய பிரச்சினை அல்ல.

இருப்பினும், போலீசு சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளிலும் தலையிடுவதை நாம் காண்கிறோம். கடன் வசூல், வீடு காலி செவது போன்றவற்றில் தொடங்கி, காதல், கணவன்-மனைவி தகராறு வரையிலான அனைத்து சிவில் விவகாரங்களிலும் சட்டவிரோதமாகத் தலையிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்வதுதான் போலீசின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது.

பழனியின் புகார் மீது இன்ஸ்பெக்டர் மார்ட்டின் எடுத்த நடவடிக்கை இத்தகையதுதான். வாங்கின காசுக்காகவோ, முஸ்லிம்கள் மீதுள்ள விசேடமான வெறுப்பின் காரணமாகவோ, அல்லது போலீசுத் திமிரின் விளைவாகவோ ஷமீல் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். ஆம்பூர் மக்களிடம் வெடித்த கோபம் இந்த ஒரு கொலையினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதல்ல.

செம்மரக் கடத்தல் மற்றும் கொலை செய்த டி.எஸ்.பி. தங்கவேலு முதல் மார்ட்டின் வரை பல அராஜகங்களை எதிர்கொண்டு சகிக்க முடியாத நிலையில்தான் போலீசுக்கு எதிரான இந்தக் கலகம் வெடித்திருக்கிறது. ஆனால் ஊடகங்களோ, போலீசின் குற்ற வரலாற்றைத் துருவுவதற்குப் பதிலாக, பவித்ரா “ஓடிப்போன” கதையைத் துருவி ஆராந்து, அதன் விளைவுதான் இந்தக் கலவரம் என்ற கோணத்திலேயே செய்தி வெளியிட்டனர். “பவித்ராவின் பழைய காதலர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை” என்று வக்கிரமாக செய்தி வெளியிட்டது தினமலர்.

ஆனால், உயர்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவித்ராவோ , தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியதுடன், தனக்கு பழனியுடன் வாழ விருப்பமில்லாததால் மணவிலக்கு வேண்டும் என்று மட்டும்தான் கோரினார்.

“இந்தப் பெண்ணால் ஆம்பூரில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் உயிரிழந் துள்ளார்” என்று கூறி கொலைப்பழியை பவித்ராவின் மீது போட்டார் அரசு வக்கீல் தம்பித்துரை.

நீதிபதிகள் தமிழ்வாணனும் சி.டி. செல்வமும் அரசு வக்கீலின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்காதது மட்டுமல்ல, “உன்னால்தான் பிரச்சினை. திருமணமானவருடன் நட்பு வைத்ததால்தான் மதக்கலவரம் ஏற்படுகிறது. இதற்கு நீதிமன்றம் துணை போகாது. தமிழகம் அமைதியான மாநிலமாகத் திகழ்கிறது. இது போன்ற பிரச்சினையால்தான் தேவையில்லாத கலவரம் நிகழ்கிறது” என்று ஆம்பூரில் நடந்த பிரச்சினையை இந்து-முஸ்லிம் கலவரமாகத் திரித்ததுடன், பவித்ராவின் மீது நடத்தை கெட்டவள்” என்ற முத்திரையையும் குத்தி விட்டனர்.

“கோடு போட்டு நிற்கச் சொன்னான், சீதை நிற்கவில்லையே, சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே” என்று விளக்கப்படுகிறது ஆம்பூர் விவகாரம். போலீசு, ஊடகங்கள், அரசு, நீதிமன்றம் ஆகிய அனைவரும் வெவ்வேறு அளவில் வெவ்வேறு கோணத்தில் இந்தக் கருத்துக்கு வலுச் சேர்த்திருக்கின்றனர்.

இந்து மதவெறியர்கள் மட்டும்தான் ஆம்பூர் பிரச்சினையை லவ் ஜிகாத் என்று பிரச்சாரம் செய்தனர். பவித்ரா மதம் மாற்றப்பட்டதாக திடுக் தகவல் என்று தலைப்பிட்டு தினமலர் மட்டும்தான் செய்தி வெளியிட்டது. காஷ்மீரில் கூட போலீசார் இப்படித் தாக்கப்பட்டதில்லை என்று இராம.கோபாலன் மட்டும்தான் அறிக்கை வெளியிட்டார்.

இவர்கள் மட்டும்தான் என்று மதிப்பிடுவது உண்மைதானா? முசாபர் நகரிலிருந்து ஆம்பூர் வெகு தொலைவில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறோமே, அது உண்மைதானா?

– சூரியன்
_________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
_________________________________